search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போதிய வங்கி சேவை கிடைக்காமல் ஏரியூர் மக்கள் அவதி
    X

    போதிய வங்கி சேவை கிடைக்காமல் ஏரியூர் மக்கள் அவதி

    • கூடுதலாக பொதுத்துறை வங்கிகளோ, தனியார் வங்கிகளோ இல்லை.
    • தினசரி பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியாமல் தடுமாறி வருகின்றனர்.

    ஏரியூர்,

    தமிழகத்தில் மிகவும் பின்தங்கிய மாவட்டமாக தருமபுரி உள்ளது. அத்தகைய மாவட்டத்தில் இருக்கக்கூடிய ஏரியூர் ஒன்றியம்.

    தருமபுரி மாவட்ட நிர்வாகத்தலும் அரசாலும் புறக்கணிக்கப்பட்ட ஒரு ஒதுக்கப்பட்ட ஒன்றியமாகவே திகழ்கிறது. பின் தங்கிய மாவட்டத்தில் மிகவும் பின் தங்கிய பகுதியாக ஏரியூர் ஒன்றியம் உள்ளது. 10 ஊராட்சிகளை உள்ளடக்கிய 200-க்கும் மேற்பட்ட குக் கிராமங்களை கொண்டது ஏரியூர் ஒன்றியம்.

    இந்தப் பகுதியில் உள்ள ஆண்களும், இளைஞர்களும் வேலை தேடி வெளி மாவட்டங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் செல்கின்றனர். பெரும்பாலும் 70 சதவீதம் ஆண்கள் வெளியூரிலேயே வேலை செய்து வருகின்றனர்.

    வேலை தேடி திருப்பூர், கோவை, ஈரோடு, உள்ளிட்ட வெளி மாவட்டங்களுக்கும், கர்நாடகா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கும் வேலைக்கு செல்கின்றனர்.

    இந்நிலையில் தங்கள் குடும்பத்திற்கு வங்கிகள் மூலம் செலுத்தப்படும் பணத்தை, குடும்பத்தில் உள்ளவர்கள் சென்று பெற, போதிய வங்கி வசதிகள் ஏரியூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இல்லை.

    இந்தியன் வங்கி மற்றும் கனரா வங்கி என்ற இரண்டு வங்கி சேவைகள் மட்டுமே உள்ளது. கூடுதலாக பொதுத்துறை வங்கிகளோ, தனியார் வங்கிகளோ இல்லை.

    மேலும் தனியார் ஏடிஎம் உள்ளடக்கி, 5 ஏ.டி.எம். மட்டுமே இந்த பகுதியில் உள்ளது. இந்த ஏ.டி.எம்.களிலும் பெரும்பாலும் பணம் இருப்பதில்லை. அல்லது ஏ.டி.எம்.கள் பழுதாகி விடுகிறது.

    தற்போது 100 நாள் வேலை திட்டம், மகளிர் சங்கங்கள் மற்றும் முதியோர் உதவித்தொகை போன்றவைகளை பெற பெண்களும், முதியோர்களும் வங்கிக்கு சென்று நீண்ட நேரம் காத்திருந்து பணத்தை பெற முடியாமல் திரும்பிச் செல்கின்றனர்.

    தங்களுடைய சேமிப்பு பணத்தை எடுக்க இரண்டு, மூன்று நாட்கள் வங்கிக்கு அலைய வேண்டிய அவல நிலை பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ளது

    மேலும் பள்ளி, கல்லூரி, மாணவ, மாணவிகளும் அரசு உதவித்தொகை பெற தற்போது வங்கி கணக்கு துவங்க அரசு அறிவுறுத்தியுள்ளது. இதன் காரணமாக பள்ளி, கல்லூரி, மாணவ, மாணவிகளும் பள்ளி, கல்லூரிக்கு செல்லாமல் வங்கியில், கணக்கு தொடங்க நாள் கணக்கில் காத்துக் கிடக்கின்றனர்.

    அதிகப்படியான வங்கிகள் இல்லாததால் ஓரிரு வங்கியிலேயே பொதுமக்கள் நாடுவதால் வங்கி பணியாளர்களால் உரிய சேவையை செய்ய இயலுவதில்லை. இதன் காரணமாக தினசரி பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியாமல் தடுமாறி வருகின்றனர்.

    மேலும் ஏரியூர் சுற்றுவட்டார பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட வர்த்தக நிறுவனங்கள் மற்றும் கடைகள் செயல்பட்டு வருகிறது. இவர்களின் பண பரிவர்த்தனைக்கும் மிகுந்த சிரமப்படுகின்றனர்.

    நகை கடன் பெறவும் சுமார் நான்கு மணி நேரம் வரை காத்திருந்தே, நகை கடன் பெற்று செல்லும் பொதுமக்கள், மிகவும் சிரமப்படுகின்றனர்.

    இந்நிலை மாற, இந்த பகுதி மக்களின் வங்கி தேவையை பூர்த்தி செய்ய, கூடுதலாக ஏரியூர் பகுதியில் வங்கிகள் அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×