என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
    வடகாடு:

    வடகாடு அருகே உள்ள புள்ளான்விடுதி, ஆவனம் கைகாட்டி பகுதிகளில் வடகாடு போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது கடைகளில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்றதாக புள்ளான்விடுதியை சேர்ந்த சரவணன் (வயது 37) மற்றும் ஆவனம் கைகாட்டியை சேர்ந்த செந்தில்குமார் (20) ஆகிய 2 பேர் மீது வடகாடு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
    கந்தர்வகோட்டை பகுதியில் இரவு சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. இதனால், வாழை மரங்கள் முறிந்து விழுந்தன.
    கந்தர்வகோட்டை:

    கந்தர்வகோட்டை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் ரஸ்தாளி, பூவன், செவ்வாழை உள்ளிட்ட வாழை ரகங்கள் பயிரிடப்பட்டு உள்ளது. இந்த வாழை மரங்களில் தார் விட்டு அறுவடைக்கு தயாரான நிலையில் இருந்தது. ஆனால், கந்தர்வகோட்டை பகுதியில் நேற்று முன்தினம் இரவு பலத்த சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. இதனால், பெரும்பாலான வாழை மரங்கள் காற்றுக்கு ஈடுகொடுக்க முடியாமல் முறிந்து விழுந்தன.

    இதில், பகட்டுவான் பட்டியை சேர்ந்த விவசாயி ராஜ் கமலக்கண்ணன் என்பவரின் தோட்டத்தில் உள்ள சுமார் 1,000 வாழை மரங்கள் முறிந்து விழுந்தன. இதேபோல வீரடிபட்டி, சோத்துப்பாறை, சோழகம்பட்டி, துருசுபட்டி உள்ளிட்ட கிராமங்களில் சுமார் 100 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்கள் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் சூறாவளி காற்றால் முறிந்து விழுந்தன.

    அறுவடைக்கு தயாராக இருந்த வாழை மரங்கள் முறிந்து விழுந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். முறிந்த வாழைகளுக்கு இழப்பீடு வழங்க அரசு முன்வர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
    புதுக்கோட்டை கலெக்டர் அலுவலக வளாகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே உள்ள வெட்டிவயல் கோவில் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் இலக்கியா (வயது 29). இவரது கணவர் மோகன். வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.

    இந்த நிலையில், இலக்கியா தனது 2 குழந்தைகள் மற்றும் பெற்றோர், சகோதரர் ஆகியோருடன் நேற்று புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். பின்னர் அவர், கலெக்டர் அலுவலக வளாக முன் பகுதியில் கார் நிறுத்துமிடம் அருகே திடீரென மண்எண்ணெய்யை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனை கண்ட பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மற்றும் அதிகாரிகள் விரைந்து வந்து இலக்கியாவை தீக்குளிக்க விடாமல் தடுத்தனர். பின்னர் அவர், தனது குடும்பத்தினருடன் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.

    இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் திருக்கோகர்ணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவுரி மற்றும் போலீசார் விரைந்து வந்து இலக்கியாவிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் தனது மாமனார், மாமியார் வரதட்சணை கேட்டு கொடுமை படுத்தியது தொடர்பாக அறந்தாங்கி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் விசாரணை நடைபெற்று வருவதாகவும், இந்த புகாரில் சமாதானம் பேசுவதாக ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் மற்றும் சிலர் சேர்ந்து தன்னை மிரட்டி வருவதாகவும், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி தீக்குளிக்க முயன்று போராட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவித்தார்.

    மேலும், ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் தி.மு.க.வை சேர்ந்தவர் என்றார். இதைத்தொடர்ந்து இலக்கியா மற்றும் அவரது குடும்பத்தினரை அறந்தாங்கி துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு போலீசார் அனுப்பி வைத்தனர். கலெக்டர் அலுவலக வளாகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
    புதுக்கோட்டையில் அம்மன் கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிச்சென்ற மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை திருவள்ளுவர் நகரில், செட்டிக்குளம் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வழிபாடு நடத்தி வருகின்றனர். கோவிலின் பூசாரி கணேசன் தினமும் அதிகாலை 5.30 மணி அளவில் நடையை திறப்பதும், இரவில் 9.30 மணி அளவில் பூட்டி விட்டு செல்வதும் வழக்கம்.

    இந்தநிலையில் நேற்று அதிகாலை 5.30 மணிக்கு பூசாரி கணேசன், கோவிலை திறக்க வந்தார். அப்போது பிரதான நுழைவுவாயிலை திறந்து உள்ளே சென்றபோது, உண்டியலில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதனை கண்ட அவர் அதிர்ச்சியடைந்தார். உண்டியலில் அருகே சில்லரை நாணயங்கள் சிதறி கிடந்தன. உண்டியலில் இருந்த பணத்தை மர்மநபர் திருடிச்சென்றது தெரியவந்தது.

    இந்த சம்பவம் குறித்து அப்பகுதி பொதுமக்கள் கணேஷ்நகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கோவிலின் பக்கவாட்டில் உள்ள கதவின் பூட்டை உடைத்து மர்மநபர் உள்ளே வந்து, உண்டியலின் பூட்டை உடைத்து திருடிச்சென்றது தெரிந்தது. கடந்த 2014-ம் ஆண்டு உண்டியல் திறக்கப்பட்டது. அதன்பின் கும்பாபிஷேக பணிக்காக திறந்து கொள்ளலாம் என ஊர்க்காரர்கள் முடிவு செய்து உண்டியலை திறக்கவில்லை. ஆண்டுதோறும் பூச்சொரிதல் விழா நடைபெறுவது வழக்கம். மேலும் பண்டிகை, விசேஷ காலங்களில் பக்தர்கள் அதிக அளவில் வழிபாடு நடத்துவார்கள். அவ்வாறு கோவிலுக்கு வரும் பக்தர்கள் காணிக்கைகளாக பணம், தங்கம் மற்றும் வெள்ளி பொருட்களை உண்டியலில் செலுத்துவது வழக்கம்.

    கடந்த 2014-ம் ஆண்டுக்கு பிறகு உண்டியல் திறக்கப்படாத நிலையில் அதில் தற்போது ரூ.1 லட்சம் வரையும், சில தங்கம் மற்றும் வெள்ளி பொருட்கள் இருந்திருக்கலாம் என அப்பகுதியினர் தெரிவித்தனர்.

    உண்டியலில் சில்லரை நாணயங்கள் மட்டும் திருட்டு போகாமல் அப்படியே இருந்தன. இந்த திருட்டு சம்பவம் குறித்து கணேஷ்நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மர்மநபரை பிடிக்க போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
    கிராமப்புறங்களில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு 6½ லட்சம் இலவச முககவசங்கள் 3-ந் தேதி முதல் வினியோகிக்கப்பட உள்ளது.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டத்தில் பொதுவினியோக திட்டத்தின் மூலம் அக்டோபர் மாத அத்தியாவசிய பொருட்கள் ரேஷன் கடைகளில் வினியோகிக்கப்பட உள்ளது. இதற்கான டோக்கன் வீடு, வீடாக வழங்கும் பணி நடந்து வருகிறது. டோக்கன்களில் நாள், நேரம் குறிப்பிடப்பட்டுள்ளது. கொரோனா தொற்று ஏற்படாமல் தடுக்கும் வகையில் ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு நபர் மட்டுமே ரேஷன் கடைக்கு சென்று பொருட்கள் வாங்கலாம்.

    முன்னுரிமை அரிசி பெறும் மற்றும் ஏழ்மை குடும்ப அட்டை ஒன்றுக்கு கூடுதலாக தலா 1 கிலோ கோதுமை விலையின்றி இதர அத்தியாவசியப் பொருட்களுடன் வழங்கப்பட உள்ளது. மேலும் தற்போது பெறப்படும் கோதுமைக்கு ஈடாக பிரதான் மந்திரி கரீப் கல்யாண் அன்னயோஜனா திட்ட அரிசி உரிம அளவிலிருந்து குறைத்து வழங்கப்படும்.

    தனிமைப்படுத்தப்பட்டவர்கள், வயதானவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வசிக்கும் இடங்களுக்கு அந்தந்தப் பகுதி ரேஷன் கடை பணியாளர்கள் அவர்களது வீடுகளுக்கு நேரில் சென்று பொது வினியோகத் திட்ட அத்தியாவசியப் பொருட்களை வழங்குவார்கள். இந்த நடைமுறையின்படி வருகிற 1-ந் தேதி முதல் அத்தியாவசியப் பொருட்கள் பொதுமக்களுக்கு தொடர்ந்து வினியோகம் செய்யப்படும்.

    கொரோனா நோய் பரவலைத் தடுக்கும் பொருட்டு, தரமான முககவசங்கள் அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் குடும்ப உறுப்பினர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப நபர் ஒருவருக்கு தலா 2 முக கவசங்கள் வீதம் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. 2-ம் கட்டமாக கிராமப்புற பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகள் மூலம் 6 லட்சத்து 53 ஆயிரம் எண்ணிக்கையிலான முககவசங்கள் ரேஷன் கார்டுதாரர்களுக்கு வருகிற 3-ந் தேதி முதல் வழங்கப்பட உள்ளன. மேற்கண்ட தகவலை கலெக்டர் உமாமகேஸ்வரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
    புதுக்கோட்டை அருகே லாரி மோதி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை புதிய பஸ் நிலையம் அருகே நேற்று அதிகாலை வாலிபர் ஒருவர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த டிப்பர் லாரி அவர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். விபத்து நடந்ததும் லாரியை டிரைவர் நிறுத்தவில்லை. இதுகுறித்து தகவல் அறிந்ததும் டவுன் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் இறந்தவர் மன்னார்குடியை சேர்ந்த விவேக் (வயது26) என தெரியவந்தது. விபத்தை ஏற்படுத்திய லாரியை சற்று தள்ளி நிறுத்திவிட்டு டிரைவர் தப்பி ஓடினார். இந்த விபத்து குறித்து டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    புதுக்கோட்டையில் காரில் கடத்திவரப்பட்ட ரூ.27 லட்சம் மதிப்புள்ள கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, அதனை கடத்தி வந்தவரை கைது செய்தனர். மேலும் மற்றொருவரை தேடி வருகின்றனர்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டையில் இருந்து நாமக்கல்லுக்கு காரில் கஞ்சா கடத்தி செல்லப்படுவதாக தனிப்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவின்பேரில், டவுன் துணை சூப்பிரண்டு செந்தில்குமார் மேற்பார்வையில் திருக்கோகர்ணம் இன்ஸ்பெக்டர் கவுரி தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர்கள் பாஸ்கரன் (வெள்ளனூர்), சந்திரகாந்த் (கீரனூர்) மற்றும் போலீசார் கொண்ட தனிப்படையினர் புதுக்கோட்டை-திருச்சி ரோட்டில் திருக்கோகர்ணம் அருகே தாவூத்மில் பஸ் நிறுத்தம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது சந்தேகப்படும்படி வந்த காரை போலீசார் மடக்கி சோதனையிட்டனர். அதில் பண்டல், பண்டல்களாக கஞ்சா இருந்தது தெரியவந்தது. கஞ்சாவை காரில் கடத்தி வந்த அரிமளம் அருகே சீராடும்செல்வி கிராமத்தை சேர்ந்த ஆரோக்கியதாஸ் என்கிற தாஸ் (வயது 49) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    போலீசார் சோதனையின்போது காரில் வந்த அவரது கூட்டாளியான கானாடு கிராமத்தை சேர்ந்த ரமேஷ் என்பவர் தப்பியோடிவிட்டார். இதனையடுத்து 88 பண்டல்களில் இருந்த 180 கிலோ கஞ்சாவுடன், காரும் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக வெள்ளனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய ரமேசை தேடி வருகின்றனர்.

    கைதான ஆரோக்கியதாசிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது, கஞ்சாவை ஆந்திராவில் இருந்து கடத்தி வந்ததும், அரிமளம் பகுதியில் ஒரு வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. மேலும் அவர் மீது கோவை ஆர்.எஸ்.புரம், புதுக்கோட்டை மதுவிலக்கு பிரிவு, காரைக்குடி வடக்கு, ஈரோடு, திண்டுக்கல் உள்ளிட்ட போலீஸ் நிலையங்களிலும், கேரள, ஆந்திர மாநிலங்களிலும் மது, கஞ்சா விற்பனை, திருட்டு வழக்குகள் பதிவாகி இருப்பது தெரிந்தது.

    பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மதிப்பு ரூ.27 லட்சம் இருக்கும் என போலீசார் தெரிவித்தனர்.

    புதுக்கோட்டையில் கடத்தல் கஞ்சா பறிமுதல் செய்யப்படுவது தொடர்கதையாக இருந்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு காரில் கடத்தி வரப்பட்ட கஞ்சா பண்டல், பண்டலாக கைப்பற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
    மாத்தூர் அருகே கார் மோதி வியாபாரி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆவூர்:

    மாத்தூர் அருகே உள்ள குண்டூர் பகுதியை சேர்ந்தவர் ஷியாம் சுந்தர் (வயது 44). இவர் வெளிநாடுகளுக்கு சென்று அங்கு உள்ள பொருட்களை வாங்கி வந்து விற்பனை செய்யும் வியாபாரம் செய்து வந்தார். நேற்றுமுன்தினம் மதியம் ஷியாம் சுந்தர் சொந்த வேலையாக தனது மோட்டார் சைக்கிளில் மாத்தூருக்கு வந்தார். பின்னர் வேலையை முடித்துக்கொண்டு அதே மோட்டார் சைக்கிளில் குண்டூருக்கு சென்று கொண்டிருந்தார். புதுக்கோட்டை-திருச்சி சாலையில் மாத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே சென்றபோது, மண்டையூரைச் சேர்ந்த பூபதி (55) என்பவர் ஓட்டி வந்த கார் ஷியாம் சுந்தர் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சாலையில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த ஷியாம் சுந்தரை அப்பகுதியை சேர்ந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து மாத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    புதுக்கோட்டை அருகே தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் மிரட்டலால் டிரைவர் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள கொத்தமங்கலம் பகுதியை சேர்ந்தவர் வினோத்குமார் (வயது 28). டிரைவரான இவர் கடந்த 7 வருடங்களுக்கு முன்பு ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் கடன் பெற்று 2 சரக்கு ஆட்டோக்கள் வாங்கி ஓட்டி வந்தார்.

    போதிய வருமானம் கிடைக்காததால் வாங்கிய கடனை திருப்பி செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டது. அதனால் அந்த இரு வாகனங்களையும் கடன் கொடுத்த தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் பறிமுதல் செய்தனர்.

    இந்த நிலையில் வினோத் குமாரிடம் பறிமுதல் செய்த இரு வாகனங்களையும் தனியார் நிதி நிறுவன நிர்வாகம் வேறு நபர்களிடம் விற்பனை செய்து விட்டனர். ஆனால் அதன் பிறகு கடன் தொகையை விட குறைந்த தொகைக்கே வாகனங்கள் விற்பனை செய்துள்ளதாக கூறி மீதி தொகையை செலுத்தக்கோரி கடந்த ஒரு வாரமாக தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் வினோத் குமார் வீட்டிற்கு சென்று மிரட்டியதாக கூறப்படுகிறது.

    தற்போது கொரோனா ஊரடங்கால் வருமானம் இல்லாமல் இருந்ததால் தன்னால், தற்போது கடன் நிலுவை தொகையை கட்ட முடியாது. நிலைமை சீரான பிறகு கட்டுவதாக கூறியுள்ளார். ஆனால் தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் கண்டிப்பாக செலுத்த வேண்டும் என்று மிரட்டினர்.

    இதனால் கடந்த சில நாட்களாக மிகவும் மனமுடைந்து காணப்பட்ட வினோத் குமார் வி‌ஷம் குடித்து வீட்டில் மயங்கி கிடந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி வினோத் குமார் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இந்த சம்பவம் குறித்து கீரமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் மிரட்டலால் டிரைவர் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    தமிழகம் ஆக்ஸிஜன் உற்பத்தியில் மிகை மாநிலமாக திகழ்வதுடன் தேவைக்கு அதிகமான ஆக்ஸிஜனை அண்டை மாநிலங்களுக்கு வழங்கி வருகிறது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசலில் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள இந்நேரத்தில் பொதுமக்கள் அனைவரும் மிகுந்த எச்சரிக்கையுடனும், கவனத்துடனும் இருக்க வேண்டும். பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிவதுடன் வயதானவர்கள், இணை நோய் உள்ளவர்கள் தேவையற்ற பயணத்தை தவிர்க்க வேண்டும்.

    பொதுமக்களுக்கு காய்ச்சல், சளி, இருமல் போன்ற ஏதேனும் அறிகுறிகள் ஏற்பட்டால் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனையினை அணுகி பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். ஆரம்ப நிலையிலேயே சிகிச்சைக்கு வருபவர்களை நுரையீரல் பாதிப்பின்றி குணப்படுத்தவது எளிதாகும்.

    தமிழகத்தில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் கிராமப்புற மருத்துவ மனைகளிலும் தேவையான மருத்துவ உபகரணங்களுடன் தயார் நிலையில் அமைக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் உத்தரவின் படி தமிழகம் முழுவதும் 2,000 மினி கிளினிக்குகள் துவங்கப்பட உள்ளன.

    இதில் பணிபுரிய கூடிய மருத்துவர்கள், செவிலியர்கள், மருந்தாளுனர்கள் போன்றவர்களை தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருவதுடன் விரைவில் மினி கிளினிக்குகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.

    தமிழகம் ஆக்ஸிஜன் உற்பத்தியில் மிகை மாநிலமாக திகழ்வதுடன் தேவைக்கு அதிகமான ஆக்ஸிஜனை அண்டை மாநிலங்களுக்கு வழங்கி வருகிறது. அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் போதுமான ஆக்ஸிஜன் வசதி செய்யப்பட்டுள்ளதுடன் கூடுதலாக ஆக்ஸிஜன் வசதி அதிகரிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று கிராமப்புறங்களில் 30 படுக்கைகள் கொண்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் ஆக்ஸிஜன் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    மேலும் தமிழகம் முழுவதும் 40,000 படுக்கைகள் எண்ணிக்கையில் ஆக்ஸிஜன் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் ஆர்.டி. பி.சி.ஆர். பரிசோதனை ஒரு நாளுக்கு 90,000 எண்ணிக்கையில் எடுக்கப்பட்டு வருகிறது. இதன் பயனாக கோவிட் பரிசோதனையில் பிற மாநிலங்கள் தமிழகத்தை பின்பற்றுமாறு பிரதமர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

    கறம்பக்குடி அருகே மது விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கறம்பக்குடி:

    கறம்பக்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெபஸ்டின் ரவி மற்றும் போலீசார் சாந்தம் பட்டி, காட்டாத்தி ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு பெட்டிக்கடைகளில் பதுக்கி வைத்து மது பாட்டில்களை விற்பனை செய்த ரமேஷ் (வயது 35), கோவிந்தராஜ் (56) ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 20 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
    புதுக்கோட்டையில் தூக்க மாத்திரைகள் கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்ததால் சிறுமி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தாயின் கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை சேங்கை தோப்பு பகுதியை சேர்ந்தவர் கணேசன் (வயது 32). தனியார் நிறுவனத்தில் விற்பனை பிரதிநிதியாக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் கணேசனுக்கு, புதுக்கோட்டை டவுன் பகுதியை சேர்ந்த 34 வயது பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டது. அந்த பெண், கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். 11 வயதில் ஒரு மகள் இருந்தாள்.

    கணேசனுக்கும், அந்த பெண்ணிற்கும் ஏற்பட்ட பழக்கம் கள்ளக்காதலாக மாறியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அந்த பெண்ணின் மகளான 11 வயது சிறுமிக்கு தூக்க மாத்திரை கொடுத்து கணேசன் பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிகிறது.

    இதில் மனமுடைந்த அந்த சிறுமி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த கணேஷ் நகர் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் சிறுமியை தற்கொலைக்கு தூண்டியதாக மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கணேசனை கைது செய்தனர்.

    இதுபற்றி போலீசார் கூறுகையில், கணேசன், 11 வயது சிறுமிக்கு தூக்க மாத்திரை கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். தூங்கி எழுந்த பின் அந்த சிறுமி அதனை உணர்ந்ததால் தற்கொலையில் ஈடுபட்டிருக்கிறார். இதனை அந்த சிறுமியின் தாய் மறைக்க முயன்றிருக்கிறார். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

    சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது என்றனர். சிறுமியின் தாத்தா கொடுத்த புகாரின் பேரில் இந்த சம்பவம் குறித்து இன்ஸ்பெக்டர் அழகம்மாள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ×