என் மலர்tooltip icon

    திருப்பூர்

    • பொங்கல் பண்டிகை விடுமுறையையொட்டி தொழிலாளர்கள் பலர் தங்களது குடும்பத்துடன் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர்.
    • தொழிலாளர்கள் அனைவரும் வருகிற 20-ந்தேதிதான் திருப்பூர் திரும்ப வாய்ப்புள்ளது.

    திருப்பூர்:

    பின்னலாடை தொழில் நகரமான திருப்பூரில் வெளி மாநிலம் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

    இவர்கள் ஆண்டுதோறும் தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகையையொட்டி சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். தற்போது பொங்கல் பண்டிகை விடுமுறையையொட்டி தொழிலாளர்கள் பலர் தங்களது குடும்பத்துடன் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர்.

    இவர்கள் அனைவரும் வருகிற 20-ந்தேதிதான் திருப்பூர் திரும்ப வாய்ப்புள்ளது. அதன்பிறகே பெரும்பாலான பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள் திறக்கப்படும் என அதன் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    லட்சக்கணக்கான தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளதால் திருப்பூரில் இன்று பிரதான சாலைகள், கடை வீதிகள் வெறிச்சோடி காணப்பட்டன. வெளியூர் சென்ற தொழிலாளர்கள் திரும்பிய பிறகே, திருப்பூர் இயல்பு நிலைக்கு திரும்ப வாய்ப்புள்ளதாக தொழில் துறையினர் தெரிவித்தனர்.

    • 7 நாட்களுக்கு மொத்தம் 110.07 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது.
    • வரப்பாளையம், சின்னப்புத்தூர் ஆகிய கிராமங்களிலுள்ள 6060 ஏக்கர் நிலங்கள் பாசன வசதிபெறும்.

    தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

    திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டத்தில் உள்ள உப்பாறு அணையிலிருந்து வலது மற்றும் இடது கால்வாய் மூலம் பாசனம் பெறும் நிலங்களில், நிலையில் உள்ள பயிர்களைக் காப்பாற்றும் பொருட்டும், பொதுமக்கள் மற்றும் கால்நடைகளின் குடிநீர் தேவைக்காகவும், 19.01.2025 முதல் 25.01.2025 முடிய 7 நாட்களுக்கு மொத்தம் 110.07 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது.

    இதனால், திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டத்திலுள்ள வேலாயுதம்பாளையம், கெத்தல்ரேவ், தொப்பம்பட்டி, நஞ்சியம்பாளையம், சூரியநல்லூர், கண்ணன் கோவில், மடத்துப்பாளையம், வரப்பாளையம், வடுகபாளையம் மற்றும் சின்னப்புத்தூர் ஆகிய கிராமங்களிலுள்ள 6060 ஏக்கர் நிலங்கள் பாசன வசதிபெறும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • முட்டைகள் உடைந்து சாலையில் ஆறாக ஓடியது.
    • போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    பல்லடம்:

    நாமக்கல்லில் இருந்து கோவைக்கு 90 ஆயிரம் முட்டைகளை ஏற்றி கொண்டு மினி லாரி ஒன்று நேற்று இரவு புறப்பட்டது. அதனை நாமக்கல்லை சேர்ந்த நந்தகுமார் என்பவர் ஓட்டினார். அவருடன் கந்தசாமி என்பவரும் உடன் வந்தார்.

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள காளிவேலம்பட்டி பிரிவு என்ற இடம் அருகே சென்ற போது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தாறுமாறாக ஓடி சாலையில் கவிழ்ந்தது. இதில் முட்டைகள் உடைந்து சாலையில் ஆறாக ஓடியது. மேலும் அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இது குறித்து தகவல் அறிந்த பல்லடம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிரேன் மூலம் லாரியை அப்புறப்படுத்தினர். இந்த விபத்தில் லேசான காயம் அடைந்த நந்தகுமார் மற்றும் கந்தசாமி ஆகியோருக்கு பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மங்கலம்:

    திருப்பூர் பூமலூர் ஊராட்சிக்குட்பட்ட நடுவேலம்பாளையம் பகுதியில் மாரியம்மன் கோவில், பட்டத்தரசியம்மன் கோவில் ஒரே வளாகத்தில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் பொங்கல் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி இந்த ஆண்டு திருவிழாவானது கடந்த 31-ந்தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. அதனைத்தொடர்ந்து தினந்தோறும் மாரியம்மன், பட்டத்தரசியம்மனுக்கு அலங்கார பூஜைகள், சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சக்தி கும்பம், சக்தி கரகம் எடுத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.


    பின்னர் நடுவேலம்பாளையம், லட்சுமிநகர் பொதுமக்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். திரளான பக்தர்கள் மாவிளக்கு எடுத்து வந்து சாமி தரிசனம் செய்தனர். சுமங்கலிப்பெண்கள் தங்களின் வேண்டுதல் நிறைவேற வெள்ளை நிற சேலை அணிந்து வந்து மாரியம்மனை தரிசனம் செய்தனர்.

    இது குறித்து பக்தர்கள் கூறுகையில், சுமங்கலி பெண்கள் அம்மனை நினை த்து வெள்ளை சேலை அணிந்து வீடு தோறும் மடிப்பிச்சை எடுத்து கோவிலில் செலுத்தினால் அவர்கள் நினைத்த காரியம் ஒரு வருடத்தில் நிறைவேறும். இதனால் சுமங்கலி பெண்கள் பலர் வெள்ளை சேலை அணிந்து வழிபாடு நடத்துகின்றனர் என்றனர்.

    • சத்ய நாராயணன் தற்கொலை செய்வதற்கு முன்பு, தனது உறவினா்கள் மற்றும் நண்பா்கள் சிலருக்கு வாட்ஸ்அப் மூலமாக ஆடியோ பதிவு ஒன்றை அனுப்பி உள்ளார்.
    • விசாரணை முடிவில் சத்யநாராயணன் தற்கொலைக்கான காரணம் குறித்து முழு விவரம் தெரியவரும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர்:

    திருப்பூா் பச்சையப்பன் நகா் முதல் வீதியைச் சோ்ந்தவா் நாகராஜ். இவரது மனைவி வேலுமணி. இவா்களது மகன் சத்யநாராயணன் (வயது 21) .கோவையில் உள்ள தனியாா் கல்லூரியில் 3-ம் ஆண்டு பயின்று வந்தாா்.

    நேற்று வீட்டின் மாடியில் உள்ள அறையில் சத்ய நாராயணன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதனிடையே சத்ய நாராயணன் தற்கொலை செய்வதற்கு முன்பு, தனது உறவினா்கள் மற்றும் நண்பா்கள் சிலருக்கு வாட்ஸ்அப் மூலமாக ஆடியோ பதிவு ஒன்றை அனுப்பி உள்ளார்.

    அதில், ஒரு மாணவரின் பெயரை குறிப்பிட்டு அவா் தொடா்ந்து மிரட்டுவதாகவும், வகுப்பறையில் வைத்து அடித்ததில் இருந்து தன்னால் தூங்க முடியவில்லை. இது குறித்து கல்லூரியில் புகாா் தெரிவித்தால், வெளி ஆட்களை அழைத்து வந்து என்னை ஏதாவது செய்து விடுவாா்களோ? என்று பயமாக உள்ளது. ஆகவே, தற்கொலை செய்து கொள்ளலாம் என்ற எண்ணம் எனக்கு வருகிறது என பதிவாகியிருந்தது.

    எனவே சத்யநாராயணன் 'ராக்கிங்' காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என பல்வேறு கோணங்களில் போலீசாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

    இது தொடர்பாக 3 மாணவர்களிடம் அதிரடி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விசாரணை முடிவில் சத்யநாராயணன் தற்கொலைக்கான காரணம் குறித்து முழு விவரம் தெரியவரும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • போலீசார் அந்த சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டனர்.
    • விசாரணையில் சிறுமிக்கு டீ மாஸ்டர் பாலியல் தொந்தரவு கொடுத்தது தெரியவந்தது.

    பல்லடம்:

    திருச்சி மாவட்டம் துறையூரை சேர்ந்த செல்வராஜ் என்பவரது மகன் குமார் (வயது 34). இவர் திருப்பூர் மாவட்டம் பொங்கலூரை அடுத்த வேலம்பட்டி பகுதியில் உள்ள ஒரு டீக்கடையில் டீ மாஸ்டராக வேலை செய்து வந்தார். இவர் 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அவினாசிபாளையம் போலீசாரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் அந்த சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில் சிறுமிக்கு டீ மாஸ்டர் பாலியல் தொந்தரவு கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் போக்சோ சட்டத்தில் டீ மாஸ்டர் குமாரை கைது செய்தனர்.

    இதே போல் வடக்கு அவினாசிபாளையம் வேலம்பட்டியைச் சேர்ந்த மகேஷ் குமார் (28) மற்றும் சூலூர் கண்ணம்பாளையத்தைச் சேர்ந்த ராமலிங்கம் என்பவரது மகன் குட்டி என்ற சிரஞ்சீவி (19) ஆகியோரும் அந்த சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக தெரிய வந்தது.

    இதையடுத்து போலீசார் போக்சோ சட்டத்தில் மகேஷ்குமார் மற்றும் குட்டி என்கிற சிரஞ்சீவி ஆகியோரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மேலும் சிலரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

    • கோஷங்களை எழுப்பி தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.
    • 300-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

    திருப்பூர்:

    சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை மற்றும் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்று வரும் பெண்க ளுக்கு எதிரான வன்கொடுமைகளை கண்டித்து திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் குமரன் சிலை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் துணை சபாநாயகரும், திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளருமான பொள்ளாச்சி வி.ஜெய ராமன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.

    இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மேடை அமைக்க காவல்துறையினர் எதிர்ப்பு தெரிவித்ததால் மழையில் நனைந்தபடி அ.தி.மு.க. வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தியதால் போலீசார் ஆர்ப்பாட்டத்தை தடுத்து நிறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அ.தி.மு.க.வினரை கைது செய்தனர்.


    இதைத்தொடர்ந்து அவர்கள் தமிழக அரசுக்கு எதிராகவும் காவல்துறையினருக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பி தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் திருப்பூர் வடக்கு அ.தி.மு.க., சட்டமன்ற உறுப்பினர் விஜயகுமார், திருப்பூர் மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் அன்பகம் திருப்பதி, கொறடா கண்ணப்பன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் பழனிச்சாமி, என். எஸ். நடராஜன், சிவசாமி, மாநகர் மாவட்ட இணை செயலாளர் சங்கீதா சந்திரசேகர், எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளர் வேல்குமார் சாமிநாதன், அம்மா பேரவை செயலாளர் அட்லஸ் லோக நாதன், தொழிற்சங்க செயலாளர் கண்ணபிரான்,

    முன்னாள் கவுன்சிலர் ஆண்டிப்பாளையம் ஆனந்தன், சூர்யா செந்தில், பகுதி செயலாளர்கள் பி.கே.முத்து, ஹரிஹரசுதன், குமார், கருணாகரன், மக்கள் ஜனநாயக முன்னேற்ற கழக நிறுவனத்தலைவர் இப்ராகிம் பாதுஷா உள்ளி ட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட எம்.எல்.ஏ.க்கள் உள்பட 300-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். 

    • பக்தர்கள் ஒளிரும் ஸ்டிக்கர் அணிந்து செல்ல வேண்டும்.
    • விதிகளை பின்பற்றி யாத்திரை மேற்கொள்ள வேண்டும்.

    தாராபுரம்:

    பழனி முருகன் கோவில் தைப்பூச திருவிழா நெருங்கும் நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக கோவிலுக்கு செல்கின்றனர்.

    இந்தநிலையில் ஈரோடு மாவட்டம் பவானி கூடு துறையை சேர்ந்த 80 பக்தர்கள் நேற்று பழனிக்கு பாத யாத்திரையாக புறப்பட்டனர். அவர்கள் இன்று அதிகாலை திருப்பூர் மாவட்டம் தாராபுரம் புறவழிச்சாலை வழியாக வரப்பாளையம் பகுதியில் சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக வந்த கார் தாறுமாறாக ஓடி பாதயாத்திரை பக்தர்கள் கூட்டத்திற்குள் புகுந்தது. இதில் பவானியை சேர்ந்த ராமன் (வயது 54) என்பவர் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    மேலும் வினையன், பொன்னுச்சாமி, சுந்தரம், துரையன், அமுதராஜ் ஆகிய 5 பேர் பலத்த காயமடைந்தனர். அவர்களை பொதுமக்கள் மீட்டு தாராபுரம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.


    பின்னர் மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து தாராபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜய சாரதி,சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


    விபத்தில் சிக்காமல் இருக்க பழனி பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் ஒளிரும் ஸ்டிக்கர் அணிந்து செல்ல வேண்டும் என்று போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இருப்பினும் பக்தர்கள் சிலர் விபத்தில் சிக்கி விடுகின்றனர். எனவே விதிகளை பின்பற்றி யாத்திரை மேற்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தி உள்ளனர்.

    • புதுத்திட்டத்திற்கு மத்திய அரசின் அனுமதி இன்றி சட்டவிரோதமாக எண்ணெய் குழாய்களை பதித்து வருகின்றனர்.
    • விவசாயிகள் போராட்டம் நடத்தாததின் விளைவு மீண்டும் விளைநிலத்திலேயே குழாய் பதிப்பது என்பது அதிகாரிகளின் திட்டமிட்ட சதியாகும் என்றனர்.

    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள சுக்கம்பாளையம், கோடங்கி பாளையம் கிராமங்களில் ஐ.டி.பி.எல். எரிவாயு குழாய் திட்டத்தை விவசாய நிலங்களில் அமைக்காமல் சாலையோரமாக செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள் 36-வது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    கோவை மாவட்டத்தில் கடந்த 1999-ம் ஆண்டு பெட்ரோ நெட் சி.சி.கே. திட்டத்திற்கு அனுபவ உரிமை எடுப்பு செய்ததை குறிப்பிட்டு தற்போது ஐ.டி.பி.எல். திட்டத்தின் கீழ் அதே இடத்தில் எண்ணெய் குழாய்களை பாரத் பெட்ரோலிய நிறுவனம் பதித்து வருகிறது. அதாவது பழைய திட்டத்திற்கு பெறப்பட்ட அனுமதியை வைத்து கொண்டு புதுத்திட்டத்திற்கு மத்திய அரசின் அனுமதி இன்றி சட்டவிரோதமாக எண்ணெய் குழாய்களை பதித்து வருகின்றனர்.

    அனைத்து வகையான எரிவாயு மற்றும் பெட்ரோலிய குழாய் பதிப்பு என்பது சாலையோரமாக மட்டுமே அமைக்க வேண்டும் என மத்திய அரசின் கொள்கை முடிவாக இருக்கும்போது, எப்படி ஏற்கனவே 25 ஆண்டுகளுக்கு முன் கோவை முதல் கரூர் வரை பதிக்கப்பட்ட குழாயின் அருகிலேயே மீண்டும் 70 கிலோமீட்டர் அளவிற்கு மற்றொரு பெட்ரோலிய குழாய் அமைக்க வேலை செய்து வருகின்றனர்.

    கோவை முதல் கர்நாடகாவின் தேவன கொந்தி வரை பெட்ரோலிய குழாய் கொண்டு செல்லும் திட்டத்தில் பெருமளவில் சாலையோரமாக பதிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

    ஆனால் கோவையில் இருந்து முத்தூர் வரை உள்ள 70 கிலோமீட்டர் ஏற்கனவே குழாய் பதிக்கப்பட்டுள்ள விவசாய நிலங்களின் வழியே மீண்டும் பதிக்க திட்டமிட்டு செயல்படுகின்றனர். அன்றே விவசாயிகள் போராட்டம் நடத்தாததின் விளைவு மீண்டும் விளைநிலத்திலேயே குழாய் பதிப்பது என்பது அதிகாரிகளின் திட்டமிட்ட சதியாகும் என்றனர். 

    • போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து சூர்யாவை தேடி வந்தனர்.
    • கைதி சிறையில் இருந்து தப்பிய சம்பவம் தொடர்பாக, சிறையில் பணியில் இருந்த 5 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையம் அருகே ஆர்.டி.ஓ., அலுவலக வளாகத்தில் மாவட்ட கிளை சிறை உள்ளது. நல்லூர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இந்து முன்னணி பிரமுகரை தாக்கி சங்கிலி வழிப்பறி செய்த சம்பவத்தில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பாரதிநகரை சேர்ந்த சூர்யா (வயது 25) என்பவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் கோர்ட்டு உத்தரவுப்படி திருப்பூர் மாவட்ட சிறையில் சூர்யாவை அடைத்தனர்.

    இந்தநிலையில் கடந்த 21-ந்தேதி மாலை, சிறையில் விசாரணை கைதியாக இருந்த சூர்யா சிறையில் இருந்து தப்பினார். மின்தடையை பயன்படுத்தி அவர் தப்பியது தெரியவந்தது. இது குறித்து சிறைச்சாலை அதிகாரிகள் திருப்பூர் வடக்கு போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து சூர்யாவை தேடி வந்தனர். சிறைத்துறை அதிகாரிகள் தலைமையில் தனிப்படை அமைத்தும் தேடி வந்தனர்.

    சம்பவம் பற்றி அறிந்ததும் கோவை மத்திய சிறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் திருப்பூர் வந்து மாவட்ட சிறை அதிகாரிகளிடம் விசாரணை மேற்கொண்டார். விசாரணை கைதி சிறையில் இருந்து தப்பிய சம்பவம் தொடர்பாக, சிறையில் பணியில் இருந்த 5 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

    இதனிடையே சிறைத்துறை தனிப்படையினர், சூர்யாவின் சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டிக்கு சென்று முகாமிட்டு தேடி வந்தனர். அப்போது அங்கு பதுங்கியிருந்த சூர்யாவை மடக்கி பிடித்தனர். பின்னர் அவரை திருப்பூர் அழைத்து வந்த போலீசார், திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    • அமராவதி அணை நீர் நிரம்பி ததும்பும் நிலையில், மீன் பிடிப்பு பாதித்துள்ளது.
    • இரவு நேரங்களில் மீன் பிடிக்கும் பணி தடைபட்டுள்ளது.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள அமராவதி அணை வாயிலாக திருப்பூர், கரூர் மாவட்டங்களில் உள்ள 54,637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. நடப்பாண்டு தென்மேற்கு பருவமழையால் ஜூலை 18-ந்தேதி அணை நிரம்பியது.

    தொடர்ந்து வடகிழக்கு பருவமழையால் கடந்த நவம்பர் 27-ந்தேதி அணை நிரம்பியது. தொடர்ந்து, தற்போது பாசனத்திற்கு நீர் திறக்கப்பட்டு வருகிறது. அணை நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி, மொத்தமுள்ள 90 அடியில் 89.51 அடியாக உள்ளது. அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 263 கனஅடியாகவும், நீர் திறப்பு 250 கனஅடியாகவும் உள்ளது.

    அமராவதி அணை நீர் நிரம்பி ததும்பும் நிலையில், மீன் பிடிப்பு பாதித்துள்ளது. அணையில் மீன் வளர்ச்சிக்கழகம் சார்பில், திலேபியா, மிர்கால், ரோகு உள்ளிட்ட மீன் குஞ்சுகள் இருப்பு செய்து வளர்க்கப்பட்டு மீனவர்கள் வாயிலாக பிடிக்கப்படுகிறது.

    இதற்காக தலா 2 பேரை கொண்ட 20 படகுகள், வலைகள் என 20 குழு மீனவர்கள் உள்ளனர். தற்போது, அணை நிரம்பிய நிலையில் காணப்படுவதோடு, பனிப்பொழிவு அதிகரித்து குளிர் சீதோஷ்ண நிலையும் காணப்படுகிறது.

    இதனால் இரவு நேரங்களில் மீன் பிடிக்கும் பணி தடைபட்டுள்ளது. காலை 10 மணிக்கு துவங்கி மாலை, 5 மணி வரை மட்டுமே, மீனவர்கள் வலை விரித்து மீன் பிடிக்கின்றனர். நீர் இருப்பு அதிகமாக உள்ளதால், குறைந்தஅளவு மட்டுமே மீன் சிக்குகிறது. வழக்கமாக, 300 கிலோ வரை மீன் கிடைத்து வரும் நிலையில், தற்போது 100 கிலோவுக்கும் குறைவாகவே கிடைப்பதாக மீனவர்கள் தெரிவித்தனர்.

    அமராவதி அணை சுற்றுலா தலமாக உள்ளதால், பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். வனத்துறை முதலை பண்ணை, அமராவதி அணை பூங்காவுக்கு வரும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில், மகளிர் சுய உதவி குழு வாயிலாக அமராவதி அணையில் படகு சவாரி செயல்படுத்தப்படுகிறது. பருவமழை பொழிவால், அணை நிரம்பிய நிலையில் உள்ளதால் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி கடந்த ஒரு மாதமாக படகு சவாரி முடங்கி உள்ளது. 

    • போதை ஆசாமி ஒருவர் பஸ்சுக்காக காத்திருந்த இளம்பெண்களிடம் தகராறு செய்ததோடு அத்துமீறியதாக தெரிகிறது.
    • போலீசார் போதை ஆசாமியை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர்.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை மத்திய பஸ் நிலையத்தில் இருந்து சுற்றுப்புற கிராமங்கள், வெளியூர், வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களுக்கு நாள்தோறும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக பஸ் நிலையம் காலை முதல் இரவு வரை பரபரப்பாக காணப்படும்.

    இந்தநிலையில் அங்கு வந்த போதை ஆசாமி ஒருவர் பஸ்சுக்காக காத்திருந்த இளம்பெண்களிடம் தகராறு செய்ததோடு அத்துமீறியதாக தெரிகிறது. ஒரு கட்டத்தில் அவரது அராஜகம் அதிகமாகவே வேறு வழி இல்லாமல் ஓட்டுனர் மற்றும் நடத்துனர்கள் இணைந்து போதை ஆசாமியை பிடித்து உடுமலை புறக்காவல் நிலையத்துக்கு அருகே உள்ள கண்காணிப்பு கேமரா அறையில் அடைத்தனர்.

    இதனால் ஆவேசம் அடைந்த போதை ஆசாமி அறைக்குள் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகள் பதிவாகும் டி.வி.யை உடைத்ததுடன் மது பாட்டில்களையும் உடைத்து வீசியதாக தெரிகிறது.

    இதையடுத்து அங்கு வந்த உடுமலை போலீசார் போதை ஆசாமியை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர். இந்த சம்பவத்தால் உடுமலை மத்திய பஸ் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    ×