என் மலர்tooltip icon

    கன்னியாகுமரி

    • காங்கிரஸ் கமிட்டியின் புதிய அலுவலக கட்டிடம் தமிழ்நாடு மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை திறந்து வைத்துள்ளார்.
    • பொதுமக்களும் அரசுக்கு ஒத்துழைப்பு கொடுத்து ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியது அவசியம்.

    கன்னியாகுமரி மாவட்ட காங்கிரஸ் பேரியக்கத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில் இன்று குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் புதிய அலுவலக கட்டிடம் தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை திறந்து வைத்துள்ளார்.

    இதேபோல், மாத்தூர் தொட்டிப்பாலத்தில் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் நினைவு கல்வெட்டு சேதம் அடைந்ததை தொடர்ந்து மீண்டும் அதே இடத்தில் புதிதாக கல்வெட்டு நிறுவப்பட்டுள்ளது.

    இகுதுறித்து கன்னியாகுமரி தொகுதி எம்பி விஜய் வசந்த் தனது சமூக வலைத்தள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

    அதில், "குறுகிய காலத்தில் இந்த கல் வெட்டினை மீண்டும் அமைத்தற்காக தமிழ்நாடு அரசுக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் எனது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.

    குமரியின் மேற்கு பகுதியின் உயர்வான ஊர்களுக்கு பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்கு சிற்றாறு அணையிலிருந்து நீர் கொண்டு செல்ல வேண்டும் என்ற பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் தொலைநோக்கு பார்வையில் கணியான் பாறை என்ற மலையும், கூட்டுவாவுப்பாறை என்ற மலையையும் இணைத்து இரண்டு மலைகளுக்கும் நடுவில் கட்டப்பட்டுள்ள அதிசயம் தான் மாத்தூர் தொட்டிப்பாலம்.

    கர்ம வீரரின் கனவு திட்டத்தை நினைவு கூரும் வகையில் இந்த கல்வெட்டு மீண்டும் அங்கு பதிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி. இத்தகைய வரலாற்று சிறப்புமிக்க நினைவுச் சின்னங்களை பாதுகாக்க அரசு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

    பொதுமக்களும் அரசுக்கு ஒத்துழைப்பு கொடுத்து ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியது அவசியம்" என்றார்.

    • சோதனையில் அரசு பஸ்சை ஓட்டி வந்த டிரைவர் ஒருவர் மதுபோதையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
    • டிரைவர் மீது குடிபோதை வழக்குப்பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    நாகர்கோவில்:

    விபத்தில்லா மாவட்டம் என்ற இலக்கை அடைய, குடிபோதை மற்றும் போக்குவரத்து விதி மீறல்களில் ஈடுபடும் கனரக வாகனங்கள், பேருந்துகள், ஆட்டோக்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களின் டிரைவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

    அவரது உத்தரவின்பேரில் நாகர்கோவில் உட்கோட்ட உதவி சூப்பிரண்டு லலித்குமார் மேற்பார்வையில், நாகர்கோவில் போக்குவரத்து போலீசார் ஆரல்வாய்மொழி நாக்கால்மடம் பகுதியில் வாகன சோதனை நடத்தினர்.

    வெளியூர்களுக்கு செல்லும் தனியார் மற்றும் அரசு பேருந்து டிரைவர்கள் மற்றும் துணை டிரைவர்களை மதுபோதையில் செல்கிறார்களா என பிரீத் அனலைசர் கருவி மூலம் போலீசார் பரிசோதனை செய்தனர். அப்போது சென்னை செல்லும் அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்து வந்தது. அந்த பஸ்சை போலீசார் சைகை காட்டி நிறுத்தினர். பின்னர் டிரைவர் மதுபோதையில் உள்ளாரா என கண்டுபிடிப்பதற்காக பிரீத் அனலைசர் கருவி மூலம் சோதனை செய்தனர்.

    இந்த சோதனையில் அரசு பஸ்சை ஓட்டி வந்த டிரைவர் ஒருவர் மதுபோதையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து டிரைவர் மீது குடிபோதை வழக்குப்பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    மேலும் அந்த வழியாக குடிபோதையில் டெம்போ ஓட்டி வந்த டிரைவர் ஒருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வாகன டிரைவர்களின் உரிமம் ரத்து செய்ய நாகர்கோவில் போக்குவரத்து போலீசாரால் பரிந்துரை செய்யப்பட உள்ளது.

    • 300 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி.
    • பெண்களுக்கான பாதுகாப்பு குறித்து பா.ஜ.க. பேசட்டும்.

    நாகர்கோவில்:

    சமூக நலத்துறை மற்றும் மகளிர் உரிமை துறை,ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் துறை சார்பில் 300 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நாகர்கோவில் டதி பள்ளியில் இன்று நடந்தது. அதில் கலந்து கொண்ட அமைச்சர் கீதாஜீவன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற 15 நாட்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த உத்தரவிட்டார்.

    பொதுவாக சிறுமிகள் மற்றும் பெண்கள் தங்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் தொடர்பாக வெளியே சொல்வதற்கு தயங்குகிறார்கள். பிரச்சனைக்கு பிறகே பெற்றோருக்கு தெரியவருகிறது. பெண்கள் மற்றும் சிறுமிகள் தங்களது பிரச்சனைகள் குறித்து உடனடியாக பெற்றோர், அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும்.

    விருதுநகர் மாவட்டத்தில் ஒரு லட்சம் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அதிக புகார் வருவது நல்லது. இதனால் அதிக குற்றவாளிகள் தண்டிக்கப்படுகிறார்கள். இதுவரை வெளிவராத தகவல்கள் கூட வெளிவரும்.

    பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு தெரிந்தவர்கள் மூலமாக தான் அதிக துன்புறுத்தல் வருகிறது. செல்போன் போன்ற பொருட்களை பாதுகாப்பாக கையாள வேண்டும்.

    அண்ணா அறிவாலயத்தின் செங்கல்களை உருவுவேன் என அண்ணாமலை வாய் சவடால் பேசுகிறார். பொதுவாக அவர் ஏதேனும் பேசிவிட்டு பின்னர் வாபஸ் வாங்குவார். அவர் சொன்னதை எதையும் சாதித்ததில்லை. இவர்போல பேசியவர்கள் அழிந்தது தான் சரித்திரம். தி.மு.க.வை யாராலும் அசைக்க முடியாது.

    மணிப்பூரில் 2 ஆண்டுகளுக்கு மேலாக பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டவருக்கு பாலியல் உள்ளிட்ட வெளியே சொல்ல முடியாத வகையில் துன்புறுத்தல் இழைக்கப்பட்ட நிலையில் பா.ஜ.க.வால் அதை கட்டுப்படுத்த முடியவில்லை.

    அதை சரி செய்த பின்பு தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு குறித்து பா.ஜ.க. பேசட்டும். நடிகர் விஜய் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்வது நல்லது. மக்களோடு மக்களாக பயணித்தால் தான் மக்கள் பிரச்சனைகளை அறிய முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    • இந்தியாவில் மருத்துவர்களின் எண்ணிக்கை மிக குறைவாக உள்ளது.
    • கிராமப்புற மருத்துவமனைகளில் காலி பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது.

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் விஜய் வசந்த் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:-

    மத்திய பட்ஜெட்டில் சுகாதாரத்தை மேம்படுத்த நிதி ஒதுக்கிய போதிலும் அது நமது தேசத்தின் சுகாதார மேம்பாட்டிற்கு போதுமானதாக இல்லை. நமது நாட்டின் வளர்ச்சி விகிதத்தின் 10 சதவிகிதம் சுகாதார மேம்பாட்டிற்கு ஒதுக்க வேண்டிய நிலையில் இன்று அரசு வெறும் 2 சதவிகிதம் மட்டுமே ஒதுக்கியுள்ளது. உட்கட்டமைப்பு வசதிகளுக்கும் போதிய நிதியினை அரசு ஒதுக்கவில்லை.

    இந்தியாவில் மருத்துவர்களின் எண்ணிக்கை மிக குறைவாக உள்ளது. 1000 நபர்களுக்கு ஒரு மருத்துவர் தேவை என்ற வழிகாட்டு தலை விட குறைவாக 1500 இந்தியர்களுக்கு ஒரு மருத்துவர் என்ற நிலை உள்ளது.

    குறிப்பாக கிராமங்களில் இந்த குறைபாடு மிக அதிக அளவில் காணப்படுகிறது. கிராமப்புறங்களில் உள்ள மருத்துவமனைகளில் காலி பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது.

    இந்தியாவின் 50 சதவிகித மருத்துவமனைகளில் குடி நீர், மின்சாரம், கழிப்பறை போன்ற அடிப்படை வசதி கள் இல்லாமல் உள்ளது. கோவிட் காலகட்டத்தில் நமது மருத்துவமனைகளில் உள்ள குறைபாடுகள் குறித்து நாம் கண்டறிந்தோம். அது போன்ற ஒரு இடரை எதிர்கொள்ள நமது நாட்டில் மருத்துவ வசதி களை மேம்படுத்தி நாம் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

    இந்தியர்களின் மருத்துவ செலவில் 62 சதவிகிதம் தங்கள் சொந்த காசில் செய்ய வேண்டிய கட்டா யத்தில் நமது மக்கள் உள்ள னர். ஆரோக்கியமான ஒரு சமூகத்தை உருவாக்க வேண்டியது அரசின் கடமை. இவை குறித்து மக்களவையில் விவாதிக்க வேண்டும் என கோரி ஒத்தி வைப்பு தீர்மானம் ஒன்றினை முன்மொழிந்து உள்ளேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • போக்குவரத்து துறையை தனியார் மயமாக்கும் நடவடிக்கையை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும்.
    • பிரிமியம் பஸ்கள், மினி பஸ்கள் போன்றவற்றை தமிழ்நாடு அரசே இயக்க வேண்டும்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் ராணி தோட்டம் அரசு போக்குவரத்து கழக பணிமனை அருகே சி.ஐ.டி.யூ. போக்கு வரத்து தொழிலாளர் சங்கத்துக்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா இன்று காலை நடைபெற்றது.

    சி.ஐ.டி.யூ. தொழிலாளர் சம்மேளன தலைவர் சவுந்தர்ராஜன் புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார். முன்னதாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    போக்குவரத்து துறையை தனியார் மயமாக்கும் நடவடிக்கையை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும். பிரிமியம் பஸ்கள், மினி பஸ்கள் போன்றவற்றை தமிழ்நாடு அரசே இயக்க வேண்டும். தமிழ்நாட்டில் 300 பணிமனைகள் உள்ளன. தேவையான கட்டமைப்பு அரசு போக்குவரத்து கழகத்திடம் உள்ளது. எனவே எந்த விதமான பஸ்களாக இருந்தாலும் தனியாரிடம் ஒப்படைக்காமல் அரசு போக்குவரத்து கழகமே அதை இயக்க வேண்டும்.

    போக்குவரத்து கழக தொழிலாளர்கள் மட்டுமின்றி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் உட்பட பிற அரசு துறைகள் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கும் பழைய ஓய்வூதிய திட்டத்தை தேர்தல் அறிக்கையில் தெரிவித்தது போல் உடனடியாக அமல் படுத்த வேண்டும். தற்போது இதற்காக குழு அமைக்கப்பட்டு 9 மாத காலம் அவகாசம் என கூறப்பட்டுள்ளது. இதில் எங்களுக்கு திருப்தி இல்லை.

    எனவே முதலமைச்சர் உடனடியாக ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த தேவையான நடவடிக்கையை எடுக்க வேண்டும். முறைசாரா தொழிலாளர்கள் பதிவு மற்றும் அவர்களுக்கு கேட்பு மனுக்கள் விநியோகம் உள்ளிட்டவற்றில் குளறுபடி உள்ளது. 75 லட்சம் தொழிலாளர்களின் பதிவு, சர்வரில் அழிந்துவிட்டதாக அதிகாரிகள் கூறுகிறார்கள். மற்ற துறைகளில் எல்லாம் சர்வர்கள் முறையாக இயங்கும்போது முறைசாரா தொழிலாளர்கள் பதிவில் மட்டும் சர்வர் எப்படி அழிந்தது என்பது தெரிய வில்லை. எனவே உடனடியாக இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மாலை நேரங்களில் கடற்கரையில் இதமான குளிர் காற்று வீசுவதால் இரவு 9 மணி வரை கடற்கரையில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.
    • கடற்கரையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    கன்னியாகுமரி:

    சர்வதேச சுற்றுலா நகரமான கன்னியாகுமரிக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். சபரிமலை சீசன் முடிந்த நிலையில் சுற்றுலா பயணிகளின் வருகை நாளுக்கு நாள் குறைந்த வண்ணமாக இருந்தது. இருப்பினும் வாரத்தின் கடைசி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும், பண்டிகை கால விடுமுறை நாட்களிலும் சுற்றுலா பயணிகள் வருகை அதிக அளவில் காணப்படுகிறது.

    அதன்படி விடுமுறை நாளான இன்றும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டது. குறிப்பாக கேரளா மற்றும் வடமாநில சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்திருந்தனர். இதனால் கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது. அவர்கள் சூரியன் உதயமாகும் காட்சியை முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரை பகுதியிலும், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு கிழக்கு பக்கம் உள்ள கிழக்கு வாசல் கடற்கரை பகுதியிலும் திரண்டு நின்று பார்த்து ரசித்தனர்.

    விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்க்கவும் சுற்றுலா பயணிகள் அதிக ஆர்வம் காட்டினர். காலை 8 மணிக்கு தான் படகு போக்குவரத்து தொடங்கும் என்ற நிலையில் அதிகாலையிலேயே படகுதுறையில் ஏராளமானோர் திரண்டனர். அவர்கள் சுமார் 2 மணி நேரம் காத்திருந்து படகில் பயணம் செய்து விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட்டனர். பின்னர் அங்கிருந்து கண்ணாடி கூண்டு பாலம்வழியாக நடந்து சென்று, 133 அடி உயர திருவள்ளுவர் சிலையையும் பார்வையிட்டு மகிழ்ந்தனர்.

    மேலும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், திருப்பதி வெங்கடாஜலபதி கோவில், கொட்டாரம் ராமர் கோவில், சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவில், விவேகானந்த கேந்திர வளாகத்தில் அமைந்து உள்ள பாரத மாதா கோவில், ராமாயண தரிசன சித்திர கண்காட்சி கூடம், காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், அரசு அருங்காட்சியகம், கலங்கரை விளக்கம், மீன்காட்சி சாலை, அரசு பழத்தோட்டம் சுற்றுச்சூழல் பூங்கா வட்டக்கோட்டை பீச் உள்பட அனைத்து சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது.

    தற்போது கோடையை மிஞ்சும் வகையில் வெயில் கொளுத்துவதால் சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் கடலில் ஆனந்த குளியல் போட்டு உற்சாகம் அடைந்தனர்.

    மாலை நேரங்களில் கடற்கரையில் இதமான குளிர் காற்று வீசுவதால் இரவு 9 மணி வரை கடற்கரையில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. சுற்றுலா பயணிகள் வருகை திடீரென அதிகரித்ததால் கடற்கரையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    கடலோர பாதுகாப்பு குழும போலீசார், சுற்றுலா போலீசார் மற்றும் உள்ளூர் போலீசார் இந்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

    • பெஞ்சமின் வெளிநாட்டில் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
    • வீடியோவில் தனது மனைவியின் துரோகத்தை அழுதபடியும், நெஞ்சில் அடித்துக்கொண்டு கதறியபடியும் பெஞ்சமின் கூறினார்.

    திருமண வாழ்வு என்பது ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் முக்கியமான ஒன்றாகவும். அப்படிப்பட்ட ஒரு நிகழ்வு பலரது வாழ்க்கையை சந்தோஷமானதாகவும், பலரது வாழ்க்கையை சோகமானதாகவும் மாற்றுகிறது. திருமண வாழ்வு இனிதாக இல்லாமல் போவதற்கு கணவன்-மனைவிக்கு இடையே புரிதல் இல்லாததே பிரதான காரணமாக கூறப்படுகிறது.

    அதேபோல் திருமணத்திற்கு பிறகு ஏற்படும் தவறான தொடர்பும் பலரது வாழ்க்கையை சீரழித்து விடுகிறது. கணவனோ மனைவியோ, தனது இணை மீது அளவில்லாத அன்பு வைத்திருக்கும் பட்சத்தில், அந்த நம்பிக்கைக்கு துரோகம் விளைவிக்கும் வகையில் அவர் வேறு யாருடனாவது தொடர்பு வைத்திருந்தால், அதனை உண்மையாக நேசிக்கும் யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

    அது அந்த நபருக்கு கட்டுப்படுத்த முடியாத ஆத்திரத்தை தரும் பட்சத்தில் அவர் ஒரு கொலையாளியாகவோ அல்லது தனது உயிரையே மாய்த்துக் கொள்ளும் பரிதாபமான நபராகவோ மாறிவிடுகிறார். இதில் இரண்டாவதாக கூறியதைப் போன்று ஒரு நபர், தனது மனைவியின் கள்ளக்காதலை அறிந்து தாங்க முடியாத துக்கத்துக்கு தள்ளப்பட்ட நிலையில் தன்னுடைய உயிரையே மாய்த்துக் கொண்ட சோகம் குமரி மாவட்டத்தில் அரங்கேறி உள்ளது.

    குமரி மாவட்டம் வில்லுக்குறி அருகே உள்ள கொன்னக்குழிவிளை பகுதியை சேர்ந்தவர் பெஞ்சமின்(வயது47). இவருக்கும், சுனிதா (45) என்ற பெண்ணுக்கும் கடந்த 2006-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு திருமணமாகி 19 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் அவர்களுக்கு குழந்தை இல்லை.

    பெஞ்சமின் வெளிநாட்டில் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். அவர் சவுதி அரேபியாவில் இருந்த நிலையில், அவருடைய மனைவி சுனிதா கொன்னக் குழிவிளையில் உள்ள கணவரின் வீட்டில் இருந்து வந்தார்.

    மனைவி சுனிதா மீது அளவு கடந்த பாசம் வைத்திருந்த பெஞ்சமின் அவருக்கு பிடித்த எல்லாம் செய்து கொடுத்துள்ளார். மனைவியின் விருப்பப்படி தனது பூர்வீக வீட்டை விற்றுவிட்டு, தெற்கு மணக்காவிளையில் புதிதாக வீடு கட்டினார். பெஞ்சமின் வெளிநாட்டுக்கு சென்று விடும் நிலையில், அந்த வீட்டில் சுனிதா மட்டும் குடியிருந்தார்.

    இந்தநிலையில் சமீப காலமாக சுனிதாவின் நடவடிக்கையில் மாற்றும் ஏற்பட்டது. அதனை கண்டுபிடித்த பெஞ்சமின், அதுகுறித்து கேட்கும் போதெல்லாம் கணவன்- மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இப்படிப்பட்ட சூழலில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு சுனிதா தனது வீட்டில் இருந்து திடீரென மாயமானார்.

    இதுகுறித்து தகவல் இருந்த பெஞ்சமின் வெளிநாட்டில் இருந்து அவசர அவசரமாக புறப்பட்டு சொந்த ஊருக்கு வந்தார். தனது மனைவியை பல இடங்களில் தேடினார். ஆகவே தனது மனைவி மாயமானது குறித்து இரணியல் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் மாயமான சுனிதாவை போலீசார் தேடி வந்தனர்.

    ஆனால் அவரைப் பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. மனைவி சுனிதா எங்கு சென்றார்? என்று பெஞ்சமின் விசாரித்தார். அப்போதுதான் தனது மனைவிக்கும், திருவந்திக்கரை பகுதியைச் சேர்ந்த சைஜு என்பவருக்கும் தொடர்பு இருந்ததை தெரிந்து கொண்டார்.

    மேலும் தான் வெளிநாட்டில் பல ஆண்டுகளாக வேலை பார்த்து சம்பாதித்த பணத்தில் ஆசையாக கட்டிய வீட்டை விற்று, அதில் கிடைத்த பணத்தையும் எடுத்துக்கொண்டு கள்ளக்காதலனுடன் மனைவி சென்றுவிட்டதை அறிந்தார். மிகவும் பாசம் வைத்திருந்த தனது மனைவியின் இந்த செயல் பெஞ்சமினை மிகவும் பாதித்தது.

    இதனால் அவர் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்தார். அதே நேரத்தில் மனைவி தனக்கு செய்த துரோகத்தை அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இதனால் பெஞ்சமின் தற்கொலை செய்து கொள்வதற்கு முன், தனது செல்போனில் ஒரு வீடியோவை எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டார்.



    அந்த வீடியோவில் தனது மனைவியின் துரோகத்தை அழுதபடியும், நெஞ்சில் அடித்துக்கொண்டு கதறியபடியும் பெஞ்சமின் கூறினார். தனது மனைவியின் இந்த செயலை தன்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்றும், ஆகவே தற்கொலை செய்து கொள்ளப்போவதாகவும் அதில் பேசினார்.

    மேலும் தனது தற்கொலைக்கு தன்னுடைய மனைவியின் கள்ளக்காதலன் சைஜு, தனது மனைவி சுனிதா, அவரது சகோதரி ஷீலா ஆகியோரே காரணம் என்றும், அவர்களை தூக்கில் போட வேண்டும் என்றும் ஆவேசமாக அதில் தெரிவித்தார். அந்த வீடியோவை வெளியிட்ட சிறிய நேரத்தில் தனது வீட்டில் வைத்து பெஞ்சமின் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    பெஞ்சமின் வெளியிட்டிருந்த அந்த வீடியோ பார்ப்பவர்களை கண்கலங்க செய்யும் வகையில் பரிதாபமாக இருந்தது. அவரது பேச்சில் அவர் தனது மனைவி மீது வைத்திருந்த அளவு கடந்த பாசம் தெளிவாக தெரிந்தது. அதனை தாங்க முடியாமல் அவர் தளுதளுத்த குரலில் நடுங்கியபடியும், கதறிய படியும் பேசியது அனைவரையும் பரிதாபப்பட செய்து விட்டது.

    அதே நேரத்தில் பெஞ்சமின் தான் வெளியிட்ட வீடியோவில், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டை நேரடியாக கேட்டுக்கொண்டார். இதனால் பெஞ்சமின் தற்கொலை விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் உத்தரவிட்டார்.

    அதன் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். பெஞ்சமின் தற்கொலை செய்வதற்கு முன் சமூக வலைதளத்தில் வெளியிட்ட வீடியோவை ஆதாரமாகக் கொண்டு போலீசார் வழக்கு பதிந்தனர். பெஞ்சமின் மனைவி சுனிதா, மனைவியின் கள்ளக்காதலன் சைஜு, சகோதரி ஷீலா ஆகிய 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்தனர்.

    மேலும் இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

    பெஞ்சமின் மனைவி சுனிதாவுக்கு திருமணத்திற்கு முன்னதாகவே சைஜூவுடன் பழக்கம் இருந்துள்ளது. அப்போது அவர்கள் இருவரும் காதலித்து வந்துள்ளனர்.

    திருமணத்திற்கு பிறகும் சைஜுவுடனான தொடர்பை சுனிதா விடவில்லை. வெளிநாட்டில் இருந்து ஊருக்கு வரும் நேரத்தில் கணவர் பெஞ்சமினுக்கு சந்தேகம் எதுவும் வராதபடி நடந்து கொண்டுள்ளார். அவர் விடுமுறை முடிந்து மீண்டும் வெளிநாட்டுக்கு சென்ற பிறகு சைஜுவுடன் சேர்ந்து சுற்றி திரிந்தபடி இருந்திருக்கிறார்.

    தனது மனைவியின் விவகாரம் அரசல்புரசலாக பெஞ்சமினுக்கு தெரிய வரவே, மனைவியை கண்டித்திருக்கிறார். ஆனால் சுனிதா தனது போக்கை விடவில்லை என்று கூறப்படுகிறது. அதே நேரத்தில் கணவர் வெளிநாட்டில் இருந்த நேரத்தில் கள்ளக்காதலனுடன் சுனிதா நிரந்தரமாக குடும்பம் நடத்த சென்று விட்டார்.

    இதனை அறிந்த பெஞ்சமின் உடனடியாக வெளிநாட்டில் இருந்து ஊருக்கு திரும்பினார். தனது 19 ஆண்டுகால உழைப்பில் கட்டிய வீட்டை விற்று, அதில் கிடைத்த பணத்துடன் மனைவி மாயமானது அவருக்கு பேரதிர்ச்சியை தந்தது. ஆகவே தனது மனைவி மாயமானது குறித்து இரணியல் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    அப்போது கணவருடன் வாழ விருப்பமில்லை என்று சுனிதா கூறிவிட்டதாக தெரிகிறது. மனைவியின் இந்த செயல் பெஞ்சமினை மேலும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அதன் காரணமாகவே அவர் தற்கொலை முடிவு எடுத்திருக்கிறார்.

    மேற்கண்ட தகவல்கள் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

    பெஞ்சமின் தற்கொலைக்கு காரணமான அவரது மனைவி உள்பட 3 பேரையும் போலீசார் தீவிரமாக தேடினர். இந்த நிலையில் பெஞ்சமினின் மனைவி சுனிதா போலீசாரிடம் சிக்கினார். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய சுனிதாவின் கள்ளக்காதலன் சைஜு, சகோதரி சீலா ஆகிய இருவரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். அவர்களை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

    பெஞ்சமின் எதுவும் கூறாமல் தற்கொலை செய்து இருந்தால் அவரது சாவு சாதாரண தற்கொலை வழக்காக இருந்திருக்கும். ஆனால் அவர் தற்கொலை செய்வதற்கு முன்னதாக அதற்கு காரணமான தனது மனைவி உள்ளிட்டோரை பற்றி மிகவும் தெளிவாக பேசி வீடியோ எடுத்து அதனை சமூக வலை தளத்தில் பதிவிட்டார்.

    இதன் காரணமாகவே பெஞ்சமின் தற்கொலைக்கு காரணமானவர்கள் பற்றிய விவரம் தெரியவந்தது. அவரது தற்கொலைக்கு முக்கியமான காரணமாக இருந்த அவருடைய மனைவி சுனிதாவும் சிக்கிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இந்திய விண்வெளி துறையின் 100-வது ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டுள்ளது.
    • இஸ்ரோவில் உள்ள அனைத்து ஊழியர்களின் கூட்டு முயற்சியால் தான் இது சாத்தியமாகி இருக்கிறது.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் அருகே உள்ள மேலக்காட்டுவிளையை சேர்ந்த விஞ்ஞானி நாராயணன் இஸ்ரோ தலைவராக சமீபத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார். இதை தொடர்ந்து அவருக்கு சொந்த கிராமத்தில் நேற்று மாலையில் பாராட்டு விழா நடந்தது. விழாவில் பங்கேற்க இஸ்ரோ தலைவர் நாராயணன் நேற்று மதியம் நாகர்கோவிலில் உள்ள அரசு விருந்தினர் மாளிகைக்கு வந்தார். முன்னதாக அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது கூறியதாவது:-

    இந்திய விண்வெளி துறையின் 100-வது ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டுள்ளது. இந்த சாதனையானது நாட்டிற்கு பெருமை அளிக்கக்கூடிய விஷயமாகும். ஒவ்வொரு இந்தியனும் இதை நினைத்து மகிழ்ச்சி அடையும் தருணம் இது. இஸ்ரோவில் உள்ள அனைத்து ஊழியர்களின் கூட்டு முயற்சியால் தான் இது சாத்தியமாகி இருக்கிறது. நாட்டில் பாமர மக்களும் பயன்பெறும் வகையிலான திட்டங்களை இஸ்ரோ செயல்படுத்தி வருகிறது. மத்திய பட்ஜெட்டில் இந்திய விண்வெளி துறைக்கு அதிக நிதி ஒதுக்கி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கிணற்றுக்குள் விழுந்து கிடந்த யானையை மீட்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர்.
    • யானையை மீட்கும் பணியில் 60 பேர் கொண்ட வனத்துறை குழுவினர் ஈடுபட்டனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் கரிக்கோடு அருகே உள் ஊருங்காட்டேரி பகுதியை சேர்ந்த சன்னி என்பவரின் தோட்டத்தில் இருக்கும் கிணற்றுக்குள் நேற்று முன்தினம் நள்ளிரவு காட்டுயானை ஒன்று தவறி விழுந்துவிட்டது.

    அந்த கிணறு 25 அடி ஆழம் என்பதால் யானையால் மேலே வரமுடியவில்லை. இதுகுறித்து மலப்புரம் வனத்ததுறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற வனத்துறையினர், கிணற்றுக்குள் விழுந்து கிடந்த யானையை மீட்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர்.

    அதே நேரத்தல் அந்த பகுதி மக்கள் வன விலங்குகள் ஊருக்குள் புகுவதை தடுக்க நடவடக்கை எடுக்க வேண்டும் என்று போராட்டம் நடத்தினார்கள். இதனால் யானையை மீட்கும் பணியில் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பொது மக்களை வனத்துறையினர் சமரசம் செய்து அனுப்பி விட்டு மீட்பு பணியை தொடர்ந்தனர்.

    யானையை மீட்கும் பணியில் 60 பேர் கொண்ட வனத்துறை குழுவினர் ஈடுபட்டனர். யானையை கிணற்றுக்கு வெளியே கொண்டு வருதற்காக கிணற்றின் அருகில் மிகப் பெரிய குழி தோண்டப்பட்டது. அதன் வழியாக யானை வெளியே கொண்டு வரப்பட்டது.

    சுமார் 20 மணி நேரத்திற்கு பிறகு கிணற்றுக்குள் இருந்து காட்டு யானை மீட்கப்பட்டது. அந்த யானையை வனப்பகுதிக்குள் விட வனத்துறையினர் நடவடிக்கை எடுத்தனர்.

    • கருப்பசாமி தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
    • ரம்மி விளையாடிக் கொண்டிருப்பவர்கள் உடனடியாக அதிலிருந்து வெளியே வர வேண்டும்.

    நாகர்கோவில்:

    நெல்லை மாவட்டம் ரெட்டியார்பட்டியை சேர்ந்தவர் கருப்பசாமி (வயது 29). இவர் நாகர்கோவில் தீயணைப்பு துறையில் வேலை பார்த்து வந்தார். நாகர்கோவிலில் வாடகை வீட்டில் அவரது மனைவி மகேஸ்வரியுடன் வசித்து வந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்து கருப்பசாமி வெளியே சென்று வருவதாக கூறிவிட்டு சென்றார்.

    இந்தநிலையில் திருப்பதிசாரம் டோல்கேட் அருகே ரெயில்வே தண்டவாளத்தில் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து ரெயில்வே போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கருப்பசாமி தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

    முதற்கட்ட விசாரணையில் கடன் தொல்லை காரணமாக தற்கொலை செய்து இருப்பது தெரியவந்தது. இந்த நிலையில் தொடர்ந்து நடத்திய விசாரணையில் அவர் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்ததில் கருப்பசாமி தற்கொலை செய்து இருப்பது தெரியவந்துள்ளது.

    நாகர்கோவில் ரெயில் நிலையத்திற்கு வந்த முன்னாள் டி.ஜி.பி. சைலேந்திரபாபு தீயணைப்பு வீரர் கருப்பசாமி தற்கொலை தொடர்பாக வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் கூறியிருப்பதாவது:-

    நாகர்கோவிலை சேர்ந்த தீயணைப்பு வீரர் கருப்பசாமி ரம்மி விளையாட்டில் ரூ.17 லட்சம் தொலைத்துள்ளார். இதனால் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். எனவே தங்களது குழந்தைகள், கல்லூரியில் படிக்கலாம், வேலை பார்த்துக் கொண்டிருக்கலாம், அவர்கள் ரம்மி விளையாடினால் அதை கண்டுபிடித்து அவர்களுக்கு அறிவுரைகளை கூறவேண்டும்.

    கவுன்சிலிங் கொடுக்க வேண்டும். ரம்மி விளையாட்டினால் பணத்தை மட்டுமின்றி ஆளை இழக்க நேரிடும். எனவே ரம்மி விளையாடிக் கொண்டிருப்பவர்கள் உடனடியாக அதிலிருந்து வெளியேவர வேண்டும். உங்களுக்கு பணம் கிடைக்காது. ஒட்டுமொத்த பணத்தையும் இழக்க நேரிடும். எனவே ரம்மி விளையாடி கொண்டிருப்பவர்கள் உடனடியாக அந்த விளையாட்டை நிறுத்திக்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு கூறியுள்ளார்.

    • நாகர்கோவிலில் பதுங்கியிருந்த சைலேசை கைது செய்தனர்.
    • 2 பேரையும் ‘சஸ்பெண்டு’ செய்ய நடவடிக்கை.

    புளியங்குடி:

    கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியை சேர்ந்தவர் சைலேஷ் (வயது 42). இவர் கடந்த 2003-ம் ஆண்டு தமிழக காவல்துறையில் பணியில் சேர்ந்தார்.

    இவர் சில மாதங்களுக்கு முன்பாக தென்காசி மாவட்டம் சிவகிரி போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்தபோது, அந்த பகுதியை சேர்ந்த ஒரு இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

    அவருடன் சேர்ந்து அதே போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் சிவகிரி அருகே உள்ள ஆத்துவழி கிராமத்தை சேர்ந்த செந்தில் (44) என்ற போலீஸ்காரரும் சைலேசுடன் சேர்ந்து அந்த இளம்பெண்ணுக்கு பாலி யல் தொல்லை கொடுத்து உள்ளார்.

    இதுதொடர்பாக இளம்பெண், சிவகிரி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.தொடர்ந்து அந்த பெண்ணின் குற்றச்சாட்டில் முகாந்திரம் இருப்பது தெரியவந்ததால் இது தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த் உத்தரவின்பேரில் புளியங்குடி அனைத்து மகளிர் போலீஸ் நிலை யத்தில் புகார் அளிக்கப்பட்டு இன்ஸ்பெக்டர் சாந்தி வழக்குப்பதிவு செய்தார்.

    அதன்படி 2 போலீஸ்காரர்கள் மீதும் போக்சோ வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    வன்கொடுமை தடுப்பு சட்டம் பாய்ந்ததால் புளியங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேசன் இது தொடர்பாக விசாரணை நடத்தி வந்தார். தொடர்ந்து புகாருக்கு உள்ளான 2 பேரையும் கைது செய்ய அவர் உத்தரவிட்டார்.

    இதனிடையே தற்போது ஆலங்குளம் உட்கோட்டத்துக்கு உட்பட்ட ஊத்துமலை போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த சைலேசுக்கும், சிவகிரியில் பணியாற்றி வரும் செந்திலுக்கும் இந்த தகவல் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரும் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தலைமறைவாகிவிட்டனர்.

    அவர்களை கைது செய்ய இன்ஸ்பெக்டர் ஆடிவேல் தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்த நிலையில், நேற்று நாகர்கோவிலில் பதுங்கியிருந்த சைலேசை கைது செய்தனர்.

    கைதான சைலேசை தென்காசி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் தலை மறைவாக உள்ள செந்திலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் 'சஸ்பெண்டு' செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டு வருகிறது.

    இதனிடையே தன் மீது பொய் வழக்கு போட்டு உயர் அதிகாரிகள் தன்னை சிறையில் அடைக்க முயற்சி செய்வதாக சைலேஷ் பேசி வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • தான் கட்டணமாக கொடுத்த 9 லட்சம் ரூபாய் பணத்தை ஜான் ஸ்டீபனிடம் திரும்ப கேட்டிருக்கிறார்.
    • இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    நாகர்கோவில் அருகே, ஜான் ஸ்டீபன் என்கிற ஜோதிடர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், நம்பி ராஜன் என்கிற வாலிபர் போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

    கலையரசி என்கிற பெண், பிரிந்துபோன தனது கணவருடன் சேர்ந்து வாழ்வதற்காக, ஜோதிடர் ஜான் ஸ்டீபனை அணுகியுள்ளார். அவர் கூறிய பரிகாரத்தை செய்தும் கணவருடன் சேர்ந்து வாழ முடியாததால், தான் கட்டணமாக கொடுத்த 9 லட்சம் ரூபாய் பணத்தை ஜான் ஸ்டீபனிடம் திரும்ப கேட்டிருக்கிறார்.

    ஆனால் அவர் பணத்தை கொடுக்காததால் ஆத்திரம் அடைந்த கலையரசி, முகநூல் நண்பரான நம்பி ராஜனுடன் சேர்ந்து ஜான் ஸ்டீபனை கொலை செய்திருக்கிறார். இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    ×