என் மலர்
புதுக்கோட்டை
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே உள்ள விராச்சிலை கிராமத்தை சேர்ந்தவர் உமையாள் ஆச்சி (வயது 70). இவரது கணவர் ஏற்கனவே இறந்துவிட்டார். மகன்கள் வெளியூர்களில் வசித்து வருவதால், உமையாள் ஆச்சி விராச்சிலையில் தனியாக வசித்து வருகிறார்.
சம்பவத்தன்று வீட்டுக்குள் புகுந்த 3 பெண்கள், உமையாள்ஆச்சியை கட்டிப்போட்டு 4 பவுன் நகைகள் மற்றும் ரூ.7 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்றனர். உமையாள் ஆச்சியின் வீடு திறந்து கிடப்பதை பார்த்த அக்கம் பக்கத்தினர் உள்ளே சென்று பார்த்த போது உமையாள்ஆச்சி கயிற்றால் கட்டப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்ததுடன், உடனடியாக கயிற்றை அவிழ்த்து நடந்த விவரத்தை கேட்டறிந்தனர்.
இதற்கிடையே கொள்ளையில் ஈடுபட்ட 3 பெண்கள் அந்த பகுதியில் சுற்றித்திரிந்தனர். இதையடுத்து அப்பகுதி இளைஞர்கள் அந்த பெண்களை பிடித்து விசாரித்ததில் அவர்கள் உமையாள் ஆச்சியை கட்டிப் போட்டு நகை-பணத்தை கொள்ளையடித்ததை ஒப்புக்கொண்டனர்.
பின்னர் 3 பேரையும் பனையப்பட்டி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் அந்த பெண்கள் சிவகங்கை மாவட்டம், கீழச்சிவல்பட்டியை சேர்ந்த சுரேஷ் மனைவி கருப்பாயி (35), ஆவணிபட்டியை சேர்ந்த வீரப்பன் மனைவி தெய்வானை (40), திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை சேர்ந்த ஸ்ரீவித்யா (34) என தெரியவந்தது.
இன்ஸ்பெக்டர் பத்மா வழக்குப்பதிவு செய்து 3 பெண்களையும் கைது செய்து, உமையாள் ஆச்சியிடம் கொள்ளையடித்த நகை- பணத்தை மீட்டார். மேலும் இதுபோன்று எங்காவது திருட்டில் ஈடுபட்டார்களா? என 3 பேரிடமும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
புதுக்கோட்டை மாவட்டம், கிள்ளுக்கோட்டையில் புதிய 108 ஆம்புலன்ஸ் சேவையை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில், “இந்த 108 அவசர சிகிச்சை ஊர்தி சேவையின் மூலம் கிள்ளுக்கோட்டை, உடையாளிப்பட்டி, புலியூர் உள்ளிட்ட 12 ஊராட்சிகளை சேர்ந்த 26 ஆயிரம் பொதுமக்கள் பயன்பெறுவார்கள்.
இப்பகுதி பொதுமக்களின் கோரிக்கையினை ஏற்று விரைவில் புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்படும். புதுக்கோட்டை மாவட்ட மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
காவிரி-வைகை-குண்டாறு இணைப்புத் திட்டத்தின் முதற்கட்ட பணிகளுக்காக ரூ.700 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த திட்டத்திற்கு முதல்-அமைச்சர் விரைவில் அடிக்கல் நாட்ட உள்ளார்” என்றார்.
நிகழ்ச்சியில் கலெக்டர் உமாமகேஸ்வரி, ஆறுமுகம் எம்.எல்.ஏ. உள்பட பலர் கலந்து கொண்டனர்.
புதுக்கோட்டை சின்னப்பா பூங்கா அருகே புதுக்குளம் அமைந்துள்ளது. சம்பவத்தன்று இரவு இப்பகுதியில் கடைக்கு 15 வயது சிறுமி நடந்து சென்றார்.
அப்போது அந்த பகுதியில் இருந்த 3 வாலிபர்கள், சிறுமியின் கையை பிடித்து இழுத்து, குளக்கரை பகுதிக்கு அழைத்து செல்ல முயன்றுள்ளனர். அந்த சிறுமி அவர்களின் பிடியில் இருந்து நழுவ முயற்சித்த போது, 3 பேரில் ஒருவர், சிறுமியை கன்னத்தில் பலமாக தாக்கியுள்ளார்.
இதில் அந்த சிறுமி சாலையில் மயங்கி விழுந்தாள். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்தனர். அதற்குள் அந்த 3 பேரும் தப்பியோடினர். சிறுமியை மீட்டு வீட்டில் பாதுகாப்பாக ஒப்படைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் கணேஷ்நகர் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது அந்த சிறுமியை பலாத்காரம் செய்ய வாலிபர்கள் முயற்சித்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில் காந்திநகரை சேர்ந்த கார்த்திக் என்கிற வேல்முருகன் (27), விஜய் (27), ராமகிருஷ்ணன் (28) ஆகியோர் என தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் போலீசார் மடக்கி பிடித்தனர்.
மேலும் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 வாலிபர்களையும் கைது செய்தனர். கைதான 3 பேரையும் மகிளா கோர்ட்டில் ஆஜர்படுத்தி அறந்தாங்கி சிறையில் அடைத்தனர். 15 வயது சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்ய முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.






