search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருச்சியில் இன்று 150-க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள்
    X

    திருச்சியில் இன்று 150-க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள்

    • திருச்சியில் இன்று 150-க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
    • கருப்பு பேட்ச் அணிந்து எதிர்ப்பை வெளிப்படுத்தினர்

    திருச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம சின்னசேலம் அருகே கணியாமூரில் உள்ள தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதியின் மர்மச்சாவுக்கு நீதி கேட்டு தொடங்கிய போராட்டம் நேற்று திடீரென்று வன்முறையாக மாறியது.

    இதில் பள்ளிக்குள் புகுந்த போராட்டக்காரர்கள் பள்ளி வாகனங்களுக்கு தீ வைத்து, பொருட்களை சூறையாடினர். போலீஸ் வாகனமும் தீ வைக்கப்பட்டதோடு, அதிகாரிகள் பலரும் காயமடைந்தனர். தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய இந்த வன்முறை சம்பவத்தை கண்டித்து தனியார் பள்ளிகளின் கூட்டமைப்புச் செயலாளர் நந்தகுமார் இன்று முதல் தனியார் பள்ளிகள் இயங்காது என அறிவிப்பு வெளியிட்டார்.

    இதையடுத்து திருச்சி மாவட்டத்தில் நந்தகுமார் சார்ந்த சங்கத்தைச் சேர்ந்த தனியார் மெட்ரிக் மற்றும் சி.பி.எஸ்.இ. பள்ளிகள், சதீஷ் தலைமையிலான தனியார் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகள் என 150-க்கும் மேற்பட்ட பள்ளிகள் இன்று இயங்கவில்லை.

    மேற்கண்ட சங்கத்தைச் சார்ந்த பள்ளிகளில் இருந்து மாணவர்களின் பெற்றோருக்கு நேற்று இரவு பள்ளிகள் இயங்காது என்ற குறுஞ்செய்தி அனுப்பப்பட்டது. ஒரு சில பள்ளிகளில் இருந்து இன்று காலை குறுஞ்செய்தி அனுப்பப்பட்டது. இதனை கவனிக்காத பெற்றோர்கள் வழக்கம்போல் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அந்தப் பள்ளிகள் இயங்காத காரணத்தால் மாணவர்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்.

    மேலும் தமிழ்நாடு தமிழ் வழி பள்ளி நிர்வாகிகள் சங்கத்தினர் கள்ளக்குறிச்சி சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு பேட்ச் அணிந்து பள்ளிக்குச் சென்றனர். திருச்சி மாவட்டத்தில் இந்த சங்கத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பள்ளிகள் வழக்கம் போல் இயங்கின.

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் தனியார் பள்ளிகள் இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அறந்தாங்கி கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் 66க்கும் மேற்பட்ட தனியார் நர்சரி பிரைமரி, மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகள் மூடப்பட்டு ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது.

    பின்னர் மாவட்ட தலைவர் ராமசாமி தலைமையில் கள்ளக்குறிச்சி சம்பவத்தை கண்டித்தும், அந்த குற்றச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், தனியார் பள்ளிகளுக்கு உரிய பாதுகாப்பு கோரியும் கலெக்டர் கவிதா ராமுவிடம் மனு அளிக்கப்பட்டது.

    Next Story
    ×