என் மலர்tooltip icon

    விருதுநகர்

    • 40 ஆயிரத்து 148 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா வழங்கினார்.
    • ரூ.417.21 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.

    விருதுநகர் சாத்தூர் சாலையில் உள்ள பட்டம்புதூரில் அரசு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் கலந்த கொண்ட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 40 ஆயிரத்து 148 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா வழங்கினார்.

    மேலும் 16 ஆயிரத்து 852 பேருக்கு மகளிர் சுயஉதவிக்குழு கடன்கள் மற்றும் பல்வேறு துறைகள் சார்பில் மொத்தம் 57 ஆயிரத்து 556 பயனாளிகளுக்கு ரூ.417.21 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.

    அப்போது, "விருதுநகருக்கு மருது சகோதரர்கள் போல் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர். ஆகியோர் உள்ளனர். நம் மாநிலத்திறஅகு தமிழ்நாடு என பெயர் சூட்டுவதற்கு உயிரை நீத்தவர் சங்கரலிங்கனார். அண்ணாவை உருவாக்கியது காஞ்சி, கலைஞரை உருவாக்கியது திருவாரூர், காமராஜருக்கு விருதுநகர்."

    "என் திருமணத்திற்கு பெருந்தலைவவர் காமராஜர் வந்ததை மறக்கவே முடியாது. காமராஜரின் இறுதிச் சடங்கை ஒரு மகன் போல் இருந்து நடத்தியவர் கலைஞர் கருணாநிதி. காமராஜர் பிறந்தநாளை கல்வி வளர்ச்சி நாளாக அறிவித்தவர் கலைஞர் கருணாநிதி."

    "விருதுநகரில் நான் முதல்வன் திட்டத்தால் 92 சதவீதத்திற்கும் அதிகமான மாணவர்கள் உயர்கல்வியில் சேர்ந்துள்ளனர். தமிழ் புதல்வன், புதுமைப் பெண் திட்டங்களால் விருதுநகரில் அதிக அளவில் உயர்கல்வி சேர்க்கை நடைபெற்றுள்ளது," என்று பேசினார்.  

    • சூலக்கரைமேட்டில் உள்ள அரசு காப்பகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
    • விருதுநகர் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து ராமமூர்த்தி சாலை வரை வாகனப் பேரணி மேற்கொண்டார்.

    தமிழக அரசின் நலத் திட்டங்கள் மக்களை சென்று சேர்வதை உறுதி செய்யும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைத்து மாவட்டங்களிலும் கள ஆய்வு மேற்கொள்ள முடிவு செய்தார்.

    அதன்படி, 2 நாள் பயணமாக இன்று விருதுநகர் சென்ற முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அங்குள்ள தனியார் பட்டாசு ஆலையில், பட்டாசு உற்பத்தியாளர்கள் மற்றும் பட்டாசு தொழிலாளர்களுடன் கலந்துரையாடினார்.

    இதைதொடர்ந்து, சூலக்கரைமேட்டில் உள்ள அரசு காப்பகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது அவர் மாணவிகளுடன் கலந்துரையாடினார். மாணவிகளுக்கு பரிசுகள், இனிப்புகள் வழங்கிய மு.க.ஸ்டாலின், காப்பகத்தில் அடிப்படிடை வசதிகள் உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்தார்.

    அப்போது, மாணவி ஒருவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அப்பா என்று அழைத்தார். இந்த நெகிழ்ச்சி சம்பவம் குறித்து முதலமைச்சர் தனது எக்ஸ் பக்கத்தில் நிறைவான நாள் என்று குறிப்பிட்டு பகிர்ந்துள்ளார்.

    இதையடுத்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விருதுநகர் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து ராமமூர்த்தி சாலை வரை வாகனப் பேரணி மேற்கொண்டார்.

    சாலையின் இருபுறங்களிலும் திரண்டிருந்த மக்கள் முதலமைச்சருக்கு வரவேற்பை அளித்தனர்.

    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைத்து மாவட்டங்களிலும் கள ஆய்வு மேற்கொள்ள முடிவு செய்தார்.
    • முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பட்டாசு உற்பத்தியாளர்கள் மற்றும் பட்டாசு தொழிலாளர்களுடன் கலந்துரையாடினார்.

    தமிழக அரசின் நலத் திட்டங்கள் மக்களை சென்று சேர்வதை உறுதி செய்யும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைத்து மாவட்டங்களிலும் கள ஆய்வு மேற்கொள்ள முடிவு செய்தார்.

    அதன்படி, 2 நாள் பயணமாக இன்று விருதுநகர் சென்ற முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அங்குள்ள தனியார் பட்டாசு ஆலையில், பட்டாசு உற்பத்தியாளர்கள் மற்றும் பட்டாசு தொழிலாளர்களுடன் கலந்துரையாடினார்.

    மேலும், பல்வேறு நிகழ்ச்சிகளிலும் அவர் கலந்துக் கொண்டு வருகிறார்.

    இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது விருதுநகர் பயணம் தொடர்பாக எக்ஸ் தள பக்கத்தில் நெகிழ்ச்சி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அந்த பதிவில், " தென்தமிழ்நாட்டுக்கே உரிய வாஞ்சையுடன் "அண்ணே… அண்ணே…" என்றும் - குலவையிட்டும் வரவேற்ற விருதுநகர் மக்கள்" என்று குறிப்பிட்டிருந்தார்.

    மேலும் மற்றொரு பதிவில், "இன்று விருதுநகர் மாவட்ட ஆய்வின்போது, 2 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் பட்டாசுத் தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்களிடம் அவர்களது தேவைகள் குறித்து கலந்துரையாடினேன்" என்றார்.

    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தான் பயணம் செய்த வேனில் இருந்து இறங்கி சாலையில் நடந்து சென்றார்.
    • ராமமூர்த்தி சாலை வரை சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரோடு-ஷோ செல்கிறார்.

    விருதுநகர்:

    தமிழக அரசின் நலத் திட்டங்கள் மக்களை சென்று சேர்வதை உறுதி செய்யும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைத்து மாவட்டங்களிலும் கள ஆய்வு மேற்கொள்ள முடிவு செய்தார்.

    அதன்படி தனது முதலாவது கள ஆய்வை கடந்த 5-ந்தேதி தெற்கு மண்டலமான கோவையில் நடத்தினார். அதன் தொடர்ச்சியாக இரண்டாவது கள ஆய்வு பணியை விருதுநகரில் மேற்கொள்ள முடிவு செய்தார்.

    அதன்படி 2 நாள் பயணமாக சென்னையில் இருந்து இன்று காலை 11.30 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமானம் மூலம் மதுரை வந்தார். அங்கு அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, ஏ.வ.வேலு, மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன், சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, கலெக்டர் சங்கீதா, மேயர் இந்திராணி, மற்றும் மாவட்டச் செயலாளர்கள் கோ.தளபதி எம்.எல்.ஏ., சேடப்பட்டி மணிமாறன், நிர்வாகிகள் வரவேற்றனர்.

    இதையடுத்து காரில் விருதுநகர் புறப்பட்டு சென்ற அவருக்கு மாவட்ட எல்லை மற்றும் பொதுப் பணித்துறை அலுவலகம் முன்பு சுமார் 75 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சாலையில் இருபுறமும் திரண்டு நின்று உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    சுமார் இரண்டரை கிலோ மீட்டர் தூரத்திற்கு கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பொதுமக்கள் காத்திருந்தனர். அவர்களை பார்த்ததும் உற்சாகம் அடைந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தான் பயணம் செய்த வேனில் இருந்து இறங்கி சாலையில் நடந்து சென்றார்.


    அப்போது அவருக்கு ஏராளமானோர் கைகுலுக்கினர். பதிலுக்கு மு.க.ஸ்டாலினும் கைகொடுத்து உற்சாகப்படுத்தினார். சிலர் கோரிக்கை மனுக்களையும் அளித்தனர். தொடர்ந்து மக்கள் வெள்ளத்தில் அங்கிருந்து சூலக்கரை பகுதியில் உள்ள அன்னை சத்யா குழந்தைகள் இல்லத்திற்கு சென்றார்.

    அங்கு தங்கியுள்ள குழந்தைகளிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாடுகிறார். தொடர்ந்து விருதுநகர் ஆர்.ஆர்.நகர் அருகிலுள்ள கன்னிசேரிபுதூரில் செயல்பட்டு வரும் தனியார் பட்டாசு ஆலைக்கு செல்கிறார்.

    அங்கு பட்டாசு உற்பத்தியாளர்கள் மற்றும் பட்டாசு தொழிலாளர்களுடன் கலந்துரையாடுகிறார். பட்டாசு தயாரிப்பில் ஏற்படும் விபத்துகள், அதனை எதிர்கொள்ள தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கிறார். மேலும், தொழிலாளர்கள் சந்திக்கும் இன்னல்கள், குறைகளையும் கேட்டறிய உள்ளார்.

    இதைத்தொடர்ந்து ஆர்.ஆர்.நகரில் உள்ள ராம்கோ விருந்தினர் மாளிகையில் மதிய உணவு முடிந்ததும், மாலையில் விருதுநகர் புதிய பஸ் நிலையம் பகுதிக்கு வருகிறார். அங்கிருந்து திறந்த காரில் எம்.ஜி.ஆர். சிலை ரவுண்டானா, அருப்புக்கோட்டை ரெயில்வே மேம்பாலம், அல்லம்பட்டி முக்கு ரோடு வழியாக ராமமூர்த்தி சாலை வரை சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரோடு-ஷோ செல்கிறார்.

    ஒருசில இடங்களில் காரில் இருந்து இறங்கி நடந்து செல்லவும் திட்டமிட்டுள்ள அவர் பொதுமக்களிடம் மனுக்களையும் பெற்றுக்கொள்கிறார். பின்னர் அதே பகுதியில் உள்ள எஸ்.எஸ்.கே.சரஸ்வதி கிராண்ட் மண்டபத்தில் கட்சி நிர்வாகிகளுடனான ஆலோசனைக்கூட் டம் நடைபெறுகிறது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசுகிறார்.

    விருதுநகர் மாவட்டத்தை பொறுத்தவரை தி.மு.க.வின் நிர்வாக காரணங்களுக்காக வடக்கு மற்றும் தெற்கு மாவட்டமாக செயல்பட்டு வருகிறது. இங்குள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில் ஸ்ரீவில்லிபுத்தூர் தவிர மற்ற 6 தொகுதிகளிலும் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளாக ம.தி.மு.க., காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களே உள்ளனர்.

    தேர்தல் வெற்றிக்கு ஆலோசனை 2026 சட்டமன்ற தேர்தலில் மாவட்டச் செயலாளர்கள் தலைமையில் தி.மு.க. நிர்வாகிகள் தீவிரமாக களப்பணியாற்ற தேவையான ஆலோசனைகளை வழங்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கருத்துவேறுபாடுகளை களைந்து தி.மு.க. அரசு கொண்டு வந்துள்ள மக்கள் நலத்திட்டங்கள் மக்களை சரியாக சென்று சேர்கிறதா என்று அறிந்து அதுபற்றிய விபரங்களை பொதுமக்களிடம் எடுத்துக்கூறி தி.மு.க.வுக்கு அவர்கள் வாக்களிப்பதை உறுதி செய்யும் வகையில் தற்போது முதலே பணிகளை தொடங்கவேண்டும் என்பது தொடர் பாக ஆலோசனைகளை அவர் வழங்க இருக்கிறார்.

    கூட்டம் முடிந்ததும் இரவு ராம்கோ விருந்தினர் மாளிகையில் தங்கி ஓய்வெடுக்கிறார்.

    • கலித்தொகை பாடல் மூலம் பழந்தமிழர்கள் அணிகலன்களை வடிவமைத்து அணிந்தனர் என்பது புலனாகிறது.
    • விலங்குகளை வேட்டையாடப் பயன்படும் கருவிகள் தயாரிப்பின் மூலப்பொருட்களான ஜாஸ்பர், சார்ட் கற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

    நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    ''சுறா ஏறுஎழுதிய மோதிரம் தொட்டாள்'' எனும் கலித்தொகை பாடல் மூலம் பழந்தமிழர்கள் அணிகலன்களை வடிவமைத்து அணிந்தனர் என்பது புலனாகிறது.

    விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை- விஜயகரிசல்குளத்தில் நடைபெற்று வரும் மூன்றாம் கட்ட அகழாய்வில், பழமையான அணிகலன் தயாரிப்பு மற்றும் விலங்குகளை வேட்டையாடப் பயன்படும் கருவிகள் தயாரிப்பின் மூலப்பொருட்களான ஜாஸ்பர், சார்ட் கற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இத்தகு சான்றுகள், அக்காலத்தில் வாழ்ந்த தமிழ்ப் பெருங்குடி மக்களின் வடிவமைப்பு கலையை மெய்ப்பிக்கும் விதமாக அமைந்துள்ளன என்று தெரிவித்துள்ளார்.

    • பணத்தை வாங்கிய பின் ஒரு வாரம் ஆகியும் வேலை வாங்கி தரவில்லை.
    • பொன்ஆனந்த், அவரது மனைவி சாந்தி ஆகியோர் மிரட்டல் விடுத்தனர்.

    ராஜபாளையம்:

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள வேப்பங்குளத்தை சேர்ந்தவர் ஜெயமாலா (வயது 48). இவர் கருத்து வேறுபாடு காரணமாக முதல் கணவரை பிரிந்து செல்வகுமார் என்பவரை 2-வது திருமணம் செய்து வாழ்ந்து வந்தார். இந்த நிலையில் ஜெயமாலா ராஜபாளையம் தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

    நான் கடந்த வாரம் கலங்காபுதூரில் உள்ள கோவிலுக்கு சாமி கும்பிட சென்றேன். பின்னர் அங்கிருந்து வீடு திரும்புவதற்காக பஸ் நிறுத்தத்தில் பஸ்சுக்காக காத்திருந்தேன்.

    அப்போது கீழராஜகுலராமன் பகுதியை சேர்ந்த பொன்ஆனந்த் (வயது 50), அவரது மனைவி சாந்தி ஆகியோர் காரில் அங்கு வந்தனர். இருவரும் ஊருக்கு செல்ல அரசு பஸ் வர தாமதம் ஆகும். எனவே காரில் ஏறி கொள்ளுங்கள் வீட்டில் இறக்கி விடுகிறோம் என கூறினர்.

    இதனை நம்பி நான் அவர்களுடன் சென்றேன். ஆனால் என்னை வீட்டில் இறக்கி விடாமல் அவர்கள் வீட்டிற்கு அழைத்து சென்றனர். அங்கு பொன் ஆனந்த் ரூ.2½ லட்சம் கொடுத்தால் உனக்கு அரசு வேலை வாங்கி தருகிறேன் என ஆசைவார்த்தை கூறினார்.

    மறுநாள் தென்காசி ரோட்டில் உள்ள தனியார் வங்கிக்கு என்னை அழைத்து சென்ற பொன் ஆனந்த் எனது தாலி உள்பட 6 பவுன் நகையை அவரது பெயரில் அடகு வைத்து ரூ.2 லட்சம் கடன்பெற்றார்.

    மேலும் எனது ஏ.டி.எம். கார்டு மூலம் வங்கி கணக்கில் இருந்த ரூ.55 ஆயிரத்தை எடுத்தார். பணத்தை வாங்கிய பின் ஒரு வாரம் ஆகியும் வேலை வாங்கி தரவில்லை. இதுகுறித்து கேட்டபோது, பொன்ஆனந்த், அவரது மனைவி சாந்தி ஆகியோர் மிரட்டல் விடுத்தனர். எனவே உரிய நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுத்தர வேண்டும்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

    இந்த புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் செல்வி விசாரணை நடத்தி வருகிறார். மாவட்ட குற்ற பிரிவிலும் இதுதொடர்பாக புகார் செய்யப்பட்டுள்ளது.

    பொன் ஆனந்த் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சின்னம்மா பேரவையில் மாநில ஒருங்கிணைப்பாளராக இருந்துள்ளார். பின்னர் அவர் அங்கிருந்து விலகி அ.தி.மு.க.வில் இணைந்ததாக கூறப்படுகிறது.

    • பல்வேறு துறைகளின் சார்பில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
    • சட்டமன்ற தொகுதிகளில் தீவிரமாக களப்பணியாற்றுவது குறித்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசிக்கிறார்.

    விருதுநகர்:

    தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026-ல் நடைபெற உள்ளது. இதற்கான பணிகளை ஏற்கனவே தொடங்கி விட்ட தி.மு.க. 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளை கைப்பற்றுவதை இலக்காக கொண்டு செயலாற்றி வருகிறது.

    அதன் ஒரு பகுதியாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று கள ஆய்வுப்பணி மேற்கொள்ள திட்டமிட்டு முதல் கள ஆய்வை கோவையில் கடந்த 5-ந்தேதி தொடங்கினார். அரசு விழாக்களுடன் கட்சி நிர்வாகிகளையும் சந்திக்கிறார்.

    2 நாட்கள் கோவையில் முகாமிட்டு பல்வேறு நலப் பணிகளை அவர் தொடங்கி வைத்தார். அப்போது கோவை மாவட்ட தி.மு.க. நிர்வாகிகளையும் சந்தித்து பேசினார். சட்டமன்ற தேர்தலில் ஒற்றுமையாக இருந்து பணியாற்ற வேண்டும் என்றும் அவர் நிர்வாகிகளிடம் கேட்டுக்கொண்ட தோடு, ஆலோசகளையும் வழங்கினார்.

    தி.மு.க. அரசின் திட்டங்களை பொதுமக்களிடம் கொண்டு போய் சேர்த்து அவர்களின் வாக்குகளை பெறுவதற்கான வழி முறைகளை தற்போது முதலே தொடங்கவேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார். அரசு விழாக்கள் மட்டுமின்றி தங்களையும் சந்தித்து பேசியதால் தி.மு.க. நிர்வாகிகள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

    இதைத்தொடர்ந்து கள ஆய்வின் இரண்டாம் கட்டமாக நாளை மறுநாள் (9-ந்தேதி) முதலஅமைச்சர் மு.க.ஸ்டாலின் விருதுநகர் மாவட்டம் வருகை தருகிறார். இரண்டு நாட்கள் விருதுநகரில் முகாமிட்டு இருக்கும் அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் வகையில் திட்டம் வகுக்கப்பட்டு உள்ளது.

    அதாவது 9-ந்தேதி காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வருகை தரும் அவர் காலை 10 மணிக்கு விருதுநகர் வந்தடைகிறார். வழியில் மாவட்ட எல்லையில் அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் தலைமையில் சுமார் 30 ஆயிரம் பேர் திரண்டு பிரமாண்ட வரவேற்பு அளிக்கிறார்கள்.

    பின்னர் அங்கிருந்து ஆர்.ஆர்.நகர் விருந்தினர் மாளிகைக்கு செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறிது நேர ஓய்வுக்கு பிறகு விருதுநகர் வருகிறார். அங்கு ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தி.மு.க. நிர்வாகிகளுடனான சந்திப்பு நிகழ்ச்சி நடக்கிறது.

    இதில் விருதுநகர், சாத்தூர், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, அருப்புக்கோட்டை, திருச்சுழி ஆகிய சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள், பல்வேறு அணிகளின் பொறுப்பாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், நகர, ஒன்றிய நிர்வாகிகள் ஆகியோருடன் ஆலோசனை நடத்தி பல்வேறு அறிவுரைகளை வழங்குகிறார்.

    குறிப்பாக வாக்கு சதவீதம் குறைவாக உள்ள சட்டமன்ற தொகுதிகளில் தீவிரமாக களப்பணியாற்றுவது குறித்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசிக்கிறார். இதையடுத்து அருகிலுள்ள பட்டாசு தொழிற்சாலைக்கு நேரில் சென்று ஆய்வு நடத்த இருப்பதாகவும், பட்டாசு உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதையடுத்து இரவு விருதுநகரில் தங்கும் அவர் மறுநாள் (10-ந்தேதி) அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். காலை 10 மணிக்கு விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் ரூ.77.11 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய கலெக்டர் அலுவலக வளாக கட்டிடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். 6 தளங்களுடன் கூடிய இந்த கட்டிடம் 2 லட்சத்து 6 ஆயிரத்து 756 சதுர அடியில் அமைக்கப்பட்டுள்ளது.

    இதைத்தொடர்ந்து அங்கிருந்து சுமார் 6 கி.மீ. தொலைவில் உள்ள பட்டம்புதூர் பகுதியில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெறுகிறது. இதில் 25 ஆயிரம் பேருக்கு வீட்டு மனை பட்டா மற்றும் 15 ஆயிரம் பேருக்கு பல்வேறு துறைகளின் சார்பில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

    பின்னர் அங்கிருந்து மதுரைக்கு காரில் புறப்படும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விமானம் மூலம் சென்னை புறப்பட்டு செல்கிறார். விருதுநகர் மாவட்டத்திற்கு மு.க.ஸ்டாலின் வருகையை முன்னிட்டு கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். தேர்தலுக்கு முன்னோட்டமாகவும், தங்களை உற்சாகப்படுத்தவும் வரும் அவருக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கவும் தயாராகி வருகிறார்கள்.

    • ரவிராஜா காங்கிரஸ் கட்சியில் பல்வேறு பதவிகளை அலங்கரித்துள்ளார்.
    • பா.ஜ.க.வில் இணைந்ததும் மும்பை மாநகர பா.ஜ.க. துணைத்தலைவர் பதவியும் அளிக்கப்பட்டுள்ளது.

    ராஜபாளையம்:

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்தவர் ரவிராஜா. மும்பையில் வசித்துவரும் பழுத்த அரசியல்வாதியான இவர் மும்பை மாநகராட்சியின் முன்னாள் எதிர்கட்சித் தலைவராக ஐந்து முறை பொறுப்பு வகித்துள்ளார். அங்குள்ள சயன் கோலி வாடா பகுதி மாநகர கவுன்சிலரான ரவிராஜா காங்கிரஸ் கட்சியில் பல்வேறு பதவிகளை அலங்கரித்துள்ளார்.

    இந்தநிலையில் காங்கிரசை உதறி தள்ளி விட்டு அதிலிருந்து விலகிய ரவி ராஜா, மகாராஷ்டிர மாநிலத்தின் துணை முதல்-மந்திரியும், அம்மாநில பாரதிய ஜனதா கட்சி தலைவருமான தேவேந்திர பட்னாவிஸ் முன்னிலையில் பா.ஜ.க.வில் இணைந்தார்.

    44 ஆண்டுகளாக தான் செய்த பணிகள் எதையுமே காங்கிரஸ் கட்சி கண்டு கொள்ளவில்லை எனவும், தனது உழைப்பை மதிக்கவில்லை எனவும் பரபரப்பு குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ள அவர் பா.ஜ.க.வில் இணைந்ததும் மும்பை மாநகர பா.ஜ.க. துணைத்தலைவர் பதவியும் அளிக்கப்பட்டுள்ளது.

    ஏற்கனவே இரண்டு முறை சயன் கோலிவாடா தொகுதியில் வென்ற மகாராஷ்டிராவின் தமிழ் எம்.எல்.ஏ. கேப்டன் தமிழ்செல்வன் இம்முறை ரவிராஜா வரவால் மீண்டும் மிகப்பெரிய வெற்றி காண்பார் என்பதில் எள்ளளவும் சந்தேகம் வேண்டாம் என மும்பை அரசியல் வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

    அவரது வரவு குறித்து பேசிய துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், ரவிராஜா மிகவும் வலிமையான தலைவர். மும்பை அரசியல்வாதிகளின் சூத்திர தாரி, அவரது வரவால் பா.ஜ.க. மிகப்பெரிய பலத்தை பெற்றுள்ளது. அவரது திறமைக்கான களமாக பா.ஜ.க. அமையும் என தெரிவித்துள்ளார்.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 288 சட்டசபை தொகுதிகளுக்கும் வருகிற 20-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி ரவி ராஜா பா.ஜ.க.வில் இணைந்திருப்பது அங்கு பேசும்பொருளாக மாறியுள்ளது.

    • பக்தர்கள் பலர் கோவிலுக்கு சென்றுவிட்டு அங்குள்ள ஆற்றில் குளிக்கச் சென்றனர்.
    • 150 பக்தர்கள் திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக சிக்கித் தவித்தனர்

    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் ராக்காச்சி அம்மன் கோவில் உள்ளது. அப்பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் பலர் கோவிலுக்கு சென்றுவிட்டு அங்குள்ள ஆற்றில் குளிக்கச் சென்றனர்.

    இந்த நிலையில் திடீரென அந்த பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து கோவிலுக்குச் சென்ற பெண்கள் உட்பட சுமார் 150 பக்தர்கள் திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக சிக்கித் தவித்தனர்.

    பின்னர் இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற ராஜபாளையம் தீயணைப்புத் துறையினர் அங்குள்ளவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

    • பட்டாசு சிதறி சேமிப்பு கிடங்கின் மீது விழுந்ததில், அங்கிருந்த கழிவு அட்டைப் பொருட்கள் தீப்பற்றி எரிய தொடங்கியுள்ளது.
    • மக்கள் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் பழைய இரும்பு, பிளாஸ்டிக் பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்த இடத்திற்கு அருகில் சிலர் பட்டாசுகளை வெடித்துள்ளனர். இதில் பட்டாசு சிதறி சேமிப்பு கிடங்கின் மீது விழுந்ததில், அங்கிருந்த கழிவு அட்டைப் பொருட்கள் தீப்பற்றி எரிய தொடங்கியுள்ளது. மேலும் காற்றின் வேகம் காரணமாக தீ மளமளவென பரவியது.

    இது குறித்து அப்பகுதி மக்கள் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இந்த தீ விபத்து காரணமாக அச்சம்பட்டி பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. இதனிடையே குறுகிய சாலை வழியாக தீயணைப்பு வாகனம் நுழைய முடியாததால், தீயணைப்பு வீரர்கள், போலீசார் மற்றும் பொதுமக்கள் இணைந்து தண்ணீரை ஊற்றி தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • திராவிடமும், தமிழ் தேசியமும் இந்த மண்ணின் இரண்டு கண்கள்.
    • திமுக பற்றி இதுதான் எங்கள் முதல் எதிரி என்று பேசி உள்ளார். நாங்கள் அதை வரவேற்கிறோம்.

    தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டியில் நேற்று பிரமாண்டமாக நடைபெற்றது. லட்சக்கணக்கான தொண்டர்கள் திரண்டிருந்த இந்த மாநாட்டில் பேசிய விஜய்,

    இந்த நாட்டை பாழ்படுத்தும் பிளவுவாத அரசியல் செய்வோர்தான் தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை ரீதியான முதல் எதிரி. திராவிட மாடல் ஆட்சி என்று பெரியார், அண்ணா பெயரை வைத்து தமிழ்நாட்டை சுரண்டி கொள்ளையடிக்கும் ஒரு குடும்ப சுயநலக்கூட்டம் தான் அடுத்த எதிரி,

    அரசியல் எதிரி. கொள்கை, கோட்பாடு அளவில் தேசியத்தையும், திராவிடத்தையும் பிரித்துபார்க்க போவதில்லை. திராவிடமும், தமிழ் தேசியமும் இந்த மண்ணின் இரண்டு கண்கள். நாம் எந்த குறிப்பிட்ட அடையாளத்தின்கீழும் நம்மை சுருக்கி கொள்ளாமல், மதச்சார்பற்ற சமூக நீதிகொள்கைகளை, நமது கொள்கை அடையாளமாக முன்னிறுத்தி செயல்பட போகிறோம் என்று கூறி இருந்தார்.

    இதுதொடர்பாக விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த முன்னாள் அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் கூறுகையில்,

    * திமுக பற்றி இதுதான் எங்கள் முதல் எதிரி என்று பேசி உள்ளார். நாங்கள் அதை வரவேற்கிறோம்.

    * கொள்கை நிலைப்பாடை வெளிப்படுத்திய முதல் பேச்சிலேயே, போலி திராவிட மாடலை எதிர்த்து குரல் கொடுத்தது மிக முக்கியம் என்று நினைக்கிறோம்.

    * எங்களை பொறுத்தவரை அதிமுகவுடன் உடன்பாடில்லாத கொள்கை எதுவும் இல்லை. செயல்பாட்டுக்கு கொண்டு வராதது திமுகவின் பிரச்சனை.

    * அவர் என்ன நிலைப்பாடு எடுத்து இருக்கிறாரோ நாங்கள் அதை வரவேற்கிறோம் என்று கூறினார்.

    • பட்டாசு உற்பத்திக்கு பெயர் போன சிவகாசியில், 2500-க்கும் மேற்பட்ட கடைகளில் பட்டாசுகள் விற்பனை செய்யப்படுகின்றன
    • சிவகாசியில் விதவிதமான பேன்சி பட்டாசுகள் ஒவ்வொரு ஆண்டும் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன.

    சிவகாசி:

    தீபாவளி பண்டிகை வருகிற 31-ந்தேதி கொண்டாடப்படவுள்ள நிலையில், தற்போதே அதற்கான பரபரப்புகள் ஆரம்பமாகி விட்டன. புத்தாடைகள் வாங்க தமிழகத்தின் ஒவ்வொரு நகரத்திலும், மக்கள் ஜவுளிக்கடைகளை மொய்த்து வருகின்றனர். இதனால், சென்னை, மதுரை, கோவை, திருச்சி உள்ளிட்ட தமிழகத்தின் முக்கிய நகரங்களிலும், ஏனைய ஊர்களிலும் கடை வீதிகள் திருவிழா கோலம் பூண்டுள்ளன.

    தீபாவளி என்றாலே பட்டாசு தான். குழந்தைகள் மட்டுமல்லாமல், இளைஞர்களும், பெரியவர்களும் பட்டாசு மற்றும் மத்தாப்பு வெடித்து மகிழாதவர்களே இருக்க மாட்டார்கள். தற்போது சுற்றுச்சூழல் உள்ளிட்ட காரணங்களைக் காட்டி பட்டாசு வெடிக்க பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இருந்த போதிலும், பட்டாசுகளை வாங்க மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    பட்டாசு உற்பத்திக்கு பெயர் போன சிவகாசியில், 2500-க்கும் மேற்பட்ட கடைகளில் பட்டாசுகள் விற்பனை செய்யப்படுகின்றன. மேலும் சிவகாசி, திருத்தங்கல் பகுதிகள், சாத்தூர், விருதுநகர் சாலை, சங்கரன்கோவில் சாலைகளில் அதிகளவிலான பட்டாசு விற்பனை கடைகள் உள்ளன. பட்டாசு நிறுவனங்களின் நேரடி விற்பனை கடைகளும் ஏராளமாக உள்ளது.

    இதனால் சிவகாசியில் பட்டாசுகளின் விலை ஓரளவு குறைவாக இருக்கும் என்ற நம்பிக்கையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பட்டாசு பிரியர்கள் குவிந்து வருகின்றனர். பட்டாசு விற்பனை கடைகளில் அனைத்து விதமான பட்டாசு ரகங்கள், மத்தாப்பு வகைகள், நவீன ரக வெடிகள், வாண வெடிகள் என சுமார் 500-க்கும் மேற்பட்ட வகையிலான பட்டாசுகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.

    சிவகாசியில் விதவிதமான பேன்சி பட்டாசுகள் ஒவ்வொரு ஆண்டும் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. அதே போல், பட்டாசு தயாரிப்பு விதிமுறைகள் காரணமாகவும், ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்வதற்கான போக்குவரத்து கட்டணம் போன்றவற்றால் ஒவ்வொரு ஆண்டும் பட்டாசுகளின் விலையும் அதிகரித்துக் கொண்டே வருகின்றன.

    இதைக் கருத்தில் கொண்டு, பட்டாசுகள் உற்பத்தி செய்யப்படும் சிவகாசிக்கு வெளி மாவட்டம் மற்றும் இன்றி, அண்டை மாநில மக்களும் நேரடியாக வந்து பட்டாசுகளை வாங்கிச் செல்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும் விலை குறைவு, 50 சதவீதம் முதல் 80 சதவீதம் வரை தள்ளுபடி விலையில் பட்டாசுகள் விற்பனை மற்றும் வெடித்துப் பார்த்து வாங்கலாம் என்பதே இவர்களின் வருகைக்கு முக்கிய காரணம். இதனால் சிவகாசியின் ஒவ்வொரு பட்டாசு கடைகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

    இதுகுறித்து, பட்டாசு மொத்த விற்பனனயாளர் ஒருவர் கூறுகையில், தொடக்கத்தில் ஆர்டர்கள் குறைவாக வந்தாலும், தற்போது நவராத்திரி விழாவைத் தொடர்ந்து விற்பனை சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. வெளிமாவட்டங்கள் மட்டுமல்லாமல், வெளி மாநிலங்களில் இருந்தும் மக்கள் நேரடியாக சிவகாசி வந்து தங்களுக்கு தேவையான பட்டாசுகளை வாங்கிச் செல்கின்றனர்.

    இன்னும் தீபாவளிக்கு 10 நாட்களே உள்ளதால், வார இறுதி நாட்களான வருகிற சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் வியாபாரம் அதிகரிக்கும் என்று எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.

    ×