என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

அ.தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் வீடு இல்லாத மீனவர்களுக்கு வீடுகள் கட்டித்தரப்படும்- எடப்பாடி பழனிசாமி
- கஜா புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கினோம்.
- அதிமுக ஆட்சியில் 2 முறை பயிர் கடன் தள்ளுபடி செய்துள்ளோம்.
பட்டுக்கோட்டையில் உள்ள தனியார் அரங்கத்தில் மாற்றுக்கட்சியினர் 500-க்கும் மேற்பட்டோர் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் கட்சியில் இணைத்தனர்.
இதைத்தொடர்ந்து அவர் விவசாய சங்க அமைப்பினர், தென்னை விவசாயிகள் சங்கத்தினர் மற்றும் மீனவ பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினார். அப்போது அவர்களது கோரிக்கைகளை குறித்து கேட்டறிந்தார்.
பின்னர் அவர் பேசியதாவது:-
பட்டுக்கோட்டை பகுதியில் அதிக அளவில் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தென்னையில் நோய் தாக்குதலால் மகசூல் குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளீர்கள். இதனை தென்னை ஆராய்ச்சி நிலையம் மூலம் ஆய்வு செய்து அ.தி.மு.க. ஆட்சியில் நடவடிக்கை எடுக்கப்படும். அ.தி.மு.க. ஆட்சியில் 2 முறை பயிர் கடன் தள்ளுபடி செய்துள்ளோம். குறுவை, சம்பா சாகுபடி தொகுப்பு கொடுத்தோம்.
உழவன் செயலியை அறிமுகப்படுத்தினோம். அதில் விவசாயிகளுக்கு தேவையான தகவல்களை வழங்கினோம்.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கினோம். அதுபோல் மீன்பிடித் தடைக்கால நிவாரணமும் அ.தி.மு.க. ஆட்சியில் உயர்த்தி வழங்கப்படும்.
தென்னை விவசாயிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளும் அ.தி.மு.க. ஆட்சி அமைத்தவுடன் செய்து தரப்படும்.
கஜா புயலால் தென்னை விவசாயம் பட்டுக்கோட்டை, போராவூரணி பகுதியில் பாதிக்கப்பட்ட போது விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கி அவர்களை பாதுகாத்தோம். கஜா புயலின் போது சேதமான படகுகளுக்கும் உரிய இழப்பீடு வழங்கினோம்.
எனவே அ.தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் உங்கள் அனைவரது கோரிக்கைகளும் நிறைவேற்றி தரப்படும். மேலும் அ.தி.மு.க. ஆட்சி வந்தவுடன் வீடு இல்லாத மீனவர்களுக்கு வீடுகள் கட்டி தரப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.






