என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    எடப்பாடி பழனிசாமியின் மக்கள் சந்திப்பு தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்கான அடித்தளமாக அமையும்- ஜி.கே.வாசன்
    X

    எடப்பாடி பழனிசாமியின் மக்கள் சந்திப்பு தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்கான அடித்தளமாக அமையும்- ஜி.கே.வாசன்

    • தமிழகத்தில் போதை பொருள் நடமாட்டம், டாஸ்மாக் இருக்கும் வரை இதுபோன்ற சம்பவங்கள் குறையாது.
    • அரசின் மீது இருக்கிற அதிருப்தியை மக்கள் வெளிப்படையாக பேச தொடங்கி இருக்கிறார்கள்.

    தஞ்சாவூா்:

    தஞ்சாவூரில் இன்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் புதிய நிர்வாகிகள் அறிமுக விழா கூட்டம் நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக மாநில தலைவர் ஜி.கே.வாசன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

    முன்னதாக அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    தற்சமயம் தமிழகத்தை உலுக்கிய ஒரு மிகப்பெரிய வேதனையான பிரச்சனை. சிவகங்கை மாவட்டம் மடப்புரத்தில் கோவில் காவலாளி அஜித்குமார் மரணம்.

    இதற்கு காரணம் தமிழக அரசினுடைய செயல்பாடு. காவல்துறை வசம் முதலமைச்சரிடம் தான் உள்ளது என்பதை கூறிக்கொள்ள விரும்புகிறேன். சட்டம் ஒழுங்கும் தமிழகத்திலே படிப்படியாக கடைசி புள்ளிக்கு சென்று கொண்டிருக்கிறது.

    இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. விசாரணை நடந்து கொண்டிருந்தாலும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரையிலே திருபுவனம் காவலாளி மரணத்திலே ஏதோ அவிழ்க்க முடியாத முடிச்சு இருக்கிறது. அந்த முடிச்சை போட்ட அதிகாரி யார்? என்பது இன்று வரை கேள்விக்குறியாக இருக்கிறது.

    முழுமையான விசாரணை மூலம் முடிச்சு அவிழ்க்கப்பட வேண்டும். இறந்த காவலாளி குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்கலாம், பணம் கொடுக்கலாம், மனை கொடுக்கலாம், ஆறுதல் கூறலாம். ஆனால் உயிரை திரும்ப கொடுக்க முடியாது என்பதை அரசு உணர்ந்து செயல்பட வேண்டும்.

    தமிழகத்தில் போதை பொருள் நடமாட்டம், டாஸ்மாக் இருக்கும் வரை இதுபோன்ற சம்பவங்கள் குறையாது.

    அரசினுடைய தவறுகளை, விரோத போக்கை மக்கள் கூர்ந்து கவனித்து கொண்டிருக்கிறார்கள். வருகின்ற தேர்தலிலே ஆட்சி மாற்றத்தின் அடிப்படையிலே பாடம் புகட்டுவார்கள் என்பதிலே மாற்று கருத்து இருக்க முடியாது.

    இன்றைக்கு அ.தி.மு.க தலைமையிலான பா.ஜ.க., த.மா.கா மற்றும் ஒத்த கருத்துடைய கட்சிகள் தான் நம்பிக்கைக்கு உரிய கூட்டணியாக விளங்குகிறது.

    எடப்பாடி பழனிசாமி கூட்டணி தலைவராக உள்ளார்.

    அரசின் மீது இருக்கிற அதிருப்தியை மக்கள் வெளிப்படையாக பேச தொடங்கி இருக்கிறார்கள். எனவே தமிழகத்தினுடைய வெற்றி அணியாக முதல் அணியாக செயல்பட தொடங்கி இருக்கிற அ.தி.மு.க, பா.ஜ.க, த.மா.கா மற்றும் ஒத்த கருத்துடைய கூட்டணிகள் தேர்தலிலே வெற்றி பெறுவதற்கான அடித்தளத்தை மக்களை ஏற்படுத்தி கொடுப்பார்கள் . இன்னும் பல கட்சிகள் கூட்டணிக்கு வர உள்ளன.

    நாளை முதல் கோவை மண்டலத்தில் இருந்து தனது மக்கள் சந்திப்பு இயக்கத்தை அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொடங்க உள்ளார். அவரது சுற்றுப்பயணத்தில் செல்லும் இடங்களில் எல்லாம் த.மா.கா. நிர்வாகிகள், தொண்டர்கள் வரவேற்பு அளிப்பார்கள். எடப்பாடி பழனிசாமியின் மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணம் ஆட்சி மாற்றத்திற்கான அடித்தளமாக அமையும். அ.தி.மு.க, பா.ஜ.க-த.மா.கா வெற்றி கூட்டணி.

    கீழடி ஆய்வில் நம்முடைய பாரம்பரிய பெருமைகளுக்கு எடுத்துக்காட்டாக உதாரணங்கள் நிஜ வடிவிலே வெளிவந்து கொண்டிருக்கிறது. தி.மு.க.வில் அங்கம் வகிக்கும் கூட்டணி கட்சிகள் தேர்தலில் அதிக சீட் கேட்கிறார்கள் என்பது அவர்களுடைய கட்சி விவகாரம்.

    இந்தி மொழியை மத்திய பா.ஜ.க அரசு ஒருபோதும் திணிக்கவில்லை. .

    வளர்ந்த நாடுகள் கூட பொருளாதாரத்தில் குன்றிய நிலையில் 140 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவை பொருளாதாரத்தில் படிப்படியாக உயர்த்திய பெருமை பா.ஜ.க. ஆட்சியே ஆகும். பிரதமர் மோடி திறம்பட பணியாற்றி வருகிறார்.

    இதனை ஜீரணிக்க முடியாத தி.மு.க அரசு வாக்கு வங்கிக்காக ஜாதி, மதத்தை பிரித்து பார்த்து பேசுகிறது. அது ஏற்புடையது அல்ல.

    காவிரியின் கடைமடை வரை இன்னும் காவிரி நீர் சென்று சேரவில்லை. இதனால் பல இடங்களில் விதைத்த பயிர்கள் கருகி வருகிறது. குறிப்பாக நாகை மாவட்டத்தில் இந்த பிரச்சினை அதிகமாக உள்ளது. எனவே அரசு கடைமடை வரை தண்ணீர் செல்வது உறுதிப்படுத்த வேண்டும்.

    தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகளுக்கு நிபந்தனை இன்றி பயிர் கடன் வழங்க வேண்டும்.

    டாக்டர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் தமிழகத்தின் மிகுந்த மரியாதைக்குரிய தலைவர்கள். பா.ம.க.வில் ஒட்டுமொத்தமாக நல்லது நடக்க வேண்டும் என்று நினைக்கும் கட்சி த.மா.கா.

    தமிழகத்தினுடைய இன்றைய பல்வேறு துறையினுடைய முன்னேற்றத்திற்கு அடித்தளமாக செயல்பட்ட முதல்வர் பெருந்தலைவர் காமராஜர். நேர்மை, எளிமை, தூய்மை, வெளிப்படை தன்மைக்கு எடுத்துக்காட்டாக செயல்பட்ட தலைவர். இன்றைக்கும் மாணவர்களுக்கு ரோல் மாடலாக திகழக்கூடிய தலைவர். பெருந்தலைவர் காமராஜர் புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையிலே தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தொடர்ந்து எல்லா வருடமும் அவரது பிறந்த தின விழாவை மிகச் சிறப்பாக ஒரு பொதுக் கூட்டமாக ஏற்பாடு செய்து அதனை பிரம்மாண்டமாக நடத்திக் கொண்டிருக்கிறோம். இந்த வருடம் சென்னை மாநகராட்சி புரசைவாக்கத்தில் காமராஜர் பிறந்த தின விழா பொதுக்கூட்டமாக நடைபெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×