என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

2026 சட்டமன்ற தேர்தலில் இலக்கை தாண்டி 234 தொகுதிகளிலும் தி.மு.க. வெற்றி பெறும்- அமைச்சர்
- தமிழகத்தில் கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 21.63 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது.
- புதிதாக 18.10 லட்சம் பேருக்கு ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே பஞ்சநதி கோட்டை கிராமத்தில் அதி திறன் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி திறந்து வைத்தார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது :-
தமிழகத்தில் முதல் முதலாக தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகேயுள்ள பஞ்சநதிக்கோட்டையில் ரூ. 1.41 கோடி மதிப்பில் அதிதிறன் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டுள்ளது. இந்த அதிதிறன் கொள்முதல் நிலையத்தில் ஒரு மணி நேரத்துக்கு 15 டன் கொள்முதல் செய்யும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 21.63 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. நிகழாண்டு இதுவரை 27.72 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
நெல் கொள்முதல் நிலையம் நிகழாண்டு இதுவரை 3.61 லட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர். இவர்களுக்கு ரூ.6 ஆயிரத்து 400 கோடி பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. புதிதாக 18.10 லட்சம் பேருக்கு ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன. மற்றவர்களுக்கு அச்சடிக்கப்பட்டு விரைவில் வழங்கப்படவுள்ளது.
தமிழகத்தில் தேர்தல் வாக்குறுதிகள் மட்டும் அல்லாமல் சொல்லாத வாக்குறுதிகளையும் நிறைவேற்றி ஒரு பொற்கால ஆட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடத்தி வருகிறார். நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என கூறினோம். அதுபோல் வெற்றி பெற்று சாதித்து காட்டினோம்.
தற்போது 2026 சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளில் 200 என்ற இலக்கை அடைவோம் என முதலமைச்சர் கூறி இருக்கிறார். ஆனால் அதையும் தாண்டி 234 தொகுதிகளிலும் தி.மு.க வெற்றி பெற பிரகாசமான வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.






