என் மலர்
காஞ்சிபுரம்
வைணவ ஸ்தலங்களில் முக்கியமானதும், 108 திவ்ய தேசங்களில் ஒன்றானதுமான காஞ்சீபுரம் வரதராஜபெருமாளுக்கு வாலாஜாபாத் அருகே உள்ள பழையசீவரம் கிராமத்தில் பார்வேட்டை உற்சவம் நடைபெறுவது வழக்கம்.
அதன்படி காஞ்சீபுரம் வரதராஜபெருமாள் கோவிலில் இருந்து புறப்பட்டு முத்தியாலுபேட்டை, ஐயன் பேட்டை, ஏகனாம்பேட்டை, திம்மராஜாம்பேட்டை, வாலாஜாபாத், புளியம்பாக்கம் வழியாக பழைய சீவரத்தில் உள்ள மலை மீது எழுந்தருளினார்.
அங்கு வரதராஜபெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்துடன் மாலையில் சூரியனின் ஒளிக்கதிர்கள் சுவாமியின் மீது விழும் வகையில் மலையின் படிக்கட்டுகள் வழியாக ஒய்யாரமாக இறங்கினார்.
மலையடிவாரத்தில் உள்ள லட்சுமி நரசிம்மபெருமாளுடன் பாலாற்றில் இறங்கி தெற்கு கரையில் உள்ள அப்பன் பிரசன்ன வெங்கடேசபெருமாள் கோவிலுக்கு சென்று அங்கு காவந்தண்டலம், சாலவாக்கம் கிராமங்களில் இருந்து வந்திருக்கும் பெருமாள்களுடன் இணைந்து சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து திருமுக்கூடல் கிராமத்தில் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து கிராம மக்களுக்கு பெருமாள்கள் அருள்பாலித்தனர்.
பார்வேட்டை உற்சவத்தை முன்னிட்டு சென்னை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, வாலாஜாபாத் மற்றும் சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தனர்.
மாமல்லபுரம்:
காணும் பொங்கல் விழா இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி பொழுதுபோக்கு இடங்கள், பூங்கா மற்றும் கடற்கரைகளில் ஏராளமான பொதுமக்கள் குடும்பத்துடன் திரண்டு உற்சாகமாக பொழுதை கழித்தனர்.
காணும் பொங்கலை கொண்டாட சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலிருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் காலை முதலே வேன், ஆட்டோ, பைக்களில் மாமல்லபுரத்துக்கு வரத்தொடங்கினர்.
போக்குவரத்து நெரிசலை தவிர்க்க போலீசார் நகருக்குள் சுற்றுலா பயணிகள் வாகனத்தை அனுமதிக்கவில்லை. அவர்களது வாகனங்களை நிறுத்த பக்கிங்காம் கால்வாய் சாலையில் தற்காலிக இடம் ஒதுக்கப்பட்டது. அரசு பஸ்கள் கிழக்கு கடற்கரை சாலையில் நிறுத்தப்பட்டது.
கடற்கரை கோவில், புலிக்குகை, அர்ச்சுனன் தபசு, பட்டர்பால், ஐந்து ரதம், குடவரைகோயில் போன்ற பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
அவர்கள் புல் தரைகளில் குடும்பத்துடன் அமர்ந்து வீட்டில் இருந்து கொண்டுவந்த உணவுகளை உண்டு மகிழ்ந்தனர். மாமல்லபுரம் கடலில் குளிக்க போலீசார் தடை விதித்து சவுக்கு தடுப்புகள் கட்டி இருந்தனர். தடையை மீறி யாரேனும் கடலில் குளித்து அலையில் சிக்கினால் அவர்களை காப்பாற்ற கடலோர காவல் படை நீச்சல் வீரர்கள் தயாராக இருந்தனர்.
கூட்ட நெரிசலை பயன்படுத்தி சுற்றுலா பயணிகளிடம் திருடுவோர் மற்றும் பெண்களிடம் சில்மிஷம் செய்வோரை கண்காணிக்க சாதாரன உடையில் போலீசார் ரோந்து பணியில் சென்றனர்.
டி.எஸ்.பி. சுப்புராஜ் உத்தரவின் பெயரில் இன்ஸ்பெக்டர் சிரஞ்சீவி தலைமையில் மாமல்லபுரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
பழவேற்காடு பகுதிக்கு சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து பஸ், கார், இரு சக்கர வாகனங்கள் மூலம் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
அவர்கள் குடும்பத்துடன் அங்குள்ள டச்சுக்கல்லறை, லைட்ஹவுஸ், கடற்கரை சிந்தாமனிஸ்வரர் மணல்மேடு கோயில் லிங்கம் கிணறு, விஸ்வரூப தரிசன கோயில், மகிமை மாதா திருக்கோயில் ஜெல்ரியாகோட்டை ஆதி நாராயண பெருமாள் கோவில், மசூதி உள்ளிட்ட இடங்களை பார்வையிட்டனர். பழவேற்காடு ஏரிக்கரை பகுதியில் இருந்த பறவைகளை கண்டு ரசித்தனர்.
காணும் பொங்கலை யொட்டி பழவேற்காடுக்கு பொன்னேரி, செங்குன்றம் பகுதியில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. மாவட்ட சுற்றுலா துறை சார்பில் பொங்கல் சுற்றுலா கலைநிகழ்ச்சிகள் இன்றும், நாளையும் மாலை 4 மணி முதல் மாலை 8 மணி வரை நடைபெறுகிறது.
சுற்றுலா பயணிகள் வருகையொட்டி பழவேற்காடு கடலில் குளிக்கவும், படகு சவாரிக்கும் தடை விதிக்கப்பட்டு இருந்தது. டி.எஸ்.பி. ராஜா தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். #tamilnews
செங்கல்பட்டு:
ஆந்திர மாநிலத்தில் இருந்து செங்கல்பட்டுக்கு காச்சிகுடா எக்ஸ்பிரஸ் ரெயில் வந்தது. முன்பதிவு இல்லாத பெட்டியில் பயணிகள் அனைவரும் இறங்கிய போது வாலிபர் ஒருவர் மட்டும் மர்மமாக இறந்து கிடந்தார்.
அவரது வாயில் ரத்தம் வழிந்து இருந்தது. தகவல் அறிந்ததும் செங்கல்பட்டு ரெயில்வே போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
அவர் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த ஸ்ரீதர் என்பது தெரிந்தது. அவர் எப்படி இறந்தார்? என்பது மர்மமாக உள்ளது.
ரெயில் பயணத்தின் போது மர்ம நபர்கள் யாரேனும் அவரை அடித்து கொலை செய்தனரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
மற்றொரு சம்பவம்...
காஞ்சீபுரத்தை அடுத்த கணபதிபுரம் கிராமத்தை சேர்ந்தவர் பிரகாஷ் (21). தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார். இவர் அதே பகுதியை சேர்ந்த நண்பர் பன்னீர் செல்வத்துடன் மோட்டார் சைக்கிளில் வரதபுரம் பகுதியில் இருந்து சிறுவாக் கம் நோக்கி வந்தார்.
சிறுவாக்கம் பகுதியை கடக்கும் போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலையோர சிறிய பாலத்தில் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே பிரகாஷ் பரிதாபமாக பலியானார். படுகாயம் அடைந்த பன்னீர்செல்வம் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் மேல் சிகிச்சை பெற்று வருகிறார்.
சிங்கபெருமாள் கோவிலை அடுத்த அஞ்சூர் புதிய கிராமத்தை சேர்ந்தவர் சந்தியப்பன். இவரது மனைவி ஷியாமி (53). மறைமலைநகரில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். அவர் சாலையை கடந்த போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி நிற்காமல் சென்றுவிட்டது. இதில் சம்பவ இடத்திலேயே ஷியாமி பலியானார்.
மாமல்லபுரம்:
கல்பாக்கம், அணுமின் நிலைய குடியிருப்பில் வசித்து வருபவர் ரமேஷ்குமார். இவரது வீட்டில் கடந்த 6-ந்தேதி 10 பவுன் நகை மாயமானது.
இது தொடர்பாக வீட்டில் வேலை பார்த்த அதே பகுதியை சேர்ந்த கன்னியம்மாள் (வயது 47). மீது சந்தேகம் இருப்பதாக கல்பாக்கம் போலீசில் புகார் செய்யப்பட்டதாக தெரிகிறது.
இதையடுத்து கன்னியம்மாளை பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்போது திடீரென அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதில் கன்னியம்மாள் இறந்து போனார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.
விசாரணையின் போது போலீசார் தாக்கியதில் கன்னியம்மாள் இறந்து போனதாக அவரது உறவினர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
இது தொடர்பாக போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். போலீஸ் விசாரணையில் பெண் இறந்த சம்பவம் கல்பாக்கம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.#tamilnews
காஞ்சீபுரம்:
காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் (வயது 83). இவர் காஞ்சீபுரம் சாலைத்தெருவில் உள்ள சங்கர மடத்தில் தினமும் காலையிலும், மாலையிலும் பக்தர்களுக்கு ஆசி வழங்குவது வழக்கம்.
நேற்று காலை 11 மணியளவில் ஜெயேந்திரர் பக்தர்களுக்கு ஆசி வழங்கிய போது திடீரென அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து பக்தர்களுக்கு ஆசி வழங்குவது நிறுத்தப்பட்டது. தனி அறையில் ஜெயேந்திரர் ஓய்வு எடுத்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று இரவு 9 மணியளவில் மீண்டும் அவருக்கு உல் நலம் பாதிக்கப்பட்டது. உடனடியாக ஜெயேந்திரரை போரூரில் உள்ள ராமச் சந்திரா ஆஸ்பத்திரிக்கு மட நிர்வாகிகள் அழைத்து வந்தனர்.
ஆனால் ஆஸ்பத்திரி வளாகத்தில் வேன் நின்றதும் அதில் இருந்து இறங்க ஜெயேந்திரர் மறுத்து விட்டார். உடல் நலம் சரியாகி விட்டது. சிகிச்சை வேண்டாம் என்று திட்டவட்டமாக கூறினார்.
இதைத் தொடர்ந்து செய்வது அறியாமல் திகைத்த உடன் வந்த மடம் நிர்வாகிகள் அங்கிருந்து சென்னை, சேத்துப்பட்டில் உள்ள சங்கர மடத்துக்கு சொந்தமான சங்கராலயா மடத்துக்கு வந்தனர். அங்கு ஜெயேந்திரர் தங்கி ஓய்வு எடுத்து வருகிறார்.
ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு அதிகமானதால் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக தெரிகிறது. மேலும் மார்கழி மாதம் முழுவதும் தினமும் அதிகாலை 3 மணியளவில் எழுந்து சிறப்பு வழிபாடு செய்து வந்து உள்ளார். டாக்டர்கள் வந்து அவரை பரிசோதனை செய்து தற்போது உடல்நிலை சீராக இருப்பதாக தெரிவித்தனர்.
உடல் நிலை சீரானதையொட்டி இன்று காலை ஜெயேந்திரர் காஞ்சீபுரம் மடத்துக்கு திரும்புவார் என்றும், அங்கு வழக்கமான பணிகளில் ஈடுபடுவார் என்றும் மடம் நிர்வாகிகள் தெரிவித்தனர். #tamilnews #JayendraSaraswati
ஆலந்தூர்:
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் கடும் புகை மூட்டம் நிலவியது. இதனால் விமான ஓடு தள பாதை தெரியாதபடி புகை சூழ்ந்து இருந்தது.
இதையடுத்து விமானங்கள் புறப்படுவது, தரை இறங்குவதில் பாதிப்பு ஏற்பட்டது. நள்ளிரவு முதல் அதிகாலை வரை வெளி நாடுகளில் இருந்து விமானங்கள் சென்னைக்கு வரும்.
கடும் புகை மூட்டம் காரணமாக சிங்கப்பூர், துபாய், மலேசியா, இலங்கை ஆகிய நாடுகளுக்கு செல்லும் விமானங்கள் புறப்பட முடியவில்லை. இதேபோல் துபாய், பக்ரைன், இலங்கை, மலேசியா ஆகிய நாடுகளில் இருந்து சென்னை வந்த விமானங்கள் தரை இறங்க முடியவில்லை. அதனால் விமானங்கள் பெங்களூர், ஐதராபாத்துக்கு திருப்பி விடப்பட்டன.
கத்தார் மற்றும் சார்ஜா செல்ல இருந்த 2 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. அதில் பயணம் செய்ய இருந்த பயணிகள் ஓட்டல்களில் தங்க வைக்கப்பட்டனர்.
இதே போல் டெல்லி, மும்பை, கொல்கத்தா மற்றும் திருச்சி, கோவை, மதுரை ஆகிய நகரங்களுக்கு செல்லும் விமானங்கள் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டது.
புகை மூட்டத்தால் நள்ளிரவு முதல் சென்னை விமான நிலையம் முற்றிலும் முடங்கியது. ஆனால் சுமார் 3 ஆயிரம் பயணிகள் அவதி அடைந்தனர். அவர்கள் காத்திருப்போர் அறையில் அமர்ந்து இருந்தனர். 10 மணிக்கு மேல் புகை மூட்டம் குறைந்த பிறகு விமானங்கள் ஒவ்வொன்றாக இயக்கப் பட்டன. 40-க்கும் மேற்பட்ட விமானங்கள் சேவை 6 மணி நேரம் பாதிக்கப்பட்டது. #smoginchennai #flightscanceled #tamilnews
தாம்பரம்:
தாம்பரம், ஜோதி நகர் பகுதியில் இன்று காலை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஒரு மோட்டார் சைக்கிளில் பெரிய அட்டை பெட்டிகளுடன் சென்ற 2 பேரை பிடித்து விசாரித்தனர்.
அவர்கள் வைத்திருந்த அட்டை பெட்டியை சோதனை செய்த போது, தடை செய்யப்பட்ட குட்கா, மற்றும் புகையிலை கடத்தி சென்றது தெரிந்தது.
விசாரணையில் அவர்கள் லோடு ஆட்டோவில் குட்காவை கடத்தி வந்ததும், வரும் வழியில் ஆட்டோ பழுதானதால் அதில் இருந்த புகையிலை, குட்கா பெட்டிகளை மோட்டார் சைக்கிள் மூலம் கடைகளுக்கு சப்ளை செய்து வந்ததாக தெரிவித்தனர்.
இதையடுத்து லோடு ஆட்டோவுடன் சுமார் 500 கிலோ குட்கா, புகையிலை மற்றும் ரூ.30 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
அவர்கள் குன்றத்தூரை சேர்ந்த மகேந்திரன், முடிச்சூர் கலீல், தாம்பரம் ரிஸ்மான் என்பது தெரிந்தது. அவர்களிடம், தடை செய்யப்பட்ட குட்கா கிடைத்தது எப்படி? எங்கு சப்ளை செய்யப்படுகிறது? என்று தாம்பரம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஆங்கிலத்தில் மட்டுமே உள்ளதால் விலங்குகளை பற்றி அனைவரும் தெரிந்துகொள்ள முடியாது என்பதால் வண்டலூர் உயிரியல் பூங்கா இணையதளத்தை தமிழில் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
சென்னையை அடுத்த வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா திறந்த நாளில் இருந்து கடந்த 33 வருடமாக நேரில் சென்றுதான் நுழைவுச்சீட்டுகளை வாங்கி, பூங்காவை பொதுமக்கள் சுற்றிப்பார்த்து வந்தனர்.
பொங்கல் பண்டிகைக்கு முன்பு ஆன்-லைன் மூலம் டிக்கெட் பெறும் வசதி தொடங்கப்படும் என்று கடந்த வாரம் பூங்கா நிர்வாகம் தெரிவித்து இருந்தது. இதற்காக வண்டலூர் உயிரியல் பூங்காவின் இணையதளத்தை தற்காலிகமாக முடக்கி வைத்து, ஆன்-லைன் முறை அமல்படுத்துவதற்காக இணையதளத்தை புதுப்பிக்கும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு இருந்தனர்.
இதற்கான பணிகள் முடிந்தவுடன் நேற்று முன்தினம் முதல் ஆன்-லைன் வழியாக பொதுமக்கள் பூங்காவுக்கான நுழைவு சீட்டுகள் மற்றும் பூங்காவில் உள்ள பேட்டரி வாகனங்களுக்கு டிக்கெட் பெரும் திட்டத்தை தொடங்கியது. இதற்கான இணையதள முகவரி www.aazp.in அல்லது WWW.va-n-d-a-lu-rz-oo.com ஆகியவற்றை பூங்கா நிர்வாகம் அறிவித்து இருந்தது.
இந்த இரண்டு இணையதளத்திற்குள்ளும் சென்று பார்க்கும் போது, ஏற்கனவே பூங்காவிற்கு இருந்த இணையதளத்தை விட மிகவும் புதுப்பொலிவுடன் பார்வையாளர்களையும், சிறுவர்களையும், வெளிநாட்டு சுற்றுலா பயணிகளையும் கவரும் வகையில் ‘பளிச்’ என்று வண்ணமயமாக காணப்படுகிறது. இதில் பூங்காவில் உள்ள முக்கிய விலங்குகளின் புகைப்படங்கள் தெளிவாக உள்ளன.
இந்த இணையதளத்தில் பூங்காவின் வரலாறு, விலங்குகளின் கர்ப்பகால தகவல்கள் முதல் அதனுடைய குணநலன்கள், தற்போது எத்தனை விலங்குகள் பூங்காவில் இருக்கிறது. மற்றும் விலங்குகள் தத்தெடுப்பு முறைகள், 2009-ம் ஆண்டு முதல் 2012 வரை யார்?, யார்?, விலங்குகளை தத்தெடுத்துள்ளனர் என்ற விவரம், பூங்கா ஆணையத்தின் தகவல்கள், பார்வையாளர்களுக்கு தேவைப்படும் பூங்கா திறந்து இருக்கும் நேரம், வார விடுமுறை தினம், பூங்காவின் கட்டண விவரங்கள், பூங்காவின் வரைபடங்கள், தற்போது அறிமுகப்படுத்தப்பட்ட ஆன்-லைன் டிக்கெட் பதிவு செய்யும் முறை உள்பட பல்வேறு விதமான தகவல்களுடன் இந்த புதிய இணையதளம் அமைக்கப்பட்டுள்ளது.
ஆனால் இணையதளத்தில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா என்ற பெயர் மட்டுமே தமிழில் இருக்கிறது. மற்ற அனைத்து தகவல்களும் ஆங்கில மொழியில் மட்டுமே இருக்கிறது. ஆசியாவிலேயே மிகப்பெரிய உயிரியல் பூங்காவாக வண்டலூர் அறிஞர் அண்ணா பூங்கா இருப்பதன் காரணமாக வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் ஆங்கிலத்தில் இணையதளம் அமைத்து இருக்கலாம். இது தவறு கிடையாது.
ஆனால் தமிழகத்தில் உள்ள ஒரு உயிரியல் பூங்காவின் வரலாறு, அங்கு உள்ள விலங்குகளின் விவரம், குணநலன்கள் பற்றி தமிழக மக்கள் அனைவரும் தெரிந்துகொள்ளும் வகையில் இணையதளத்தை தமிழ் வடிவத்திலும் வனத்துறை அதிகாரிகள் அமைத்து இருக்கலாம் என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது:-
தமிழக அரசு எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்ற கொள்கையுடன் செயல்பட்டு வருகிறது. தற்போது ஐகோர்ட்டில் கூட தமிழை வழக்காடு மொழியாக கொண்டுவரவேண்டும் என்று தமிழகத்தில் உள்ள அனைவரின் ஒட்டுமொத்த குரலாக ஒலிக்கிறது. இப்படிப்பட்ட காலகட்டத்தில் தமிழ்நாட்டில் உள்ள வண்டலூர் அறிஞர் அண்ணா பூங்காவின் இணையதளம் முழுமையாக ஆங்கிலத்தில் மட்டுமே இருப்பது வருத்தமாக இருக்கிறது.
தமிழ்நாட்டில் உள்ள பொதுமக்கள் அனைவருக்கும் ஆங்கில மொழி தெரிந்து இருக்க வாய்ப்பில்லை. இவர்கள் எப்படி இணையதளத்தை பயன்படுத்தி ஆன்-லைன் டிக்கெட் பெற முடியும். அப்படி என்றால் ஆங்கிலம் படித்தவர்கள் மட்டுமே பயன்பெற ஆன் -லைன் வசதி தொடங்கப்பட்டதா?. தமிழ் மட்டும் தெரிந்தவர்கள் வரிசையில் காத்திருக்கும் நிலை உள்ளது.
பூங்காவின் வரலாறு, விலங்குகளின் குணநலன்கள் பற்றி தமிழ் படித்தவர்கள் எப்படி தெரிந்துகொள்ள முடியும்?. தற்போது தமிழக அரசின் பெரும்பாலான துறைகளின் இணையதளங்கள் அனைத்தும் தமிழ் வடிவில் இருக்கிறது. வண்டலூர் உயிரியல் பூங்காவின் இணையதளத்தையும் தமிழ் வடிவத்தில் அமைக்க வண்டலூர் பூங்கா ஆணையத்தின் தலைவராக உள்ள தமிழக முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். #tamilnews
காஞ்சீபுரம்:
காஞ்சீபுரம் பஸ் நிலையத்துக்குள் மூத்த குடி மக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளை ஏற்றிச் செல்லும் ஆட்டோக்கள் தவிர்த்து பிற வாகனங்கள் நுழைய காவல் துறையினர் தடை விதித்து உள்ளனர்.
இந்த நிலையில் நேற்று இரவு வேலூரில் இருந்து காஞ்சீபுரம் வந்த கார் ஒன்று தடையை மீறி காஞ்சீபுரம் பஸ் நிலையம் உள்ளே நுழைந்தது.
திடீரென கார் தாறுமாறாக ஓடி தற்காலிக டிரைவர் இயக்கி வந்த அரசு பஸ் மீது மோதி நின்றது. இதில் காரின் பக்கவாட்டு பகுதி சிறிது சேதம் அடைந்தது.
காரில் இருந்து இறங்கிய அதன் உரிமையாளர் அரசு பஸ்சினை ஓட்டியதற்காலிக டிரைவரிடம் காருக்கு ஏற்பட்ட சேதத்திற்காக 7500 ரூபாய் தரும்படி மிரட்டினார். இதனையடுத்து அங்கு பொதுமக்கள் ஏராளமானோர் திரண்டனர்.
பஸ் நிலையம் உள்ளேயே பணிமனை அமைந்திருந்தும் பணிமனை அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் யாரும் அரசு பேருந்தின் தற்காலிக ஓட்டுனருக்கு ஆதரவாகப் பேச வரவில்லை.
மேலும் தடையை மீறி பேருந்து நிலையம் உள்ளே கார் ஏன் வந்தது என்ற கேள்வியையும் கேட்க வில்லை. அடாவடியாகப் பேசிய காரின் உரிமையாளர் தற்காலிக பேருந்து ஓட்டுனரிடம் 7500 ரூபாய் பெற்ற பின்னரே அங்கிருந்து பஸ்சை எடுக்க அனுமதித்தார். இந்த சம்பவம் பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
அரசுப் பேருந்து ஊழியர்கள் வேலை நிறுத்தம் காரணமாக பொதுமக்கள் அவதியினைக் குறைக்க தற்காலிக ஓட்டுனர்கள் பணிக்கு வருகின்றனர், இதற்கு அவர்கள் சொற்பமான அளவிலேயே வருமானம் பெறுகின்றனர்.
ஆனால் தடையினை மீறி பேருந்து நிலையத்தில் புகுந்த காரின் உரிமையாளர் அவரிடமே பணம் பெற்ற சம்பவமும் அதனை அரசு போக்குவரத்து அலுவலர்கள் காவல் துறையினர் கண்டிக்காமல் வேடிக்கை பார்த்த சம்பவமும் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews #kanchipurambusstand
சென்னையை அடுத்த பெருங்குடி அம்பேத்கர் புரட்சி நகர் என்.எஸ்.கே. தெருவைச் சேர்ந்தவர் குருசாமி (வயது 34). இவருடைய மனைவி பிரேமலதா. இவர்களுக்கு குகன் (5), விஷ்வா (2½) என 2 மகன்களும், விஷாலி (1) என்ற மகளும் உள்ளனர்.
கடந்த 25-ந் தேதி இரவு வீட்டின் வெளியே விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் விஷ்வா, திடீரென மாயமானான். பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால் இதுபற்றி துரைப்பாக்கம் போலீசில் குருசாமி புகார் செய்தார்.
அதன்பேரில் அடையாறு துணை கமிஷனர் ரோகித்நாதன் தலைமையில் துரைப்பாக்கம் உதவி கமிஷனர் அய்யப்பன், இன்ஸ்பெக்டர் சீனிவாசன் ஆகியோர் அடங்கிய 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.
பெருங்குடி, தரமணி ஆகிய பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை தனிப்படை போலீசார் ஆராய்ந்தனர். அதில் வீட்டின் முன் விளையாடிக்கொண்டு இருந்த சிறுவன் விஷ்வாவை, வாலிபர் ஒருவர் கடத்திச்செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. அந்த காட்சிகளை வைத்து போலீசார் கடத்தல் ஆசாமியையும், சிறுவனையும் தேடி வந்தனர். ஆனால் அதில் எந்த துப்பும் கிடைக்கவில்லை.
இதையடுத்து போலீசார், சிறுவன் விஷ்வா கடத்தப்படுவதற்கு முன்பு அந்த பகுதியில் யாராவது சந்தேகப்படும்படியாக நடமாடுகிறார்களா? என்பதை அறிய அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை மீண்டும் ஆய்வு செய்தனர்.
அப்போது சிறுவன் கடத்தப்பட்ட 25-ந் தேதி அதிகாலையில் சந்தேகப்படும்படியாக 2 பேர் மோட்டார் சைக்கிளில் செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. அதில் ஒருவர், சிறுவனை கடத்திச்சென்ற நபர் போன்று தோற்றம் அளித்தார்.
இதனால் போலீசார் கண்காணிப்பு கேமராவில் பதிவான மோட்டார் சைக்கிள் பதிவெண்ணை வைத்து விசாரித்தனர். அதில் அந்த மோட்டார் சைக்கிள் பெருங்குடி கல்லுக்குட்டை பகுதியை சேர்ந்த மகேந்திரன் என்பவருக்கு சொந்தமானது என தெரிந்தது. அவரை பிடித்து போலீசார் விசாரித்தனர்.
அதில் அவர், “மோட்டார் சைக்கிளில் தன்னுடன் வந்தவர் தனது நண்பர் மாணிக்கம் (28). திருவேற்காட்டை சேர்ந்த அவர், தனியார் அட்டை கம்பெனியில் வேலை செய்து வருகிறார். அவருடைய தாயார், கல்லுக்குட்டை பகுதியில்தான் வசித்து வருகிறார். தாயாரை பார்க்க அவர் கல்லுக்குட்டைக்கு வந்த போது, நாங்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் மது அருந்த சென்றோம்” என்று கூறினார்.
அதைதொடர்ந்து தனிப்படை போலீசார், திருவேற்காட்டில் உள்ள மாணிக்கம் வீட்டுக்கு சென்றனர். அங்கு கடத்தப்பட்ட சிறுவன் விஷ்வாவுடன், மாணிக்கம் இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். சிறுவனை பத்திரமாக மீட்ட போலீசார், மாணிக்கத்தை கைது செய்தனர்.

கைதான மாணிக்கம், போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலம் வருமாறு:-
எனக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை. எனக்கு குழந்தைகள் என்றால் ரொம்ப பிடிக்கும். குழந்தைகளை வளர்க்க ஆசைப்பட்டேன். கடந்த 25-ந் தேதி எனது தாயாரை பார்க்க கல்லுக்குட்டைக்கு சென்ற நான், அங்கு எனது நண்பர் மகேந்திரனுடன் மது குடிக்க சென்றேன்.
அப்போது சிறுவன் விஷ்வாவை பார்த்தேன். அவனை பார்த்த உடன் எனக்கு ரொம்ப பிடித்து விட்டது. அவனை நானே வளர்க்க ஆசைப்பட்டேன். இதனால் வீட்டின் வெளியே விளையாடிக்கொண்டிருந்த அவனை, எனது வீட்டுக்கு அழைத்து வந்து விட்டேன்.
குழந்தையை வளர்க்க வேண்டும் என்ற ஆசையில்தான் நான், சிறுவனை கடத்தி வந்தேன். குழந்தையை கடத்தி விற்கவேண்டும் என்ற எண்ணத்தில் இல்லை.
இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறி இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
இதையடுத்து கைதான மாணிக்கம் மற்றும் மீட்கப்பட்ட சிறுவன் விஷ்வா இருவரையும் தனிப்படை போலீசார் துரைப்பாக்கம் போலீஸ் நிலையம் அழைத்து வந்தனர். அங்கு சிறுவனை அவர்களின் பெற்றோரிடம் துணை கமிஷனர் ரோகித்நாதன் ஒப்படைத்தார்.
கண்ணீர் மல்க மகனை வாரி அணைத்துக்கொண்ட தாய் பிரேமலதா, மகன் விஷ்வாவுக்கு முத்த மழை பொழிந்தார். கண்ணீருடன் அவர் போலீசாருக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார்.
மேலும் பிரேமலதா கூறும்போது, “கடந்த 25-ந் தேதி முதல் எங்கள் மகனை காணாமல் நாங்கள் தவியாய் தவித்து இருந்தோம். அவனை போலீசார் கண்டுபிடித்து கொடுப்பார்களா?, அவன் எங்கிருக்கிறானோ?. சாப்பிட்டானா, தூங்கினானா? என தெரியவில்லையே என்று துடித்து விட்டோம். போலீசார் எப்படியோ கஷ்டப்பட்டு தேடி எனது மகனை மீட்டு எங்களிடம் ஒப்படைத்து விட்டனர். அவர்களுக்கு எங்கள் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்” என்றார்.
துரிதமாக செயல்பட்டு சிறுவனை மீட்ட தனிப்படை போலீசாரை துணை கமிஷனர் ரோகித்நாதன் வெகுவாக பாராட்டினார். #tamilnews
காஞ்சிபுரம்:
பஸ் ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டம் இன்று 7-வது நாளாக தொடருகிறது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 11 டிப்போக்களில் இருந்து 740 பஸ்கள் தினந்தோறும் இயக்கப்பட்டு வந்தன. தற்போது 70 சதவீத பஸ்கள் தற்காலிக டிரைவர்கள் மூலம் இயங்கத் தொடங்கி உள்ளன. அரசு பஸ்கள் முறையாக கிராமப்புறங்களில் இருந்து பெருமளவில் இயக்கப்படாததால் பள்ளி மாணவ-மாணவிகள் அவதி அடைந்து வருகிறார்கள்.
சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட இடங்களுக்கு செல்வோர் ரெயிலை பயன் படுத்துவதால் காஞ்சீபுரத்தில் இருந்து ரெயிலில் பயணம் செய்வோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் தற்காலிக டிரைவர்களுக்கு தொடர்ந்து பஸ்களை இயக்கும் பயிற்சி இல்லாததால் மெதுவாக பஸ்களை ஓட்டி வருகின்றனர். ஓட்டை உடசல் பஸ்களை ஓட்டவே தற்காலிக டிரைவர்கள் படாதபாடு பட்டு வருகிறார்கள்.
காஞ்சிபுரத்தில் உள்ள ஒரு பஸ்சில் டிரைவர் ஒருவர் இரண்டு கைகளாலும் ‘கியர்’ போட்டு பஸ்சை ஓட்டி வருகிறார். இதனால் அதில் பயணம் செய்யும் பயணிகள் வேறு வழியின்றி அச்சத்துடன் சென்று வருகிறார்கள்.
மேலும் இயக்கப்படும் பேருந்துகள் மீது கல்வீச்சு சம்பவங்களும் நடைபெறுகின்றன. எனவே பஸ்களில் பயணம் செய்யும் பயணிகள் திகிலுடன் பயணம் மேற் கொள்கின்றனர்.
திருவள்ளூர் மாவட்டத் தில் உள்ள 6 பணிமனைகளில் திருவள்ளூரில் 33, ஊத்துக்கோட்டையில் 19, திருத்தணியில் 38, பொதட்டூர் பேட்டையில் 7, பொன்னேரியில் 12 பஸ்கள் தற்காலிக டிரைவர்கள் மூலம் இயக்கப்பட்டன.
பெருங்குடியை அடுத்த கல்லுகுட்டை பகுதியை சேர்ந்தவர் குருசாமி. இவரது 3 வயது மகன் விஸ்வா.
கடந்த மாதம் 25-ந்தேதி வீட்டுமுன்பு விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் விஸ்வா திடீரென மாயமானான். அவன் கடத்தப்பட்டு இருப்பது தெரிந்தது.
இதுகுறித்து துரைப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். ஆனால் இதுவரை சிறுவன் விஸ்வா பற்றி எந்த தகவலும் தெரியவில்லை. அவன் என்ன ஆனான் என்பது தெரியாமல் உள்ளது.
இந்த நிலையில் தரமணி பஸ்நிலையத்தில் ஒரு கடையில் வைத்துள்ள கண்காணிப்பு காமிராவில் சிறுவன் விஸ்வாவை மர்மவாலிபர் கடத்தி செல்லும் காட்சி பதிவாகி உள்ளது.
அதில் சிறுவனுடன் வாலிபர் ஒருவர் நிற்பதும் பின்னர் தரமணி வழியாக வேளச்சேரி செல்லும் பஸ்சில் ஏறிச் செல்வதும் பதிவாகி இருக்கிறது.
இதுகுறித்து சிறுவனின் தந்தை குருசாமி கூறும்போது, ‘‘மகன் விஸ்வா கடத்தப்பட்டு 15 நாட்கள் ஆகியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கண்காணிப்பு கேமிரா காட்சிகளை வைத்து மகனை மீட்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.






