என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    அறந்தாங்கியில் ஏழைகள் பசியாற நூதன ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதாவது இதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட இடத்தில் இருப்பவர்கள் உணவு வைக்கலாம், இல்லாதவர்கள் உணவை சாப்பிடலாம்.
    அறந்தாங்கி:

    அறந்தாங்கி பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் இணைந்து பசியுடன் வாடுபவர்கள் பசியாற நூதன ஏற்பாடு செய்துள்ளனர். அதன்படி அறந்தாங்கி நகராட்சி தாலுகா ஆபீஸ் சாலையில் பொது இடத்தில் கண்ணாடி பெட்டி வைத்துள்ளனர். இந்த பெட்டியில் காலை, மதியம், இரவு ஆகிய 3 வேளைகளும் உணவு வைக்கப்பட்டு இருக்கும்.

    பசியுடன் இருப்பவர்கள் யார் வேண்டுமானாலும் இந்த உணவை எடுத்து சாப்பிடலாம். இதற்கு பணம் எதுவும் வசூலிக்கப்பட மாட்டாது. அதேபோல் வசதிப்படைத்தவர்கள் உள்பட உணவு தானம் செய்ய விரும்புபவர்கள் ஓட்டலில் வாங்கியோ அல்லது வீட்டில் சமையல் செய்து கொண்டு வந்தோ உணவு வைக்கலாம். இதனை இல்லாதவர்கள் எடுத்து சாப்பிடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    அதேநேரத்தில் கண்ணாடி பெட்டியில் உள்ள உணவை ஆய்வு செய்ய சமூக ஆர்வலர்கள் சார்பில் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு பழைய சாப்பாடு வைக்காத வகையில் கண்காணிப்பார்கள். இந்த கண்ணாடி பெட்டியை நேற்று சமூக ஆர்வலர்கள் வைத்தனர். சமூக ஆர்வலர்களின் இந்த செயலை பொதுமக்கள் பாராட்டினர். மேலும் இந்த கண்ணாடி பெட்டியில் பிறந்த நாள் கொண்டாடுபவர்கள், ஏதாவது சுபநிகழ்ச்சிகள் நடத்துபவர்கள் உணவு வைப்பார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
    கீரமங்கலம் மின்வாரிய அலுவலகத்தில் ஊழியர் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது சாவில் மர்மம் இருப்பதாக கூறி உறவினர்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
    கீரமங்கலம்:

    புதுக்கோட்டை மாவட்டம், திருப்புனவாசல் வடக்கு வீதியை சேர்ந்தவர் பழம்பதி. மின்வாரிய முன்னாள் ஊழியரான இவரது மகன் காளிதாஸ்(வயது 34). தந்தை இறந்த பிறகு கீரமங்கலம் தெற்கு மின்வாரிய அலுவலகத்தில் லைன் ஆய்வாளராக வேலை பார்த்து வந்தார். அலுவலகத்திலேயே தங்கி இருந்து வேலை செய்து வந்தார்.

    இந்தநிலையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் சொந்த ஊருக்கு செல்லாமல் மின்வாரிய அலுவலகத்திலேயே தங்கி இருந்த அவர், நேற்று காலை அலுவலக அறையின் மேலே உள்ள கொக்கியில் ஒரு சால்வையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த மின்வாரிய அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் காளிதாசின் உறவினர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் கீரமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், ஆலங்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் அலாவுதீன் மற்றும் கீரமங்கலம் போலீசார் காளிதாசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்தநிலையில் காளிதாசின் சாவில் மர்மம் இருப்பதாக கூறிய அவரது உறவினர்கள் கீரமங்கலம் போலீஸ் நிலையத்தில் திரண்டனர். அப்போது அவர்கள் போலீசாரிடம் தெரிவிக்கையில், காளிதாஸ் சாவில் மர்மம் உள்ளது, அவருக்கு பணியிட மாறுதல் கிடைத்துள்ள நிலையில் சில நாட்களுக்கு முன்பு சிலர் மிரட்டியதாக உயர் அதிகாரிகளிடம் கூறியுள்ளார். ஆகவே, மிரட்டலுக்கு பயந்து அவர் தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம். இதுதொடர்பாக விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட முயன்றனர். அவர்களிடம் ஆலங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு முத்துராஜ் பேச்சு வார்த்தை நடத்தி, இதுதொடர்பாக போலீசில் முறையாக புகார் அளியுங்கள். விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். அதனைத்தொடர்ந்து காளிதாசின் தாயார் நாகலெட்சுமி என்கிற லட்சுமி மிரட்டலுக்கு பயந்து காளிதாஸ் இறந்திருக்க வாய்ப்பு உள்ளது. அதனால் மிரட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் கீரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    புதுக்கோட்டை அருகே பணம் வைத்து சூதாடிய 8 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை கணேஷ்நகர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மேலகாயம்பட்டி பகுதியில் பணம் வைத்து சூதாடிக்கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த கருப்பையா (வயது 35) உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். இதேபோல, டவுன் பகுதியில் சூதாடிய காந்தி நகரை சேர்ந்த ரவிச்சந்திரன் (43) உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். கைதான 8 பேரிடம் இருந்து மொத்தம் ரூ.850 பறிமுதல் செய்யப்பட்டது.
    108 ஆம்புலன்ஸ் வாகனங்களை கையாள தனி செயலி அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டையில் 108 ஆம்புலன்ஸ் கால்சென்டர் தொடங்கப்பட உள்ளதை முன்னிட்டு அதற்கான பணிகளை தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் .சி.விஜயபாஸ்கர் பார்வையிட்டு ஆய்வு செய்ததுடன், 19 ஊழியர்களுக்கு பணி நியமன ஆணையை வழங்கினார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் தற்போது 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் ஆயிரத்து 505 இயங்கி வருகின்றன. கொரோனா நோயாளிகளை கையாள்வதற்கு மட்டும் பிரத்யேகமாக 450 ஆம்புலன்ஸ்கள் இயக்கப்படுகிறது.

    ஆம்புலன்ஸ் சேவையை மேலும் வலுப்படுத்துவதற்கு தமிழக அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது. சென்னையில் விபத்து ஏற்பட்டால் 108 ஆம்புலன்ஸ் சம்பவ இடத்திற்கு வருவதற்கு 8 நிமிடங்கள் ஆகிறது. அதை மேலும் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    சம்பவ இடத்திற்கு ஆம்புலன்ஸ் எத்தனை நிமிடத்தில் வரும் என்று பொதுமக்கள் தெரிந்து கொள்வதற்காக ஆன்ட்ராய்டு அப்ளிகே‌ஷன் சாப்ட்வேர் ஒன்று தயாரிக்கப்பட்டு வருகிறது. இது விரைவில் பயன்பாட்டுக்கு வரும். உலகிலேயே இந்த முறை தமிழகத்தில் மட்டுமே பின்பற்றப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    நாட்டில் எந்த ஒரு மாநிலத்திலும் இல்லாத வகையில் சுகாதார கட்டமைப்பு இங்கு உள்ளது. நாட்டிலேயே சிறந்த மருத்துவமனையாக ஓமந்தூரார் மருத்துவமனை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது மிகப்பெரிய சாதனை.

    தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக டெங்கு, சிக்குன் குனியா தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ஒரு வாரத்திற்குள் கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனை செய்வதற்காக தன்னார்வலர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அறந்தாங்கி அருகே குடும்ப பிரச்சினையில் பெயிண்டர் ஈட்டியால் குத்திக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவருடைய அண்ணன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த கூகனூரை சேர்ந்தவர் பாலையா (வயது 45). இவருக்கு திருமணமாகி கலா என்ற மனைவியும், ஒரு மகள் மற்றும் ஒரு மகனும் உள்ளனர். பாலையா பெயிண்டராக வேலை பார்த்து வந்தார். பாலையாவிற்கும், அவருடைய அண்ணன் குடும்பத்தினருக்கும் இடையே பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பாலையா குடும்பத்துடன் தனது வீட்டில் இருந்தார். நள்ளிரவில் அவருடைய வீட்டிற்கு வந்த அவருடைய அண்ணன் சுப்பிரமணி (57), இவருடைய மகன் விக்னேஷ் (28), பாலையாவின் தம்பியினுடைய மருமகனான கொடிவேல் கிராமத்தை சேர்ந்த வீரமணி (30) ஆகியோர், பாலையாவிடம் குடும்ப பிரச்சினை தொடர்பாக தகராறில் ஈடுபட்டனர். தகராறு முற்றியதில் அவர்கள் ஈட்டியால் பாலையாவின் கழுத்தில் குத்தினர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த அறந்தாங்கி போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து பாலையாவின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதில் குடும்ப பிரச்சினை காரணமாக பாலையா கொலை செய்யப்பட்டது, முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து பாலையாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

    மேலும் இது குறித்து அறந்தாங்கி போலீசார் வழக்குப்பதிவு செய்து சுப்பிரமணி, விக்னேஷ், வீரமணி ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அறந்தாங்கி வனத்தோட்ட மேலாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் ரூ.50 ஆயிரம் மற்றும் முக்கிய ஆவணங்கள் சிக்கின.
    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் பட்டுக்கோட்டை சாலையில் தமிழ்நாடு வனத்தோட்ட மண்டல மேலாளர் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்திற்கு நேற்று காலை 11 மணி அளவில் திடீரென்று புதுக்கோட்டை மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை துணை போலீஸ் சூப்பிரண்டு மணிகண்டன் தலைமையில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பீட்டர், தமிழரசி ஆகியோர் கொண்ட குழுவினர் வந்தனர்.

    பின்னர் அவர்கள் அலுவலகத்தின் கதவுகளை சாத்திக்கொண்டு சோதனை நடத்தினர். அப்போது, வெளிநபர்கள் யாரையும் அவர்கள் உள்ளே அனுமதிக்கவில்லை. அதேபோல் உள்ளே இருந்த நபர்கள் யாரையும் வெளியே செல்ல அனுமதிக்கவில்லை. சோதனை முடிந்த பிறகே வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

    சோதனையின் போது, அறந்தாங்கி வனத்தோட்டக் கண்காணிப்பாளர் வள்ளிகண்னுவிடம் இருந்த கணக்கில் வராத ரூ.50 ஆயிரம் மற்றும் சில முக்கிய ஆவணங்களை லஞ்ச ஒழிப்பு துறையினர் கைப்பற்றினர். காலை 11 மணிக்கு தொடங்கிய இந்த சோதனை மாலை 4 மணி வரை நடைபெற்றது. இந்த திடீர் சோதனையால் அறந்தாங்கி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    மேலும் பொதுமக்கள் லஞ்சம் தொடர்பான புகார்களுக்கு 04322-22355 செல்: 94981 57799 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம் என லஞ்ச ஒழிப்பு துறையினர் தெரிவித்துள்ளனர்.
    புதுக்கோட்டை மாவட்டத்தில் 85 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,047-ஆக உயர்ந்துள்ளது.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று வரை 7,692 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 6,977 கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 863 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவுக்கு 122 பேர் உயிரிழந்துள்ளனர்.

    இந்நிலையில் இன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் 85 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,047-ஆக உயர்ந்துள்ளது.
    விராலிமலையில் திருமணமான 7 மாதத்தில் போலீஸ்காரர் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். சாவில் சந்தேகம் உள்ளதாக பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.
    ஆவூர்:

    புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தாலுகா, மேலபச்சகுடி ஊராட்சி தென்னிலைபட்டியை சேர்ந்தவர் சின்னசாமி. இவரது மகன் சத்தியமூர்த்தி (வயது 25). இவர் திருச்சி சிறப்பு காவல் படை பிரிவில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் திருச்சி மாவட்டம் மணப்பாறை முத்துடையான்பட்டியை சேர்ந்த கோகிலா (22) என்பவருக்கும் கடந்த 7 மாதத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றது. அப்போது கோகிலாவிற்கு விருப்பமில்லாமல், அவரது பெற்றோர் சத்தியமூர்த்திக்கு திருமணம் செய்து வைத்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் சத்தியமூர்த்தி திருச்சியில் வேலைக்கு சென்று தங்கியிருந்து வாரத்திற்கு ஒரு முறை மட்டும் வீட்டுக்கு வருவதுண்டு. அதேபோல கடந்த சில நாட்களுக்கு முன்பு சத்தியமூர்த்தி வேலைக்கு சென்றுவிட்டார். கோகிலா தனது மாமியாருடன் தென்னிலைப்பட்டியில் உள்ள வீட்டில் இருந்து வந்தார். 

    இந்நிலையில் வாழ்க்கையில் விரக்தி அடைந்த கோகிலா நேற்று காலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டின் உள்ளே உள்ள உத்திரத்தில் தனது துப்பட்டாவில் தூக்கு மாட்டிய நிலையில் தொங்கியுள்ளார். வெளியில் சென்றுவிட்டு வீட்டிற்கு வந்து பார்த்து அதிர்ச்சியடைந்த கோகிலாவின் மாமியார் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கோகிலாவை கீழே இறக்கி பார்த்தபோது அவர் இறந்தது தெரியவந்தது.

    கோகிலாவிற்கு திருமணமாகி 7 மாதமே ஆவதால் இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் விசாரணை நடத்தினார். மேலும் மகள் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கோகிலாவின் பெற்றோர் மற்றும் அவரது அண்ணன் முத்துக்குமார் ஆகியோர் கோட்டாட்சியர் மற்றும் மாத்தூர் போலீசாரிடம் புகார் அளித்தனர்.
    வேலை வழங்குவதில் பாரபட்சம் காட்டுவதாக கூறியும், அனைவருக்கும் வேலை வழங்கக்கோரியும் திருமயம் அருகே பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    திருமயம்:

    புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே உள்ள குளிபிறை ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் 400-க்கும் மேற்பட்ட ஆதிதிராவிடர் பிரிவை சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஊராட்சி மூலம் வழங்கப்படும் தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் பணி வழங்காமல் பாரபட்சம் காட்டப்படுவதாக கூறப்படுகிறது. அதேபோல, முறையாக குடிநீரும் வழங்கப்படுவதில்லையாம்.

    இதனை கண்டித்தும், அனைவருக்கும் வேலை வாய்ப்பு வழங்கக்கோரியும் புதுக்கோட்டை-பொன்னமராவதி சாலையில் குளிபிறை பகுதியில் அவர்கள் நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு குளிபிறை 3-வது வார்டு உறுப்பினர் பொன்னழகி தலைமை தாங்கினார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த பனையப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்டோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள், உங்கள் பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை தொடர்ந்து சாலை மறியல் கைவிடப்பட்டது. இதனால், அப்பகுதியில் சுமார் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    கறம்பக்குடி பகுதிகளில் அரசு அதிகாரிகளை கண்டித்து பரபரப்பு சுவரொட்டிகள் ஓட்டிய எழுத்தார் துரைகுணாவை போலீசார் கைது செய்தனர்.

    ஆலங்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலுகாவை சேர்ந்த எழுத்தாளர் துரை குணா. சமூக ஆர்வலரான இவர் புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலுகா புதுக்கோட்டை நெடுஞ்சாலையில் தனிநபர்களால் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள முருகன் கோவில், ஆதி பராசக்தி கோவில்களை உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற தீர்ப்பின் வழிகாட்டுதலின்படி, நெடுஞ்சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி விபத்தில்லா நெடுஞ்சாலையாக பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மனு அனுப்பினார். ஆனால் அதிகாரிகள் எந்த வித நடவடிக்கையும் எடுக்க வில்லை.

    இதையடுத்து எழுத்தாளர் துரைகுணா சார்பில் கறம்பக்குடி பகுதிகளில் அரசு அதிகாரிகளை கண்டித்து பரபரப்பு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டது.

    அதில், கறம்பக்குடி- புதுக்கோட்டை நெடுஞ்சாலையை ஆக்கிரமித்து தனிநபர்களால் கட்டப்பட்ட வழிபாட்டு தல கட்டிடங்களை அரசாணை நிலைப்படி அகற்றுவது எப்படி? என்றும் கீழ்க்கண்ட நபர்களுக்கு கலெக்டர், மாவட்ட வருவாய் அதிகாரி, வருவாய்கோட்டாட்சியர், வட்டாட்சியர், நெடுஞ்சாலை துறை கோட்டப்பொறியாளர், நெடுஞ்சாலை துறை உதவி பொறியாளர், கிராம நிர்வாக அலுவலர் ஆகியோருக்கு ஒருநாள் நாள் பயிற்சி வகுப்பு எடுக்கப்படும். இடம்,கிருமி நாசினி தெளிக்கப்பட்ட பாதுகாப்பான அரங்கம். கறம்பக்குடி என்று பிரசுரிக்கப்பட்டிருந்தது. இந்த சுவரொட்டிகள் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்தநிலையில் எழுத்தாளர் துரைகுணா மீது நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு புதுக்கோட்டை மாவட்ட எஸ்.பி. பாலாஜி சரவணன் உத்தரவிட்டார். இதையடுத்து துரைகுணா மீது, அரசு அதிகாரிகள் பற்றி அவதூறு பரப்பியது உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து இன்று காலை துரைகுணாவை போலீசார் கைது செய்தனர். ஏற்கனவே கடந்த ஆண்டு அரசு அதிகாரிகளுக்கு எதிராக சுவரொட்டி ஒட்டியதாக துரைகுணா கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    திருவரங்குளம் அருகே செல்போன் கோபுரம் மீது ஏறி இலங்கை அகதி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
    திருவரங்குளம்:

    புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் தோப்புக்கொல்லையில் உள்ள இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்தவர் சிவராஜா (வயது 45). பெயிண்டிங் வேலை செய்து வருகிறார். இவருக்கு சத்யா ஜினி என்கிற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். இவர் நேற்று மதியம் முகாம் எதிரே உள்ள செல்போன் கோபுரம் மீது திடீரென ஏறினார். சரசரவென உச்சி வரை சென்ற அவர், அங்கிருந்து குரல் எழுப்பியபடி இருந்தார். இதனை அந்த வழியாக சென்றவர்கள் கவனித்து அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    அதன்பேரில், வல்லத்திராக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) அழகம்மாள் தலைமையிலும், ஆலங்குடி தாசில்தார் கலைமணி மற்றும் வருவாய் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். புதுக்கோட்டையில் இருந்து தீயணைப்பு துறையினரும் அங்கு வந்தனர். பின்னர், தீயணைப்பு வீரர்கள் சிவராஜா கீழே குதித்தால் அவரை மீட்கும் வகையில் செல்போன் கோபுரத்தை சுற்றி வலை கட்டினர். சிவராஜாவின் மனைவி மற்றும் குழந்தைகளும் அங்கு வந்தனர்.

    பின்னர் அதிகாரிகள், போலீசார் மற்றும் சிவராஜாவின் மனைவி ஆகியோர் அவரை கீழே இறங்கி வருமாறு மைக் மூலம் அழைப்பு விடுத்தனர். 3 மணி நேரத்திற்கும் மேலாக இறங்க மறுத்த அவர், கீழே இறங்கி வந்து உங்கள் கோரிக்கையை சொல்லுங்கள் என்று அதிகாரிகள் மீண்டும் அழைத்தன்பேரில் ஒருவழியாக கீழே இறங்கி வந்தார்.

    அப்போது அவர் அதிகாரிகளிடம் கூறுகையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வீசிய கஜா புயலின் போது சேதமடைந்த தனது வீட்டை சரி செய்து தர வேண்டும், முகாமில் பதிவு செய்யாமல் உள்ளவர்களுக்கு பதிவு செய்து மாதாந்திர உதவித்தொகை மற்றும் சலுகைகள் வழங்கிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் மீண்டும் செல்போன் கோபுரத்தில் ஏறி போராட்டம் செய்வதாக கூறினார்.

    இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் கூறியதன்பேரில், மனைவி மற்றும் குழந்தைகளுடன் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
    சிறுவன்-சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து புதுக்கோட்டை மகிளா கோர்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூரை சேர்ந்தவர் ரெங்கசாமி மகன் ரகுபதி (வயது 23). இவர், புதுக்கோட்டையில் கேபிள் டி.வி. நடத்தும் ஒருவரிடம் வேலை பார்த்தார். இந்நிலையில் கடந்த 2019 ஆண்டு மார்ச் மாதம் 16-ந்தேதி புதுக்கோட்டை திலகர் திடலில் உள்ள ஒரு வீட்டில் கேபிள் டி.வி.யில் ஏற்பட்ட பழுதை சரி செய்வதற்காக சென்றார். அப்போது அங்கு விளையாடிக்கொண்டிருந்த 8 வயது சிறுமியை வயர் எடுத்துவரும் படி கேட்டுள்ளார். அப்போது அந்த சிறுமி கேபிள் வயர் எடுத்து கொடுக்கும் போது, ரகுபதி சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.

    இதையடுத்து அந்த சிறுமி அங்கிருந்த ஓடிவிட்டார். பின் அந்த வீட்டில் இருந்த 10 வயது சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனால் சிறுவன் பயத்தால் சத்தம் போட்டுள்ளான். சிறுவனின் சத்தத்தை கேட்டு வீட்டில் இருந்தவர்கள் வந்துள்ளனர். இதைப்பார்த்த ரகுபதி அங்கிருந்து தப்பி ஓட முயன்ற போது, அங்கிருந்தவர்கள் ரகுபதியை பிடித்து புதுக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    இதையடுத்து போலீசார் ரகுபதியை போக்சோ சட்டத்தில் கைது செய்து, புதுக்கோட்டை மகிளா கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்து நீதிபதி டாக்டர்.சத்தியா நேற்று தீர்ப்பு கூறினார். அதில், சிறுவனை பாலியல் தொல்லை கொடுத்த குற்றத்திற்காக 7 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.3 ஆயிரம் அபராதமும், அபராத தொகை கட்ட தவறினால் மேலும் 3 மாத சிறை தண்டனையும், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததற்காக 5 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும், அபராத தொகை கட்ட தவறினால் மேலும் 2 மாத சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பு கூறினார். இந்த தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று கூறினார்.
    ×