search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குமரியில் சாரல் மழை - கடல் சீற்றம்
    X

    குமரியில் சாரல் மழை - கடல் சீற்றம்

    • காலை பெய்ய தொடங்கிய மழை சுமார் 1 மணி நேரத்துக்கு மேலாக நீடித்தது
    • கடலில் ராட்சத அலைகள் எழும்பின. 15 அடி உயரத்திற்கு அலைகள் எழும்பியது

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து கண்ணாமூச்சி காட்டி வந்தது. வெப்பத்தின் தாக்கம் காரணமாக பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வந்தனர்.

    இந்த நிலையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. நாகர்கோவிலில் காலை பெய்ய தொடங்கிய மழை சுமார் 1 மணி நேரத்துக்கு மேலாக நீடித்தது. தொடர்ந்து சாரல் மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து இதமான குளிர் காற்று வீசியது. தக்கலை, குழித்துறை, அஞ்சுகிராமம், சுசீந்திரம், தடிக்காரன்கோணம், கீரிப்பாறை மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் பரவலாக சாரல் மழை பெய்தது.

    ஏற்கனவே விவசாயிகள் மழையை எதிர்நோக்கி உள்ள நிலையில் தற்பொழுது மழை பெய்திருப்பது விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து பருவமழை கை கொடுக்குமா? என்ற நிலையில் விவசாயிகள் உள்ளனர். பாசன குளங்கள் வறண்டு காணப்படுகிறது. பெருஞ்சாணி அணையின் நீர்மட்டமும் நாளுக்கு நாள் சரிந்து வருகிறது. பேச்சிப்பாறை அணையிலும் குறைவான அளவில் தண்ணீர் உள்ளது.

    எனவே பருவமழை கை கொடுத்தால் மட்டுமே கன்னி பூ சாகுபடி பணியை முழுமையாக செய்து முடிக்க முடியும் என்ற நிலையில் விவசாயிகள் உள்ளனர்.

    அரபிக்கடல் பகுதியில் இன்று காலை முதலே சூறைக்காற்று வீசியதால் கடல் சீற்றமாக காணப்பட்டது. கன்னியாகுமரி கோவளம் குளச்சல் பகுதிகளில் கடலில் ராட்சத அலைகள் எழும்பின. 15 அடி உயரத்திற்கு அலைகள் எழும்பியது.

    கடற்கரையையொட்டி உள்ள தூண்டில் வளைவுகள் மீது ராட்சத அலைகள் மோதியது. மார்த்தாண்டம் துறை வள்ளவிளை, தூத்தூர், இறையுமன் துறை பகுதியிலும் கடல் சீற்றமாக காணப்பட்டது. ஒரு சில மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

    Next Story
    ×