என் மலர்tooltip icon

    தஞ்சாவூர்

    • மாசிமக பெருவிழா 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம்.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    சுவாமிமலை:

    தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மகாமக குளத்தின் வடகரையில் பிரசித்தி பெற்ற காசி விசாலாட்சி அம்பாள் உடனுறை காசிவிசுவநாத சுவாமி கோவில் அமைந்துள்ளது.

    நவக்கன்னிகள் தலமாக போற்றப்படும் இக்கோவிலில் ஆண்டுதோறும் மாசிமக பெருவிழா 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான விழா இன்று (திங்கட்கிழமை) காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    முன்னதாக பஞ்சமுர்த்திகள் கொடிமரம் முன்பு எழுந்தருளினர். தொடர்ந்து, சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க மஞ்சள், பால், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு திரவிய பொருட்களால் கொடிமரத்திற்கு அபிஷேகம் நடைபெற்றது.

    பின்னர், நந்தி பெருமான் உருவம் வரையப்பட்ட கொடி ஏற்றப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    தொடர்ந்து, விழா நாட்களில் தினமும் காலை, மாலை வேளைகளில் சிறப்பு அலங்காரத்தில் பல்வேறு வாகனங்களில் சுவாமி-அம்பாள் எழுந்தருளி வீதிஉலா காட்சிகள் நடைபெற உள்ளது.

    விழாவின் முக்கிய நிகழ்வான வெண்ணைத்தாழி பல்லக்கில் சுவாமி வீதிஉலா வருகிற 10-ந்தேதியும், 11-ந்தேதி தேரோட்டமும், 12-ந்தேதி மகாமக குளத்தில் மாசிமக தீர்த்தவாரி திருவிழாவும் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    • நாளை திருமண விழாவில் பங்கேற்று மணமக்களை வாழ்த்துகிறார்.
    • 105 புதிய பஸ்களின் சேவையை தொடங்கி வைக்கிறார்.

    நாகப்பட்டினம்:

    பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை நாகை வருகை தருகிறார்.

    இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு மாலை திருச்சி வந்தடைகிறார். பின்னர், அங்கிருந்து சாலை மார்க்கமாக காரில் நாகை செல்கிறார். அங்கு அவருக்கு தி.மு.க. சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. பின்னர், இரவு உணவு அருந்திவிட்டு, அங்குள்ள அரசு விருந்தினர் மாளிகையில் தங்குகிறார்.

    நாளை (திங்கட்கிழமை) காலை நடக்கும் தி.மு.க. மாவட்ட செயலாளரின் இல்ல திருமண விழாவில் பங்கேற்று மணமக்களை வாழ்த்துகிறார். தொடர்ந்து, நாகை புதிய பஸ் நிலையத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக கும்பகோணம் கோட்டம் சார்பில் 105 புதிய பஸ்களின் சேவையை தொடங்கி வைக்கிறார்.

    இந்த நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டு, கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள ஐ.டி.ஐ. மைதானத்தில் நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொண்டு நாகை மாவட்டத்தில் முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைப்பதுடன், பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். மேலும், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார்.

    அதனைத் தொடர்ந்து, நாகை பால்ப ண்ணைச்சேரியில் புதிதாக கட்டப்பட்டுள்ள 'தளபதி அறிவாலயம்' என்ற தி.மு.க. கட்சி அலுவலகத்தை திறந்து வைக்கிறார். அங்கு புதிதாக நிறுவப்பட்டுள்ள அண்ணா, கலைஞர் வெண்கல சிலைகளையும் திறந்து வைக்கிறார்.

    இதனைத் தொடர்ந்து, விருந்தினர் மாளிகைக்கு சென்று அங்கு மதிய உணவு அருந்தி விட்டு சிறிது நேரம் ஓய்வெடுக்கிறார்.

    பின்னர், மாலை 4 மணிக்கு கட்சி அலுவலகத்தில் நடக்கும் நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டு கட்சியினருக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்குகிறார். நிகழ்ச்சிகள் அனைத்தும் முடிந்ததும் முதல்-அமைச்சர் அங்கிருந்து காரில் புறப்பட்டு திருச்சி செல்கிறார். தொடர்ந்து, அங்கிருந்து விமானம் மூலம் சென்னை திரும்புகிறார்.

    முதல்-அமைச்சர் வருகையை யொட்டி நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்டத்தில் இன்றும், நாளையும் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், 6 மாவட்டங்களை சேர்ந்த சுமார் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

    • சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கு தமிழகம் தயங்குவது ஏன்?
    • அனைவரும் முன்னேற அரசு வாய்ப்பை ஏற்படுத்தி தர வேண்டும் என்றார்.

    கும்பகோணம்:

    தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த தாராசுரம் புறவழிச் சாலையில் வன்னியர் சங்கம் சார்பில் சோழமண்டல சமய, சமுதாய நல்லிணக்க மாநாடு நடந்தது.

    மாநாட்டுக்கு வன்னியர் சங்க மாநிலத் தலைவர் பு.தா.அருள்மொழி தலைமை தாங்கினார். டாக்டர் ராமதாஸ் சிறப்புரை ஆற்றினார்.

    இந்த மாநாட்டில் பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசியதாவது:

    அனைத்து சமூகமும் ஒற்றுமையாக இருக்கவேண்டும். யாரையும் ஒடுக்கக் கூடாது.

    1982-ம் ஆண்டு இந்தியாவில் ஒரு கணக்கெடுப்பு நடந்தது. ஒவ்வொரு சமூகத்தை பற்றி புள்ளி விவரங்கள் சேகரிக்கப்பட்டன.

    இந்தியாவில் 4,694 சாதிகள் இருந்தன. தமிழகத்தில் 364 சாதிகள் உள்ளன. இந்த 364 சாதிகளும் முன்னேறினால் தான் தமிழகம் முன்னேறும். ஒரு சமத்துவமான சமூகத்தை அடைய முடியும். ஆனால், இதில் ஏற்றத்தாழ்வுகள் உள்ளது.

    ஏற்றத்தாழ்வுகள் மறைய சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தவேண்டும் என கூறுகிறோம். அனைவரும் முன்னேற அரசு வாய்ப்பை ஏற்படுத்தி தர வேண்டும்.

    சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு. 2013-ல் கர்நாடகம், 2023-ல் தெலுங்கானா உள்ளிட்ட 4 மாநிலங்களில் சாதிவாரி கணக்கெடுப்பு நடந்துள்ளது. ஆனால், தமிழகம் தயங்குவது ஏன்?

    சமூக நல்லிணக்கத்திற்கு தடை போதை பொருட்கள் தான். சமய பெரியவர்கள் மதுக்கடையை ஒழிக்க வேண்டும் என பிரசாரம் செய்ய வேண்டும் என தெரிவித்தார்.

    • குத்தகை விவசாயிகளுக்கு அடையாள அட்டை வழங்க மறுப்பது ஏற்கத்தக்கது அல்ல.
    • நெல்லை கொட்டி வைத்து, கொள்முதல் செய்வதற்கு காத்துக் கிடக்கின்றனர்.

    மன்னார்குடி:

    தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் மன்னார் குடியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    விவசாயிகளுக்கு தனி அடையாள அட்டை கொடுப்பதற்காக தமிழ்நாடு வேளாண் துறை மூலம் விளைநிலங்கள் குறித்து கணினி பதிவேற்றம் நடைபெற்று வருகிறது. தமிழக நிலப்பரப்பில் 60 சதவீதம் கோவில் அறக்கட்டளைகளுக்கு சொந்தமான நிலங்களை குத்தகை சாகுபடி செய்து வரும் விவசாயிகளுக்கு அடையாள அட்டை வழங்க மறுப்பது ஏற்கத்தக்கது அல்ல.

    குத்தகை விவசாயிகளுக்கும் உரிய அடையாள அட்டை வழங்குவதற்கான கணினி பதிவேற்றம் செய்திட தமிழக அரசு அவசர கால நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும்.

    நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்படும் நெல் திறந்தவெளி கிடங்குகள் மூலம் பாதுகாக்கப்பட்டு வந்தது. இதனை கடந்த சில ஆண்டுகளாக கைவிடப்பட்ட நிலையில் தற்போது ஒரே நேரத்தில் தமிழகம் முழுவதும் அறுவடை தொடங்கி உள்ளதால் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் கொள்முதல் நிலைய வளாகங்களில் அடுக்கி வைக்கப்பட்டு உள்ளது.

    இதனால் விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்யும் நெல்லை கொட்டி வைத்து, கொள்முதல் செய்வதற்கு காத்துக் கிடக்கின்றனர். எனவே, இதற்கு விரைந்து நடவடிக்கை எடுத்து திறந்தவெளி கிடங்குகளை திறந்து நெல் மூட்டைகளை அரவை ஆலைகளுக்கு விரைந்து அனுப்புவதற்கு அரசு முன்வர வேண்டும் என்றார்.

    • பிரதமர் மோடி மற்றும் நிர்மலா சீதாராமன் பாக்கெட்டில் இருந்து காசு கேட்கவில்லை.
    • பிரதமர் மோடி, தமிழ் மொழியை அலுவல் மொழியாக அறிவிக்க வேண்டும்.

    தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் சேர்க்கைக்கான நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துக்கொண்ட மயிலாடுதுறை எம்.பி. சுதா செய்தியாளர்கள் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பட்ஜெட் தாக்கலின் போது தமிழகத்துக்கு ஏதாவது ஒரு நிதியை, நிதிஅமைச்சரும், பிரதமரும் ஒதுக்குவார்கள் என்று நம்பிக்கையோடு தமிழ்நாட்டை சேர்ந்த அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் எதிர்பார்த்தனர். ஆனால் ஒரு சின்ன அறிவிப்பு கூட கிடையாது. நாங்கள் மிகவும் வருத்தப்பட்டோம். பாராளுமன்றத்தில் பெரிய அளவில் தமிழகத்துக்கு நிதி ஒதுக்காதது குறித்து குரல் எழுப்பினோம். தமிழகத்திற்கா? என்ற வெறுப்புணர்வோடு தான் இன்றைக்கு நிதியமைச்சர் தமிழகத்தை பார்க்கிறார்.

    அதைப்போன்று இங்கு இருக்கிற அண்ணாமலை தமிழகத்துக்கு நிதி கேட்க வேண்டியதற்கு பதிலாக மற்ற கதையெல்லாம் பேசுகிறார். தமிழக மக்கள் ஆகட்டும், தமிழ் மண்ணாகட்டும் எல்லாவற்றையும் வெறுப்பது போன்றுதான் பிரதம மந்திரி நடந்து வருகிறார். திருக்குறள், தமிழ் என பிரதமர் மோடி பேசுகிறார். பிரதமர் மோடி மற்றும் நிர்மலா சீதாராமன் பாக்கெட்டில் இருந்து காசு கேட்கவில்லை. நாம் செலுத்தும் வரியை கேட்கிறோம்.

    கல்விக்கு இந்தாண்டு வர வேண்டிய 4,500 கோடி ரூபாய் கேட்டால், மும்மொழி கொள்கையை ஒத்துக்கொள்ள வேண்டும் என மத்திய அரசு கூறுகிறது. ஒரு போதும் தமிழ் மக்களும், தமிழ் மண்ணும், தமிழ் உணர்வாளர்களும் மத்திய அரசின் சர்வாதிகார போக்கிற்கு தலை வணங்க மாட்டோம். தமிழ் மொழியை கற்றவர்கள் உலக அரங்கில் தலைசிறந்தவர்களாக உள்ளனர். இந்தியை நாங்கள் வெறுக்கவில்லை. திணிக்க வேண்டாம் என்று மக்கள் கோரிக்கை வைக்கிறார்கள்.

    பிரதமர் மோடி, தமிழ் மொழியை அலுவல் மொழியாக அறிவிக்க வேண்டும். அப்படி இல்லாவிட்டால், தமிழக மக்களுக்கு அவர் செய்வது பெரிய துரோகம். கல்விக்கான தொகையை கேட்கிறோம் என்பதற்காக திருப்பரங்குன்றம், திருத்தணிக்கு போய் பிரச்சனை என முருகனை வைத்து திசை திருப்புகிறார்கள். முருகனின் பெயரை வைத்துக்கொண்டு எல்லா வித்தைகளையும் செய்து வருகிறார்கள். முருகனே வந்து திருத்தினாலும், இவர்கள் திருந்த மாட்டார்கள். ஆனால் ஒருநாள் முருக பெருமான் சூரனை எப்படி வதம் செய்தாரோ அதுபோன்று ஆர்.எஸ்.எஸ்.கும்பலை வதம் செய்யப்போகிறார் என்றார்.

    • நேற்று ரத ரோஹ ரோகணம் என்னும் சப்பர தேரோட்டம் நடைபெற்றது.
    • பக்தர்கள் பால்காவடி சுமந்தும், பால்குடம் எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    சுவாமிமலை:

    தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே சுவாமிமலையில் சுவாமிநாதசுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 4-ம் படை வீடாகும்.

    இக்கோவிலில் பிரபவ முதல் அட்சய முடிய 60 தமிழ் வருட தேவதைகளும் இங்கு திருப்படிகளாக அமையப்பெற்று குறிப்பிடத்தக்கதாகும். இக்கோவிலில் ஆண்டுதோறும் தைப்பூச திருவிழா 10 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி, இந்த ஆண்டுக்கான விழா கடந்த 2-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழா நாட்களில் தினமும் சிறப்பு அலங்காரத்தில் வள்ளி, தெய்வானையுடன் முருகப்பெருமான் எழுந்தருளி வீதிஉலா நடைபெற்று வந்தது. நேற்று ரத ரோஹ ரோகணம் என்னும் சப்பர தேரோட்டம் நடைபெற்றது. விழாவின் சிகர நாளான இன்று (செவ்வாய்க்கிழமை) தைப்பூச விழா கோலாகலமாக நடந்தது.

    முருகப்பெருமானை தரிசிக்க அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் கோவிலில் குவிந்த வண்ணம் உள்ளனர். நேரம் செல்லச் செல்ல கட்டுக்கடங்காமல் கூட்டம் அலைமோதியது. பக்தர்கள் நீண்ட வரிசையில் சுமார் ஒரு மணி நேரம் வரை காத்திருந்து அர்ச்சனை செய்து, மனமுருகி முருகப்பெருமானை வழிபட்டனர்.

    இன்னும் ஏராளமான பக்தர்கள் காவடி, பால்காவடி சுமந்தும், பால்குடம் எடுத்தும் பாதயாத்திரையாக கோவிலுக்கு வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து, அபிஷேகம் மற்றும் பூஜைகளில் கலந்து கொண்டு பிரசாதம் பெற்று சென்றனர்.

    முன்னதாக காலை வெள்ளி மயில் வாகனத்தில் முருகப்பெருமான் எழுந்தருளி வீதி உலா புறப்பட்டார். பின்னர் காவிரி ஆற்றில் சுவாமிக்கு பல்வேறு அபிஷேகங்கள் நடைபெற்று புனிதநீர் ஊற்றி தீர்த்தவாரி நடைபெற்றது. இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

    விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

    பாதுகாப்பு பணியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மலைச்சாமி தலைமையில் போலீசார் ஈடுபட்டிருந்தனர். பேரூராட்சி நிர்வாகம் சார்பில் குடிநீர், சுகாதார வசதிகள் செய்யப்பட்டு இருந்தது. விழாவை யொட்டி கும்பகோணம், தஞ்சாவூர், ஜெயங்கொண்டம், அரியலூர், கடலூர் ஆகிய ஊர்களில் இருந்து சிறப்பு பஸ்களும் கோவிலுக்கு இயக்கப்பட்டன. 

    • 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை தைலக்காப்பு அபிஷேகம் நடைபெறும்.
    • ஓம் சக்தி.. பராசக்தி... என்ற பக்தி கோஷங்கள் விண்ணையே முட்டும் அளவுக்கு அதிர்ந்தது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் அருகே உள்ள புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் அரண்மனை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட 88 கோவில்களில் ஒன்றாக திகழ்கிறது. இந்த கோவிலில் உள்ள கருவறையில் உள்ள மாரியம்மன் புற்று மண்ணால் ஆனது என்பது தனி சிறப்பு வாய்ந்தது.

    இதனால் கருவறையில் உள்ள அம்மனுக்கு அபிஷேகங்கள் செய்யப்படுவதில்லை. அதற்கு பதிலாக 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு மண்டலம் தைலக்காப்பு அபிஷேகம் நடைபெறும்.

    இப்படி பல்வேறு சிறப்புகள் வாய்ந்த புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் கடந்த 2014-ம் ஆண்டு குடமுழுக்கு நடைபெற்றது. அதனை தொடர்ந்து, 21 ஆண்டுகளுக்கு பிறகு பல்வேறு திருப்பணிகளுடன் இன்று (திங்கட்கிழமை) கோலாகலமாக குடமுழுக்கு நடைபெற்றது.

    இந்த குடமுழுக்கு விழாவுக்கான யாகபூஜைகள் செய்வதற்காக 41 யாக குண்டங்களுடன் பிரம்மாண்டமான யாக சாலை அமைக்கப்பட்டது. இங்கு கடந்த 3-ந்தேதி விக்னேஸ்வர பூஜை, மஹா கணபதி ஹோமத்துடன் பூர்வாங்க பூஜைகள் தொடங்கின.

    கடந்த 7-ந்தேதி முதல் கால யாகசாலை பூஜை தொடங்கியது. தொடர்ந்து, யாகசாலை பூஜைகள் நடந்து வந்தன.

    இன்று காலை விக்னேஸ்வர பூஜையுடன் 6-ம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. அதை தொடர்ந்து மஹா பூர்ணாஹூதி, மகா தீபாராதனை, யாத்ராதானம் நடைபெற்றது.

    பின்னர், யாகசாலையில் இருந்து மாரியம்மன் மற்றும் பரிவார கலசங்கள் புறப்பாடு செய்யப்பட்டு மேளவாத்தியங்களுடன் ராஜகோபுரத்திற்கு சிவாச்சாரியார்கள் தலையில் புனிதநீர் சுமந்து வந்தனர்.

    தொடர்ந்து, புனிதநீர் அடங்கிய கடங்கள் வைக்கப்பட்டு வேத மந்திரங்கள் ஓத சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் சரியாக 10 மணிக்கு விநாயகர், சுப்பிரமணியர், மாரியம்மன், விஷ்ணு துர்க்கை, பேச்சியம்மன் மற்றும் ராஜ கோபுரங்களில் புனிதநீர் ஊற்றி குடமுழுக்கு நடத்தப்பட்டது.

    அந்த நேரத்தில் வானில் கருடன் வட்டமிட்டது. பின்னர், மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து அங்கு குவிந்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் எழுப்பிய புன்னைநல்லூர் மாரியம்மா.. ஓம் சக்தி.. பராசக்தி... என்ற பக்தி கோஷங்கள் விண்ணையே முட்டும் அளவுக்கு அதிர்ந்தது. பின்னர், பக்தர்கள் மீது புனிதநீர் ஷவர் மூலம் தெளிக்கப்பட்டது.

    குடமுழுக்கு விழாவை யொட்டி தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் உத்தரவுப்படி ஏராளமான போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விழாவில் இன்று இரவு 7 மணிக்கு மாரியம்மன் திருவீதிஉலா நடைபெற உள்ளது. நாளை முதல் மண்டலாபிஷே பூஜைகள் நடைபெறும். 

    • கனமழையால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சேதம் அடைந்தன.
    • கடந்த 2 நாட்களாக டெல்டா மாவட்டத்தில் மத்திய குழுவினர் ஆய்வு.

    நாகப்பட்டினம்:

    தஞ்சாவூர், திருவாரூர், நாகை ஆகிய டெல்டா மாவட்டங்களில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சேதம் அடைந்தன.

    தொடர்ந்து, வானம் மேகமூட்டம் மற்றும் தொடர் பனிப்பொழிவு காரணமாக அறுவடை செய்த நெல்லை உலர வைப்பதில் விவசாயிகள் சிரமம் அடைந்து வந்தனர். மேலும், தெல் கொள்முதல் நிலையங்களில் நெல்லின் ஈரப்பதத்தை 17 சதவீதத்தில் இருந்து 22 சதவீதமாக உயர்த்த வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இதனை மத்திய அரசுக்கு, தமிழக அரசு கடிதம் எழுதியது. இதனையடுத்து, கடந்த 2 நாட்களாக டெல்டா மாவட்டத்தில் மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர்.

    அதன்படி, நாகப்பட்டினம் மாவட்டத்தில் மத்திய உணவு துறையின் சேமிப்பு மற்றும் ஆராய்ச்சி பிரிவு உதவி இயக்குனர் நாவீன் தலைமையில் தொழில்நுட்ப அலுவலர் ராகுல் ஆகிய 2 பேர் கொண்ட குழுவினர் ஆய்வு செய்தனர்.

    முதல்கட்டமாக நாகை மாவட்டம், எரவாஞ்சேரியில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கு குவித்து வைக்கப்பட்டிருந்த நெல்லின் ஈரப்பதத்தை, அதற்கான கருவி மூலம் ஆய்வு செய்து பார்த்தனர். பின்னர், நெல்லின் மாதிரிகளை ஆய்வுக்காக எடுத்து சென்றதோடு, விவசாயிகளிடம் குறை களையும் கேட்டறிந்தனர்.

    அதனைத் தொடர்ந்து, மணக்குடி, சீயாத்தமங்கை, பட்டமங்கலம், தேவூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நேரடி கொள்முதல் நிலையங்களில் இரவு நேரத்தில் ஆய்வு செய்தனர். பின்னர், ஆய்வு பணிகளை முடித்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டனர்.

    ஆய்வின்போது தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக இயக்குனர் அண்ணாதுரை, மாவட்ட கலெக்டர் ஆகாஷ், நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் சிவப்பிரியா உள்ளிட்ட அரசு அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் உடன் இருந்தனர்.

    • பல்வேறு இடங்களில் தொடர்ந்து கனமழை பெய்தது.
    • பாதிப்பு பயிர்களை கணக்கீடு செய்து அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்றனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டத்தில் சம்பா, தாளடி சாகுபடி பணிகள் 3 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கரில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது அறுவடை தொடங்கி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நேற்று இரவு தொடர்ந்து கனமழை பெய்தது. இதனுடன் கடும் பனிப்பொழிவும் நீடித்தது.

    இரவு முழுவதும் பெய்த தொடர் மழையால் மாவட்டத்தில் தற்போது அறுவடைக்கு தயாராக இருந்த நூற்றுக்கனக்கான ஏக்கர் பரப்பளவில் நெற்பயிர்கள் வயலிலேயே சாய்ந்துள்ளது .

    தஞ்சாவூர் வண்ணாரப்பேட்டை, 8 ம் நம்பர் கரம்பை, பூதலூர், ஆலக்குடி, கல்வராயன்பேட்டை , சித்திரக்குடி, சீராளூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் அறுவடை செய்ய வேண்டிய சம்பா பயிர்கள் அதிகளவில் சாய்ந்து பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. இதனால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

    இது குறித்து அவர்கள் கூறும்போது, தஞ்சை மாவட்டத்தில் பருவம் தவறி பெய்த மழையால் அறுவடைக்கு தயாரான பயிர்கள் சாய்ந்துள்ளது. இன்னும் தொடர்ந்து மழை நீடித்தால் வயல்களில் தண்ணீர் தேங்கி பயிர்கள் கடுமையாக பாதிக்கப்படும். மேலும் மகசூலும் குறையும். ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் செலவு செய்தும் 25 மூட்டை கூட நெல் கிடைக்காது. எனவே பாதிப்பு பயிர்களை கணக்கீடு செய்து அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்றனர்.

    • சிகிச்சை பலனின்றி நேதாஜி இறந்தார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை அடுத்த சென்னம்பட்டி அண்ணா நகர் காலனியை சேர்ந்தவர் நேதாஜி (வயது 29 ). இவர் நேற்று பிள்ளையார்பட்டி திருவையாறு சாலை டாக்டர் எஸ்.ஜி.நகர் அருகே தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது எதிரே மற்றொரு மோட்டார் சைக்கிளில் தஞ்சை 8-ம் நம்பர் கரம்பையை சேர்ந்த கவுதம் (28) வந்து கொண்டிருந்தார். எதிர்பாராத விதமாக இரண்டு மோட்டார் சைக்கிள்களும் மோதிக்கொண்டன. இதில் இரண்டு பேரும் தூக்கி வீசப்பட்டு காயமடைந்தனர்.

    அந்த நேரத்தில் எதிரே 8-ம் நம்பர் கரம்பை பகுதியை சேர்ந்த பாரதிராஜா (27) என்பவர் ஓட்டி வந்த கார் எதிர்பாராத விதமாக நேதாஜி மீது மோதி ஏறி இறங்கியது. இந்த விபத்தில் நேதாஜி பலத்த காயமடைந்தார்.

    இதையடுத்து நேதாஜி, கவுதம், பாரதிராஜா ஆகிய 3 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி நேதாஜி இறந்தார். கவுதம், பாரதிராஜாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்த புகாரின் பேரில் தமிழ் பல்கலைக்கழகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நந்தியம்பெருமானுக்கு ஆண்டுதோறும் மாட்டுப் பொங்கல் அன்று மகரசங்கராந்தி விழா நடத்தப்படுவது வழக்கம்.
    • நந்தி சிலை முன்பு 108 பசுமாடுகள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை பெரிய கோவில் உலக புகழ் பெற்றது . இந்த கோவில் தமிழர்களின் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக திகழ்வதோடு, உலக பாரம்பரிய சின்னமாக விளங்கி வருகிறது. தமிழகம் மட்டும் இன்றி வெளி மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் நாள்தோறும் பெரிய கோவிலுக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

    இந்த கோவிலில் மிகப்பெரிய நந்தியம்பெருமான் சிலை உள்ளது. ஒரே கல்லில் செதுக்கப்பட்ட இந்த நந்தி 20 டன் எடை கொண்டது. இந்த நந்தியம்பெருமானுக்கு ஆண்டுதோறும் மாட்டுப் பொங்கல் அன்று மகரசங்கராந்தி விழா நடத்தப்படுவது வழக்கம். அதன்படி இன்று மகர சங்கராந்தி பெருவிழா நடந்தது.

    இதனை முன்னிட்டு காலையில் நந்தியம் பெருமானுக்கு சுமார் 2 டன் எடையிலான காய்கறிகள், பழங்கள், இனிப்பு வகைகள், பூக்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் கத்தரிக்காய், முட்டைகோஸ், பூசணிக்காய், சவ்சவ், உருளைக்கிழங்கு, வாழைக்காய், பாகற்காய், கேரட், மிளகாய், நெல்லிக்காய், வெண்டைக்காய் போன்ற அனைத்து வகையான காய்களாலும், ஆரஞ்சு, வாழை, ஆப்பிள், மாதுளை, கொய்யா உள்பட பல வகையான பழங்கள், பால்கோவா உள்பட பல்வேறு வகையான இனிப்புகள், பல்வேறு வகையான மலர்களாலும் நந்தியம்பெருமானுக்கு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட மகா நந்திக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு 16 வகையான தீபாராதனைகள் காட்டப்பட்டது.

    இதைத்தொடர்ந்து நந்தி சிலை முன்பு 108 பசுமாடுகள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டது. பின்னர் அவற்றின் மீது சந்தனம், குங்குமம் பூசப்பட்டு, மாலை அணிவிக்கப்பட்டு, பட்டுத்துணி போர்த்தப்பட்டு கோ-பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கோ-பூஜை செய்தனர்.

    பின்னர் நந்திக்கு படைக்கப்பட்ட காய்கறிகள், பழங்கள், இனிப்புகள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டன.

    • யுஜிசி புதிய வழிகாட்டுதல் அறிவிப்பு நகலை மாணவர்கள் தீயிட்டு எரித்து மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.
    • போராட்டத்தில் ஏராளமான மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

    தஞ்சாவூர்:

    பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் தேடுதல் குழுவை கவர்னரே நியமிக்கும் யுஜிசி அறிவிப்பை திரும்ப பெற வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் இன்று பல்கலைக்கழகம், கல்லூரிகளில் இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    அதன்படி தஞ்சை அரசு மன்னர் சரபோஜி கல்லூரியில் இன்று காலை இந்திய மாணவர் சங்கத்தினர் போராட்டம் நடத்தினர். இதற்கு மாநில செயலாளர் அரவிந்த்சாமி தலைமை தாங்கினார். கிளை தலைவர் ரஞ்சித் முன்னிலை வகித்தார்.

    அப்போது யுஜிசி புதிய வழிகாட்டுதல் அறிவிப்பு நகலை மாணவர்கள் தீயிட்டு எரித்து மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். உடனடியாக போலீசார் தண்ணீர் ஊற்றி அணைத்தனர்.

    இந்த போராட்டத்தில் ஏராளமான மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். நகலை தீயிட்டு மாணவர்கள் எரித்த சம்பவம் பரபரப்பைஏற்படுத்தி உள்ளது.

    ×