என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

ED-க்கு பயப்பட மாட்டோம் என்று சொல்பவர்கள் ஏன் ரூமை பூட்டி வைத்திருக்கிறீர்கள்? இ.பி.எஸ். கேள்வி
- இன்றைக்கு ED ரெய்டுக்கு அனைத்து அமைச்சர்களும் பயந்துபோய் உள்ளனர்.
- நீதிமன்றம் ஏறி இறங்குகிறார்கள்.
மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் எழுச்சிப்பயணத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று காட்பாடி தொகுதி மக்களை சந்தித்துவிட்டு. அடுத்தபடியாக வேலூர் அண்ணாசாலையில் திரண்டிருந்த மக்களிடம் உரை நிகழ்த்தினார்.
அப்போது எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-
இந்த வேலூர் மாநகரத்துக்கு அதிமுக ஆட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் கொண்டு வந்தோம். அதிமுக திட்டத்தை திமுக ஸ்டிக்கர் ஒட்டி திறந்தது. ஆனால், இன்னும் பாதாள சாக்கடைத் திட்டம் முழுமை பெறவில்லை. மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்ததும் அனைத்து திட்டங்களும் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்குக் கொடுக்கப்படும்.
திமுக என்றால் குடும்ப ஆட்சி. அதிமுக மக்கள் விரும்புகின்ற ஆட்சி. திமுக-வில் ஸ்டாலின், உதயநிதி, சபரீசன், துர்கா என நான்கு அதிகார மையங்கள்தான் ஆட்சி நடத்துகின்றனர். எடப்பாடி பழனிசாமி சுந்தரா டிராவல்ஸ் பஸ்ஸில் சென்று பேசிக்கொண்டிருக்கிறார் என்று ஸ்டாலின் பேசுகிறார். ஸ்டாலின் அவர்களே நான் சுந்தரா டிராவல்ஸ் பஸ்ஸில் வந்ததற்கே உங்கள் தூக்கம் தொலைந்துவிட்டது. நீங்கள் வந்த பாதை வேறு, நாங்கள் வந்த பாதை வேறு. நான் கஷ்டப்பட்டு வந்து உங்கள் முன் நிற்கிறேன். ஸ்டாலின் அப்படியில்லை. அப்பா பெயரைப் பயன்படுத்தி ஸ்டாலின் அவரை முன்னிலைப்படுத்துகிறார்.
அதிமுக அப்படிப்பட்ட கட்சி அல்ல, ஜனநாயகம் உள்ள கட்சி. யார் உண்மையாக உழைக்கிறார்களோ அவர்களின் வீட்டுக் கதவைத் தட்டி பதவி வழங்கும் கட்சி. அதிமுக-வில் சாதாரண தொண்டரே எம்.எல்.ஏ,, எம்பி, மந்திரி மட்டுமல்ல முதல்வராகவும் ஆகலாம். திமுகவில் அப்படி யாரும் வர முடியுமா?
திமுக குடும்ப கட்சி, கருணாநிதி தொடங்கி இன்பநிதி வரை வந்துவிட்டனர். வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். கருணாநிதி குடும்பம் மட்டும்தான் ஆள வேண்டுமா? இது ஜனநாயக நாடு. அதிமுக-வில் இருந்தால் மட்டுமே யார் வேண்டுமானாலும் பதவிக்கு வரமுடியும். திமுக-வில் குடும்பத்தில் உள்ளவர்கள் மட்டுமே மாநிலத்திலும் மத்தியிலும் அதிகாரத்துக்கு வரமுடியும்.
திமுக என்றால் குடும்பக் கட்சி, கார்ப்பரேட் கம்பெனி. அந்த கம்பெனி மீண்டும் ஆட்சிக்கு வரத் துடிக்கிறது. அதை நீங்கள் முறியடிக்க வேண்டும். மீண்டும் ஒரு குடும்பம் நாட்டை சுரண்டி பிழைக்கும் சூழலை உருவாக்கிவிட வேண்டாம். தமிழகத்தை காப்பாற்ற அதிமுக கூட்டணிக்கு ஆதரிக்க வேண்டும்.
அதிமுக ஆட்சியில் வேலைவாய்ப்பு உருவாக்குவதற்கு இரண்டு முறை உலக முதலீட்டாளர் மாநாடு நடத்தி பல்லாயிரங்கோடியில் பல ஒப்பந்தங்களை போட்டு லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பெற்றுக்கொடுத்தோம். நேரடியாகவும் மறைமுகமாகவும் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துவருகிறது. திமுகவும் முதலீட்டாளர் மாநாடு நடத்தியது. அதுபற்றி வெள்ளை அறிக்கை கேட்டோம், இன்றுவரை கொடுக்கவில்லை.
இப்போது மீண்டும் ஸ்டாலின் வெளிநாடு போகிறாராம். அங்கே போய் தொழில் முதலீட்டை ஈர்ப்பதாகச் சொல்கிறார், ஆனால் இவர் போய் சைக்கிள் ஓட்டுகிறார். இதுவா மக்களுக்கு முக்கியம்? உடல்நிலை சரியில்லாமல் போய்விட்டது, மருத்துவமனைக்குச் சென்றார், நாங்களும் வாழ்த்தினோம். ஆனால், அங்கு போயும் அதிகாரிகளை அழைத்து ஆலோசனை நடத்தியதாக டிராமா போட்டார். 18 நாட்கள் வெளிநாட்டில் உல்லாசமாக இருந்தீர்களே, அப்போது தமிழ்நாடு மக்களை நீங்கள் பார்க்கவில்லையே? தமிழ்நாட்டுக்கு பெரும் ஆபத்து வந்த மாதிரியும், அதற்கு தீர்வு காண்பது போலவும் மருத்துவமனை நாடகம் ஆடுகிறார்.
இன்றைக்கு ED ரெய்டுக்கு அனைத்து அமைச்சர்களும் பயந்துபோய் உள்ளனர். நீதிமன்றம் ஏறி இறங்குகிறார்கள். இதே திமுக என் மீது நெடுஞ்சாலைத்துறையில் 4800 கோடி ரூபாய் ஊழல் என்று வழக்குப் போட்டது. அவர்களே வழக்கை வாபஸ் பெறுகிறேன் என்று சொன்னபோதும், நான் மறுத்து வழக்கை நடத்தி நிரபராதி என்று உங்கள் முன் நிற்கிறேன். திமுகவினர் வாய்தா வாங்கிக்கொண்டு இருப்பார்கள்.
அமலாக்கத்துறை ரெய்டுக்கு நாங்கள் பயப்பட மாட்டோம் என்று சொல்பவர்கள் ஏன் ரூமை பூட்டி வைத்திருக்கிறீர்கள். தூய்மையான ஆட்சி என்று சொல்பவர்கள் ஏன் பூட்டுகிறீர்கள்..? நீங்கள் உத்தமராச்சே ஏன் பயப்படுகிறீர்கள்..?
டாஸ்மாக் ஊழல் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. 40 ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு நடந்திருக்கிறது. வரிகளை உயர்த்த மாட்டோம் என்று சொல்லிவிட்டு எல்லா வரிகளையும் உயர்த்திவிட்டனர். மின் கட்டணத்தையும் பெருமளவு உயர்த்திவிட்டனர். மாநகராட்சியில் வீடு கட்ட பிளான் அப்ரூவல் கட்டணமும் உயர்த்திவிட்டனர்.
வேலூர் மையப்பகுதியில் 198 கோடியில் அரசு பல்நோக்கு மருத்துவமனை கட்டுவதற்கு அதிமுக ஆட்சியில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. திமுக ஆட்சிக்கு வந்ததும், அது அறைகுறையாகத் திறக்கப்பட்டுள்ளது. தேவையான மருத்துவக் கருவிகள் இல்லை, போதிய டாக்டர், செவிலியர் இல்லை. மக்களுக்குப் போதிய மருத்துவ சிகிச்சை அளிக்கமுடியவில்லை.
வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்டத்தில் தோல் தொழில்கள் அதிகம். கழிவுநீர் பாலாற்றில் கலப்பதாக புகார் நீதிமன்றம் வரை சென்றுள்ளது. அதிமுக ஆட்சி அமைந்ததும் எங்கெல்லாம் கழிவுநீர் வெளியேறுகிறதோ, அங்கெல்லாம் பேபி கனால் அமைக்கப்பட்டு, சம்ப் கட்டி, சுத்திகரிக்கப்பட்டு ஆற்றில் விடப்படும். இத்திட்டம் அற்புதமான திட்டம். பாலாற்று நீரும் மாசு படக் கூடாது, தொழிலும் முடங்கக் கூடாது. இதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். இதேபோல தான் நடந்தாய் வாழி காவிரி திட்டம் செயல்படுத்த விரிவான திட்ட அறிக்கை தயாரித்து மத்திய அரசிடம் கொடுத்தேன். நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தியதன் பேரில் 11600 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. முதற்கட்டமாக 1000 கோடியில் திட்டம் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வேலூர் மருத்துவமனையில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சித்தலிபுரம் ஏரியில் கலப்பதால் நிலத்தடி நீர் மாசுபடுகிறது. அங்கேயும் ஒரு சுத்திகரிப்பு நிலையம் அமைத்து கழிவுநீர் சுத்திகரிக்கப்படும். இஸ்லாமியப் பெருமக்கள் நிறைந்த பகுதி இது. அதிமுக, பாஜக கூட்டணி ஆட்சி வந்தால் இஸ்லாமியர்களுக்குப் பாதுகாப்பு இருக்காது என்று தவறான செய்திகளை திமுக கூட்டணிக் கட்சிகள் பரப்புகின்றன. கூட்டணி என்பது தேர்தல் நேரத்தில் ஓட்டுகள் சிதறாமல் இருக்க அமைக்கப்படுகிறது, கொள்கை என்பது நிரந்தரமானது. கொள்கை வேறு கூட்டணி வேறு.
ஆகவே சிறுபான்மை மக்களே சிந்தியுங்கள். 31 ஆண்டுகள் அதிமுக ஆட்சியில் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை, ஜாதி மதச் சண்டைகள் இல்லை. இஸ்லாமியர்களுக்கு ரமலான் நோன்பு கஞ்சி தயாரிக்க அரிசி கொடுத்தோம், ஹஜ் பயண மானியம் கொடுத்தோம், உலமாக்களுக்கு ஓய்வூதியம், மதிப்பூதியம், இருசக்கர வாகன மானியம், வக்ப் வாரிய ஆண்டு நிர்வாக மானியம், பள்ளிவாசல், தர்கா புனரமைப்பு நிதி, சிறுபான்மை பொருளாதார மேம்பாட்டுக் கழகம் அமைத்தோம், ராமநாதபுரத்தில் அப்துல் கலாம் பெயரில் கலைக் கல்லூரி அமைத்தோம். காயிதே மில்லத்துக்கு மணி மண்டபம் அமைத்தோம். இவ்வளவும் இஸ்லாமியர்களுக்குக் கொண்டுவந்த திட்டங்கள். இதையெல்லாம் ஓட்டுக்காக சொல்லவில்லை. அவதூறு செய்கிறார்கள் என்பதை நீங்கள் உணரவேண்டும் என்பதற்காகச் சொல்கிறேன். கண்ணை இமை பாதுகாப்பது போல நாங்கள் உங்களை பாதுகாப்போம்.
இன்று உலக புகைப்பட தினம், புகைப்படம் என்பது கலை. சுகம், துக்கம், மாநாடு, பொதுக்கூட்டம், எதிலும் புகைப்படம் தவிர்க்க முடியாது. எல்லோருக்கும் உலக புகைப்பட தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். எல்லோரையும் செல்போனில் புகைப்படம் எடுத்து வாழ்த்துகளை தெரிவிக்கிறேன். (கேமராவை வாங்கி மக்களை இபிஎஸ் புகைப்படம் எடுத்தார்).
அடுத்தாண்டு தேர்தலில் அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னத்திலும் கூட்டணி நின்றால் அவர்கள் சின்னத்திலும் வாக்களிக்க வேண்டும். மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம். பைபை ஸ்டாலின்
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.






