என் மலர்tooltip icon

    திருப்பூர்

    • பொதுமக்கள் 50-க்கும் மேற்பட்டோர் பயணித்தனர்.
    • சில பயணிகள் பஸ்சில் இருந்து தூக்கி வீசப்பட்டதில் பலத்த காயம்.

    திருப்பூர்:

    திருப்பூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து ஈரோட்டிற்கு இன்று காலை தனியார் பஸ் ஒன்று புறப்பட்டது. இதில் ஈரோடு மாவட்டம் பெருந்துறை பகுதியில் உள்ள கல்லூரிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள் மற்றும் பொதுமக்கள் 50-க்கும் மேற்பட்டோர் பயணித்தனர்.

    காலை 8-30 மணியளவில் திருப்பூர் மாவட்டம் செங்கப்பள்ளி பல்லகவுண்டன்பாளையம் கோவை-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் தாறுமாறாக ஓடி, சாலையோரம் கவிழ்ந்தது.


    இதில் பஸ்சில் பயணித்த 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்தில் சிக்கிய 5 கல்லூரி மாணவர்களின் கை-கால்கள் துண்டாகியது. அவர்கள் பெருந்துறை அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 2 பேர் சுய நினைவு இல்லாமல் உள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    மேலும் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் பலத்த காயமடைந்தனர். சில பயணிகள் பஸ்சில் இருந்து தூக்கி வீசப்பட்டதில் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடினர்.


    இது குறித்த தகவல் அறிந்ததும் ஊத்துக்குளி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் பொதுமக்கள் உதவியுடன் காயமடைந்த பயணிகளை மீட்டு சிகிச்சைக்காக பெருந்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்ஸ்கள் மூலம் அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த விபத்து காரணமாக செங்கப்பள்ளி கோவை-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அப்பகுதியில் ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர்.

    இதையடுத்து போலீசார் போக்குவரத்தை சீரமைத்தனர். சுமார் ஒருமணி நேரத்திற்கு பிறகு அங்கு போக்குவரத்து சீரானது.


    டிரைவர் அதிவேகமாக பஸ்சை இயக்கியதால் இந்த விபத்து நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து பஸ் டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் விபத்தில் பலியான 2 பேரின் விவரம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் கல்லூரி மாணவர்கள் என்பதும், அதில் ஒருவர் விருமாண்டம்பாளையம் பகுதியை சேர்ந்த சந்திரன் என்பவரின் மகன் பெரியசாமி (வயது 20), மற்றொருவர் ஹரிகிருஷ்ணன் என்பது தெரியவந்தது.

    பெரியசாமி செங்கப்பள்ளியில் இருந்து பஸ்சில் ஏறியுள்ளார். அடுத்த 5 நிமிடத்தில் அவர் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். விபத்து குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • போலீசார் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • போலீசார் ரோந்து பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

    திருப்பூர்:

    திருப்பரங்குன்றம் மலையை காக்க கோரி இந்து முன்னணி உள்ளிட்ட இந்து அமைப்புகள் சார்பில் இன்று திருப்பரங்குன்றத்தில் அறப்போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த போராட்டத்திற்கு போலீசார் தடை விதித்தனர். மேலும் திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    இருப்பினும் போலீசார் தடையை மீறி திருப்பரங்குன்றத்திற்கு செல்வோம் என இந்து அமைப்புகள் தெரிவித்தன. இதையடுத்து போராட்டக்காரர்கள் அங்கு செல்வதை தடுக்கும் வகையில் தமிழகம் முழுவதும் நேற்றிரவு முதல் போலீசார் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் திருப்பூரை சேர்ந்தவர் என்பதால் அவரது தலைமையில் இந்து முன்னணியினர் திருப்பரங்குன்றம் செல்வார்கள் என்பதால் திருப்பூர் மாநகர் பகுதியில் நேற்றிரவு முதல் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    ஒரு சோதனை சாவடியில் 6 போலீசார் வீதம் வாகனங்களை சோதனை செய்தனர். வாகனங்களில் மொத்தமாக செல்பவர்களை விசாரித்து அதன்பிறகே அனுப்பி வைத்தனர். நேற்றிரவு முதல் இன்று அதிகாலை வரை விடிய விடிய வாகன சோதனை நடைபெற்றது. இன்று காலையும் சோதனை தொடர்ந்தது.

    திருப்பூர் மாநகரில் இருந்து வெளியேறும் கார், வேன் மற்றும் பேருந்துகளில் செல்பவர்கள் எங்கே செல்கிறார்கள் என்ற விவரம் சேகரிக்கப்பட்டு அவர்களது ஆவணங்களை சரிபார்த்து அனுப்பி வைத்தனர். போராட்டத்திற்கு பங்கேற்க செல்வதாக கருதப்பட்டவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.

    மேலும் முருக பக்தர்களுடன் இந்து முன்னணியின் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் மற்றும் இந்து அமைப்பைச் சார்ந்தவர்கள் திருப்பரங்குன்றம் செல்வதற்கு வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்டதால் இந்து முன்னணியின் மாநில தலைவர் காடேஸ்வர சுப்பிரமணியம் வீடு-அலுவலகம் அமைந்துள்ள திருப்பூர் பெரிச்சிபாளையம் பகுதியில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் காடேஸ்வரா சுப்பிரமணியம் வீட்டில் சிறைவைக்கப்பட்டார்.

    மாநகர போலீஸ் துணை கமிஷனர் ராஜராஜன் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். திருப்பரங்குன்றம் செல்ல முயலும் பட்சத்தில் அவர் கைது செய்யப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் அவர் கைது செய்யப்பட்ட பிறகு மாநகரின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடைபெறும் என்ற தகவலால் பல்வேறு பகுதிகளில் போலீசார் ரோந்து பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

    • மருத்துவ கழிவுகளை ஏற்றி வந்த கேரள பதிவு எண் கொண்ட லாரி, அதில் வந்த 3 பேரை பொதுமக்கள் சிறை பிடித்தனர்.
    • அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே வேலப்பக்கவுண்டம் பாளையத்தை சேர்ந்த பொன்னுசாமி என்பவரின் தோட்டத்தில் தொடர்ச்சியாக கேரள மருத்துவக் கழிவுகள் எரியூட்டப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.


    இந்த நிலையில், மருத்துவ கழிவுகளை ஏற்றி வந்த கேரள பதிவு எண் கொண்ட லாரியையும், அதில் வந்த 3 பேரையும் பொதுமக்கள் சிறை பிடித்தனர்.


    மேலும், குடோனில் உள்ள அனைத்து கழிவுகளையும் உடனடியாக அகற்ற வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர். இது தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பொங்கல் வைத்து குடும்பத்துடன் வழிபடுவார்கள்.
    • குழிக்குள் வைத்து மூடப்படுவதால் அம்மனுக்கு 'மூடி அம்மன்' என்று பெயர்.

    பல்லடம்:

    இறைவனை வழிபடுவதில் பல்வேறு விதமான பழக்க வழக்கங்கள் இருந்து வருகிறது. இதில் நேர்த்திக்கடன் செலுத்தும் விதமாக தீ மிதித்தல், முடி காணிக்கை, எடைக்கு எடை துலாபாரம் கொடுத்தல் உள்ளிட்ட பல்வேறு விதமான வழிபாடுகள் உள்ளது.

    அந்த வகையில், திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை சேர்ந்த முழுக்காதான் குலத்தை சேர்ந்தவர்கள், குழி அமைத்து அதில் அம்மன் சாமியை வைத்து மூடி அம்மன் என்று வழிபாடு செய்து வருகின்றனர்.

    அதன்படி பல்லடம் அருகே உள்ள கோடங்கிபாளையம் ஊராட்சி சங்கோதிபாளையத்தில் மூடி அம்மன் வழிபாடு நடைபெற்றது. இதுகுறித்து முழுக்காதான் குலத்தைச் சேர்ந்தவர்கள் கூறியதாவது:-

    எங்கள் குல குழந்தைகளின் காதணி விழாவுக்கு சுமார் 3 நாட்கள் முன்பாக மூடி அம்மனை வழிபடுவது வழக்கம். காதணி விழா குடும்பத்தினர், குழிக்குள் உள்ள மூடி அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம் செய்து பழம், பூ , தேங்காய், வெற்றிலை, பாக்கு ஆகியவற்றுடன் பொங்கல் வைத்து குடும்பத்துடன் வழிபடுவார்கள்.

    மூடி அம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபட்ட பின் அனைவருக்கும் பிரசாதம் வழங்கி, வழக்கம்போல் குழி மூடப்படும். இந்த விழாவானது அம்மனிடம் உத்தரவு கேட்கப்படும் நிகழ்வு.

    இதுபோல் அம்மனிடம் உத்தரவு கேட்டு குடும்ப விழாக்கள் செய்தால் அவை எந்த இடர்பாடும் இன்றி நல்லபடியாக நடக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது. இதுகாலம் காலமாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மூடி அம்மனை வழிபட்ட பின்னர் நவ தானியங்கள் வைத்து வழிபாடு செய்து குழியை மூடி விடுவார்கள்.

    பின்னர் வேறு ஏதேனும் திருமணம், காதணி விழா உள்ளிட்ட விழா செய்யும் குடும்பத்தினர் மூடி அம்மனிடம் உத்தரவு கேட்பதற்காக மீண்டும் வழிபாடு நடக்கும். அதுவரை மூடி அம்மன் குழிக்குள் இருப்பார். குழிக்குள் வைத்து மூடப்படுவதால் அம்மனுக்கு 'மூடி அம்மன்' என்று பெயர். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • பாதிக்கப்பட்ட சிவன்மலையை சேர்ந்த நூல்மில் உரிமையாளர் செல்வராஜ் என்பவர் காங்கயம் போலீசில் புகார் செய்தார்.
    • தலைமறைவாக உள்ள கஜேந்திரனை போலீசார் தேடி வருகின்றனர்.

    காங்கயம்:

    திருப்பூர் மாவட்டம் காங்கயத்தை அடுத்த சிவன்மலை குருகத்தி பகுதியை சேர்ந்தவர் கஜேந்திரன் (வயது 55). நிதி நிறுவன உரிமையாளர். மேலும் கந்து வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழிலும் செய்து வந்தார். அவர் கொடுக்கும் பணத்திற்கு வட்டிக்கு மேல் வட்டி போட்டு ராக்கெட் வட்டி விகிதத்தில் கடன் வசூலித்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.

    சிவன்மலையில் வசித்து வரும் பல குடும்பத்தினர் கஜேந்திரனிடம் பணம் பெற்றதாகவும், பணம் பெற்றவர்களிடம் வசூலிக்கும் பணத்தை அசலில் கழிக்காமல் வட்டியில் கழிப்பதாகவும், கடன் பெற்றவர்களை மிரட்டி பத்திரங்களை எழுதியும் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

    இதில் பாதிக்கப்பட்ட சிவன்மலையை சேர்ந்த நூல்மில் உரிமையாளர் செல்வராஜ் என்பவர் காங்கயம் போலீசில் புகார் செய்தார்.

    இதனைதொடர்ந்து காங்கயம் போலீசார் கஜேந்திரன் மீது கந்து வட்டி வழக்குப்பதிவு செய்தனர். மேலும் காங்கயம் துணை போலீஸ் சூப்பிரண்டு மாயவன், இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் மற்றும் போலீசார் சம்பந்தப்பட்ட கஜேந்திரன் என்பவரது வீட்டிற்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர்.

    இதில் கஜேந்திரன் வீட்டில் இருந்து 73 நிலம், வீடு, தொழில் சார்ந்த பத்திரங்கள், பணம் குறிப்பிடாத வங்கி காசோலை-6, ஆதிதிராவிடருக்கு வழங்கப்பட்ட இலவச வீட்டு மனை பட்டாக்கள்-2 மற்றும் வாகன உரிமம் புத்தகம் ஆகியவற்றை அதிரடியாக கைப்பற்றினர். அவற்றின் மதிப்பு ரூ.10 கோடி இருக்கும் என்று போலீசார் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து தலைமறைவாக உள்ள கஜேந்திரனை போலீசார் தேடி வருகின்றனர்.

    • வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • கல்லூரி நிர்வாகம் தொடர்ந்து அலட்சியம் காட்டி வருகின்றது.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அரசு கலைக்கல்லூரியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்தநிலையில் கல்லூரியில் அடிப்படை வசதிகளான குடிநீர் குழாய், கழிப்பிடம் மற்றும் விளையாட்டு மைதானம் பராமரிப்பு இல்லாமல் உள்ளதாக கல்லூரி நிர்வாகத்திடம் மாணவர்கள் புகார் செய்தனர்.

    ஆனால் சீரமைக்க நடவடிக்கை எடுக்காததால் இன்று காலை கல்லூரி மாணவர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து மாணவர்கள் கூறியதாவது:-

    மாணவர்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவதில் கல்லூரி நிர்வாகம் தொடர்ந்து அலட்சியம் காட்டி வருகின்றது. எனவே இனியும் அலட்சியம் காட்டாமல் குடிநீர் மற்றும் கழிப்பிடம் வசதியை உடனே செய்து தர வேண்டும். இல்லாவிடில் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • தொடர்ந்து மாநகர் மற்றும் மாவட்டம் முழுவதும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
    • திருமுருகன்பூண்டி பகுதியில் 4 பேரை கைது செய்தனர்.

    திருப்பூர்:

    தமிழகத்திற்குள் ஊடுருவி உள்ள வங்கதேசத்தினர், மேற்கு வங்க மாநிலத்தவர் போல் போலி ஆவணங்கள் தயார் செய்து திருப்பூர் பனியன் நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர்.

    அவர்களை கைது செய்ய உள்ளூர் போலீசார் மற்றும் என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஒரு வாரத்தில் திருப்பூர் மாவட்டத்தில் மட்டும் 63 வங்கதேசத்தினர் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து மாநகர் மற்றும் மாவட்டம் முழுவதும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவின் பேரில் பனியன் நிறுவனங்களில் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். நல்லூர் போலீஸ் நிலையத்திற்குட்பட்ட வள்ளியம்மை நகர், ராக்கியாபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பனியன் நிறுவனங்களில் சோதனை செய்த போது அங்கு பணியில் ஈடுபட்டிருந்த வங்கதேசத்தினர் 11 பேரை கைது செய்தனர். திருமுருகன்பூண்டி பகுதியில் 4 பேரை கைது செய்தனர். இவர்கள் போலி ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்களை தயாரித்து திருப்பூர் பனியன் நிறுவனங்களில் பணியாற்றி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. திருப்பூரில் பதுங்கியிருந்த வங்கதேசத்தினர் மேலும் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இது குறித்து போலீசார் கூறுகையில், பிப்ரவரி மாத இறுதிக்குள் வங்கதேசத்தினர் ஒருவர் கூட தமிழகத்தில் இல்லை என்பதை உறுதி செய்யும் வகையில் நடவடிக்கையை தீவிரப்படுத்தி உள்ளோம் என்றனர். 

    • வீட்டின் பின்புறம் உள்ள ஒரு அறையில் 10 லிட்டர் கள்ளச்சாராய ஊறல் இருப்பதை கண்டுபிடித்து அழித்தனர்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அவினாசி:

    திருப்பூர் மாவட்டம், குன்னத்தூர் அருகே உள்ள சின்னியம்பாளையம் பகுதியில் ஒருவர் வீட்டில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாகவும் கஞ்சா செடிகள் வளர்ப்பதாகவும் அவிநாசி மதுவிலக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோக் மற்றும் போலீசார் குன்னத்தூரில் உள்ள சின்னசாமி (வயது 45) என்பவரது வீட்டில் அதிரடியாக சோதனை செய்தனர்.

    அப்போது வீட்டின் பின்புறம் உள்ள ஒரு அறையில் 10 லிட்டர் கள்ளச்சாராய ஊறல் இருப்பதை கண்டுபிடித்து அதனை அழித்தனர். மேலும் அதன் அருகே இரண்டு கஞ்சா செடிகளை வளர்ப்பது கண்டுபிடிக்கப்பட்டு அதனையும் அழித்தனர்.

    தொடர்ந்து சின்னச்சாமியிடம் விசாரணை நடத்திய போது தனது சொந்த பயன்பாட்டிற்காக கள்ளசாராயம் காய்ச்சியதாகவும் கஞ்சா செடி வளர்த்ததாகவும் தெரிவித்தார். இதனையடுத்து அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • அதிமுகவுக்கு 'ரெய்டு' மூலம் நெருக்கடி கொடுக்க வேண்டிய தேவை பாஜகவுக்கு இல்லை.
    • எடப்பாடி பழனிசாமியுடன் நேரடியாக பேசினாலே பா.ஜ.க., அ.தி.மு.க. கூட்டணி ஏற்பட்டு விடும்

    நெல்லை வடக்கு மாவட்ட பா.ஜ.க. சார்பில் சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.

    அந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின்பு செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாஜக எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன், "வருமான வரித்துறை சோதனை, அமலாக்கத்துறை சோதனை மூலமாக கூட்டணிக்கு வரும்படி எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடி எதுவும் கொடுக்கப்படவில்லை. 'ரெய்டு' மூலம் நெருக்கடி கொடுக்க வேண்டிய தேவை இல்லை. எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியுடன் நேரடியாக பேசினாலே பா.ஜ.க., அ.தி.மு.க. கூட்டணி ஏற்பட்டு விடும்" என்று தெரிவித்தார்.

    நயினார் நாகேந்திரனின் இந்த பேச்சு தமிழக அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இந்நிலையில், அதிமுக- பாஜக கூட்டணி குறித்து நயினார் நாகேந்திரன் பேசியது தொடர்பாக திருப்பூரில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

    அதற்கு பதில் அளித்த அவர், "ரெய்டு விடுவதற்கெல்லாம் நயினார் நாகேந்திரன் அண்ணனுக்கு எந்த அதிகாரமும் இல்லை" என்று தெரிவித்தார்.

    • பிரதமர் மோடி திருவள்ளுவரை உலகம் முழுவதும் கொண்டு செல்கிறார்.
    • தி.மு.க. என்றாலே நாடக கம்பெனிதான்.

    திருப்பூர்:

    திருப்பூர் கணக்கம்பாளையத்தில் காமராஜர் கலாம் அறக்கட்டளை சார்பில் 1330 திருக்குறளையும் 1330 மாணவ, மாணவிகள் மழலை மொழியில் கூறி உலக சாதனை படைக்கும் திருக்குறள் உலக சாதனை விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பா.ஜ.க. கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை பேசியதாவது:-

    76-வது குடியரசு தின வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். குழந்தைகள் சூழ்ந்திருக்கும் உலகம், பெரியவர்கள் உலகம் என இரண்டு உள்ளது. குழந்தைகள் சூழ்ந்திருக்கும் உலகம் அன்பு நிறைந்த உலகம். 1330 குழந்தைகள் மட்டுமல்ல. தந்தை, தாய், பாட்டி, தாத்தா என அனைவரின் சான்றாக ஒரு குழந்தை வந்துள்ளது.

    திருக்குறள் குறித்து எவ்வளவு பேசினாலும் பத்தாது. உலகத்தில் எல்லோரும் திருக்குறளை வாழ்வியல் பொதுமறை நூலாக பார்க்கின்றனர். உங்கள் வாழ்வின் பிரச்சனைகளுக்கான தீர்வு திருக்குறளில் உள்ளது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

    இன்று குடியரசு தினம். நம்மை நாம் எப்படி பாதுகாப்பது என அரசியலமைப்பு சட்டமாக தொகுத்து நமக்கு நாமே வழங்கிய நாள் குடியரசு தினம். மகாத்மா காந்திக்கு லியோ டால்ஸ்டாய் எழுதிய கடிதத்தில் திருக்குறளை மேற்கொள் காட்டி உள்ளார். திருக்குறள் என்ற வார்த்தைக்கு பதிலாக இந்து குறள் என சொல்லி உள்ளார். பிரதமர் மோடி திருவள்ளுவரை உலகம் முழுவதும் கொண்டு செல்கிறார். உலக திருவள்ளுவர் கான்பரன்ஸ் டெல்லியில் நடைபெற உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில்,

    தி.மு.க. என்றாலே நாடக கம்பெனிதான். வேங்கைவயல் விவகாரத்தில் தமிழக காவல்துறை எழுதியுள்ள வசனம், திரைக்கதை கருணாநிதி எழுதுவதை மிஞ்சும் அளவிற்கு உள்ளது. இத்தனை நாட்கள் இல்லாத ஆடியோ வீடியோ வெளியே வருகிறது. இதனை மக்கள் நம்ப மாட்டார்கள். இது தி.மு.க. எழுதியுள்ள கதை, வசனம். ஏன்? சி.பி.ஐ. விசாரணையை தடுக்கிறீர்கள். கூட்டணி கட்சிகளே இதனை ஒப்புக்கொள்ளவில்லை என்றார்.

    நயினார் நாகேந்திரன் எடப்பாடி பழனிசாமி குறித்து பேசிய கருத்துக்கு, நயினார் நாகேந்திரனுக்கு ரெய்டு விட அதிகாரம் இல்லை என பதில் அளித்தார். 

    • அனைவருடைய நோக்கமும் கட்சியை வளர்ப்பது மட்டுமே.
    • வேங்கைவயல் விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணையை தடுப்பது ஏன்?

    திருப்பூர்:

    திருப்பூரில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * பா.ஜ.க.வில் யாருடனும் கருத்து வேறுபாடு இல்லை.

    * அனைவருடைய நோக்கமும் கட்சியை வளர்ப்பது மட்டுமே.

    * வேங்கைவயல் விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணையை தடுப்பது ஏன்?

    * வேங்கைவயல் விவகாரத்தில் காவல்துறையின் கதை, திரைக்கதையை யாரும் நம்ப மாட்டார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • போதை ஊசிகளையும் மற்றவர்களுக்கு விற்பனை செய்ததும் கண்டறியப்பட்டது.
    • வழக்குப்பதிவு செய்து முகமது பைசல், சதாம் உசேன் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

    திருப்பூர்:

    திருப்பூரில் வலி நிவாரண மாத்திரைகளை போதைக்கு பயன்படுத்துவது சமீப காலமாக அதிகரித்து வருகிறது. மாநகரம் முழுவதும் போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.

    இந்தநிலையில் பழனியம்மாள் பள்ளிக்கு எதிரே உள்ள காட்டுப்பகுதியில் 2 பேர் சந்தேகத்துக்கு இடமாக அமர்ந்து இருந்தனர். அங்கு சென்ற தெற்கு போலீசார் 2 பேரையும் பிடித்தனர். அவர்களிடம் போதை ஊசி மற்றும் வலி நிவாரண மாத்திரைகள் இருந்தன.

    விசாரணையில் அவர்கள் பெரிய தோட்டத்தை சேர்ந்த முகமது பைசல்(வயது 25), முதலி பாளையம் ஹவுசிங் யூனிட் பகுதியை சேர்ந்த சதாம் உசேன்(35) என்பதும், பனியன் நிறுவனத்தில் டெய்லராக வேலை செய்து வரும் இவர்கள், ஆன்லைன் மூலமாக வலி நிவாரண மாத்திரைகளை மொத்தமாக வாங்கி அதில் இருந்து போதை மருந்து தயாரித்து ஊசி மூலம் உடலில் ஏற்றி போதைக்கு பயன்படுத்தியது தெரியவந்தது.

    மேலும் போதை ஊசிகளையும் மற்றவர்களுக்கு விற்பனை செய்ததும் கண்டறியப்பட்டது. அவர்களிடம் இருந்து 30 மாத்திரைகள் மற்றும் போதை ஊசிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இது குறித்து வழக்குப்பதிவு செய்து முகமது பைசல், சதாம் உசேன் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் போதை ஊசி வாங்கியவர்களின் விவரங்களை பெற்று, போலீசார் ரகசியமாக விசாரித்து வருகிறார்கள்.

    ×