என் மலர்
திருப்பூர்
- தொடர் விசாரணைக்கு பின் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
- தனியார் பஸ் டிரைவர்கள் பொறுப்புணர்ந்து பஸ்களை இயக்கவில்லை என்றால், அபராதம் விதிக்கப்படும்.
திருப்பூர்:
திருப்பூர் அடுத்த செங்கப்பள்ளியில் நடந்த விபத்தில் தனியார் பஸ் கவிழ்ந்து 2 கல்லூரி மாணவர்கள் பலியனார்கள். 40க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். விபத்திற்கு காரணமான தனியார் பஸ் டிரைவர் மாடசாமி மற்றும் நடத்துனர் மீது ஊத்துக்குளி போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் திருப்பூர் வடக்கு வட்டார போக்குவரத்து அதிகாரி ஜெயதேவராஜ் மற்றும் அதிகாரிகள் விபத்து நடந்த இடத்தில் நேரிடையாக ஆய்வு நடத்தினர். அப்போது விபத்தில் தனியார் பேருந்து சிக்கியதற்கு, வலதுபுறம் லாரியை பேருந்து முந்த முயன்றதே விபத்துக்கு முக்கிய காரணம் என தெரிய வந்தது.
இதனையடுத்து சம்பந்தப்பட்ட தனியார் பேருந்தை ஓட்டிய டிரைவர் மாடசாமியின் ஓட்டுனர் உரிமத்தை அதிகாரிகள் ரத்து செய்தனர்.
இது தொடர்பாக வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலர் ஜெயதேவராஜ் கூறுகையில்,
மேற்படி தனியார் பேருந்து கவிழ்ந்த இடத்திற்கு அருகிலேயே குழி இருக்கிறது. பேருந்து வேகமாக வந்து லாரியை முந்தி முன்னேறி சென்றிருந்தால் வேகமாக விழுந்திருக்கும். பலியும் அதிகரித்திருக்கும். பேருந்து வேகம் குறைவு என்பதால், சாலையை விட்டு இறங்கி சாய்ந்துள்ளது. இதனால் பலி எண்ணிக்கை குறைந்துள்ளது. படுகாயம் அதிகரித்துள்ளது. வலது புறம் முந்த முயற்சி எடுத்தது தவறு. விபத்தை ஏற்படுத்திய டிரைவர் லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது.
தொடர் விசாரணைக்கு பின் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். தனியார் பஸ் டிரைவர்கள் பொறுப்புணர்ந்து பஸ்களை இயக்கவில்லை என்றால், அபராதம் விதிக்கப்படும். கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- மாதா ஜெயக்குமார் வடகரை எடோடியில் உள்ள பாங்க் ஆப் மகாராஷ்டிரா வங்கியின் கிளை மேலாளராக பணியாற்றி வந்தார்.
- மாதா ஜெயக்குமாருடன் திருப்பூர் வந்த கேரள போலீசார் தனியார் வங்கியின் இருவேறு கிளைகளில் ஆய்வு செய்தனர்.
திருப்பூர்:
திருச்சி மாவட்டம் முசிறி வட்டம் மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் மாதா ஜெயக்குமார் (வயது 34). இவர் கோழிக்கோடு மாவட்டம் வடகரை எடோடியில் உள்ள பாங்க் ஆப் மகாராஷ்டிரா வங்கியின் கிளை மேலாளராக பணியாற்றி வந்தார்.
பின்னர் இவர் கேரள மாநிலம் எர்ணாகுளத்துக்கு உள்ள வங்கி கிளைக்கு மாற்றப்பட்ட நிலையில், வடகரை எடோடி கிளைக்கு புதிய மேலாளர் பொறுப்பேற்றுள்ளார். இதையடுத்து அங்கு தணிக்கை நடைபெற்றது.
அதில் ரூ.17 கோடியே 50 லட்சம் மதிப்பிலான 26.8 கிலோ நகைகள் போலியாக வைத்து மோசடியில் ஈடுபட்டு இருப்பது தெரிய வந்தது. மேலும் வங்கி மேலாளராக இருந்த மாதா ஜெயக்குமார் எர்ணாகுளம் கிளையில் பொறுப்பேற்காமல் தலைமறைவானார்.
இதையடுத்து தலைமறைவாக இருந்த அவரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர் திருப்பூரில் உள்ள தனியார் வங்கியில் அந்த நகைகளில் சிலவற்றை தன் நண்பரான திருப்பூர் சந்திராபுரம் கேஎன்பி., காலனி ராஜீவ்காந்தி நகரை சேர்ந்த கார்த்திக் (29) என்பவரிடம் கொடுத்து அடமானம் வைத்து பணம் பெற்றது தெரியவந்தது.
இதையடுத்து மாதா ஜெயக்குமாருடன் திருப்பூர் வந்த கேரள போலீசார் தனியார் வங்கியின் இருவேறு கிளைகளில் ஆய்வு செய்தனர். அங்கு 4.6 கிலோ நகையை மீட்டனர்.
இந்தநிலையில் இன்று கேரளாவில் இருந்து வந்த சிறப்பு தனிப்படை போலீசார் வங்கியில் மீண்டும் சோதனை நடத்தினர். மாதா ஜெயக்குமார் லாக்கரில் வைத்துள்ள நகைகள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 20 க்கும் மேற்பட்டோர் காயமடைந்து ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
- சிகிச்சையில் இருக்கும் 2 பேரையும் சிகிச்சைக்கு பின் கைது செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டம் செங்கப்பள்ளி அருகே தனியார் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 2 கல்லூரி மாணவர்கள் பலியாகினர். 20 க்கும் மேற்பட்டோர் காயமடைந்து ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தநிலையில் தனியார் பேருந்து டிரைவர் பெருந்துறையை சேர்ந்த மாரசாமி மற்றும் கண்டக்டர் துரைசாமி ஆகியோர் மீது ஊத்துக்குளி போலீசார் 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
281-பொது சாலைகளில் அதிவேகமாக வாகனத்தை இயக்குதல், 125-ஏ பிறர் உயிருக்கும் பாதுகாப்புக்கும் ஆபத்தை விளைவிக்கும் வகையில் அலட்சியமாக செயல்படுதல், 106( 1 )அலட்சியமாக செயல்பட்டு மரணத்தை விளைவித்தல் ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தற்போது சிகிச்சையில் இருக்கும் 2 பேரையும் சிகிச்சைக்கு பின் கைது செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர்.
- பொதுமக்கள் 50-க்கும் மேற்பட்டோர் பயணித்தனர்.
- சில பயணிகள் பஸ்சில் இருந்து தூக்கி வீசப்பட்டதில் பலத்த காயம்.
திருப்பூர்:
திருப்பூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து ஈரோட்டிற்கு இன்று காலை தனியார் பஸ் ஒன்று புறப்பட்டது. இதில் ஈரோடு மாவட்டம் பெருந்துறை பகுதியில் உள்ள கல்லூரிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள் மற்றும் பொதுமக்கள் 50-க்கும் மேற்பட்டோர் பயணித்தனர்.
காலை 8-30 மணியளவில் திருப்பூர் மாவட்டம் செங்கப்பள்ளி பல்லகவுண்டன்பாளையம் கோவை-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் தாறுமாறாக ஓடி, சாலையோரம் கவிழ்ந்தது.

இதில் பஸ்சில் பயணித்த 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்தில் சிக்கிய 5 கல்லூரி மாணவர்களின் கை-கால்கள் துண்டாகியது. அவர்கள் பெருந்துறை அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 2 பேர் சுய நினைவு இல்லாமல் உள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் பலத்த காயமடைந்தனர். சில பயணிகள் பஸ்சில் இருந்து தூக்கி வீசப்பட்டதில் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடினர்.

இது குறித்த தகவல் அறிந்ததும் ஊத்துக்குளி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் பொதுமக்கள் உதவியுடன் காயமடைந்த பயணிகளை மீட்டு சிகிச்சைக்காக பெருந்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்ஸ்கள் மூலம் அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து காரணமாக செங்கப்பள்ளி கோவை-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அப்பகுதியில் ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர்.
இதையடுத்து போலீசார் போக்குவரத்தை சீரமைத்தனர். சுமார் ஒருமணி நேரத்திற்கு பிறகு அங்கு போக்குவரத்து சீரானது.

டிரைவர் அதிவேகமாக பஸ்சை இயக்கியதால் இந்த விபத்து நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து பஸ் டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் விபத்தில் பலியான 2 பேரின் விவரம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் கல்லூரி மாணவர்கள் என்பதும், அதில் ஒருவர் விருமாண்டம்பாளையம் பகுதியை சேர்ந்த சந்திரன் என்பவரின் மகன் பெரியசாமி (வயது 20), மற்றொருவர் ஹரிகிருஷ்ணன் என்பது தெரியவந்தது.
பெரியசாமி செங்கப்பள்ளியில் இருந்து பஸ்சில் ஏறியுள்ளார். அடுத்த 5 நிமிடத்தில் அவர் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். விபத்து குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- போலீசார் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
- போலீசார் ரோந்து பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
திருப்பூர்:
திருப்பரங்குன்றம் மலையை காக்க கோரி இந்து முன்னணி உள்ளிட்ட இந்து அமைப்புகள் சார்பில் இன்று திருப்பரங்குன்றத்தில் அறப்போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த போராட்டத்திற்கு போலீசார் தடை விதித்தனர். மேலும் திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் போலீசார் தடையை மீறி திருப்பரங்குன்றத்திற்கு செல்வோம் என இந்து அமைப்புகள் தெரிவித்தன. இதையடுத்து போராட்டக்காரர்கள் அங்கு செல்வதை தடுக்கும் வகையில் தமிழகம் முழுவதும் நேற்றிரவு முதல் போலீசார் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் திருப்பூரை சேர்ந்தவர் என்பதால் அவரது தலைமையில் இந்து முன்னணியினர் திருப்பரங்குன்றம் செல்வார்கள் என்பதால் திருப்பூர் மாநகர் பகுதியில் நேற்றிரவு முதல் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
ஒரு சோதனை சாவடியில் 6 போலீசார் வீதம் வாகனங்களை சோதனை செய்தனர். வாகனங்களில் மொத்தமாக செல்பவர்களை விசாரித்து அதன்பிறகே அனுப்பி வைத்தனர். நேற்றிரவு முதல் இன்று அதிகாலை வரை விடிய விடிய வாகன சோதனை நடைபெற்றது. இன்று காலையும் சோதனை தொடர்ந்தது.
திருப்பூர் மாநகரில் இருந்து வெளியேறும் கார், வேன் மற்றும் பேருந்துகளில் செல்பவர்கள் எங்கே செல்கிறார்கள் என்ற விவரம் சேகரிக்கப்பட்டு அவர்களது ஆவணங்களை சரிபார்த்து அனுப்பி வைத்தனர். போராட்டத்திற்கு பங்கேற்க செல்வதாக கருதப்பட்டவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.
மேலும் முருக பக்தர்களுடன் இந்து முன்னணியின் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் மற்றும் இந்து அமைப்பைச் சார்ந்தவர்கள் திருப்பரங்குன்றம் செல்வதற்கு வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்டதால் இந்து முன்னணியின் மாநில தலைவர் காடேஸ்வர சுப்பிரமணியம் வீடு-அலுவலகம் அமைந்துள்ள திருப்பூர் பெரிச்சிபாளையம் பகுதியில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் காடேஸ்வரா சுப்பிரமணியம் வீட்டில் சிறைவைக்கப்பட்டார்.
மாநகர போலீஸ் துணை கமிஷனர் ராஜராஜன் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். திருப்பரங்குன்றம் செல்ல முயலும் பட்சத்தில் அவர் கைது செய்யப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் அவர் கைது செய்யப்பட்ட பிறகு மாநகரின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடைபெறும் என்ற தகவலால் பல்வேறு பகுதிகளில் போலீசார் ரோந்து பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
- மருத்துவ கழிவுகளை ஏற்றி வந்த கேரள பதிவு எண் கொண்ட லாரி, அதில் வந்த 3 பேரை பொதுமக்கள் சிறை பிடித்தனர்.
- அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே வேலப்பக்கவுண்டம் பாளையத்தை சேர்ந்த பொன்னுசாமி என்பவரின் தோட்டத்தில் தொடர்ச்சியாக கேரள மருத்துவக் கழிவுகள் எரியூட்டப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இந்த நிலையில், மருத்துவ கழிவுகளை ஏற்றி வந்த கேரள பதிவு எண் கொண்ட லாரியையும், அதில் வந்த 3 பேரையும் பொதுமக்கள் சிறை பிடித்தனர்.

மேலும், குடோனில் உள்ள அனைத்து கழிவுகளையும் உடனடியாக அகற்ற வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர். இது தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பொங்கல் வைத்து குடும்பத்துடன் வழிபடுவார்கள்.
- குழிக்குள் வைத்து மூடப்படுவதால் அம்மனுக்கு 'மூடி அம்மன்' என்று பெயர்.
பல்லடம்:
இறைவனை வழிபடுவதில் பல்வேறு விதமான பழக்க வழக்கங்கள் இருந்து வருகிறது. இதில் நேர்த்திக்கடன் செலுத்தும் விதமாக தீ மிதித்தல், முடி காணிக்கை, எடைக்கு எடை துலாபாரம் கொடுத்தல் உள்ளிட்ட பல்வேறு விதமான வழிபாடுகள் உள்ளது.
அந்த வகையில், திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை சேர்ந்த முழுக்காதான் குலத்தை சேர்ந்தவர்கள், குழி அமைத்து அதில் அம்மன் சாமியை வைத்து மூடி அம்மன் என்று வழிபாடு செய்து வருகின்றனர்.
அதன்படி பல்லடம் அருகே உள்ள கோடங்கிபாளையம் ஊராட்சி சங்கோதிபாளையத்தில் மூடி அம்மன் வழிபாடு நடைபெற்றது. இதுகுறித்து முழுக்காதான் குலத்தைச் சேர்ந்தவர்கள் கூறியதாவது:-
எங்கள் குல குழந்தைகளின் காதணி விழாவுக்கு சுமார் 3 நாட்கள் முன்பாக மூடி அம்மனை வழிபடுவது வழக்கம். காதணி விழா குடும்பத்தினர், குழிக்குள் உள்ள மூடி அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம் செய்து பழம், பூ , தேங்காய், வெற்றிலை, பாக்கு ஆகியவற்றுடன் பொங்கல் வைத்து குடும்பத்துடன் வழிபடுவார்கள்.
மூடி அம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபட்ட பின் அனைவருக்கும் பிரசாதம் வழங்கி, வழக்கம்போல் குழி மூடப்படும். இந்த விழாவானது அம்மனிடம் உத்தரவு கேட்கப்படும் நிகழ்வு.
இதுபோல் அம்மனிடம் உத்தரவு கேட்டு குடும்ப விழாக்கள் செய்தால் அவை எந்த இடர்பாடும் இன்றி நல்லபடியாக நடக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது. இதுகாலம் காலமாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மூடி அம்மனை வழிபட்ட பின்னர் நவ தானியங்கள் வைத்து வழிபாடு செய்து குழியை மூடி விடுவார்கள்.
பின்னர் வேறு ஏதேனும் திருமணம், காதணி விழா உள்ளிட்ட விழா செய்யும் குடும்பத்தினர் மூடி அம்மனிடம் உத்தரவு கேட்பதற்காக மீண்டும் வழிபாடு நடக்கும். அதுவரை மூடி அம்மன் குழிக்குள் இருப்பார். குழிக்குள் வைத்து மூடப்படுவதால் அம்மனுக்கு 'மூடி அம்மன்' என்று பெயர். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
- பாதிக்கப்பட்ட சிவன்மலையை சேர்ந்த நூல்மில் உரிமையாளர் செல்வராஜ் என்பவர் காங்கயம் போலீசில் புகார் செய்தார்.
- தலைமறைவாக உள்ள கஜேந்திரனை போலீசார் தேடி வருகின்றனர்.
காங்கயம்:
திருப்பூர் மாவட்டம் காங்கயத்தை அடுத்த சிவன்மலை குருகத்தி பகுதியை சேர்ந்தவர் கஜேந்திரன் (வயது 55). நிதி நிறுவன உரிமையாளர். மேலும் கந்து வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழிலும் செய்து வந்தார். அவர் கொடுக்கும் பணத்திற்கு வட்டிக்கு மேல் வட்டி போட்டு ராக்கெட் வட்டி விகிதத்தில் கடன் வசூலித்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.
சிவன்மலையில் வசித்து வரும் பல குடும்பத்தினர் கஜேந்திரனிடம் பணம் பெற்றதாகவும், பணம் பெற்றவர்களிடம் வசூலிக்கும் பணத்தை அசலில் கழிக்காமல் வட்டியில் கழிப்பதாகவும், கடன் பெற்றவர்களை மிரட்டி பத்திரங்களை எழுதியும் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
இதில் பாதிக்கப்பட்ட சிவன்மலையை சேர்ந்த நூல்மில் உரிமையாளர் செல்வராஜ் என்பவர் காங்கயம் போலீசில் புகார் செய்தார்.
இதனைதொடர்ந்து காங்கயம் போலீசார் கஜேந்திரன் மீது கந்து வட்டி வழக்குப்பதிவு செய்தனர். மேலும் காங்கயம் துணை போலீஸ் சூப்பிரண்டு மாயவன், இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் மற்றும் போலீசார் சம்பந்தப்பட்ட கஜேந்திரன் என்பவரது வீட்டிற்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர்.
இதில் கஜேந்திரன் வீட்டில் இருந்து 73 நிலம், வீடு, தொழில் சார்ந்த பத்திரங்கள், பணம் குறிப்பிடாத வங்கி காசோலை-6, ஆதிதிராவிடருக்கு வழங்கப்பட்ட இலவச வீட்டு மனை பட்டாக்கள்-2 மற்றும் வாகன உரிமம் புத்தகம் ஆகியவற்றை அதிரடியாக கைப்பற்றினர். அவற்றின் மதிப்பு ரூ.10 கோடி இருக்கும் என்று போலீசார் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து தலைமறைவாக உள்ள கஜேந்திரனை போலீசார் தேடி வருகின்றனர்.
- வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- கல்லூரி நிர்வாகம் தொடர்ந்து அலட்சியம் காட்டி வருகின்றது.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலை அரசு கலைக்கல்லூரியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்தநிலையில் கல்லூரியில் அடிப்படை வசதிகளான குடிநீர் குழாய், கழிப்பிடம் மற்றும் விளையாட்டு மைதானம் பராமரிப்பு இல்லாமல் உள்ளதாக கல்லூரி நிர்வாகத்திடம் மாணவர்கள் புகார் செய்தனர்.
ஆனால் சீரமைக்க நடவடிக்கை எடுக்காததால் இன்று காலை கல்லூரி மாணவர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து மாணவர்கள் கூறியதாவது:-
மாணவர்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவதில் கல்லூரி நிர்வாகம் தொடர்ந்து அலட்சியம் காட்டி வருகின்றது. எனவே இனியும் அலட்சியம் காட்டாமல் குடிநீர் மற்றும் கழிப்பிடம் வசதியை உடனே செய்து தர வேண்டும். இல்லாவிடில் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
- தொடர்ந்து மாநகர் மற்றும் மாவட்டம் முழுவதும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
- திருமுருகன்பூண்டி பகுதியில் 4 பேரை கைது செய்தனர்.
திருப்பூர்:
தமிழகத்திற்குள் ஊடுருவி உள்ள வங்கதேசத்தினர், மேற்கு வங்க மாநிலத்தவர் போல் போலி ஆவணங்கள் தயார் செய்து திருப்பூர் பனியன் நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர்.
அவர்களை கைது செய்ய உள்ளூர் போலீசார் மற்றும் என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஒரு வாரத்தில் திருப்பூர் மாவட்டத்தில் மட்டும் 63 வங்கதேசத்தினர் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து மாநகர் மற்றும் மாவட்டம் முழுவதும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவின் பேரில் பனியன் நிறுவனங்களில் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். நல்லூர் போலீஸ் நிலையத்திற்குட்பட்ட வள்ளியம்மை நகர், ராக்கியாபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பனியன் நிறுவனங்களில் சோதனை செய்த போது அங்கு பணியில் ஈடுபட்டிருந்த வங்கதேசத்தினர் 11 பேரை கைது செய்தனர். திருமுருகன்பூண்டி பகுதியில் 4 பேரை கைது செய்தனர். இவர்கள் போலி ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்களை தயாரித்து திருப்பூர் பனியன் நிறுவனங்களில் பணியாற்றி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. திருப்பூரில் பதுங்கியிருந்த வங்கதேசத்தினர் மேலும் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து போலீசார் கூறுகையில், பிப்ரவரி மாத இறுதிக்குள் வங்கதேசத்தினர் ஒருவர் கூட தமிழகத்தில் இல்லை என்பதை உறுதி செய்யும் வகையில் நடவடிக்கையை தீவிரப்படுத்தி உள்ளோம் என்றனர்.
- வீட்டின் பின்புறம் உள்ள ஒரு அறையில் 10 லிட்டர் கள்ளச்சாராய ஊறல் இருப்பதை கண்டுபிடித்து அழித்தனர்.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அவினாசி:
திருப்பூர் மாவட்டம், குன்னத்தூர் அருகே உள்ள சின்னியம்பாளையம் பகுதியில் ஒருவர் வீட்டில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாகவும் கஞ்சா செடிகள் வளர்ப்பதாகவும் அவிநாசி மதுவிலக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோக் மற்றும் போலீசார் குன்னத்தூரில் உள்ள சின்னசாமி (வயது 45) என்பவரது வீட்டில் அதிரடியாக சோதனை செய்தனர்.
அப்போது வீட்டின் பின்புறம் உள்ள ஒரு அறையில் 10 லிட்டர் கள்ளச்சாராய ஊறல் இருப்பதை கண்டுபிடித்து அதனை அழித்தனர். மேலும் அதன் அருகே இரண்டு கஞ்சா செடிகளை வளர்ப்பது கண்டுபிடிக்கப்பட்டு அதனையும் அழித்தனர்.
தொடர்ந்து சின்னச்சாமியிடம் விசாரணை நடத்திய போது தனது சொந்த பயன்பாட்டிற்காக கள்ளசாராயம் காய்ச்சியதாகவும் கஞ்சா செடி வளர்த்ததாகவும் தெரிவித்தார். இதனையடுத்து அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
- அதிமுகவுக்கு 'ரெய்டு' மூலம் நெருக்கடி கொடுக்க வேண்டிய தேவை பாஜகவுக்கு இல்லை.
- எடப்பாடி பழனிசாமியுடன் நேரடியாக பேசினாலே பா.ஜ.க., அ.தி.மு.க. கூட்டணி ஏற்பட்டு விடும்
நெல்லை வடக்கு மாவட்ட பா.ஜ.க. சார்பில் சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.
அந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின்பு செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாஜக எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன், "வருமான வரித்துறை சோதனை, அமலாக்கத்துறை சோதனை மூலமாக கூட்டணிக்கு வரும்படி எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடி எதுவும் கொடுக்கப்படவில்லை. 'ரெய்டு' மூலம் நெருக்கடி கொடுக்க வேண்டிய தேவை இல்லை. எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியுடன் நேரடியாக பேசினாலே பா.ஜ.க., அ.தி.மு.க. கூட்டணி ஏற்பட்டு விடும்" என்று தெரிவித்தார்.
நயினார் நாகேந்திரனின் இந்த பேச்சு தமிழக அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், அதிமுக- பாஜக கூட்டணி குறித்து நயினார் நாகேந்திரன் பேசியது தொடர்பாக திருப்பூரில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த அவர், "ரெய்டு விடுவதற்கெல்லாம் நயினார் நாகேந்திரன் அண்ணனுக்கு எந்த அதிகாரமும் இல்லை" என்று தெரிவித்தார்.






