என் மலர்
திருப்பூர்
- 6-வது ஆண்டாக அணையில் தீப வழிபாடு மேற்கொண்டனர்.
- ஓடையில் வரும் மழை நீரை நம்பி 6,040 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது.
வெள்ளகோவில்:
திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் அருகே 24.75 அடி கொள்ளளவு கொண்ட வட்டமலை அணை உள்ளது. போதிய நீர்வரத்து இல்லாத இடத்தில் கட்டப்பட்ட இந்த அணைக்கு நிரந்தரமாக நீர் வழங்க தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தொடர்ந்து 6-வது ஆண்டாக விவசாயிகள், பொதுமக்கள், தன்னார்வலர்கள் அணையில் தீப வழிபாடு மேற்கொண்டனர். மொத்தம் 10 ஆயிரத்து 8 தீபங்கள் ஏற்றப்பட்டது. இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
1980-ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த அணையின் இரண்டு கால்வாய்கள் மூலம் 6,040 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. ஓடையில் வரும் மழை நீரை நம்பி அணை கட்டப்பட்டதால் கடந்த 43 ஆண்டுகளில் இரண்டு முறை மட்டுமே பாசனத்திற்காக அணை திறக்கப்பட்டுள்ளது.
பரம்பிக்குளம்-ஆழியாறு பாசன வாய்க்கால் மூலம் அணைக்கு தண்ணீர் கொண்டு வந்து நிரப்ப வேண்டும். அணை பகுதியில் வளர்ந்து கிடக்கும் சீமை கருவேல மரங்களை தொடர்ந்து வெட்ட வேண்டும். அணையை அசுத்தப்படுத்தி அருகில் உள்ள அரசு மதுபான கடையை மாற்ற வேண்டும். விவசாயம் செழிக்க வேண்டியும் விளக்குகள் ஏற்றப்பட்டன.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- சுமார் 150 ஏக்கருக்கு பாதிப்பு ஏற்ப்பட்டுள்ளது.
- விவசாயிகள், அதிகாரிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மடத்துக்குளம்:
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பகுதியில் பெய்த மழை காரணமாக குமரலிங்கம் பழைய வாய்க்காலில் இருந்து வெளியேறிய தண்ணீர் விளைநிலங்களுக்குள் புகுந்ததால் சுமார் 150 ஏக்கரில் பயிர்கள் பாதிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் மடத்துக்குளம் தாசில்தார் பானுமதி மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
அப்போது அங்கு வந்த விவசாயிகள், அதிகாரிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.
மேலும் விவசாயிகள் பயிர் பாதிப்புக்கு நிவாரணம் மற்றும் கடைமடை பகுதி விவசாயிகள் பாதிக்கப்படுவதைத் தவிர்க்க நிரந்தர தீர்வு வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
உரிய ஆய்வுகள் செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்தனர். இதைத்தொடர்ந்து விவசாயிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
கனமழையின் காரணமாக சாமராயபட்டி, பெருமாள் புதூர், குமரலிங்கம் பகுதிகளில் புது வாய்க்கால் தண்ணீர், மழைநீர் மற்றும் அனைத்து விதமான கழிவு நீர்களும் குமரலிங்கம் பழைய வாய்க்காலில் கலந்து ஆற்றுக்கு செல்கின்றன.
இதனால் வாய்க்கால் கீழ்பகுதியில், கடைமடையில் உடைப்பு ஏற்பட்டு விளைநிலங்களுக்குள் தண்ணீர் புகுந்ததால் நெல் பயிர்கள், கரும்புகள், தென்னந்தோப்புகள் என சுமார் 150 ஏக்கருக்கு பாதிப்பு ஏற்ப்பட்டுள்ளது.
கடைமடையில் பாதிப்பை தவிர்க்கும் வகையில், உரிய இடத்தில் கால்வாய் அமைத்தல், நீர் வரத்தை கண்காணித்து பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் நடவடிக்கை மேற்கொள்ளுதல் போன்ற திட்டங்களை நீர்வளத்துறை செயல்படுத்தாமல் உள்ளனர். இதுவே பாதிப்புகளுக்கு காரணமாக உள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளை அதிகாரிகள் முழுமையாக ஆய்வு செய்து விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- அமராவதி அணையில் இருந்து ஆற்றில் 36ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.
- கோவிலுக்குள் பக்தர்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.
தாராபுரம்:
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள அமராவதி அணை நீர் பிடிப்பு பகுதிகளிலும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் தொடர்ச்சியாக கடந்த 2 நாட்களாக பெய்த கனமழை காரணமாக அமராவதி அணை முழு கொள்ளளவான 90அடியை எட்டியது. இதையடுத்து அமராவதி அணையில் இருந்து ஆற்றில் 36ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.
தாராபுரம் அருகே உள்ள அலங்கியம் ஆற்று பாலத்தின் அருகே பழனியில் இருந்து சண்முக நதி ஆற்றில் திறந்து விடப்பட்ட 20 ஆயிரம் கன அடி தண்ணீர் அலங்கியம் அருகே அமராவதி ஆற்றில் கலந்து சுமார் 57 ஆயிரம் கன அடி தண்ணீர் அமராவதி ஆற்றில் இருகரைகளையும் தொட்டபடி செல்கிறது.
இதன் காரணமாக தாராபுரம் ஈஸ்வரன் கோவில் பகுதியில் உள்ள படித்துறை மூழ்கியது. ஈஸ்வரன் கோவில் அருகே உள்ள கிருஷ்ணர் கோவிலை சுற்றிலும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இதனால் கோவிலுக்குள் பக்தர்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.
மேலும் அலங்கியம்-கொங்கூர் தரைப்பாலம் மற்றும் வீராச்சிமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட ஆத்துக்கால்புதூரில் உள்ள ஆற்றுப்பாலம் நீரில் மூழ்கியது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. அமராவதி ஆற்றில்வெள்ளப்பெருக்கு காரணமாக ஈஸ்வரன் கோவில் அருகில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
- உயிரிழந்த 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொள்ளாச்சி:
திருப்பூர் அடுத்த குளத்துப்பாளையம் அணைப்புதூரை சேர்ந்தவர் யோகரத்தினம்..
இவரது மனைவி ஆஷா(வயது41). இவர்களுக்கு அனுப்ராஜா(4), அபிலேஸ்வரன்(15) என்ற மகன்களும், அஸ்வதி(21) என்ற மகளும் உள்ளனர்.
ஆஷா கேரள மாநிலம் கொல்லங்கோட்டில் உள்ள மீன்குளத்தி பகவதி அம்மன் கோவிலுக்கு செல்ல முடிவு செய்தார்.
இதையடுத்து இன்று காலை ஆஷா, தனது மகள் அஸ்வதி, மகன்கள் அனுப்ராஜா, அபிலேஸ்வரன் ஆகியோருடன் திருப்பூரில் இருந்து காரில் புறப்பட்டார்.
காரை திருப்பூர் பவானி நகரை சேர்ந்த விமல்ராஜ்(35) என்பவர் ஓட்டினார்.
இவர்கள் திருப்பூரில் இருந்து புறப்பட்டு, பொள்ளாச்சி வழியாக கோவிலுக்கு சென்று கொண்டிருந்தனர்.
இவர்களது கார் பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை போலீஸ் நிலைய சரகத்திற்கு உட்பட்ட கோவிந்தாபுரம் ரோடு பாப்பாத்தி பள்ளம் அருகே சென்று கொண்டிருந்தது.
அப்போது கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக சென்றது. சிறிது நேரத்தில் சாலையின் இடதுபுறத்தில் உள்ள தென்னை மரத்தின் மீது பயங்கரமாக மோதியது.
மோதிய வேகத்தில் காரின் முன்பகுதி நொறுங்கியது. இந்த விபத்தில் காரில் இருந்த ஆஷா, அவரது மகன் அனுப்ராஜா ஆகியோர் பலத்த காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டனர்.
அபிலேஸ்வரனுக்கு இடது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
இதனை பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக சம்பவம் குறித்து ஆனைமலை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
உயிரிழந்த 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
காயத்துடன் காரில் இருந்த அபிலேஸ்வரை மீட்டு சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து ஆனைமலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மழை இடை விடாமல் தொடர்ந்து பெய்து கொண்டிருக்கிறது.
- அமராவதி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
திருப்பூர்:
தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனையொட்டிய கிழக்கு இந்திய பெருங்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி நிலவுகிறது. இதனால் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது.
திருப்பூரில் நேற்று காலை முதல் மழை பெய்ய தொடங்கியது. மதியத்திற்கு பிறகு மழை பெய்யாத நிலையில், இன்று காலை முதல் மீண்டும் மழை பெய்ய ஆரம்பித்தது. இதன் காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் கிறிஸ்து ராஜ் உத்தரவிட்டார்.
காலையில் பெய்யத் தொடங்கிய மழை இடை விடாமல் தொடர்ந்து பெய்து கொண்டிருக்கிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. வேலைக்கு செல்பவர்கள், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம் போல் தேங்கி உள்ளது.
சிதலமடைந்த சாலைகள் சேறும் சகதியுமாக மாறி உள்ளதால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். தொடர் மழையால் பொதுமக்கள் பலர் வீடுகளுக்குள் முடங்கி உள்ளனர்.
திருப்பூர் மாநகர் மட்டுமின்றி மாவட்டத்திற்குட்பட்ட உடுமலை, காங்கயம், தாராபுரம், பல்லடம், வெள்ளகோவில், முத்தூர் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் மழை தொடர்ந்து நீடித்து வருகிறது.

உடுமலை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமராவதி அணை உள்ளது. இதன் மூலம் திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.
நேற்று முதல் அணையின் நீர் பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததன் காரணமாக அணை முழு கொள்ளளவான 90 அடியை எட்ட ஆரம்பித்தது.
இதையடுத்து பாதுகாப்பு கருதி அணையில் இருந்து அமராவதி ஆற்றில் 36ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக அமராவதி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கரையோர பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. வருவாய்த்துறை அதிகாரிகள் கரையோர கிராம பகுதிகளில் முகாமிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர்.
உடுமலை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட உடுமலை வனச்சரகத்தின் அடர்ந்த வனப்பகுதியில் பஞ்சலிங்க அருவி உள்ளது. தற்போது வனப்பகுதியில் பெய்து வரும் கனமழையின் காரணமாக நேற்று காலை முதல் அருவியில் தண்ணீர் சீற்றம் அதிகரித்து காணப்பட்டது.
அத்துடன் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கான சூழலும் நிலவியது. அதைத் தொடர்ந்து சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பு கருதி அருவியில் குளிக்க கோவில் நிர்வாகம் தடை விதித்தது.
மாலையில் சற்று அதிகரித்த நீர்வரத்து அடிவாரத்தில் உள்ள அமணலிங்கேஸ்வரர் கோவிலை தழுவியவாறு திருமூர்த்தி அணையை அடைந்தது. மேலும் பஞ்சலிங்க அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் இன்று 2-வது நாளாக குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் விவரம் வருமாறு:-
திருப்பூர் வடக்கு-18, கலெக்டர் முகாம் அலுவ லகம்-29, திருப்பூர் தெற்கு-24, கலெக்டர் அலுவலகம்-14, அவினாசி-5, ஊத்து க்குளி-16.30, தாராபுரம்-50, மூலனூர்-56, குண்டடம்-22, உப்பாறு அணை-48, நல்லதங்காள் ஓடை அணை-32, காங்கயம்-23.60, வெள்ளகோவில்-35, வட்டமலை கரை ஓடை அணை-38.60, உடுமலை பேட்டை-63, அமராவதி அணை-110, திருமூர்த்தி அணை-135, திருமூர்த்தி அணை ஐ.பி.,-138, மடத்து க்குளம்-90. மாவட்டம் முழுவதும் மொத்தம் 963.50 மி.மீ., மழை பெய்துள்ளது.
- அணையில் இருந்து ஆற்றில் உபரிநீர் திறந்து விட பொதுப்பணித்துறை அதிகாரிகள் திட்டமிட்டு இருந்தனர்.
- அமராவதி அணைக்கு நீர் வரத்து விநாடிக்கு 35,000 கனஅடியாக உள்ளது.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே அமைந்துள்ள அமராவதி அணை 90 அடி உயரம் கொண்டது. இந்த அணையின் மூலம் திருப்பூர், கரூர் மாவட்டங்களை சேர்ந்த 55 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
நேற்று காலை அணையின் நீர்மட்டம் 87.60 அடியாக இருந்த நிலையில், அப்பகுதியில் பெய்த மழையின் காரணமாக அணைக்கு 372 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது. இதனால் அணை முழு கொள்ளளவை எட்டும் நிலையில் இருந்தது. இதன் காரணமாக அணையில் இருந்து ஆற்றில் உபரிநீர் திறந்து விட பொதுப்பணித்துறை அதிகாரிகள் திட்டமிட்டு இருந்தனர். நேற்று அணையில் இருந்து 953 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
இந்நிலையில் அமராவதி அணைக்கு நீர் வரத்து விநாடிக்கு 35,000 கனஅடியாக உள்ளது. அணையில் இருந்து விநாடிக்கு 36,000 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.
அமராவதி ஆற்றின் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.
- திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது.
- வாகன ஓட்டிகள் மழையில் நனைந்தபடி சென்றனர்.
திருப்பூர்:
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய கிழக்கு இந்திய பெருங்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி நிலவுகிறது. இதனால் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது.
திருப்பூரில் கடந்த ஒரு வாரமாக வெயில் அடித்து வந்ததுடன், அவ்வப்போது வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
இந்தநிலையில் இன்று காலை திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது.
காலை 6 மணியளவில் லேசான தூரலுடன் பெய்ய தொடங்கிய மழை நேரம் செல்ல செல்ல பலத்த மழையாக பெய்தது. இதனால் காலையில் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள் சிரமத்திற்கு உள்ளாகினர். பலர் மழையில் நனைந்தபடியும், குடைபிடித்தபடியும் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு சென்றனர். வாகன ஓட்டிகள் மழையில் நனைந்தபடி சென்றனர்.
இந்த மழையின் காரணமாக தாழ்வான பகுதியில் தண்ணீர் குளம் போல் தேங்கியது. சிதலமடைந்த சாலைகள் சேறும் சகதியுமாக மாறின.
மாவட்டத்திற்குட்பட்ட தாராபுரம், பல்லடம், அவினாசி, உடுமலை உள்பட அனைத்து பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. ஏற்கனவே மாவட்டம் முழுவதும் பனியின் தாக்கம் அதிகம் உள்ள நிலையில், இன்று காலை பெய்த மழையால் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவியது.
உடுமலை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் மழையின் காரணமாக திருமூர்த்தி மலை பஞ்சலிங்க அருவியில் நீர்வரத்து அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அடிவாரப்பகுதியில் உள்ள அமணலிங்கேஸ்வரர் கோவிலில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
- வடகிழக்கு பருவமழை காலமான அக்டோபர் முதல் டிசம்பர் வரையும் அமராவதி அணைக்கு நீர்வரத்து இருக்கும்.
- பொதுமக்களின் குடிநீர் தேவை மற்றும் கால்நடைகளுக்கு தேவையான குடிநீர் வசதி நிறைவேற்றப்பட்டு வருகிறது.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே அமைந்துள்ள அமராவதி அணை 90 அடி உயரம் கொண்டது. இந்த அணையின் மூலம் திருப்பூர், கரூர் மாவட்டங்களை சேர்ந்த 55 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
இதேபோல் கல்லாபுரம், ராம்குளம், வாய்க்கால்கள் மூலமாக சுமார் 2 ஆயிரம் ஏக்கர் விளை நிலம் நேரடி பாசன வசதி பெற்று வருகிறது. தென்மேற்கு பருவமழை காலமான ஜூன் முதல் செப்டம்பர் வரையும், வடகிழக்கு பருவமழை காலமான அக்டோபர் முதல் டிசம்பர் வரையும் அமராவதி அணைக்கு நீர்வரத்து இருக்கும்.
இதன்மூலம் அமராவதி ஆற்றின் வழியோர கிராமங்களில் வசிக்கின்ற பொதுமக்களின் குடிநீர் தேவை மற்றும் கால்நடைகளுக்கு தேவையான குடிநீர் வசதி நிறைவேற்றப்பட்டு வருகிறது. மேலும் நூற்றுக்கணக்கான கிராம பகுதிகளில் கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த அணையில் 4.04 டி.எம்.சி. தண்ணீரை தேக்கி வைக்க முடியும்.
இன்று காலை அணையின் நீர்மட்டம் 87.60 அடியாக உள்ள நிலையில், அப்பகுதியில் பெய்து வரும் மழையின் காரணமாக அணைக்கு 372 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் அணை முழு கொள்ளளவை எட்டும் நிலை உள்ளது. இதன் காரணமாக அணையில் இருந்து ஆற்றில் உபரிநீர் திறந்து விட பொதுப்பணித்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். தற்போது அணையில் இருந்து 953 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
- தனித்தனியாக இருந்து படிக்குமாறு அறிவுறுத்தி உள்ளனர்.
- இருவரும் கல்லூரி மற்றும் எங்கு சென்றாலும் ஒன்றாகவே செல்வார்கள்.
அவினாசி:
திருப்பூர் மாவட்டம் அவிநாசி பழங்கரை லட்சுமி நகா் பகுதியை சோ்ந்தவா் மருதாசலமூா்த்தி. இவரது மகள் அவந்திகா (வயது 19). அவிநாசி கங்கவா் வீதியைச் சோ்ந்த ரமேஷ் மகள் மோனிகா (19). இவா்கள் இருவரும் திருமுருகன்பூண்டி அருகே உள்ள தனியாா் கல்லூரியில் 3-ம் ஆண்டு பட்டப்படிப்பு பயின்று வந்தனா். மேலும் இருவரும் பகுதி நேரமாக அங்குள்ள பல்பொருள் அங்காடியில் பணிபுரிந்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று மாலை அவந்திகா வீட்டுக்கு மோனிகா சென்றார். பின்னர் நீண்ட நேரமாகியும் வீட்டின் கதவு திறக்காததால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் கதவை திறந்து பார்த்த போது உள்ளே அவந்திகா, மோனிகா இருவரும் தூக்குப்போட்ட நிலையில் பிணமாக தொங்கினர்.
இதுகுறித்த தகவல் அறிந்ததும் அவினாசி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர்கள் எதற்காக தற்கொலை செய்து கொண்டனர் என்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவந்திகா, மோனிகா இருவரும் கல்லூரி மற்றும் எங்கு சென்றாலும் ஒன்றாகவே செல்வார்கள். படிக்கும் போதும் ஒன்றாகவே இருந்து படிப்பார்கள். ஆனால் அவர்களது பெற்றோர் ஒன்றாக இருந்து படித்தால் சரியாக படிக்கமாட்டீர்கள். எனவே தனித்தனியாக இருந்து படிக்குமாறு அறிவுறுத்தி உள்ளனர்.
இதனால் தங்களை பிரித்து விடுவார்களோ? என்று பயந்த 2 பேரும் தற்கொலை செய்துள்ளது போலீசார் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. வேறு ஏதேனும் காரணமா என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பிளாஸ்டிக் பக்கெட்டிற்குள் குழந்தை தலைகுப்புற கிடந்ததை பார்த்து அதிர்ச்சி.
- திருப்பூர் வடக்கு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பூர்:
பீகாரை சோ்ந்தவர் அங்கஸ்குமார் (வயது 29). இவரது மனைவி அம்சிகுமாரி (23). இவர்களது 9 மாத ஆண் குழந்தை அசிஸ்.தம்பதி இருவரும் தங்களது குழந்தையுடன் திருப்பூர் எம்.எஸ்.நகர் அருகே செல்வலெட்சுமி நகர் பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகின்றனர்.
சம்பவத்தன்று அங்கஸ்குமார் பனியன் நிறுவனத்திற்கு வேலைக்கு சென்று விட்டார். அவரது மனைவி அம்சிகுமாரி சமையல் அறையில் சமையல் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது குழந்தை அசிஸ் விளையாடிக்கொண்டிருந்த சிறிது நேரத்தில் குழந்தையை காணவில்லை.
இதனால் அதிர்ச்சியடைந்த அம்சிகுமாரி குழந்தையை தேடி வெளியே ஓடிவந்த போது அங்குள்ள தண்ணீர் நிரம்பிய பிளாஸ்டிக் பக்கெட்டிற்குள் குழந்தை தலைகுப்புற கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
உடனே அக்கம்பக்கத்தினர் உதவியுடன் குழந்தையை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து திருப்பூர் வடக்கு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சமையல் அறையில் அம்சிகுமாரி வேலை செய்து கொண்டிருந்தபோது குழந்தை அசிஸ் தவழ்ந்து சென்று அருகில் பட்கெட்டில் இருந்த தண்ணீரில் தலைக்குப்புற விழுந்தபோது, யாரும் கவனிக்காததால் மூச்சுத்திணறி இறந்து இருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.
பிளாஸ்டிக் பக்கெட் தண்ணீரில் குழந்தை விழுந்து இறந்த சம்பவம் திருப்பூர் பொதுமக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பூர்:
திருப்பூரை சேர்ந்தவர் சரண்யா (வயது 20) , திருமண மானவர். இவர் இன்று காலை தனது தாயார் வீட்டிற்கு செல்வதற்காக திருப்பூர் அவிநாசி-பெருமாநல்லூர் சாலையில் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
60 அடி சாலையில் சென்று கொண்டிருந்த போது பின்னால் மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து வந்த 2 நபர்கள் சரண்யாவின் இருசக்கர வாகனத்தை மறித்துள்ளனர்.
அதில் பின்னால் அமர்ந்திருந்த ஹெல்மெட் அணிந்திருந்த நபர் தான் வைத்திருந்த கூர்மையான அரிவாளால் சரண்யாவின் கை மற்றும் கழுத்து பகுதியில் சரமாரி வெட்டினார்.
அருகில் இருந்தவர்கள் கூச்சலிடவே ஹெல்மெட் அணிந்திருந்த நபர்கள் இருவரும் இருசக்கர வாகனத்தில் தப்பி சென்றனர்.
காயம் அடைந்த சரண்யாவை அக்கம்ப க்கத்தினர் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு முதலு தவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்பு மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர். அங்கு சரண்யாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பட்டப்பகலில் ஆட்கள் நடமாட்டம் மிகுந்த இடத்தில் பெண் மீது நடைபெற்ற இந்த தாக்குதல் சம்பவம் திருப்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. குடும்பத் தகராறு காரணமாக இந்த தாக்குதல் நடந்ததா ? அல்லது வேறு ஏதேனும் காரணமா ? என்பது குறித்து திருப்பூர் வடக்கு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்தநிலையில் சரண்யாவின் கணவர் ரமேஷ், திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் சரணடைந்தார். எனவே அவர்தான் சரண்யாவை வெட்டினாரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- இன்று முதல் கடைகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
- போராட்டத்திற்கு அ.தி.மு.க. ஆதரவு அளித்துள்ளது.
திருப்பூர்:
திருப்பூர் மாநகராட்சியில் சொத்து வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் , மத்திய அரசு வாடகை கட்டிடங்களுக்கு 18 சதவீதம் ஜி.எஸ்.டி., வரி விதித்தி ருப்பதற்கு கண்டனம் தெரிவித்தும் திருப்பூர் அனைத்து வியாபாரிகள் சங்கம் மற்றும் தொழில் அமைப்புகள் சார்பில் இன்று முதல் கடைகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
திருப்பூர் அரிசி கடை வீதி, பழைய மார்க்கெட் வீதி , புது மார்க்கெட் வீதி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கடைகளில் வியாபாரிகள் கருப்புக்கொடி ஏற்றி உள்ளனர். அனைத்து வியாபாரிகள் சங்கப் பேரவையின் இந்த போராட்டத்திற்கு அ.தி.மு.க. ஆதரவு அளித்துள்ளது.
வருகிற 18-ந்தேதி காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை கடை அடைப்பு போராட்டம் நடத்த உள்ளனர்.






