என் மலர்tooltip icon

    தஞ்சாவூர்

    • குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணய சட்டம் கொண்டுவர வேண்டும்.
    • தமிழகம் முழுவதும் சம்யுக்த கிசான் மோர்ச்சா சார்பில் ரெயில் மறியல் போராட்டம்.

    தஞ்சாவூர்:

    குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணய சட்டம் கொண்டுவர வேண்டும். விவசாயிகள் பெற்ற கடன் முழுவதையும் தள்ளுபடி செய்ய வேண்டும். குறைந்தபட்ச ஆதாரவிலை கேட்டு சாகும் வரை பஞ்சாப் கண்ணூரி பார்டரில் உண்ணாவிரதம் மேற்கொண்டு உயிருக்கு போராடிவரும் சம்யுக்த கிசான் மோர்ச்சா (அரசியல் சார்பற்றது) தலைவர் ஜெக்ஜித் சிங் டல்லேவாலோடு உடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று தமிழகம் முழுவதும் சம்யுக்த கிசான் மோர்ச்சா (அரசியல் சார்பற்றது ) சார்பில் ரெயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

    அதன்படி தஞ்சை ரயில் நிலையத்தில் போராட்டம் நடத்துவதற்காக தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் பொதுச் செயலாளர் பி.ஆர். பாண்டியன் தலைமையில் மாநிலத் தலைவர் திருப்பதி வாண்டையார், மண்டல தலைவர் துரை. பாஸ்கரன், காவிரி டெல்டா விவசாயிகள் சங்கம் தலைவர் ஏ.கே.ஆர். ரவிச்சந்தர் உள்பட ஏராளமான விவசாயிகள் திரண்டனர். பின்னர் ஊர்வலமாக புறப்பட்டு முதல் நடைமேடைக்கு வந்தனர்.

    அப்போது திருச்சியில் இருந்து காரைக்கால் நோக்கி வந்த ரெயிலை மறித்து தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய அரசை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. மேலும் மத்திய அரசு எதிராகவும் கோஷமிட்டனர்.

    இதையடுத்து ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பி.ஆர். பாண்டியன் உள்பட 55 விவசாயிகளை போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர். அதன்பிறகு ரெயில் காரைக்கால் நோக்கி புறப்பட்டது. இந்த சம்பவத்தால் தஞ்சாவூர் ரெயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    • பல்வேறு இடங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் சம்பா, தாளடி நெற்பயிர்கள் மூழ்கின.
    • ஆச்சனூர், பாபநாசம் பகுதிகளில் வாழை பயிரிட்ட வயல்களில் மழைநீர் தேங்கியுள்ளது.

    தஞ்சாவூர்:

    வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக அடைமழை பெய்தது.

    தொடர் மழையின் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. திருவையாறு அருகே கோணக்கடுங்காலாறு உடைப்பு ஏற்பட்டு 1000 ஏக்கருக்கு மேல் சம்பா, தாளடி நெற்பயிர்கள் மற்றும் வாழைகள் நீரில் மூழ்கின. இதேப்போல் அம்மாப்பேட்டை, புத்தூர், அய்யம்பேட்டை, கணபதி அக்ரஹாரம், நரசிங்கபுரம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் சம்பா, தாளடி நெற்பயிர்கள் மூழ்கின.

    திருவையாறு, வளப்பக்குடி, ஆச்சனூர், பாபநாசம் பகுதிகளில் வாழை பயிரிட்ட வயல்களில் மழைநீர் தேங்கியுள்ளது. இந்த நீரை தொடர்ந்து தோட்டத்தில் நின்றால் வேர் அழுகல் நோய் தாக்கும் அபாயம் உள்ளது. இதனால் வாலை இலை அறுவடை செய்யும் பணி பாதிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக வாழை இலைகள் அறுக்க முடியாமல் மரத்திலேயே கிழிந்து வீணாகி வருவதாக விவசாயி மதியழகன் வேதனை தெரிவித்தார்.

    இதேப்போல் மழையால் நிலக்கடலை, உளுந்து, செங்கரும்பு போன்ற பல பயிர்களும் பாதிக்கப்பட்டுள்ளன.

    பாதிக்கப்பட்ட பயிர்களை வேளாண்துறை, தோட்டக்கலை துறை அதிகாரிகள் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மொத்தம் மாவட்டத்தில் 15 ஆயிரத்து 375 ஏக்கரில் நெல், கடலை, உளுந்து, வாழைப்பயிர்கள் நீரில் மூழ்கி பாதிக்கப்பட்டுள்ளன.

    இந்த நிலையில் இன்று காலையில் இருந்து மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் மழை இன்றி காணப்பட்டது. இதனால் வீடுகளை சூழ்ந்துள்ள தண்ணீர் வடிந்து வருகிறது. மேலும் விளைநிலங்களில் தேங்கிய தண்ணீரை வடிய வைக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

    மேலும் பாதிக்கப்பட்ட பயிர்களை முழுமையாக கணக்கீடு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

    • வாகனங்களில் சுவாமி வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது.
    • ஆயிரக்கணக்கான மக்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    சுவாமிமலை:

    தஞ்சாவூர் மாவட்டம் சுவாமிமலை சுவாமிநாதசாமி கோவிலில் திருக்கார்த்திகை திருவிழா 5-ந் தேதி கொடி யேற்றத்துடன் தொடங்கியது.

    முருகனின் ஆறுபடை வீடுகளில் 4-ம் படை வீடாக போற்றப்படும் சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவிலில் திருக்கார்த்திகை திருவிழா 4-ம் தேதி புதன்கிழமை இரவு 7 மணிக்கு அணுகை, விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கி மறுநாள் 5-ம் தேதி வியாழக்கிழமை திருக்கார்த்திகை திருவிழா கொடியேற்றம் விநாயகர், வள்ளி, தேவசேனா, சமேத ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி பரிவாரங்களுடன் மலைக்கோயிலில் இருந்து உற்சவ மண்டபம் எழுந்தருலுதல் நிகழ்ச்சியும், இரவு யாகசாலை பூஜை சுவாமி திருவீதி உலா திக் பந்தனம் நிகழ்ச்சியும் நடை பெற்றது.

    தொடர்ந்து 8 நாட்கள் படிச்சட்டத்தில், ஆட்டுக்கிடா வாகனம், பஞ்சமூர்த்திகள் சப்பரம், யானை வாகனம், காமதேனு வாகனம், வெள்ளிக் குதிரை வாகனம், உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது.

    அதன் தொடர்ச்சியாக இன்று 13-ம் தேதி வெள்ளிக்கிழமை திருக்கார்த்திகையை முன்னிட்டு காலை 9 மணிக்கு மேல் திருத்தேர் திருவிழா நிகழ்ச்சி நடைபெற இருந்தது.

    திருத்தேர் திருவிழாவை முன்னிட்டு கடந்த சில நாட்களாக திருத்தேர் அலங்கரிக்கப்பட்டு இன்று தேரோட்ட நிகழ்ச்சிக்காக தயார் நிலையில் இருந்தது.

    இந்நிலையில் கடந்த 2 நாட்களாக இந்த பகுதியில் பெய்த மழையின் காரணமாக சுவாமிமலை தேர் முழுவதும் நனைந்து விட்டது. இதைத் தொடர்ந்து சுவாமிமலை சுவாமிநாத சாமி திருக்கார்த்திகை தேரோட்டம் நடத்துவதா இல்லையா என்று அதிகாரிகள் மற்றும் கோவில் சிவாச்சாரியார்கள் ஆலோசனை நடத்தினர்.

    பின்னர் 9.15 மணிக்கு தேரோட்டம் நடை பெற்றது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் செய்திருந்தனர்.

    • தஞ்சை மாவட்டத்தில் நேற்று பகல், இரவு என நாள் முழுவதும் மழை பெய்தது.
    • பல வீடுகளை சுற்றி தண்ணீர் தேங்கியுள்ளதால் வெளியே வராமல் முடங்கியுள்ளனர்.

    தஞ்சாவூர்:

    வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்தமாக வலுப்பெற்றுள்ளதை தொடர்ந்து தமிழகத்தில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது.

    தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கடந்த 11-ந் தேதி மழை பெய்ய தொடங்கியது. அன்றில் இருந்து தற்போது வரை இடைவிடாமல் அடைமழை கொட்டி வருகிறது.

    தஞ்சை மாவட்டத்தில் நேற்று பகல், இரவு என நாள் முழுவதும் மழை பெய்தது. தொடர்ந்து விடிய விடிய பெய்த கனமழை இன்றும் நீடித்தது. தொடர்ந்து 3-வது நாளாக இன்றும் அதி கனமழை பெய்து வருகிறது. இடைவிடாமல் கனமழை பெய்து வருவதால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகின்றன. தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது. அடைமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் மக்களின் நடமாட்டம் குறைந்தது. மேலும் மாவட்டத்தில் பல வீடுகளை சுற்றி தண்ணீர் தேங்கியுள்ளதால் வெளியே வராமல் முடங்கியுள்ளனர்.

    மாவட்டத்தில் ஒரே நாளில் 1731.40 மி.மீ.அளவுக்கு மழை பதிவாகியுள்ளது. குறிப்பாக அதிகபட்சமாக திருவிடைமருதூரில் 196.40 மி.மீ. மழை கொட்டியுள்ளது. மஞ்சளாறில் 191 மி.மீ., கும்பகோணத்தில் 179 மி.மீ, கீாணை-168 மி.மீ, பாபநாசம்-124.20 மி.மீ, அய்யம்பேட்டை-124 மி.மீ, பூதலூர்-115, திருக்காட்டுபள்ளி-85.20, திருவையாறில் 78 மி.மீ, தஞ்சாவூரில்-35 மி.மீ. மழையும் பதிவானது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் மழையின் அளவு இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


    தொடர்மழையால் மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் நெற்பயிர்கள் மூழ்கி உள்ளது. வயல்களில் தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்ற முடியாமல் விவசாயிகள் அவதியடைந்து வருகின்றனர். தொடர்ந்து மழை பெய்யும் பட்சத்தில் மூழ்கிய பயிர்கள் பாதிப்படையும் அபாயம் உள்ளதால் விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர். ஏற்கனவே ஃபெஞ்ஜல் புயலால் பயிர்கள் பாதிக்கப்பட்ட சூழலில் தற்போது இடைவிடாது பெய்யும் மழையால் மீண்டும் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

    தொடர்மழையால் இன்றும் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

    திருவாரூர் மாவட்டத்தில் கடந்த 3 தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. குறிப்பாக நேற்று இரவு தொடங்கிய மழை விடிய விடிய இடைவிடாமல் திருவாரூர் மாவட்டம் முழுவதும் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்த கனமழையின் காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    குறிப்பாக திருவாரூர், நன்னிலம், நீடாமங்கலம், வலங்கைமான், திருத்துறைப்பூண்டி கூத்தாநல்லூர் பின்னத்தூர், மாங்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக கடந்த 24 மணி நேரத்தில் நன்னிலத்தில் 11.5 சென்டிமீட்டர் திருவாரூரில் 8.3 செ.மீ வலங்கைமானில் 8.8 சென்டிமீட்டர் குடவாசலில் 7.3 செ.மீ நீடாமங்கலத்தில் 7.2 செ.மீ மழையளவு பதிவாகியுள்ளது

    இந்த கனமழையின் காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் சம்பா நெல் சாகுபடி பணிகளில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்துள்ளார். இன்னும் ஒரு மாத காலத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த நெல் பயிர்கள் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மழை நீரில் சாய்ந்து வருகிறது. உடனடியாக வேளாண் துறை அதிகாரிகள் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து கணக்கெடுப்பு நடத்தி உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதைப்போல் நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, பனங்குடி, ஏனங்குடி, ஆனைமங்கலம், குறுக்கத்தி, கிள்ளுக்குடி, சீராவட்டம், திருப்பூண்டி, பூவை தேடி உள்ளிட்ட இடங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும் தொடர் மழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. நாகை மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நாகையில் 8.2செமீ மழை பதிவாகியுள்ளது.

    நாகையில் 8.2செமீ, திருப்பூண்டி 0.9, வேளாங்கண்ணி 1.9, திருக்குவளை 1.1, தலைஞாயிறு 1.2, வேதாரண்யம் 1.4 கோடியக்கரை 2.8 செ.மீ மழை அளவு பதிவாகி உள்ளது. மாணவர்களின் நலன் கருதி நாகை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் ஆகாஷ் உத்தரவிட்டுள்ளார்.

    இதைப்போல் மயிலாடுதுறை மாவட்டத்திலும் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது.

    இடைவிடாமல் பெய்து வரும் கனமழையால் தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் இன்றும் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. படகுகளை துறைமுகம், கரையோரம் நிறுத்தி வைத்துள்ளனர்.

    • பயிர்கள் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
    • பகல் முழுவதும் விட்டு விட்டு மழை பெய்தன.

    தஞ்சாவூர்:

    தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

    குறிப்பாக தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் விடிய விடிய கனமழை வெளுத்து வாங்கியது.

    தஞ்சாவூர் மாவட்டத்தில் ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பதற்கு முன்னர் கனமழை கொட்டியது. அதன்பிறகு ஒரு வாரமாக மழை இன்றி காணப்பட்டது. தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் மீண்டும் மழை பெய்ய தொடங்கி உள்ளது.

    நேற்று பகல் முழுவதும் விட்டு விட்டு பரவலாக மழை பெய்தது. இரவிலும் இதே நிலை நீடித்தது. ஆனால் இன்று அதிகாலையில் இருந்து கனமழையாக மாறி கொட்டியது. நள்ளிரவு 1 மணி முதல் காலை 7 மணி வரை கனமழையாக வெளுத்து வாங்கியது.

    தஞ்சையில் பெய்த கனமழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடின. தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது.

    இதேபோல் வல்லம், பூதலூர், ஒரத்தநாடு, நெய்வாசல்தென்பாதி, கும்பகோணம், திருவிடைமருதூர், கீழணை, பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், மதுக்கூர், பேராவூரணி உள்ளிட்ட மாவட்டத்தின் அனைத்து இடங்களிலும் விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்தது.

    தொடர்ந்து பகல் முழுவதும் விட்டு விட்டு மழை பெய்தன. மாவட்டத்தில் அதிகபட்சமாக அதிராம்பட்டினத்தில் 73.60 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. ஒரே நாளில் 795.80 மி.மீ. மழை பெய்துள்ளது குறிப்பிடதக்கது.

    ஏற்கனவே கடந்த 10 நாட்களுக்கு முன்பு பெய்த தொடர்மழையால் மாவட்டத்தில் 2000-க்கும் மேற்பட்ட ஏக்கரில் சம்பா, தாளடி நெற்பயிர்கள் மூழ்கி பாதிப்படைந்திருந்தன.

    அதன் பின்னர் மழை ஓய்ந்ததால் வயல்களில் தேங்கிய தண்ணீர் வடிந்தன. இந்த நிலையில் தற்போது மீண்டும் கனமழை பெய்து வருவதால் பயிர்கள் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    திருவாரூர் மாவட்டத்தில் நேற்று நள்ளிரவு முதல் தற்பொழுது வரை 24 மணி நேரத்தை கடந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

    குறிப்பாக திருவாரூர், கமலாபுரம், வடபாதிமங்கலம், மாங்குடி, நன்னிலம், குடவாசல், கூத்தாநல்லூர், கொரடாச்சேரி திருத்துறைப்பூண்டி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது.

    இந்த கனமழையின் காரணமாக விக்கிரபாண்டியம். புழுதிகுடி. கோட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும் சம்பா நெல் சாகுபடி பணிகளில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் இந்த கன மழை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

    மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை, தரங்கம்பாடி, பொறையாறு, திருக்கடையூர், செம்பனார்கோவில், சீர்காழி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை முதல் மழை பெய்ய தொடங்கியது.

    நேற்று இரவு விடிய,விடிய பரவலாக மழை பெய்த நிலையில் அதிகாலை முதல் தொடர்ந்து கன மழை விட்டு விட்டு பெய்து வருகிறது.

    கடலோர பகுதி பழையாறு, பூம்புகார், திருமுல்லைவாசல், தொடுவாய் உள்ளிட்ட பகுதிகளில் காற்றுடன் மழை பெய்து வருகிறது. மாவட்ட நிர்வாகம் உத்தரவுப்படி பழையாறு துறைமுகத்திலிருந்து மீன் பிடிக்க செல்லும் 5 ஆயிரம் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாமல் தங்களது படகுகளை மீன் பிடித்துறை முகம் அருகே பக்கிங்காம் கால்வாய் கரையோரம் நிறுத்தி வைத்துள்ளனர்.

    இதேபோல் திருமுல்லைவாசல், பூம்புகார், வானகிரி பகுதி மீனவர்களும் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. இதனால் சுமார் 10,000 க்கு மேற்பட்ட மீனவர்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

    நாகப்பட்டினம் மாவட்டத்தில் நாகை, நாகூர், வேளாங்கண்ணி, சாட்டியக்குடி, திருக்குவளை, அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம், காமேஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளில் கன மழை பெய்து வருவதால் பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கி கிடக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

    நாகை நகராட்சிக்குட்பட்ட வடக்கு பால் பண்ணை சேரி வாட்டர் டேங்க் சாலையில் மழைநீர் தேங்கி குளம்போல் காட்சியளிக்கிறது. இதனால் வீடுகளுக்குள் மழை நீர் புகும் அபாயம் இருப்பதுடன், அப்பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

    மின்வளத்துறையினர் எச்சரிக்கை காரணமாக வேதாரண்யம் தாலுகாவில் 5 ஆயிரம் மீனவர்கள் 2-ம் நாளாகமீன்பிடிக்க செல்லாமல் ஆயிரத்துக்கு மேற்பட்ட பைபர்படகுகளை பாதுகாப்பாக கரையோரம் நிறுத்தி வைத்துள்ளனர். இதனால் வேதாரண்யம் தாலுகாவில் 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.

    இடைவிடாது பெய்து வரும் கனமழையால் தஞ்சை பெரியகோவில், சிவகங்கைபூங்கா, மனோரா, வேளாங்கண்ணி கடற்கரை, தரங்கம்பாடி டேனிஷ்கோட்டை, முத்துப்பேட்டை அலையாத்தி காடுகள் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் உள்ள சுற்றுலா தலங்களில் இன்று வழக்கத்தை விட குறைந்தளவே சுற்றுலாப் பயணிகள் காணப்பட்டதால் அவைகள் வெறிச்சோடின.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டும்.
    • மழை, புயல் காரணமாக உயிரிழந்தவர்களுக்கு அரசு சார்பில் வழங்கப்படும் நிவாரணத்தை ரூ.10 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும்.

    கும்பகோணம்:

    கும்பகோணத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    நாடு முழுவதும் விலைவாசி உயர்வு பல மடங்கு அதிகரித்து உள்ளது. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டும்.

    டங்ஸ்டன் நிறுவனம் தொடங்குவதற்கு மாநில அரசு அனுமதி அளிக்காத நிலையில், கடும் எதிர்ப்பை மீறி மத்திய அரசு அனுமதி அளித்திருப்பதை இந்திய கம்யூனிஸ்டு கட்சி கண்டிக்கிறது.

    மழை, புயல் காரணமாக உயிரிழந்தவர்களுக்கு அரசு சார்பில் வழங்கப்படும் நிவாரணத்தை ரூ.10 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும். விவசாயம் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டு உள்ளது. எக்டேர் ஒன்றுக்கு ரூ.17 ஆயிரத்து 500 நிவாரணம் வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

    டெல்டா மாவட்டங்களில் அதிகம் உள்ள குடிசை வீடுகளை முற்றிலும் நீக்கி கான்கிரீட் வீடுகளாக மாற்றி, குடிசைகள் இல்லாத மாவட்டங்களாக டெல்டா மாவட்டங்களை உருவாக்குவதற்கான முயற்சியை அரசு மேற்கொள்ள வேண்டும். மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை பேரிடர் பாதிக்கப்பட்ட மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதற்கட்ட புயல் நிவாரணமாக ரூ.2 ஆயிரத்து 500 கோடி தேவை என மத்திய அரசின் உயர்மட்ட குழுவிடம் கடிதம் கொடுத்து உள்ளார். இதற்கு உரிய மதிப்பளித்து அந்த நிதியை அனுப்பி வைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கொலை சம்பவத்தில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளிகள் 3 பேர் ஜெயங்கொண்டம் குற்றவியல் கோர்ட்டில் சரணடைந்தனர்.
    • கொலைக்கு உடந்தையாக இருந்த 4 பேரை அய்யம்பேட்டை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டையை அடுத்த பசுபதிகோவில் திரவுபதியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சிவசங்கர் மகன் சிவமணிகண்டன் (வயது 28).

    இவர் அப்பகுதியில் கஞ்சா விற்பனை செய்யும் நபர்கள் குறித்து அய்யம்பேட்டை போலீஸ் நிலையத்தில் கடந்த 6-ம் தேதி இரவு புகார் அளித்தார். இந்நிலையில் 7-ம் தேதி மாலை 5 மணிக்கு அய்யம்பேட்டை பஸ் நிறுத்தம் அருகே சிவ மணிகண்டன் நடுரோட்டில் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டார்.

    கஞ்சா விற்பவர்கள் குறித்து போலீசில் புகார் அளித்ததன் காரணமாக சிவ மணிகண்டன் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளதாக அவர்களது உறவினர்கள் குற்றம்சாட்டினர்.

    மேலும் புகார் அளித்த சமயத்தில் குற்றவாளிகளை கைது செய்திருந்தால் கொலையை தடுத்து நிறுத்தி இருக்கலாம் எனவும் தெரிவித்திருந்தனர்.

    இந்நிலையில் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளிகள் 3 பேர் ஜெயங்கொண்டம் குற்றவியல் கோர்ட்டில் சரணடைந்தனர். மேலும் கொலைக்கு உடந்தையாக இருந்த சிறுவன் உள்பட 4 பேரை அய்யம்பேட்டை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இந்நிலையில் கொலை செய்யப்பட்ட சிவ மணிகண்டன் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காமல் விட்டதன் காரணமாக தான் குற்றவாளிகள் கொலை சம்பவத்தை அரங்கேற்றி இருப்பதாகவும், புகார் கொடுத்தும் உரிய நடவடிக்கை எடுக்காத அய்யம்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிமதியை பணி இடைநீக்கம் செய்து, தஞ்சை சரக டி.ஐ.ஜி. ஜியாஉல்ஹக் உத்தரவிட்டுள்ளார்.

    • கிளையில் அமர்ந்து கொண்டு அடி மரத்தை வெட்டுவது போல் என்ன பேசுவது என்று தெரியாமல் ஒரு கூட்டம் இருக்கிறது.
    • திராவிடம் என்ன செய்தது என்று கேட்டால் உன் முகத்திரையை கிழித்தது என்று கூறுங்கள்.

    தஞ்சாவூர்:

    தஞ்சையில் நடந்த சமூகநீதி மற்றும் பகுத்தறிவு பாசறை மண்டல கூட்டத்தில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி பேசியதாவது :-

    அறிவோடு சிந்தித்து செயல்பட வேண்டும் என சொல்லி கொடுத்தது தி.மு.க. தான். படையை திரட்டி கொண்டு கொள்கை எதிரியை நோக்கி வாருங்கள் போவோம் என கூறியபோது நமக்கு பின்னால் இருந்து கொண்டு நம் மீது அம்பை விடுகிறான். கொள்கை எதிரி இதை பார்த்து சிரிப்பான் என்று குறைந்தபட்ச அறிவு கூட இல்லாமல் மைக் போட்டு உலர்கிறான்.

    கிளையில் அமர்ந்து கொண்டு அடி மரத்தை வெட்டுவது போல் என்ன பேசுவது என்று தெரியாமல் ஒரு கூட்டம் இருக்கிறது. அவர்களை பார்க்க பரிதாபமாக உள்ளது. அவர்களுக்கும் சேர்த்து தான் தி.மு.க. உழைக்கிறது. திராவிடம் என்பது அடிமைத்தனத்தை உடைத்தது, பெண்ணடிமைத்தனத்தை கிழித்து எறிந்தது, மூடநம்பிக்கையை கிழித்து எறிந்தது.

    இதையும் மீறி எவனாவது திராவிடம் என்ன செய்தது என்று கேட்டால் உன் முகத்திரையை கிழித்தது என்று கூறுங்கள். சிலர் சங்கீகளா அல்லது சங்கீகள் போர்வை போர்த்தியவர்களா அல்லது நேரடியாக, மறைமுகமாக சங்கீகளுடைய ஆதரவு பெற்றவர்களாக என்று தெரியாமல் சாம்பார், வடை, பாயாசம் என்று பேசுகின்றனர். அறிவு ஆயுதத்தை சிந்திக்க கற்று கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • முகமூடி அணிந்து வந்த கும்பம் ஓட்டுனர் சிவாவை பயணிகள் கண் எதிரே வெட்டிக் கொலை செய்துள்ளது.
    • சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டையில் மினி பேருந்து ஓட்டுநர் சிவா (26) பயணிகள் கண்முன்னரே வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    பேருந்தில் பயணிகள் காத்திருக்க டீ குடித்துவிட்டு பேருந்தை இயக்க ஓட்டுனர் சிவா சென்றுள்ளார்.

    அப்போது, முகமூடி அணிந்து வந்த கும்பம் ஓட்டுனர் சிவாவை பயணிகள் கண் எதிரே வெட்டிக் கொலை செய்துள்ளது.

    முகமூடி அணிந்து வந்த கும்பல் ஓட்டுநர் சிவாவை வெட்டிச் சாய்த்துவிட்டு தப்பியது. இதைதொடர்ந்து, குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யக்கோரி பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

    ஓட்டுனர் சிவாவின் உறவினர்கள் மறியலில் ஈடுபட்டதால் தஞ்சை கும்பகோணம் சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

    இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தொன்மை மாறாமல் புதுப்பித்து பாதுகாத்தமைக்காக யுனெஸ்கோ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
    • ஆபத்சகாயேஸ்வரர் கோவில் புதுப்பிக்கப்பட்டு 2023ம் ஆண்டு செப்டம்பரில் குமமுழுக்கு நடத்தப்பட்டது.

    கும்பகோணம் துக்காச்சி ஆபத்சகாயேஸ்வரர் கோவிலுக்கு யுனெஸ்கோ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

    தொன்மை மாறாமல் புதுப்பித்து பாதுகாத்தமைக்காக யுனெஸ்கோ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஆபத்சகாயேஸ்வரர் கோவில் புதுப்பிக்கப்பட்டு 2023ம் ஆண்டு செப்டம்பரில் குமமுழுக்கு நடத்தப்பட்டது.

    மரபுசார்ந்த கட்டுமானத்தில் நவீன அறிவியல் உதவியுடன் பழமை மாறாமல் கோவில் புதுக்கிப்பட்டுள்ளது.

    • யானை வாகனம், காமதேனு வாகனம், வெள்ளிக் குதிரை வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சுவாமி எழுந்தருளி வீதிஉலா காட்சி நடைபெறுகிறது.
    • தங்கமயில் வாகனத்தில் சுவாமி வீதிஉலா நிகழ்ச்சியும், தீபக்காட்சியும் வெகு விமரிசையாக நடைபெற உள்ளது.

    சுவாமிமலை:

    தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே சுவாமிமலையில் சுவாமிநாத சுவாமி கோவில் உள்ளது. இக்கோவில் முருகனின் அறுபடை வீடுகளில் 4-ம் படை வீடாகும். இக்கோவிலில் ஆண்டுதோறும் திருக்கார்த்திகை திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி, இந்த ஆண்டு திருவிழா இன்று (புதன்கிழமை) இரவு 7 மணிக்கு அணுக்ஞை, விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கி, நாளை (வியாழக்கிழமை) காலை கொடியேற்றம் நடக்கிறது.

    தொடர்ந்து, விநாயகர், வள்ளி, தேவசேனா சமேத சுப்பிரமணியர் பரிவாரங்களுடன் மலைக்கோவிலில் இருந்து உற்சவ மண்டபம் எழுந்தருளல் நிகழ்ச்சியும், இரவு யாகசாலை பூஜை, சுவாமி வீதிஉலா திக் பந்தனம் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

    அதனைத் தொடர்ந்து, 8 நாட்கள் படிச்சட்டத்தில், ஆட்டுக்கிடா வாகனம், பஞ்சமூர்த்திகள் சப்பரம், யானை வாகனம், காமதேனு வாகனம், வெள்ளிக் குதிரை வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சுவாமி எழுந்தருளி வீதிஉலா காட்சி நடைபெறுகிறது.

    முக்கிய நிகழ்வான திருக்கார்த்திகை தினத்தன்று (13-ந்தேதி) காலை 9 மணிக்கு தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சியும், இரவு 9 மணிக்கு தங்கமயில் வாகனத்தில் சுவாமி வீதிஉலா நிகழ்ச்சியும், தீபக்காட்சியும் வெகு விமரிசையாக நடைபெற உள்ளது.

    பின்னர், 14-ந்தேதி படிச்சட்டத்தில் சுப்பிரமணிய சுவாமி புறப்பட்டு காவிரியில் தீர்த்தவாரியும், இரவு அவளோ அவரோஹணம் படிச்சட்டத்தில் சுவாமி புறப்பாடும், 15-ந்தேதி இரவு வள்ளி, தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி யதாஸ்தானம் சேர்தல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

    விழா ஏற்பாடுகளை கோவிலின் இந்து சமய அறநிலை துறை இணை ஆணையர் சிவகுமார், துணை ஆணையர் உமாதேவி மற்றும் கண்காணிப்பாளர்கள், கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    • 2-ந்தேதி மற்றும் 11-ந்தேதி அன்று கூடுதலாக 100 சிறப்பு பஸ்கள் இயக்கிடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    • இச்சிறப்பு பஸ் சேவையை பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் கோட்டம் நிர்வாக இயக்குனர் பொன்முடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் தர்கா கந்தூரி விழா வருகிற 2-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 11-ந் தேதி சந்தனகூடு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து நாகூர் கந்தூரி திருவிழாவை காண ஏராளமான பொதுமக்கள் வருகைதர உள்ளனர். அதனை முன்னிட்டு 100 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. நாளை (ஞாயிறு) முதல் 12-ந்தேதி வரை சென்னை, திருச்சி, கரூர், புதுக்கோட்டை, மதுரை, சிதம்பரம், இராமநாதபுரம், தஞ்சாவூர், கும்பகோணம் ஆகிய ஊர்களிலிருந்தும், நாகப்பட்டினம் நாகூர் மற்றும் காரைக்கால் நாகூர் வழித்தடத்திலும் இந்த சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

    மேலும், தற்காலிக வாகன நிறுத்தம் தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்திலிருந்து நாகப்பட்டினம் தொழிற்பயிற்சி நிலைய மைதானம் வாகன நிறுத்தம், வெண்ணாற்றாங்கரை வாகன நிறுத்தம் மற்றும் இரயில் நிலையம் ஆகிய இடங்களை இணைக்கும் வகையில் வட்ட பஸ் இயக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், தினசரி இயக்கப்பட்டு வரும் 127 பஸ்கள் வாயிலாக 335 நடைகளுடன் 2-ந்தேதி மற்றும் 11-ந்தேதி அன்று கூடுதலாக 100 சிறப்பு பஸ்கள் இயக்கிடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த சிறப்பு பஸ் இயக்கத்தினை ஒருங்கிணைக்க நாகூர் மற்றும் நாகப்பட்டினம் பஸ் நிலையங்களில் விசாரணை மையங்கள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே இச்சிறப்பு பஸ் சேவையை பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×