என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    கள் இறக்க அனுமதி கோரி மாநிலம் தழுவிய போராட்டத்துக்கு தயாராகும் விவசாயிகள்
    X

    'கள்' இறக்க அனுமதி கோரி மாநிலம் தழுவிய போராட்டத்துக்கு தயாராகும் விவசாயிகள்

    • தென்னை, பனை மரங்களில் கள் இறக்க அனுமதிக்க வலியுறுத்தி 2009-ல் இருந்து போராடி வருகிறோம்.
    • கோவை, திருப்பூர், புதுக்கோட்டை மாவட்டங்களில், போராட்டத்துக்கான விழிப்புணர்வு கூட்டம் நடத்தி வருகிறோம்.

    உடுமலை:

    தமிழகத்தில் மொத்தமாக 4.42 லட்சம் எக்டர் பரப்பளவில் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. பல்லாயிரக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரமாக உள்ள தென்னை சாகுபடியில் நோய்த்தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.

    இப்பிரச்சினைக்கு தீர்வாக தென்னை மரங்களில் இருந்து கள் இறக்க அனுமதிக்க வலியுறுத்தி கடந்த 2009ம் ஆண்டு முதல் கோவை, திருப்பூர் மாவட்ட விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் தென்னை, பனை மரங்களில் இருந்து கள் இறக்க அனுமதிக்க வேண்டியும், கள்ளை உணவு பட்டியலில் சேர்க்க வலியுறுத்தியும் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

    இதற்காக திருப்பூர் மாவட்டம் உடுமலை சுற்றுப்பகுதி கிராமங்களில் தமிழ்நாடு கள் இயக்கம், இந்திய விவசாயிகள் சங்கம் சார்பில் விவசாயிகளை நேரடியாக சந்தித்து திண்ணைக்கூட்டம் நடத்தி வருகின்றனர். இது குறித்து இந்திய விவசாயிகள் சங்க மாநில தலைவர் பெரியசாமி கூறியதாவது:-

    தென்னை, பனை மரங்களில் கள் இறக்க அனுமதிக்க வலியுறுத்தி 2009-ல் இருந்து போராடி வருகிறோம். ஆனால் அரசு கண்டு கொள்ளாததால் தென்னை விவசாயிகள் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர். எவ்வித தீங்கும் இல்லாத கள் விற்பனையால் டாஸ்மாக் வருவாய் பாதிக்கும் என்பதால் அரசு மவுனம் சாதித்து வருகிறது. இதை கண்டித்து மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்பட உள்ளது.

    கோவை, திருப்பூர், புதுக்கோட்டை மாவட்டங்களில், போராட்டத்துக்கான விழிப்புணர்வு கூட்டம் நடத்தி வருகிறோம். இதே நிலை நீடித்தால் வரும் சட்டசபை தேர்தலில் தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., வேட்பாளர்களுக்கு எதிராக பிரசாரம் செய்யவும் திட்ட மிட்டுள்ளோம் என்றனர்.

    Next Story
    ×