என் மலர்tooltip icon

    திருநெல்வேலி

    • சம்பவத்தன்று மாசானம் சிறுமளஞ்சி அருகே உள்ள ஆற்றின் கரையில் தனது மொபட்டை நிறுத்தி விட்டு, வயல் வேலைக்கு சென்றார்.
    • மர்ம நபர்கள் மொபட்டை திருடி சென்றதை அறிந்த அவர் அதிர்ச்சி அடைந்தார்.

    களக்காடு:

    நாங்குநேரி அருகே உள்ள பெரும்பத்து வடக்குத் தெருவை சேர்ந்தவர் மாசானம் (வயது55). கூலி தொழிலாளி. சம்பவத்தன்று மாசானம் சிறுமளஞ்சி அருகே உள்ள ஆற்றின் கரையில் தனது மொபட்டை நிறுத்தி விட்டு, வயல் வேலைக்கு சென்றார். திரும்பி வந்து பார்த்த போது அவரது மொபட்டை காணவில்லை. மர்ம நபர்கள் மொபட்டை திருடி சென்றதை அறிந்த அவர் அதிர்ச்சி அடைந்தார்.

    இதுபற்றி அவர் நாங்குநேரி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மொபட்டை திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    • முகாமை நேதாஜி சுபாஷ் சேனை மாநில நிர்வாகி மகேஷ் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
    • நேதாஜி சுபாஷ் சேனை சேர்ந்த மற்றும் இளைஞர்கள் 36 பேர் ரத்ததானம் வழங்கினர்.

    வள்ளியூர்:

    வள்ளியூர் வடக்கு ரத வீதியில் உள்ள அண்ணா படிப்பகத்தில் ராஜாஸ் கல்லூரி பல் மருத்துவம் மற்றும் பொது மருத்துவம், அகர்வால் கண் மருத்துவ முகாம், அன்னை வேளாங்கன்னி ரத்த மையம் மற்றும் நேதாஜி சுபாஷ் சேனை இணைந்து இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமை நேதாஜி சுபாஷ் சேனை மாநில நிர்வாகி மகேஷ் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். முகாமில் 300-க்கும் மேற்ப்பட் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    நேதாஜி சுபாஷ் சேனை சேர்ந்த மற்றும் இளைஞர்கள் 36 பேர் ரத்ததானம் வழங்கினர். நிகழ்ச்சியில் மருத்துவர்கள் செல்வகுமார், ஆன்றனி மைக்கேல், ராஜேஷ், அகமது மற்றும் ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர். சிறப்பு அழைப்பாளராக வள்ளியூர் பேரூராட்சி துணை தலைவர் கண்ணர், கவுன்சிலர்கள் மாடசாமி, சங்கர், சுப்பு லெட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை நேதாஜி சுபாஷ் சேனை தென்மண்டல இளைஞரணி தலைவர் சுகுணா கணேசன் ஏற்பாடு செய்திருந்தார். முன்னதாக ரமேஷ் கண்ணன் வரவேற்றார். முடிவில் கண்ணன் நன்றி கூறினார்.

    • பல நூற்றாண்டுகளை கடந்தும் இயற்கை வண்ண ஓவியங்கள் பல கோவில்களில் இன்றளவும் அழகு மிகுந்து காணப்படுகிறது.
    • தமிழகத்தில் சித்தன்னவாசல் தொடங்கி பல கோவில்களில் இயற்கை ஓவியங்கள் அமைந்துள்ளது.

    நெல்லை:

    பாளை சித்த மருத்துவக்கல்லூரி அருகே அமைந்துள்ள மேடை போலீஸ் நிலையம் சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டது. இங்கு உள்ள மேற்கு கோட்டைவாசல் பூங்காவில் ஓவிய பயிலரங்கு நிகழ்ச்சியின் தொடக்க விழா இன்று நடைபெற்றது.

    சபாநாயகர் அப்பாவு தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு ஓவியம் வரைந்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

    இதில் அப்துல் வகாப் எம்.எல்.ஏ., முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன், மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி, மேயர் சரவணன், துணைமேயர் ராஜு, நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் மைதீன்கான், தலைமை செயற்குழு உறுப்பினர் பிரபாகரன், முன்னாள் எம்.பி. விஜிலா சத்யானந்த், முன்னாள் எம்.எல்.ஏ. மாலைராஜா, பொதுக்குழு உறுப்பினர் பரமசிவ அய்யப்பன், பகுதி செயலாளர் தச்சை சுப்பிரமணியன், கலை பண்பாட்டுதுறை உதவி இயக்குனர் கோபால கிருஷ்ணன், ஆர்.டி.ஓ/ சந்திரசேகர், ஓவியர் சந்துரு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியில் சபாநாயகர் அப்பாவு பேசியதாவது:-

    திராவிட மொழியின் முதல் மொழி தமிழில் இருந்து தொடங்கியது என முதலில் சொன்னவர் கால்டுவெல். இந்தியாவின் நாகரிகம் தென் மாவட்டங்களில் இருந்து தொடங்கியது என சொல்லிய தமிழக முதலமைச்சர் தாமிரபரணி நாகரிகத்தை கண்டறிய அகழாய்வு செய்ய உத்தரவிட்டார்.

    பல நூற்றாண்டுகளை கடந்தும் இயற்கை வண்ண ஓவியங்கள் பல கோவில்களில் இன்றளவும் அழகு மிகுந்து காணப்படுகிறது. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு எழுத்தாளர்கள், ஓவியர்கள், கலை இலக்கியவாதிகளை ஊக்குவித்து பண்பாட்டு நாகரிகத்தை அரசு காத்து வருகிறது.

    15 ஏக்கர் நிலப்பரப்பில் சுமார் 2.30 லட்சம் சதுர அடியில் அமைக்கப்பட்ட பிரான்ஸ் நாட்டின் நூவர் அருங்காட்சியகத்தில் மிக அழகாக பல வண்ண தொன்மையான ஓவியங்கள் இடம்பெற்றுள்ளது.

    ஓவியங்கள் பண்டைய வரலாற்று நாகரிகங்களை தாங்கி படித்து வருகிறது. பிரான்ஸ் நாட்டைவிட அழகாக நம் தமிழகத்தில் பல நூற்றாண்டு தொன்மையான ஓவியங்கள் இன்றளவும் பல கோவில்களில் காணப்படுகிறது.

    பண்டைய கால அற்புதங்கள் நிறைந்த இடங்கள் பாழடைந்து கிடந்ததை தமிழக முதலமைச்சர் பொறுப்பேற்றப் பின்னர் புனரமைத்து அடையாள சின்னங்களாக மாற்றப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கனிமொழி எம்.பி. பேசியதாவது:-

    கலை, மொழி போன்றவைகளுக்காக தொடர்ந்து உறுதுணையாக இருக்கும் ஆட்சியை தமிழகத்தில் தமிழக முதலமைச்சர் நடத்தி வருகிறார். தமிழகத்தில் சித்தன்னவாசல் தொடங்கி பல கோவில்களில் இயற்கை ஓவியங்கள் அமைந்துள்ளது. ஆனால் அதனை பெரிதாக யாரும் மதிப்பதில்லை. அதனை புனரமைப்பு செய்கிறோம் என்ற பெயரில் வெள்ளையடித்து அதனை கெடுத்து விடுகின்றனர்.

    தஞ்சை பெரிய கோவில் சுவரில் இருக்கும் ஓவியங்கள் மீது தேர்வு எண்களை எழுதி வைக்கின்றனர். அந்த எண்களை குறித்து வைத்து கொண்டு அவர்களை தேர்வில் தோல்வியடைய செய்து விடலாம் என தோன்றும்.

    தொன்மைகள் குறித்து நமக்கு அக்கறை இல்லாததை இதுபோன்ற செயல்காட்டுகிறது. பல மொழிகள் தொன்மையாக இருந்தாலும் அதைப் பேசக்கூடிய நபர்கள் இல்லாவிட்டாலும் கோடிக்கணக்கில் அரசு அந்த மொழிக்கு தான் நிதி ஒதுக்கீடு செய்து உதவுகிறது. கல்வெட்டுகளை படிப்பதற்கு கூட ஆட்கள் இல்லாத நிலை தற்போது தமிழகத்தில் உள்ளது.

    வாழ்க்கை என்பது கலை. கலைஞர்கள் வாழ்க்கையில் இருந்துதான் கலையை கண்டெடுக்க முடியும். தொழில்நுட்பம், எந்திரமயமாக்கல் நிறைந்த இந்த உலகில் நாம் வாழக்கூடிய தகுதியை இழந்து வருகிறோம். காலநிலை மாற்றம் என்ற மிகப்பெரிய காலகட்டத்தில் நாம் இருந்து வருகிறோம். வரும் காலங்களில் காலநிலை மாற்றத்தால் பல பிரச்சினைகளை சந்திக்க கூடிய சூழல் உருவாகும்.

    நம் கருத்துக்கள் எடுத்து வைக்கும் விஷயங்களுக்கு எதிராக வன்முறையை சந்திக்கும் சூழல் உருவாகியுள்ளது. சமூக வலைதளங்களில் பெண்கள் வைக்கக்கூடிய கருத்துக்களுக்கு எதிராக செயல்கள் நடந்து வருகிறது. இயற்கை பதிலடி கொடுக்கும் நிலையை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • லே செயலாளர் ஜெயசிங் தலைமையிலான அணியினர் திரண்டு காட்பிரே நோபுளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
    • தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நெல்லை:

    தென் இந்திய திருச்சபை எனப்படும் கிறிஸ்தவர்களின் சி.எஸ்.ஐ. அமைப்பு கடந்த 1947-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.

    இது தென் இந்தியாவில் வலுவான கிறிஸ்தவ அமைப்பாகும். தென்னிந்தியா முழுவதும் இந்த அமைப்புக்கு 14 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆலயங்கள் உள்ளன. இதில் 1,214 பேர் மத போதகர்களாக உள்ளனர்.

    இந்த அமைப்பில் சுமார் 40 லட்சம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர். தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இந்த அமைப்புக்கு அதிக உறுப்பினர்கள் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    தென் இந்திய திருச்சபை சார்பில் கல்விக்கூடங்கள், மருத்துவமனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, புதுச்சேரி மற்றும் இலங்கையில் தென் இந்திய திருச்சபை ஏராளமான பள்ளிக்கூடங்களையும், மருத்துவமனைகளையும் நடத்தி வருகிறது.

    சமீபத்தில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்புப் படி தென் இந்திய திருச்சபை தென் இந்தியாவில் 104 மருத்துவமனைகளை நடத்தி வருகிறது. 2000 பள்ளிக்கூடங்கள், 130 கல்லூரிகளும் இந்த சபையால் நடத்தப்பட்டு வருகிறது. இவற்றை நிர்வாகம் செய்வதற்கு தென் இந்திய திருச்சபை நிர்வாகிகள் இடையே கடும் போட்டி நிலவுவது உண்டு.

    இந்த திருச்சபையின் பேராயர் தேர்தல் கடந்த ஆண்டு நடைபெற்றது. அப்போது வேதநாயகம் என்பவர் தலைமையில் ஒரு அணியும், ஜெயசிங் என்பவர் தலைமையில் ஒரு அணியும் போட்டியிட்டன.

    இதில் ஜெயசிங் அணி வெற்றி பெற்றது. இதையடுத்து லே செயலாளராக நியமனம் செய்யப்பட்ட ஜெயசிங் பரிந்துரையின் பேரில் திருமண்ட திருச்சபையின் பேராயராக பர்னபாஸ் என்பவர் நியமிக்கப்பட்டார்.

    இந்த நிலையில் திருமண்டலத்தின் கீழ் செயல்பட்டு வரும் பள்ளி, கல்லூரிகளில் பணி நியமனம் செய்வது தொடர்பாக பேராயர் பர்னபாசுக்கும், லே செயலாளர் ஜெயசிங்கிற்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

    இந்த கருத்து வேறுபாடு அதிகரிக்கவே கடந்த சில மாதங்களாக பேராயர் பர்னபாஸ் தலைமையில் ஒரு அணியினரும், லே செயலாளர் ஜெயசிங் தலைமையில் ஒரு அணியினரும் என 2 பிரிவாக பிரிந்தனர். இதில் ஜெயசிங் அணியில் நெல்லை தொகுதி தி.மு.க. எம்.பி. ஞானதிரவியம், திருச்சபை மேலாளர் மனோகர் உள்பட பலர் இருந்தனர். தொடர்ந்து பணி நியமனம் விவகாரத்தில் அவர்க ளுக்குள் உச்சகட்ட மோதல் நீடித்தது.

    ஒருகட்டத்தில் பாளையங்கோட்டையில் உள்ள டயோசீசன் அலுவலகத்தில் இருந்த மானேஜர் அறையை ஒரு தரப்பினர் பூட்டு போட்டனர். அதனை திறக்க வேண்டும் என கோரிக்கை வைத்து மற்றொரு தரப்பினர் டயோசீசன் அலுவலகத்திற்கு சென்றபோது 2 தரப்பினருக்கும் தள்ளு-முள்ளு ஏற்பட்டது. இதனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.

    இதற்கிடையே பாளையங்கோட்டை ஜான்ஸ் பள்ளியின் தாளாளராக இருந்த ஞானதிரவியம் எம்.பி.யை. அப்பதவியில் இருந்து நீக்கிவிட்டு, தி.மு.க.வை சேர்ந்த வக்கீல் அருள் மாணிக்கம் என்பவரை பேராயர் பர்னபாஸ் புதிய தாளாளராக நியமித்தார். அவர் பதவியேற்க பள்ளிக்கு சென்றபோது, ஞானதிரவியம் ஆதரவாளர்கள் அங்கு சென்று மோதலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் நேற்று சி.எஸ்.ஐ. டயோசீசன் அலுவலகத்திற்கு பேராயர் பர்னபாஸ் அணியை சேர்ந்த பாளை இட்டேரியில் சபை நடத்திவரும் மதபோதகரான காட்பிரே நோபுள் என்பவர் சென்றார். அப்போது அங்கு லே செயலாளர் ஜெயசிங் தலைமையிலான அணியினர் திரண்டு காட்பிரே நோபுளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    ஒரு கட்டத்தில் அவரை ஓட ஓட விரட்டி சரமாரியாக அடித்து உதைத்தனர். இது தொடர்பான வீடியோக்கள் வைரலானது.

    இதில் காயம் அடைந்த அவர் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ரத்தக்கறையுடன் சென்று புகார் அளித்தார்.

    அதில், ஞானதிரவியம் எம்.பி. தூண்டுதலின் பேரில் என் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. எனவே என்னை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் மனுவில் கூறியிருந்தார். பின்னர் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

    இந்த புகார் தொடர்பாக விசாரணை நடத்த பாளை போலீஸ் இன்ஸ்பெக்டர் வாசிவத்திற்கு மாநகர போலீஸ் கமிஷனர் போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து மதபோதகரை தாக்கிய புகாரின்பேரில் ஞானதிரவியம் எம்.பி., பாளை பெருமாள்புரத்தை சேர்ந்த ஜான்(வயது 45), டயோசீசன் மேலாளர் மனோகர் உள்பட 12 பேர் மற்றும் கண்டால் அடையாளம் தெரியும் 25 பேர் என மொத்தம் 37 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    அவர்கள் மீது இந்திய தண்டனை சட்டம் 147, 294(பி), 323, 502(2), 109 ஆகிய 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப் பட்டது. இதைத்தொடர்ந்து வழக்கில் தொடர்புடைய ஜான் என்பவரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மாணவ, மாணவிகள் பதாகைகளை ஏந்தி விழிப்புணர்வு பேரணி சென்றனர்.
    • நம்மை சுற்றி உள்ள யாரையும் போதைப் பழக்கத்திற்கு அடிமையாக விடக்கூடாது.

    நெல்லை:

    சர்வதேச போதை ஓழிப்பு தினத்தை முன்னிட்டு நெல்லை மாவட்டத்தில் இன்று அமலாக்க பணியகம், நாட்டு நலப்பணி திட்ட குழுமம் இணைந்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தின.

    விழிப்புணர்வு பேரணி

    முக்கிய சாலைகள், சந்திப்பு பகுதிகளில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் உதவியுடன் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நெல்லை, பாளை தனியார் கல்லூரி மாணவ, மாணவிகள் 250-க்கும் மேற்பட்டோர் போதை ஓழிப்பு பதாகைகளை ஏந்தி விழிப்புணர்வு பேரணி சென்றனர். முன்னதாக, இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மாநகர போலீஸ் துணை கமிஷனர் அனிதா, கல்லூரி மாணவர்கள் மத்தியில் பேசியதாவது:-

    உலக அளவில் போதை ஒழிப்பு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. அது தொடர்பாக விழிப்பு ணர்வு நிகழ்ச்சியில் நீங்கள் எல்லோரும் பங்கு பெற்று இருக்கிறீர்கள். இந்த ஆண்டு இன்னும் 2 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் வரும். அதிலும் நீங்கள் பங்கு கொள்ள வேண்டும். கல்லூரிகளுக்கு ஏன் படிப்பதற்காக வருகி றோம் என்றால் நமது தலைமைத்துவ பண்புகளை வளர்த்துக் கொள்வதற்காக தான்.

    தலைமைத்துவ பண்புகள் என்றால் என்ன? இந்த சமுதாயத்திற்காக நாம் என்ன செய்ய வேண்டும். முதலில் மாணவர்களாகிய நீங்கள் இந்த போதைப் பழக்கத்திற்கு அடிமையாக கூடாது என உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும். 2-வது நம்மை சுற்றி இருக்கிற யாரையும் போதைப் பழக்கத்திற்கு அடிமையாக விடக்கூடாது.

    அதற்காகத்தான் நமது மாவட்டத்தில் நிறைய ஆன்ட்டி டிரக் கிளப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. நான் தவறு செய்ய வில்லை. எனக்கு எதற்கு இதெல்லாம் என்று நீங்கள் நினைக்கலாம்.

    நல்ல தலைமைப் பண்பு கொண்ட ஒரு மாணவன் நம்மை சுற்றி என்ன நடக்கிறது என்பதை நன்கு அறிந்து வைத்திருப்பான். தவறு நடந்தால் அதை தடுக்க முன் நிற்பான். அதற்காகத்தான் அரசு தரப்பில் அமைப்புகள் உள்ளன. அதில் தகவல் தெரிவித்து போதை ஒழிப்பிற்கு எதிராக தங்களது பங்களிப்பை ஆற்றலாம். நீங்கள் நினைத்தால் நெல்லையை போதை இல்லாத மாநகரமாக மாற்ற முடியும். அதற்காகத்தான் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • மதுக்கடையால் மாணவ-மாணவிகள் மட்டுமின்றி பொது மக்களுக்கும் இடையூறு ஏற்படுகிறது.
    • பொது கழிப்பறை இல்லாததால் பொது மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் கார்த்திகேயன் தலைமையில் இன்று நடை பெற்றது. இதில் மாவட்டம் முழுவதும் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்களை வழங்கினர். அம்பை தாலுகா ராமலிங்கபுரம் பகுதி பொதுமக்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    மதுக்கடை

    வி.கே.புரம் நகராட்சி மெயின்சாலையில் ஒரு அரசு மதுக்கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடை அமைந்துள்ள பகுதியை சுற்றிலும் பல்வேறு தெருக்களில் 600 வீடுகளில் சுமார் 3 ஆயிரம் பொதுமக்கள் வசித்து வருகின்றனர். மேலும் இப்பகுதியில் செயல்பட்டு வரும் மேல்நிலைப் பள்ளியில் 1500 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த மதுக்கடையால் மாணவ-மாணவிகள் மட்டுமின்றி பொது மக்களுக்கும் இடையூறு ஏற்படுகிறது. எனவே மதுக்கடையை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    புதுக்குளம் ஊராட்சி சீனிவாசா அவின்யூ பகுதியை சேர்ந்த பொது மக்கள் கொடுத்த மனுவில், எங்கள் பகுதிக்கு குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என கூறியிருந்தனர்.

    பாளையங்கால்வாய்

    திராவிட தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் திருக்குமரன் தலைமையில் வன்னிக்கோனேந்தல் அருகே உள்ள மேசியாபுரத்தை சேர்ந்த மதுரைவீரன் மற்றும் சிலர் கண்ணில் கருப்புதுணி கட்டி வந்து கொடுத்த மனுவில், எங்கள் பகுதியில் 75 குடும்பத்தினர் வசித்து வருகின்றோம். ஆனால் எங்கள் பகுதிக்கு பொது கழிப்பறை இல்லாததால் பொது மக்கள் அவதி யடைந்து வருகின்றனர். எங்கள் கோரிக்கையை ஏற்று கழிப்பிடம் கட்டுவதற்கு பணிகள் தொடங்கிய நிலையில் சிலர் அதனை தடுத்து வருகின்றனர். எனவே உடனடியாக நடவடிக்கை எடுத்து பணிகளை தொடங்க வேண்டும் என கூறியிருந்தனர்.

    சமூகஆர்வலர் சிராஜ் தலைமையில் கொடுத்த மனுவில், பாளையங் கால்வாயில் சாக்கடை கலக்காமலும், ஆக்கிரமிப்பு நடை பெறாமலும் தடுத்து தூய்மையான தண்ணீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தனர்.

    கூட்டத்தில் கலெக்டர் கார்த்திகேயன் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் சார்பில் எடை குறைந்த 5 குழந்தைகளுக்கு செறிவூட்டப்பட்ட பிஸ்கட்டுகளை வழங்கினார்.

    • போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டதை பார்த்து பயந்த செந்தில் முருகன் மோட்டார் சைக்கிளை நிறுத்தாமல் வேகமாக சென்றார்.
    • போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் மேற்கு மண்டல துணை போலீஸ் கமிஷனர் சரவணக்குமார் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    நெல்லை:

    நெல்லை சந்திப்பு சிந்துபூந்துறை வடக்கு செல்லியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் காட்டுராஜா. இவருடைய மகன் செந்தில் முருகன் (வயது 28). இவரது மனைவி சீதா. காட்டுராஜா நெல்லை வண்ணார்பேட்டை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் தற்காலிக லிப்ட் ஆபரேட்டராக பணியாற்றி வந்தார்.

    விபத்தில் பலி

    இவர் நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் நெல்லை சந்திப்பு உடையார்பட்டி சாலையில் ஒரு தியேட்டர் முன்பிருந்து வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

    இதனை பார்த்து பயந்த செந்தில் முருகன் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தாமல் வேகமாக சென்றார். அப்போது எதிரே பழங்களை ஏற்றிக்கொண்டு வந்த லோடு வேன், அவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் அவர் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த உறவினர்கள் மற்றும் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது லோடு வேனின் கண்ணாடி உடைக்கப்பட்டது. தொடர்ந்து அங்கு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த சந்திப்பு போலீஸ் உதவி கமிஷனர் ராஜேஸ்வரன் தலைமையில் போலீசார் அங்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் செந்தில்முருகன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    போக்குவரத்து பாதிப்பு

    போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் மேற்கு மண்டல துணை போலீஸ் கமிஷனர் சரவணக்குமார் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது சிலர் போலீசார் மீது கற்களை வீசினர். இதனால் மேற்கொண்டு அசம்பா விதங்கள் ஏற்படாமல் இருப்பதற்காக போலீசார் லேசான தடியடி நடத்தினர்.

    ஆனாலும் அவர்கள் கலைந்து செல்லாமல் இதுதொடர்பாக போலீசார் பிடித்துச் சென்ற 3 பேரை விடுவித்தால் மட்டுமே சாலை மறியலை கைவிடுவோம் என தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    பேச்சுவார்த்தையில், அவரை விடுவிப்பதாக கூறியதை தொடர்ந்து அவர்கள் சாலைமறியலை கைவிட்டனர். நள்ளிரவு வரை சுமார் 3 மணிநேரத்திற்கும் மேலாக தொடர்ந்த போராட்டத்தினால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மினி வேனை ஓட்டி வந்த மேலப்பாளையத்தை அடுத்த கருங்குளத்தை சேர்ந்த முருகன்(56) என்பவரை கைது செய்து செய்தனர். அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

    • இசக்கிராஜாவுக்கு ஜெபா என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.
    • போலீசார் இசக்கிராஜா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    நெல்லை:

    முக்கூடல் அருகே உள்ள பனையங்குறிச்சியை சேர்ந்தவர் இசக்கிராஜா (வயது 37). இவருக்கு ஜெபா என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். இசக்கிராஜா டிராக்டர் ஓட்டும் வேலை பார்த்து வந்தார். ஜெபா தனியார் பீடிக்கடையில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு வீட்டில் இருந்த இசக்கிராஜா திடீரென தனது அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    தகவல் அறிந்து அங்கு விரைந்து வந்த பாப்பாக்குடி போலீசார் இசக்கிராஜா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சமீப காலமாக கணவன்-மனைவி இடையே குடும்ப பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மனவேதனை அடைந்த இசக்கிராஜா தூக்குப்போட்டு தற்கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • பல கிராமங்கள் போக்குவரத்து வசதி குறைவால் நகரங்களுடன் தொடர்பு இல்லாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.
    • நெல்லையில் ஏராளமான கிராமங்களுக்கு பஸ்கள் குறித்த நேரத்தில் இயக்கப்படுவதில்லை.

    நெல்லை:

    கொரோனா கால கட்டத்தின்போது நெல்லை மாவட்டத்தில் உள்ள கிராமப் புறங்களுக்கு இயக்கப்பட்டு வந்த பெரும் பாலான அரசு பஸ்கள் அடியோடு நிறுத்தப்பட்டது.

    பொது மக்கள் புகார்

    ஆனால் நிலமை சீரான பிறகும் இதுவரை பெரும் பாலான கிராமங்களுக்கு பஸ்கள் இயக்கம் சீராக இல்லை என பெரும்பா லானோர் புகார் கூறி வருகின்றனர். நெல்லையில் இருந்து மூலக்கரைப்பட்டி, முனைஞ்சிப்பட்டி, காரியாண்டி வழியாக திசையன்விளை செல்லும் ஒரு அரசு பஸ் நிறுத்தப் பட்டுவிட்டதாகவும், இதனால் மதியத்திற்கு மேல் ராமகிருஷ்ணாபுரம், காரியாண்டி சுற்றுவட்டார பகுதி மக்கள் திசையன் விளையில் உள்ள தாலுகா அலுவலகத்திற்கும், மாலை யில் நெல்லை போன்ற நகரங்களுக்கு செல்ல முடி யாமலும் தவித்து வருவ தாகவும் அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

    இதேபோல் பல கிராமங்கள் போக்குவரத்து வசதி குறைவால் நகரங்க ளுடன் தொடர்பு இல்லாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. இதனால் அலுவலகம் செல்பவர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் அதிகமாக பாதிப்படை கின்றனர்.

    இதுதவிர நெல்லையில் ஏராளமான கிராமங்களுக்கு பஸ்கள் குறித்த நேரத்தில் இயக்கப்படுவதில்லை. அவை எவ்வித முன்னறிவுப்பும் இன்றி நிறுத்தப்படுகிறது என பயணிகள் கூறுகின்றனர். இதுகுறித்து போக்கு வரத்து கழக அதிகாரிகள் கூறுகையில், நெல்லை, தூத்துக்குடி, நாகர்கோவில் மண்டல ங்களில் மொத்தம் 1, 773 பஸ்கள் உள்ளன. இந்த பஸ்களில் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, நாகர்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் 80 முதல் 85 சதவீத பஸ்களை மட்டுமே இயக்கப்படுகிறது என்றனர்.

    போக்குவரத்து ஊழியர்கள் கூறுகையில், போக்குவரத்து பணி மனைகளில் பெரும்பாலான பஸ்கள் இயக்குவதற்கு டிரைவர், கண்டக்டர்கள் இல்லாமல் ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. குறைவான டிரைவர்களை வைத்துக்கொண்டு, அவர்களுக்கு கூடுதல் பணி நேரத்தை ஒதுக்குகின்றனர் என தெரிவித்தனர்.

    • சாலை அமைப்பதற்காக அப்பகுதியில் ஜல்லி கற்கள் கொட்டப்பட்டு உள்ளது.
    • அங்கு நின்று கொண்டிருந்த ராஜாவிடம் தனக்கு உதவுமாறு சுந்தர் கேட்டுள்ளார்.

    நெல்லை:

    நெல்லை டவுன் வெள்ளந்தாங்கி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜா. (வயது 35). இவர் அதே பகுதியில் உள்ள நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். அப்பகுதியில் சாலை அமைப்பதற்காக ஜல்லி கற்கள் கொட்டப்பட்டு உள்ளது. இதனால் சாலையின் குறுக்கே போக்குவரத்திற்கு இடையூறாக கிடந்த குழாயை அதே பகுதியை சேர்ந்த நகை புரோக்கரான சுந்தர் (வயது 48) என்பவர் ஓரமாக வைக்க முயன்றதாகக் கூறப்படுகிறது.

    அப்போது தனக்கு உதவுமாறு அங்கு நின்று கொண்டிருந்த ராஜாவிடம் சுந்தர் கேட்டுள்ளார். இதில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. சுந்தருக்கு ஆதரவாக அதே பகுதியை சேர்ந்த மேலும் 2 பேர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது ஆத்திரமடைந்த சுந்தர் உட்பட 3 பேர் ராஜாவை கற்களை வீசி தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் டவுன் போலீசார் சுந்தர், சிவராமன் (வயது 28) ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.

    • மேலப்பாளையம் பகுதியை சேர்ந்த பெரும்பாலானவர்கள் மூரி வகையான காளை மாடுகளை அதிகளவு வாங்கிச் சென்றனர்.
    • சந்தையில் அனைத்து வகையான மாடுகளுக்கும் கிராக்கி நிலவியது.

    நெல்லை:

    நெல்லை, மேலப்பாளையம் மாட்டுச்சந்தை ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை நடைபெறும்.

    இந்த சந்தையில் விற்பனைக்கு வரும் மாடுகளை வாங்க நெல்லை, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கேரளா மாநிலத்தில் இருந்தும் வியாபாரிகள் அதிக அளவு வருவார்கள்.

    இன்று நடைபெற்ற மாட்டு சந்தையில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு மாடுகள் விற்பனை களை கட்டியது. பக்ரீத் நெருங்கி வருவதால் வியாபாரிகளும், மாடு வாங்குபவர்களும் மாட்டுச்சந்தையில் கூடினர். ஏற்கனவே கடந்த வாரம் நடந்த மாட்டுச்சந்தையில் மாடு வாங்க முடியாதவர்கள் இந்த வாரம் மாடு வாங்க குவிந்தனர்.

    மேலப்பாளையம் பகுதியை சேர்ந்த பெரும்பாலானவர்கள் மூரி வகையான காளை மாடுகளை அதிகளவு வாங்கிச் சென்றனர். மேலும் சந்தையில் அனைத்து வகையான மாடுகளுக்கும் கிராக்கி நிலவியது. குறிப்பாக வழக்கமான நாட்களை விட இன்று ஒரு மாட்டின் விலை ரூ.3 ஆயிரம் அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    சாதரண நாட்களில் ரூ.15 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்படும் மாடுகள் இன்று ரூ.18 ஆயிரத்திற்கு விற்பனையானது. சந்தையில் விற்பனை தொடங்கிய சில மணி நேரங்களில் 1,000-க்கும் மேற்பட்ட மாடுகள் விற்பனையாகின்றன.

    இதுகுறித்து மாட்டு உரிமையாளர்கள் கூறும்போது, 'மேலப்பாளையம் மாட்டுச்சந்தையில் மாடுகளுக்கு இன்று கிராக்கி நிலவியதால் வழக்கமான நாட்களை விட இன்று நல்ல லாபம் கிடைத்தது' என்றனர்.

    • காந்திமதி அம்பாள் வெள்ளி கமல வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார்.
    • பஞ்ச வாத்தியங்கள் முழங்க சுவாமி-அம்பாள் கோவிலின் வெளியே வந்தனா்.

    நெல்லை:

    தென் தமிழ்நாட்டின் ஜீவநதியாம் தாமிரபரணி ஆற்றின் அருகே அமைந்துள்ள டவுன் நெல்லையப்பர் கோவிலில் ஆனிப் பெருந்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    வெள்ளி சப்பரத்தில் வீதி உலா

    திருவிழாவின் 2-ம் நாளான இன்று காலை வெள்ளி சப்பரத்தில் சுவாமி வீதி உலா நடைபெற்றது. தொடா்ந்து சுவாமி நெல்லையப்பர்-காந்திமதி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

    பின்னர் சுவாமி நெல்லையப்பர் கற்பகவிருட்ச வாகனத்திலும், காந்திமதி அம்பாள் வெள்ளி கமல வாகனத்திலும் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி கொடுத்தனர். தொடா்ந்து சுவாமி அம்பாள், விநாயகா், சுப்பிரமணியா், அஸ்திர தேவா் ஆகியோருக்கு சோடச உபசார தீபாராத னையும், அதனை தொடா்ந்து யாகசாலை தீபாராதனையும் நடை பெறுகிறது.

    பக்தர்கள் தரிசனம்

    பின்னா் பஞ்ச வாத்தியங்கள் முழங்க சுவாமி-அம்பாள் குடவரை வாயில் தீபாராதனையுடன் கோவிலின் வெளியே வந்தனா். நெல்லை சிவகணங்கள் பஞ்ச வாத்ய இசையில் மங்கள வாத்யங்கள் முழங்க 4 ரத வீதிகளிலும் வீதிஉலா நடைபெறுகிறது. அப்போது வேதபாராயணம் மற்றும் சிவனடியாா்களால் பன்னிரு திருமுறை பாரா யணமும் பாடப்படும். இதில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தாிசனம் செய்தனா்.

    தேர்களில் சாரம் கட்டும் பணி

    விழாவின் சிகர நிகழ்ச்சி யாக வருகிற 2-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) தேரோட்டம் நடக்கிறது. மொத்தம் உள்ள 5 தேர்களில் நெல்லையப்பர் தேர் தமிழகத்தின் 3-வது பெரிய தேர் என்ற பெருமை மிக்கதாகும். சுவாமி நெல்லையப்பர் தேரின் எடை 480 டன் ஆகும். இந்த தேர் 85 அடி உயரமாகும்.

    தேரோட்டத்தை முன்னிட்டு தேரில் கூண்டு களை பிரித்து சுத்தம் செய்யும் பணி ஏற்கனவே முடிவடைந்த நிலையில் இன்று தேரில் சாரங்களை பொருத்தி சீரமைக்கும் பணி நடந்து வருகிறது.

    இதில் சுவாமி-அம்பாள் தேர்களில் சாரம் அமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். பெரிய தேரான நெல்லையப்பர் தேரில் சாரம் கட்டும் பணியையொட்டி அந்த பகுதியில் தடுப்புகள் வைக்கப்பட்டு பொது மக்கள் அந்த வழியாக செல்லாத வகையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    ×