search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    திருவரங்குளம் அருகே செல்போன் கோபுரத்தில் ஏறி இலங்கை அகதி போராட்டம்

    திருவரங்குளம் அருகே செல்போன் கோபுரம் மீது ஏறி இலங்கை அகதி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
    திருவரங்குளம்:

    புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் தோப்புக்கொல்லையில் உள்ள இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்தவர் சிவராஜா (வயது 45). பெயிண்டிங் வேலை செய்து வருகிறார். இவருக்கு சத்யா ஜினி என்கிற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். இவர் நேற்று மதியம் முகாம் எதிரே உள்ள செல்போன் கோபுரம் மீது திடீரென ஏறினார். சரசரவென உச்சி வரை சென்ற அவர், அங்கிருந்து குரல் எழுப்பியபடி இருந்தார். இதனை அந்த வழியாக சென்றவர்கள் கவனித்து அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    அதன்பேரில், வல்லத்திராக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) அழகம்மாள் தலைமையிலும், ஆலங்குடி தாசில்தார் கலைமணி மற்றும் வருவாய் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். புதுக்கோட்டையில் இருந்து தீயணைப்பு துறையினரும் அங்கு வந்தனர். பின்னர், தீயணைப்பு வீரர்கள் சிவராஜா கீழே குதித்தால் அவரை மீட்கும் வகையில் செல்போன் கோபுரத்தை சுற்றி வலை கட்டினர். சிவராஜாவின் மனைவி மற்றும் குழந்தைகளும் அங்கு வந்தனர்.

    பின்னர் அதிகாரிகள், போலீசார் மற்றும் சிவராஜாவின் மனைவி ஆகியோர் அவரை கீழே இறங்கி வருமாறு மைக் மூலம் அழைப்பு விடுத்தனர். 3 மணி நேரத்திற்கும் மேலாக இறங்க மறுத்த அவர், கீழே இறங்கி வந்து உங்கள் கோரிக்கையை சொல்லுங்கள் என்று அதிகாரிகள் மீண்டும் அழைத்தன்பேரில் ஒருவழியாக கீழே இறங்கி வந்தார்.

    அப்போது அவர் அதிகாரிகளிடம் கூறுகையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வீசிய கஜா புயலின் போது சேதமடைந்த தனது வீட்டை சரி செய்து தர வேண்டும், முகாமில் பதிவு செய்யாமல் உள்ளவர்களுக்கு பதிவு செய்து மாதாந்திர உதவித்தொகை மற்றும் சலுகைகள் வழங்கிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் மீண்டும் செல்போன் கோபுரத்தில் ஏறி போராட்டம் செய்வதாக கூறினார்.

    இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் கூறியதன்பேரில், மனைவி மற்றும் குழந்தைகளுடன் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
    Next Story
    ×