என் மலர்
தூத்துக்குடி
- தூத்துக்குடி அனல் நிலையத்தில் ஒப்பந்த தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
- சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி புதுக்கோட்டை தெற்கு தெருவை சேர்ந்தவர் தர்மர் (வயது 47). இவர் தூத்துக்குடி அனல் நிலையத்தில் ஒப்பந்த தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
இவருக்கு லதா என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். நேற்று மாலை வழக்கம்போல் பணி முடிந்து வீடு திரும்பினார். ஆனால் இரவு வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் இன்று காலை அவரது செல்போனுக்கு போன் செய்துள்ளனர்.
அப்போது அதில் பேசியவர்கள் தர்மர் கூட்டம்புளி கால்வாய் அருகே இறந்து கிடப்பதாக தெரிவித்துள்ளனர். உடனடியாக அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து பார்க்கும்போது தர்மர் ரத்த காயங்களுடன் இறந்து கிடந்தார். இதுகுறித்து புதுக்கோட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது.
சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தர்மர் தவறி விழுந்து உயிரிழந்தாரா? அல்லது யாரேனும் அவரை அடித்துக் கொலை செய்தனரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கண்டக்டர் கார்த்திக்ராஜாவுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஸ்ரீவைகுண்டம்:
கம்பத்தில் இருந்து திருச்செந்தூர் நோக்கி அதிகாலை அரசு பஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது.
இந்த பஸ்சை பாளையங்கோட்டை, மேலபுத்தனேரியை சேர்ந்த சுடலை மணி என்பவர் ஓட்டி வந்தார். இதில் திருச்செந்தூர் அருகே உள்ள நடுநாலு மூலைக்கிணறு பகுதியை சேர்ந்த கார்த்திக் ராஜா என்பவர் கண்டக்ராக பணியில் இருந்துள்ளார்.
இந்த அரசு பஸ் அதிகாலை 3 மணி அளவில் ஸ்ரீவைகுண்டம் அடுத்த நவலெட்சுமிபுரம் அருகே வந்து கொண்டிருந்தபோது 5 பேர் கொண்ட மர்ம கும்பல் தாமிரபரணி ஆற்றுப்படுகையில் நின்று அரசு பஸ் மீது கல்வீசி தாக்கி உள்ளனர். இதில் கண்டக்டர் கார்த்திக்ராஜாவுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
உடனே டிரைவர் சுடலை மணி சுதாரித்துக் கொண்டு பஸ்சை வேகமாக ஓட்டி உள்ளார். பின்னால் தொடர்ந்து வந்த அந்த மர்ம கும்பல் அரசு பஸ்சின் பின்பக்க கண்ணாடியை கல்வீசி தாக்கியுள்ளது. இதில் பின்பக்க கண்ணாடியும் உடைந்தது.
இதைத்தொடர்ந்து பஸ் டிரைவர் ஆழ்வார்திருநகரி அரசு மருத்துவமனையில் பஸ்சை நிறுத்தி விட்டு இருவரும் முதலுதவி சிகிச்சை பெற்றனர். அதன்பின்னர் இதுகுறித்து ஆழ்வார்திருநகரி காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையில் அரசு பஸ் டிரைவர் பயணிகள் அனைவரையும் போலீஸ் பாதுகாப்புடன் திருச்செந்தூரில் கொண்டு இறக்கி விட்டு விட்டு ஆழ்வார்திருநகரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரின் பேரில் ஆழ்வார்திருநகரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாமிரபரணி ஆற்றுப்படுகையில் நின்று அதிகாலையில் அரசு பஸ் மீது கல்வீச காரணம் என்ன என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் டி.எஸ்.பி. மாயவன் உத்தரவின் பேரில் தனிப்படை அமைத்து மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
இரவு நேரங்களில் தாமிரபரணி ஆற்றில் மண் கடத்தலில் ஈடுபடும் கும்பல் இந்த சம்பவத்தில் ஈடுபட்டதா? அல்லது கஞ்சா போன்ற போதை பொருட்களை பயன்படுத்தும் கும்பல் இந்த சம்பவத்தில் ஈடுபட்டதா? என்பதை அறிந்து உடனடியாக இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். .
- தொடர்ந்து கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவாகியிருந்த தடயங்களை ஆய்வு செய்தனர்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவில்பட்டி:
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சுபா நகர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 43).
மதுரை அருகே உசிலம்பட்டி சின்ன நத்தம் கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
இவரது மனைவி பிரபா சிபோரா (40). கோவில்பட்டி அருகே உள்ள திருவேங்கடத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
இவர் தனது குடும்பத்தினருடன், ராஜபாளையத்தை சேர்ந்த உறவினர்களுடன் நேற்று மாலை 3 மணியளவில் வீட்டை பூட்டிவிட்டு, நெல்லைக்கு ஜவுளி எடுக்க சென்றனர். பின்னர் மீண்டும் இரவு 8 மணி அளவில் வீட்டுக்கு திரும்பினர். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. அதில் இருந்த ஜவுளிகள் மற்றும் பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்தன.

மேலும் பீரோ மற்றும் அலமாரியில் இருந்த சதீஷ்குமாருக்கு சொந்தமான 50 பவுன் தங்க நகை மற்றும் ராஜபாளையத்தை சேர்ந்த அவரது உறவினரான பாபு சந்திரபிரகாஷ் என்பவரின் மனைவி பிரியரூபாவதிக்கு சொந்தமான 50 பவுன் தங்க நகை என மொத்தம் 100 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து சதீஷ்குமார் அளித்த தகவலின் பேரில், டி.எஸ்.பி. வெங்கடேஷ் தலைமையில் மேற்கு போலீஸ் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
தொடர்ந்து கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவாகியிருந்த தடயங்களை ஆய்வு செய்தனர். மேலும் மோப்ப நாய் வரவைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது.
சம்பவம் குறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. தனிப்படை போலீசார் அந்த பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கோவிலில் சுவாமி தரிசனம் முடித்த பின்னா் நேற்று மாலையில் அங்கிருந்து சென்னை நோக்கி காரில் புறப்பட்டனா்.
- விபத்தில் காரில் இருந்த 6 பேரும் படுகாயம் அடைந்தனா். இதில் காரின் முன் பகுதி அப்பளம் போல் நொறுங்கியது.
ஆத்தூர்:
சென்னை அம்பத்தூரை சேர்ந்தவர் சேகா்(வயது 42). இவர் தனது குடும்பத்தினருடன் சென்னையில் இருந்து திருச்செந்தூருக்கு கோவிலுக்கு ஒரு காரில் வந்தார்.
அப்போது அவருடன் அவரது மனைவி நித்திய கலா (41), அவர்களது மகள் தீக்ஷித் (13), மகன் ரித்விக்(8) ஆகியோரும், உறவினர்களான வனஜா(61), காா்த்திக் (40) ஆகியோரும் வந்திருந்தனர். காரை சேகர் ஓட்டி சென்றார்.
கோவிலில் சுவாமி தரிசனம் முடித்த பின்னா் நேற்று மாலையில் அங்கிருந்து சென்னை நோக்கி காரில் புறப்பட்டனா். திருச்செந்தூர்-தூத்துக்குடி மெயின் ரோட்டில் பழைய காயல் அருகே கார் சென்ற போது எதிர்பாராதவிதமாக எதிரே வந்த லாரி மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் காரில் இருந்த 6 பேரும் படுகாயம் அடைந்தனா். இதில் காரின் முன் பகுதி அப்பளம் போல் நொறுங்கியது.
இதுகுறித்து தகவல் அறிந்த ஆத்தூர் போலீசார் அங்கு விரைந்து சென்று காரின் இடிபாட்டில் சிக்கிய 6 பேரையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து தொடர்பாக ஆத்தூா் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரான நாமக்கல் மாவட்டம் சோ்ந்தமங்கலம் தாலுகாவை சேர்ந்த ராமசாமி (40) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தேர்தல் பத்திரம் மூலம் தி.மு.க., வேதாந்தா நிறுவனத்திடம் இருந்து 19 கோடி ரூபாய் பெற்றுள்ளது.
- குறைந்த வாக்கு சதவீதம் கொண்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு கேட்ட சைக்கிள் சின்னம் கிடைக்கிறது.
தூத்துக்குடி:
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று தூத்துக்குடி திரேஸ்புரத்தில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-
தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் தான் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை கொண்டு வந்தனர். ஸ்டெர்லைட் ஆலை இல்லை என்றால் தாமிரம் தட்டுப்பாடு வந்து விடும் என்று சொன்னார்கள். ஆனால் இங்குள்ள நிலமும், தண்ணீரும் கெட்டு விடும் என்று சொல்லவில்லை.
ஸ்டெர்லைட் ஆலையால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக கூறி பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆலையை மூடக்கோரி கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க சென்றபோது அதனை வாங்கி இருக்க வேண்டும். ஆனால் தடியடி நடத்தி பொதுமக்களை சுட்டுக்கொன்றனர்.
இதுதொடர்பாக விசாரணை நடத்திய அருணா ஜெகதீசன் அறிக்கை தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் கடந்த 6 மாதமாக அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் கிடப்பில் போட்டுள்ளனர். குற்றம் சாட்டப்பட்ட போலீ சாருக்கு பதவி உயர்வும் வழங்கப்பட்டுள்ளது.
தேர்தல் பத்திரம் மூலம் தி.மு.க., வேதாந்தா நிறுவனத்திடம் இருந்து 19 கோடி ரூபாய் பெற்றுள்ளது. இதேபோல் அனைத்து கட்சிகளும் பணம் பெற்றுள்ளது. ஆனால் நாம் தமிழர் கட்சி மட்டும் பணம் பெறவில்லை.
மணிப்பூரில் கலவரம் ஏற்பட்டபோது இங்குள்ள அனைத்து கட்சியினரும் துடித்தனர். ஆனால் ஈழத்தில் தமிழர்கள் கொல்லப்பட்டபோது யாரும் வாய் திறக்கவில்லை. நான் மட்டும்தான் அது குறித்து துடித்தேன்.
வீட்டுக்கு தேவையான பொருட்களை தரம் பார்த்து நல்ல பொருட்களாக வாங்குவதை போல் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் நல்ல வேட்பாளர்களை ஓட்டு போட்டு தேர்ந்தெடுக்க வேண்டும்.
பாராளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சியுடன் கூட்டணி வைப்பதற்காக பல்வேறு கட்சியினர் என்னை தொடர்பு கொண்டு பேசினர். ஆனால் தனித்து போட்டி என்ற கொள்கையில் உறுதியாக இருந்ததால் அதனை மறுத்து விட்டேன்.
தேர்தல் வெற்றிக்காக கடந்த 18 வருடங்களாக போராடிக்கொண்டு இருக்கிறேன்.
குறைந்த வாக்கு சதவீதம் கொண்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு கேட்ட சைக்கிள் சின்னம் கிடைக்கிறது. ஆனால் அதை விட அதிக ஓட்டு சதவீதம் கொண்ட நாம் தமிழர் கட்சிக்கு நாங்கள் கேட்ட சின்னம் தர மறுக்கிறார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
- தொடர்ந்து விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு நடைபெற்று வருகிறது.
- முத்தையாபுரம் இன்ஸ்பெக்டர் செந்தில்வேல் குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி அருகே அத்திமரப்பட்டியை சேர்ந்தவர் பரமசிவன். இவரது மகன் சஞ்சய் (வயது 14) 9-ம் வகுப்பு படித்து வந்தார்.
இவர் நேற்று இரவு தூத்துக்குடி- திருச்செந்தூர் சாலையில் ஸ்பிக் நகரில் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது பஸ் நிறுத்தம் அருகே எதிரே வந்த லோடு ஆட்டோ மீது பலமாக மோதி ஏற்பட்ட விபத்தில் பலத்த காயமடைந்தார். உடனே அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் உயிர் இழந்தார்.
இதுகுறித்து முத்தையாபுரம் இன்ஸ்பெக்டர் செந்தில்வேல் குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
திருச்செந்தூர் சாலை ஓரமாக சமீப காலமாக குழாய் பதிக்கும் பணி நடந்து வருகிறது. இதற்காக முன் அறிவிப்பு இல்லாமல் முறையான பாதுகாப்பு முன்னேற்பாடுகள் எதுவும் செய்யப்படாமல் இருவழி பாதையை ஒரு வழி பாதையாக மாற்றி வருகின்றனர்.
இதன் காரணமாக தொடர்ந்து விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு நடைபெற்று வருகிறது. எனவே இதற்கு தீர்வு காணும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- கோவில்பட்டி அருகே திட்டங்குளம் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.
- எட்டயபுரத்தில் இருந்து கோவில்பட்டி நோக்கி வந்த லோடு ஆட்டோவை சோதனை செய்தனர்.
கோவில்பட்டி:
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள நாலாட்டின்புதூர் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது தெற்கு குருவி குளம் பகுதியில் இருந்து கோவில்பட்டி நோக்கி வந்த வாகனத்தை தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்தனர். அதில் ரூ.73 ஆயிரத்து 700 இருப்பது தெரியவந்தது.
விசாரணையில் அவர்கள் பொரிகடலை, உளுந்து, சீனி உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்து, வியாபாரிகளிடமிருந்து வசூலித்ததாகக் கூறினர்.
ஆனால் அவர்களிடம் அதற்கான ஆவணங்கள் ஏதும் இல்லை. இதையடுத்து அந்த பணத்தை கண்காணிப்புக் குழுவினர் பறிமுதல் செய்து, கோவில்பட்டி தாசில்தார் சரவணப் பெருமாள் முன்னிலையில் வட்ட தேர்தல் பிரிவு துணை தாசில்தார் வெள்ளத்துரையிடம் ஒப்படைத்தனர்.
இதேபோல் கோவில்பட்டி அருகே திட்டங்குளம் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது எட்டயபுரத்தில் இருந்து கோவில்பட்டி நோக்கி வந்த லோடு ஆட்டோவை சோதனை செய்தனர். அதில் ரூ.60 ஆயிரத்து 400 இருப்பது தெரியவந்தது. எட்டயபுரம் ஆட்டுச்சந்தையில் ஆடுகளை விற்ற பணம் என்று வாகனத்தில் இருந்தவர்கள் கூறினார்கள்.
இருந்தபோதிலும் உரிய ஆவணம் இல்லாததால் தொடர்ந்து அந்த பணத்தை கண்காணிப்புக் குழுவினர் பறிமுதல் செய்து, கோவில்பட்டி தாசில்தார் சரவணப்பெருமாள் முன்னிலையில் வட்ட தேர்தல் பிரிவு துணை தாசில்தார் வெள்ளத்துரையிடம் ஒப்படைத்தனர்.
- ஜெயக்குமார் பனங்கிழங்கு வாங்குவதற்கு நீலா புஷ்பா வீட்டிற்கு அடிக்கடி சென்றுள்ளார்.
- வெயிலில் சென்றதால் களைத்த அவர் திருட சென்ற வீட்டில் வாளியில் நிரப்பி வைக்கப்பட்டிருந்த தண்ணீரீல் குளித்துள்ளதும் தெரிய வந்தது.
சாத்தான்குளம்:
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள தட்டார்மடத்தை அடுத்த சாலைபுதூர் அம்மன் கோவில் வடக்குத் தெருவை சேர்ந்தவர் சித்திரை. இவரது மனைவி நீலா புஷ்பா ( வயது 60).
இவர்களுக்கு 3 மகன், ஒரு மகள் உள்ளனர். அவர்களுக்கு திருமணமாகி வெளியூர்களில் வசித்து வருகின்றனர். கணவர் இறந்து விட்டதால் நீலா புஷ்பா மட்டும் தனியாக வசித்து வந்தார். இவர் பனங்கிழங்குகள் வியாபாரம் செய்து வருகிறார்.
சம்பவத்தன்று இவர் வியாபாரத்திற்கு சென்று விட்டு வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது ரூ.2 லட்சம் ரொக்கப்பணம், 3 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.
இதுகுறித்து அவர் தட்டார்மடம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் டி.எஸ்.பி. கென்னடி உத்தரவின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் டேவிட் தலைமையிலான தனிப்படையினர் விசாரணை நடத்தி வந்தனர். மேலும் சம்பவ இடத்தில் இருந்த சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் திருட்டில் ஈடுபட்டது சாத்தான்குளம் அருகே உள்ள பண்டாரபுரத்தை சேர்ந்த ஜெயக்குமார் (40) என்பது தெரியவந்தது. மேலும் சில திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
ஜெயக்குமார் பனங்கிழங்கு வாங்குவதற்கு நீலா புஷ்பா வீட்டிற்கு அடிக்கடி சென்றுள்ளார். அப்போது அவர் வீட்டில் தனியாக வசித்து வருவதையும், அங்கு நகை, பணம் இருப்பதையும் தெரிந்து கொண்டார். அதன்படி சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் நகை-பணத்தை கொள்ளையடித்துள்ளார்.
மேலும் வெயிலில் சென்றதால் களைத்த அவர் திருட சென்ற வீட்டில் வாளியில் நிரப்பி வைக்கப்பட்டிருந்த தண்ணீரீல் குளித்துள்ளதும் தெரிய வந்தது. அவரிடம் இருந்து திருடிய நகை-பணத்தை பறிமுதல் செய்தனர்.
- ஏரல் தாசில்தார் கோபால் பறக்கும் படை தலைமை அலுவலர் இசக்கியப்பனுக்கு தகவல் தெரிவித்தார்.
- குடோனில் சுமார் ரூ.1 லட்சத்து 46 ஆயிரம் மதிப்புள்ள அரிசி உள்ளிட்ட பொருட்கள் வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.
ஸ்ரீவைகுண்டம்:
பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை மற்றும் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் ஏரல் அருகே உள்ள வாழவல்லான் அம்மாள்தோப்பு பகுதியில் வாக்காளர்களுக்கு பரிசு பொருட்களாக அரிசி உள்ளிட்ட பொருட்கள் கொடுத்து வருவதாக ஏரல் தாசில்தாருக்கு புகார் சென்றது.
அதன் அடிப்படையில் ஏரல் தாசில்தார் கோபால் பறக்கும் படை தலைமை அலுவலர் இசக்கியப்பனுக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் பறக்கும் படையினர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் அங்கு சென்று பார்த்தபோது அம்மாள் தோப்பு பகுதியில் உள்ள ஒரு குடோனில் சுமார் ரூ.1 லட்சத்து 46 ஆயிரம் மதிப்புள்ள அரிசி உள்ளிட்ட பொருட்கள் வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.
இதுகுறித்து விசாரணை நடத்தியபோது வெள்ள நிவாரண பொருட்கள் அங்கு வைக்கப்பட்டிருந்ததாக கூறினர். எனினும் இதுதொடர்பாக இதுதொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.
தொடர்ந்து அந்த குடோனுக்கு பறக்கும் படையினர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் சீல் வைத்து ஆவணங்களை ஏரல் தாசில்தார் கோபாலிடம் ஒப்படைத்தனர். மேலும் இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சுட்டெரிக்கும் வெயிலால் கடுமையாக அவதிக்குள்ளான மக்கள் இன்று பெய்த கனமழையால் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.
- தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள அணை பகுதிகளில் பரவலாக கோடை மழை பெய்துள்ளது.
தூத்துக்குடி:
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் வெயில் சுட்டெரித்து வருகிறது. இந்த கடுமையான வெயிலின் காரணமாக பகல் நேரங்களில் சாலைகளில் மக்கள் நடமாட்டம் வெகுவாக குறைந்துவிட்டது.
தூத்துக்குடி மாவட்டத்தில் வெயில் கொளுத்திய நிலையில், இன்று அதிகாலை முதல் திடீரென கனமழை பெய்தது. அதிகாலை 4 மணிக்கு தொடங்கிய மழை முதலில் மிதமாக பெய்தது. பின்னர் சுமார் 2 மணி நேரம் கனமழையாக பொழிந்தது.
தூத்துக்குடி நகர் பகுதியான முத்தையாபுரம், பழைய காயல், ஆறுமுகநேரி, முள்ளக்காடு உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக சாலையோர பள்ளங்களில் மழைநீர் தேங்கியது. குறிப்பாக இந்த பகுதிகளில் உள்ள உப்பளங்களில் தண்ணீர் தேங்கியது. கடந்த 2 நாட்களாக அவ்வப்போது லேசான சாரல் அடித்த நிலையில் உப்பளங்களில் உப்பு உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்று காலை பெய்த கனமழையால் உப்பு உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக இந்த கோடை மாதங்களில் தான் உப்பு உற்பத்தி தாராளமாக நடைபெறும். ஆனால் இந்த நேரத்தில் மழை பெய்துள்ளதால் உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இன்று பெய்துள்ள மழையின் காரணமாக அடுத்த 10 நாட்களுக்கு உப்பு உற்பத்தி பணியை மேற்கொள்ள முடியாது என உற்பத்தியாளர்கள் கவலையுடன் தெரிவித்தனர்.
அதேநேரத்தில் சுட்டெரிக்கும் வெயிலால் கடுமையாக அவதிக்குள்ளான மக்கள் இன்று பெய்த கனமழையால் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். புதுக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான மேல தட்டப்பாறை, கீழ தட்டப்பாறை, தளவாய்புரம், வாகைகுளம் ஆகிய இடங்களில் பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக தூத்துக்குடியில் 40 மில்லிமீட்டரும், காயல்பட்டினம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 28 மில்லிமீட்டரும் மழை பெய்தது.
தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள அணை பகுதிகளில் பரவலாக கோடை மழை பெய்துள்ளது. கருப்பாநதியில் 13 மில்லிமீட்டரும், அடவிநயினார் அணையில் 7 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது. சிவகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் லேசான சாரல் மழை பெய்தது. அதே நேரத்தில் ஆலங்குளம், பாவூர்சத்திரம், சங்கரன் கோவில், கடையம் உள்ளிட்ட பகுதிகளில் வழக்கம்போல் வெயில் அடித்தது.
நெல்லையில் நேற்று மதியம் திடீரென சாரல் மழை பெய்தது. வண்ணார்பேட்டை, சந்திப்பு, பாளை, சமாதானபுரம், மார்க்கெட் பகுதி, பாளை பஸ் நிலைய பகுதிகளில் சிறிது நேரம் சாரல் மழை பெய்தது. இதனால் சிறிது நேரம் குளிர்ந்த காற்று வீசியது.
- கடந்த 2019-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலின்போது கனிமொழி எம்.பி. தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் அவரது சொத்து மதிப்பாக ரூ.30.34 கோடி காட்டியிருந்தார்.
- தனது பெயரில் ரூ.60 லட்சத்து 60 ஆயிரத்து 187 கடன் இருப்பதாகவும், கணவர் பெயரில் கடன் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. சார்பில் தற்போதைய எம்.பி.யும், தி.மு.க. துணை பொதுச்செயலாளருமான கனிமொழி 2-வது முறையாக மீண்டும் போட்டியிடுகிறார்.
இதனையொட்டி நேற்று அவர் தூத்துக்குடி மாவட்ட கலெக்டரும், தேர்தல் அதிகாரியுமான லட்சுமிபதியிடம் மனுத்தாக்கல் செய்தார். அவர் தனது வேட்பு மனுவுடன் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் ரூ.1 கோடியே 37 லட்சத்து 16 ஆயிரத்து 290 மதிப்பிலான 3 கார்கள் வைத்திருப்பதாகவும், 704 கிராம் தங்கம், 13.03 காரட் வைரம் உள்ளிட்டவைகள் வைத்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். அந்த நகைகளின் மதிப்பு ரூ.55 லட்சத்து 37 ஆயிரத்து 455 ஆகும்.
இவ்வாறாக ரொக்கப்பணம், வங்கி கையிருப்பு என மொத்தம் ரூ.18 கோடியே 54 லட்சத்து 42 ஆயிரம் மதிப்பிலான அசையா சொத்துக்கள் இருப்பதாக தனது பிரமாண பத்திரத்தில் தாக்கல் செய்துள்ளார். இதேபோல் தனது கணவர் அரவிந்தன் பெயரில் ரொக்கப்பணம், கையிருப்பு, கார் என மொத்தம் ரூ.66 லட்சத்து 21 ஆயிரத்து 347 மதிப்பிலான அசையும் சொத்துக்களும், நிலங்கள், வணிக கட்டிடம், வீடு என மொத்தம் ரூ.2 கோடியே 26 லட்சத்து 31 ஆயிரத்து 550 மதிப்பிலான அசையா சொத்துகளும் என மொத்தம் ரூ.2 கோடியே 92 லட்சத்து 52 ஆயிரத்து 897 மதிப்பிலான சொத்துக்கள் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தனது பெயரில் ரூ.60 லட்சத்து 60 ஆயிரத்து 187 கடன் இருப்பதாகவும், கணவர் பெயரில் கடன் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறாக மொத்தம் ரூ.38.77 கோடி அசையும் சொத்தாகவும், ரூ.18.54 கோடி அசையா சொத்துகளும் இருப்பதாக தாக்கல் செய்துள்ளார்.
கடந்த 2019-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலின்போது கனிமொழி எம்.பி. தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் அவரது சொத்து மதிப்பாக ரூ.30.34 கோடி காட்டியிருந்தார். ஆனால் இந்த முறை மொத்த சொத்து மதிப்பாக ரூ.57.32 கோடி காட்டியுள்ளார்.
இதன்மூலம் கடந்த 5 ஆண்டுகளில் அவரது சொத்து மதிப்பு ரூ.27 கோடி வரை உயர்ந்துள்ளது. இதில் அசையும் சொத்து மதிப்பு ரூ.17 கோடி அளவும், அசையா சொத்து மதிப்பு சுமார் ரூ.10 கோடி அளவும் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளை ஒப்பிடுகையில் அவரது சொத்து மதிப்பு 80 சதவீதம் உயர்ந்துள்ளது தெரியவந்துள்ளது.
- தேர்தல் நேரத்தில் தான் பிரதமர் தமிழகம் பக்கம் வருவார்.
- இலங்கையை கண்டிக்க முடியாத நீங்கள், விஸ்வகுருவா? மௌன குருவா?
மக்களவை தேர்தல் முன்னிட்டு போட்டியிடும் அரசியல் கட்சிகள் பிரசாரத்தில் தீவிரமாய் இறங்கியுள்ளனர்.
அந்த வகையில், தூத்துக்குடி, ராமநாதபுரம் மக்களவை தொகுதிகளுக்கான திமுக கூட்டணியின் தேர்தல் பரப்புரை நடைபெற்று வருகிறது.
அதன்படி, கோவில்பட்டி அருகே எட்டையபுரத்தில் உள்ள சிந்தலக்கரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.
அப்போது அவர் கூறியதாவது:-
தமிழ்நாட்டில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் நன்மை செய்யும் கட்சி திமுக. தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் மறக்க முடியுமா? எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் தூத்துக்குடியில் துப்பாக்கிசூடு நடத்தி 13 பேர் கொலை செய்யப்பட்டனர். அதைக்கூட டிவியை பார்த்துக்தான் தெரிந்து கொண்டேன். அந்த சம்பவத்தை தற்போது நினைத்தாலும் நெஞ்சம் பதறுகிறது.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டது. போராட்டக்காரர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் திரும்பப் பெறப்பட்டது.
பாதிக்கப்பட்டவர்களுக்கு கல்வி தகுதிக்கு ஏற்ப பணிகள் வழங்கப்பட்டது. ஈபிஎஸ் மக்கள் விரோத ஆட்சியை நடத்தினார். மக்களை ஏமாற்ற மீண்டும் பிரசாரம் செய்து வருகிறார். பாஜக பற்றி ஈபிஎஸ் ஒரு வார்த்தை கூட பேசாதது ஏன்?
தமிழகத்தின் உரிமைகளை அடகு வைத்தவர் எடப்பாடி பழனிசாமி. தற்போது, உதயநிதி குறித்து ஈபிஎஸ் விமர்சிக்க தொடங்கியுள்ளார்.
10 ஆண்டுகளில் நாட்டை பாஜக பாதாளத்தில் தள்ளியுள்ளது. தேர்தல் நேரத்தில் தான் பிரதமர் தமிழகம் பக்கம் வருவார்.
தமிழக மீனவர்கள் தாக்கப்பட திமுக, காங்கி தான் காரணம் என பிரதமர் பேசுகிறார். தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை தட்டிக்கேட்க பிரதமர் தயங்குவது ஏன்?
இலங்கையை கண்டிக்க முடியாத நீங்கள், விஸ்வகுருவா? மௌன குருவா? தமிழக மீனவர்களை காப்பாற்ற தவறிய மோடி, திசை திருப்ப தங்களை விமர்சிக்கிறார். கருப்பு பணத்தை மீட்டு தருவதாக கூறினார் பிரதமர் தந்தாரா ?
கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வேலையின்மை நிலவுகிறது. தமிழகத்திற்கு தந்த எந்த வாக்குறுதியையும் பிரதமர் நிறைவேற்றவில்லை.
தமிழகத்திறகாக பிரதமர் என்ன சிறப்பு திட்டத்தை கொண்டு வந்தார்?
இவ்வாறு அவர் கூறினார்.






