என் மலர்
உள்ளூர் செய்திகள்

செந்தில் முருகன்.
நெல்லை சந்திப்பில் விபத்தில் பலி- வாலிபர் உயிரிழப்புக்கு காரணமான மினி வேன் டிரைவர் கைது
- போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டதை பார்த்து பயந்த செந்தில் முருகன் மோட்டார் சைக்கிளை நிறுத்தாமல் வேகமாக சென்றார்.
- போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் மேற்கு மண்டல துணை போலீஸ் கமிஷனர் சரவணக்குமார் பேச்சுவார்த்தை நடத்தினார்.
நெல்லை:
நெல்லை சந்திப்பு சிந்துபூந்துறை வடக்கு செல்லியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் காட்டுராஜா. இவருடைய மகன் செந்தில் முருகன் (வயது 28). இவரது மனைவி சீதா. காட்டுராஜா நெல்லை வண்ணார்பேட்டை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் தற்காலிக லிப்ட் ஆபரேட்டராக பணியாற்றி வந்தார்.
விபத்தில் பலி
இவர் நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் நெல்லை சந்திப்பு உடையார்பட்டி சாலையில் ஒரு தியேட்டர் முன்பிருந்து வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
இதனை பார்த்து பயந்த செந்தில் முருகன் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தாமல் வேகமாக சென்றார். அப்போது எதிரே பழங்களை ஏற்றிக்கொண்டு வந்த லோடு வேன், அவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த உறவினர்கள் மற்றும் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது லோடு வேனின் கண்ணாடி உடைக்கப்பட்டது. தொடர்ந்து அங்கு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த சந்திப்பு போலீஸ் உதவி கமிஷனர் ராஜேஸ்வரன் தலைமையில் போலீசார் அங்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் செந்தில்முருகன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
போக்குவரத்து பாதிப்பு
போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் மேற்கு மண்டல துணை போலீஸ் கமிஷனர் சரவணக்குமார் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது சிலர் போலீசார் மீது கற்களை வீசினர். இதனால் மேற்கொண்டு அசம்பா விதங்கள் ஏற்படாமல் இருப்பதற்காக போலீசார் லேசான தடியடி நடத்தினர்.
ஆனாலும் அவர்கள் கலைந்து செல்லாமல் இதுதொடர்பாக போலீசார் பிடித்துச் சென்ற 3 பேரை விடுவித்தால் மட்டுமே சாலை மறியலை கைவிடுவோம் என தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தையில், அவரை விடுவிப்பதாக கூறியதை தொடர்ந்து அவர்கள் சாலைமறியலை கைவிட்டனர். நள்ளிரவு வரை சுமார் 3 மணிநேரத்திற்கும் மேலாக தொடர்ந்த போராட்டத்தினால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மினி வேனை ஓட்டி வந்த மேலப்பாளையத்தை அடுத்த கருங்குளத்தை சேர்ந்த முருகன்(56) என்பவரை கைது செய்து செய்தனர். அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.






