என் மலர்tooltip icon

    தஞ்சாவூர்

    • பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
    • ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    மாமன்னர் ராஜராஜசோழனால் கட்டப்பட்ட உலக பிரசித்தி பெற்ற தஞ்சை பெரிய கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் வருகை தருகின்றனர். சிறந்த சுற்றுலா தலமாகவும், ஆன்மிக தலமாகவும் பெரியகோவில் விளங்கி வருகிறது.

    தஞ்சாவூர் பெரியகோவிலில் ஆண்டுதோறும் பல்வேறு விழாக்கள் நடைபெறும். அதில் 18 நாட்கள் வெகுவிமரிசையாக நடைபெறும் சித்திரை திருவிழா பிரசித்தி பெற்றது. அதன்படி, இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா கடந்த மாதம் (ஏப்ரல்) 23-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, காலை, மாலை வேளைகளில் சுவாமி-அம்பாள் புறப்பாடு ராஜவீதிகளில் நடைபெற்றது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. தேரோட்டத்தை முன்னிட்டு அதிகாலை 5 மணிக்கு தியாகராஜர், கமலாம்பாள், விநாயகர், நீலோத்பலாம்பாள், வள்ளி, தெய்வானை உடனுறை சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகள் முத்துமணி அலங்காரத்தில் கோவிலில் இருந்து புறப்பட்டு, மேலவீதியில் உள்ள தேர்நிலை மண்டபத்துக்கு வந்தடைந்தனர். பின்னர், அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளிய தியாகராஜர், கமலாம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    இதையடுத்து காலை 6 மணிக்கு தேரோட்டத்தை மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம், முரசொலி எம்.பி, போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம், மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, ஆணையர் கண்ணன், அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா போன்ஸ்லே, சதய விழாக்குழு தலைவர் செல்வம் உள்ளிட்ட பலர் வடம் பிடித்து தொடங்கி வைத்தனர்.

    தொடர்ந்து, தேருக்கு முன்பாக விநாயகர், சுப்பிரமணியர் சப்பரங்களும், பின்னால் நீலோத்பலாம்பாள், சண்டிகேஸ்வரர் சப்பரங்களும் பின் தொடர்ந்து செல்ல தியாகராஜர்-கமலாம்பாள் எழுந்தருளிய தேர் பக்தர்கள் வெள்ளத்தில் அசைந்தாடி சென்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு 'ஆரூரா, தியாகேசா' என்ற பக்தி முழக்கத்துடன் வடம் பிடித்து தேரை இழுத்து சென்றனர். பக்தர்களின் பக்தி கோஷம் விண்ணை முட்டியது. தேரானது 4 ராஜவீதிகளில் அசைந்தாடி சென்ற காட்சி பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்தது.

    மொத்தம் 14 இடங்களில் நிறுத்தப்பட்டு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டு, அர்ச்சனை நடைபெற்றது. பக்தர்கள் தேங்காய், பழம் கொடுத்து அர்ச்சனை செய்தனர். இன்று பிற்பகலில் தேர் நிலையை வந்தடையும்.

    தேரோட்ட விழாவில் தஞ்சை மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள், வெளிமாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் உத்தரவின்படி ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். நடமாடும் மருத்துவ குழுவினரும், தீயணைப்பு துறை வாகனமும் தேரை பின்தொடர்ந்தவாறு சென்றது. பெரிய கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் திரண்டதால் தஞ்சை மாநகரமே விழாக்கோலம் பூண்டது. 

    • நீண்ட நேரம் ஆகியும் மனைவி வீட்டிற்கு வராததால் அவரை தேடி பாலன் வந்துள்ளார்.
    • கபிலனுக்கும், சரண்யாவுக்கும் பிரச்சனை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    பட்டுக்கோட்டை:

    மதுரை சம்மட்டிபுரத்தை சேர்ந்தவர் சரண்யா (வயது 35). முன்னாள் மதுரை மாநகர பா.ஜ.க. துணை தலைவராக இருந்தார். இவரது கணவர் சண்முக சுந்தரம். இவர்களுக்கு சாமுவேல் (15), சரவணன் (13) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். இவர்கள் குடும்பத்துடன் மதுரைவில் வாழ்ந்து வந்துள்ளனர். இந்த நிலையில், கடந்த 2021-ம் ஆண்டு எதிர்பாராத விதமாக சண்முகசுந்தரம் இறந்து விட்டார்.

    இதனால் மனமுடைந்த சரண்யா கணவனை இழந்த துக்கத்தில் இருந்துள்ளார். மேலும் சில ஆண்டுகளுக்கு முன்பு இவர் 2-வது திருமணம் செய்ததாக கூறப்படுகிறது. அதிலும் பிரச்சனை ஏற்படவே சரண்யா 2-வது கணவரிடம் இருந்து பிரிந்தார்.

    பின்னர், தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே கழுகப்புலிக்காடு கிராமத்தை சேர்ந்த பாலன் (45) என்பவரை 3-வதாக சரண்யா திருமணம் செய்து கொண்டார். தொடர்ந்து, பாலன், சரண்யா, சாமுவேல், சரவணன் ஆகியோர் பட்டுக்கோட்டை அருகே உதயசூரியபுரம் மீன் மார்க்கெட் சந்து பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளனர்.

    அதே பகுதியில், பாலன் தனியார் டிராவல்ஸ் நிறுவனமும், சரண்யா ஜெராக்ஸ் கடையும் வைத்து குடும்பத்தை நடத்தி வந்துள்ளனர். கடை, வீடு, குடும்பம் என அவர்கள் சந்தோஷமாக வாழ்வை கழித்து வந்துள்ளனர். தினமும் அவர்கள் காலையில் வீட்டில் இருந்து புறப்பட்டு அவரவர்கள் கடைக்கு வந்து வேலையை தொடங்குவர். பின்னர், இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு வருவர்.

    வழக்கம்போல், நேற்றும் கடையை பூட்டி விட்டு பாலன் மற்றும் அவரது மகன்கள் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு கிளம்பி உள்ளனர். சரண்யா மட்டும் அவரது கடையை பூட்டிவிட்டு சுமார் 1 கி.மீ தூரம் உள்ள வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

    இதனை நோட்டமிட்ட மர்மநபர்கள் சிலர் சரண்யாவை பின் தொடர்ந்துள்ளனர். பின்னர், ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் வைத்து சரண்யாவை சுற்றி வளைத்து, அவர்கள் மறைத்து வைத்திருந்த பயங்கர ஆயுதங்களால் சரண்யாவை கழுத்து மற்றும் தலையின் பின்பகுதியில் சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பியோடினர். இதில் தலை துண்டிக்கப்பட்டு சரண்யா சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.

    நீண்ட நேரம் ஆகியும் மனைவி வீட்டிற்கு வராததால் அவரை தேடி பாலன் வந்துள்ளார். அப்போது வீட்டின் அருகில் ரத்த வெள்ளத்தில் சரண்யா பிணமாக கிடந்துள்ளார். இதனை கண்ட பாலன் அவரது உடலை பார்த்து கதறி துடித்துள்ளார்.

    பின்னர், இதுகுறித்து வாட்டாத்திக்கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக விரைந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பின்னர், முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு காரணமா? உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    மேலும், கொலை நடந்த இடத்தில் போலீசார் குவிக்கப்பட்டு தடயங்கள் எதுவும் கிடைக்கின்றதா? என தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் கொலை தொடர்பாக கபிலன், குகன், பார்த்திபன் ஆகிய 3 பேர் மதுரை மாவட்ட கோர்ட்டில் இன்று மதியம் சரணடைந்தனர்.

    கொலையுண்ட சரண்யாவின் கணவர் பாலன் மகன் கபிலன் ஆவார். இவருக்கு சொத்துக்களை பிரித்து தர சரண்யா கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் கபிலனுக்கும், சரண்யாவுக்கும் பிரச்சனை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் ஏற்பட்ட விரோதத்தில் சரண்யா கொலை செய்யப்பட்டிருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

    • சரண்யா என்பவர் மதுரை மாநகர பாஜக மகளிர் அணி நிர்வாகியாக உள்ளார்.
    • திருமணம் முடிந்த நிலையில், சரண்யா தந்து கணவருடன் பட்டுக்கோட்டையில் வசித்து வந்தார்.

    பட்டுக்கோட்டையில் முன்னாள் பாஜக பெண் நிர்வாகியை மர்ம கும்பல் தலை துண்டித்து கொலை செய்து விட்டு தப்பி உள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பான சூழல் நிலவுகிறது.

    மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர் சரண்யா (வயது 35). முன்னாள் மதுரை மத்திய மாநகர பாஜக பிரமுகராக இருந்தார். இவரது கணவர் சண்முக சுந்தரம். இவர்களுக்கு சாமுவேல் (15), சரவணன் (13) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். இவர்கள் குடும்பத்துடன் மதுரைவில் வாழ்ந்து வந்துள்ளனர். இந்த நிலையில், கடந்த 2021-ம் ஆண்டு எதிர்பாராத விதமாக சண்முகசுந்தரம் இறந்து விட்டார்.

    இதனால் மனமுடைந்த சரண்யா கணவனை இழந்த துக்கத்தில் இருந்துள்ளார். பின்னர், தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே கழுகப்புலிக்காடு கிராமத்தை சேர்ந்த பாலன் (45) என்பவரை 2-வது திருமணம் செய்து கொண்டார். தொடர்ந்து, பாலன், சரண்யா, சாமுவேல், சரவணன் ஆகியோர் பட்டுக்கோட்டை அருகே உதயசூரியபுரம் மீன் மார்க்கெட் சந்து பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளனர்.

    அதே பகுதியில், பாலன் தனியார் டிராவல்ஸ் நிறுவனமும், சரண்யா ஜெராக்ஸ் கடையும் வைத்து குடும்பத்தை நடத்தி வந்துள்ளனர். கடை, வீடு, குடும்பம் என அவர்கள் சந்தோஷமாக வாழ்வை கழித்து வந்துள்ளனர். தினமும் அவர்கள் காலையில் வீட்டில் இருந்து புறப்பட்டு அவரவர்கள் கடைக்கு வந்து வேலையை தொடங்குவர். பின்னர், இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு வருவர்.

    வழக்கம்போல், நேற்றும் கடையை பூட்டி விட்டு பாலன் மற்றும் அவரது மகன்கள் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு கிளம்பி உள்ளனர். சரண்யா மட்டும் அவரது கடையை பூட்டிவிட்டு சுமார் 1 கி.மீ தூரம் உள்ள வீட்டிற்கு நடந்து சென்று கொண்டி ருந்தார்.

    இதனை நோட்டமிட்ட மர்மநபர்கள் சிலர் சரண்யாவை பின் தொடர்ந்துள்ளனர். பின்னர், ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் வைத்து சரண்யாவை சுற்றி வளைத்து, அவர்கள் மறைத்து வைத்திருந்த பயங்கர ஆயுதங்களால் சரண்யாவை கழுத்து மற்றும் தலையின் பின்பகுதியில் சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பியோடினர். இதில் தலை துண்டிக்கப்பட்டு சரண்யா சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.

    நீண்ட நேரம் ஆகியும் மனைவி வீட்டிற்கு வராததால் அவரை தேடி பாலன் வந்துள்ளார். அப்போது வீட்டின் அருகில் ரத்த வெள்ளத்தில் சரண்யா பிணமாக கிடந்துள்ளார். இதனை கண்ட பாலன் அவரது உடலை பார்த்து கதறி துடித்துள்ளார்.

    பின்னர், இதுகுறித்து வாட்டாத்திக்கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக விரைந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பின்னர், முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு காரணமா? உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    மேலும், கொலை நடந்த இடத்தில் போலீசார் குவிக்கப்பட்டு தடயங்கள் எதுவும் கிடைக்கின்றதா? என தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • உலக பிரசித்தி பெற்ற தஞ்சை பெரிய கோவில் மாமன்னர் ராஜராஜ சோழனால் கட்டப்பட்டது.
    • பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா 18 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

    தஞ்சாவூர்:

    உலக பிரசித்தி பெற்ற தஞ்சை பெரிய கோவில் மாமன்னர் ராஜராஜ சோழனால் கட்டப்பட்டது. கட்டிட கலையில் சிறந்து விளங்கும் இக்கோவிலுக்கு தினமும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.

    மேலும், பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா 18 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான விழா கடந்த 23-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக பஞ்சமூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் கொடிமரம் முன்பு எழுந்தருளினர். தொடர்ந்து, கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்று, கொடியேற்றப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    விழா நாட்களில் தினமும் காலை, மாலை வேளைகளில் சுவாமி புறப்பாடும், பரதநாட்டிய நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் அடுத்த மாதம் (மே) 7-ந்தேதி நடைபெற உள்ளது.

    இதனையொட்டி தஞ்சை மேல வீதியில் உள்ள பெரிய கோவில் தேர் நிலையில் பந்தக்கால் முகூர்த்தம் இன்று (புதன்கிழமை) காலை நடைபெற்றது. முன்னதாக பந்தக்காலுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டு தேரில் பந்தக்கால் நடப்பட்டது. இதில் கோவில் பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா பான்ஸ்லே, இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் கவிதா, கோவில் செயல் அலுவலர் சத்யராஜ், கண்காணி ப்பாளர் ரவி, ஆய்வாளர் பாபு மற்றும் பணியாளர்கள், பக்தர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.

    • நாட்டு வெடிகுண்டுகள் வெடித்ததில் சுவர், ஓடுகள் சேதமடைந்தன.
    • நாட்டு வெடிகுண்டுகளை வீசி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    தஞ்சை அருகே ரெங்கநாதபுரத்தில் அ.தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் ஊராட்சி தலைவர் வீடு மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

    நள்ளிரவில் பாலமுருகன் வீட்டின் மீது நாட்டு வெடிகுண்டுகளை மர்ம நபர்கள் வீசிச்சென்றனர். நாட்டு வெடிகுண்டுகள் வெடித்ததில் சுவர், ஓடுகள் சேதமடைந்தன. யாருக்கும் காயமில்லை.

    அ.தி.மு.க. பிரமுகர் வீடு மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதல் சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து திருக்காட்டுப்பள்ளி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் நாட்டு வெடிகுண்டுகளை வீசி சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    • ஹேமாஸ்ரீ என்பவரை பதிவு திருமணம் செய்து கொண்டதால் சர்ச்சை.
    • ஆத்திரமடைந்த கிராமமக்கள் அவரை கண்டித்து கண்டன வாசகங்கள்.

    சுவாமிமலை:

    மகாலிங்கசுவாமி மீண்டும் சூரியனார் கோவில் ஆதீனத்திற்கு வர உள்ளதாக தகவல்கள் வெளியானதை அடுத்து அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கும்பகோணம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கிராம மக்கள் கண்டன போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர்.

    தஞ்சாவூர் மாவட்டம், ஆடுதுறை அருகே சூரியனார்கோவில் ஆதீனமாக திருவாவடுதுறை ஆதீனத்தில் தம்பிரானாக இருந்த ஸ்ரீலஸ்ரீ மகாலிங்க தேசிக பண்டார சுவாமிகள் 28-வது குருமகா சன்னிதானமாக நியமிக்கப்பட்டு நிர்வாகம் செய்தார்.

    54 வயதான இவர் கடந்த ஆண்டு (2024) அக்டோபர் மாதம் பெங்களூருவை சேர்ந்த ஹேமாஸ்ரீ (47) என்பவரை பதிவு திருமணம் செய்து கொண்டார். இது காட்டுத்தீபோல் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    தொடர்ந்து, கடந்த ஆண்டு நவம்பர் 12-ந்தேதி மகாலிங்க சுவாமிகள் ஆதீன மடத்தில் இருந்து வெளியேற வேண்டும் என கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் சூரியனார்கோவில் ஆதீன நிர்வாக பொறுப்புகளை, அறநிலையத்துறையிடம், மகாலிங்கசுவாமி ஒப்படைத்து யாத்திரை புறப்பட்டார்.

    இந்த நிலையில், மகாலிங்கசுவாமி மீண்டும் சூரியனார் கோவில் ஆதீனத்திற்கு வர உள்ளதாக தகவல்கள் வெளியானது. இதனால் ஆத்திரமடைந்த கிராமமக்கள் அவரை கண்டித்து கண்டன வாசகங்கள் அடங்கிய போஸ்டர்களை சுற்றுவட்டாரப் பகுதி முழுவதும் ஒட்டியுள்ளனர்.

    அந்த போஸ்டரில், மகாலிங்க சுவாமியின் சமீப கால செயல்பாடுகளின் விமர்சனங்களும், அவரது திருமணத்தை குறித்த விமர்சனங்களும், அவரது படங்களுடன் கூடிய வாசகங்கள் இடம் பெற்றிருக்கிறது.

    மகாலிங்க சுவாமிகள் மீண்டும் சூரியனார் கோவில் ஆதீனத்திற்கு வரக்கூடாது என்ற வகையில், அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

    • தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்வதால் மருத்துவமனை எப்போதும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும்.
    • தீ விபத்து நடந்த அறையில் இருந்த பெண்கள் வேறு வார்டுக்கு பத்திரமாக மாற்றப்பட்டனர்.

    தஞ்சாவூா்:

    தஞ்சாவூா் பழைய பஸ் நிலையம் அருகில் அரசு ராசா மிராசுதார் மருத்துவமனை அமைந்துள்ளது. தஞ்சை மாவட்டம் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஏராளமானோர் தினமும் ராசா மிராசுதார் மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். குறிப்பாக இந்த மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்களுக்கு பிரசவம் அதிக அளவில் நடந்து வருகிறது.

    இதற்காக மருத்துவமனையில் பிரசவ வார்டுக்கு என்று தனி கட்டிடம் இயங்கி வருகிறது. இங்கு தினமும் ஏராளமான பிரசவம் நடந்து வருகின்றன. மேலும் பிரசவத்திற்காக கர்ப்பிணி பெண்களும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்வதால் மருத்துவமனை எப்போதும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும்.

    இந்த நிலையில் இன்று மதியம் திடீரென பிரசவ வார்டின் முதல் தளத்தில் தீ பற்ற தொடங்கியது. சிறிது நேரத்தில் தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதனால் பிரசவத்திற்காக வந்திருந்த கர்ப்பிணி பெண்கள், உடன் வந்த உறவினர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் அலறி அடித்துக்கொண்டு வெளியேறினர். அப்போது மருத்துவமனையில் பொருத்தப்பட்டுள்ள தீயணைப்பான் கருவிக்கொண்டு ஊழியர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    மேலும் தகவல் அறிந்து உடனடியாக தஞ்சாவூர் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தண்ணீர் பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    உடனடியாக தீயை அணைத்ததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. மேலும் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம், போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் ஆகியோர் அரசு மருத்துவமனைக்கு வந்து ஆய்வு செய்து துரித நடவடிக்கை மேற்கொண்டனர்.

    இதையடுத்து தீ விபத்து நடந்த அறையில் இருந்த பெண்கள் வேறு வார்டுக்கு பத்திரமாக மாற்றப்பட்டனர்.

    ஏ.சி.யில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக தீ விபத்து நடந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இருந்தாலும் மின்கசிவு காரணமாக தீ விபத்து நடந்ததா ? அல்லது வேறு ஏதேனும் காரணமா ? என்ற பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அரசு மருத்துவமனையில் தீ விபத்து நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

    • இன்று மாலை பஞ்ச மூர்த்திகள் படிச்சட்டத்தில் புறப்பாடு நடக்கிறது.
    • விழாவின் கடைசி நாளான 10-ந் தேதி தீர்த்தவாரி.

    தஞ்சாவூர்:

    உலக பிரசித்தி பெற்ற தஞ்சை பெரிய கோவில் மாமன்னர் ராஜராஜ சோழனால் கட்டப்பட்டது. கட்டிட கலையில் சிறந்து விளங்கும் இக்கோவிலுக்கு தினமும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.

    மேலும், பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா 18 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான விழா இன்று (புதன்கிழமை) காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    முன்னதாக சந்திரசேகரர், பஞ்சமூர்த்திளுடன் சிறப்பு அலங்காரத்தில் கொடிமரம் முன்பு எழுந்தருளினார். தொடர்ந்து, கொடிமரத்துக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று, மங்கள வாத்தியங்கள் முழங்க கொடியேற்றம் நடந்தது.

    முன்னதாக பஞ்சமூர்த்திகளுக்கு கொடிமரம் முன்பு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, கோவில் வளாகத்தில் பல்லக்கில் எடுத்து வந்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    விழாவின் முதல் நாளான இன்று மாலை 6.30 மணியளவில் பஞ்ச மூர்த்திகள் படிச்சட்டத்தில் புறப்பாடு நடக்கிறது. தொடர்ந்து, கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.

    2-ம் நாளான நாளை (வியாழக்கிழமை) காலை 8 மணிக்கு மேல் பல்லக்கில் விநாயகர் புறப்பாடு நடைபெறுகிறது. மாலை 6.30 மணிக்கு சிம்ம வாகனத்தில் விநாயகர் புறப்பாடு நடக்கிறது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் காலை, மாலை பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

    விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் அடுத்த மாதம் (மே) 7-ந்தேதி நடைபெற உள்ளது.

    விழாவின் கடைசி நாளான 10-ந் தேதி தீர்த்தவாரி விழாவும், மாலையில் வெள்ளி ரிஷப வாகனங்களில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடும் நடைபெறுகிறது. அன்றைய தினம் மாலையில் கொடியிறக்கத்துடன் விழா முடிவடைகிறது.

    • விழாவில் உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு ஆணைகள் வழங்கினார்.
    • அரசின் திட்டங்களை பொதுமக்களிடம் சேர்க்க அதிகாரிகளும், மக்கள் பிரதிநிதிகளும் வரும்போது மக்கள் பொறுமையுடன் தங்கள் குறைகளை தெரிவிக்க வேண்டும்.

    சுவாமிமலை:

    தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே சேஷம்பாடி கிராமத்தில் தமிழக அரசின் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 261 பயனாளிகளுக்கு வீடு கட்டுக்கொள்வதற்கு அரசாணை வழங்கும் விழா நடந்தது.

    விழாவில் உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு ஆணைகள் வழங்கினார். விழாவில் தஞ்சை வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் கல்யாணசுந்தரம் எம்.பி. கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில்:-

    அரசின் திட்டங்களை பொதுமக்களிடம் சேர்க்க அதிகாரிகளும், மக்கள் பிரதிநிதிகளும் வரும்போது மக்கள் பொறுமையுடன் தங்கள் குறைகளை தெரிவிக்க வேண்டும்.

    "அனைவருக்கும் எல்லாம் உடனே கிடைத்து விடாது. திருமணம் ஆனால் கூட 10 மாதம் பொறுத்து இருந்தால் தான் குழந்தை பிறக்கும். திருமணத்திற்கு முன்போ அல்லது திருமணம் முடித்த உடனேயோ குழந்தை பிறக்க வேண்டும் என்றால் முன்கூட்டியே காதல் செய்து கர்ப்பமானால் மட்டும் தான் திருமணம் ஆன அன்றே குழந்தை பிறக்கும். எனவே, அரசு திட்டங்கள் பயனாளிகளுக்கு கிடைக்கும் வரை சற்று காத்திருக்க வேண்டும் என்றார்.

    அமைச்சர் பொன்முடியின் பேச்சால் ஏற்பட்ட அதிர்வலைகள் இன்னும் அடங்காத நிலையில், தற்போது தி.மு.க. எம்.பி.யின் பேச்சு கூட்டத்தில் பங்கேற்ற மக்களையும், நிர்வாகிகளையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

    மக்கள் பிரதிநிதிகள் கண்ணியமாக பேச வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று கூறியிருந்த நிலையில், தி.மு.க. எம்.பி.யின் பேச்சு மீண்டும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.

    • 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை தைலக்காப்பு அபிஷேகம் நடக்கும்.
    • அம்மனுக்கு அபிஷேகம் கிடையாது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் அருகே புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற இக்கோவிலுக்கு தினமும் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து மாரியம்மனை தரிசித்து செல்கின்றனர்.

    இக்கோவிலில் 21 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த பிப்ரவரி மாதம் 10-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    இங்கு மூலஸ்தானத்தில் எழுந்தருளி அருள்பாலித்து வரும் மாரியம்மன் புற்று மண்ணால் உருவானது என்பதால் அம்மனுக்கு அபிஷேகம் கிடையாது. அலங்காரம் மட்டுமே நடைபெறும். உற்சவர் அம்மனுக்கு மட்டுமே அபிஷேகம் நடைபெறும்.

    இதனால் மூலவர் மாரியம்மனுக்கு 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு மண்டலம் (48 நாட்கள்) தைலக்காப்பு அபிஷேகம் நடைபெறுவது வழக்கம். அப்போது அம்மனை ஒரு வெண் திரையில் வரைந்து ஆவாஹனம் செய்து அதற்கு அர்ச்சனை, ஆராதனைகள் நடைபெறும். அதன்படி, கடந்த 2020-ம் ஆண்டு தைலக்காப்பு அபிஷேகம் நடைபெற்றது.

    இதையடுத்து 5 ஆண்டுகள் முடிவடைந்ததை தொடர்ந்து இன்று (வெள்ளிக்கிழமை) புன்னை நல்லூர் மாரியம்மன் கோவிலில் தைலக்காப்பு அபிஷேகம் தொடங்கியது. இதனை முன்னிட்டு மூலவர் சன்னதி திரையிட்டு மறைக்கப்பட்டது.

    இதையடுத்து அனுக்னஞ, விக்னேஸ்வர பூஜை, தேவதானுக்ஞை, யஜமான சங்கல்பம், புண்யாஹ வசனம், வேதிகார்ச்சனை, அக்னிகார்யம், ஜபஹோமம், பூர்ணாஹூதி ஆகியவை நடைபெற்றது. பின்னர், யாத்ரா தானம், க்ருஹப்ரீத்தி, கடம் புறப்பாடு நடந்தது. கோவில் வளாகத்தில் சிறப்பு ஹோமங்கள் நடந்தன.

    அதனை தொடர்ந்து மூலஸ்தான மாரியம்மனுக்கு தைலக்காப்பு அபிஷேகம் நடைபெற்றது. வருகிற ஜூன் 1-ந்தேதி வரை தினமும் காலை, மாலை தைலக்காப்பும், சகஸ்ரநாம அர்ச்சனையும் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சி ஜூன் 4-ந்தேதி வரை (48 நாட்கள்) நடைபெறுகிறது.

    • அரசியலில் பல்வேறு மாற்றங்கள் வரலாம்.
    • லஞ்சம், ஊழல் இல்லாத தமிழ்நாட்டை கொண்டு வர வேண்டும் என்று கூறிய முதல் தலைவர் நமது கேப்டன் தான்.

    திருவோணம்:

    தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாட்டில் தே.மு.தி.க. பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் கலந்து கொண்டார்.

    எனது தந்தை படப்பிடிப்புக்கு செல்லும் போதும், அரசியல் நிகழ்ச்சி சென்றாலும் என்னை எப்போதும் அழைத்து செல்வார். அன்று முதல் இன்று வரை எனக்கு தொண்டர்கள் தான் பாதுகாப்பு.

    இன்று என்னை வாரிசு அரசியல் என கூறுகிறார்கள். ஆனால், ஒருகாலத்தில் விஜயகாந்திற்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டிருந்த நிலையில், தொண்டர்கள் அழைத்ததின் பேரில், எனது கனவுகளை தள்ளிவிட்டு தான் அரசியலுக்கு வந்தேன். கேப்டனின் வாரிசான நான் தைரியமாக, நேர்மையாக மக்களுக்காக உழைக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளேன். இதை யாராலும் மாற்ற முடியாது.

    லஞ்சம், ஊழல் இல்லாத தமிழ்நாட்டை கொண்டு வர வேண்டும் என்று கூறிய முதல் தலைவர் நமது கேப்டன் தான். 25 ஆண்டுகளுக்கு முன்பே ரேஷன் பொருள் வீடு தேடி வரும் என்று அறிவித்தவர் கேப்டன் விஜயகாந்த்.

    தனது பிறந்தநாளை வறுமை ஒழிப்பு தினமாக உறுதியேற்று, தனது சொந்த பணத்தில் பல்வேறு நலத்திட்டங்களை செய்தவர் விஜயகாந்த் தான். அதேபோல் நானும், தொண்டர்களும் 'இயன்றதை செய்வோம் இல்லாதவர்க்கு' என்பதில் உறுதியாக உள்ளோம்.

    2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓராண்டுகள் உள்ளன. அதற்குள் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். அரசியலில் பல்வேறு மாற்றங்கள் வரலாம். தே.மு.தி.க. இன்னும் பலப்படுத்தப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உறவினர்கள் திரண்டுள்ளனர்.
    • பாதுகாப்புக்காக அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    தஞ்சாவூா்:

    தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகேயுள்ள நடுக்காவேரி அரச மரத் தெருவைச் சேர்ந்தவர் அய்யாவு மகன் தினேஷ் (வயது 32).

    இவர் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் கொலை முயற்சி உள்பட 13 வழக்குகள் உள்ளன. இந்நிலையில் நேற்று முன்தினம் காலை தனது உறவினர் வீட்டு துக்க நிகழ்வுக்கு செல்வதற்காக இவர் நடுக்காவேரி பஸ் நிறுத்தத்தில் குடும்பத்துடன் நின்று கொண்டிருந்தார்.

    அப்போது, இவரை அங்கு வந்த போலீசார் விசாரணைக்கு எனக் கூறி நடுக்காவேரி காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். இவர்களைப் பின்தொடர்ந்து குடும்பத்தினரும் போலீஸ் நிலையத்துக்குச் சென்றனர்.

    பொது இடத்தில் கத்தியைக் காட்டி மிரட்டியதாகக் கூறி வழக்குப் பதிவு செய்து தினேசை கைது செய்தனர்.

    தங்கள் அண்ணன் மீது பொய் வழக்கு போடாமல் உடனே விடுவிக்க வேண்டும் எனக் கூறி அவரது தங்கைகள் மேனகா (31), கீர்த்திகா (29) போலீசாரிடம் வலியுறுத்தினர். ஆனால் அவர்களை போலீசார் திட்டி அனுப்பியதாக கூறப்படுகிறது.

    இதனால் மனம் உடைந்த மேனகா , கீர்த்திகா ஆகியோர் நடுக்காவேரி போலீஸ் நிலையம் முன்பு விஷம் குடித்து மயங்கி விழுந்தனர். இதனையடுத்து இருவரையும் உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி பொறியியல் பட்டதாரியான கீர்த்திகா நேற்று காலை உயிரிழந்தார். மேனகாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதையறிந்த உறவினர்கள் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு திரண்டு சென்று, இந்தச் சம்பவம் தொடர்பாக கோட்டாட்சியர் விசாரணை நடத்தி தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இந்த சம்பவத்திற்கு காரணமான இன்ஸ்பெக்டர் சர்மிளா மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை உடலை வாங்க மாட்டோம் எனக்கூறி போராட்டம் நடத்தினர். அவர்களிடம் துணை போலீஸ் பிரண்டு சோமசுந்தரம் மற்றும் போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.

    காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

    தொடர்ந்து இன்றும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உறவினர்கள் திரண்டு உள்ளனர். பாதுகாப்புக்காக அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் உத்தரவின் பேரில் திருவையாறு துணை போலீஸ் சூப்பிரண்டு விசாரணை நடத்தி வருகிறார்.

    இந்த நிலையில் இந்த வழக்கை முறையாக விசாரிக்காத நடுக்காவேரி இன்ஸ்பெக்டர் சர்மிளாவை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து இன்று போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் உத்தரவிட்டுள்ளார். மேலும் கோட்டாட்சியர் விசாரணைக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    ×