search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாடி புதுநகரில் போதையில் வாகனங்களை அடித்து உடைத்து 3 வாலிபர்கள் அட்டூழியம்
    X

    பாடி புதுநகரில் போதையில் வாகனங்களை அடித்து உடைத்து 3 வாலிபர்கள் அட்டூழியம்

    • பொதுமக்கள் தங்களை சுற்றி வளைத்து தாக்க தொடங்கிய பின்னரும் போதை வாலிபர்களின் அட்டூழியம் அடங்கவில்லை.
    • மூவரையும் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்க்க முடிவு செய்திருப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    அம்பத்தூர்:

    சென்னை, திருமங்கலத்தை அடுத்த பாடி புதுநகர் வளையாபதி சாலையில் நேற்று மாலையில் 3 வாலிபர்கள் திடீரென மது போதையில் ரகளையில் ஈடுபட்டனர்.

    அளவுக்கதிகமாக மது குடித்திருந்த 3 பேரும் போதை தலைக்கேறிய நிலையில் தாங்கள் என்ன செய்கிறோம் என்று தெரியாத அளவுக்கு சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை அடித்து உடைத்தனர்.

    ரோட்டோரமாக நிறுத்தப் பட்டிருந்த மோட்டார் சைக்கிள்களை காலால் எட்டி உதைத்து கீழே தள்ளி உடைத்தார்கள். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதியை சேர்ந்த வாலிபர்களும், பொதுமக்களும் போதை வாலிபர்களை சுற்றி வளைத்து பிடிக்க முயன்றனர். அப்போது தங்களை பிடிக்க வந்தவர்களை அவர்கள் தாக்கினர்.

    இதனை மாடியில் நின்று பார்த்த பெண்கள் சிலர் தங்களது செல்போனில் வீடியோவாக பதிவு செய்தபடியே கூச்சல் போட்டனர். போதை வாலிபர்களை விரட்டிய தங்கள் பகுதி வாலிபர்களை ஊக்கப்படுத்தும் வகையில் 'அப்படித்தான் போடுடா...' என்றும் குரல் எழுப்பினர். பொதுமக்கள் தங்களை சுற்றி வளைத்து தாக்க தொடங்கிய பின்னரும் போதை வாலிபர்களின் அட்டூழியம் அடங்கவில்லை. அவர்கள் விடாமல் ரகளை செய்தனர். இதையடுத்து பொதுமக்களில் சிலர் தங்களது தாக்குதலை வேகப்படுத்தி 3 பேரையும் நைய புடைத்தனர். இதனால் வலி தாங்காமல் அலறி துடித்த 3 பேரும் அண்ணா விடுங்கண்ணா... என்று புலம்பியபடியே வாயில் ரத்தம் வழிந்தோடிய நிலையில் கையெடுத்து கும்பிட்டனர்.

    இதைத் தொடர்ந்து பொதுமக்கள் போதை வாலிபர்கள் 3 பேரையும் மடக்கி பிடித்து அவர்களது சட்டையை கழற்றினர். பின்னர் அதை வைத்து 3 பேரின் கைகளையும் பின்னால் கட்டி ரோட்டில் உட்காரவைத்துவிட்டு போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

    ஜெ.ஜெ.நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சூரியலிங்கம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று 3 போதை வாலிபர்களையும் மீட்டு விசாரணை நடத்தினர். 3 வாலிபர்களும் சிறுவர்கள் என்பது தெரிய வந்தது. அளவுக்கு அதிகமாக மது குடித்து விட்டு போதையில் எல்லை மீறி தாக்குதலில் ஈடுபட்ட 3 பேர் மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். மூவரும் சிறுவர்கள் என்பதால் அவர்களது பெற்றோரை வரவழைத்து சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இன்று போதை தெளிந்ததும் வாகனங்களை அடித்து உடைத்து பொதுமக்களுக்கு இடையூறு செய்த வழக்கில் 3 பேர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. மூவரையும் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்க்க முடிவு செய்திருப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    Next Story
    ×