search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குஜராத்தை போல தமிழகத்திலும் பெண்களுக்கு தனி பட்ஜெட்- வானதி சீனிவாசன் வலியுறுத்தல்
    X

    குஜராத்தை போல தமிழகத்திலும் பெண்களுக்கு தனி பட்ஜெட்- வானதி சீனிவாசன் வலியுறுத்தல்

    • கோவையின் குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்ய சிறுவாணி அணையின் நீர்மட்டத்தை உயர்த்த கேரள அரசுடன் கலந்து பேச வேண்டும்.
    • டாஸ்மாக் கடைகளில் மது வாங்க வருபவர்களிடம் இனி ஆதார் கார்டு எண்ணை கேட்டு பதிவு செய்துகொள்ள வேண்டும்.

    சென்னை:

    தமிழக சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் பா.ஜ.க. எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் (கோவை தெற்கு தொகுதி) பேசினார். அப்போது நடைபெற்ற விவாதம் வருமாறு:-

    வானதி சீனிவாசன்:- பட்ஜெட்டில் கோவைக்கு மெட்ரோ ரெயில் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. ரூ.9 ஆயிரம் கோடியில் இந்த திட்டம் நிறைவேற்றப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு ஆண்டுக்குள் இந்த திட்டத்தை தொடங்க அரசு முயற்சி எடுக்க வேண்டும்.

    தமிழகத்தில் வேகமாக வளரும் நகரங்களில் கோவை முதலிடம் வகிக்கிறது. கோவை விமான நிலைய விரிவாக்க பணி மெதுவாக நடக்கிறது. அதை விரைவுபடுத்த வேண்டும்.

    நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்:- கோவை விமான நிலைய விரிவாக்க பணிக்கு 85 சதவீத அளவுக்கு நிலம் எடுக்கப்பட்டுள்ளது. மீதி பணிகள் வேகமாக நடந்துவருகின்றன. மதுரை விமான நிலையத்தையும் சேர்த்து, சர்வதேச விமான நிலையங்களாக அறிவிக்க, உங்களது கட்சிதான் (பா.ஜ.க.) மத்தியில் ஆட்சியில் இருக்கிறது. எனவே நீங்களும் வலியுறுத்துங்கள்.

    சபாநாயகர் அப்பாவு:- மதுரை எய்ம்ஸ் மாதிரி பணிகள் வேகமாக நடக்கிறதா?

    (சபாநாயகரின் இந்த கேள்வியால் அவையில் சிரிப்பலை எழுந்தது.)

    அவை முன்னவர் துரைமுருகன்:- எல்லோரும் கோவை, மதுரையை பற்றித்தான் பேசுகிறீர்கள். வேலூரையும் கொஞ்சம் கவனியுங்கள்.

    வானதி சீனிவாசன்:- அது எனது மாமனார் ஊர். அங்கு உதான் திட்டத்தில் விமான நிலையம் அமைய உள்ளது.

    சபாநாயகர் அப்பாவு:- மாமனார் ஊர் என்றால், அது இப்போது உங்கள் ஊர்தானே?

    (இதனால் அவையில் மீண்டும் சிரிப்பலை எழுந்தது.)

    வானதி சீனிவாசன்:- உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை அடுத்த ஆண்டு கோவையில் நடத்த வேண்டும். கோவையில் சாலைகள் மோசமாக உள்ளன.

    மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி:- கோவை மாநகராட்சி சாலை பணிகளுக்கு ரூ.200 கோடியில் திட்டம் தீட்டப்பட்டு, ரூ.90 கோடியில் பணிகள் தொடங்க ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. அங்கு பாதாள சாக்கடை பணியும் விரைவில் தொடங்க இருக்கிறது. அதேபோல் 114 கிலோ மீட்டர் மண் சாலை, தார் சாலையாக மாற்றப்பட இருக்கிறது.

    வானதி சீனிவாசன்:- இதுபோன்ற பதில்தான் எப்போதும் வருகிறது. எங்கள் காதுகளும் பாவம் இல்லையா?

    அமைச்சர் செந்தில் பாலாஜி:- நாளை (இன்று) கூட கோவை மாநகராட்சியில் ரூ.14 கோடி மதிப்பில் சாலை பணிகள் தொடங்க இருக்கின்றன.

    வானதி சீனிவாசன்:- கோவையின் குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்ய சிறுவாணி அணையின் நீர்மட்டத்தை உயர்த்த கேரள அரசுடன் கலந்து பேச வேண்டும். குஜராத் மாநிலத்தில் இருப்பது போன்று தமிழகத்திலும் பெண்களுக்கு என்று தனி பட்ஜெட்டை நிறைவேற்ற வேண்டும். அப்போதுதான் தமிழகத்தில் பெண்களின் முன்னேற்றம் விரைவாக இருக்கும்.

    சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன்:- பாலினம் வாரியாக துறை சார்ந்த திட்டங்களின் பயனாளிகள் தொடர்பாக பூர்வாங்க கணக்கெடுப்பு பணிகள் நடந்துவருகின்றன. விரைவில் அது வெளியிடப்படும்.

    வானதி சீனிவாசன்:- உரிமைத்தொகை ரூ.1,000 தகுதிவாய்ந்த பெண்களுக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக் கடைகளில் மது வாங்க வருபவர்களிடம் இனி ஆதார் கார்டு எண்ணை கேட்டு பதிவு செய்துகொள்ள வேண்டும். அதிக முறை மது வாங்கி குடிப்பவர்களின் வீட்டு பெண்களுக்கு ரூ.1,000 உரிமைத்தொகை வழங்க முன்னுரிமை அளிக்க வேண்டும்.

    அமைச்சர் செந்தில் பாலாஜி:- தமிழக அரசு டாஸ்மாக் வருமானத்தில்தான் இயங்குகிறது என்று கூறுவது தவறு. கொரோனா காலத்தில் தமிழகத்தில் மதுக்கடைகள் மூடப்பட்டிருந்தன. ஆனால், பா.ஜ.க. ஆளும் கர்நாடகத்தில் மதுக்கடைகள் திறந்திருந்தன. 2006-2011-ம் ஆண்டுகால அ.தி.மு.க. ஆட்சியில்தான் டாஸ்மாக் மது விற்பனை மூலம் ரூ.10 ஆயிரம் கோடி வருமானம் அதிகரித்தது. குடிப்பவர்கள் உயர்ந்ததால் இது அதிகரிக்கவில்லை. மது விலை உயர்த்தப்பட்டதால் வருமானம் அதிகரித்தது.

    அமைச்சர் கீதா ஜீவன்:- கைம்பெண்களுக்கு தனி திட்டம் வகுக்கப்பட இருக்கிறது. அதற்காக தரவுகள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.

    வானதி சீனிவாசன்:- பஞ்சமி நிலத்தை மீட்க சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும்.

    அமைச்சர் எ.வ.வேலு:- பெண்களுக்கு ரூ.1,000 உரிமைத்தொகை வழங்குவது குறித்து உறுப்பினர் இங்கே பேசினார். ஆற்றில் போட்டாலும் அளந்து போட வேண்டும் என்று ஒரு பழமொழி சொல்வார்கள். நாம் மாதந்தோறும் ரூ.1 லட்சத்து 5 ஆயிரம் சம்பளம் வாங்குகிறோம். நமக்கும் ரேஷன் கார்டு உள்ளது. அதனால் நமது வீட்டு பெண்களுக்கு ரூ.1,000 உரிமைத்தொகை வழங்க முடியாது. எனவே, தகுதியை நிர்ணயித்து அதன்கீழ் ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கப்படும்.

    இவ்வாறு விவாதம் நடந்தது.

    Next Story
    ×