search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ராமேசுவரம் அருகே கடலில் மயங்கி கிடந்த வயதான தம்பதி மீட்பு
    X

    மீட்கப்பட்ட வயதான தம்பதி கடற்கரையில் மயங்கிய நிலையில் கிடந்ததை படத்தில் காணலாம்.


    ராமேசுவரம் அருகே கடலில் மயங்கி கிடந்த வயதான தம்பதி மீட்பு

    • கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து இலங்கை தமிழர்கள் குடும்பம் குடும்பமாக ராமேசுவரம் மற்றும் தனுஷ்கோடி பகுதிக்கு வந்தனர்.
    • அவர்கள் இலங்கையில் இருந்து தங்களது உடமைகளுடன் படகுகள் மூலம் தமிழகத்திற்கு வந்தார்கள்.

    ராமேசுவரம்:

    இலங்கையில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. இதன் காரணமாக அங்கு உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்தது. காய்கறிகளின் விலை கடும் உச்சத்தை தொட்டது.

    இதன் காரணமாக இலங்கையில் நடுத்தர மற்றும் ஏழை-எளிய குடும்பத்தினர் உணவுக்குகூட வழியில்லாமல் தவிக்கும் நிலை உருவானது. இலங்கையில் உள்ள தமிழர்களும் வாழ வழியின்றி கடும் இன்னலுக்கு உள்ளாகினர். இதனால் தமிழர்கள் பலர் அங்கிருந்து வெளியேறி தமிழகத்திற்கு அகதியாக வர தொடங்கினர்.

    கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து இலங்கை தமிழர்கள் குடும்பம் குடும்பமாக ராமேசுவரம் மற்றும் தனுஷ்கோடி பகுதிக்கு வந்தனர். அவர்கள் இலங்கையில் இருந்து தங்களது உடமைகளுடன் படகுகள் மூலம் தமிழகத்திற்கு வந்தார்கள்.

    தனுஷ்கோடி பகுதியில் உள்ள மணல் திட்டுகளில் தவித்தப்படி நின்ற அவர்களை கடலோர காவல்படையினர் மற்றும் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் மீட்டு கரைக்கு அழைத்து வந்தனர். அவர்களிடம் மத்திய மற்றும் மாநில உளவு பிரிவு போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

    இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக அங்கு வாழ வழியில்லாமல் போனதால், தமிழகத்திற்கு அகதிகளாக வந்ததாக தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் அனைவரும் மண்டபம் அகதிகள் முகாமில் தங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அவர்கள் அனைவரும் அங்கு குடும்பத்துடன் தங்கி உள்ளனர்.

    இந்தநிலையில் இன்று காலை ராமேசுவரம் அருகே கோதண்டராமர் கோவில்-சேராங்கோட்டைக்கு இடையே உள்ள கடல் பகுதியில் முதியவர் மற்றும் மூதாட்டி மயங்கிய நிலையில் தண்ணீரில் மிதந்தபடி கிடந்துள்ளனர். இதனை அந்த வழியாக சென்ற மீனவர்கள் பார்த்தனர்.

    அதுகுறித்து அவர்கள் கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் அங்கு சென்று கடலில் மிதந்தபடி கிடந்த முதியவர்கள் இருவரையும் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். மயங்கிய நிலையில் இருந்த அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

    ஆனால் அவர்கள் வெகுநேரம் மயக்க நிலையிலேயே இருந்தனர். அவர்கள் யார்? என்று விசாரணை நடத்தியதில் இலங்கை மன்னார் மாவட்டம் முருகன்பட்டியை சேர்ந்த பெரியண்ணன் சிவன் (வயது 82) மற்றும் அவரது மனைவி பரமேஸ்வரி (70) என்பதும், இலங்கையில் இருந்து தமிழகத்தற்கு அகதியாக வந்திருப்பதும் தெரிய வந்தது.

    அவர்கள் இருவரையும் இலங்கையில் இருந்து யாராவது படகில் அழைத்து வந்திருக்க வேண்டும் என்றும், அவர்களை கடல் பகுதியிலேயே இறக்கி விட்டு சென்றிருக்க வேண்டும் எனவும் கருதப்படுகிறது. இரவில் தண்ணீரில் வெகுநேரம் நின்றதால் வயதான தம்பதி இருவரும் மயக்க நிலைக்கு சென்றிருக்கிறார்கள்.

    அவர்கள் மீட்டு வரப்பட்டு வைக்கப்பட்டு இருந்த பகுதி முழுவதும் மணல் பரப்பாகும். அங்கு ஆம்புலன்சை கொண்டு செல்ல முடியவில்லை. இதனால் அவர்களை ஆஸ்பத்திரியில் அனுமதித்து சிகிச்சை அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டது.

    முதியவர்கள் இருவரையும் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஹோவர்கிராப்ட் கப்பலை வரவழைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதுவரை அவர்களுக்கு கடற்கரையில் வைத்தே மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது.

    Next Story
    ×