என் மலர்
சேலம்
- அணைக்கு வரும் தண்ணீரை விட அதிகளவில் தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் மெதுவாக குறைந்து வருகிறது.
- தற்போது தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்தது.
சேலம்:
மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு திறக்கப்பட்ட தண்ணீர் கடந்த ஜனவரி மாதம் 28-ந் தேதியுடன் நிறுத்தப்பட்டது. ஆனாலும் குடிநீர் தேவைக்காக தொடர்ந்து வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் தண்ணீரை விட அதிகளவில் தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் மெதுவாக குறைந்து வருகிறது.
இந்த நிலையில் தற்போது தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதையடுத்து மேட்டூர் அணைக்கும் நீர்வரத்து அதிகரித்துஉள்ளது. இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 108.22 அடியாக இருந்தது. அணைக்கு நேற்று வினாடிக்கு 1073 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் அது இன்று வினாடிக்கு 1235 கனஅடியாக அதிகரித்து காணப்படுகிறது. அணையில் இருந்து குடிநீருக்காக 1000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. தற்போது அணையில் 75.90 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.
- அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.
- நாங்களும் அவரை அணுகவில்லை.
சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள அ.தி.முக. அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், சசிகலா, டி.டி.வி. தினகரன் மற்றும் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோரை மீண்டும் அ.தி.மு.க.வில் சேர்த்துக் கொள்ள வாய்ப்பே இல்லை என்று தெரிவித்தார்.
இது குறித்து பேசும் போது, "திருப்பி திருப்பி நாங்கள் கூறிவிட்டோம். அ.தி.மு.க. மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. நீங்களாகவே கற்பனையில் கூறுகிறீர்கள். நீங்கள் சொல்லும் அவர்களை, கட்சியில் சேர்த்துக் கொள்ள வாய்ப்பு இல்லை. பா.ம.க.-வுக்கு, ராஜ்யசபா சீட் கேட்கப்படுகிறதா என கேட்கிறீர்கள். இன்னும் ராஜ்ய சபா தேர்தல் பற்றி அறிவிக்கப்படவில்லை.
நீங்களே கற்பனையாக கேள்வி கேட்கிறீர்கள். ராஜ்யசபா தேர்தல் அறிவிப்பு வரும்போது நாங்கள் தெரிவிப்போம். த.வா.க. வேல்முருகன் எங்களை அணுகவில்லை. நாங்களும் அவரை அணுகவில்லை. தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் தான், கூட்டணி பற்றி பேசுவோம்.
கொள்கை என்பது வேறு, கூட்டணி என்பது வேறு. கொள்கை என்பது நிலையானது. கூட்டணி என்பது தேர்தல் நேரத்தில் எதிரிகளை வீழ்த்த வியூகம் அமைப்பது. வாக்குகள் சிதறாமல் அதிக வாக்குகளை பெற வியூகம் அமைப்பது வழக்கம் தான். கூட்டணி என்றும் நிலையானது இல்லை.
முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த விருப்பம் இல்லை. அதனால், ஏதேதோ காரணம் சொல்லி தள்ளிப் போடுகிறார்," என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
- வெறி நாய் கடித்த பசு மாட்டிற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றார்.
- நாய் கடித்து பசு மாடு இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சேலம்:
சேலம் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள குப்தா நகர் பகுதியில் வசித்து வருபவர் மீனா (55), இவர் 15-க்கும் மேற்பட்ட பசு மாடுகளை வளர்த்து பிழைப்பு நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் நேற்றிரவு அதில் ஒரு பசு மாட்டை நாய்கள் கடித்து குதறிய நிலையில் அதில் ஒரு பசு மாடு கழுத்து மற்றும் பின் பகுதியில் ரத்த காயங்களுடன் வீட்டருகே இன்று காலை இறந்த நிலையில் கிடந்தது. இதனை பார்த்த அதிர்ச்சி அடைந்த மீனா கதறி அழுதனர்.
தொடர்ந்து கால் நடைத்துறை அதிகாரிகள் அங்கு சென்று விசாரணை நடத்தினர். ஏற்கனவே சேலம் மாநகரில் நாய்கள் தொல்லை அதிக அளவில் உள்ளது. இதனால் பொது மக்கள், கால்நடைகள் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது பசு மாடு இறந்துள்ளது அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
இது குறித்து பசுமாட்டின் உரிமையாளர் மீனா கூறுகையில், மாடுகளை வைத்து பிழைப்பு நடத்தி வருகிறேன். எனக்கு சொந்தமான மாடுகளை ஏற்கனவே நாய்கள் கடித்த நிலையில் அதனை விரட்டி விட்டுள்ளேன். நேற்றிரவு நாய்கள் கடித்தது எனக்கு தெரியாமல் போய் விட்டது. மாடு இறந்ததை இன்று காலையில் தான் பார்த்தேன் . இதனால் பரிதவித்து வருகிறேன்.
இந்த பகுதியில் நாய்கள் தொல்லை அதிக அளவில் உள்ளது. எனவே நாய்களை உடனடியாக கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், வெறி நாய் கடித்த பசு மாட்டிற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றார். நாய் கடித்து பசு மாடு இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- இரு மாதங்களாக வசிஷ்டநதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
- ராட்தச பாறையில் சிற்பங்கள் இருப்பது தெரியவந்தது.
வாழப்பாடி:
சேலம் மாவட்டம் ஏத்தாப்பூரில் வசிஷ்டநதி கரையில் பஞ்சபூத சிவன் திருத்தலங்களில் ஒன்றான, 500 ஆண்டுக்கு மேல் பழமையானதாக கருதப்படும் சாம்பவமூர்த்தீஸ்வரன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
கடந்த இரு மாதங்களாக வசிஷ்டநதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தற்போது நீர்வரத்து குறைந்த நிலையில், கோவில் அருகே ஆற்றின் மையப்பகுதியில் ராட்தச பாறையில் சிற்பங்கள் இருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து தகவலறிந்த ஏத்தாப்பூர் பேரூராட்சி தலைவர் காசி.அன்பழகன் தலைமையிலான குழுவினர், ஏறக்குறைய 11 நீளத்தில் 4 அடி உயரம் மற்றும் அகலத்தில் காணப்படும் இந்த புடைப்புச் சிற்ப பாறையை ராட்சத கிரேன் கொண்டு மீட்டு கரைக்கு கொண்டு சுத்தப்படுத்தினர்.
அப்போது இந்த பாறையில், 16ம் நுாற்றாண்டு காலத்தை சேர்ந்த ஆஞ்சநேயர், விநாயகர் மற்றும் சிவலிங்கம் சாமிக ளின் புடைப்புச் சிற்பங்கள் இருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து இந்த புடைப்புச் சிற்ப பாறையை கோவிலுக்கு அருகே வசிஷ்டநதிக் கரையிலேயே வைத்துள்ளனர். இந்த சாமிகளை பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர்.
- தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு இன்று நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது.
- அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
சேலம்:
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகள் மற்றும் தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் வந்து கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மழை இல்லாததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்து காணப்பட்டது.
அதே நேரம் குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து தொடர்ந்து தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் நீர்மட்டமும் மெதுவாக குறைந்து வருகிறது.
இந்த நிலையில் தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு இன்று நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. நேற்று வினாடிக்கு 263 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் அது இன்று வினாடிக்கு 425 கனஅடியாக அதிகரித்து காணப்பட்டது. அணையின் நீர்மட்டம் 108.71 அடியாக இருந்தது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
- கொலை செய்யப்பட்ட லோகநாதனும், சத்தியவாணியும் கடந்த 4 ஆண்டுகளாக ஒன்றாக வசித்து வந்துள்ளனர்.
- எப்படியாவது லோகநாதனை கொலை செய்ய வேண்டும் என்று அவர்கள் சதி திட்டம் தீட்டினர்.
பெங்களூரு:
கர்நாடக மாநிலம் பெங்களூரு சிக்கபனாவரா-நெலமங்கலா ரெயில் நிலையங்களுக்கு இடையே கடந்த மாதம் 19-ந்தேதி வயிற்றில் இரண்டாக வெட்டப்பட்ட நிலையில் வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்டு தண்டவாளத்தில் பிணமாக கிடந்தார். இதுபற்றி தெரியவந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது பிணமாக கிடந்த வாலிபரின் தலை, கழுத்து மற்றும் கைகளில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. மேலும் அந்த பகுதியில் இருந்த ரெயில்வே பாலத்தில் ரத்த கறைகளும் காணப்பட்டது. இதையடுத்து போலீசார் பிணமாக கிடந்த வாலிபரின் உடலை கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தினர்.
மேலும் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்த வாலிபர் குறித்து துப்பு துலக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. அவர்கள் பல்வேறு கோணங்களில் கொலை செய்யப்பட்ட வாலிபரை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டனர். அப்போது பக்கத்து மாவட்டமான கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மற்றும் அதனை சுற்றியுள்ள போலீஸ் நிலையங்களில் யாராவது மாயமானதாக புகார் வந்துள்ளதா என்று விசாரணை நடத்தினர்.
அப்போது சூளகிரியைச் சேர்ந்த லோகநாதன் (24) என்ற வாலிபர் மாயமானதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் லோகநாதன் போட்டோவை பெற்று தண்டவாளத்தில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்த வாலிபரின் முகத்துடன் ஒப்பிட்டு பார்த்தனர். அப்போது இரண்டும் ஒன்றாக இருந்தது. எனவே கொலை செய்யப்பட்டது சூளகிரியை சேர்ந்த லோகநாதன் என்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.
இதையடுத்து அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்களும் விரைந்து வந்து லோகநாதன் உடலை அடையாளம் காட்டினர். அதன் அடிப்படையில் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தினர். இதற்கிடையே தனிப்படை போலீசார் கொலை நடந்த இடம் மற்றும் ஓசூர் பஸ் நிலையம் பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் கொலை செய்யப்பட்ட லோகநாதன் ஒரு பெண்ணுடன் பஸ்சில் சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அந்த பெண் யார் என்று தீவிர விசாரணையில் இறங்கினர். அப்போது அவர் ஓசூரைச் சேர்ந்த சத்தியவாணி (27) என்பதும், இவர் பூ வியாபாரம் செய்து வந்ததும் தெரிய வந்தது.
இதையடுத்து தனிப்படை போலீசாரிடம் சத்தியவாணி சிக்கினார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது பரபரப்பு தகவல்கள் வெளியானது. அந்த விவரம் வருமாறு:-
கொலை செய்யப்பட்ட லோகநாதனும், சத்தியவாணியும் கடந்த 4 ஆண்டுகளாக ஒன்றாக வசித்து வந்துள்ளனர். இதையடுத்து சத்தியவாணி லோகநாதனுக்கு தெரியாமல் ஓசூரைச் சேர்ந்த வரதராஜ் (23) என்பவரை திருமணம் செய்து கொண்டார். தொடர்ந்து லோகநாதனுடனும் கள்ளத்தொடர்பில் இருந்து வந்தார். இந்த நிலையில் சத்தியவாணியில் நடத்தையில் லோகநாதனுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அதன் அடிப்படையில் அவர் சத்தியவாணியை கண்காணித்தபோது அவர் வரதராஜ் என்பவரை திருமணம் செய்து குடும்பம் நடத்துவது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த லோகநாதன் சத்தியவாணியை தன்னுடன் வரும்படி அழைத்துள்ளார். அவருடன் செல்ல விரும்பாத சத்தியவாணி வரதராஜிடம் தெரிவித்து உள்ளார். இதையடுத்து எப்படியாவது லோகநாதனை கொலை செய்ய வேண்டும் என்று அவர்கள் சதி திட்டம் தீட்டினர்.
அதன்படி கடந்த பிப்ரவரி மாதம் 19-ந்தேதி சத்தியவாணி-வரதராஜ் ஆகியோர் சூளகிரிக்கு வந்து லோகநாதனை சந்தித்தனர். பின்னர் அவரை ஏமாற்றி பெங்களூருவில் உள்ள ஆளுர் என்ற பகுதிக்கு அழைத்து சென்றனர். அங்கு வைத்து அவர்கள் லோகநாதனை அரிவாளால் வெட்டி கொலை செய்து உடலை தண்டவாளத்தில் வீசி சென்றது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் சத்தியவாணி, அவரது கணவர் வரதராஜ், ஓசூர் தசனாபூரை சேர்ந்த சீனிவாஸ் (25) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.
- சேலம் கந்தம்பட்டி பகுதியில் பலத்த காற்றுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் மின் கம்பம் சாலையில் சாய்ந்தது.
- ஏற்காட்டில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்த நிலையில் நேற்று காலை முதலே மேகங்கள் சூழ்ந்து கடும் குளிர் மற்றும் பனி மூட்டம் நிலவியது.
சேலம்:
சேலம் மாநகரில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் 100 டிகிரியை நெருங்கியதால் சுட்டெரித்தது. இதனால் பொதுமக்கள் மதிய நேரங்களில் வீடுகளில் முடங்கியதால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.
இந்தநிலையில் சேலம் மாநகரில் நேற்று காலை முதலே வெயிலின் தாக்கம் சற்று குறைந்து மேகமூட்டமாக காட்சி அளித்தது. பிற்பகல் 2.30 மணியளவில் திடீரென சேலம் மாநகரில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இந்த மழை நள்ளிரவு வரை சாரல் மழையாக நீடித்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. தொடர்ந்து குளிர்ந்த காற்று வீசியது.
சேலம் கந்தம்பட்டி பகுதியில் பலத்த காற்றுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் மின் கம்பம் சாலையில் சாய்ந்தது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் மின்வாரிய அதிகாரிகள் விரைந்து வந்து மின் கம்பத்தை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனர்.
இதேபோல சேலம் புறநகர் பகுதிகளிலும் நேற்று மாலை முதல் விட்டு விட்டு மழை பெய்தது. குறிப்பாக ஆத்தூர், தம்மம்பட்டி , கரியகோவில், வீரகனூர், நத்தக்கரை ஆகிய பகுதிகளில் கனமழை கொட்டியது. இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. வயல்வெளிகளில் தண்ணீர் காடாக காட்சி அளித்தது.
கெங்கவல்லி, பெத்தநாயக்கன்பாளையம், வாழப்பாடி, அயோத்தியாப்பட்டணம், எடப்பாடி, சங்ககிரி உள்பட பல்வேறு பகுதிகளில் இடி, மின்னலுடன் மழை கொட்டியது. இந்த மழையை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவியது.
தலைவாசல் பகுதியில் நேற்று மதியம் மழை பெய்த நிலையில் சாலையில் தண்ணீர் தேங்கி நின்றதால் சேலத்தில் இருந்து சென்னை நோக்கி சென்ற கார் சாலையில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் காரில் சென்றவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
ஏற்காட்டில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்த நிலையில் நேற்று காலை முதலே மேகங்கள் சூழ்ந்து கடும் குளிர் மற்றும் பனி மூட்டம் நிலவியது. மதியத்திற்கு மேல் மழை பெய்ததால் அங்கு குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவியது. இதனால் சுற்றுலா பயணிகள் அங்குள்ள முக்கிய பகுதிகளை சுற்றி பார்த்தமுடன் குதூகலம் அடைந்தனர்.
5 அடி தூரத்தில் இருப்பவர்கள் கூட தெரியாததால் ஏற்காடு மலைப்பாதையில் வாகன ஓட்டிகள் வாகனங்களில் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடியே ஊர்ந்து சென்றனர். மழை காரணமாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டன. இதனால் அங்கு வசிக்கும் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.
மாவட்டத்தில் அதிகபட்சமாக நத்தக்கரையில் 67 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. சேலம் மாநகர் 9.8, ஏற்காடு 14.4, வாழப்பாடி 20, ஆனைமடுவு 22, ஆத்தூர் 36, கெங்கவல்லி 26, தம்மம்பட்டி 33, ஏத்தாப்பூர் 8, கரியகோவில் 47, வீரகனூர் 43, சங்ககிரி 13, எடப்பாடி 2, மேட்டூர் 5.4, ஓமலூர் 5.5, டேனீஸ்பேட்டை 10.5 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 362.7 மி.மீ. மழை கொட்டியது.
நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல் நகரம், வெண்ணந்தூர், நாமகிரி பேட்டை, குமாரபாளையம், மங்களபுரம், புதுச்சத்திரம், சேந்தமங்கலம் திருச்செங்கோடு, கொல்லி மலை, பரமத்திவேலூர் உள்பட பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டியது. இந்த மழையை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவி வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மாவட்டத்தில் அதிகபட்சமாக கொல்லிமலையில் 30 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. குமாரபாளையம் மற்றும் மங்களபுரத்தில் 22.6, மோகனூர் 2, நாமக்கல் 15, பரமத்திவேலூர் 4, புதுச்சத்திரம் 22, ராசிபுரம் 21.8, சேந்தமங்கலம் 18, கலெக்டர் அலுவலகம் 12.5, என மாவட்டம் முழுவதும் 191.5 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.
- வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது தொடர்பாக மருத்துவ குழுவினர் விசாரணை நடத்தினர்.
- மருத்துவமனைகளில் விதிமுறையை மீறி 100-க்கும் மேற்பட்டோருக்கு கருக்கலைப்பு செய்தது தெரியவந்தது.
சேலம்:
சேலம் வீராணம் கோழிப்பண்ணை பஸ் நிறுத்தம் அருகே பசுபதி ஸ்கேன் சென்டர் செயல்பட்டு வந்தது. இந்த ஸ்கேன் சென்டரில் கிருஷ்ணகிரி மற்றும் சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கருவில் உள்ள குழந்தைகளை பரிசோதனை செய்து பாலினம் குறித்து விதிகளை மீறி தெரிவித்து வருவதாக புகார்கள் வந்தது.
இதையடுத்து கிருஷ்ணகிரி மற்றும் சேலம் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் கடந்த 26-ந்தேதி அந்த ஸ்கேன் சென்டரில் ஆய்வு செய்தனர். அப்போது ஆச்சங்குட்டப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய பெண் டாக்டர் முத்தமிழ், தெடாவூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர் கலைமணி ஆகிய 2 பேரும் இந்த கிளீனிக்கை நடத்தி வந்ததை உறுதி செய்தனர்.
மேலும் பல ஆண்டுகளாக ரகசியமாக பெண்களுக்கு கருவில் உள்ள குழந்தை ஆணா, பெண்ணா? என்று கண்டறிந்து ஸ்கேன் செய்ததும் அதற்கு கட்டணமாக ரூ.15 ஆயிரம் வரை இடைத்தரர்கள் மூலம் பெற்றதும் தெரியவந்தது. இதனையடுத்து அந்த ஸ்கேன் பரிசோதனை மையத்தில் இருந்த ஆவணங்கள் மற்றும் ஸ்கேன் பரிசோதனை கருவிகளை பறிமுதல் செய்த மருத்துவ குழுவினர் அந்த ஸ்கேன் சென்டருக்கு சீல் வைத்தனர்.
இது தொடர்பாக பெண் டாக்டர் முத்தமிழ், தெடாவூரை சேர்ந்த செவிலியர் கலைமணி, சேலத்தை சேர்ந்த செவிலியர் அம்பிகா , ஆத்தூர் பகுதியை சேர்ந்த வனிதா, வசந்தி, மங்கை, ராணி, கலை செல்வி, மகேஸ்வரி ஆகிய 9 பேரும் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.
மேலும் இதில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது தொடர்பாக மருத்துவ குழுவினர் விசாரணை நடத்தினர். விசாரணையில், பசுபதி ஸ்கேன் சென்டரில் கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை கண்டறிந்து அதனை கலைக்க சேலத்தில் உள்ள 3 தனியார் ஆஸ்பத்தி ரிகளுக்கு அனுப்பியதும் சுகாதாரத்துறையினர் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகள் மாவட்ட இணை இயக்குனர் நந்தினி தலைமையில் விதிமுறையை மீறி செயல்பட்ட சேலம் டவுன் மேட்டுத்தெருவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி, பொன்னம்மாப்பேட்டையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி, பெரிய புதூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி என 3 ஆஸ்பத்திரிகளிலும் புகுந்து அதிரடியாக சோதனை செய்தனர்.
அப்போது அந்த மருத்துவமனைகளில் விதிமுறையை மீறி 100-க்கும் மேற்பட்டோருக்கு கருக்கலைப்பு செய்தது தெரியவந்தது. இதையடுத்து 3 ஆஸ்பத்திரிகளும் மூடப்பட்டது. இது தொடர்பான மருத்துவ அறிக்கையை சேலம் மாவட்ட சுகாதார அலுவலர்கள் தமிழ்நாடு அரசு மருத்து இயக்குனருக்கு அனுப்பினர். இதில் பாலினம் கண்டறிந்து கூறிய ஸ்கேன் சென்டரை நடத்திய தெடாவூர் ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர் கலைமணியை டிஸ்மிஸ் செய்து மருத்துவ பணிகள் இயக்குனர் ராஜமூர்த்தி உத்தரவிட்டுள்ளார். மேலும் மற்றவர்கள் மீதும் விரைவில் துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
- தற்காலிக பணியாளர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி த.வெ.க. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளது.
- சேலம் கோட்டை மைதானத்தில் பணியாளர்களின் குடும்ப உறுப்பினர்களுடன் த.வெ.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சேலம் மாவட்டம் மேட்டூர் அனல் மின் நிலையத்தில் பணியாற்றும் தற்காலிக பணியாளர்களுக்கு ஆதரவாக தமிழக வெற்றிக்கழகம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது.
அனல் மின் நிலையத்தில் பணியாற்றும் தற்காலிக பணியாளர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி த.வெ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த 10 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி வரும் 1500 நபர்களை பணி நிரந்தரம் செய்ய கோரி, சேலம் கோட்டை மைதானத்தில் பணியாளர்களின் குடும்ப உறுப்பினர்களுடன் த.வெ.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை.
- துப்பாக்கி ஏந்திய துணை ராணுவப்படை வீரர்கள் பாதுகாப்பு
கரூர்:
அமைச்சர் செந்தில் பாலாஜி, அ.தி.மு.க. ஆட்சியின் போது கடந்த 2011-2015 காலகட்டத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது, வேலை வாங்கி தருவதாக பணம் வாங்கிக்கொண்டு மோசடி செய்ததாக பரப ரப்பு குற்றச்சாட்டு கூறப் பட்டது. இதுதொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கின் அடிப்படையில் சட்டவிரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கத் துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் உள்ள முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கு விசாரணை தீவிரமடைந்ததை தொடர்ந்து கடந்த 2023-ம் ஆண்டு ஜூன் மாதம் 14-ந்தேதி அவர் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
ஒரு வருடத்துக்கும் மேலாக செந்தில் பாலாஜி விசாரணை கைதியாகவே சிறையில் இருந்தார். அவர் ஜாமீன் கோரி பலமுறை சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். ஆனால் தொடர்ந்து ஜாமீன் மறுக்கப்பட்டு வந்தது.
471 நாட்கள் சிறையில் இருந்த செந்தில்பாலாஜிக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 26-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டு ஜாமீன் வழங்கியது. அதன்பிறகு சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த அவர் தற்போது மீண்டும் அமைச்சராக பதவி வகித்து வருகிறார்.
ஆனாலும் அவர் மீதான மோசடி வழக்கு விசாரணை சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதி மன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கில் தற்போது சாட்சிகளிடம் விசாரணை நடந்து வருகிறது. நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. மீண்டும் இந்த வழக்கு வருகிற 12-ந்தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கு தொடர்பாக அம லாக்கத்துறை அதிகாரிகள் ஏற்கனவே அமைச்சர் செந்தில் பாலாஜி வீடு மற்றும் அவரது உறவினர்கள் வீடு, ஆதரவாளர்கள் வீடு களில் பலமுறை சோதனை நடத்தியுள்ளனர்.
இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவா ளர்கள் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று மீண்டும் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். கரூர் மாவட்டத்தில் 3 இடங்களில் உள்ள ஆதரவாளர்களின் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலையில் இருந்தே சோதனை நடத்தி வருகிறார்கள்.
கரூர் ராயனூரில் வசிக்கும் கொங்கு மெஸ் உரிமையாளர் மணி என்கிற சுப்பிரமணி என்பவரின் வீடு, கரூர் ஆத்தூர் பிரிவு அருகே கோதை நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் சக்தி மெஸ் உரிமையாளர் கார்த்திக் என்பவரின் வீடு, செந்தில் பாலாஜியின் ஆதரவாளரும் பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரருமான எம்.சி.எஸ்.சங்கரின் கரூர் பழனியப்பா நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஆகிய 3 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
5 கார்களில் வந்த சுமார் 20-க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் கேரளா மற்றும் தெலுங்கானா மாநிலங்களின் பதிவு எண்களை கொண்ட கார்களில் வந்துள்ளனர்.
அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தும் இடங்களில் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவப்படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். காலை 8 மணிக்கு இந்த சோதனை தொடங்கியது. தொடர்ந்து சோதனை நடைபெற்று வருகிறது.
கடந்த 2023-ம் ஆண்டு அமைச்சர் செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்ட போது அவரது சகோதரர் வீடு மற்றும் ஆதரவாளர்களான கரூர் கொங்கு மெஸ் மணி, அரசு ஒப்பந்ததாரர் எம்.சி.எஸ். சங்கர், சக்தி மெஸ் கார்த்திக் ஆகியோரது வீடுகள் மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அப்போது 2-வது முறையாக நடத்தப்பட்ட சோதனை 8 நாட்கள் நீடித்தது. இதில் பல முக்கிய ஆவணங்கள் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியானது. மேலும் அப்போது அந்த வீடுகள் மற்றும் சில அலுவலகங்களுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
அதன் தொடர்ச்சியாக மீண்டும் செந்தில் பாலாஜியின்ஆதரவாளர்கள் 3 பேரின் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி வருவது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதேபோல் தமிழகம் முழுவதும் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
- மூன்று பேரை காதலித்து வந்த நிலையில், முதல் காதலி திருமணம் செய்ய வற்புறுத்தல்.
- தன்னைவிட வயது அதிகம் என்பதால் வாலிபர் திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்து வந்த நிலையில் கொலை செய்துள்ளார்.
திருச்சி மாவட்டம் துறையூர் தாலுகா விநாயகர் தெருவை சேர்ந்தவர் லோகநாயகி (31). இவர் சேலம் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள சுவர்ணபுரி பகுதியில் உள்ள ஒரு விடுதியில் தங்கி பணியாற்றி வந்தார். இந்த நிலையில் கடந்த 4 நாட்களாக அவரை காணவில்லை.
இதையடுத்து அவரது தோழிகள் பள்ளப்பட்டி போலீசில் புகார் செய்தனர். போலீசார் மாயமான இளம்பெண்ணின் செல்போனை தொடர்பு கொண்டபோது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதையடுத்து அவரது செல்போன் எண்ணுக்கு அடிக்கடி வந்த தொடர்புகள் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
இதற்கிடையே ஏற்காடு மலைப்பகுதியில் அழுகிய நிலையில் பெண் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர்.
காணாமல் போன லோகநாயகி ஒரு வாலிபரிடம் நீண்ட நேரம் செல்போனில் பேசி வந்தது தெரியவந்தது. அதனடிப்படையில் போலீசார் அந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர்.
அப்போது அவர் லோகநாயகி தன்னிடம் கடைசியாக ஏற்காட்டுக்கு செல்வதாக கூறி சென்றார். மற்றப்படி எனக்கு எதுவும் தெரியாது என்றார். மேலும் லோகநாயகி குறித்து முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். இதனால் போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது.
இதனைத்தொடர்ந்து அப்துல் ஹபீஸ் என்ற அந்த வாலிபரிடம் கிடுக்குப்பிடி விசாரணை மேற்கொள்ள லோகநாயகியை விஷ ஊசி செலுத்தி கொலை செய்ததாக பகீர் தகவலை தெரிவித்தார்.
லோகநாயகி என்பவரை அப்துல் ஹபீஸ் காதலித்து வந்ததுள்ளார். அதேவேளையிலா் அப்தல் ஹபீஸ் மேலும் இரண்டு பெண்களை காதலித்து வந்துள்ளார்.
லோகநாயகி தன்னை திருமணம் செய்து கொள்ள அப்துல் ஹபீஸை வற்புறுத்தியுள்ளார். லோகநாயகிக்கு தன்னை விட வயது அதிகம் என்பதால் அப்துல் ஹபீஸ் திருமணம் செய்து கொள்ள விரும்பவில்லை. லோகநாயகி தொடரந்து வற்புறுத்தியதால், அவரை கொலை செய்ய முடிவு செய்துள்ளார். இது தொடர்பாக தனது இரண்டு காதலிகளிடம் உதவி கேட்டுள்ளார்.
அவர்கள் உதவியுடன் விஷ ஊசி செலுத்தில் லோகநாயகியை கொலை செய்த அப்துல் ஹபீஸ், உடலை ஏற்காடு மலைப்பகுதியில் கொண்டு சென்று வீசியுள்ளார். போலீசார் சம்பவ இடத்தில் அழுகிய நிலையில் லோகநாயகி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அத்துடன் அப்துல் ஹபீஸ் மற்றும் அவரது இரண்டு காதலிகள் மீதும் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து ஏற்காட்டு மலைப்பாதையில் இரவு 10 மணிக்கு மேல் பயணிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. ஏற்காடு உள்ளூர்வாசிகள் தகுந்த சோதனைக்குப் பின்னர் உரிய ஆவணம் இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என காவல்துறை தெரிவித்துள்ளது.
- கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்தது யார் என்பது அனைவருக்கும் தெரியும்.
- எங்களுடைய ஒரே இலக்கு தி.மு.க.வை வீழ்த்துவது மட்டும் தான்.
ஆத்தூர்:
சேலம் மாவட்டம் ஆத்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-
* இலங்கை கடற்படை தமிழக மீனவர்களை கைது செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது.
* தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்வது கண்டிக்கத்தக்கது.
* மீனவர்கள் பிரச்சனைக்கு இருநாட்டு அரசுகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* அ.தி.மு.க. ஆட்சியில் மீனவர்கள் பாதுகாக்கப்பட்டனர்.
* கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்தது யார் என்பது அனைவருக்கும் தெரியும்.
* தருமபுரி மாவட்ட தி.மு.க. செயலாளர் ஆட்சியர், எஸ்.பி.யை மிரட்டுகிறார்.
* எங்களுக்கு ஒரே எதிரி தி.மு.க. மட்டும் தான். தி.மு.க.வை தவிர வேறு எந்த கட்சியும் எதிரி கிடையாது.
* பா.ஜ.க.வுடன் கூட்டணியா என்பது குறித்து அப்போது தெரிவிக்கப்படும்.
* தேர்தலுக்கு ஓராண்டு உள்ளது, அப்போது கூட்டணி குறித்து விவாதிக்கப்படும்.
* எங்களுடைய ஒரே இலக்கு தி.மு.க.வை வீழ்த்துவது மட்டும் தான்.
* தே.மு.தி.க.விற்கு ராஜ்யசபா சீட் என அ.தி.மு.க. கூறியதா? என கேள்வி எழுப்பினார்.






