search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு பஸ் மோதியதில் சரக்கு வேன் கவிழ்ந்தது- தொழிலாளி பலி
    X

    அரசு பஸ் மோதியதில் சரக்கு வேன் கவிழ்ந்தது- தொழிலாளி பலி

    • திருச்சியில் இருந்து கோயம்பேடு நோக்கி வந்த அரசு பஸ் திடீரென சரக்கு வேன் மீது பயங்கரமாக மோதியது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆலந்தூர்:

    கிண்டி, ஈக்காட்டுதாங்கல் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன்(வயது34).இவர் மேற்கு ஜாபர்கான்பேட்டையில் உள்ள தனியார் பார்சல் சர்வீசில் சூப்பர்வைசராக வேலை செய்து வந்தார்.

    நேற்று நள்ளிரவு 1 மணிக்கு அவர் நிறுவனத்திற்கு வந்த பார்சல்களை விமானத்தில் அனுப்புவதற்காக சரக்கு வேனில் மீனம்பாக்கம் பழைய விமான நிலையம் நோக்கி வந்தார். வேனை டிரைவர் அம்ருதீன் ஓட்டினார். உடன் காவலாளி சுதேந்திரன் இருந்தார்.

    பழைய விமான நிலையம் நுழைவாயிலில் எதிரே உள்ள மீனம்பாக்கம் ஜி.எஸ்.டி. சாலையில் சிக்னலை கடக்க முயன்றபோது, திருச்சியில் இருந்து கோயம்பேடு நோக்கி வந்த அரசு பஸ் திடீரென சரக்கு வேன் மீது பயங்கரமாக மோதியது.

    இதில் சரக்கு வேன் நடுரோட்டில் கவிழ்ந்தது. அதில் பயணம் செய்த சூப்பர்வைசர் மணிகண்டன் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் வேன் டிரைவர் அம்ருதீன், காவலாளி சுதேந்திரன் 2 பேரும் பலத்த காயம் அடைந்தனர். இந்த விபத்தில் அரசு பஸ்சின் முன்பகுதி பலத்த சேதம் அடைந்து கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின.

    தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். பலியான மணிகண்டனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பலத்த காயம் அடைந்த சுரேந்திரன் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

    இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×