என் மலர்
கிருஷ்ணகிரி
- ஜி.எஸ்.டி.யில் உள்ள பல குழப்பங்கள் பற்றி வியாபாரிகள், சிறு, குறு தொழில் சங்கத்தினர் தெரிவித்து வருகின்றனர்.
- பல மாநில முதலமைச்சர்கள் களத்தில் போராட வேண்டிய சூழலுக்கு ஒன்றிய அரசு தள்ளியுள்ளது.
ஓசூர்:
பாராளுமன்ற தேர்தலையொட்டி, தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்காக தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமையில் 11 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரைப்படி தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு, கடந்த 5-ந் தேதி முதல், தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூருக்கு தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமையிலான தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவை சேர்ந்த கோவி. செழியன், அப்துல்லா எம்.பி மற்றும் சென்னை மேயர் பிரியா ஆகியோர் நேற்று வந்தனர்.
ஓசூரில், தளி சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இந்த குழுவினர், தேர்தல் அறிக்கையில் இடம் பெற வேண்டிய பொதுமக்களின் கோரிக்கைகளை பெற்றனர். இதில் கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு மனுக்களை அளித்தனர்.
இதைத்தொடர்ந்து, கனிமொழி எம்.பி. நேற்று நிருபர்களுக்கு பேட்டி யளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
தமிழகம் முழுவதும் 2 கருத்துகளை ஒரே மாதிரியாக பார்க்க முடிகிறது. ஜி.எஸ்.டி.யில் உள்ள பல குழப்பங்கள் பற்றி வியாபாரிகள், சிறு, குறு தொழில் சங்கத்தினர் தெரிவித்து வருகின்றனர்.
குறிப்பாக ஜி.எஸ்.டி.யால் சிறு, குறு, தொழிற் சாலைகள் பாதிக்கப்பட்டு உள்ளன என்பதை தெரிவித்து உள்ளனர்.
மாநிலங்களுக்கு நிதி பகிர்வு வழங்குவதில் பிரதமர் மோடி, குஜராத் மாநில முதலமைச்சராக இருந்தபோது கூறிய கருத்துக்களுக்கு முற்றிலும் எதிராக, தற்போது பிரதமராக உள்ள நிலையில் அவர் தனது நிலைப்பாட்டை எடுத்துள்ளார். பா.ஜ.க. ஆட்சி செய்யாத மாநில முதல்வர்கள் இந்த விவகாரத்தில் போராட்டங்களை கையில் எடுத்து வருகிறார்கள்.
பா.ஜ.க. ஆட்சி செய்யாத மாநிலங்கள் மிகப்பெரிய அளவில் நிதி ஒதுக்கீடு இல்லாததால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை எதிர்த்து தமிழக முதலமைச்சர் மட்டுமின்றி பல மாநில முதலமைச்சர்கள் களத்தில் போராட வேண்டிய சூழலுக்கு ஒன்றிய அரசு தள்ளியுள்ளது.
பாராளுமன்ற தேர்தலில், தி.மு.க. கூட்டணி தமிழகத்தில் 39 இடங்களையும், புதுச்சேரியில் ஒரு இடத்தையும் என 40 இடங்களிலும் வெற்றி பெறும்.
இவ்வாறு அவர் நிருபர்களிடம் கூறினார்.
- கே.ஆர்.பி., அணை கட்டி முடிக்கப்பட்டு, 1957-ம் ஆண்டு அணை திறக்கப்பட்டது.
- அணை நீர்மட்டம் கடந்தாண்டு ஜூன் மாதம் முதல் நேற்று வரை, 248 நாட்களாக தொடர்ந்து, 50 அடிக்கு மேல் அணையில் தண்ணீர் இருப்பு இருந்தது.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி அடுத்த பெரியமுத்துார் அருகே, பெண்ணை ஆற்றின் குறுக்கில், கே.ஆர்.பி., அணை கட்டி முடிக்கப்பட்டு, 1957-ம் ஆண்டு அணை திறக்கப்பட்டது. இதன் மூலம் நேரடியாக, 9,012 ஏக்கர் விவசாய நிலங்களும், மறைமுகமாக, 40,000 ஏக்கர் நிலங்களும் பாசன வசதி பெற்று வருகின்றன. அணை கட்டி முடித்து, 66 ஆண்டுகளில் கடந்த, 2017ல் அணையின் பிரதான ஒரு ஷட்டர் உடைந்ததால் முதல்முறையாக இந்த அணை அந்த ஆண்டில் நிரம்பவில்லை. புதிய ஷட்டர் மாற்றும் பணியால் அடுத்த 3 ஆண்டுகளும் அணை நிரம்பியது குறிப்பிடத்தக்கது.
ஆனால், 63 ஆண்டுகளும், இந்த அணை நிரம்பி, எப்போதும் ஆற்றில் தண்ணீர் ஓடுவதால், இந்த அணையை, இம்மாவட்ட மக்கள் வரப்பிரசாதமாக கருதுகின்றனர்.
இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த ஆண்டின் இறுதியில், 4 மாதங்கள் பரவலாக மழை பெய்ததால், கே.ஆர்.பி., அணைக்கு தொடர்ந்து நீர்வந்து கொண்டிருக்கிறது.
அணை நீர்மட்டம் கடந்தாண்டு ஜூன் மாதம் முதல் நேற்று வரை, 248 நாட்களாக தொடர்ந்து, 50 அடிக்கு மேல் அணையில் தண்ணீர் இருப்பு இருந்தது.
கடந்த, 2 மாதங்களாக மழை இல்லாததால், 248 நாட்களுக்கு பிறகு நேற்று, அணை நீர்மட்டம் மொத்த உயரமான, 52 அடியில், 49.95 அடியாக குறைந்தது. அணைக்கு, 132 கன அடிநீர் வந்து கொண்டிருந்த நிலையில் அணையில் இருந்து வாய்காலில் 192 கன அடிநீர் திறக்கப்பட்டுள்ளது.
- இந்தியா இன்று பல்வேறு வகைகளில் உலகளவில் முன்னேறி வருகிறது.
- உண்மையான மக்கள் செல்வாக்கு உள்ள இயக்கம் எது?
ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் வருகிற 11-ந் தேதி , அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில், மாற்று கட்சியினர் அ.தி.மு.க வில் இணையும் விழா நடைபெறுகிறது.
இதில் கலந்து கொள்ள வரும் எடப்பாடி பழனிசாமிக்கு கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அதிமுக சார்பில், சிறப்பான வரவேற்பு அளிப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம், ஓசூரில் நேற்று நடைபெற்றது.
இதில், கட்சியின் துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி எம்.எல்.ஏ. கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கி சிறப்புரையாற்றினார். கூட்டத்தில், துணைப் பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி எம்எல்ஏ பேசியதாவது:-
இந்திய திருநாட்டின் பாராளுமன்ற தேர்தலை உலகமே எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. ஏனென்று சொன்னால் இந்தியா இன்று பல்வேறு வகைகளில் உலகளவில் முன்னேறி வருகிறது. இந்த சூழலில் இந்தியாவில் அடுத்த பிரதமர் யார் வரவுள்ளார் ? என உலக தலைவர்கள் எல்லோரும் எதிர்பார்த்து கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில், தமிழகத்தை பொறுத்த வரையில் யார் உண்மையான மக்கள் செல்வாக்கு உள்ள தலைவர், உண்மையான மக்கள் செல்வாக்கு உள்ள இயக்கம் எது ? என்பதை தெளிவுபடுத்துகிற தேர்தலாக, இந்த தேர்தல் உள்ளது.
சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு, நாம் எதிர்நோக்குகின்ற பாராளுமன்ற பொது தேர்தல், இந்த பொதுத் தேர்தலில் இந்திய அளவில் பல கட்சிகள் கூட்டணி அமைத்து இந்தியா கூட்டணி என்ற பெயரில் ஒரு பக்கம் நிற்கிறது. அதுபோல தேசிய ஜனநாயக கூட்டணி என்ற பெயரில் ஒரு கூட்டணி ஒரு பக்கமும், இந்த இரண்டு கூட்டணிகளையும் தவிர்த்து தமிழகத்தின் நலனில் அக்கறை உள்ள தலைவர்களை பிரதமராக தேர்ந்தெடுக்கக்கூடிய வாய்ப்பினை தாருங்கள், என்று பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலை மையில் நாம் ஒரு மெகா கூட்டணி அமைத்து மக்களை சந்திக்க உள்ளோம், இவ்வாறு அவர் கூட்டத்தில் பேசினார்.
- திருவிழாவில் நாட்டு மாடுகள், ஜல்லிக்கட்டு காளை வகை மாடுகள் அழைத்து வரப்பட்டு, விற்பனை செய்யப்படுகிறது.
- மாட்டு விற்பனையில் பல கோடி ரூபாய் வர்த்தகமும் நடைபெற உள்ளது.
ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் கெலவரப்பள்ளி அணையருகே உள்ள திம்மசந்திரம் கிராமத்தில் ஸ்ரீ சப்பளம்மாதேவி என்ற அம்மன் கோவில் உள்ளது. இங்கு, ஆண்டுதோறும் நடை பெறும் மாட்டுத் திருவிழா பிரபலமானது ஆகும்.
200 ஆண்டுகளுக்கு மேலாக ஆண்டுதோறும் தை மாத இறுதி வாரத்தில் தொடங்கும் இத்திருவிழாவில் நாட்டு மாடுகள், ஜல்லிக்காட்டு காளை வகை மாடுகள் அழைத்து வரப்பட்டு, விற்பனை செய்யப்படுகிறது.
விழாவில் மாடுகளை வாங்கவும், விற்கவும் தமிழகம் மட்டுமல்லாது, ஆந்திர, கேரளா, மகாராஷ்டிரா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களிலிருந்து ஏராளமானோர் பங்கேற்கின்றனர்.
இங்கு ஒரு ஜோடி மாடுகள் ஒரு லட்சம் ரூபாய் முதல் 5 லட்சம் ரூபாய் வரை விற்பனை செய்யபடுவதால் இந்த மாட்டுத் திருவிழாவை பலரும் எதிர்நோக்கி உள்ளனர். நேற்று நடைபெற்ற இந்த விழாவில் விவசாயிகள் ஆர்வமுடன் மாடுகளை வாங்கி சென்றனர். இந்த விழா 6 நாட்கள் வருகிற 11 - ந் தேதி வரை தொடர்ந்து நடைபெற உள்ளது. தினமும் விஷேச பூஜைகளுடன் திருவிழா நடைப்பெற்றும், மாட்டு விற்பனையில் பல கோடி ரூபாய் வர்த்தகமும் நடைபெற உள்ளது.
விழாவில், சப்பளம்மா கோவில் அறக்கட்டளை தலைவர் கஜேந்திரமூர்த்தி, துணை தலைவர் தியாகராஜன், கிருஷ்ணப்பா, முனிராஜ், மகேஷ், கெம்பண்ணா, நடராஜ் உள்ளிட்ட நிர்வாகிகளும், சுற்று வட்டார கிராம முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.
- நிர்வாக நலன் கருதி பணியிட மாற்றம் பணி நியமனம் அளித்து மாவட்ட கலெக்டர் சரயு ஆணையிட்டுள்ளார்.
- பாப்பி பிரான்சினா, பர்கூர் வட்டார வளர்ச்சி அலுவலராகவும் (வ.ஊ) பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 19 வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
நாடாளுமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு கிருஷ்ணகிரி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நிலையில் உள்ள அலுவலர்கள், நிர்வாக நலன் கருதி பணியிட மாற்றம் பணி நியமனம் அளித்து மாவட்ட கலெக்டர் சரயு ஆணையிட்டுள்ளார்.
அதன்படி, தளி வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ) பாலாஜி, கிருஷ்ணகிரி வட்டார வளர்ச்சி அலுவலராகவும் (கி.ஊ), பர்கூர் வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) செந்தில், காவேரிப்பட்டணம் வட்டார வளர்ச்சி அலுவலராகவும் (கி.ஊ), வேப்பனப்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ) சதீஷ்பாபு, காவேரிப்பட்டணம் வட்டார வளர்ச்சி அலுவலராகவும் (வ.ஊ), கிருஷ்ணகிரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை வட்டார வளர்ச்சி அலுவலர், கண்காணிப்பாளர் சிவக்குமார், பர்கூர் வட்டார வளர்ச்சி அலுவலராகவும் (கி.ஊ) சூளகிரி வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ) பாப்பி பிரான்சினா, பர்கூர் வட்டார வளர்ச்சி அலுவலராகவும் (வ.ஊ) பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதே போல், கிருஷ்ணகிரி வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) முருகன், மத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலராகவும் (கி.ஊ), கிருஷ்ணகிரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கட்ராம கணேஷ், மத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலராகவும் (வ.ஊ), மத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) துரைசாமி, ஊத்தங்கரை வட்டார வளர்ச்சி அலுவராகவும் (கி.ஊ), காவேரிப்பட்டணம் வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ) உமாசங்கர், ஊத்தங்கரை வட்டார வளர்ச்சி அலுவலராகவும் (கி.ஊ), ஊத்தங்கரை வட்டார வளர்ச்சி அலுவலர் தவமணி (கி.ஊ), வேப்பனப்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலராகவும் (கி.ஊ) பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், வேப்பனப்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) வேடியப்பன், வேப்பனப்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலராகவும் (வ.ஊ), கிருஷ்ணகிரி உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) வட்டார வளர்ச்சி அலுவலர், கண்காணிப்பாளர் ராமச்சந்திரன், சூளகிரி வட்டார வளர்ச்சி அலுவலராகவும் (கி.ஊ), பர்கூர் வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ) சையத் பயாஸ் அகமது, சூளகிரி வட்டார வளர்ச்சி அலுவலராகவும் (வ.ஊ), காவேரிப்பட்டணம் வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) சுப்பிரமணி, ஓசூர் வட்டார வளர்ச்சி அலுவலராகவும் (கி.ஊ), ஓசூர் வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) ஹேமலதா, கிருஷ்ணகிரி வளர்ச்சிப் பிரிவு, வட்டார வளர்ச்சி அலுவலர், அலுவலக மேலாளராகவும் (வளர்ச்சி), கிருஷ்ணகிரி வளர்ச்சிப் பிரிவு, வட்டார வளர்ச்சி அலுவலர், அலுவலக மேலாளராக (வளர்ச்சி) இருந்த முகமது சிராஜிதீன், தளி வட்டார வளர்ச்சி அலுவலராக (வ.ஊ), சூளகிரி வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) விமல் ரவிக்குமார், கிருஷ்ணகிரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, வட்டார வளர்ச்சி அலுவலர், கண்காணிப்பாளராகவும், ஊத்தங்கரை வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ) சிவப்பிரகாசம், கிருஷ்ணகிரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை வட்டார வளர்ச்சி அலுவலராகவும், மத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ) மகேஸ்வரன், கிருஷ்ணகிரி உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) அலுவல வட்டார வளர்ச்சி அலுவலர், கண்காணிப்பாளராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் சரயு பிறப்பித்துள்ளார்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் புதிய பஸ் நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. பல்லாவரம் தி.மு.க. எம்.எல்.ஏ. கருணாநிதியின் மகன், மருமகள் ஆகியோர் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பட்டியல் இனத்தைச் சேர்ந்த மாணவி மீது வன்கொடுமை செய்து கொடூர தாக்குதல் நடத்தியதை கண்டித்தும், தி.மு.க. அரசை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதற்கு கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் கே. அசோக்குமார் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். நகர அ.தி.மு.க. செயலாளர் கேசவன் வரவேற்றார். ஊத்தங்கரை தமிழ்செல்வம் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தை கட்சியின் துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்து பேசியதாவது:-

கடந்த 3 ஆண்டுகளில் தி.மு.க. ஆட்சி செயல் இழந்த அரசாக உள்ளது. சட்டம்-ஒழுங்கு முடங்கி சீர் கெட்டுள்ளது. தி.மு.க. எம்.எல்.ஏ.வின் மகன், மருமகள் ஆகியோர் மாணவியை வேலைக்கு அமர்த்தி வன்கொடுமை செய்துள்ளனர். போலீசார் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யவில்லை. அ.தி.மு.க. பொதுச் செயலாளரின் கண்டனத்திற்கு பிறகே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரிலும் தொடர்ந்து கொலைகள் நடந்து வருகிறது. சட்டம்-ஒழுங்கு சீர்கேட்டிற்கு ஆட்சியாளர்களும், கடமை தவறிய அதிகாரிகளும் காரணம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட அவைத் தலைவர் காத்தவராயன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மனோரஞ்சிதம் நாகராஜ், முனிவெங்கடப்பன், பொதுக்குழு உறுப்பினர் கே.பி.எம்.சதீஷ்குமார், ஒன்றிய குழு தலைவர் அம்சாராஜன், எம்.ஜி.ஆர். மன்ற மாவட்ட செயலாளர் தென்னரசு, முன்னாள் நகராட்சி தலைவர் கே.ஆர்.சி.தங்கமுத்து, ஒன்றிய செயலாளர்கள் சோக்காடி ராஜன், கன்னியப்பன், சைலேஷ் கிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து எம்.ஜி.ஆரை அவதூறாக பேசியதாக தி.மு.க. எம்.பி. ஆ.ராசாவின் உருவ பொம்மையை அ.தி.மு.க.வினர் எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அ.தி.மு.க., துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் மத்திய, மாநில அரசுகள், தங்களுக்குள் யார் பெரியவர்கள் என மல்லுக்கட்டி நிற்கின்றனர். இதனால் தமிழக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அ.தி.மு.க., ஆட்சியில் மத்திய அரசுடன் இணக்கமாக செயல்பட்டு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தோம். மாநில அரசு நிதியில் அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தை கொண்டு வந்தோம். அதை கூட தி.மு.க., அரசால் செயல்படுத்த முடியவில்லை.
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தனது தந்தை கருணாநிதி பெயரை, சிலைகளை எங்கெல்லாம் வைக்கமுடியுமோ அதை செய்கிறார். மாடு பிடி அரங்கில், ஏறுதழுவும் சிலையில் கூட தனது முகம் போல வைத்துள்ளார். கோயம்பேடு பஸ் நிலையத்தை மாற்ற பார்க்கிறார். அரசியலில் தங்களை எதிர்த்தவர்கள் பெயர் எங்கும் இருக்க கூடாது என நினைக்கிறார். தமிழ்நாடு என்பதை கருணாநிதி நாடு என மாற்ற முயற்சிக்கிறார். வருகிற 2026 சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., வெற்றி பெற்று வரும்போது, கருணாநிதி என்ற பெயரே இல்லாமல் செய்து விடுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கடைகளை பூட்டி சீல் வைக்கும் பணியை மாநகராட்சி நிர்வாகம் தீவிரமாக மேற்கொண்டுள்ளது.
- 1,219 வணிக நிறுவனங்களுக்கு தொழில் உரிமம் பெறப்பட்டுள்ளது.
ஓசூர்:
ஓசூர் மாநகராட்சி பகுதிகளில் தொழில் உரிமம் பெறாத கடைகளை பூட்டி சீல் வைக்கும் பணியை மாநகராட்சி நிர்வாகம் தீவிரமாக மேற்கொண்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக, ஆணையாளர் சினேகா உத்தரவின்பேரில், மாநகர நல அலுவலர் பிரபாகரன் தலைமையில் துப்பரவு ஆய்வாளர்கள் கிரி, ரமேஷ், துப்பரவு மேற்பார்வையாளர் கவுரிசங்கர் மற்றும் பணியாளர்கள், ஓசூர் பாகலூர் சாலையில் உள்ள 2 பிரியாணி கடைகள் மற்றும் ஒரு பேக்கரி என தொழில் உரிமம் பெறாமல் நடத்தி வந்த 3 கடைகளை பூட்டி சீல் வைத்தனர்.
பின்னர், அந்த கடை உரிமையாளர்கள் தொழில் உரிமத்துக்கு ஆன்லைனில் உடனடியாக விண்ணப்பித்ததை தொடர்ந்து, மாலையில் அந்த கடைகளில் சீல் அகற்றப்பட்டது.
இதுவரை மாநகராட்சி மூலம் 6,963 வணிக நிறுவனங்களுக்கு நோட்டீஸ் வழங்கியதில், இதுவரை 1,896 வணிக நிறுவனங்கள் மட்டுமே தொழில் உரிமம் பெற விண்ணப்பித்து, 1,219 வணிக நிறுவனங்களுக்கு தொழில் உரிமம் பெறப்பட்டுள்ளது.
328 வணிக நிறுவனங்கள் மாநகராட்சியிடம் விண்ணப்பித்தும், கேட்புத் தொகையினை இதுவரை ஆன்லைன் மூலம் செலுத்தவில்லை.
எனவே மாநகராட்சி தொழில் உரிமம் பெற கடைக்காரர்கள், தொழில் நிறுவனங்கள் உடனடியாக, இணைய தள முகவரியில் ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்து தொழில் உரிமம் பெற வேண்டும் என்றும் தவறும் பட்சத்தில், தொழில் உரிமம் பெறாத கடைகள், தொழில் நிறுவனங்கள் பூட்டி சீல் வைக்கப்படும் என்றும் மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
- 25 நீர்நிலைகளில் பறவைகள் கணக்கெடுப்பு பணி நடைபெற்றது.
- மஞ்சள் மூக்கு நாரை உட்பட 200-க்கும் மேற்பட்ட பறவை இனங்களை அடையாளம் கண்டு, பதிவு செய்யப்பட்டன.
ஓசூர்:
ஓசூர் வனக்கோட்டத்தில், மாவட்ட வன அலுவலர் கார்த்திகேயனி தலைமையில் பறவைகள் கணக்கெடுப்பு பணி 2 நாட்கள் நடைபெற்றது.
இதில், 200-க்கும் மேற்பட்ட பறவைகள் அடையாளம் காணப்பட்டு பதிவு செய்யப்பட்டன.
கிருஷ்ணகிரி மாவட்ட காப்புக்காடுகளுக்கு வெளியே உள்ள ஈர நிலங்களான ராமநாயக்கன் ஏரி, பாரூர் ஏரி, தளி ஏரி, கே.ஆர்.பி., அணை, கெலவரப்பள்ளி அணை, பனை ஏரி உட்பட மொத்தம் 25 நீர்நிலைகளில் பறவைகள் கணக்கெடுப்பு பணி நடைபெற்றது.
இதில் 50-க்கும் மேற்பட்ட வன அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் ஈடுபட்டனர். மேலும், தொலைநோக்கு கருவிகள், கேமரா உள்ளிட்ட கருவிகளை பயன்படுத்தி, பாம்புண்ணி கழுகு, சிறிய கரும் பருந்து, சிறிய காட்டு ஆந்தை, செந்நாரை, மீன்கொத்திகள், சுடலை குயில் மற்றும் மஞ்சள் மூக்கு நாரை உட்பட 200-க்கும் மேற்பட்ட பறவை இனங்களை அடையாளம் கண்டு, பதிவு செய்யப்பட்டன.

குறிப்பாக ஓசூர் டி.வி.எஸ்., தொழிற்சாலை வளாகத்தில் உள்ள நீர்நிலையில் மஞ்சள் மூக்கு நாரை பறவை கண்டறியப்பட்டது. இந்த பறவைகள், ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் முதல் ஜூன் மாதம் வரை இந்த நீர்நிலையில் தங்கி பிப்ரவரி மாதத்தில் முட்டையிட்டு குஞ்சுகள் பொறித்து பராமரித்து அங்கிருந்து செல்வது வழக்கம்.
டி.வி.எஸ்., வளாகத்திலுள்ள ஏரியில், மரங்கள் மற்றும் புதர் செடிகள் அதிகளவில் காணப்படுவதாலும், சீதோஷ்ண நிலை இப்பறவைகள் வாழ்வதற்கு ஏற்ற சூழ்நிலையில் இருப்பதாலும், கடந்த 20 ஆண்டுக்கும் மேலாக இந்த பறவைகள் இங்கு வந்து செல்கின்றன. பறவைகள் கணக்கெடுப்பில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
- அனைத்து காளைகளுக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்ட பின்பு அனுமதிக்கப்பட்டது.
- பல்வேறு காளைகள் பந்தய இலக்கை நோக்கி சீறிப் பாய்ந்தது.
மத்தூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம். வேலம்பட்டியில் எருது விடும் விழா நடைப்பெற்றது.
திருப்பத்தூர், வாணியம்பாடி, கந்திலி, பர்கூர், கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும், ஆந்திரா மாநிலத்தில் இருந்தும் 350-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.
பார்வையாளர்களின் பாதுகாப்புக்காக இருபுறமும் தடுப்புகள் அமைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அனைத்து காளைகளுக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்ட பின்பு அனுமதிக்கப்பட்டது. விழா தொடங்கியதும், காளைகள் ஒன்றன் பின் ஒன்றாக விடப்பட்டது.
இதில் வீரர்கள் காளைகளை விரட்டி பிடிக்க முயறன்றனர். நிர்ணயிக்கப்பட்ட தூரத்தை கடந்த காளைக்கு பரிசு வழங்கப்பட்டன. பல்வேறு காளைகள் பந்தய இலக்கை நோக்கி சீறிப் பாய்ந்தது. விழாவில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் எருதாட்ட விழாவை காண குவிந்தனர்.
விழாவிற்கு நாகரசம்பட்டி பேரூராட்சி தலைவர் தலைமையில் ஊர் கவுண்டர்கள் முன்னிலையில் வெற்றி பெற்ற காளையின் சொந்த காரர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. பர்கூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மனோகரன் தலைமையில் போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
- மாநகராட்சி மூலம் பொருட்கள் பறிமுதல் செய்யப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
- 6 கடைகள் மாநகராட்சி மூலம் பூட்டி சீல் வைக்கப்பட்டது.
ஓசூர்:
ஓசூர் மாநகர ஆணையாளர் சினேகா உத்தரவின் பேரில், மாநகர நல அலுவலர் பிரபாகரன், உதவி ஆணையாளர் டிட்டோ ஆகியோர் தலைமையில், நகரமைப்பு ஆய்வாளர், துப்புரவு ஆய்வாளர், வருவாய் ஆய்வாளர், துப்புரவு மேற்பார்வையாளர் மற்றும் பணியாளர்கள் கொண்ட குழுவினர் ஓசூர் பஸ் நிலையத்தில் பொதுமக்கள் மற்றும் பஸ் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட சுமார் 20 நடைபாதை கடைகளை அப்புறப்படுத்தினர்.
மேலும் மாநகராட்சி கடைகளில் கடை நடத்தும் 42 கடைக்காரர்கள் அனுமதிக்கப்பட்ட அளவைவிட கூடுதலாக வெளிப்புறத்தில் கடைகள் வைத்திருந்தது கண்டறியப்பட்டு, அவர்களுக்கு அனுமதிக்கப்பட்ட எல்லை, பெயிண்ட் மூலம் வரையப்பட்டு குறிப்பிட்ட எல்லைக்குள் மட்டுமே கடைகள் நடத்தப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. குறிப்பிட்ட எல்லைக்கு வெளியே கடைகள் வைக்கப்பட்டால், அவை மாநகராட்சி மூலம் பொருட்கள் பறிமுதல் செய்யப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
மேலும் மாநகராட்சியிடம் தொழில் உரிமம் பெறாமல் ஓசூர் எம்.ஜி. ரோடில் இயங்கி வந்த 6 கடைகள் மாநகராட்சி மூலம் பூட்டி சீல் வைக்கப்பட்டது.
- உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
- சாலை இருபுறமும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த சம்பவம் இப்பகுதியில் பெரும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள மகராஜாகடை கிராமத்தை சாம்பசிவம் (வயது 55). விவசாயியான இவர் கிராமத்தில் வனப்பகுதியை ஒட்டியுள்ள விவசாய நிலத்தில் கொள்ளு பயிரை அறுவடை செய்வதற்கு இன்று அதிகாலை 4மணி சென்றுள்ளார். அப்போது அப்பகுதியில் இருந்து ஒற்றை காட்டு யானை திடீரென்று வந்து சாம்பசிவத்தை தாக்கி கொன்றுள்ளது. பின்னர் காலையில் தோட்டத்திற்கு சென்ற குடும்பத்தினர் அங்கு சாமபசிவத்தின் உடல் சிதைந்து உயிரிழந்து கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து பொதுமக்கள் மகாராஜா கடை போலீசாருக்கும் மற்றும் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது யானை தாக்கி உயிரிழந்த சாம்பசிவத்தின் உடலை உறவினர்கள் மீட்டு சாலையில் வைத்து பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். உடனடியாக ஒற்றை யானையை கர்நாடகா வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
இதைத்தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் கிருஷ்ணகிரி கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சங்கு மற்றும் கிருஷ்ணகிரி உட்கோட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவலிங்கம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்கள் மற்றும் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
இதனால் சாலை இருபுறமும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
- கடந்த 2 நாட்களுக்கு முன்பு பிள்ளையார் கோவில் தெருவில் இருசக்கர வாகனத்தை 2 வாலிபர்கள் சேர்ந்து திருடி சென்றனர்.
- சம்பவம் குறித்து காவேரிப்பட்டணம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காவேரிப்பட்டணம்:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்களில் ஒன்றாக காவேரிப்பட்டணம் நகரம் திகழ்ந்து வருகிறது. இந்நகரை சுற்றி ஏராளமான கிராமங்கள் உள்ளன.
இந்நகரில் ஏராளமான அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், மருத்துவமனைகள், வங்கிகள், பள்ளிகள், வணிக நிறுவனங்கள், தொழிற் சாலைகள் என ஏராளமானவை உள்ளன. அவற்றிற்கு தினமும் பல தரப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களும் வந்து செல்கின்றனர்.
காவேரிப்பட்டணம் நகரின் முக்கிய பகுதிகளில் பொதுமக்களின் பாதுகாப்பிற்கும் மற்றும் குற்ற செயல்களை தடுத்திடவும் சி.சி.டிவி. கேமரா அமைத்து, அவற்றின் மூலம் போலீசார் கண்காணித்து உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமென பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பிள்ளையார் கோவில் தெருவில் இருசக்கர வாகனத்தை 2 வாலிபர்கள் சேர்ந்து திருடி சென்றனர். அவர்கள் வாகனத்தை கொண்டு செல்வதை அங்கு ஒரு வீட்டில் வைக்கப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவானது. அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரவி வருகிறது. இந்த சம்பவம் குறித்து காவேரிப்பட்டணம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது பற்றி பொதுமக்கள் கூறியதாவது:
காவேரிப்பட்டணம் நகரின் எந்த பகுதியிலும் போலீசார் சி.சி.டிவி கேமராக்கள் அமைக்கவில்லை. இதனால் பொதுமக்களுக்கு பாதுகாப்பற்ற நிலையும், அடிக்கடி இருசக்கர வாகனங்கள் திருடும் போகிறது. மேலும் குற்றங்கள் நடைபெற்றால் அவற்றை கண்டறியவும் முடியாத அவலநிலை உள்ளது.
காவேரிப்பட்டணம் நகரின் அனைத்து பகுதிகளிலும் முறையாக சி.சி.டிவி கேமரா பொருத்தி அவற்றின் மூலம் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டால் நகரில் உள்ள பொதுமக்களின் பாதுகாப்பினையும், குற்ற செயல் தடுப்பு நடவடிக்கையும் மேம்படுத்திட முடியும்.
மேலும் ஒன்றை மாதத்திற்குள் காவேரிப்பட்டணம் அங்காளம்மன் திருவிழா நடக்க உள்ளது. இதற்கு சுமார் 1½ லட்சம் பக்தர்கள் இந்த திருவிழாவுக்கு வருவார்கள். அதற்குள் காவேரிப்பட்டணம் பகுதியில் கண்காணிப்பு கேமரா அமைத்து அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க போலீசார் கண்காணிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






