search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மிசோரம் பழங்குடியில் வித்தியாசமான பழக்கம்- மணப்பெண்ணுக்கு ரூ.420 கொடுத்து திருமணம் செய்யும் மணமகன்
    X

    மிசோரம் பழங்குடியில் வித்தியாசமான பழக்கம்- மணப்பெண்ணுக்கு ரூ.420 கொடுத்து திருமணம் செய்யும் மணமகன்

    • வங்கதேசம், மியான்மர் ஆகிய இரு நாடுகளையும் மணிப்பூரையும் எல்லையாக கொண்டுள்ளது மிசோரம்.
    • வேறு 8 மாவட்டங்கள் தான். மக்கள் தொகையும் 12 லட்சம்தான்.

    சென்னை:

    இந்தியா பல மொழிகள், பல இனங்கள், பல்வேறு பழக்க வழக்கங்கள் கொண்ட நாடு. ஒவ்வொரு இடத்திலும் பின்பற்றப்படும் பழக்க வழக்கங்கள், வாழ்க்கை முறைகளை நாம் நேரில் பார்க்கும் போது பல விஷயங்கள் ஆச்சரியமாக இருக்கும்.

    அப்படித்தான் மிசோரம் மாநிலத்தில் பின்பற்றப்படும் பல்வேறு பழக்க வழக்கங்களை பா.ஜனதா மகளிர் அணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் ஆச்சரியத்துடன் பகிர்ந்தார்.

    மகளிர் அணி தலைவியாக இருப்பதால் அனைத்து மாநிலங்களுக்கும் சுற்றுப்பயணம் செய்து வரும் வானதி சீனிவாசன் கடந்த 2-ந்தேதி வடகிழக்கு மாநிலமான மிசோரம் சென்றார்.

    அங்குள்ள நிலைமை, மக்கள் வாழ்க்கை பற்றி அவர் கூறியதாவது:-

    வங்கதேசம், மியான்மர் ஆகிய இரு நாடுகளையும் மணிப்பூரையும் எல்லையாக கொண்டுள்ளது மிசோரம். வேறு 8 மாவட்டங்கள் தான். மக்கள் தொகையும் 12 லட்சம்தான்.

    ஆனால் எங்கு பார்த்தாலும் பச்சை போர்வை போர்த்தியது போன்ற மலை குன்றுகள், நீர் வீழ்ச்சிகள், ஆறுகள்தான். பள்ளி, கல்வி, உயர்கல்வி, வேலைவாய்ப்பு என்பது மிகவும் சிரமம். மேற்படிப்புக்காக அங்குள்ள மாணவர்கள் டெல்லி, அசாம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களுக்குத்தான் செல்ல வேண்டும்.

    மிசோ என்ற பழங்குடியின மக்கள்தான் அதிகமாக வாழ்கிறார்கள். இங்குள்ள 8 மாவட்டங்களில் 10 மொழிகள் பேசுகிறார்கள். ஆனால் எல்லா மொழிகளையும் எல்லோரும் புரிந்து கொள்கிறார்கள்.

    மிசோ பழங்குடியினர் 95 சதவீதம் கிறிஸ்தவர்களாக மாற்றப்பட்டுள்ளார்கள். ஆங்கிலம் சரளமாக பேசுகிறார்கள்.

    மிசோ பழங்குடியினரின் திருமண முறை விசித்திரமாக இருக்கிறது. பழங்குடியின மக்களிடம் ஒரு விநோத வழக்கம் இருக்கிறது. ஆண், ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றால், அந்தப் பகுதியில் உள்ள வலிமை வாய்ந்த விலங்கு ஒன்றை வேட்டையாடிக் கொல்லும் அளவுக்கு வீரம் மிக்கவனாக இருக்க வேண்டும். வீரம் தான் ஆணுக்கு திருமணத்திற்கான தகுதியை அளிக்கிறது. மிசோ பழங்குடியினர் மிதுன் என்ற விலங்கை வேட்டையாட வேண்டும் என்ற வழக்கம் இருந்துள்ளது. இப்போது அந்த வழக்கம் இல்லாததால், வேட்டையாடுவதற்கு பதிலாக, மணப்பெண்ணுக்கு, மணமகன் ரூ. 420 கொடுக்கும் வழக்கத்தை வைத்துள்ளனர்.

    அது என்ன 420 ரூபாய் என்று கேட்டேன். விவாகரத்து ஆகிவிட்டால் மணப்பெண் 20 ரூபாயை வைத்துக்கொண்டு 400 ரூபாயை திருப்பித் தந்து விடுவார்களாம். பழங்குடியினரின் ஒவ்வொரு பழக்க வழக்கங்களும் நமக்கு பெரும் ஆச்சரியத்தை அளித்துக் கொண்டே இருக்கிறது. ஆனால், மிசோ பழங்குடியினரில், விவாகரத்து என்பது மிகமிக அரிதாகவே நடக்கும் என்றார்கள்.

    மிசோ பழங்குடியினத்தை சேர்ந்த ஒருவர், வேறொரு பழங்குடியினரையோ அல்லது வேறொரு இனத்தைச் சேர்ந்தவரையோ திருமணம் செய்து கொண்டால், அவர்களை மிசோ இனத்தில் இருந்து விலக்கி வைத்து விடுகிறார்கள். இதனை மிகவும் கண்டிப்புடன் பின்பற்றுகிறார்கள்.

    மிசோரம் முதல்வராக இருக்கும் சோரம் தாங்கா சுமார் 20 ஆண்டுகள் தலைமறைவு இயக்கத்தை நடத்தியவர். தனது "மிசோ தேசிய முன்னணி'யை அரசியல் கட்சியாக மாற்றி, தேர்தலில் வென்று முதல்வராக இருக்கிறார். மிசோ தேசிய முன்னணி தற்போது பா.ஜ.க. கூட்டணியில் உள்ளது. 40 சட்டப்பேரவைத் தொகுதிகள் கொண்ட மிசோரமில் பா.ஜ.க. வுக்கு ஒரு எம்.எல்.ஏ. இருக்கிறார்.

    மற்ற வடகிழக்கு மாநிலங்களைப் போலவே மிசோரமிலும், பா.ஜ.க. நிகழ்ச்சிகள் பைபிளில் இருந்து புனித வாசகங்கள் படிக்கப்பட்டு, கிறிஸ்துவ பிரார்த்தனையுடன் ஆமென் சொல்லி தான் தொடங்கியது. ஜஸ்வால் பா.ஜ.க. அலுவலகத்தில் யேசு கிறிஸ்து படம் வைக்கப்பட்டு உள்ளது.

    நவராத்திரி காலம் என்பதால் இரவு அங்குள்ள ஒரு சிவன் கோவிலுக்கு சென்றேன். மிசோரமில் 37 இந்து கோயில்கள் இருப்பதாக சொன்னார்கள். நான் சென்ற சிவன் கோவிலுக்கு சிவலிங்கத்தையும் விநாயகர் சிலையையும் காஞ்சி மடம்தான் வழங்கியிருக்கிறது. காஞ்சி சங்கராச்சாரியார் ஸ்ரீ ஜெயேந்திரர் இந்த கோவிலுக்கு வருகை தந்திருப்பதாகவும் சொன்னார்கள்.

    மிசோரமில் 2.11 சதவீதம் மட்டுமே இந்துக்கள் வசிக்கின்றனர். ஆனாலும், அவர்களுக்கு சிறுபான்மை அந்தஸ்து இல்லை. எந்த சலுகையும் இல்லை. இது பற்றி அவர்கள் வருத்தத்துடன் பல கோரிக்கைகளை முன் வைத்தனர். இதுபற்றி மத்திய அமைச்சர்களிடம் பேசுவதாக வாக்குறுதி அளித்துள்ளேன் என்றார்.

    Next Story
    ×