search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சங்ககிரியில் நிலத்தை அளக்க ரூ. 2000 லஞ்சம் வாங்கிய சர்வேயர் சிறையில் அடைப்பு
    X

    சங்ககிரியில் நிலத்தை அளக்க ரூ. 2000 லஞ்சம் வாங்கிய சர்வேயர் சிறையில் அடைப்பு

    • வைத்தீஸ்குமாரை பொறி வைத்து பிடிப்பதற்காக திட்டமிட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார், கணேசிடம் 2 ஆயிரம் ரூபாய்க்கு ரசாயன பவுடர் தடவிய ரூபாய் நோட்டுகளை கொடுத்து அனுப்பினர்.
    • பணத்துடன் சங்ககிரி தாலுகா அலுவலகத்திற்கு நேற்று மாலை சென்ற அவர் வைத்தீஸ்குமாரிடம் பணத்தை கொடுத்தார்.

    சங்ககிரி:

    சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே உள்ள பக்காளியூரைச் சேர்ந்தவர் லாரி உரிமையாளர் கணேசன் (வயது 50). இவருக்கு சொந்தமான கஸ்தூரிபட்டி கிராமத்தில் நிலம் உள்ளது. அந்த நிலத்தை அளவீடு செய்து உட்பிரிவு செய்து தரக் கோரி சங்ககிரி வட்ட நில அளவை துறையில் விண்ணப்பித்தார்.

    அதனை செய்து கொடுக்க சங்ககிரி நில அளவைத் துறை சுற்றுக்குழு நில அளவையராக பணியாற்றி வந்த நாமக்கல் மாவட்டம், எலச்சிபாளையம் அத்திமரபட்டி பகுதியைச் சேர்ந்த வைத்தீஸ்குமார் (வயது 40) ரூ.2000 லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால், லஞ்சம் கொடுக்க விரும்பாத கணேசன் இது தொடர்பாக சேலம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசில் புகார் செய்தார்.

    இதையடுத்து வைத்தீஸ்குமாரை பொறி வைத்து பிடிப்பதற்காக திட்டமிட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார், கணேசிடம் 2 ஆயிரம் ரூபாய்க்கு ரசாயன பவுடர் தடவிய ரூபாய் நோட்டுகளை கொடுத்து அனுப்பினர்.

    அந்த பணத்துடன் சங்ககிரி தாலுகா அலுவலகத்திற்கு நேற்று மாலை சென்ற அவர் வைத்தீஸ்குமாரிடம் பணத்தை கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் தலைமையிலான போலீசார் வைத்தீஸ்குமாரை கையும் களவுமாக மடக்கி பிடித்து கைது செய்தனர்.

    இதையடுத்து, கைது செய்யப்பட்ட வைத்தீஸ்குமாரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர். பின்னர் நேற்றிரவு கோர்ட்டில் ஆஜர்படுத்திய போலீசார் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

    2 ஆண்டுகளுக்கு முன்பு பணியில் சேர்ந்த வைத்தீஷ்குமார் நேற்று 3-ம் ஆண்டு தொடக்க நாளில் கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×