என் மலர்
வேலூர்
- தே.மு.தி.க. ஆட்சிக்கு வந்தால் மது கடை இல்லாத தமிழகம் உருவாக்கப்படும்.
- ரேஷன் பொருட்கள் பொதுமக்கள் வீடு தேடி வரும்.
வேலூர்:
வேலூர் அண்ணாசாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தேமுதிக பூத் ஏஜென்ட் ஆலோசனை கூட்டம் நடந்தது.
கூட்டத்தில் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவர் பேசியதாவது:-
தே.மு.தி.க. ஆட்சிக்கு வந்தால் மது கடை இல்லாத தமிழகம் உருவாக்கப்படும். ரேஷன் பொருட்கள் பொதுமக்கள் வீடு தேடி வரும். தே.மு.தி.க. நிர்வாகிகள் யார் பெரியவர் என்ற ஈகோவை மறந்து வருகின்ற தேர்தலில் பணியாற்றினால் வெற்றி என்ற மூன்றெழுத்து நமக்கு பரிசாக கிடைக்கும்.
இதன் மூலம் அதிக அளவில் வெற்றி பெறுவார்கள். விஜயகாந்த் உயிருடன் இருந்தபோது அவரின் முதுகில் குத்தி விட்டனர். கையெழுத்து போட்டு கொடுத்து விட்டு பின்னர் இல்லை என்று துரோகம் செய்துவிட்டனர். நாம் எவ்வளவோ துரோகிகளை பார்த்து விட்டோம்.
நமக்கு எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஆளுங்கட்சியினர் என்ற எந்தவித ஆதரவும் இல்லை. நீங்கள் விஜயகாந்தை மனதில் வைத்துக் கொண்டு வெற்றிக்காக போராட வேண்டும். கடந்த ஒன்றை வருடங்களாக விஜயகாந்த் நினைவிடத்தில் ஏராளமான பொதுமக்கள் தினமும் வந்து கண்ணீர் வடிக்கின்றனர் என்று பேசினார்.
தொடர்ந்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
குடியாத்தத்தில் மக்களைத் தேடி மக்கள் தலைவன் கேப்டன் என்ற ரதயாத்திரை தொடங்க இருக்கிறது.
நடைபயணத்துடன் தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் மக்களை சந்தித்து தொண்டர்களை சந்தித்து பேச இருக்கிறோம். தற்பொழுது முதல் கட்டமாக இந்த நடைபயணம் வரும் 23-ந்தேதியோடு நிறைவுக்கு வருகிறது. 24-ந்தேதி கேப்டனின் நினைவு நாள் முன்னிட்டு கேப்டன் அறக்கட்டளையிலிருந்து நல திட்ட உதவிகள் வழங்க இருக்கின்றோம்.
25-ந் தேதி விஜயகாந்த் பிறந்த நாள் அது எங்கள் கட்சிக்கு திருநாள். அவர் பிறந்த நாள் முடிந்து இரண்டாம் கட்ட பிரசாரம் தொடங்கும்.
மீண்டும் மக்களை தேடி மக்கள் தலைவன் என்கின்ற சந்திப்பை முடித்துப் பின்பு தான் யாருடன் கூட்டணி என்பதை நாங்கள் அறிவிப்போம் என்றார்.
- தமிழக தலைவர்கள் கூடி ஆலோசித்து முடிவெடுக்க வேண்டும்.
- பீகாரை சேர்ந்தவர்கள் தமிழகத்தில் வாக்காளர்களானால் அரசியல் மாற்றம் ஏற்படும்.
வாக்காளர் சிறப்பு திருத்தம் தொடர்பாக அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார்.
இந்நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறுகையில்,
* வடமாநில வாக்காளர்கள் தமிழகத்தில் வாக்காளர்கள் ஆவதை தடுக்க வேண்டும்.
* தமிழக தலைவர்கள் கூடி ஆலோசித்து முடிவெடுக்க வேண்டும்.
* பீகாரை சேர்ந்தவர்கள் தமிழகத்தில் வாக்காளர்களானால் அரசியல் மாற்றம் ஏற்படும்.
* திருமாவளவனின் கருத்தை ஏற்றுக்கொள்வதாக அவர் கூறினார்.
- பீகாரில் உயிரோடு இருப்பவர்களை எல்லாம் இல்லை என போட்டு விட்டார்கள்.
- மக்கள் நலன் சார்ந்த முகாமை முதல்வர் தொடங்கி உள்ளார்.
வேலூர்:
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த வள்ளிமலை பகுதியில் நடைபெற்ற நலன் காக்கும் ஸ்டாலின் திட்டம் தொடக்க விழாவில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டு சிறப்பு திட்ட முகாமை தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் நிருபர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த விவரம் வருமாறு:-
கேள்வி: பிரேமலதா, ஓ.பன்னீர்செல்வம் முதலமைச்சரை சந்தித்தனர். இது கூட்டணியாக மாற வாய்ப்பு உள்ளதா? இதன் பின்னணி ஏதேனும் உள்ளதா?
பதில்: பின்னணியும் இல்லை, முன்னணியும் இல்லை. தலைவருக்கு உடல்நிலை சரியில்லை என்பதால் அரசியல் பண்பாட்டுடன் வந்து பார்த்தார்கள் அவ்வளவுதான்.
கேள்வி: பீகாரை சேர்ந்த 6.5 லட்சம் பேர் தமிழகத்தில் வாக்காளர்களாக சேர்க்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளதே?
அவர்களுக்கு எல்லாம் அவர்கள் ஊரிலேயே வேலை ஏற்படுத்திக் கொடுத்திருந்தால் நம்ம ஊருக்கு வந்திருக்க மாட்டார்கள். இங்க வந்திருக்கிறார்கள் இப்போது என்ன செய்வது என்பது மிகப்பெரிய பிரச்சனை. ஏனென்றால் பீகாரில் உயிரோடு இருப்பவர்களை எல்லாம் இல்லை என போட்டு விட்டார்கள். அந்த மாதிரி நம் ஊரில் போட முடியாது. இதை தலைவர்கள் தான் அணுக வேண்டும். வெளி மாநிலத்தை சேர்ந்தவர்கள் லட்சக்கணக்கில் தமிழகத்தில் வாக்காளர்களாக மாறும்போது வரும் காலத்தில் தமிழகத்தில் நிச்சயம் அரசியலில் பாதிப்பும் தாக்கமும் இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக மேடையில் அமைச்சர் துரைமுருகன் பேசுகையில், மக்களுக்காக தொடர்ந்து பல்வேறு முகாம்களை முதல்வர் நடத்தி வருகிறார். இப்போதும் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்று வருகிறது, அது முடிவதற்குள்ளேயே இன்னொரு மக்கள் நலன் சார்ந்த முகாமை முதல்வர் தொடங்கி உள்ளார். என்னால் இப்போதைக்கு அதிகமாக பேச முடியாது ஏனென்றால் எனக்கு சற்று உடல் நலம் சரியில்லை என பேசினார்.
- படவேட்டம்மன் கோவில் மற்றும் பஸ் நிலைய பகுதிகளில் அன்புமணி ராமதாஸ் நடைபயணமாக சென்று பொதுமக்கள் மத்தியில் பேசுகிறார்.
- நாளை மாலை வேலூர் வருகிறார் அண்ணாசாலையில் அவர் நடைபயணம் செல்கிறார்.
வேலூர்:
தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் என்ற பெயரில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கடந்த 25-ந்தேதி முதல் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்.
இன்று மாலை அவர் ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா வருகிறார். அங்குள்ள படவேட்டம்மன் கோவில் மற்றும் பஸ் நிலைய பகுதிகளில் அன்புமணி ராமதாஸ் நடைபயணமாக சென்று பொதுமக்கள் மத்தியில் பேசுகிறார்.
இதனைத் தொடர்ந்து நாளை காலை 10 மணிக்கு ராணிப்பேட்டை சிப்காட் பகுதியில் உள்ள தனியார் நிறுவன கழிவுகள் கொட்டப்பட்டு வைத்திருக்கும் பகுதியில் நேரடியாக சென்று பார்வையிட்டு ஆய்வு செய்கிறார்.
நாளை மாலை 4 மணிக்கு ஆற்காடு நகரப் பகுதியில் அன்புமணி ராமதாஸ் நடைபயணம் சென்று பொதுமக்கள் மத்தியில் பேசுகிறார். தொடர்ந்து நாளை மாலை வேலூர் வருகிறார் அண்ணாசாலையில் அவர் நடைபயணம் செல்கிறார்.
இதனைத் தொடர்ந்து வருகிற 4-ந்தேதி திருப்பத்தூர் மாவட்டத்தில் அன்புமணி ராமதாஸ் நடைபயணம் செய்து தனது முதல் கட்ட நடைபயணத்தை நிறைவு செய்கிறார். அன்புமணி ராமதாஸ் தனது 2-வது கட்ட சுற்றுப்பயணத்தை 7-ந்தேதி மீண்டும் திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் இருந்து தொடங்குகிறார்.
டாக்டர் அன்புமணி ராமதாஸ் வருகையையொட்டி ராணிப்பேட்டை மாவட்ட பா.ம.க. சார்பில் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்துள்ளனர்.
- பழமையான முருகர் கற்சிலை ஒன்று இருப்பதை பார்த்து ஆச்சரியம் அடைந்தனர்.
- பொதுமக்கள் அங்கு திரண்டு முருகர் சிலைக்கு மஞ்சள், குங்குமம், சந்தனம் வைத்து வழிபட தொடங்கினர்.
ஒடுகத்தூர்:
வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் அடுத்த கரடிகுடி ஊராட்சிக்கு உட்பட்ட தாங்கல் மலை மீது சாமி சிலை இருப்பதாக அப்பகுதியில் வசித்து வரும் ராஜமாணிக்கம் என்பவர் கனவு வந்ததாக கூறினார்.
இந்நிலையில், கடந்த 17-ந்தேதி ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமை திடீரென ராஜமாணிக்கம் அருள் வந்து ஆடினார். அப்போது, வேப்பிலை வாயில் மென்றபடி சாமி ஆடி கொண்டே அருகே உள்ள மலை மீது ஏறியுள்ளார்.
அப்பகுதி மக்களும் அவரது பின்னே சென்றுள்ளனர். அப்போது, மலை மீது உள்ள அடர்ந்த முட்புதர்கள் மற்றும் பாறைகளுக்கு நடுவே ஓர் இடத்தை குறிப்பிட்டு அங்கு தோண்டும்படி கூறியுள்ளார். அந்த இடத்தில் தோண்டியுள்ளனர்.
அப்போது, பழமையான முருகர் கற்சிலை ஒன்று இருப்பதை பார்த்து ஆச்சரியம் அடைந்தனர்.
தொடர்ந்து தோண்டும் போது மார்பளவு மட்டுமே தோண்ட முடிந்துள்ளது. அதற்குமேல் அவர்களால் சிலையை வெளியே எடுக்க முடியவில்லை. ஆடி முதல் நாளில் மலை மீது முருகர் சிலை கண்டெடுக்கப்பட்ட தகவல் காட்டு தீ போல் பரவியது.
இதனால், சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் அங்கு திரண்டு முருகர் சிலைக்கு மஞ்சள், குங்குமம், சந்தனம் வைத்து வழிபட தொடங்கினர்.
இதற்கிடையே, தகவலறிந்த தாசில்தார் வேண்டா, தொல்லியியல் துறை அதிகாரிகள் மற்றும் வருவாய் துறையினர் அங்கு வந்து சிலையை ஆய்வு செய்தனர்.
மேலும், இது தொடர்பாக நில உரிமையாளர் கலெக்டர் சுப்பு லெட்சுமியிடம் கோரிக்கை மனு அளித்தார். அதனை தொடர்ந்து, தொல்லியல் துறை அதிகாரிகள் சிலையை ஆய்வு செய்தபோது அது புதியதாக செய்து கொண்டு வந்து வைக்கப்பட்டது என தெரியவந்துள்ளது.
இதனை அடுத்து சிலையை அகற்ற கலெக்டர் உத்தரவிட்டார். அதன்படி, இன்று அதிகாலை 4 மணியளவில் ஏடிஎஸ்பி பாஸ்கரன் தலைமையில் 4 டிஎஸ்பிகள், 7 இன்ஸ்பெக்டர்கள், 14 சப்-இன்ஸ்பெக்டர்கள் என 100-க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டனர்.
தொடர்ந்து, தாசில்தார் வேண்டா மற்றும் வருவாய் துறையினர் முன்னிலையில் 4.30 மணியளவில் சுயம்பாகத் தோன்றியதாக கூறப்பட்ட முருகர் சிலையை அகற்றி பறிமுதல் செய்தனர். பின்னர், முருகர் சிலையை அணைக்கட்டு தாலுகா அலுவலகத்தில் வைக்கப்பட்டு சிறிது நேரத்திலேயே வேலூரில் உள்ள அருங்காட்சியகத்திற்கு கொண்டு சென்றனர்.
இந்நிலையில், இன்று 3-ம் வெள்ளிக்கிழமை என்பதால் சுவாமி தரிசனம் செய்ய மலை மீது ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கூடுவார்கள் என்பதால் அந்த வழியில் உள்ளூர் மக்கள் மட்டுமின்றி வெளியில் இருந்து வரும் நபர்களை கூட போலீசார் அனுமதிக்கவில்லை.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- கங்கைகொண்ட சோழபுரத்துக்கு பிரதமர் மோடி வருவதை நாங்கள் மிகப் பெருமையாக கருதுகிறோம்.
- பெரியார் தான் தமிழை தூற்றினார்.
வேலூர்:
வேலூரில் பா.ஜ.க முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் செய்தியாளர் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,
அரசு செலவில் பலகோடி ரூபாய் பிரசாரத்துக்கு பயன்படுத்துவது போல் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் உள்ளது.
4 ஆண்டில் செய்ய முடியாததை 45 நாளில் செய்வதாக சொல்கிறார்கள். உங்களுடன் ஸ்டாலின் திட்டத்திலும் ஊழல் உள்ளது. சான்றிதழ் வழங்க லஞ்சம் கேட்கிறார்கள். மனு அளிக்க வரும் மக்களுக்கு அடிப்படை வசதிகள் இல்லை என்பது வேதனை அளிக்கிறது. மிக தவறான சூழல் உள்ளது.
கங்கைகொண்ட சோழபுரத்துக்கு பிரதமர் மோடி வருவதை நாங்கள் மிகப் பெருமையாக கருதுகிறோம்.
ஆண்டாள் காலம் தான் தமிழை வளர்த்தது. பெரியார் தான் தமிழை தூற்றினார். பிரதமர் வருகை எங்களுக்கு புத்துணர்ச்சி தரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்தான் ஒரு இயக்கத்தின் தூண், சிகரம். அவங்களோட அனுபவம்தான் பெரிய பலம் அப்டிங்றத சொல்ல மறந்துட்டேன்.
- ரஜினிகிட்ட போனில் பேசினேன். ரொம்ப தேங்ஸ் ரஜினி. இப்போதாவது மறக்காம பேசுனீங்களேன்னு சொன்னேன்.
சு. வெங்கடேசன் எழுதிய வேள்பாரி நாவல் விற்பனையில் 1 லட்சம் பிரதிகளைக் கடந்திருப்பதைக் கொண்டாடும் வகையில், வேள்பாரி வெற்றிப் பெருவிழா கடந்த வெள்ளியன்று நடந்திருந்தது.
அதில் நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றிருந்தார். ரஜினிகாந்த் பேசுகையில், 'எ.வ.வேலுவோட புத்தக வெளியீட்டு விழாவில், திமுக-வில் ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்களை சமாளிக்கிறது கஷ்டம்னு பேசியிருந்தேன். அதுக்கு கிடைச்ச கைத்தட்டுல, அடுத்து சொல்ல வந்த 'ஆனாலும் ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்தான் ஒரு இயக்கத்தின் தூண், சிகரம். அவங்களோட அனுபவம்தான் பெரிய பலம் அப்டிங்றத சொல்ல மறந்துட்டேன்" என நகைச்சுவையாகப் பேசியிருந்தார்.
திமுகவின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன் வேலூரில் பத்திரிகையாளர்களை சந்தித்திருந்தார். அப்போது, ரஜினிகாந்தின் இந்த பேச்சு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு துரைமுருகன் "ரஜினிகிட்ட போனில் பேசினேன். ரொம்ப தேங்ஸ் ரஜினி. இப்போதாவது மறக்காம பேசுனீங்களேன்னு சொன்னேன்" என பதில் அளித்தார்.
முன்னதாக,
சென்னையில் கடந்த ஆண்டு நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசும்போது, "ஒரு பள்ளியில் ஆசிரியர்கள் புதிய மாணவர்களை எளிதாக சமாளித்துவிடுவார்கள். ஆனால், பழைய மாணவர்களை சமாளிப்பது சாதாரண விஷயமில்லை. இங்கு ஏகப்பட்ட பழைய மாணவர்கள் உள்ளனர். அவர்கள் நல்ல ரேங்க் வாங்கிவிட்டு வகுப்பறையை விட்டுசெல்ல மாட்டேன் என்று அமர்ந்துள்ளனர். அமைச்சர் துரைமுருகன் கருணாநிதி கண்ணிலேயே விரல்விட்டு ஆட்டியவர்" என்று தெரிவித்தார்.
ரஜினிகாந்த்திடம் இந்த பேச்சு திமுகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு பதில் அளிக்கும் வகையில், அமைச்சர் துரைமுருகன் கூறும்போது, "வயதானவர்கள் எல்லாம் நடிப்பதால்தான் இளைஞர்களுக்கு வாய்ப்பு இல்லாமல் போய்விடுகிறது" என்றார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக ரஜினிகாந்த் கூறுகையில் "துரைமுருகன் எனது நீண்ட கால நண்பர். அவரை எனக்கு ரொம்ப பிடிக்கும். அவர் என்ன சொன்னாலும், எனக்கு வருத்தம் இல்லை. எங்கள் நட்பு எப்போதுமே தொடரும்" எனத் தெரிவித்து முற்றுப்புள்ளி வைத்தார்.
- ரெயிலில் கர்ப்பிணிக்கு பெண்ணுக்கு பாலியல் தொல்லை.
- கர்ப்பிணி தடுக்கவே, ரெயில் இருந்து தள்ளிவிட்ட கொடூரம்.
திருப்பூர் மாவட்டம், கந்தம்பாளையத்தில் வசித்துவரும் ஆந்திர மாநிலம், சித்தூர், மங்கலசமுத்திரத்தைச் சேர்ந்த ஜெமினி ஜோசப்பின் மனைவி ரேவதி (வயது 36) என்ற 4 மாத கர்ப்பிணிப் பெண் தனது சொந்த ஊருக்குச் செல்வதற்காக கடந்த 6-ந்தேதி பிற்பகல் கோயம்புத்தூர் திருப்பதி விரைவு ரெயிலில் பெண்களுக்கான பெட்டியில் பயணித்தார்.
அப்போது ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் அப்பெட்டியில் ஏறிய கே.வி.குப்பம், பூஞ்சோலை கிராமம், சின்ன நாகல் பகுதியைச் சேர்ந்த ஹேமராஜ் என்பவன் அப்பெண்ணிற்கு பாலியல் தொந்தரவு அளிக்க முயன்றுள்ளார்.
அதை அப்பெண் தடுக்கவே, அப்பெண்ணை தாக்கி வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் சீதாராமன் பேட்டை அருகில் ஓடும் ரெயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டதில் அந்தப் பெண் பலத்த காயம் அடைந்தார். அதன் தொடர்ச்சியாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டபோது கருச்சிதை ஏற்பட்டது.
இந்த சம்பவத்தில், ஹேமராஜ் மீது கொலை முயற்சி, பாலியல் தொல்லை உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டான். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இதனைத் தொடர்ந்து விசாரணை முடிவில் ஹேமராஜ் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு அளித்த நிலையில், இன்று தண்டனை விவரம் வழங்கப்படும் என அறிவித்தது.
அதன்படி இன்று, மேஹராஜிக்கு சாகும் வரை சிறைத் தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- மிரட்டல் விடுத்த நபர் அதே ரெயிலில் முன்பதிவு செய்யப்படாத பொது பெட்டியில் பயணம் செய்வது தெரியவந்தது.
- ரெயில் காட்பாடி ரெயில் நிலையத்திற்குள் நுழைந்ததும் பொது பெட்டிக்கு அவசர அவசரமாக போலீசார் சென்றனர்.
வேலூர்:
ஈரோடு ரெயில் நிலையத்தில் இருந்து சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையம் நோக்கி ஏற்காடு எக்ஸ்பிரஸ் புறப்பட்டு வந்து கொண்டிருந்தது.
இரவு மொரப்பூர் ரெயில் நிலையத்திற்கு ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரெயில் வந்தது. அங்கிருந்த மர்ம நபர் அவசர உதவி என் 100 மற்றும் 108-க்கு போன் செய்து ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரெயிலை கடத்த போகிறேன் என்று கூறி விட்டு போனை துண்டித்தார்.
இதனால் பதற்றம் அடைந்த போலீசார் இதுகுறித்து மொரப்பூர் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் மிரட்டல் விடுத்த செல்போன் எண்ணை ஆய்வு செய்தனர்.
மிரட்டல் விடுத்த நபர் அதே ரெயிலில் முன்பதிவு செய்யப்படாத பொது பெட்டியில் பயணம் செய்வது தெரியவந்தது.
உஷாரான ரெயில்வே போலீசார் இது குறித்து ஜோலார்பேட்டை, காட்பாடி உள்ளிட்ட ரெயில்வே போலீஸ் நிலையங்களுக்கு தகவல் தெரிவித்தனர். அங்குள்ள போலீசார் உஷார் படுத்தப்பட்டனர்.
அதற்குள் ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரெயில் ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தை கடந்து காட்பாடி நோக்கி வந்து கொண்டு இருந்தது.
காட்பாடி ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் சித்ரா, சப்-இன்ஸ்பெக்ட்டர் பத்ம ராஜன், ரெயில்வே பாதுகாப்பு படை போஸ்ட் கமாண்டன்ட் அழகர்சாமி மற்றும் போலீசார் தயார் நிலையில் இருந்தனர்.
ரெயில் காட்பாடி ரெயில் நிலையத்திற்குள் நுழைந்ததும் பொது பெட்டிக்கு அவசர அவசரமாக போலீசார் சென்றனர். அதிகளவில் போலீசார் வருவதை கண்ட பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். அப்போது ரெயிலை கடத்த போவதாக மிரட்டிய வாலிபர் அப்பாவி போல அமர்ந்திருந்தார்.
செல்போன் மூலம் அவரை மடக்கி பிடித்த போலீசார் அங்குள்ள போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
விசாரணையில் மிரட்டல் விடுத்த வாலிபர் தர்மபுரியை சேர்ந்த சபரீசன் (வயது 25) என தெரியவந்தது.
நான் 2021-ம் ஆண்டு தமிழ்நாடு மின்சார வாரியத்தில் தற்காலிகமாக வேலை செய்தேன். தற்போது வேலை தேடி வருகிறேன்.
சென்னையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய அலுவலகம் அருகே நடைபெறும் போராட்டத்தில் கலந்து கொள்ள மொரப்பூர் ரெயில் நிலையம் வந்தேன். வேலை இல்லாத விரக்தியில் ரெயிலை கடத்த போவதாக மிரட்டல் விடுத்தேன் என சபரீசன் போலீசாரிடம் தெரிவித்தார்.
காட்பாடி ரெயில்வே போலீசார் சபரீசனை சேலம் ரெயில்வே போலீசில் ஒப்படைத்தனர். சேலம் ரெயில்வே போலீசார் சபரீசனை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் ஜெயிலில் அடைத்தனர்.
போலீசாரை அலறவிட்ட இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- கடந்த 3 ஆண்டுகளாக பலராமன் கால் முறிவு ஏற்பட்டு படுக்கையில் இருந்து வந்தார்.
- மன வேதனையில் இருந்து வந்த ஜெயராமன் சுமார் 7 மணி நேரம் கழித்து தம்பியின் உடல் அருகே துக்கம் தாங்காமல் உயிரிழந்தார்.
ஒடுகத்தூர்:
வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் அருகே உள்ள கொட்டாவூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் அண்ணன் தம்பிகள், ஜெயராமன் (வயது85), பலராமன் (80) விவசாவிகளான இவர்களுக்கு தலா 2 மகன்கள், 1 மகள் உள்ளனர்.
கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பாகவே இவர்களது மனைவிகள் இறந்து விட்டனர். இதனைத் தொடர்ந்து 2 பேரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.
கடந்த 3 ஆண்டுகளாக பலராமன் கால் முறிவு ஏற்பட்டு படுக்கையில் இருந்து வந்தார். அண்ணன் வழக்கம் போல் விவசாயம் செய்து வந்தார். நேற்று பிற்பகல் 1 மணியளவில் பலராமன் இறந்தார்.
இதனையடுத்து அவரின் உடலை அடக்கம் செய்ய ஏற்பாடுகள் செய்து வந்தனர்.
இந்நிலையில் மன வேதனையில் இருந்து வந்த ஜெயராமன் சுமார் 7 மணி நேரம் கழித்து தம்பியின் உடல் அருகே துக்கம் தாங்காமல் உயிரிழந்தார். இதனையடுத்து உயிரிழந்த அண்ணன், தம்பிக்கு ஒரே வீட்டில் வைத்து சடங்குகள் செய்து கொட்டாவூர் சுடுகாட்டில் ஒன்றாக இறுதி சடங்கு செய்தனர்.
அண்ணன், தம்பியாக பிறந்து ஒரே வீட்டில் 80 ஆண்டு காலமாக வளர்ந்து தற்போது ஒரே நாளில் 2 பேர் உயிரிழந்திருப்பது அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
- துணை முதல்வர் ஆனபோது முன்வரிசையில் இவருக்கு அருகில் வந்து அமர்ந்தேன்.
- காட்பாடி தொகுதிக்கு வருகை தந்த நினைவுகள் குறித்து பேசினார்.
வேலூர்:
வேலூர் மாவட்டம் காட்பாடியில் நடந்த திருமண விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-
என்னுடைய அரசியல் வாழ்வுக்கு அடித்தளமிட்டு, பிள்ளையார் சுழி போட்டதே இந்த காட்பாடி தொகுதி தான். நமது கழகத்தின் பொதுச்செயலாளர் உள்ள மண் இந்த காட்பாடி மண். அப்படிப்பட்ட பெருமைமிகு மண்ணில் இருப்பதைக் கண்டு பெருமை கொள்கிறேன்.
நான் துணை முதலமைச்சர் ஆன போது பொதுச்செயலாளர் என்னை வாழ்த்தினார். அது எப்படி என்றால்.
நான் சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் போது பின் வரிசையில் இருந்தேன், துணை முதல்வர் ஆனபோது முன்வரிசையில் இவருக்கு அருகில் வந்து அமர்ந்தேன்.
அப்போது, இனிமே நீ என் பக்கத்து சீட்டு தானே வா.. வா... உன்னை பார்த்துக்கொள்கிறேன் என பொதுச்செயலாளர் துரைமுருகன் என்னை வாழ்த்தினார் என கூறினார்.
மேலும் இதற்கு முன்பு காட்பாடி தொகுதிக்கு வருகை தந்த நினைவுகள் குறித்து பேசினார்.
இதனைத் தொடர்ந்து அமைச்சர் துரைமுருகன் பேசுகையில்:-
எனது மகன் கதிர் ஆனந்திற்காக முதன் முதலில் எம்.பி தேர்தலில் பிரச்சாரத்திற்கு வந்து பேசியதை துணை முதல்வர் உதயநிதி குறிப்பிட்டார். அது எனக்கே ஞாபகம் இல்லை. ஆனால் அவர் ஞாபகம் வைத்து பேசுகிறார்.
"துணை முதல்வர் உதயநிதிக்கு அவரது தாத்தாவை (கருணாநிதி) போல் ஞாபக சக்தி அதிகம். உதயநிதிக்கு கருணாநிதி போல் கம்ப்யூட்டர் மைண்ட்"என்றார்.
- மத்திய அரசு, மாநில அரசுக்கு கொடுக்க வேண்டிய நிதியை தராமல் வஞ்சிக்கிறது.
- மகாராஷ்டிராவில் மும்மொழி கல்வி திட்டத்தை வாபஸ் பெற்றுள்ளனர்.
வேலூர்:
ஓரணியில் தமிழ்நாடு என்ற திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இன்று தொடங்கி வைத்தார்.
அதை தொடர்ந்து வேலூர் மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் கட்சியின் பொதுச் செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
ஓரணியில் தமிழ்நாடு என்ற தலைப்பு பல்வேறு கோணங்களை உள்ளடக்கி உள்ளது.
தமிழ்நாட்டில் பிரிந்து இருக்கக்கூடியவர்கள், ஒத்த கருத்துடையவர்கள், நம்மை விரும்பக் கூடியவர்கள் யார்? யார் என கண்டறிந்து தி.மு.கவின் கொள்கைகளை அவர்களுக்கு விளக்கி இந்த அணியில் சேர்க்க வேண்டும். இது முதல் பாகம். இதை ஒருநாள் செய்துவிட்டு போய்விடுவதில்லை. ஒரு மாத காலத்திற்கு மேலாக உறுப்பினர்களை சேர்க்கும் பணி நடைபெறும். ஒன்றிய செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள் ஏன் பொதுச்செயலாளர் ஆகிய நானே தலைவரின் ஆணையை ஏற்று பணியை செய்வோம்.
தி.மு.க வெறும் அரசியல் கட்சி மட்டுமல்ல. சமுதாய போராளி கட்சி. இனம், மொழி, மானத்தை கட்டி காத்திடும் கட்சி. யாருக்கும் இரண்டாம் தர மாநிலமாக தமிழ்நாடு போகக்கூடாது என அக்கறை உள்ள கட்சி.
முன்பெல்லாம் பொதுக்கூட்டம் என்றால் ஆண், பெண் என திரண்டு வந்து மூன்று மணி நேரம் ரசித்து பார்ப்பார்கள். இப்போது அது போன்றைய நிலைமை கிடையாது. முன்பெல்லாம் மைக் வைத்து பேசுவார்கள். இப்போது மக்களை நேரடியாக சென்று சந்திக்க உள்ளோம். வருகின்ற தேர்தலில் தி.மு.க வெற்றி பெற வேண்டும் என்பதற்காக அதன் வழிமுறைகளை மக்களிடம் எடுத்துக் கூறுவோம்.
இதன் மூலம் அவர்களுக்கு தி.மு.கவின் மேல் அதிக நாட்டம் ஏற்படும். தமிழ்நாட்டில் அனைத்து குடும்பத்தினரையும் 'தமிழ்நாடு' என்ற ஒரு குடையின் கீழ் சங்கமிக்க உள்ளோம்.
மத்திய அரசு, மாநில அரசுக்கு கொடுக்க வேண்டிய நிதியை தராமல் வஞ்சிக்கிறது. உதாரணமாக கல்விக்கு நிதியை இன்னும் விடுவிக்கவில்லை. வெள்ள நிவாரண பணிக்கு ரூ.600 கோடியை கேட்டிருந்தோம். ஆனால் மத்திய அரசு இன்னும் ஒரு பைசா கூட வழங்கவில்லை.
கீழடி அகழ்வாராய்ச்சியை மத்திய அரசு இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை. தி.மு.க. இந்தியை எதிர்க்கிறது.மத்திய அரசு இந்தியை திணிக்கிறது. மகாராஷ்டிராவில் மும்மொழி கல்வி திட்டத்தை வாபஸ் பெற்றுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக பொதுச் செயலாளர் துரைமுருகன் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு வேலூர் மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தகுமார் எம்.எல்.ஏ., சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.






