என் மலர்
தஞ்சாவூர்
- அரசியலில் பல்வேறு மாற்றங்கள் வரலாம்.
- லஞ்சம், ஊழல் இல்லாத தமிழ்நாட்டை கொண்டு வர வேண்டும் என்று கூறிய முதல் தலைவர் நமது கேப்டன் தான்.
திருவோணம்:
தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாட்டில் தே.மு.தி.க. பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் கலந்து கொண்டார்.
எனது தந்தை படப்பிடிப்புக்கு செல்லும் போதும், அரசியல் நிகழ்ச்சி சென்றாலும் என்னை எப்போதும் அழைத்து செல்வார். அன்று முதல் இன்று வரை எனக்கு தொண்டர்கள் தான் பாதுகாப்பு.
இன்று என்னை வாரிசு அரசியல் என கூறுகிறார்கள். ஆனால், ஒருகாலத்தில் விஜயகாந்திற்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டிருந்த நிலையில், தொண்டர்கள் அழைத்ததின் பேரில், எனது கனவுகளை தள்ளிவிட்டு தான் அரசியலுக்கு வந்தேன். கேப்டனின் வாரிசான நான் தைரியமாக, நேர்மையாக மக்களுக்காக உழைக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளேன். இதை யாராலும் மாற்ற முடியாது.
லஞ்சம், ஊழல் இல்லாத தமிழ்நாட்டை கொண்டு வர வேண்டும் என்று கூறிய முதல் தலைவர் நமது கேப்டன் தான். 25 ஆண்டுகளுக்கு முன்பே ரேஷன் பொருள் வீடு தேடி வரும் என்று அறிவித்தவர் கேப்டன் விஜயகாந்த்.
தனது பிறந்தநாளை வறுமை ஒழிப்பு தினமாக உறுதியேற்று, தனது சொந்த பணத்தில் பல்வேறு நலத்திட்டங்களை செய்தவர் விஜயகாந்த் தான். அதேபோல் நானும், தொண்டர்களும் 'இயன்றதை செய்வோம் இல்லாதவர்க்கு' என்பதில் உறுதியாக உள்ளோம்.
2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓராண்டுகள் உள்ளன. அதற்குள் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். அரசியலில் பல்வேறு மாற்றங்கள் வரலாம். தே.மு.தி.க. இன்னும் பலப்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உறவினர்கள் திரண்டுள்ளனர்.
- பாதுகாப்புக்காக அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
தஞ்சாவூா்:
தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகேயுள்ள நடுக்காவேரி அரச மரத் தெருவைச் சேர்ந்தவர் அய்யாவு மகன் தினேஷ் (வயது 32).
இவர் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் கொலை முயற்சி உள்பட 13 வழக்குகள் உள்ளன. இந்நிலையில் நேற்று முன்தினம் காலை தனது உறவினர் வீட்டு துக்க நிகழ்வுக்கு செல்வதற்காக இவர் நடுக்காவேரி பஸ் நிறுத்தத்தில் குடும்பத்துடன் நின்று கொண்டிருந்தார்.
அப்போது, இவரை அங்கு வந்த போலீசார் விசாரணைக்கு எனக் கூறி நடுக்காவேரி காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். இவர்களைப் பின்தொடர்ந்து குடும்பத்தினரும் போலீஸ் நிலையத்துக்குச் சென்றனர்.
பொது இடத்தில் கத்தியைக் காட்டி மிரட்டியதாகக் கூறி வழக்குப் பதிவு செய்து தினேசை கைது செய்தனர்.
தங்கள் அண்ணன் மீது பொய் வழக்கு போடாமல் உடனே விடுவிக்க வேண்டும் எனக் கூறி அவரது தங்கைகள் மேனகா (31), கீர்த்திகா (29) போலீசாரிடம் வலியுறுத்தினர். ஆனால் அவர்களை போலீசார் திட்டி அனுப்பியதாக கூறப்படுகிறது.
இதனால் மனம் உடைந்த மேனகா , கீர்த்திகா ஆகியோர் நடுக்காவேரி போலீஸ் நிலையம் முன்பு விஷம் குடித்து மயங்கி விழுந்தனர். இதனையடுத்து இருவரையும் உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி பொறியியல் பட்டதாரியான கீர்த்திகா நேற்று காலை உயிரிழந்தார். மேனகாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதையறிந்த உறவினர்கள் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு திரண்டு சென்று, இந்தச் சம்பவம் தொடர்பாக கோட்டாட்சியர் விசாரணை நடத்தி தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த சம்பவத்திற்கு காரணமான இன்ஸ்பெக்டர் சர்மிளா மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை உடலை வாங்க மாட்டோம் எனக்கூறி போராட்டம் நடத்தினர். அவர்களிடம் துணை போலீஸ் பிரண்டு சோமசுந்தரம் மற்றும் போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.
காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்
தொடர்ந்து இன்றும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உறவினர்கள் திரண்டு உள்ளனர். பாதுகாப்புக்காக அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் உத்தரவின் பேரில் திருவையாறு துணை போலீஸ் சூப்பிரண்டு விசாரணை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் இந்த வழக்கை முறையாக விசாரிக்காத நடுக்காவேரி இன்ஸ்பெக்டர் சர்மிளாவை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து இன்று போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் உத்தரவிட்டுள்ளார். மேலும் கோட்டாட்சியர் விசாரணைக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
- மோகன் மயிலாடுதுறையில் கார் பழுது நீக்கும் கடை வைத்து நடத்தி வருகிறார்.
- போலீசார் 3 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பேரளம்:
திருவாரூர் மாவட்டம் பேரளம் அருகே உள்ள வரவூர் பகுதியைச் சேர்ந்தவர் மோகன் (வயது 30). இவர் மயிலாடுதுறையில் கார் பழுது நீக்கும் கடை வைத்து நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் இன்று காலை அவர் வரவூரிலிருந்து மோட்டார் சைக்கிளில் தனது மகன் நிரோஷன் (7) மகள் சியாஷினி (3) அழைத்து கொண்டு காரைக்கால் செல்லும் சாலையில் உள்ள கோவில் திருமாளம் என்கிற இடத்திற்கு பொருட்களை வாங்க வந்துள்ளார்.
பின்னர் பொருட்களை வாங்கி விட்டு கோவில்திருமாளத்தில் இருந்து வரவூருக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார்.
அப்போது பேரளம் அருகே அகரதிருமாளம் என்கிற இடத்தில் சென்ற போது எதிரே வேகமாக வந்த லாரி வளைவில் கட்டுப்பாட்டை இருந்து மோகனின் மோட்டார் சைக்கிளிலில் மோதியது.
இதில் 3 பேரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். இது குறித்து தகவல் அறிந்ததும் பேரளம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 3 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து பேரளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அ.தி.மு.க. கூட்டணி வேண்டாம் என குறிப்பிடப்பட்டு உள்ளது.
- சாகும் வரை உண்ணாவிரதம் இருப்போம் என அதில் கூறப்பட்டுள்ளது.
தஞ்சாவூர்:
தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க-பா.ஜனதா இடையே மீண்டும் கூட்டணி ஏற்படும் என்ற கருத்து நிலவி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லியில் மத்திய மந்திரி அமித்ஷாவை, அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசியது கூட்டணி அமைவதற்கான சூழலை உறுதிப்படுத்தியதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்தனர்.
இந்த சூழ்நிலையில் தமிழக பா.ஜ.க. தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலை நீக்கப்படுவார் என்றும், புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும் பேச்சு அடிப்படுகிறது.
இதனால் அண்ணாமலையே மீண்டும் தமிழக பா.ஜ.க. தலைவராக தொடர வேண்டும் என தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அவரது ஆதரவாளர்கள் போஸ்டர் ஒட்டி தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் தஞ்சை தெற்கு மாவட்டத்திலும் பல்வேறு இடங்களில் பா.ஜ.க. கட்சியினர் போஸ்டர் ஒட்டி உள்ளனர். அதில், இந்தியாவுக்கு நரேந்திரமோடி, தமிழ்நாட்டுக்கு அண்ணாமலை என அதில் அச்சிடப்பட்டு உள்ளது.
அந்த போஸ்டரில் வேண்டும், வேண்டும் அண்ணாமலை வேண்டும். வேண்டாம், வேண்டாம் அ.தி.மு.க. கூட்டணி வேண்டாம் என குறிப்பிடப்பட்டு உள்ளது. மேலும் தமிழக பா.ஜ.க. தலைவராக அண்ணாமலையே நீடிக்க வலியுறுத்தி ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சாகும் வரை உண்ணாவிரதம் இருப்போம் என அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
- கருட பகவான் உருவம் வரையப்பட்ட கொடி ஏற்றப்பட்டது.
- பக்தி கோஷம் முழங்க பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.
சுவாமிமலை:
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற ராமசாமி கோவில் அமைந்துள்ளது. 'தென்னக அயோத்தி' என அழைக்கப்படும் இக்கோவிலில் ஆண்டுதோறும் ராமநவமி திருவிழா வெகு விமரிசை யாக நடைபெறுவது வழக்கம்.
அதன்படி, இந்த ஆண்டுக்கான ராமநவமி விழா கடந்த மாதம் (மார்ச்) 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்று, தீபாராதனை காண்பிக்கப்பட்டு, மங்கள வாத்தியங்கள் முழங்க கருட பகவான் உருவம் வரையப்பட்ட கொடி ஏற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து, விழா நாட்களில் தினமும் சிறப்பு அலங்காரத்தில் உற்சவ மூர்த்திகள் இந்திர விமானம், சூரியபிரபை, சேஷம், கருடர், அனுமன், யானை உள்ளிட்ட வாகனங்களில் எழுந்தருளி வீதிஉலா காட்சிகள் நடைபெற்று வந்தது.
முக்கிய நிகழ்வான ஓலை சப்பரத்தில் கருட சேவை, கோரதம் புறப்பாடு ஆகியவை சிறப்பாக நடந்தது. விழாவின் சிகர நிகழ்வான தேரோட்டம் ராமநவமி நாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை கோலாகலமாக நடந்தது.
முன்னதாக சிறப்பு அலங்காரத்தில் சீதா, ராமர், லெட்சுமணன், ஆஞ்சநேயர் ஆகியோர் தேரில் எழுந்தருளினர். தொடர்ந்து, பூஜைகள் நடைபெற்று, தீபாராதனை காண்பிக்கப்பட்டு தேரோட்டம் தொடங்கியது.
இதில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஜெய் ஸ்ரீராம்.. ஜெய் ஸ்ரீராம்... பக்தி கோஷம் முழங்க வடம் பிடித்து இழுத்தனர்.
தொடர்ந்து, தேரானது 4 ரத வீதிகள் வழியாக வலம் வந்து நிலையை அடைந்தது. பின்னர், உற்சவர்களுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
ராமநவமி மற்றும் தேரோட்டத்தை யொட்டி கோவிலில் ஏராளமான பக்தர்கள் திரண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பின்னர், இரவு கோவில் வளகத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சியும், நாளை (திங்கட்கிழமை) சப்தாவர்ணமும், 8-ந்தேதி விடையாற்றியுடன் விழா நிறைவடைகிறது.
- அண்ணா சிலை அருகே உள்ள நூற்றாண்டு மண்டபத்தில் தி.மு.க மகளிர் அணி சார்பில் பயிற்சி பட்டறை கூட்டம் நடைபெறுகிறது.
- போலீசார் அண்ணா சிலை மீது போடப்பட்டு இருந்த 2 கட்சி கொடிகளையும் அகற்றினர்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் பஸ் நிலையம் அருகே பேரறிஞர் அண்ணா சிலை உள்ளது. அண்ணா பிறந்தநாள், நினைவுநாள் உள்ளிட்ட நிகழ்வுகளின்போது அவரது உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுவது வழக்கம்.
இந்நிலையில் இன்று அண்ணா சிலை அருகே உள்ள நூற்றாண்டு மண்டபத்தில் தி.மு.க மகளிர் அணி சார்பில் பயிற்சி பட்டறை கூட்டம் நடைபெறுகிறது. இதற்காக அந்த பகுதி முழுவதும் தி.மு.க. கொடிகள் கட்டப்பட்டு உள்ளன.
இந்த நிலையில் நள்ளிரவில் பேரறிஞர் அண்ணா சிலை மீது தி.மு.க. மற்றும் பா.ஜ.க. கொடிகளை இணைத்து மர்ம நபர்கள் போட்டனர்.
இன்று காலை இதனை பார்த்து கட்சியினர் அதிர்ச்சியடைந்தனர். தகவல் அறிந்து நிர்வாகிகள் திரளானோர் அங்கு திரண்டனர். உடனடியாக மேற்கு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அண்ணா சிலை மீது போடப்பட்டு இருந்த 2 கட்சி கொடிகளையும் அகற்றினர். இதனை தொடர்ந்து அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து தி.மு.க.வினர் மரியாதை செய்தனர்.
இந்த சம்பவத்தில் ஈடுபட்டது யார் ? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த பகுயில் பொருத்தப்பட்டு இருக்கும் சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
இந்த சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- மக்களின் பிரச்சனைகளை உணர்ந்து வர வேண்டும்.
- மக்களுக்காக தொண்டு செய்வது தான் அரசியல்.
திருவிடைமருதூர்:
தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் அருகே கஞ்சனூர் கிராமத்தில் உள்ள அய்யனார் கோவிலுக்கு மதுரை ஆதீனம் 293-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஞானசம்பந்த தேசிக பரமாசாரிய சுவாமிகள் தரிசனம் செய்ய வருகை தந்தார்.
அவருக்கு விழா கமிட்டியினரும், கிராம மக்களும் பூரண கும்ப மரியாதையுடன் சிறப்பான வரவேற்பு அளித்தனர். பின்னர், அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
கிராம தெய்வ வழிபாடு முக்கியமானது. மதுரை ஆதீனத்திற்கு சொந்தமான கஞ்சனூரில் உள்ள அக்னீஸ்வரர் கோவிலில் ராஜகோபுரம், சுற்றுச்சுவர் உள்ளிட்ட திருப்பணிகள் முடிந்துள்ளது. பிரகாரங்கள் மற்றும் விமானங்களின் திருப்பணிகள் நடந்து வருகிறது.
2028-ம் ஆண்டு வரும் கும்பகோணம் மகாமக பெருவிழா மிகப்பெரிய விழாவாக நிச்சயமாக கொண்டாட அரசு முயற்சிக்கும் என்பது எங்கள் நம்பிக்கை.
அரசியல் என்பது யார் வேண்டுமானாலும் வருவது என்பது கூடாது. கடுமையாக உழைத்து அனுபவரீதியாக மக்களின் பிரச்சினைகளை உணர்ந்து அரசியலுக்கு வர வேண்டும். சினிமா அரசியல் தேவையில்லை. சினிமா சினிமாவாகவே இருக்க வேண்டும்.
சினிமாவில் நடிப்பது மட்டும் அரசியலுக்கு போதும் என்று நினைப்பது தவறு. மக்களுக்காக தொண்டு செய்வது தான் அரசியல். மக்களுக்காக பல்வேறு துறைகளில் தொண்டு செய்யக் கூடியவர்கள் போற்றப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்று, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
- மங்கல வாத்தியங்கள் முழங்க கருட பகவான் உருவம் வரையப்பட்ட கொடி ஏற்றப்பட்டது.
சுவாமிமலை:
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற ராமசாமி கோவில் அமைந்துள்ளது. 'தென்னக அயோத்தி' என அழைக்கப்படும் இக்கோவிலில் ஆண்டுதோறும் ராமநசமி திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
அதன்படி, இந்த ஆண்டுக்கான ராமநவமி விழா இன்று (சனிக்கிழமை) காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக சிறப்பு அலங்காரத்தில் சீதா, ராமர், லெட்சுமணன், ஆஞ்சநேய சுவாமிகள் கொடிமரம் முன்பு எழுந்தருளினர்.
தொடர்ந்து, கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்று, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர், மங்கல வாத்தியங்கள் முழங்க கருட பகவான் உருவம் வரையப்பட்ட கொடி ஏற்றப்பட்டது. தொடர்ந்து, சுவாமிகளுக்கும், கொடிமரத்திற்கும் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழா நாட்களில் தினமும் சிறப்பு அலங்காரத்தில் உற்சவ மூர்த்திகள் இந்திர விமானம், சூரியபிரபை, சேஷம், கருடர், அனுமன், யானை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதிஉலா காட்சிகள் நடைபெறுகிறது.
முக்கிய நிகழ்வான 4-ம் நாளன்று இரவு ஓலை சப்பரத்தில் கருட சேவையும், 7-ம் நாளன்று இரவு கோரதம் புறப்பாடும், அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை தேரோட்டமும், இரவு கோவில் வளகத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.
முடிவில் 7-ந்தேதி சப்தாவர்ணமும், 8-ந்தேதி விடையாற்றி விழாவும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
- தமிழகத்தில் கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 21.63 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது.
- புதிதாக 18.10 லட்சம் பேருக்கு ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே பஞ்சநதி கோட்டை கிராமத்தில் அதி திறன் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி திறந்து வைத்தார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது :-
தமிழகத்தில் முதல் முதலாக தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகேயுள்ள பஞ்சநதிக்கோட்டையில் ரூ. 1.41 கோடி மதிப்பில் அதிதிறன் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டுள்ளது. இந்த அதிதிறன் கொள்முதல் நிலையத்தில் ஒரு மணி நேரத்துக்கு 15 டன் கொள்முதல் செய்யும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 21.63 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. நிகழாண்டு இதுவரை 27.72 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
நெல் கொள்முதல் நிலையம் நிகழாண்டு இதுவரை 3.61 லட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர். இவர்களுக்கு ரூ.6 ஆயிரத்து 400 கோடி பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. புதிதாக 18.10 லட்சம் பேருக்கு ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன. மற்றவர்களுக்கு அச்சடிக்கப்பட்டு விரைவில் வழங்கப்படவுள்ளது.
தமிழகத்தில் தேர்தல் வாக்குறுதிகள் மட்டும் அல்லாமல் சொல்லாத வாக்குறுதிகளையும் நிறைவேற்றி ஒரு பொற்கால ஆட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடத்தி வருகிறார். நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என கூறினோம். அதுபோல் வெற்றி பெற்று சாதித்து காட்டினோம்.
தற்போது 2026 சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளில் 200 என்ற இலக்கை அடைவோம் என முதலமைச்சர் கூறி இருக்கிறார். ஆனால் அதையும் தாண்டி 234 தொகுதிகளிலும் தி.மு.க வெற்றி பெற பிரகாசமான வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- விழா கடந்த 17-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
- பங்குனி பிரமோற்சவம் 12 நாட்களுக்கு சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
திருவிடைமருதூர்:
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே திருநாகேஸ்வரம் ஒப்பிலியப்பன்கோவிலில் வேங்கடாசலபதி சுவாமி கோவில் அமைந்துள்ளது. இத்தலம் நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், பொய்கையாழ்வார், பேயா ழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட கோவிலாகும்.
108 வைணவ தலங்களில் ஒன்றாகவும், 'தென்னக திருப்பதி' என போற்றப்படும் இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி பிரமோற்சவம் 12 நாட்களுக்கு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான விழா கடந்த 17-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழா நாட்களில் தினமும் உற்சவர் பொன்னப்பன், பூமிதேவி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வீதிஉலா காட்சிகள் நடைபெற்று வந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்றது. இங்கு திருவோண நட்சத்திரத்தன்று தேரோட்டம் நடைபெறுவது கூடுதல் சிறப்பாகும்.

முன்னதாக அலங்கரிக்கப்பட்ட தேரில் உற்சவர் பொன்னப்பர்- பூமிதேவி தாயாருடன் சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருளிார். தொடர்ந்து, அங்கு கூடியிருந்த ஏராள மான பக்தர்கள் பக்தி கோஷம் முழங்க தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேருக்கு முன்பு கோவில் யானை 'பூமா' அசைந்தாடி யபடி சென்றது.
மேலும், ரதவீதிகளில் அம்மன் வேடம் அணிந்த பெண்கள் நடனம், நாட்டிய குதிரையின் நடனம், செண்டை மேளம் என பல்வேறு நிகழ்ச்சிகளும் தேருக்கு முன்பாக சென்றது. தேர் 4 ரத வீதிகள் வழியாக வந்து நிலைக்கு வந்ததும், கோவில் புஷ்கரணியில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடக்கிறது.
விழாவின், நிறைவு நாளான 28-ந்தேதி காலை மூலவர் சன்னதியில் அன்னப்பெரும்படையலும், மாலை புஷ்பயாகமும் நடைபெற உள்ளது.
இதற்கான ஏற்பாடுகளை கோவிலின் உதவி ஆணையர் ஹம்சன் மற்றும் அறங்காவலர் குழு தலைவர், அறங்காவலர்கள் பணியாளர்கள் செய்திருந்தனர்.
- இந்தியாவில் மூன்று மொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதில் தமிழ்நாட்டைத் தவிர வேறு எந்த மாநிலத்திலும் பிரச்சனை இல்லை.
- மொழி கற்பதை மாணவர்களுக்கு அழுத்தம் என கூறினால் பிற பாடங்களை எப்படி படிக்க முடியும்?
கும்பகோணம்:
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற நடிகை கஸ்தூரி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இந்தியாவில் மூன்று மொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதில் தமிழ்நாட்டைத் தவிர வேறு எந்த மாநிலத்திலும் பிரச்சனை இல்லை. மொழி கற்பதை மாணவர்களுக்கு அழுத்தம் என கூறினால் பிற பாடங்களை எப்படி படிக்க முடியும்? கணக்கு கஷ்டம் என்றால் அதனை பாடத்திட்டத்தில் இருந்து நீக்கிவிட முடியுமா?
இலகுவான முறையில் மாற்றியமைக்கலாமே தவிர கற்காமல் விடக்கூடாது என்று கூறினார்.
- இங்குள்ள அம்மனை ‘சீதளாதேவி’ எனவும் அழைப்பர்.
- நூற்றுக்கணக்கான பக்தர்கள் பாடைக்காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
நீடாமங்கலம்:
திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் வரதராஜம் பேட்டையில் பிரசித்தி பெற்ற மகா மாாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்குள்ள அம்மனை 'சீதளாதேவி' எனவும் அழைப்பர்.
மேலும், பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி பெருந்திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு திருவிழா கடந்த 16-ந்தேதி தொடங்கி அடுத்த மாதம் (ஏப்ரல்) 13-ந்தேதி வரை நடக்கிறது. இதனை யொட்டி கடந்த 7-ந்தேதி பூச்சொரிதல் நிகழ்ச்சியும், 9-ந்தேதி காப்பு கட்டும் நிகழ்ச்சியும் நடந்தது.
தொடர்ந்து, பங்குனி முதல் ஞாயிற்றுக்கிழமையன்று (16-ந்தேதி) 2-ம் காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் திருவிழா தொடங்கியது. விழா நாட்களில் தினமும் மாலை வேளையில் சிறப்பு அலங்காரத்தில் அம்பாள் வெள்ளி அன்ன வாகனம், காமதேனு வாகனம், சிம்ம வாகனம், ரிஷப வாகனம், யானை வாகனம், வெள்ளி குதிரை வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் எழுந்தருளி வீதிஉலா காட்சிகள் நடைபெற்று வந்தது.
முக்கிய நிகழ்வான பாடைக்காவடி திருவிழா இன்று (பங்குனி 2-ம் ஞாயிற்றுக்கிழமை) நடந்தது. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் பாடைக்காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
அதாவது, சகல விதமான நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் உடல் பூரணநலம் பெற வேண்டி அம்மனை வேண்டிக் கொள்வர். பின்னர், உடல் நலம் குணமடைந்ததும், பாடைக்காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துவர்.
நோயில் இருந்து குணமடைந்தவர்களை ஆற்றில் குளிக்க வைத்து, நெற்றியில் திருநீறு பூசி, பச்சை பாடையில் படுக்க வைத்து இறந்தவர்களுக்கு இறுதி சடங்குகள் எப்படி நடக்குமோ அதை போன்று அவர்களை, அவர்களது உறவினர்கள் முன்னிலையில் பாடையில் படுக்க வைத்து கண், கால்களை கட்டி, வாயில் வாய்க்கரிசி போட்டு, உறவினர்கள் 4 பேர் பாடையை சுமந்து கோவிலை சுற்றி 3 முறை வலம் வருவர். பின்னர், கோவில் பூசாரி பாடையில் படுத்திருப்பவருக்கு திருநீறு பூசி அவரை எழச்செய்வார்.
இதேபோல், குழந்தைபேறு இல்லாதவர்கள், நோயினால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் தொட்டில் காவடி எடுத்தும், அவரவர்களின் வழக்கப்படி ரதக்காவடி, அலகுக்காவடி, பக்க அலகு காவடி, பால் அலகுக்காவடி உள்ளிட்ட காவடிகள் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
இதனை காண டெல்டா மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அணிதிரண்டு வந்து, நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசித்து சென்றனர். பாதுகாப்பு பணியில் ஏராளமான போலீசார் ஈடுபட்டிருந்தனர்.






