என் மலர்
புதுக்கோட்டை
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு பணி குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற தமிழக மக்கள் நல் வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் உருவாக்கப்பட்ட வலுவான சுகாதார கட்டமைப்பால்தான் கொரோனா இறப்பு விகிதம் குறைக்கப்பட்டுள்ளது. ஒரே நாளில் ஆர்.டி. பி.சி.ஆர். மூலம் 85 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வரும் ஒரே மாநிலமாக தமிழகம் திகழ்கிறது.
தமிழகத்தில் 2 ஆயிரம் மினி கிளினிக் மூலம் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இவை விரைவில் செயல்பாட்டுக்கு வந்து விடும். அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
தடுப்பூசி வரும் வரை முகக்கவசத்தை கட்டாயம் பொதுமக்கள் அணிய வேண்டும். கொரோனா தடுப்பு பணிகளுடன் மலேரியா, டெங்கு போன்ற மழைக்கால நோய் பரவல் தடுப்பு பணிகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் தனியார் மருத்துவமனைகள் சேவை மனப்பான்மையுடன் செயல்பட வேண்டும். கொரோனா சிகிச்சைக்கு அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாக வசூலித்த 4 தனியார் மருத்துவமனைகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதுபோன்ற குற்றச்சாட்டுகள் மேலும் வந்தால் இன்னும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆலங்குடி:
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி சீனிக்கடை முக்கத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சரவணன் ஆய்வில் ஈடுபட்டார். அப்போது முகக்கவசம் அணியாத பொதுமக்களிடம் இருந்து தலா ரூ.200 வீதம்,35 நபருக்கு ரூ.7000உடனடியாக அபராதம் விதித்தார்.
இப்பணியில் வருவாய் கோட்டாட்சியர் தண்டாயுத பாணி, துணை ஆட்சியர்(பயிற்சி) , தாசில்தார் சேக் அப்துல்லா, காவல் ஆய்வாளர் பாலசுப்பிரமணியன், கறம்பக்குடி வருவாய் ஆய்வாளர் ஸ்டெல்லா, பேரூராட்சி செயல் அலுவலர் சுப்பிரமணியன், பிலாவிடுதி கிராம நிர்வாக அலுவலர் தீபிகா ஆகியோர் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அடுத்துள்ள ஏம்பல் விசூர் கிராமத்தை சேர்ந்த அன்பு மகன் பாண்டி (வயது 28). புதுக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் பெட்ரோல் பங்க்கில் வேலை பார்த்து வரும் இவருக்கும் சிவகங்கை மாவட்டம் கொடிகுலத்தை சேர்ந்த இளவரசி (22) என்பவருக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது.
இந்தநிலையில் நேற்று வீட்டில் தனியாக இருந்த இளவரசி நீண்ட நேரமாகியும் கதவு திறக்காததால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, அங்கு இளவரசி தூக்கில் தொங்கியது தெரியவந்தது. இதில் அதிர்ச்சியடைந்த உறவினர்கள், போலீசுக்கு தெரியாமல் இளவரசி உடலை தகனம் செய்தனர்.
தகவல் அறிந்த வி.ஏ.ஓ. கண்ணன் கொடுத்த புகாரின் பேரில் ஏம்பல் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பின்னர் இளவரசியின் கணவர் பாண்டி, மாமனார் அன்பு உள்ளிட்ட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும் திருமணமாகி 3 மாதமே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகிறார்.
பொன்னமராவதி:
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஒன்றியம் காட்டுப்பட்டியை சேர்ந்தவர் நடேசன். இவரது மனைவி வைரமுத்து (வயது 78). கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நடேசன் இறந்து விட்டார். இதனால் வைரமுத்து தனியாக வீட்டில் வசித்து வந்தார்.
சம்பவத்தன்று இரவு 3 மர்ம நபர்கள் வைரமுத்துவின் வீட்டுக்கு வந்துள்ளனர். அவர்கள் வைரமுத்துவிடம், உங்கள் உறவினர் ஒருவர் இறந்துவிட்டார். அதனால், உங்களை அழைத்து வரச்சொன்னார்கள் என்று கூறியுள்ளனர். இதை நம்ப மறுத்து யோசித்துக்கொண்டிருக்கும்போது, மர்ம நபர்கள் திடீரென்று அவரை கீழே தள்ளிவிட்டு, அவர் அணிந்திருந்த தங்கச்சங்கிலி, மோதிரம், தோடு உள்ளிட்ட 6¼ பவுன் நகைகளை பறித்தனர்.
அவர் சத்தம் போட்டதால், அவரை ஒரு தூணில் கட்டிப்போட்டு மிரட்டி பீரோ சாவியை கேட்டுள்ளனர். கொடுக்க மறுத்ததால் பீரோவை உடைத்துள்ளனர். அதில் ஒன்றும் இல்லாததால் பொருட்களை களைத்து போட்டுவிட்டு, அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
வைரமுத்து சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வீட்டிற்கு சென்று வைரமுத்துவை காப்பாற்றினர். பின்னர் இது குறித்து பொன்னமராவதி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் கைவிரல் ரேகை நிபுணர்கள் தடயங்களை பதிவு செய்து கொண்டனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
அறந்தாங்கி:
அறந்தாங்கி அருகே நடைபெற்ற திருமண விழாவில் பங்கேற்ற பா.ஜ.க. மாநில துணைத்தலைவர் கருப்பு முருகானந்தம் நிருபர்களிடம் கூறியதாவது:-
கடந்த பாராளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதாவை குறைகூறி தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றது. ஆனால் வரும் சட்டப்பேரவை தேர்தலில் அந்த நிலை இருக்காது. பா.ஜ.க. கூட்டணி வெற்றி பெறும். அந்த வெற்றியை தடுப்பதற்காக தி.மு.க. 1965 ஆம் ஆண்டு பார்முலாவான இந்தி எதிர்ப்பை கையில் எடுத்துள்ளது.
பா.ஜ.க. தமிழகத்தில் இந்தி மொழியை திணிக்க வேண்டும் என்று எப்போதும் நினைக்கவில்லை. மும்மொழிக் கொள்கையால் தமிழர் பண்பாடு, தமிழர் கலாச்சாரம் வளரும். இந்தி மொழியை கற்பதால் வடநாட்டில் வாழும் தமிழர்கள் நமது தாய் மொழியை கற்பதற்கு உதவியாக இருக்கும்.
இந்தி வேண்டாம் போடா என்று டி-சர்ட்டில் எழுதி அணிந்துள்ளவர்கள் இந்தியில் பேசுவதை சமூக ஊடகங்களில் பார்த்திருப்பீர்கள். நாங்கள் (பா.ஜ.க.வினர்) இந்தி வேண்டாம் என்றுதான் சொல்லுகிறோம். எங்களுக்கு இந்தி தெரியாது. விருப்பப்பட்டால் படியுங்கள் என்று தான் கூறுகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது மாநில மகளிரணி செயலாளர் கவிதா ஸ்ரீகாந்த், மாவட்ட இளைஞரணி தலைவர் சக்தி குமரன், மாவட்ட செயற் குழு உறுப்பினர் ஜெயபாண்டியன் உள்ளிட்ட பலர் இருந்தனர்.
அறந்தாங்கியை அடுத்த மேல்மங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 75). சொந்தமாக செம்மறி ஆடுகள் வைத்து வளர்த்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்தவர் சன்னாசி மனைவி பாப்பு (60). இவரும் ஆடு வளர்க்கிறார்.
நேற்று மதியம் ஆறுமுகமும், பாப்புவும் கருங்குடி கண்மாயில் தங்கள் ஆடுகளை மேய்த்துக் கொண்டு இருந்தனர். அப்போது இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. திடீரென்று ஆறுமுகம் மீது மின்னல் தாக்கியது. இதில் ஆறுமுகம் சம்பவ இடத்திலேயே அதிர்ச்சியில் உயிரிழந்தார்.
ஆறுமுகம் நின்ற இடத்தில் இருந்து சற்று தொலைவில் நின்றிருந்த பாப்பு படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து நாகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதேபோல் விஜயபுரம் தெற்கு பகுதியைச் சேர்ந்தவர் மெய்யழகு மனைவி முத்துலெட்சுமி (35). மகள்கள் மகேஸ்வரி (19), மஞ்சுளா (14). நேற்று மதியம் முத்துலெட்சுமி தனது 2 மகள்களுடன் வீட்டில் இருந்துள்ளார். அப்போது அவரது வீட்டின் மீது மின்னல் தாக்கியது.
இதில் முத்துலெட்சுமி, மகேஸ்வரி, மஞ்சுளா ஆகியோர் படுகாயம் அடைந்தனர். மேலும் வீட்டின் ஒரு பகுதி சேதமடைந்தது. படுகாயம் அடைந்த 3 பேரையும் அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே உள்ள வல்லம்பகாட்டை சேர்ந்தவர் முத்து (வயது 45). இவரது மனைவி ராதா(40). இவர்களுக்கு அபிஷேக்(13), சபரி (11) ஆகிய 2 மகன்கள். இந்தநிலையில் ரெத்தினகோட்டையை சேர்ந்த 22 வயது பெண்ணுக்கும், முத்துவுக்கும் பழக்கம் ஏற்பட்டது. அவர்கள் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து வீட்டை விட்டு ஓடிவிட்டதாக கூறப்படுகிறது.
இதனால், மன வேதனை அடைந்த ராதா, நேற்று இரவு தனது 2 மகன்கள் மீதும் மண்எண்ணெய் ஊற்றி விட்டு தனது உடலிலும் ஊற்றிக்கொண்டு தீ வைத்துக் கொண்டார். அவர்களது அலறல் சத்தம் கேட்டு அருகில் உள்ளவர்கள் ஓடிவந்து தீயை அணைத்தனர். இருந்தாலும் சம்பவ இடத்திலேயே ராதா, சபரி ஆகிய இருவரும் பரிதாபமாக இறந்தனர். அபிஷேக் படுகாயத்துடன் உயிருக்கு போராடினார்.
இதுகுறித்து தகவல் அறிந்த அறந்தாங்கி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அபிஷேக்கை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மற்ற இருவரது உடல்களும் பிரேத பரிசோதனைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து அறந்தாங்கி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






