என் மலர்
தேர்தல் செய்திகள்
டி.டி.வி.தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் பாராளுமன்றத் தேர்தலில் மிகப் பெரிய கூட்டணி பலம் எதுவுமின்றி எஸ்.டி.பி.ஐ. கட்சியுடன் மட்டும் சேர்ந்து போட்டியிடுகிறது.
எஸ்.டி.பி.ஐ. கட்சிக்கு மத்திய சென்னை பாராளுமன்ற தொகுதியை விட்டுக் கொடுத்துள்ள அ.ம.மு.க. மற்ற 39 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுகிறது. அதுபோல 18 சட்டசபை தொகுதி இடைத்தேர்தலிலும் டி.டி.வி.தினகரன் கட்சி தனித்துப் போட்டியிடுகிறது.
தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 தொகுதிகளில் போட்டியிடும் அ.ம.மு.க.வின் முதல் வேட்பாளர் பட்டியலை கடந்த 17-ந்தேதி டி.டி.வி. தினகரன் வெளியிட்டார். அதில் 24 பாராளுமன்ற, 9 சட்டசபை இடைத்தேர்தல் தொகுதி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டிருந்தனர்.
9 சட்டசபை தொகுதியிலும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 9 பேருக்கும் மீண்டும் போட்டியிட டி.டி.வி.தினகரன் வாய்ப்பு அளித்துள்ளார். இந்த நிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) டி.டி.வி. தினகரன் அ.ம.மு.க.வின் 2-ம் கட்ட வேட்பாளர் பட் டியலை வெளியிட்டார்.
இந்த 2-ம் கட்ட பட்டியலில் தமிழகத்தில் 14 பாராளுமன்ற தொகுதிக்கும், 8 சட்டசபை தொகுதிகளின் இடைத்தேர்தலுக்கும் வேட்பாளர்கள் பெயர் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
1. வடசென்னை- சந்தான கிருஷ்ணன் (வடசென்னை தெற்கு மாவட்ட கழக செயலாளர்)
2. அரக்கோணம்- பார்த்திபன் (வேலூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர்)
3. வேலூர்- பாண்டு ரங்கன் (முன்னாள் அமைச்சர்)
4. கிருஷ்ணகிரி- கணேசகுமார் (கிருஷ்ணகிரி மாவட்ட கழக செயலாளர்)
5. தர்மபுரி- பழனியப்பன் (முன்னாள் அமைச்சர்)
6. திருவண்ணாமலை- ஞானசேகர் (வேலூர் மேற்கு மாவட்ட புரட்சித்தலைவி அம்மா பேரவை செயலாளர்)
7. ஆரணி- செந்தமிழன் (முன்னாள் அமைச்சர்)
8. கள்ளக்குறிச்சி- கோமுகி மணியன் (விழுப்புரம் தெற்கு மாவட்ட கழக செயலாளர்)
9. திண்டுக்கல்-ஜோதி முருகன் (தாளாளர், சுரபி கல்வி நிறுவனங்கள்)
10. கடலூர்- கார்த்திக் (கழக பொறியாளர் அணி செயலாளர்)
11. தேனி-தங்க தமிழ்ச் செல்வன் (கழக கொள்கை பரப்புச் செயலாளர்)
12. விருதுநகர்-பரமசிவ ஐயப்பன் (கழக அம்மா பேரவை இணைச் செயலாளர்)
13. தூத்துக்குடி- டாக்டர் புவனேஸ்வரன் (தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக இளைஞர் பாசறை செயலாளர்)
14. கன்னியாகுமரி- லெட்சுமணன் (புரட்சித்தலைவி அம்மா பேரவை துணைச் செயலாளர்).

தங்க தமிழ்ச்செல்வன் கடந்த 2016-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆகி இருந்தார். டி.டி.வி. தினகரனை ஆதரித்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட அவர் மீண்டும் ஆண்டிப்பட்டி சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் களம் இறக்கப்படுவார் என்று எதிர்பார்ப்பட்டது.
ஆனால் தேனி எம்.பி. தொகுதிக்கு அவர் நிறுத்தப்பட்டுள்ளார். அவரை போல தகுதி நீக்கம் செய்யப்பட்ட மேலும் சிலரும் பாராளுமன்ற தொகுதிக்கு மாற்றப்பட்டுள்ளனர். இதனால் சட்டசபை இடைத்தேர்தலில் புதுமுகங்களுக்கு டி.டி.வி. தினகரன் வாய்ப்பு அளித்துள்ளார்.
இன்று அறிவிக்கப்பட்டுள்ள பட்டியல் மூலம் முன்னாள் அமைச்சர்கள் பாண்டுரங்கன், பழனியப்பன், செந்தமிழன் ஆகிய 3 முன்னாள் அமைச்சர்கள் பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள நிறுத்தப்பட்டுள்ளனர். அதுபோல தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள எம்.எல்.ஏ.க்களில் தங்க தமிழ்ச்செல்வன், பார்த்திபன், பழனியப்பன் ஆகியோர் பாராளுமன்ற தேர்தலுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பதில் ஆண்டிப்பட்டி, தர்மபுரி, சோளிங்கர் தொகுதிக்கு புதிய வேட்பாளர்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளனர். #LSPolls #TTVDhinakaran #AMMK
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் 18-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலை தள்ளி வைக்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அதில், “மதுரையில் சித்திரை திருவிழா தேரோட்டம் ஏப்ரல் 18-ந் தேதி நடைபெற உள்ளதால், அன்று இந்துக்களால் ஓட்டுபோட முடியாது. அதனால், தேர்தலை வேறு தேதிக்கு தள்ளிவைக்கவேண்டும்” என்று பார்த்தசாரதி என்பவர் வழக்கு தொடர்ந்தார்.
அதேபோல, தமிழ்நாடு பிஷப் கவுன்சில் சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், “ஏப்ரல் 18-ந் தேதி பெரிய வியாழன் வருவதால், அன்று கிறிஸ்தவர்களால் ஓட்டுப்போட வரமுடியாது. மேலும், தேவாலயங்களுடன் பள்ளிக்கூடங்களும் இருப்பதால், அங்கு தேர்தல் நடத்தப்பட்டால், வழிபாடு செய்யவும் பாதிப்பு ஏற்படும். அதனால், தேர்தலை தள்ளிவைக்கவேண்டும்” என்று கூறியிருந்தனர்.
இந்த வழக்குகள் ஐகோர்ட்டு நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் நேற்று விசாரித்தனர்.
அப்போது தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வக்கீல், “மதுரை சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு தேர்தல் நேரம் இரவு 8 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தேர்தலை முறையாக நடத்த பக்தர்களுக்கான இலவச வினியோகங்களுக்கு மாவட்ட கலெக்டரிடம் முன்அனுமதி பெற அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல பெரிய வியாழன் தினத்தை அனுசரிப்பதற்கு தேர்தல் எவ்விதத்திலும் இடையூறாக இருக்காது. வாக்குச்சாவடி மையங்களில் உள்ள தேவாலயங்களுக்கு வந்து செல்வதற்காக பிரத்யேகமாக தடுப்பு வேலிகள் அமைக்கப்படும்” என்று கூறினார்.
இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், “மதம் சார்ந்த வழிபாடுகள் எப்படி ஒவ்வொருவருக்கும் கடமையாக உள்ளதோ, அதேபோல தேர்தலில் ஓட்டு போடுவதையும் கடமையாக கருத வேண்டும்” என்று கருத்து தெரிவித்தனர். பின்னர், இந்த வழக்குகளின் தீர்ப்பை இன்று (வெள்ளிக்கிழமை) பிறப்பிப்பதாக கூறினர். #ParliamentElection #ChennaiHighCourt




புதுச்சேரி:
புதுவை பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. என்.ஆர். காங்கிரஸ் சார்பில் மணக்குள விநாயகர் கல்வி குழுமத்தை சேர்ந்த டாக்டர் நாராயணசாமி கேசவன் போட்டியிடவுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியிடப்படவில்லை.
இந்நிலையில் நேற்றைய தினம் ரங்கசாமி வேட்பாளர் டாக்டர் நாராயணசாமியுடன் திருச்செந்தூர் சென்றார். அங்கு சிறப்பு பூஜை செய்து சாமிதரிசனம் செய்தார்.
இதைத்தொடர்ந்து புதுவைக்கு திரும்பிய ரங்கசாமி இன்று சேலத்தில் உள்ள தனது ஆன்மிக குருவான அப்பா பைத்தியம் சுவாமிகள் கோவிலுக்கு சென்றார். அவருடன் வேட்பாளர் டாக்டர் நாராயணசாமியும் சென்றார். அங்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.
இன்று மாலை 4 மணிக்கு என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், மாநில நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் ஓட்டல் அண்ணா மலையில் நடக்கிறது.
இந்த கூட்டத்தில் தேர்தல் தொகுதி பொறுப்பாளர்கள், தேர்தல் பணிக்குழு ஆகியவை நியமிக்கப்படுகிறது. நாளை வெள்ளிக்கிழமை என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளராக டாக்டர் நாராயணசாமியை அறிவிக்கிறார்.
அதேநேரத்தில் தட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரை நாளை அறிவிக்கவில்லை. ஓரிரு நாட்களில் தட்டாஞ்சாவடி தொகுதி வேட்பாளர் அறிவிக்கப்பட்டு என்ஆர்.காங்கிரஸ் சார்பில் வேட்புமனு தாக்கல் செய்யப்படும் என தெரிகிறது.
சென்னை தலைமை செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
ரொக்கமாக பணம் எடுத்து செல்வதை தீவிரமாக கண்காணித்து வருகிறோம். இதுவரையில் ரூ.13 கோடியே 90 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தேர்தல் செலவினங்களை கண்காணிக்க ஒவ்வொரு தொகுதிக்கும் 2 பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மத்திய சென்னையில் மட்டும் 3 பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பாராளுமன்ற தொகுதியில் இதுவரை 30 பேரும், சட்டசபை இடைத்தேர்தலில் 3 பேரும் மனுதாக்கல் செய்துள்ளனர்.

அமைச்சர் ஜெயக்குமார் என்ன பேசினார் என்று மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் விளக்கம் கேட்டு இருக்கிறோம். அவரது அறிக்கையை பெற்று நடவடிக்கை எடுக்கப்படும்.
சூலூர் தொகுதி எம்.எல்.ஏ. கனகராஜ் மரணம் அடைந்தது தொடர்பாக சட்டமன்றத்தில் இருந்து இன்னும் எங்களுக்கு தகவல் வரவில்லை. சூலூர் தொகுதி காலியிடம் என்று தகவல் வந்தால்தான் தேர்தல்கமிஷனுக்கு அதை நாங்கள் தெரிவிப்போம். அதன்பிறகுதான் அங்கு தேர்தல் எப்போது என்பதை தேர்தல் ஆணையம் அறிவிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார். #LSPolls #SathyaPrathaSahoo #MinisterJayakumar
லக்னோ:
இந்தியாவில் அதிக தொகுதிகளை கொண்ட மாநிலம் உத்தரபிரதேசம் இங்கு 80 தொகுதிகள் உள்ளது.
உத்தரபிரதேசத்தில் பா.ஜனதாவை வீழ்த்துவதற்காக எதிரும், புதிருமாக இருந்த சமாஜ்வாடி கட்சியும், பகுஜன் சமாஜ் கட்சியும் கூட்டணி அமைத்துள்ளன. இந்த கூட்டணியில் காங்கிரசுக்கு இடமில்லை.
பகுஜன் சமாஜ் கட்சி 38 இடங்களிலும், சமாஜ்வாடி 37 இடங்களிலும் போட்டியிடுகின்றன. கூட்டணியில் உள்ள அஜீத்சிங் கட்சிக்கு 3 இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. ராகுல் காந்தி, சோனியாவுக்காக அமேதி, ரேபரலி தொகுதியில் வேட்பாளரை நிறுத்த வில்லை.
இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தலில் தான் போட்டியிட மாட்டேன் என்று பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி அறிவித்து இருந்தார். இதனால் அவரது கட்சி தொண்டர்கள் விரக்தி அடைந்தனர்.
இந்த நிலையில் தேர்தலில் போட்டியிடா விட்டாலும் தான் பிரதமர் வேட்பாளர்தான் என்று மாயாவதி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:-
பா.ஜனதாவை வீழ்த்த நான் பிரசாரம் செய்ய இருப்பதால் தேர்தலில் போட்டியிடவில்லை. ஆனாலும் எனக்கு பிரதமர் கனவு இருக்கிறது.
1995-ல் நான் உ.பி. முதல் மந்திரியாக முதல் முறையாக பதவியேற்றேன். அப்போது நான் எம்.எல்.ஏ. வாகவும், எம்.எல்.சி.யாகவும் இல்லை.
அதே சூழ்நிலைதான் தற்போதும் நிலவுகிறது. எம்.பி.யாக இல்லாத ஒருவர் மந்திரியாகவோ அல்லது பிரதமராகவோ தேர்வு செய்யப்பட்டால் அவர் 6 மாதங்களில் எம்.பி.யாக தேர்ந்து எடுக்கப்பட வேண்டும்.
நானும் உயர் பதவிக்கு (பிரதமர்) தேர்ந்து எடுக்கப்பட்டால் உ.பி.யில் காலியாக இருக்கும் எந்த தொகுதியிலும் போட்டியிட்டு வெற்றி பெறுவேன்.
இதனால் தேர்தலில் போட்டியிடவில்லை என்பதற்காக தொண்டர்கள் சோர்வடைய வேண்டாம்.
இவ்வாறு மாயாவதி கூறினார். #mayawati #parliamentelection
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்தியாவில் மோடி எதிர்ப்பு அலை வீசுவதுபோல் தமிழகத்தில் அதிமுக எதிர்ப்பு அலை வீசுகிறது. எனவே தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளிலும், 18 சட்டமன்றத் தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும். மக்களவைத் தேர்தலில் தேர்தல் ஆணையம் ஒதுக்கும் சின்னத்தில் மதிமுக போட்டியிடும்.
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பாக உள்துறை அமைச்சகத்திடம் ஆளுநர் கருத்து கேட்டது வரம்பு மீறிய செயல்.
இவ்வாறு அவர் கூறினார். #Vaiko #LSPolls #ADMK
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் மாலை மலருக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
கேள்வி:- உங்களுக்கு மோதிரம் சின்னம் ஒதுக்காமல் பானை சின்னம் ஒதுக்கியது ஏன்?
பதில்:- மோதிரம் சின்னம் கேட்டுதான் தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பித்து இருந்தோம். தமிழ்நாட்டிலும் ஆந்திராவிலும் போட்டியிடும் எங்களுக்கு ஒரே சின்னம் ஒதுக்க வேண்டும் என்று கடந்த பிப்ரவரி 18-ந்தேதி மனு செய்தோம்.
நாங்கள் கேட்ட மோதிரம் சின்னம் வேறு ஒரு புதிய கட்சிக்கு ஒதுக்கி விட்டது எங்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது.
2011, 2014, 2016 ஆகிய 3 பொதுத்தேர்தல்களிலும் மோதிரம் சின்னத்தில் போட்டியிட்டோம். அதன் அடிப்படையில் மோதிரம் சின்னம் கோரினோம். எங்களுக்குதான் முன்னுரிமை அளித்திருக்க வேண்டும். ஆனால் புதிய ஒரு கட்சிக்கு அதை ஒதுக்கி விட்டார்கள்.
பின்னர் வைரம், பலாப்பழம், மேஜை மற்றும் பானை ஆகிய சின்னங்களை கேட்டோம். கடைசியாக பானை சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆந்திராவில் பானை சின்னம் கொடுக்காமல் ‘ஸ்டூல்’ சின்னம் ஒதுக்கியுள்ளனர்.
முதன் முதலாக 6 பாராளுமன்ற தொகுதிகளிலும் 50-க்கும் மேற்பட்ட சட்டமன்ற தொகுதிகளிலும் போட்டியிடுகிறோம்.
கேரளா, கர்நாடகாவில் தலா 3 தொகுதிகளில் போட்டியிடுகிறோம். சிதம்பரத்தில் போட்டியிடும் நான் பானை சின்னத்தில் கட்டாயம் வெற்றி பெறுவேன்.
கேள்வி:- உதயசூரியன் சின்னத்தில் நிற்க சொல்லி தி.மு.க. உங்களை நிர்ப்பந்தம் செய்ததா?
பதில்:- தி.மு.க. தரப்பில் இருந்து அப்படி எந்த நிர்பந்தமும் இல்லை. உதய சூரியன் சின்னத்தில் 2 தொகுதிகளிலும் கட்டாயம் வெற்றி பெற முடியும் என்று கருதி அப்படி ஆலோசனையை சொன்னார்கள். ஆனால் வெற்றி வாய்ப்பை மட்டுமே கருத்தில் கொண்டு சிதம்பரத்தில் தனி சின்னத்திலும், விழுப்புரத்தில் உதயசூரியன் சின்னத்திலும் போட்டியிட முடிவு எடுத்தோம்.
இந்த 2 தொகுதிகளிலும் நாங்கள் கட்டாயம் வெற்றி பெறுவோம். தி.மு.க. கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும்.
கேள்வி:- பானை சின்னம் மக்களுக்கு வெகுவாக போய் சேருமா?
பதில்:- மக்களுக்கு வெகுவாக போய் சேரும். இதில் எந்த சிக்கலும் இருக்காது.

பதில்:- தினகரன் அணியினர் பிரிக்கும் வாக்குகள் அ.தி.மு.க.வுக்குதான் பாதிப்பை ஏற்படுத்தும். அது எங்கள் கூட்டணிக்கு சாதகமாகவே அமையும்.
கேள்வி:- 18 தொகுதிகளில் நடக்கும் இடைத்தேர்தல் பற்றி?
பதில்:- சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அ.தி.மு.க.வுக்கு வாழ்வா? சாவா? என்கிற பிரச்சனை. தி.மு.க.வை பொறுத்தவரையில் சட்டமன்றம், பாராளுமன்றம் இரு தேர்தலிலும் அ.தி.மு.க., பா.ஜனதா அணியை வீழ்த்தியே தீர வேண்டும் என்கிற வேகத்துடன் செயல் திட்டங்களை வரையறுத்துள்ளோம். இரண்டிலும் தி.மு.க. அணி அமோக வெற்றி பெறும்.
இவ்வாறு அவர் கூறினார். #LSPolls #Thirumavalavan






