என் மலர்tooltip icon

    திருப்பூர்

    • இன்று முதல் கடைகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
    • போராட்டத்திற்கு அ.தி.மு.க. ஆதரவு அளித்துள்ளது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகராட்சியில் சொத்து வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் , மத்திய அரசு வாடகை கட்டிடங்களுக்கு 18 சதவீதம் ஜி.எஸ்.டி., வரி விதித்தி ருப்பதற்கு கண்டனம் தெரிவித்தும் திருப்பூர் அனைத்து வியாபாரிகள் சங்கம் மற்றும் தொழில் அமைப்புகள் சார்பில் இன்று முதல் கடைகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    திருப்பூர் அரிசி கடை வீதி, பழைய மார்க்கெட் வீதி , புது மார்க்கெட் வீதி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கடைகளில் வியாபாரிகள் கருப்புக்கொடி ஏற்றி உள்ளனர். அனைத்து வியாபாரிகள் சங்கப் பேரவையின் இந்த போராட்டத்திற்கு அ.தி.மு.க. ஆதரவு அளித்துள்ளது.

    வருகிற 18-ந்தேதி காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை கடை அடைப்பு போராட்டம் நடத்த உள்ளனர்.

    • டிடிவி தினகரன் திருப்பூரில், மாரத்தான் போட்டி பரிசளிப்பு நிகழ்வில் கலந்து கொண்டார்.
    • நிகழ்ச்சியில், மாணவர்களில் ஒரு தரப்பினர் ’கடவுளே அஜித்தே’ என கோஷம் எழுப்பினர்

    திருப்பூரில் மராத்தான் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பரிசுகளை வழங்கினார். அப்போது நிகழ்ச்சியில், மாணவர்களில் ஒரு தரப்பினர் 'கடவுளே அஜித்தே' என கோஷம் எழுப்பினர்

    இதனால், டிடிவி தினகரன் ஒருநிமிடம் பேச்சை நிறுத்திவிட்டு, மாணவர்கள் என்ன சொல்கிறார்கள் என நிர்வாகிகளிடம் கேட்டார். பிறகு கோஷம் ஓய்ந்தபிறகு பேச்சை தொடர்ந்தார்.

    சமீப காலங்களில் அஜித் ரசிகர்கள் கூடும் இடங்களில் "கடவுளே அஜித்தே" என்று கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • டிடிவி தினகரன் பிறந்தநாள் மாரத்தான் போட்டி.
    • உதயநிதி ஸ்டாலின் சினிமா துறையை சேர்ந்தவர் தான்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகர் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பிறந்தநாள் மாரத்தான் போட்டி இன்று காலை நடைபெற்றது.

    இந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சினிமா செய்திகள் பார்ப்பதில்லை என கூறியுள்ளார். ஆனால் உதயநிதி ஸ்டாலின் சினிமா துறையை சேர்ந்தவர் தான் தேர்தலுக்கு பிறகுதான் அவர் நடிப்பதில்லை. சினிமா செய்திகளும் மக்கள் விரும்பி பார்ப்பதுதான்.

    தமிழ்நாடு ஜனநாயக முறைப்படி தேர்தல் நடைபெற்று அதில் வெற்றி பெற்றவர்தான் முதலமைச்சராக உள்ளார். திமுக அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றி வருகிறார்கள்.

    சீமான், போலீஸ் சூப்பிரண்டு வருண் குமார் விவகாரத்தில் தமிழக காவல்துறை டிஜிபியிடம் சீமான் முறையிட்டுள்ளார். என்ன நடக்கிறது என பார்க்கலாம்.

    இரட்டை இலையைக் காட்டி பழனிச்சாமி இனி மக்களை ஏமாற்ற முடியாது. அ.தி.மு.க. பலவீனமாகி உள்ளது . தி.மு.க.விற்கு பி டீம் ஆகவும் வெற்றி பெற துணையாக உள்ளவர்களுக்கும் பாடம் புகட்ட வேண்டும் என மக்கள் முயற்சி செய்வதாக தகவல் கிடைத்துள்ளது .

    நாங்கள் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கிறோம். வலுவான கூட்டணி, தீய சக்தி தி.மு.க.வை வீழ்த்துவதற்கு தமிழ்நாட்டு மக்கள் 2026 தேர்தலில் கூட்டணி, மக்களாட்சி கொண்டுவர குடும்பத்தின் பிடியிலிருந்து தமிழகத்தை பாதுகாப்பதற்கு தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்களிப்பார்கள் என்பது உறுதி.

    கூட்டணியில் பல கட்சிகள் உள்ளது. மேலும் பல கட்சிகள் வர உள்ளார்கள் அம்மாவின் உண்மையான தொண்டர்கள் எங்களுடன் கை கோர்ப்பார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    • தீபாவளிக்கு முன்பாக தைத்துக் கொடுத்த துணிகளுக்கு இன்னும் பணம் தரவில்லை.
    • எனது இந்த நிலைமைக்கு காரணமானவர்களை சும்மா விடக்கூடாது.

    திருப்பூர்:

    திருப்பூர் அனுப்பர்பாளையம் அடுத்த எம்.ஜி.ஆர்.நகர் பகுதியை சேர்ந்தவர் பார்த்திபன்சாமி (வயது 53) . இவர் தனது மனைவியை பிரிந்து மகனுடன் வசித்து வந்தார். இவர் பெரிய ஏற்றுமதி பனியன் நிறுவனங்களிடமிருந்து துணிகளை பெற்று ஆடையாக தைத்து கொடுக்கும் கார்மெண்ட்ஸ் சார்பு தொழில் செய்து வந்தார்.

    இவர் திருப்பூரில் இயங்கும் ஒரு பனியன் நிறுவனத்திற்கு பல விதமான ஆடைகளை தைத்துக் கொடுத்து கூலித்தொகை பெற்று வந்த நிலையில் கடந்த சில மாதங்களாக இவர் தைத்து கொடுத்த துணிகளுக்கு ரூ.1.50 லட்சம் வரை பணத்தை கொடுக்காமல் நிறுத்தி வைத்துள்ளனர்.

    தொடர்ந்து பலமுறை கேட்டும் கொடுக்காத நிலையில் அவரிடம் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஊதியம் கொடுக்க வெளியே நண்பர்களிடம் கடன் வாங்கி கொடுத்துள்ளார். தொடர்ந்து பணம் வராததால் அடுத்தடுத்து தொழில் செய்ய முதலீடு இல்லாமலும்,கடன் பெற்றவர்களுக்கு பணத்தை திருப்பி செலுத்த முடியாமலும் கடும் மன உளைச்சலில் இருந்தார். பலமுறை தனக்கு சேர வேண்டிய பணத்தை பனியன் நிறுவனத்திடம் கேட்டும், அவர்கள் அலட்சியமாக பதில் கூறி பணத்தை கொடுக்க மறுத்ததாக கூறப்படுகிறது.

    இதனால் மனமுடைந்த பார்த்திபன் சாமி தனது சாவுக்கு தனியார் பனியன் நிறுவனம் தான் காரணம் , அவர்களிடம் வேறு யாரும் ஆடைகள் தைத்து ஏமாற வேண்டாம் , அந்த நிறுவனத்தில் பணியாற்றும் ஒருவரின் பெயரை கூறி அவர்தான் தனது சாவுக்கு காரணம் என வீடியோ பதிவிட்டதுடன், அதனை தனது நண்பர்களுக்கு அனுப்பி வைத்து விட்டு ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    மேலும் அந்த வீடியோவில் பார்த்திபன்சாமி பேசுகையில்,

    என் சாவுக்கு காரணம் 2 பேர். அவர்களை சும்மா விடாதீர்கள். நான் கட்டிடத்துக்கு ரூ. 60,000 வாடகை பாக்கி கொடுக்க வேண்டியது உள்ளது. ரூ.1.50 லட்சம் பணம் வந்திருந்தால் நான் தப்பித்திருப்பேன். நொச்சிபாளையத்தில் உள்ள பனியன் நிறுவனத்தில் யாரும் பிசினஸ் செய்ய வேண்டாம்.

    தீபாவளிக்கு முன்பாக தைத்துக் குடித்த துணிகளுக்கு இன்னும் பணம் தரவில்லை. பணத்தை கேட்டு நடையாக நடந்தேன், இன்று போடுகிறோம் நாளை போடுகிறோம் என ஏமாற்றிவிட்டே இருந்தார்கள்.

    எனது சட்டை பாக்கெட்டில், பேண்ட் பாக்கெட்டில் எனது சாவுக்கு காரணமானவர்கள் குறித்து லெட்டர் எழுதி வைத்துள்ளேன். அவர்களது போன் நம்பரையும் எழுதி வைத்துள்ளேன். அதை போலீசில் எடுத்துக் கொடுங்கள். எனது இந்த நிலைமைக்கு காரணமானவர்களை சும்மா விடக்கூடாது. கூட இருந்து கொண்டே கழுத்தை அறுத்து விட்டார்கள். நான் யாருக்கும் துரோகம் செய்யவில்லை, பொய்யும் பேசவில்லை என அந்த வீடியோவில் அவர் பேசி உள்ளார்.

    • 2½ ஏக்கர் விவசாய பூமியை பவர் பத்திரம் எழுதி வாங்கிக் கொண்டார்.
    • மகாலிங்கம் அடியாட்களுடன் வந்து, டிராக்டர்கள் மூலம் மக்காச்சோளப்பயிர்களை அழித்து நாசம் செய்து விட்டார்.

    மடத்துக்குளம்:

    திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளத்தை அடுத்த வஞ்சிபுரம் செக்கான்தோட்டத்தை சேர்ந்தவர் குமார் (வயது 43) , விவசாயி. இவர் அதே பகுதியில் உள்ள 2½ ஏக்கர் நிலத்தில் மக்காச்சோளம் சாகுபடி செய்துள்ளார்.

    இந்தநிலையில் தாந்தோணியைச் சேர்ந்த மகாலிங்கம் (43) உள்ளிட்ட சிலர் 2 டிராக்டர்கள் மூலம் குமார் பயிரிட்டிருந்த 20 நாட்கள் வயதான மக்காச்சோளப் பயிர்களை அழித்து நாசம் செய்ததாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து பாதிக்கப்பட்ட விவசாயி குமார் கூறியதாவது:-

    கடந்த 2009 -ம் ஆண்டு குடும்ப சூழ்நிலை காரணமாக தாந்தோணியைச் சேர்ந்த மகாலிங்கம் என்பவரிடம் ரூ.80 ஆயிரம் கடன் பெற்றேன். அதற்காக 2½ ஏக்கர் விவசாய பூமியை பவர் பத்திரம் எழுதி வாங்கிக் கொண்டார். ஆனால் நாங்கள் அந்த பூமியில் தற்போது வரை விவசாயம் செய்து வருகிறோம். அதேநேரத்தில் இந்த நிலத்தை மகாலிங்கம் தனது மனைவி பெயரில் கிரையம் செய்து கொண்டார். அதுகுறித்து நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது.

    இந்தநிலையில் மகாலிங்கம் அடியாட்களுடன் வந்து, டிராக்டர்கள் மூலம் மக்காச்சோளப்பயிர்களை அழித்து நாசம் செய்து விட்டார். அதனை தடுக்க முயற்சி செய்த என்னையும் என் குடும்பத்தினரையும் தகாத வார்த்தையால் பேசி கொலை மிரட்டல் விடுத்தார். மேலும் அருகிலுள்ள தோட்டத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை உடைத்து கிணற்றில் வீசி விட்டனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த சம்பவம் குறித்து குமார் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த கணியூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மக்காச்சோளப்பயிர்களை அழிக்க பயன்படுத்திய டிராக்டர்களை போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். கடன் பிரச்சனை தகராறில் மக்காச்சோளப் பயிர்கள் அழிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
    • மனைவியே கணவனை கூலிப்படையை வைத்து கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    அவினாசி:

    திருப்பூர் மாவட்டம் அவினாசி மங்கலம் ரோடு, தாமரை கார்டன் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 48). இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் வாங்கி விற்கும் தொழில் மற்றும் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வந்தார். கடந்த 1-ந் தேதி நடைபயிற்சி மேற்கொண்டிருந்த போது மர்ம நபர்கள் ரமேசை அரிவாளால் சரமாரியாக வெட்டி க்கொன்றனர்.

    இதையடுத்து ரமேசின் மனைவி விஜயலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் அவினாசி போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தினர். மேலும் தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டது. இதில் கூலிப்படையை சேர்ந்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

    அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவினாசியை சேர்ந்த சையது இர்பான் (24) என்பவர் தனது நண்பர் ஜானகிராமன் மூலம் ரூ.8 லட்சம் பணம் கொடுத்து ரமேசை கொலை செய்ய கூறியதும், இதைத்தொடர்ந்து கூலிப்படை மூலம் ரமேஷ் கொலை செய்யப்பட்டதும் தெரியவந்தது. இதையடுத்து சையது இர்பான், ஜானகி ராமன் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் கடன் பிரச்சனையில் ரமேஷ் கொலை செய்யப்பட்டதாக கூறப்பட்டது. இந்தநிலையில் திடீர் திருப்பமாக ரமேஷின் மனைவி விஜயலட்சுமி (40) கூலிப்படையை ஏவி தனது கணவரை கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து விஜயலட்சுமியையும் போலீசார் கைது செய்து விசாரித்தனர். விசாரணையில் பரபரப்பு தகவல்கள் கிடைத்தது.

    கொலை செய்யப்பட்ட ரமேஷ், மனைவி விஜயலட்சுமியின் செலவுக்கு பணம் கொடுக்காமல் இருந்துள்ளார். மேலும் பணம், தொழில் என்று எப்போதும் இருந்துள்ளார். பாசமாக இல்லாததால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

    இந்தநிலையில் அவினாசியில் ஸ்நாக்ஸ் கடை நடத்தி வரும் சையது இர்பான் கடைக்கு விஜயலட்சுமி அடிக்கடி சென்று ஸ்நாக்ஸ்கள் வாங்கியுள்ளார். இதனால் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்குள் கள்ளக்காதலாக மாறியது. கணவன் அன்பாக இல்லாததால் விஜயலட்சுமி இர்பானுடன் நெருங்கி பழகினார். தினமும் செல்போன் மூலம் பேசிக்கொண்டனர்.

    ரமேஷ் வெளியூர் சென்றிருந்த நேரங்களில் இர்பானை வீட்டிற்கு அழைத்து விஜயலட்சுமி உல்லாசமாகவும் இருந்துள்ளார். இந்தநிலையில் 2 பேரின் கள்ளக்காதல் விவகாரம் ரமேஷிற்கு தெரியவரவே, அவர் மனைவியை கண்டித்துள்ளார். இதன் காரணமாக இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் கணவனை கொலை செய்ய திட்டமிட்டார். இது குறித்து இர்பானிடம் தெரிவிக்கவே, அவர் தனது நண்பர் ஜானகிராமன் இருக்கிறார். அவர் மூலம் கூலிப்படையை ஏவி கொலை செய்து விடுவோம் என்று 2 பேரும் திட்டமிட்டுள்ளனர். இதற்கு பணம் செலவாகும் என இர்பான் கேட்கவே, விஜயலட்சுமி வீட்டில் இருந்த 20 பவுன் நகைகளை இர்பானிடம் கொடுத்துள்ளார். அவர் அவினாசியில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் நகைகளை அடகு வைத்து ரூ.9 லட்சத்து 60 ஆயிரம் பெற்றுள்ளார்.

    அதில் ரூ.4 லட்சத்தை முதல் கட்டமாக ஜானகி ராமன் மூலம் கூலிப்படைக்கு கொடுத்துள்ளார். மீதி பணத்தை வழக்கு செலவுக்கு செலவழிக்க வைத்திருந்தார். ஜானகிராமன் 5 பேர் அடங்கிய கூலிப்படையை ஏற்பாடு செய்துள்ளார். கொலை நடந்த அன்று ரமேஷ், வீட்டிலிருந்து நடைபயிற்சிக்கு சென்ற தகவலை விஜயலட்சுமி, இர்பானிடம் கூறவே, கூலிப்படையினர், அங்கு சென்று ரமேசை வெட்டிக்கொன்றுள்ளனர். இர்பானுக்கும், ரமேசுக்கும் எப்படி பழக்கம் ஏற்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்திய போது இந்த தகவல்கள் போலீசாருக்கு தெரியவந்தது. கள்ளக்காதல் விவகாரத்தில் மனைவியே கணவனை கூலிப்படையை வைத்து கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பல்லடத்தில் 3 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் மிகவும் கண்டனத்துக்குரியது.
    • இரவு நேரங்களில் அப்பகுதியில் போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும்.

    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் சேமலை கவுண்டன்பாளையத்தை சேர்ந்த தெய்வசிகாமணி, அவரது மனைவி அலமேலு, மகன் செந்தில்குமார் ஆகியோர் கடந்த 29-ந்தேதி மர்மநபர்களால் கொலை செய்யப்பட்டனர். இக்கொலை சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

    இந்தநிலையில் இன்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பல்லடத்தில் 3 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் மிகவும் கண்டனத்துக்குரியது. இக்கொலையில் ஈடுபட்டவர்களை கைது செய்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும். அவர்களுக்கு வழங்கப்படும் தண்டனை முதலும் முடிவுமாக இருக்க வேண்டும்.

    அப்போது மற்றவர்கள் பயப்படுவார்கள். தமிழ்நாடு காவல் துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கொலையாளிகளை பிடிக்க 14 தனிப்படை என்பது பிரம்மாண்ட விசாரணை முறை. இருப்பினும் இந்த கொலை குறித்து சி.பி.ஐ. விசாரணை மேற்கொள்ள தமிழக அரசை கேட்டுக் கொள்கிறோம். சி.பி.ஐ., சிறப்பான குற்ற புலனாய்வு அமைப்பு. எனவே அதற்கு தமிழக அரசு அனுமதி தர வேண்டும். போதையால்தான் பெரும்பாலான குற்றச்சம்பவங்கள் நடக்கிறது. எனவே தமிழகத்தில் போதை கலாச்சாரத்தை தடுக்க வேண்டும்.

    தோட்டத்து பகுதியில் வயதானவர்கள்தான் வசித்து வருகிறார்கள். எனவே இரவு நேரங்களில் அப்பகுதியில் போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    உயிரிழந்த செந்தில்குமாரின் மனைவி கவிதா அண்ணாமலையிடம் கூறுகையில், இரவு முழுவதும் கடும் வேதனையுடன் இருந்துள்ளனர். அந்த உயிர் வேதனையை அவர்கள் அனுபவிக்க வேண்டும். குற்றம் செய்தவர்களை எத்தனை நாட்கள் ஆனாலும் பிடித்து தண்டிக்க வேண்டும் என தெரிவித்தார்.

    • ரெயில் நிலையம், பார்சல் குடோன்களில் மெட்டல் டிடெக்டர் உதவியுடன் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
    • கோவில்கள், மசூதிகள், பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட இடங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

    திருப்பூர்:

    டிசம்பர் 6 பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி எவ்வித அசம்பாவித சம்பவங்களும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக ஆண்டுதோறும் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு திருப்பூரில் இன்று பல்வேறு இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

    திருப்பூர் ரெயில் நிலையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. பயணிகள் மற்றும் அவர்கள் கொண்டு வந்த உடமைகளை போலீசார் தீவிர சோதனை நடத்திய பிறகே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். வெடிகுண்டு கண்டறியும் நவீன கருவிகளை கொண்டு உடமைகள் சோதனை செய்யப்பட்டது.

     

    ரெயில் நிலையம், பார்சல் குடோன்களில் மெட்டல் டிடெக்டர் உதவியுடன் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இதேப்போல் திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் லட்சுமி உத்தரவின் பேரில் மாநகர் முழுவதும் போலீசார் நேற்று இரவு முதல் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    கோவில்கள், மசூதிகள், பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட இடங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. 22 ரோந்து வாகனங்களில் போலீசார் 24 மணி நேரமும் ரோந்து பணி மேற்கொண்டு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதேபோல் திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அபிஷேக் குப்தா உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • மண்பாண்டங்கள் தயாரிப்பதற்கு என தனியாக மண் உள்ளது.
    • சிறிய சுட்டி விளக்குகள் டஜன் 12 ரூபாய்க்கும், பெரிய விளக்குகள் ரகத்திற்கு ஏற்ப 10 ரூபாய் வரை விற்கப்படுகிறது.

    உடுமலை:

    திருக்கார்த்திகை விழா வருகிற 13-ந்தேதி கொண்டாடப்படுகிறது. அன்று மாலை வீடுகள், கடைகள், தொழிற்சாலைகள், கோவில் மற்றும் தெருக்களில் விளக்குகள் ஏற்றி வழிபடுவார்கள்.

    இந்தநிலையில் திருக்கார்த்திகைக்கு தேவையான மண் விளக்குகள் தயாரிக்கும் பணி திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதிகளில் தீவிரமாக நடந்து வருகிறது. புக்குளம், பூளவாடி, பள்ளபாளையம் என உடுமலை சுற்றுப் பகுதிகளில் ஏராளமான மண்பாண்ட தொழிலாளர்கள் பாரம்பரியமாக இதனை செய்து வருகின்றனர். விளக்குகள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள பஞ்சலிங்கம் என்பவர் கூறியதாவது:-

    கார்த்திகை தீபத்திற்கு ஒரு முக விளக்கு, 2 முக விளக்கு, ஐந்து முக விளக்கு, 10 முக விளக்கு என பல்வேறு விளக்குகளை தயார் செய்கிறோம். மேலும் கொடிக்கம்பத்தில் வைக்கக்கூடிய பெரிய வகை விளக்குகளும் தயார் செய்யப்படுகிறது. பரம்பரை பரம்பரையாக இந்த தொழிலை செய்து வருகிறோம்.

    மண்பாண்டங்கள் தயாரிப்பதற்கு என தனியாக மண் உள்ளது. செம்மண், களிமண், மணல் ஆகியவற்றை முறையாக கலந்து, நீரில் கரைத்து, கற்கள், குப்பைகளை அகற்றி வடிகட்டப்படுகிறது. அதற்குப்பிறகு, பிசைந்து பசை போல் ஆன பிறகு, மண் சக்கரத்தில் இட்டு சுழற்றப்பட்டு விளக்குகளாக மாற்றப்படுகிறது. அதற்கு பிறகு, சூளையில் வைத்து 15 நாட்கள் வரை வேக வைத்து, விளக்குகள் தயார் செய்யப்படுகிறது.

    சிறிய சுட்டி விளக்குகள் டஜன் 12 ரூபாய்க்கும், பெரிய விளக்குகள் ரகத்திற்கு ஏற்ப 10 ரூபாய் வரை விற்கப்படுகிறது. கோவில்களுக்கும், தீப கம்பங்களுக்கும், ஒரு லிட்டர் முதல் ஐந்து லிட்டர் கொள்ளளவு கொண்ட விளக்குகளும் தயாரிக்கப்படுகிறது. உடுமலை பகுதிகளில் உற்பத்தி செய்யும் விளக்குகள், கோவை, திருப்பூர், திண்டுக்கல், கேரளா, மூணாறு, பாலக்காடு உள்ளிட்ட பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது என்றார்.

    • கைது செய்யப்பட்டவர்களை போலீசார் அரசு பேருந்தில் ஏற்ற முயன்றனர்.
    • காவல்துறை வாகனத்தில் தான் செல்வோம் என இந்து அமைப்பினர் தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    திருப்பூர்:

    இந்தியாவின் அண்டை நாடான வங்கதேசத்தில் சிறுபான்மையாக உள்ள இந்து மக்களை அங்குள்ள காவல் துறையினர் தாக்கி கைது செய்து ஆலயங்களை சேதப்படுத்துவதை கண்டித்தும், இந்து மக்கள் உரிமைகள் மீட்கப்பட வேண்டும் என வலியுறுத்தி திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பாக பா.ஜ.க., இந்து முன்னணி, ஆர்.எஸ் .எஸ். உள்ளிட்ட இந்து அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்தில் பாஜக., மாவட்ட தலைவர் செந்தில்வேல், ஆர்.எஸ்.எஸ். மாவட்ட தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் பழனிசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்திருந்த நிலையில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 400 பேரை போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.

    கைது செய்யப்பட்டவர்களை போலீசார் அரசு பேருந்தில் ஏற்ற முயன்றனர். ஆனால் காவல்துறை வாகனத்தில் தான் செல்வோம் என இந்து அமைப்பினர் தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து பேருந்துகள் திருப்பி அனுப்பப்பட்டு காவல்துறை வாகனம் மூலம் கைது செய்யப்பட்டு அழைத்து செல்லப்பட்டனர்.

    • உடலுக்கு தீங்கு விளைவிக்கும் சீனா பூண்டுகள் விற்பனை செய்யப்படுவதாக தகவல்.
    • மாவட்டம் முழுவதும் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.

    திருப்பூர்:

    திருப்பூரில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் சீனா பூண்டுகள் விற்பனை செய்யப்படுவதாக திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிக்கு ரகசிய தகவல்கள் வந்தன.

    இதனையடுத்து இன்று திருப்பூர் மார்க்கெட் மற்றும் பூண்டு மண்டிகளில் திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி விஜயலலிதாம்பிகை தலைமையிலான அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது பல்வேறு இடங்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 330 கிலோ சீனா பூண்டுகளை பறிமுதல் செய்தனர்.

    மேலும் அவை பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    தொடர்ந்து மாவட்டம் முழுவதும் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். 

    • கூட்டம் கூடி பிரச்சனை ஏற்பட்டால் அதற்கும் விமர்சனம் செய்வீர்கள்.
    • கூட்டம் கூடி பிரச்சனை ஏற்பட்டால் அதற்கும் விமர்சனம் செய்வீர்கள்.

    திருப்பூர்:

    வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு த.வெ.க. தலைவர் விஜய் பனையூர் அலுவலகத்தில் வைத்து நிவாரணம் வழங்கியது கடும் விமர்சனத்துக்குள்ளாகி உள்ளது.

    இந்த நிலையில், த.வெ.க. தலைவர் விஜய் களத்தில் நிற்க முடியவில்லை என்றாலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ வேண்டும் என நினைத்ததை பாராட்டலாம் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

    மேலும் சீமான் கூறுகையில், விஜய் பாதிக்கப்பட்ட இடத்திற்கு சென்றால் பாதிக்கப்பட்டோரின் கூட்டத்தை விட அவரை பார்க்க வந்தோரின் கூட்டம் அதிகரிக்கும் என்பதால் களத்திற்கு விஜய் செல்லவில்லை. கூட்டம் கூடி பிரச்சனை ஏற்பட்டால் அதற்கும் விமர்சனம் செய்வீர்கள். விஜய் கொடுக்க வேண்டும் என நினைப்பதே பெரிய விஷயம்தான். விஜய் அளித்த நிவாரணத்தை கூட  மற்றவர்கள் அளிக்கவில்லையே? நிவாரணம் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தை பாராட்ட வேண்டும் என்றார். 

    ×