என் மலர்tooltip icon

    திருநெல்வேலி

    • சுப்பையா தனக்கு சொந்தமான இடத்தை விநாயகமூர்த்திக்கு எழுதி வைத்துள்ளதாக தெரிகிறது.
    • ஆத்திரம் அடைந்த கோவிந்தராஜ், விநாயக மூர்த்தியை அவதூறாக பேசி தாக்கினார்.

    களக்காடு:

    களக்காடு அருகே உள்ள சிங்கம்பத்து, ஜெக ஜீவன்புரத்தை சேர்ந்தவர் விநாயகமூர்த்தி (வயது 43). கட்டிட தொழிலாளி. இவரது தந்தை சுப்பையா தனக்கு சொந்தமான இடத்தை விநாயகமூர்த்திக்கு எழுதி வைத்துள்ளதாக தெரிகிறது. இதனால் அவருக்கும், அவரது தம்பி கோவிந்தராஜ்க்கும் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வருகிறது.

    சம்பவத்தன்று கோவிந்த ராஜ், தந்தை சுப்பையாவிடம் சென்று மீண்டும் தகராறு செய்தார். இதைப்பார்த்த விநாயகமூர்த்தி தட்டி கேட்டார். இதில் ஆத்திரம் அடைந்த கோவிந்தராஜ், விநாயக மூர்த்தியை அவதூறாக பேசி தாக்கினார்.

    இதையடுத்து காய மடைந்த விநாயகமூர்த்தி சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டார். இது பற்றி களக் காடு போலீ சில் புகார் செ ய்யப் பட்டது. சப்-இன்ஸ் பெக்டர் ரெங்கசாமி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி கோவிந்த ராஜை கைது செய்தார்.

    • முருகனின் பெற்றோர் ஆந்திராவில் தங்கியிருந்து வேலை பார்த்து வருகின்றனர்.
    • நேற்று இரவு முருகன் தனது தாயாருடன் போனில் பேசி விட்டு தூங்க சென்றுள்ளார்.

    நெல்லை:

    மூன்றடைப்பு அருகே உள்ள ஆ.சாத்தான்குளம் ரேஷன் கடை தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மகன் முருகன் (வயது 22). இவரது பெற்றோர் ஆந்திராவில் தங்கியிருந்து வேலை பார்த்து வருகின்றனர். இதனால் அவர்கள் அங்கு குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.

    முருகன் மட்டும் ஊரில் உள்ள வீட்டில் தங்கி இருந்து கட்டிட வேலைக்கு சென்று வந்துள்ளார். நேற்று இரவு முருகன் தனது தாயாருடன் போனில் பேசி விட்டு தூங்க சென்றுள்ளார்.

    இன்று காலை வெகு நேரமாகியும் அவரது வீடு திறக்காமல் இருந்துள்ளது. இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் வீட்டிற்குள் பார்த்தபோது முருகன் தூக்கில் பிணமாக தொங்கி னார்.

    இது குறித்து மூன்றடைப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சங்க உறுப்பினர்கள் இறந்தால் ரூ.50 ஆயிரம் நிதிஉதவி வழங்குவது என தீர்மானிக்கப்பட்டது.
    • விழாவில் இசை நாற்காலி, வாளியில் பந்து போடுதல், பேச்சுப்போட்டி நடை பெற்றது.

    வள்ளியூர்:

    வள்ளியூர் வியாபாரிகள் சங்கத்தின் 90-வது ஆண்டுவிழா நடைபெற்றது. விழாவுக்கு வியாபாரிகள் சங்க தலைவர் என்.முருகன் தலைமை தாங்கி பேசினார். செயலாளர் எஸ்.ராஜ்குமார் ஆண்டறிக்கை வாசித்தார். பொருளாளர் ஜோவின் பார்ச்சுனேட் 2022-2023-ம் ஆண்டிற்கான வரவு செலவு அறிக்கையை வாசித்தார். சங்க ஆடிட்டர் சீராக் இசக்கியப்பன் சங்க கணக்குகள் முறையாக சரியாக இருப்பதாக அறிக்கை அளித்தார். ஆடிட்டர் சந்யானந்த சுப்பிர மணியன் அறிக்கை யை ஜோசப் வாசித்தார். பின்னர் நிர்வாகிகள் அருணா, பாலமுருகன், சிதம்பரகுமார், ஜீவா, கணேசன், கார்த்தீசன், செலின், ராஜேந்திரன், சேதுராமலிங்கம், சுரேஷ், சங்கரன், ரவிசங்கர் ஆகி யோர் வாழ்த்தி பேசினர்.

    கூட்டத்தில் சங்க உறுப்பினர்கள் இறந்தால் ரூ.50 ஆயிரம் நிதிஉதவி வழங்குவது என தீர்மானி க்கப்பட்டது. வள்ளியூர் அரசு மருத்துவ மனையை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தவும், அனைத்து அரசு பஸ்களும் வள்ளியூர் வந்து செல்ல நடவடிக்கை எடுத்த சபாநாயகர் அப்பாவுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. பஸ்நிலைய கட்டுமானப் பணியையும், சந்தை கட்டுமானப்பணியையும் விரைந்து முடிக்க பேரூராட்சி நிர்வாகத்தை கேட்டுக்கொள்ளவது உள்ளிட்ட பல்வேறு தீர்மா னங்கள் நிறை வேற்றப்பட்டது. முன்னதாக வியாபாரிகளின் குழந்தைகளில் பிளஸ்-2 மற்றும் 10-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் முதல் மற்றும் 2-ம் மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு முதல்பரிசாக ரூ.5 ஆயிரம் ரொக்கமும்,கேடயமும் வழங்கப்பட்டது. 2-ம் பரிசாக ரூ.3 ஆயிரம் ரொக்கமும் ,கேடயமும் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து வியாபாரிகளின் குடும்ப விழா கொண்டாடப் பட்டது.

    இவ்விழாவில் இசை நாற்காலி, வாளியில் பந்து போடுதல் மற்றும் பேச்சுப்போட்டி நடை பெற்றது. போட்டிகளை வள்ளியூர் இன்ஸ்பெக்டர் சாகுல் ஹமீது, பேரூராட்சி தலைவி ராதாகிருஷ்ணன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். போட்டிகளில் வெற்றி பெற்ற வர்களுக்கும், பங்கேற்ற அனை வருக்கும் பரிசு வழங்க ப்ப ட்டது. துணைத் தலை வர் ரா தா கிருஷ்ணன் வரவேற்றார். உதவி செய லாளர் எம்.காதர்மைதீன் நன்றி கூறினார்.

    • பாரதி ஓட்டிச் சென்ற லோடு வேன் மோதுவது போல் சென்றதாக கூறப்படுகிறது.
    • பாரதியை மூட்டை தூக்கும் கொக்கியால் வீரமணி தாக்கினார்.

    நெல்லை:

    ஆலங்குளம் பட்டேல் தெருவை சேர்ந்தவர் தங்கமணி. இவரது மகன் பாரதி(வயது 26). இவர் லோடு வாகன டிரைவராக உள்ளார். சம்பவத்தன்று இவர் நெல்லை டவுன் நயினார்குளம் காய்கறி மார்க்கெட்டுக்கு லோடு ஏற்றி வந்தார்.

    மார்க்கெட்டின் உள் பகுதிக்குள் சென்று கொண்டிருந்தபோது எதிரே லோடு மேனாக வேலை பார்த்து வந்த சந்திப்பு குறுக்குத்துறையை சேர்ந்த வீரமணி என்பவர் வந்துள்ளார். அவர் மீது பாரதி ஓட்டிச் சென்ற லோடு வேன் மோதுவது போல் சென்றதாக கூறப்படுகிறது.

    இதில் ஆத்திரம் அடைந்த வீரமணி கையில் வைத்திருந்த மூட்டை தூக்கும் கொக்கியால் பாரதியை தாக்கினார். இதில் காயம் அடைந்த பாரதி தச்சநல்லூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • 15 வயது சிறுமி நாங்குநேரி அருகே உள்ள மில்லில் வேலை பார்த்து வந்தார்.
    • சிறுமியின் பெற்றோர் அவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர்.

    களக்காடு:

    களக்காடு அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுமி நாங்குநேரி அருகே உள்ள மில்லில் வேலை பார்த்து வந்தார். இவரும், மறுகால்குறிச்சியை சேர்ந்த மாடசாமி என்பரது மகன் மெக்கானிக்கான செல்வம்(வயது 23) என்பவரும் கடந்த 2 மாதங்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் கடந்த 25-ந்தேதி வழக்கம்போல் சிறுமி மில்லுக்கு வேலை செல்வதாக கூறிவிட்டு சென்றவர் அதன்பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் அவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். அப்போது சிறுமியை செல்வம் கடத்தி சென்றது தெரியவந்தது.

    இதுபற்றி சிறுமியின் பெற்றோர் நாங்குநேரி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். இதையடுத்து போலீசார் கடத்தல் வழக்குப்பதிவு செய்து செல்வத்தை தேடி வந்த நிலையில் அவரை கைது செய்தனர். மேலும் கடத்தப்பட்ட சிறுமியையும் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

    • பிரதமரின் சமீபத்திய வெளிநாட்டு பயணம் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது.
    • மத்திய அரசு கொண்டுவர போகும் திட்டங்களால் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெற போகிறார்கள்.

    நெல்லை:

    பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் கோவிலில் ஆனிப்பெருந்திருவிழா நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தெலுங்கானா கவர்னரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் இன்று காலை நெல்லையப்பர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார்.


    காந்திமதி அம்பாள் சன்னதியில் தரிசனம் செய்து விட்டு கோவிலை சுற்றி வந்து நெல்லையப்பர் சுவாமியை தரிசனம் செய்தார். அப்போது கோவிலை சுற்றினாலே சர்க்கரை வியாதி, ரத்த அழுத்தம் எதுவும் வராது என்று அவர் கூறினார். தொடர்ந்து ரிஷப வாகனத்தில் வீதி உலா சென்ற சுவாமியையும், அம்பாளையும் வழிபட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தடுப்பூசிகளை போட்டுக் கொண்டதால் இன்று மக்களோடு மக்களாக முகக்கவசமின்றி சுவாமி தரிசனம் செய்ய முடிந்தது. அதிலும் நான் மருத்துவராக இருப்பதால் நம் நாட்டு தடுப்பூசிகளை போட்டுக் கொண்டதால் எனக்கு எப்போதும் பெருமை உண்டு.

    பிரதமரின் சமீபத்திய வெளிநாட்டு பயணம் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனென்றால் இந்த பயணத்தின் போது இந்தியாவின் பெருமை பல மடங்கு உயர்ந்திருக்கிறது. இந்தியாவின் தலைவர் உலகத் தலைவராக மாறி இருப்பதை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

    இதுவரைக்கும் இல்லாத வளர்ச்சியை புதுச்சேரி பார்த்து வருகிறது. 13 வருடம் கழித்து முழு பட்ஜெட்டை தாக்கல் செய்து இருக்கின்றோம். இதற்கு முன்பை விட ரூ. 2 ஆயிரம் கோடி அதிகமாக கிடைத்திருக்கிறது. அதுமட்டுமல்ல பல புதிய திட்டங்களை புதுச்சேரி பொதுப்பணித்துறை அமைச்சர் நிறைவேற்றி இருப்பதாக பட்டியல் போடுகிறார். இதெல்லாம் ஆளுனரின் ஒத்துழைப்பால்தான் நடக்கிறது.

    தமிழ்நாட்டில் குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 திட்டம் இன்னும் வாக்குறுதியாகவே உள்ளது. நாங்கள் 65 ஆயிரம் பேருக்கு ரூ.1000 உடனடியாக கொடுத்துவிட்டோம். இதெல்லாம் ஆளுனரும், முதல்-மந்திரி இணைந்து பணியாற்றியதால்தான் நடந்தது.

    கொரோனா காலத்தில் பணியாற்றிய செவிலியர்களை நிரந்தரமாக்குவது தொடர்பாக சில பிரச்சினைகள் இருக்கிறது. தமிழ்நாட்டில் கூட செவிலியர்கள் போராட்டம் நடத்தினார்கள். நாங்கள் அதை முற்றிலும் புறந்தள்ளவில்லை. அவர்களை நிரந்தரமாக்க முடியாது என்பதால் 3 மாதம், 3 மாதமாக பணி நீட்டிப்பு செய்கிறோம். இன்னும் சொல்லப்போனால் உயர்நீதிமன்றமே நேரடி நியமனத்திற்கு தடை உட்பட சில தடைகளை விதித்து இருக்கிறது. அதை பின்பற்றுவதில் தான் பிரச்சினைகள் வருகிறதே தவிர, இதில் ஆளுனர் அழுத்தம் இல்லை. மற்றுபடி புதுச்சேரி முதல்-மந்திரிக்கும் எனக்கும் உள்ள பிரச்சனையே அண்ணன்-தங்கை பிரச்சினைதான். வேறு எந்த பிரச்சனையும் கிடையாது.

    அதிகாரிகள் தரப்பில் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் வேகம் குறைவாக இருக்கலாம். நான் இதுவரை எந்த கோப்புகளையும் கையெழுத்திடாமல் கிடப்பில் வைக்கவில்லை. கிட்டத்தட்ட 1500 கோப்புகளை கையெழுத்திட்டேன். மார்ச் 31-ந் தேதி முழு நிதிநிலை கிடைக்க வேண்டும் என்பதற்காக இரவு 11.30 மணி வரை கையெழுத்திட்டேன். அதனால் தான் பிரதமர் பெஸ்ட் புதுச்சேரி என்றார். நான் அதிகாரிகளை அழைத்து பணிகளை துரிதப்படுத்த பாஸ்ட் புதுச்சேரி என்றேன்.

    மத்திய அரசு பல நல்ல திட்டங்களை தென் பகுதிக்கு கொண்டு வருகிறது. குறிப்பாக மத்திய மந்திரி நிதின் கட்கரி உள்வட்ட பாதையை தூத்துக்குடி துறைமுக தேசிய நெடுஞ்சாலையோடு இணைப்பது, தூத்துக்குடி துறைமுகத்தில் சரக்கு கப்பல்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவது, குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் என பல திட்டங்கள் வரப்போகிறது. இதன் மூலம் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெற போகிறார்கள். அதுமட்டுமல்ல தூத்துக்குடி விமான நிலையம், சர்வதேச விமான நிலையமாக மாறுவதற்கான வாய்ப்பும் உள்ளது.

    நான் தூத்துக்குடியில் போட்டியிட்ட போது புல்லட் ரெயில் விடப்போவதாக பேசினேன். அப்போது சாதாரண ரெயிலே இல்லை புல்லட் ரெயில் எப்படி கொண்டு வருவீர்கள் என்றார்கள். அது கனவு. தென்பகுதி மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எனது கனவு தான் அது. ஆனால் தற்போது புல்லட் ரெயில் விடுவது தொடர்பாக பேசிக் கொண்டு இருக்கிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. உடனிருந்தார்.

    • குறைந்தபட்சம் ஆடுகள் ரூ.15 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ.65 ஆயிரம் வரையிலும் விற்பனையானது.
    • உசிலம்பட்டியில் இருந்து வந்த நாட்டு செம்மறி ஆடு ரூ.65 ஆயிரத்துக்கு விலை போனது.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சி மேலப்பாளையம் மண்டலத்தில் கால்நடை சந்தை இயங்கி வருகிறது. இங்கு ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை மாடு விற்பனையும், செவ்வாய்க்கிழமை ஆடுகள் விற்பனையும் நடக்கிறது.

    இங்கு அண்டை மாவட்டங்களான தென்காசி, விருதுநகர், தூத்துக்குடி மட்டுமல்லாது கேரளா உள்ளிட்ட மாநிலத்தில் இருந்தும் வியாபாரிகள் ஆடுகள் வாங்குவதற்கு வருவார்கள். வருகிற 29-ந்தேதி (வியாழக்கிழமை) பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுவதால் இஸ்லாமியர்கள் அதிக அளவில் ஆடுகள், மாடுகளை வாங்கி குர்பானி கொடுப்பது வழக்கம். இதனையொட்டி இன்று மேலப்பாளையம் கால்நடை சந்தையில் அதிக அளவில் ஆடுகள் விற்பனைக்காக குவிந்தன. இதனால் சந்தை களைகட்டி காணப்பட்டது.

    இங்கு நெல்லை, தூத்துக்குடி, கோவில்பட்டி, விளாத்திகுளம், ஆலங்குளம் மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் தாங்கள் வளர்க்கும் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். பண்டிகையையொட்டி இந்த ஆண்டு ஆந்திரா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்கள் மற்றும் விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் வியாபாரிகள் வந்திருந்தனர். இன்று காலை 6 மணி முதல் சந்தை தொடங்கியதில் இருந்தே கூட்டம் அதிகமாக காணப்பட்டது. சுமார் 3,500-க்கும் அதிகமான டோக்கன்கள் சந்தையில் வினியோகிக்கப்பட்டது. வெள்ளாடு, செம்மறி கிடா, மயிலம்பாடி, பொட்டுக்குட்டி, வேலி ஆடு, கொர ஆடு, பிள்ளை போர், கரும்போர் என பல்வேறு வகைகளை சேர்ந்த ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தது.

    குறைந்தபட்சம் ஆடுகள் ரூ.15 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ.65 ஆயிரம் வரையிலும் விற்பனையானது. குறிப்பாக உசிலம்பட்டியில் இருந்து வந்த நாட்டு செம்மறி ஆடு ரூ.65 ஆயிரத்துக்கு விலை போனது. விலை சற்று அதிகமானாலும் பக்ரீத் பண்டிகை முன்னிட்டு பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் ஆடுகளை போட்டி போட்டு வாங்கிச் சென்றனர். சுமார் 6 கோடி ரூபாய்க்கும் அதிகமாக விற்பனை இருந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • இசக்கியப்பன்,தாயப்பனுக்கு இடையே முன்விரோதம் இருந்து வருகிறது.
    • தாயப்பன், கிருஷ்ணன் என்ற கிட்டு ஆகியோர் ராஜாவை கம்பால் தாக்கினர்.

    களக்காடு:

    களக்காடு அருகே உள்ள படலையார்குளம், கீழத்தெருவை சேர்ந்தவர் இசக்கியப்பன் (வயது38). இவருக்கும், அதே ஊரை சேர்ந்த தாயப்பனுக்கும் (45) ஆடுகள் மேய்ப்பது தொடர்பாக தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வருகிறது.

    நேற்று மூங்கிலடி பகுதியில் இசக்கியப்பனின் ஆடுகளை அவரிடம் வேலை பார்க்கும் ராஜா (22) மேய்த்து கொண்டிருந்தார். அப்போது தாயப்பனும் அங்கு ஆடுகளை மேய்க்க வந்தார். இருவருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த தாயப்பன், அவரது மகன் கிருஷ்ணன் என்ற கிட்டு (18) ஆகியோர் சேர்ந்து ராஜாவை கம்பால் தாக்கினர். இதுபோல இசக்கியப்பன், படலை யார்குளத்தை சேர்ந்த இசக்கி (27), ராஜா (22), மற்றும் 7 பேர் சேர்ந்து தாயப்பனை கம்பால் தாக்கினர். இந்த மோதலில் ராஜா, தாயப்பன் காயமடைந்தனர்.

    இது குறித்து இரு தரப்பினரும் தனித்தனியாக களக்காடு போலீசில் புகார் செய்தனர். சப்-இன்ஸ்பெக்டர் வேலம்மாள் இதுதொடர்பாக இது தரப்பையும் சேர்ந்த 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • கூட்டத்தில் பொதுமக்கள் அளித்த புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது
    • நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் தென்மேற்கு பருவக்காற்று அதிகமாக இருக்கிறது.

    நெல்லை:

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பாக நெல்லை மின் பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட கல்லிடைக்குறிச்சி கோட்டத்தில் மின் நுகர்வோர் குறை தீர்க்கும் முகாம் செயற் பொறியாளர் அலுவலகம் அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு நெல்லை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை மின் பொறியாளர் குருசாமி கலந்து கொண்டு பொதுமக்கள் அளித்த புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று செயற்பொறியாளர் கல்லிடைக்குறிச்சி கோட்டம் சுடலையாடும் பெருமாள் மற்றும் ஏனைய அதிகாரி களுக்கும் உத்தரவிட்டார். இந்நிகழ்ச்சியில் கல்லிடைக்குறிச்சி கோட்டத்திற்கு உட்பட்ட அனைத்து மின் பொறியாளர்களும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பொறியாளர்கள் மற்றும் அலுவலர்கள் மத்தியில் மேற்பார்வை மின் பொறியாளர் பேசுகையில், நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் தென்மேற்கு பருவக்காற்று அதிகமாக இருக்கிறது.

    இதனால் அனைத்து மின் பொறியாளர்களும் தொடர் கண்காணிப்பில் பணிபுரிந்து மின் தடங்கள் ஏற்பட்டால் உடனடியாக மின் வினியோகம் வழங்குவதற்கு அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என உத்தரவிட்டார். மேலும் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரங்களில் வனவிலங்கு களை மின் விபத்துகளில் இருந்து பாதுகாக்கும் பொருட்டு தொடர்ச்சியாக வனத்துறையுடன் இணைந்து ஆய்வு பணி மேற்கொண்டு வனவிலங்கு களால் மின்பாதைகள், மின் கம்பங்கள் சேதம் ஏற்பட்டால் உடனடியாக சரி செய்வதற்கு உத்தரவிட்டார்.

    கல்லிடைக்குறிச்சி கோட்ட த்திற்கு உட்பட்ட சுற்றுலாத் தலங்களுக்கு பொதுமக்கள் அதிக அளவில் வருவதால் சுற்றுலா தலங்களுக்கு தங்கு தடையின்றி மின் வினியோகம் வழங்க உத்தரவிட்டார். மேலும் மின் நுகர்வோர்கள் கேட்கின்ற வினாக்களுக்கு உரிய பதிலை கனிவுடன் தெரிவிக்க அறிவுரை வழங்கினார். பொதுமக்கள் மின்சாரம் சம்பந்தமாக ஏதேனும் உதவி தேவைப்பட்டால் மின்னகம் மின் நுகர்வோர் சேவை மையம் தொலைபேசி எண் 94987 94987 தொடர்பு கொண்டு மின்சாரம் சம்பந்தமான அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்து கொள்ளலாம்.

    • நாங்குநேரி-களக்காடு சாலையில் போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
    • இருவரும் போலீசாரை பார்த்து அரிவாளை காட்டி மிரட்டல் விடுத்தனர்.

    களக்காடு:

    நாங்குநேரி சப்-இன்ஸ்பெக்டர் கணபதி மற்றும் போலீசார் நேற்று நாங்குநேரி-களக்காடு சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை நிறுத்தினர்.

    இதனை தொடர்ந்து இருவரும் போலீசாரை பார்த்து அரிவாளை காட்டி, மோட்டார் சைக்கிளை ஏற்றி கொலை செய்து விடுவோம் என்று மிரட்டல் விடுத்தனர். விசாரணையில் அவர்கள் நெல்லை டவுன் கரிக்கா தோப்ப்பு பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த மாரியப்பன் (43), பாட்டாபத்து, தேவிபுரத்தை சேர்ந்த மணிமுருகன் (43) என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் 2 பேரையும் கைது செய்தனர்.

    • 250 பேர் பங்கேற்ற பேரணி தாழையூத்து மெயின் பஜார் வழியாக சங்கர்நகர் நிறுத்தத்தை வந்து அடைந்தது.
    • நிகழ்ச்சியின் போது போதை பொருளுக்கு எதிரான உறுதிமொழி எடுக்கப்பட்டது.

    நெல்லை:

    போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி சங்கர் பாலிடெக்னிக் கல்லூரி என்.எஸ்.எஸ். அதிகாரிகள், தன்னார்வலர்கள், மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் மூலமாக நடத்தப்பட்டது. கல்லூரி முதல்வர் சங்கர சுப்பிரமணியன், நிர்வாக அதிகாரி ஸ்ரீனிவாசன் உள்ளிட்ட 250 பேர் பங்கேற்ற பேரணி தாழையூத்து பஸ் நிறுத்தத்தில் இருந்து மெயின் பஜார் வழியாக சங்கர்நகர் நிறுத்தத்தை வந்து அடைந்தது.

    பேரணியின் போது தன்னார்வலர்கள் போதைப் பொருட்களுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியும், கோஷங்களை எழுப்பியும் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். தொடர்ந்து டி.எஸ்.பி. ஆனந்தராஜ், இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன், சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ் , கல்லூரி முதல்வர் சங்கர சுப்பிரமணியன், நிர்வாக அதிகாரி சீனிவாசன் ஆகியோர் முன்னிலையில் போதை பொருளுக்கு எதிரான உறுதிமொழி எடுக்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாட்டினை என்.எஸ்.எஸ். அலுவலர்கள் செல்வராஜ், பாலமுருகன் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து செய்திருந்தனர்.

    • சிறப்பு பிரார்த்தனையில், உயிரிழந்தவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
    • பனிமாதா பேராலயத்தில் பங்கு தந்தை ஜெரால்டு எஸ். ரவி தலைமையில் பங்கு மக்கள் சிறப்பு பிரார்த்தனை செய்தனர்.

    வள்ளியூர்:

    மணிப்பூர் மாநிலத்தில் நடந்து வரும் கலவரத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும், அம்மாநிலத்தில் அமைதி திருப்ப வேண்டியும் நெல்லை மாவட்டம் தெற்கு கள்ளிகுளம் பரிசுத்த அதிசய பனிமாதா பேராலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

    அப்போது உயிரிழந்த வர்களுக்கு மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும் அம்மாநிலத்தில் அமைதி ஏற்பட்டு மக்கள் இயல்பு வாழ்க்கை நிலைக்கு திரும்பவேண்டும் என பனிமாதா பேராலயத்தில் பங்கு தந்தை ஜெரால்டு எஸ். ரவி தலைமையில் பங்கு மக்கள் சிறப்பு பிரார்த்தனை செய்தனர்.

    குறிப்பாக 53 மணி ஜெபமாலை ஏறெடுக்கப்பட்டது. இந்த பிரார்த்தனையில் உதவி பங்கு தந்தை வளன்அரசு, தர்மகர்த்தா மருத்துவர் ஜெபஸ்டின் ஆனந்த் மற்றும் ஊர்மக்கள் கலந்து கொண்டனர்.

    ×