search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    2 குழந்தைகளை காப்பாற்றியபோது கடல் அலையில் சிக்கி உயிரிழந்த தலைமை ஆசிரியர்- உருக்கமான தகவல்கள்
    X

    2 குழந்தைகளை காப்பாற்றியபோது கடல் அலையில் சிக்கி உயிரிழந்த தலைமை ஆசிரியர்- உருக்கமான தகவல்கள்

    • குழந்தைகளை காப்பாற்ற சென்ற இடத்தில் ஜான் ஜெரோம் மிலாடு கடல் அலையில் சிக்கி பலியாகி இருப்பது தெரியவந்துள்ளது.
    • மனைவி கண் எதிரே கணவன் கடல் அலையில் சிக்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் பார்வதிபுரம் ராஜலட்சுமிநகர் பகுதியை சேர்ந்தவர் ஜான் ஜெரோம் மிலாடு (வயது 62), ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர். இவரது மனைவி மெல்சி லெட். இவர் அரசு பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார்.

    இவர்கள் நேற்று மாலை கணபதிபுரம் லெமூரியா கடற்கரையில் கடல் அலையை ரசித்து கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் இருவரையும் ராட்சத அலை இழுத்துச் சென்றது. இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் கணவன்-மனைவி இருவரையும் மீட்டனர். மயக்க நிலையில் இருந்த ஜான் ஜெரோம் மிலாடுவை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்கள். இதுகுறித்து குளச்சல் கடலோர காவல் படை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

    ஜான் ஜெரோம் மிலாடு கடல் அலையில் சிக்கியது எப்படி என்பது குறித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. ஜான் ஜெரோம் மிலாடு மற்றும் அவரது மனைவி உட்பட 8 பேர் கணபதிபுரம் கடற்கரைக்கு வந்துள்ளனர். இவர்கள் அனைவரும் கடற்கரையில் இருந்து கடல் அழகை ரசித்துக் கொண்டிருந்தனர்.

    அப்போது ஜான் ஜெரோம் மிலாடுடன் வந்த 2 குழந்தைகள் கடல் அலையில் விளையாடிய போது குழந்தைகள் இருவரையும் ராட்சத அலை இழுத்து சென்றுள்ளது. இதை பார்த்த ஜான் ஜெரோம் மிலாடு 2 குழந்தைகளையும் காப்பாற்ற சென்றார். குழந்தைகளை காப்பாற்றி கரைக்கு கொண்டு வந்த நிலையில் அப்போது வந்த ராட்சத அலை ஜான் ஜெரோம் மிலாடை இழுத்துச்சென்றது. உடனே அவரது மனைவி மெல்சி லெட் கணவரை காப்பாற்ற முயன்றார்.

    அவரையும் கடல்அலை இழுத்து சென்றுள்ளது. இதைப்பார்த்து அக்கம் பக்கத்தினர் கணவன்-மனைவியை மீட்டுள்ளனர். குழந்தைகளை காப்பாற்ற சென்ற இடத்தில் ஜான் ஜெரோம் மிலாடு கடல் அலையில் சிக்கி பலியாகி இருப்பது தெரியவந்துள்ளது.

    பலியான ஜான் ஜெரோம் மிலாடின் உடல் பிரேத பரிசோதனை இன்று ஆசாரி பள்ளம் ஆஸ்பத்திரியில் நடக்கிறது. மனைவி கண் எதிரே கணவன் கடல் அலையில் சிக்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×