search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மேட்டூர் அணையில் இருந்து 1.33 லட்சம் கன அடி தண்ணீர் வெளியேற்றம்
    X

    ஒகேனக்கல் காவிரி ஆற்றில் இருகரையும் தொட்டபடி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிய காட்சி.


    மேட்டூர் அணையில் இருந்து 1.33 லட்சம் கன அடி தண்ணீர் வெளியேற்றம்

    • ஒகேனக்கல் காவிரியில் வரும் தண்ணீர் நேராக மேட்டூர் அணைக்கு வருகிறது.
    • மேட்டூர் அணைக்கு நேற்று காலை 1 லட்சத்து 24 ஆயிரத்து 113 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் அதிகரித்து 1 லட்சத்து 29 ஆயிரத்து 403 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.

    மேட்டூர்:

    கேரளா மற்றும் கர்நாடகாவில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பி உள்ளன.

    இதையடுத்து 2 அணைகளின் பாதுகாப்பு கருதி அந்த அணைகளில் இருந்து தற்போது 1 லட்சத்து 11 ஆயிரத்து 297 கன அடி தண்ணீர் காவிரியில் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கலுக்கு 1 லட்சத்து 25 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் ஒகேனக்கலில் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்பட அனைத்து அருவிகளையும் மூழ்கடித்த படி தண்ணீர் செல்வதால் ஒகனேக்கல் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.

    காவிரி ஆற்றின் இரு கரைகளையும் மூழ்கடித்தபடி வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. நீர்வரத்து அதிகமாக உள்ளதால் ஒகேனக்கல் அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும், காவிரிகரைக்கு செல்லவும் 9-வது நாளாக தடை நீடிக்கிறது.

    ஆடி மாத பிறப்பான நேற்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான புதுமண தம்பதிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல் வந்தனர். ஆனால் ஒகேனக்கலில் இருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ள மடம் செக்போஸ்டில் போலீசார் அவர்களை தடுத்தி நிறுத்தி திருப்பி அனுப்பினர். பிலிகுண்டுலுவில் காவிரி ஆற்றின் நீர்வரத்தை மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

    ஒகேனக்கல் காவிரியில் வரும் தண்ணீர் நேராக மேட்டூர் அணைக்கு வருகிறது. மேட்டூர் அணைக்கு நேற்று காலை 1 லட்சத்து 24 ஆயிரத்து 113 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் அதிகரித்து 1 லட்சத்து 29 ஆயிரத்து 403 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.

    அணையில் இருந்து 16 கண் மதகு வழியாக காவிரியில் 1 லட்சத்து 12 ஆயிரம் கன அடியும், மதகுகள் வழியாக காவிரியில் 23 ஆயிரம் கன அடியும், கால்வாயில் 500 கன அடியும் என மொத்தம் 1 லட்சத்து 33 ஆயிரத்து 500 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் காவிரியில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. காவிரி கரைக்கு யாரும் செல்ல வேண்டாம் என்றும் அதிகாரிகள் அறிவுறுத்தி வருகிறார்கள்.

    மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 120 .75 அடியாக இருந்தது. அணை முழுவதும் நிரம்பி உள்ளதால் கடல் போல காட்சி அளிக்கிறது. மேலும் இனி வரும் நாட்களிலும் அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் காவிரியில் அப்படியே வெளியேற்றப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். மேட்டூர் அணையின் உபரி நீர் போக்கியான 16 கண் மதகு வழியாக தண்ணீர் வெளியேற்றப்படுவதால் அதனை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் அங்கு திரண்டு அதனை பார்த்து ரசித்து பார்வையிட்டு வருகிறார்கள்.

    இதற்கிடையே காவிரியில் திறந்து விடப்படும் உபரி நீரால் மேட்டூர் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மேட்டூர் காவிரி, பூலாம்பட்டி காவிரி வரையிலான பகுதிகளில் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. காவிரி ஆற்றில் கரை புரண்டு ஓடும் தண்ணீரை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து ரசித்து வருகிறார்கள். மேலும் காவிரி கரையோர பகுதிகளில் அதிகாரிகள் தீவிரமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இதே போல மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரால் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் காவிரி ஆற்றிலும் தண்ணீர் கரை புரண்டு ஓடுகிறது. இதனால் அங்குள்ள காவிரி கரையோர பகுதிகளான கலை மகள் தெரு, இந்திரா நகர், பழைய காவிரி பாலப்பகுதிகளில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் புகுந்தது.

    இதனால் அந்த பகுதிகளில் வசித்தவர்கள் அங்குள்ள அரசு பள்ளிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் காவிரி ஆற்றில் கரை புரண்டு ஓடும் தண்ணீரால் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    Next Story
    ×