என் மலர்
திருப்பூர்
- உணவு தயாரிப்பு கூடத்துக்கு ரூ.3 ஆயிரம் அபராதம்.
- பன்னின் மாதிரி எடுக்கப்பட்டு பகுப்பாய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
திருப்பூர்:
திருப்பூா் காங்கயம் சாலையில் பேக்கரி கடை உள்ளது. இந்தக்கடையில் வாடிக்கையாளா் ஒருவா் கடந்த செவ்வாய் கிழமை குழந்தைக்கு பன் வாங்கிக் கொடுத்துவிட்டு தானும் சாப்பிட்டுக் கொண்டிருந்தாா். அப்போது, பன்னுக்குள் மனித பல் இருந்தது கண்டு அதிா்ச்சியடைந்தார்.
இதுகுறித்து கடையின் உரிமையாளரிடம் கேட்டபோது உரிய பதில் அளிக்கவில்லை என்று தெரிகிறது. இதையடுத்து, கடையின் பின்புறம் உள்ள தயாரிப்புக் கூடத்துக்கு சென்று வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டார். மேலும், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு செல்போன் மூலமாக புகாா் தெரிவித்தார்.
இதையடுத்து உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலா் விஜய லலிதாம்பிகை உத்தரவின்பேரில், உணவுப் பாதுகாப்பு அலுவலா் ஆறுச்சாமி கடையின் உணவுப் பொருட்கள் தயாரிப்பு கூடத்துக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது உணவுப் பொருட்கள் தயாரிப்பு கூடம் சுகாதாரமாக இல்லாதது தெரியவந்தது.
இதையடுத்து கடையின் உணவு தயாரிப்பு கூடத்துக்கு ரூ.3 ஆயிரம் அபராதம் விதித்ததுடன், தற்காலிகமாக சீல்வைத்து மூடினர். மேலும், பல் இருந்த பன்னின் மாதிரி எடுக்கப்பட்டு பகுப்பாய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
குறைபாடுகளை நிவா்த்தி செய்த பின்னா் ஆய்வு நடத்தப்பட்டு பேக்கரி தயாரிப்பு கூடத்துக்கு அனுமதி வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என்று உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் தெரிவித்தனா்.
- அணையில் மொத்தமுள்ள 90 அடியில் 51.12 அடி நீர்மட்டம் உள்ளது.
- அணைக்கு வினாடிக்கு 74 கன அடி நீர்வரத்தும், அணையில் இருந்து பாசனத்திற்கு 170 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள அமராவதி அணை வாயிலாக திருப்பூர், கரூர் மாவட்டத்தில் உள்ள 54,637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. கல்லாபுரம், ராமகுளம், குமரலிங்கம், கண்ணாடிபுத்தூர், சோழமாதேவி, கணியூர், கடத்தூர் ஆகிய 8 ராஜவாய்க்கால் பாசனத்திற்குட்பட்ட 7,520 ஏக்கர் நிலங்களில் இரண்டாம் போகம், சம்பா பருவ நெல் சாகுபடிக்காக வருகிற 30-ந்தேதி வரை அணையில் இருந்து நீர் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும் புதிய ஆயக்கட்டு பாசனத்தின் கீழ் பயன்பெறும், 25,250 ஏக்கர் நிலங்களில் உள்ள நிலைப்பயிர்களை காப்பாற்றும் வகையில் வருகிற 20-ந்தேதி வரை நீர் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் அமராவதி அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளான மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் வறட்சி நிலை காணப்படுவதால் கடந்த 2 மாதமாக அணைக்கு நீர்வரத்து இல்லை. அணையில் இருந்து தொடர்ந்து பாசனத்திற்கு நீர் திறக்கப்படுவதால் அணை நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. அணையில் மொத்தமுள்ள 90 அடியில் 51.12 அடி நீர்மட்டம் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 74 கன அடி நீர்வரத்தும், அணையில் இருந்து பாசனத்திற்கு 170 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.
தாராபுரம் நகராட்சி மற்றும் வழியோர கிராமங்கள் குடிநீர் தேவைக்காக அணை நீராதாரத்தை நம்பியுள்ளதால், கோடை காலத்தை சமாளிக்க முடியாத சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே அணை நீர் நிர்வாகத்தை முறைப்படுத்தவும், பாசன நிலங்களுக்கு உயிர்த்தண்ணீர் மற்றும் குடிநீர் தேவைக்காக இருப்பு வைக்க வேண்டும் என 2 மாவட்ட விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
- அடுத்த சில நிமிடத்தில் அப்பெண் திருப்பூர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார்.
- அரசு பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டரை பயணிகள், பொதுமக்கள் என பலரும் பாராட்டினர்.
திருப்பூர்:
திருப்பூர் பழைய பஸ் நிலையத்தில் இருந்து பல்லடம் வழியாக ஆறாக்குளத்திற்கு அரசு டவுன் பஸ் இயக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் பல்லடம் பஸ் நிலையத்தில் ஏறிய பெண் பயணி ஒருவர் திடீரென உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். சின்னக்கரையை கடந்து செல்லும்போது அவர் மயக்கமடைந்தார். சக பெண் பயணிகள் இது குறித்து கண்டக்டர் சக்திவேலிடம் தெரிவித்தனர்.
அவர் ஆம்புலன்சை தொடர்பு கொண்டதில், தாமதமாகும் என்ற நிலையில், பல்லடம் போக்குவரத்து கழக கிளை மேலாளர் செந்தில்குமாரிடம் இது குறித்து தெரிவித்தார். பஸ்சில் உள்ள பயணிகளை மாற்று பஸ்சில் அனுப்பிவிட்டு மயக்கமடைந்த பயணியை உடனடியாக அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லுமாறு கிளை மேலாளர் உத்தரவிட்டார்.
அதன்படி பயணிகள் வீரபாண்டி பிரிவில் இறக்கி விடப்பட்டனர். பயணித்த சில பெண்கள் மயக்கமடைந்த பெண்மணியை தனியாக விட்டுச்செல்ல மனமின்றி, தாங்களும் மருத்துவமனைக்கு வருவதாக கூறி சென்றனர்.
இதனைத்தொடர்ந்து துரிதகதியில் செயல்பட்ட டிரைவர் ராசு கண்ணன், அரசு பஸ்சை ஆம்புலன்சாக கருதி வேகமாக இயக்கினார். அடுத்த சில நிமிடத்தில் அப்பெண் திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். மின்னல் வேகத்தில் செயல்பட்ட அரசு பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டரை பயணிகள், பொதுமக்கள் என பலரும் பாராட்டினர்.
- அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக அண்ணாமலையை போலீசார் கைது செய்தனர்.
- பல்லடத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கைதை கண்டித்து பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்
தமிழ்நாடு அரசின் டாஸ்மாக் நிறுவனம் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சமீபத்தில் சோதனை நடத்தியது. இந்த சோதனையை தொடர்ந்து, டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடிக்கு மேல் ஊழல் செய்திருப்பதாக அமலாக்கத்துறை அறிக்கை வெளியிட்டது.
இந்த நிலையில், டாஸ்மாக்கில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றம்சாட்டியும், அதனை கண்டித்தும் நேற்று தமிழக பாஜகவினர் (மார்ச் 17) முற்றுகை போராட்டம் நடத்தினர். அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில், திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கைதை கண்டித்து பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அந்த ஆர்ப்பாட்டத்தில், "மோடியின் ஊழல் அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்" என பாஜகவினரே கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
- ஹோலி பண்டிகை வருகிற 14-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது.
- பலர் ரெயில்களில் இருக்கை இல்லாமல் படிகளில் அமர்ந்து சென்றனர்.
திருப்பூர்:
திருப்பூரில் பனியன் சார்ந்த தொழில் நிறுவனங்கள் அதிக அளவில் உள்ளன. இங்கு பீகார், ஒடிசா, மேற்கு வங்காளம் உள்பட பல்வேறு வடமாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலங்களில் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம்.
இந்தநிலையில் வடமாநிலங்களில் ஹோலி பண்டிகை வருகிற 14-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. இதற்காக திருப்பூரில் உள்ள வடமாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதைத்தொடர்ந்து சொந்த ஊர்களுக்கு செல்ல திருப்பூர் ரெயில் நிலையத்தில் வடமாநில தொழிலாளர்கள் குவிந்து வருகின்றனர்.
திருப்பூர் வழியாக செல்லக்கூடிய டாட்டா நகர் மற்றும் தன்பாத் உள்ளிட்ட ரெயில்களில் வடமாநில தொழிலாளர்கள் அதிக அளவில் சென்றனர். பலர் ரெயில்களில் இருக்கை இல்லாமல் படிகளில் அமர்ந்து சென்றனர்.
எனவே வடமாநில தொழிலாளர்களின் வசதிக்கேற்ப வடமாநிலங்களுக்கு கூடுதல் சிறப்பு ரெயில்கள் இயக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
- 6 மணிநேர போராட்டத்திற்கு பிறகு தீ அணைக்கப்பட்டது.
- தீ விபத்து குறித்து போலீசார் விசாரணை.
திருப்பூர்:
திருப்பூர் மணியக்காரம் பாளையம் பகுதியை சேர்ந்தவர் முகமது பயாஸ். இவர் அங்கு பனியன் கழிவுத்துணிகள் குடோன் நடத்தி வருகிறார்.
இந்த குடோனில் நள்ளிரவு 1:30 மணி அளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. பனியன் துணிகள் என்பதால் தீ கொளுந்து விட்டு எரிந்தது. இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக திருப்பூர் தெற்கு மற்றும் வடக்கு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஏராளமான பனியன் கழிவுத்துணிகள் தீப்பற்றி எரிந்ததால் தீயை கட்டுக்குள் கொண்டு வருவதில் சிரமம் ஏற்பட்டது.
இதையடுத்து மேலும் 5-க்கும் மேற்பட்ட டேங்கர் லாரிகளில் தண்ணீர் கொண்டு வரப்பட்டு தீயை அணைக்கும் பணி நடைபெற்றது. 6 மணிநேர போராட்டத்திற்கு பிறகு தீ அணைக்கப்பட்டது.
இருப்பினும் கரும்புகை வெளியேறி வருவதால் அதனை அணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பனியன் கழிவுத்துணிகள்-பொருட்கள் எரிந்து சேதம் அடைந்துள்ளது. தீ விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வெள்ளை பூ விழுந்து அனுமதி கிடைத்தால் ஏற்கனவே உள்ள பொருள் மாற்றப்படுகிறது.
- கடந்த பிப்ரவரி 25-ந்தேதி வைக்கோல் வைத்து பூஜை செய்யப்பட்டது.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அடுத்துள்ள சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோவில் அருணகிரி நாதரால் பாடல் பெற்றது. சிவன்மலை கோவில் சிறப்புகளில் பிரசித்தி பெற்றது ஆண்டவன் உத்தரவு பெட்டியாகும். நாட்டில் ஏற்படும் இன்னல்கள், மகிழ்ச்சிகளை முன்னதாகவே உணர்த்துவதால் மூலவருக்கு காரண மூர்த்தி என்ற பெயர் உள்ளது.
சிவன்மலை ஆண்டவர் பக்தர்களின் கனவில் வந்து, குறிப்பால் உணர்த்தி அது சம்பந்தமான பொருட்களை உத்தரவு பெட்டியில் வைப்பது தொன்று தொட்டு வழங்கி வருகிறது.
பக்தர்கள் கனவில் தோன்றி கூறிய பொருளை பக்தர்கள் கொண்டு வந்தால், மேற்படி பொருளை உத்தரவு பெட்டியில் வைக்கலாமா என சுவாமியிடம் அர்ச்சகர்கள் வெள்ளை மற்றும் சிவப்பு பூ வைத்து உத்தரவு கேட்பர். வெள்ளை பூ விழுந்து அனுமதி கிடைத்தால் ஏற்கனவே உள்ள பொருள் மாற்றப்படுகிறது.
இதுவரை இங்கு மண், துப்பாக்கி, ஏர் கலப்பை, ரூபாய் நோட்டு, நோட்டு புத்தகம், சைக்கிள், அரிசி, மஞ்சள், இளநீர், தங்கம், சர்க்கரை, கணக்கு நோட்டு, பூமாலை, ருத்ராட்சம், இரு இளநீர்கள் என பல்வேறு பொருட்கள் வைத்து பூஜை செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு வைத்து பூஜை செய்யப்படும் பொருள் சமுதாயத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி வந்திருக்கிறது. கடந்த டிசம்பர் மாதம் 17ந் தேதி முதல் திருவோட்டில் விபூதி,ருத்ராட்சம் வைத்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது. கடந்த பிப்ரவரி 25-ந்தேதி வைக்கோல் வைத்து பூஜை செய்யப்பட்டது.
இந்நிலையில் திருப்பூர் மாவட்டம் காங்கேயம் ஆறுதொழுவு பகுதியை சேர்ந்த தங்கவேல் என்ற பக்தரின் கனவில் கற்பூரம் மற்றும் பிரம்பு வைக்க உத்தரவானது. இதையடுத்து இன்று முதல் ஆண்டவன் உத்தரவு பெட்டியில் கற்பூரம், பிரம்பு வைத்து பூஜை செய்யப்படுகிறது.
இது பற்றி கோவில் சிவாச்சாரியார்கள் கூறுகையில், சிவன்மலை ஆண்டவர் உத்தரவு பெட்டியில் எந்த பொருள் வைத்து பூஜை செய்யப்படுகிறதோ அந்த பொருள் சமுதாயத்தில் ஏதாவது ஒரு வகையில் தாக்கத்தை ஏற்படுத்தும். இன்று முதல் கற்பூரம், பிரம்பு வைத்து பூஜை செய்யப்படுகிறது. இதன் தாக்கம் போகப்போகத் தான் தெரியவரும் என்றனர்.
- காரை மறித்து 4 பேர் கொண்ட கும்பல் போலீசார் எனக்கூறி ரூ.1 கோடியை பறித்து கொண்டு தப்பியோடி உள்ளனர்.
- காங்கேயம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காங்கேயம்:
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அடுத்த சம்மந்தம்பாளயைம் பிரிவு அருகே காரை வழி மறித்து நகை வியாபாரியிடம் ரூ.1 கோடி பறித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கரூரை சேர்ந்த நகை வியாபாரி வெங்கேடஷ் (50) நகை வாங்க காரில் கோவைக்கு சென்று கொண்டிருந்த போது சம்மந்தம்பாளையம் பிரிவு அருகே காரை மறித்து 4 பேர் கொண்ட கும்பல் போலீசார் எனக்கூறி ரூ.1 கோடியை பறித்து கொண்டு தப்பியோடி உள்ளனர்.
ரூ.1 கோடியை பறித்து சென்ற சம்பவம் குறித்து காங்கேயம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- இந்துகளின் வாக்கு வங்கி ஒன்றிணைக்கப்பட வேண்டும்.
- வக்பு வாரிய மசோதாவை நிறைவேற்றி நடைமுறைப்படுத்த வேண்டும்.
தாராபுரம்:
தாராபுரத்தில் இந்து மக்கள் கட்சி மாநில செயற்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் கட்சியின் மாநில தலைவர் அர்ஜூன் சம்பத் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
2026 தேர்தலுக்குள் இந்து மக்கள் கட்சி தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் கிளைகள் அமைத்து கட்சியை வலிமைப்படுத்த நடவடிக்கையில் ஈடுபட உள்ளது.
வக்பு வாரிய சொத்து என தாராபுரம், அலங்கியம் திருப்பரங்குன்றம் உள்பட பல பகுதிகளில் இந்துக்களின் விவசாய நிலங்களை அபகரிக்க முயற்சி நடக்கிறது.
திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தர்காவை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும். வக்பு வாரிய மசோதாவை நிறைவேற்றி நடைமுறைப்படுத்த வேண்டும். தமிழகத்தில் ஒரே நாளில் ஒன்பது பாலியல் வன்கொடுமைகள் நடைபெறுவது வேதனை அளிக்கிறது.
2026 சட்டமன்ற தேர்தலில் இந்துகளின் வாக்கு வங்கி ஒன்றிணைக்கப்பட வேண்டும். தேசிய ஜனநாயக முன்னணியில் அ.தி.மு.க., சீமான், பா.ஜ.க. உள்பட அனைத்துக் கட்சிகளும் ஒன்று திரண்டு ஒரு அணியில் நின்று தி.மு.க. அணியினரை தோற்கடிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தமிழகம் முழுவதும் மும்மொழி கொள்கையை ஆதரித்து 5-ந்தேதி முதல் பா.ஜ.க. சார்பில் கையெழுத்து இயக்கம் தொடங்க உள்ளோம்.
- தொகுதி மறுசீரமைப்பு பற்றிய பிரச்சனையை எழுப்பியது முதலமைச்சர் தான்.
சென்னை :
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வருகிற 5-ந்தேதி நடைபெற உள்ள அனைத்துக்கட்சி கூட்டத்தில் தமிழக பா.ஜ.க. பங்கேற்காது என்று அக்கட்சி மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். மேலும் கூட்டத்தில் பங்கேற்காததற்கான காரணங்களை, முதலமைச்சருக்கு எழுதியுள்ள கடிதத்தில் விவரித்துள்ளார்.
இதையடுத்து, திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை கூறுகையில், தமிழகம் முழுவதும் மும்மொழி கொள்கையை ஆதரித்து 5-ந்தேதி முதல் பா.ஜ.க. சார்பில் கையெழுத்து இயக்கம் தொடங்க உள்ளோம். தொகுதி மறுவரையறை விகிதாச்சார அடிப்படையில் மேற்கொள்ளப்படும் என அமித்ஷா தெளிவுப்படுத்தி உள்ளார். தொகுதி மறுசீரமைப்பு பற்றிய பிரச்சனையை எழுப்பியது முதலமைச்சர் தான். அப்பிரச்சனைக்கு நாங்கள் முற்றுப்புள்ளி வைத்துள்ளோம். இந்தி திணிப்பு நாடகத்தை மக்கள் ஏற்க மறுத்ததால் தொகுதி மறுவரையறை குறித்து பேசி திசை திருப்ப முயற்சி. மத்திய அரசு நிதி அளிக்கவில்லை என இன்னும் எவ்வளவு காலம் தான் பொய்களை பரப்ப முடியும் கூறினார்.
- கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் 10 ஆண்டு காலம் எந்த வரியும் உயர்த்தப்படவில்லை.
- தமிழகத்தில் இன்று நல்ல திட்டங்கள் எதுவும் இல்லை.
திருப்பூர்:
திருப்பூரில் அ.தி.மு.க. பொதுக்கூட்டம் நடந்தது. இதில் திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ., பங்கேற்று பேசியதாவது:-
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கொண்டு வந்து நிறுத்தப்பட்ட அனைத்து திட்டங்களையும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி அமைந்ததும் மீண்டும் செயல்படுத்தப்படும்.
இன்று மின் கட்டணம், வீட்டு வரி, சொத்து வரி உயர்ந்து விட்டது. பாதாள சாக்கடை வரி 129 சதவீதம் உயர்ந்துவிட்டது. நாய், பூனை வளர்த்தாலும் பூனை குட்டி போட்டாலும் வரி போடுகிறார்கள்.
கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் 10 ஆண்டு காலம் எந்த வரியும் உயர்த்தப்படவில்லை. ஆனால் இன்று வீட்டு வரி 100 சதவீதம் உயர்த்தப்பட்டு விலைவாசியும் உயர்ந்து விட்டது.
தமிழகத்தில் இன்று நல்ல திட்டங்கள் எதுவும் இல்லை. இன்னும் 10 அமாவாசையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழகத்தில் நல்லாட்சி அமையும். மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் அனைத்து மகளிருக்கும் மாதம் தோறும் ரூ.2000 வழங்கப்படும் என்றார்.
- பின்னலாடை தயாரிப்புக்கு மிக முக்கிய மூலப்பொருளாக நூல் இருந்து வருகிறது.
- நூல் விலை மற்றும் மூலப்பொருட்களின் விலையை கருத்தில் கொண்டு ஆடைகளின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.
திருப்பூர்:
திருப்பூரில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பின்னலாடை நிறுவனங்கள் மற்றும் அதனை சார்ந்த ஜாப் ஒர்க் நிறுவனங்கள் செயல்படுகின்றன. பின்னலாடை தயாரிப்புக்கு மிக முக்கிய மூலப்பொருளாக நூல் இருந்து வருகிறது. தொழில்துறையினர் தங்களுக்கு ஆர்டர்கள் கிடைத்தவுடன், அதற்கேற்ப, நூல்களை மொத்தமாக கொள்முதல் செய்து ஆடைகளை தயாரித்து வருவது வழக்கம். நூல் விலை மற்றும் மூலப்பொருட்களின் விலையை கருத்தில் கொண்டு ஆடைகளின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. மார்ச் மாதத்துக்கான நூல் விலையை நூற்பாலைகள் இன்று அறிவித்தன. இதில் நூல் விலையில் மாற்றமில்லை. இதனால் தொழில் துறையினர் மகிழ்ச்சி அடைந்தனர்.
அதன்படி கிலோவுக்கு 10-ம் நம்பர் கோம்டு நூல் ரூ.175, 16-ம் நம்பர் ரூ.185, 20-ம் நம்பர் கோம்டு நூல் ரூ.243, 24-ம் நம்பர் ரூ.255, 30-ம் நம்பர் ரூ.265, 34-ம் நம்பர் ரூ.283, 40-ம் நம்பர் ரூ.303, 20-ம் நம்பர் செமி கோம்டு ரூ.240, 24-ம் நம்பர் ரூ. 250, 30-ம் நம்பர் ரூ.260, 34-ம் நம்பர் ரூ. 273, 40-ம் நம்பர் ரூ.293-க்கும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.






