search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    முல்லை பெரியாறு அணை உடையும் என பரவும் ஆல்பம்- தமிழக விவசாயிகள் போலீசில் புகார்
    X

    முல்லை பெரியாறு அணை உடையும் என பரவும் ஆல்பம்- தமிழக விவசாயிகள் போலீசில் புகார்

    • தற்போது கேரளாவை சேர்ந்த ஒருவர் ஆல்பம் பாடல் தயாரித்து பரப்பி வருகின்றார்.
    • அணை உடைந்து கேரளா தண்ணீரில் மூழ்குவது போன்ற கிராபிக்ஸ் காட்சியும் இப்பாடலில் இடம்பெற்றுள்ளது.

    கூடலூர்:

    முல்லை பெரியாறு அணை மூலம் தமிழகத்தில் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேலும் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது. 152 அடி உயரம் கொண்ட முல்லைபெரியாறு அணையில் 142 அடிவரை தண்ணீர் தேக்கலாம். மேலும் பேபி அணையை பலப்படுத்திய பின்னர் 152 வரை நீர்மட்டத்தை உயர்த்திக்கொள்ளலாம் என கடந்த 2014-ம் ஆண்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

    ஒவ்வொரு ஆண்டும் பருவமழையின்போது அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. தீர்ப்புக்கு பின்னர் 142 அடிவரை தண்ணீர் தேக்கப்பட்டு அணையின் பலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் ஒவ்வொரு ஆண்டும் கேரளஅரசு மற்றும் சமூகஆர்வலர்கள் என்ற பெயரில் சிலர் அணையின் நீர்மட்டத்தை உயர்த்த எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    மேலும் சிலர் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பிரசாரம் மற்றும் வீடியோ ஆல்பங்களை தயாரித்து வெளியிடுகின்றனர். தற்போது அணையின் நீர்மட்டம் 137 அடியை கடந்த நிலையில் ரூல்கர்வ் முறையால் கேரள பகுதிக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

    கடந்த 2018-ம் ஆண்டு முல்லை பெரியாறு அணை உடைவது போன்று கிராபிக்ஸ் காட்சிகளை வெளியிட்டு கேரள மக்களை அச்சுறுத்தினர். இந்த நிலையில் தற்போது கேரளாவை சேர்ந்த ஒருவர் ஆல்பம் பாடல் தயாரித்து பரப்பி வருகின்றார். அணை உடைந்து கேரளா தண்ணீரில் மூழ்குவது போன்ற கிராபிக்ஸ் காட்சியும் இப்பாடலில் இடம்பெற்றுள்ளது.

    இந்திய இறையாண்மைக்கு எதிராக வெளியிடப்பட்டுள்ள பிரச்சினைக்குரிய வீடியோ குறித்து கேரள அரசு கண்டுகொள்ளவில்லை.

    இதனால் தமிழக விவசாயிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், கேரளாவில் முல்லைபெரியாறு அணையை வைத்து சிலர் அரசியல் செய்கின்றனர். மேலும் சிலர் தங்கள் பிரபலமாவதற்கு இதுபோன்ற வதந்திகளை பரப்பி வருகின்றனர். 142 வரை தண்ணீர் தேக்கலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ள நிலையில் அதன்பிறகு பலமுறை 142 வரை தண்ணீர் தேக்கப்பட்டு அணையின் பலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இருந்தபோதும் சிலர் கேரள மக்களை அச்சுறுத்தும் வகையில் கருத்து தெரிவிப்பதும், வீடியோ ஆல்பம் வெளியிடுவதும் தொடர்ந்து வருகிறது. எனவே தேனி மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் புகார் அளிக்க முடிவு செய்துள்ளனர் என்றனர்.

    Next Story
    ×