என் மலர்tooltip icon

    தஞ்சாவூர்

    • தனியாரிடம் வாங்கிய தங்க காசுகளுக்கு கடன்பெற முடியாது.
    • ஏற்கனவே வாங்கி நகை கடனை முழுமையாக செலுத்தியவர்களுக்கு மட்டுமே புதிய நகை கடன் வழஙகப்படும்- ஆர்பிஐ.

    தி.மு.க. விவசாய அணிச் செயலாளர் ஏ.கே.எஸ். விஜயன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தான் ஆட்சிப் பொறுப்பேற்ற நாள் முதலே ஒன்றிய பாஜக அரசு கார்ப்ரேட் கம்பெனிகளுக்கு ஆதரவான கொள்கைகளையே அமல்படுத்தி, விவசாயிகள்– தொழிலாளர்கள்– ஏழை மக்களை மென்மேலும் பாதிக்கும் கொள்கைகளையே செயல்படுத்தி, சொல்லொணா துயரத்தில் ஆழ்த்தி வருகிறது.

    தேசிய வங்கிகளில் சாமானிய மக்களுக்கும் விவசாயிகளுக்கு கடன் வழங்காமல், பெரும் நிறுவனங்களுக்கு கடன்களை அள்ளி வழங்கி, பல லட்சம் கோடி ரூபாய் கடன்களை வாராக் கடன் என்று சொல்லி ஒன்றிய பாஜக அரசு தள்ளுபடி செய்கிறது. சாமானிய மக்களின் வரிப்பணமான பல லட்சம் கோடி ரூபாய் வரிச் சலுகைகளையும் பணக்காரர்களுக்கு வழங்கி வருகிறது மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசு.

    விவசாயிகள், ஏழை மக்கள், நடுத்தர மக்கள் தங்களிடம் உள்ள நகைகளை கூட்டுறவு மற்றும் வங்கிகளில் அடமானம் வைத்து விவசாய மற்றும் அவசரத் தேவைகளுக்காக பயன்படுத்தி வந்தனர். அடகு வைத்த நகையை திருப்ப முடியாத மக்கள் வட்டியை மட்டும் கட்டி மறுஅடமானம வைப்பதும் நடைமுறையில் இருந்து வருகிறது.

    தற்போது ஒன்றிய பாஜக அரசின் கைப்பாவையான இந்திய ரிசர்வ் வங்கி, "இனிமேல் வங்கிகளில் நகை கடன் பெற வேண்டுமெனில் நகை வாங்கிய ரசீது அல்லது தகுந்த ஆவணம் தர வேண்டும், தனியாரிடம் வாங்கிய தங்க காசுகளுக்கு கடன்பெற முடியாது, ஏற்கனவே வாங்கி நகை கடனை முழுமையாக செலுத்தியவர்களுக்கு மட்டுமே புதிய நகை கடன் வழஙகப்படும், விவசாயிகளுக்கு நகையை புதுப்பித்து மீண்டும் கடன் பெறுவது தடை செய்யப்பட்டுள்ளது" போன்ற புதிய நிபந்தனைகளை விதித்து விவசாயிகள் – தொழிலாளர்கள் – ஏழை மக்களை வஞ்சித்து வரும் ஒன்றிய பாஜக அரசின் கைப்பாவையான இந்திய ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ள நகைக் கடன் நிபந்தனைகளை உடனடியாக கைவிட வலியுறுத்தி தி.மு.க. விவசாய அணி மற்றும் அனைத்து விவசாய சங்கங்கள், காவிரி டெல்டா மாவட்டங்கள் இணைந்து வருகிற 30.5.2025 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணியளவில் தஞ்சாவூர், தலைமை தபால் நிலையம் எதிரில் "மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்" நடத்துகிறது.

    இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. விவசாய அணியைச் சேர்ந்த மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் நிர்வாகிகள் – கழக விவசாய அணித் தோழர்கள் மற்றும் அனைத்து விவசாய சங்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு தங்கள் கண்டனத்தை பதிவு செய்திட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அறிக்கையில் தி.மு.க. விவசாய அணிச் செயலாளர் ஏ.கே.எஸ். விஜயன் குறிப்பிட்டுள்ளார்.

    • வருகின்ற தேர்தலிலும் தி.மு.க வெற்றி பெற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சி நடைபெறும்.
    • தமிழ்நாட்டின் வளர்ச்சி நிதியை கேட்பதற்காகவே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி நிதி ஆயோக் கூட்டத்திற்கு சென்றுள்ளார்.

    தஞ்சாவூா்:

    தஞ்சையில் இன்று ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி முனைவர் ராஜமாணிக்கம் எழுதிய செவ்வியல் நோக்கில் சிலப்பதிகாரம் என்ற நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. விழாவில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டு தலைமை தாங்கி நூலை வெளியிட்டார்.

    முன்னதாக அமைச்சர் கே.என்.நேரு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது :-

    தஞ்சையில் நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தி.மு.க. பற்றி உண்மைக்கு புறம்பான பொய்யான தகவல்களை பற்றி பேசினார்.

    அவர் கடந்த 2014 முதல் அப்படித்தான் பேசி வருகிறார். பொதுமக்கள், பெண்கள் உள்ளிட்ட அனைவரின் ஆதரவு எப்போதும் தி.மு.க.வுக்கு தான் உள்ளது. வருகின்ற தேர்தலிலும் தி.மு.க வெற்றி பெற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சி நடைபெறும்.

    தமிழ்நாட்டின் வளர்ச்சி நிதியை கேட்பதற்காகவே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி நிதி ஆயோக் கூட்டத்திற்கு சென்றுள்ளார். முதலமைச்சர் எப்போதும் நேருக்கு நேராக தான் பேசுவார். துணிந்து தனது கருத்தை தெரிவிப்பார். சிலரைப் போல் கைகட்டி நிற்க மாட்டார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது.
    • கடந்த 2011 தேர்தலில் தொடர் மின்வெட்டுப் பிரச்சனையால் தி.மு.க ஆட்சியை இழந்தது.

    தஞ்சாவூா்:

    தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமைகளை தடுக்க தவறிய தி.மு.க அரசை கண்டித்து தஞ்சையில் இன்று மாநகர அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தலைமை தாங்கி கண்டன உரையாற்றினார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது :-

    கடந்த மூன்று ஆண்டுகளாக தமிழ்நாடு புறக்கணிக்கப்படுகிறது எனக்கூறி டெல்லியில் நிதி ஆயோக் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கவில்லை. ஆனால் தற்போது இன்று நிதி ஆயோக் மாநாட்டில் கலந்து கொள்ள முதலமைச்சர் டெல்லி சென்றுள்ளார்.

    வழக்கு குற்றவாளிகளை காப்பாற்றுவதற்காகவே அவர் டெல்லி சென்றுள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளது.

    தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது. கடந்த 2011 தேர்தலில் தொடர் மின்வெட்டுப் பிரச்சனையால் தி.மு.க ஆட்சியை இழந்தது. தற்போது தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளதால் 2026 தேர்தலில் மீண்டும் ஆட்சியை தி.மு.க இழப்பது உறுதி. மக்கள் அ.தி.மு.க பக்கம் உள்ளனர்.

    எனவே வரும் சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. ஆட்சியை பிடித்து எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராவது உறுதியாகியுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • விபத்தில் படுகாயமடைந்த 13 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    • விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் அருகே அரசு பேருந்தும் தனியார் டெம்போவும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 6-ஆக உயர்ந்துள்ளது.

    கர்நாடகாவிலிருந்து வேளாங்கணிக்கு சென்றபோது செங்கிப்பட்டி அருகே மோதி விபத்து ஏற்பட்டது. சம்பவ இடத்திலேயே 4 பேர் உயிரிழந்த நிலையில் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 2பேரும் உயிரிழந்தனர்.

    மேலும் விபத்தில் படுகாயமடைந்த 13 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • தஞ்சை மணிமண்டபம் துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை நடைபெறுகிறது.
    • நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாடு மின் பகிர்மான கழக தஞ்சை உதவி செயற்பொறியாளர் விஜய் ஆனந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சை மணிமண்டபம் துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது.

    எனவே இந்த துணைமின் நிலையத்தில் இருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளான அருளானந்த நகர், பிலோமினா நகர், காத்தூண் நகர், சிட்கோ, அண்ணாநகர், காமராஜர் நகர், பாத்திமா நகர், அன்பு நகர், திருச்சி ரோடு, வ.உ.சி. நகர், பூக்காரதெரு, இருபது கண் பாலம், கோரிக்குளம், கணபதி நகர், ராஜப்பா நகர், மகேஸ்வரி நகர், திருப்பதி நகர், செல்வம் நகர், அண்ணாமலை நகர், ஜெ.ஜெ நகர், டி.பி.எஸ். நகர், சுந்தரம் நகர், பாண்டியன் நகர், எஸ்.இ. ஆபீஸ், கலெக்டர் பங்களா ரோடு, டேனியல் தாமஸ் நகர், ராஜ ராஜேஸ்வரி நகர்,

    என்.எஸ். போஸ் நகர், தென்றல் நகர் துளசியாபுரம், தேவன் நகர், பெரியார் நகர், இந்திரா நகர், கூட்டுறவு காலனி, நடராஜபுரம் காலனி தெற்கு, புதிய ஹசிங் யூனிட், முல்லை நகர், மருதம் நகர், நெய்தல் நகர், நட்சத்திரா நகர், வி.பி. கார்டன், ஆர்.ஆர். நகர், சேரன் நகர், காவேரி நகர், நிர்மலா நகர், யாகப்பா நகர், அருளானந்த அம்மாள் நகர், குழந்தை இயேசு கோவில், பிஷப் காம்ப்ளக்ஸ் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தானுடன் தொடுக்கப்பட்ட போரில் இந்தியா வெற்றி பெற்றது.
    • மாலை முதல் இரவு வரை எரியும் இந்த மூவர்ண மின் விளக்குகள் சில நாட்களுக்கு தொடரும் என தொல்லியல் துறையினர் தெரிவித்தனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் பெரிய கோவில் ராஜராஜன் வாயிலில் போர் வெற்றியைப் பறைசாற்றும் வகையில் தேசியக் கொடியிலுள்ள மூவர்ணத்தில் மின் விளக்குகள் செவ்வாய்க்கிழமை முதல் எரியவிடப்பட்டுள்ளன.

    காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தானுடன் தொடுக்கப்பட்ட போரில் இந்தியா வெற்றி பெற்றது. இதை நாடு முழுவதும் மக்கள் கொண்டாடி வருகின்றனர்.

    இந்நிலையில், இந்த வெற்றியைப் பறைசாற்றும் வகையிலும், தேச ஒற்றுமையை வலியுறுத்தும் விதத்திலும் இந்திய தொல்லியல் துறையின் திருச்சி சரகத்தில் திருச்சி மெயின்கார்டு கேட், தஞ்சாவூர் பெரிய கோவில், கன்னியாகுமரி வட்டக்கோட்டை ஆகியவற்றில் தேசியக் கொடியின் மூவர்ணத்தில் மின் விளக்குகள் பொருத்துமாறு துறையின் தலைமையகம் அறிவுறுத்தியது.

    இதன்படி, தஞ்சாவூர் பெரிய கோவிலில் இரண்டாவது நுழைவுவாயிலான ராஜராஜன் வாயில் முன்புறம் இடதுபுற மதில் சுவரில் சிகப்பு வண்ணத்திலும், ராஜராஜன் கோபுரத்தில் வெள்ளை நிறத்திலும், வலதுபுற மதில் சுவரில் பச்சை நிறத்திலும் என மின்விளக்குகள் பொருத்தப்பட்டு, எரிய விடப்பட்டுள்ளன.

    மாலை முதல் இரவு வரை எரியும் இந்த மூவர்ண மின் விளக்குகள் சில நாட்களுக்கு தொடரும் என தொல்லியல் துறையினர் தெரிவித்தனர்.

    • அரசின் அனைத்து திட்டங்களும் செயல்படுத்தப்படுவதை முதலமைச்சர் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்.
    • எங்கள் கூட்டணி எப்போதும் சிறப்பான கூட்டணி.

    தஞ்சாவூர்:

    தஞ்சையில் இன்று அமைச்சர் கே.என்.நேரு நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    வருகிற 2026 சட்டமன்ற தேர்தல் பணிகள் குறித்து நிர்வாகிகளை சந்திப்பதற்காக தஞ்சை மாவட்டத்துக்கு வந்துள்ளேன். இங்கு நடந்த கூட்டத்தில் நிர்வாகிகள் அனைவரும் எந்தெந்த பகுதிகளில் என்னென்ன பணிகள் செய்ய வேண்டும். தொகுதி நிலவரம் எப்படி உள்ளது. மக்கள் எந்த மனநிலையில் உள்ளனர் என்பதை தெரிவித்துள்ளனர். மேலும், அரசு சார்பில் செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் தெரிவித்தனர்.

    தஞ்சை மாவட்டத்தை பொறுத்தவரை எவ்வித பிரச்சனையும் இல்லை. நிர்வாகிகள் அனைவரும் ஒற்றுமையாக இருந்து செயல்படுவோம். 7-வது முறையாக தி.மு.க. ஆட்சி அமைக்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மக்கள் மத்தியில் தி.மு.க. அரசின் திட்டங்கள் சிறப்பான இடத்தை பெற்றுள்ளது. அரசின் அனைத்து திட்டங்களும் செயல்படுத்தப்படுவதை முதலமைச்சர் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்.

    தி.மு.க. அரசின் திட்டங்கள் பெண்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. அதனால் மக்கள் தி.மு.க. பக்கம் தான் இருப்பார்கள். எங்கள் கூட்டணி எப்போதும் சிறப்பான கூட்டணி. இதில் எவ்வித மாற்றமும் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஒரத்தநாடு துணைமின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என்று மின்வாரிய உதவி செயற்பொறியாளர் தமிழரசி தெரிவித்துள்ளார்.

    கும்பகோணம்:

    கும்பகோணம் அருகே சாக்கோட்டை துணை மின்நிலையத்தில் நாளை 13ந்தேதி (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் கும்பகோணம் நகரம் தவிர உமாமகேஸ்வரபுரம், கோசிமணி நகர், தாராசுரம், எலுமிச்சங்காபாளையம், அரியத்திடல், அண்ணலக்ரஹாரம், திப்பிராஜபுரம், விசலூர், சிவபுரம், உடையாளூர், சுந்தரபெருமாள் கோவில், நாச்சியார் கோவில், பட்டீஸ்வரம், வலங்கைமான், ஆலங்குடி, திருநீலக்குடி, எஸ்.புதூர், அவணியாபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்று தமிழ்நாடு மின் பகிர்மான கழக கும்பகோணம் நகர் உதவி செயற்பொறியாளர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    அதேபோல் ஒரத்தநாடு துணைமின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை 13-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காைல 9 மணி முதல் மாலை 5 மணி வரை ஒரத்தநாடு, கண்ணந்தன்குடி, ஆழிவாய்க்கால், சேதுராயன்குடிக்காடு, தென்னமநாடு, பருத்திகோட்டை, பொய்யுண்டார்குடிக்காடு, கோயிலூர், ஆயங்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என்று தமிழ்நாடு மின் பகிர்மான கழக ஒரத்தநாடு மின்வாரிய உதவி செயற்பொறியாளர் தமிழரசி தெரிவித்துள்ளார்.

    • தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முழு உடல் பரிசோதனை மையம் ரூ. 5 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
    • தமிழகத்திலுள்ள அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளின் வருகை இரு மடங்குகளாக அதிகரித்துள்ளது.

    தஞ்சாவூா்:

    தஞ்சாவூரில் இன்று தமிழ்நாடு அரசு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் ரூ.11.82 கோடி மதிப்பில் 16 புதிய மருத்துவ கட்டிடங்கள் திறப்பு விழா மற்றும் ரூ.7.45 கோடி மதிப்பில் 13 புதிய கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

    விழாவில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் ஆகியோர் கலந்துகொண்டு புதிய கட்டிடங்களை திறந்து வைத்தும், புதிய கட்டிடங்களுக்கு அடிக்கல்லும் நாட்டினர்.

    விழாவில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேசியதாவது :-

    புற்றுநோய், இதய நோய் உள்ளிட்ட நோய்கள் அதிகரித்து வருவதால் வருமுன் காக்கும் விதமாக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முழு உடல் பரிசோதனை மையம் ரூ. 5 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனையில் முழு உடல் பரிசோதனைக்கு ரூ.17 ஆயிரம் முதல் ரூ.18 ஆயிரம் செலவாகும் நிலையில், அரசு மருத்துவமனைகளில் ரூ.1,000 முதல் ரூ.4 ஆயிரத்தில் செய்து கொள்ளலாம்.

    தமிழகத்திலுள்ள அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளின் வருகை இரு மடங்குகளாக அதிகரித்துள்ளது. அரசு மருத்துவமனைகள் மீது மக்களிடையே நம்பிக்கை அதிகரித்துள்ளதே இதற்கு காரணம்.

    உயர் வருவாய் பிரிவினரும் அரசு மருத்துவமனைக்கு வர வேண்டும் என்பதற்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கட்டண சிகிச்சை பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை திருச்சி, தஞ்சாவூர், சேலம் உள்பட 13 மாவட்ட அரசு மருத்துவமனைகளில் இப்பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. இதுபோல மேலும் 9 மாவட்டங்களில் கட்டண சிகிச்சை பிரிவு அமைக்கப்பட்டு வருகிறது.

    தனியார் மருத்துவமனைகளில் அறை வாடகை கட்டணம் ரூ. 8 ஆயிரம் முதல் ரூ. 9 ஆயிரம் வசூலிக்கப்படும் நிலையில், தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள கட்டண சிகிச்சை பிரிவில் நாளொன்றுக்கு ரூ. 1,000 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இப்பிரிவில் மொத்தம் 28 அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.

    தமிழகத்தில் ஆண்டுக்கு ஏறத்தாழ 9.50 லட்சம் பிரசவங்கள் நடைபெறுகின்றன. இதில் ஏறக்குறைய 50 ஆயிரம் குழந்தைகள் எடை குறைவாக பிறக்கின்றன. இக்குழந்தைகளைக் கண்காணித்து, பராமரிப்பதற்காக மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தைத் தமிழக அரசு செயல்படுத்தவுள்ளது.

    தஞ்சாவூர் மருத் வக்கல்லூரி மருத்துவமனையில் மூன்றாம் பாலினத்தவர்களுக்காக தனி சிகிச்சை பிரிவு திறக்கப்பட்டுள்ளது. இம்மருத்துவமனையில் கடந்த 4 ஆண்டுகளில் ரூ. 65.80 கோடி மதிப்பில் 80 கட்டடங்கள் திறக்கப்பட்டுள்ளன. மேலும் ரூ 23.75 கோடி மதிப்பில் 50 படுக்கைகள் கொண்ட சிகிச்சை பிரிவை தமிழக முதல்வர் தஞ்சாவூருக்கு அடுத்த மாதம் வருகை தரும்போது திறக்கவுள்ளார். அரசு ராசாமிராசுதாரர் மருத்துவமனை மேலும் மேம்படுத்தப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • கடந்த 5-ந்தேதி ஓலைச்சப்பரத்தில் சுவாமி வீதிஉலா நடைபெற்றது.
    • உற்சவர் சாரங்கபாணி, ஸ்ரீதேவி, பூமிதேவி தாயார்களுடன் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளினார்.

    சுவாமிமலை:

    தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற சாரங்கபாணி சுவாமி கோவில் அமைந்துள்ளது. இத்தலம் 108 திவ்ய தேசங்களில் ஸ்ரீரங்கம், திருப்பதிக்கு அடுத்ததாக போற்றப்படுகிறது.

    இத்தலம் நாலாயிர திவ்ய பிரபந்தம் விளைந்த தலமாக கருதப்படும் பெருமையுடையது. ஆழ்வார்கள் தம் பிரபந்தங்களில் இப்பெருமானை 'குடந்தைக் கிடந்தான்' என அழகுற அழைக்கின்றனர். இக்கோவிலில் ஆராவமுதன் எனும் சார்ங்கபாணி பெருமாள் எழுந்தருளி உள்ளார். திருவரங்கனின் புகழை கூறும் பஞ்சரங்க திருத்தலங்களில் ஒன்றாகவும் விளங்குகின்றது.

    மேலும், பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை பெருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான விழா கடந்த 2-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழா நாட்களில் தினமும் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி எழுந்தருளி வீதிஉலா காட்சிகள் நடைபெற்று வந்தது. கடந்த 5-ந்தேதி ஓலைச்சப்பரத்தில் சுவாமி வீதிஉலா நடைபெற்றது.

    விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று (சனிக்கிழமை) காலை நடைபெற்றது. இந்த தேர் தமிழகத்திலேயே 3-வது பெரிய தேர் என்ற பெருமை உடையதாகும். முன்னதாக உற்சவர் சாரங்கபாணி, ஸ்ரீதேவி, பூமிதேவி தாயார்களுடன் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளினார். தொடர்ந்து, தீபாராதனை காண்பிக்கப்பட்டு, தேரோட்டம் தொடங்கியது.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பக்தி கோஷம் முழங்க தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேரானது 4 ரதவீதிகளில் அசைந்தாடியபடி வலம் வந்து நிலையை அடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    பாதுகாப்பு பணியில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டிருந்தனர். நடமாடும் மருத்துவ குழுவினரும், தீயணைப்பு வாகனமும் தேரை பின்தொடர்ந்தவாறு சென்றது. தேரோட்டத்தை காண ஏராளமான பக்தர்கள் திரண்டதால் கும்பகோணம் மாநகரமே விழாக்கோலம் பூண்டது.

    • திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோவிலில் சித்ரா பவுர்ணமி விழா வருகிற 12-ந்தேதி (திங்கட்கிழமை) நடக்கிறது.
    • கும்பகோணம் கோட்டத்தின் பிற முக்கிய நகரங்களில் இருந்தும் பக்தர்கள் வசதிக்காக பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக கும்பகோணம் கோட்ட நிர்வாக இயக்குனர் பொன்முடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோவிலில் சித்ரா பவுர்ணமி விழா வருகிற 12-ந்தேதி (திங்கட்கிழமை) நடக்கிறது.

    எனவே, 10-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை பக்தர்கள் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக கும்பகோணம் கோட்டம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

    அதன்படி, கும்பகோணத்தில் இருந்து 145 பஸ்கள், திருச்சி, துறையூர், பெரம்பலூரில் இருந்து 190 பஸ்கள், அரியலூர், ஜெயங்கொண்டத்தில் இருந்து 58 பஸ்கள், மயிலாடுதுறையில் இருந்து 65 பஸ்கள், நாகப்பட்டினத்தில் இருந்து 50 பஸ்கள், காரைக்குடி, ராமேஸ்வரத்தில் இருந்து 48 பஸ்கள், புதுக்கோட்டையில் இருந்து 51 பஸ்கள் என மொத்தம் 607 பஸ்கள் திருவண்ணாமலைக்கு இயக்கப்பட உள்ளன.

    மேலும், கும்பகோணம் கோட்டத்தின் பிற முக்கிய நகரங்களில் இருந்தும் பக்தர்கள் வசதிக்காக பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அரசுப் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்த ஆர்த்திகா சமீபத்தில் பொதுத்தேர்வு எழுதினார்.
    • தற்கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசத்தை சேர்ந்தவர் புண்ணிய மூர்த்தி. இவரது மகள் ஆர்த்திகா. பாபநாசத்தில் உள்ள அரசுப் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்த ஆர்த்திகா சமீபத்தில் பொதுத்தேர்வு எழுதினார்.

    12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியாகும் நிலையில், தேர்வில் தோல்வியடைந்து விடுவோம் என்ற பயத்தில் ஆர்த்திகா செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    ஆர்த்திகா வீட்டின் பின்புறம் உள்ள மாட்டுக் கொட்டகையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனால் ஆர்த்திகாவின் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.

    இதுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ஆர்த்திகாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும், சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ×