என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

திருப்பூரில் விடிய விடிய கொட்டித்தீர்த்த கனமழை: 100 வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது
- மழையின் காரணமாக மாநகரின் பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தது.
- கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்த நிலையில் தற்போது பெய்த மழையால் திருப்பூரில் வெப்பத்தின் தாக்கம் குறைந்து குளிர்ச்சி நிலவி வருகிறது.
திருப்பூர்:
திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இந்த நிலையில் நேற்றிரவு 7 மணியளவில் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான இடங்களில் குளம் போல் தண்ணீர் தேங்கியது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதியடைந்தனர். சுமார் ஒரு மணி நேரம் இடைவிடாமல் பலத்த மழை பெய்த நிலையில் அதன்பிறகு நின்றது.
பின்னர் இரவு 10 மணியளவில் பெய்ய ஆரம்பித்த மழை இன்று அதிகாலை 4 மணி வரை இடைவிடாமல் பெய்தது. மாநகர் மற்றும் மாவட்டம் முழுவதும் இந்த மழை நீடித்தது. குறிப்பாக திருப்பூர் மாநகர் பகுதியில் மழை கொட்டி தீர்த்தது. அதிகபட்சமாக திருப்பூர் கலெக்டர் அலுவலக முகாம் பகுதியில் 15 செ.மீ., வரை மழை பெய்தது.
இந்த மழையின் காரணமாக மாநகரின் பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தது. திருப்பூர் கொங்கு மெயின் ரோடு, பெத்திசெட்டிபுரம், அறிவொளி நகர் உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி 100 வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. இதனால் அப்பகுதி மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். வீட்டில் இருந்து வெளியேறிய அவர்கள் இரவு முழுவதும் தூங்காமல் தவித்தனர். இது குறித்து தகவல் அறிந்ததும் அங்கு சென்ற மாநகராட்சி பணியாளர்கள் தேங்கி உள்ள நீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருப்பூர் அறிவொளி நகர் பகுதி முழுவதுமே வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளது. இந்த பகுதியில் சுமார் 3000-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. பெண்கள் குழந்தைகள் என ஏராளமான மக்கள் இந்த குடியிருப்பில் வசித்து வருகின்றனர். இரவு முழுவதும் பெய்த மழை காரணமாக அந்த பகுதி வெள்ளக்காடாக மாறி உள்ளது. மழை காரணமாக அங்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இன்று காலை வரை மின்சாரம் கிடைக்கவில்லை. குடியிருப்பு பகுதிக்குள் மழை நீர் தேங்கியுள்ளதால் விஷப்பூச்சிகள் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம் இருப்பதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
திருப்பூர் கொங்கு மெயின் ரோடு பகுதியில் சிவக்குமார் என்பவருக்கு சொந்தமான நிறுவனத்தில் பின்னலாடை உற்பத்திக்கு தேவையான பேக்கிங் அட்டைகள் டெலிவரிக்கு தயாராக இருந்த நிலையில் மழை நீர் உள்ளே புகுந்ததால் சுமார் ரூ.5 லட்சம் மதிப்பிலான அட்டைகள் தண்ணீரால் சேதமடைந்துள்ளது. அதே நிறுவனத்துக்கு சொந்தமான சொகுசு கார் மற்றும் அட்டைகளை ஏற்றி செல்லும் லோடு ஆட்டோ தண்ணீரில் மூழ்கி என்ஜினில் தண்ணீர் புகுந்தது. இதன் காரணமாக பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் மழை நீரால் சேதம் அடைந்துள்ளது. இதேபோல் இப்பகுதியில் பல வீடுகளிலும் மழை நீர் புகுந்தது.
திருப்பூர் புதிய பஸ் நிலையம் பின்புறம் உள்ள கோட்டை மாரியம்மன் கோவில் பின்புற பகுதியில் தண்ணீர் சூழ்ந்ததால் அந்த பகுதியில் உள்ள வீடுகளில் குடியிருந்த 10 பேர் சிக்கிக்கொண்டனர். அவர்களை தீயணைப்பு வீரர்கள் மீட்டு அருகில் உள்ள மண்டபத்தில் பாதுகாப்பாக வைத்துள்ளனர். திருப்பூர் ஜெய்வாபாய் பள்ளி அருகே பெரிய மரம் ஒன்று முறிந்து விழுந்தது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதனை அகற்றும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். சாமுண்டிபுரம், அறிவொளிநகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 3 வீடுகளுக்குள் பாம்புகள் புகுந்தது. அதனை தீயணைப்பு வீரர்கள் பிடித்தனர். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அறிவொளிநகர் உள்ளிட்ட பகுதிகளில் திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்த நிலையில் தற்போது பெய்த மழையால் திருப்பூரில் வெப்பத்தின் தாக்கம் குறைந்து குளிர்ச்சி நிலவி வருகிறது.
திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பெய்த மழை அளவு மில்லிமீட்டரில் விவரம் வருமாறு:-
திருப்பூர் வடக்கு-110, திருப்பூர் கலெக்டர் முகாம் அலுவலகம்-150, திருப்பூர் தெற்கு-96, கலெக்டர் அலுவலகம்-131, அவினாசி-75, ஊத்து க்குளி-120, பல்லடம்-28, திருமூர்த்தி அணை-25. மாவட்டம் முழுவதும் மொத்தம் 7.7 செ.மீ., மழை பெய்துள்ளது.
திருப்பூர் ஊத்துக்குளியில் இருந்து கதித்தமலை வழியாக காங்கயம் பாளையம் என்.எஸ். செல்லும் வழியில் உள்ள அவரக்கரை பள்ளத்தில் உள்ள பாலத்தில் அரிப்பு ஏற்பட்டது. இதனால் அந்த வழியாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. மேலும் ஊத்துக்குளி அடுத்த ஆதியூரில் இருந்து குன்னத்தூர் செல்லும் சாலையில் திருவாய் முதலியூர் அருகில் உள்ள பாலத்தில் அரிப்பு ஏற்பட்டு சாலை துண்டிக்கப்பட்டது.






