search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஓசூர் சானமாவு வனப்பகுதி சாலையோரங்களில் உணவுக்காக காத்திருக்கும் குரங்குகள்
    X

    ஓசூர் சானமாவு வனப்பகுதி சாலையோரங்களில் உணவுக்காக காத்திருக்கும் குரங்குகள்

    • வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி வனப்பகுதியை ஓட்டியுள்ள கிராமப் பகுதிகளுக்கு வந்து செல்கின்றன.
    • உணவுப் பழக்கத்துக்கு மாறுபட்ட உணவுகளைச் சாப்பிடும் குரங்குகளின் உடல் நலமும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், தேன்கனிக்கோட்டை, சானமாவு, தளி உள்ளிட்ட பகுதிகள் வனத்தை ஒட்டியுள்ளன.

    இந்த வனப்பகுதிகளில் மான், குரங்கு, முயல், காட்டெருமை, யானை உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன.

    கோடைக் காலங்களில் வனப்பகுதியில் வன விலங்குகளுக்கு தேவையான உணவு, தண்ணீர் கிடைக்காததால், யானை உள்ளிட்ட வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி வனப்பகுதியை ஓட்டியுள்ள கிராமப் பகுதிகளுக்கு அவ்வப்போது வந்து செல்கின்றன.

    இவ்வாறு வரும் விலங்குகள் மின்வேலிகளில் சிக்கியும், வனப்பகுதியில் உள்ள விஷக்காய்களை சா ப்பிட்டும் உயிரிழக்கின்றன.

    இந்நிலையில், ஓசூர்- ராயக்கோட்டை சாலையில் உள்ள சானமாவு வனப்பகுதியில் வனவிலங்குகளுக்கு போதிய உணவு மற்றும் தண்ணீர் இல்லாததால், அப்பகுதியில் உள்ள குரங்குகள் கூட்டமாக வனத்தை விட்டு வெளியேறி, சாலைகளில் சுற்றி வருகின்றன.

    மேலும், சாலைகளில் செல்வோர் மற்றும் வாகனங்களில் செல்வோர் குரங்கை வேடிக்கை பார்ப்பதோடு, தாங்கள் கொண்டு வரும் உணவுப் பொருட்களைக் குரங்குகளின் பசியைப் போக்க வழங்கி வருகின்றனர்.

    இந்த உணவுகளை எடுக்கக் குரங்குகள் போட்டிப் போட்டு சாலையைக் கடக்கும்போது, அவ்வழியாக அதிவேகமாக வரும் வாகனங்களில் அடிபட்டு உயிரிழக்கும் நிகழ்வுகள் அடிக்கடி நடந்து வருகின்றன.

    இதுதொடர்பாக வன ஆர்வலர்கள் கூறிய தாவது:-

    குரங்கு உள்ளிட்ட வன விலங்குகளின் இருப்பிடத்துக்கு ஏற்கெனவே நாம் ஆபத்தை உருவாக்கி விட்டோம். தற்போது, சாலைகளில் சுற்றும் குரங்குகளுக்கு உணவுகளை வழங்கி அவற்றுக்கு ஆபத்தை உருவாக்கி வருகிறோம்.

    சானமாவு வனப்பகுதி சாலையோரங்களில் வீசப்படும் உணவுகளை எடுக்க சாலையை கடக்கும் குரங்குகள் வாகனங்களில் மோதி உயிரிழப்பது அதிகரித்துள்ளது.

    மேலும், தனது உணவுப் பழக்கத்துக்கு மாறுபட்ட உணவுகளைச் சாப்பிடும் குரங்குகளின் உடல் நலமும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.

    எனவே, இதைத் தடுக்க சாலையோரங்களில் குரங்குகள் உள்ளிட்ட விலங்குகளுக்கு உணவுகளை வீசிச் செல்ல வேண்டாம் என வனத்துறை மூலம் எச்சரிக்கை செய்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    Next Story
    ×