என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    பள்ளிக்கரணை அருகே குடும்ப தகராறில் 2 பெண் குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொன்று தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    சோழிங்கநல்லூர்:

    பள்ளிக்கரணையை அடுத்த பெரும்பாக்கம் நூக்கம்பாளையத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 2-வது தளத்தில் வசித்து வருபவர் ஷிரஷா. சாப்ட்வேர் என்ஜினீயர். அண்ணா சாலையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

    இவரது மனைவி ஜிகானா (வயது 35). இவர்களது 2½ வயதில் பரி, 5 மாத கைக்குழந்தை ‌ஷரியா ஆகிய 2 பெண் குழந்தைகள் இருந்தனர். ஷிரஷா - ஜிகானா இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    இதனால் ஷிரஷா கடந்த ஒரு மாதமாக வீட்டிற்கு வரவில்லை என தெரிகிறது. ஜிகானா, 2 குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்தார்.

    கணவர் பிரிந்து சென்ற வேதனையில் இருந்த அவர் குழந்தைகளை கொன்று தற்கொலை செய்ய முடிவு செய்தார்.

    இந்த நிலையில் நேற்று இரவு நீண்ட நேரமாகியும் ஜிகானா வீட்டின் கதவு திறக்கப்படவில்லை. மின் விளக்குகள் எரிந்தபடி இருந்தன. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் சென்று ஜன்னல் வழியாக பார்த்த போது தூக்கில் தொங்கிய நிலையில் ஜிகானா பிணமாக கிடந்தார். அருகில், அவரது 2 குழந்தைகளும் இறந்து கிடந்தன.

    அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் பள்ளிக்கரணை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் சிவகுமார் மற்றும் போலீசார் விரைந்து வந்து 3 பேரின் உடல்களை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    கணவர் பிரிந்து சென்ற ஏக்கத்தில் ஜிகானா 2 குழந்தைகளுக்கு பாலில் வி‌ஷம் கலந்து கொடுத்து கொன்றிருப்பதும், பின்னர் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து இருப்பதும் தெரியவந்தது.

    3 பேரின் உடல்களுடன் பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மனைவி மற்றும் குழந்தைகள் இறந்தது குறித்து ஷிரஷாவுக்கு போலீசாரால் தகவல் தெரிவிக்க முடியவில்லை.

    அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட் டுள்ளது. அவர் எங்கு உள்ளார் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பள்ளிக்கரணை பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. #Tamilnews
    மனைவியை கவனிக்க விடுமுறை கொடுக்காததால் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் தனது பதவியை ராஜினாமா செய்த சம்பவம் போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    தாம்பரம்:

    தாம்பரத்தை அடுத்த சிட்லபாக்கம் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் பாஸ்கரன் (53). இவர் மனைவி மற்றும் மகன்களுடன் ராஜகீழ்ப்பாக்கத்தில் வசித்து வருகிறார்.

    பாஸ்கரனின் மனைவிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் பாஸ்கரன் அடிக்கடி விடுமுறை எடுத்து மனைவியை கவனித்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று காலை பணிக்கு வந்த பாஸ்கரன் மீண்டும் விடுமுறை தரும்படி இன்ஸ்பெக்டர் ரமேசிடம் கேட்டார். ஆனால் அவர் விடுமுறை கொடுக்க மறுத்து பாஸ்கரனுக்கு பணி ஒதுக்கினார். பின்னர் இன்ஸ்பெக்டர் ரமேஷ் வேலை தொடர்பாக போலீஸ் நிலையத்தில் இருந்து வெளியே சென்றுவிட்டார்.

    விடுமுறை கிடைக்காததால் விரக்தி அடைந்த சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்தார். அவர் தனது ராஜினாமா கடிதத்தை எழுதி இன்ஸ்பெக்டர் அறையில் இருந்த மேஜை மீது வைத்தார். பின்னர் அங்கிருந்த மற்ற போலீசாரிடம் பதவியை ராஜினாமா செய்து விட்டதாக கூறி அங்கிருந்து சென்றுவிட்டார்.

    அதிர்ச்சி அடைந்த போலீசார், இன்ஸ்பெக்டர் ரமேசுக்கு தகவல் தெரிவித்தனர். அவர் விரைந்து வந்து பாஸ்கரன் எழுதி வைத்திருந்த கடிதத்தை கைப்பற்றி உயர் அதிகாரிக்கு தகவல் தெரிவித்தார்.

    இதுபற்றி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். மணலியில் பணி செய்து வந்த சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் கடந்த 3 மாதத்துக்கு முன்புதான் சிட்லபாக்கம் போலீஸ் நிலையத்துக்கு மாறுதல் ஆகி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    விருகம்பாக்கத்தில் பெண்ணிடம் ரூ. 12 ஆயிரம் பறித்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போரூர்:

    விருகம்பாக்கம் நடேசன் நகரை சேர்ந்தவர் ஆனந்த ஜோதி, தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

    நேற்று முன்தினம் இரவு அவர் அருகில் உள்ள கடைக்கு சென்றார். அப்போது மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் ஆனந்தஜோதியின் கைப்பையை பறித்து தப்பிச் சென்றுவிட்டனர்.

    அதில் ரூ. 12 ஆயிரம் ரொக்கம் மற்றும் ஏ.டி.எம். கார்டு இருந்தது. இது குறிந்து ஆனந்தஜோதி விருகம்பாக்கம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் வேலுமணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்.

    நடேசன் நகர் பகுதியில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமிராவை ஆய்வு செய்தபோது அதில் கொள்ளையர்கள் உருவம் பதிவாகி இருந்தது. விசாரணையில் அவர்கள் ஆழ்வார்திருநகர் பாரதி நகரை சேர்ந்த கமலக்கண்ணன் மற்றும் அவரது நண்பர் தக்காளி என்கிற பிரபாகர் என்பது தெரியவந்தது.

    இதைடுத்து கமலக் கண்ணனை போலீசார் கைது செய்தனர். அவனிடம் இருந்து ரூ. 2 ஆயிரம், மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது. தலைமறைவான பிரபாகரை போலீசார் தேடி வருகிறார்கள். பிடிபட்ட கமலக்கண்ணன் ஏற்கனவே குண்டர் சட்டத்தில் கைதானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    நில மோசடி வழக்கில் ரவுடி ஸ்ரீதரின் மனைவி கைது செய்யப்பட்டுள்ளார். அவருடன் உறவினர் 4 பேரும் கைதாகி உள்ளனர்.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரத்தை அடுத்த திருப்பருத்திகுன்றம் பகுதியைச் சேர்ந்தவர் ரவுடி ஸ்ரீதர். இவர் மீது கொலை, கொலை முயற்சி, நில அபகரிப்பு உள்ளிட்ட பல வழக்குகள் இருந்து வந்த நிலையில் வெளிநாடுகளுக்கு தப்பி சென்று தலைமறைவாக வாழ்ந்து வந்தார்.

    அவருக்கு சொந்தமான ஏறத்தாழ 110 கோடி ரூபாய் அளவிலான சொத்துக்களை அமலாக்கதுறை முடக்கிய நிலையில் ஸ்ரீதர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கம்போடியா நாட்டில் தற்கொலை செய்து கொண்டார்.

    இந்த நிலையில் சென்னை வடபழனி பகுதியைச் சேர்ந்த லட்சுமணன் என்பவர் ஸ்ரீதரின் மனைவி மற்றும் சிலர் தன்னை பணமோசடி செய்ததாக காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

    சென்னை வடபழனி பகுதியைச் சேர்ந்த லட்சுமணனுக்கு காஞ்சீபுரம் மாவட்டம், உத்திரமேரூர் அடுத்த குமாரவாடி என்ற பகுதியில் 32 ஏக்கர் நிலம் உள்ளது. இதனை தெரிந்து கொண்ட ரவுடி ஸ்ரீதரின் மனைவி குமாரி மற்றும் சிலர் லட்சுமணனிடம் மிரட்டல் விடுத்து 32 ஏக்கர் நிலத்தை 15 கோடிக்கு விற்க கேட்டுள்ளனர்.

    பின்னர் அவர்கள் 11 கோடி மட்டுமே கொடுத்துள்ளனர். கடந்த 1 வருட காலமாக மீதமுள்ள 4 கோடியை லட்சுமணன் கேட்டதற்கு தரமுடியாது என மிரட்டியுள்ளனர்.

    இதனையடுத்து ஸ்ரீதரின் மனைவி குமாரி, உறவினர்கள் அருள், நிர்மலா மற்றும் மகேந்திரன், கண்ணன் ஆகியோர் மீது 4 கோடி மோசடி செய்து கொலை மிரட்டல் விடுத்ததாக சாலவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

    இதனையடுத்து விசாரணை மேற்கொண்ட சாலவாக்கம் போலீசார் அவர்கள் 5 பேரையும் கைது செய்து செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.

    ரவுடி ஸ்ரீதர் இறந்த பிறகு காஞ்சீபுரத்தில் அடுத்த தாதாவாக உருவாகுவதற்கு மோதல் சம்பவங்கள் நடந்து வரும் நிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானி ஸ்ரீதரின் ஆதரவாளர்கள் மற்றும் அவரை சார்ந்த வர்கள் ஆகியோர்களை கண்காணிப்பதற்கென்றே காஞ்சீபுரம் மாவட்ட போலீசில் தனிப்படை உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருவதாகவும் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    ஆண்டாள் குறித்து சர்ச்சை தொடர்பாக கவிஞர் வைரமுத்து வீட்டுமுன்பு போராட்டம் நடத்திய இந்து அமைப்பினர் 50 பேர் கைது செய்யப்பட்டனர்.
    திருவான்மியூர்:

    ஆண்டாள் பற்றிய கவிஞர் வைரமுத்துவின் கருத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. வைரமுத்துவுக்கு எதிராக பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. போலீஸ் நிலையங்களிலும் அவருக்கு எதிராக புகார் தெரிவிக்கப்பட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.

    இதற்கிடையே ஆண்டாள் குறித்த குற்றச்சாட்டுக்கு விளக்கம் அளித்து வைரமுத்து உருக்கமுடன் பேசிய வீடியோ நேற்று வெளியானது. அதில் ‘‘பக்தி இல்லாத எனக்கு சக்தி தந்தவள் ஆண்டாள், என் தாயையும், ஆண்டாளையும் சமமாகவே கருதுகிறேன். தமிழ் சமூகம் என்னை சந்தேகப்படலாமா?’’ என்று வேதனையுடன் விளக்கம் அளித்து இருந்தார்.

    இந்த நிலையில் திருவான்மியூர் டைகர் வரதாச்சாரிய 1-வது குறுக்குத் தெருவில் உள்ள வைரமுத்து வீட்டு முன்பு போராட்டம் நடத்தப்போவதாக அகில பாரத இந்து மகா சபை அமைப்பினர் அறிவித்து இருந்தனர்.

    அதன்படி இன்று மதியம் அமைப்பின் மாநில துணைத் தலைவர் டன்லப் குமார் தலைமையில் 50-க்கும் மேற்பட்டோர் வைரமுத்து வீட்டை முற்றுகையிட திரண்டு வந்தனர்.

    அவர்களை பாதுகாப்புக்கு நின்ற போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது போலீசாருக்கும், இந்து அமைப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.

    இந்து அமைப்பினர் போராட்டத்தையடுத்து அடையாறு துணைகமி‌ஷனர் ரோகித்நாத், உதவிகமி‌ஷனர் அசோகன் தலைமையில் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் அங்கு குவிக்கப்பட்டு இருந்தனர்.
    குடியரசு தின விழா வருகிற 26-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதையடுத்து சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு இருக்கிறது.
    ஆலந்தூர்:

    வருகிற 26-ந்தேதி குடியரசு தினவிழா கொண்டாடப்படுகிறது.

    இதையடுத்து நாடு முழுவதும் உள்ள முக்கிய இடங்களுக்கு பாதுகாப்பை அதிகரிக்கும்படி மத்திய உளவுத்துறை உத்தரவிட்டுள்ளது.

    இதையடுத்து சென்னை விமான நிலையத்தின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. பயணிகள் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகிறார்கள். உடமைகளும் கடும் சோதனைக்கு உட்படுத்தப்படுகிறது.

    பார்வையாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. இன்று முதல் 30-ந்தேதி வரை அமலில் இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    துப்பாக்கி ஏந்திய மத்திய தொழிற்பாதுகாப்பு படை போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுகிறார்கள். மேலும் மோப்ப நாய் மூலம் விமான நிலையம் முழுவதும் சோதனை செய்யப்படுகிறது. #TamilNews
    ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை கமிஷன் செயல்படுவதால் யாரும் கருத்து தெரிவிக்கவேண்டாம் என ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள்விடுத்து உள்ளார். #OPanneerselvam #Jayalalithaa #ADMK
    ஆலந்தூர்:

    தமிழக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவர், நிருபர்களிடம் கூறியதாவது:-

    பெட்ரோலிய பொருட்களை ஜி.எஸ்.டி.யில் இணைக்கவிடாமல் தமிழக அரசு எதிர்க்கவில்லை. ஜி.எஸ்.டி.யில் பெட்ரோலிய பொருட்களை இணைத்தால் விலை குறையும் என்று யார் சொன்னது?.

    பெட்ரோல், டீசல் விலையை கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப எண்ணெய் நிறுவனங்கள்தான் நிர்ணயம் செய்வார்கள். மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழக அரசின் வரிகள் குறைவாகத்தான் இருக்கிறது.

    வன்முறையை தூண்டும் வகையில் யாரும் கருத்துக்களை தெரிவிக்கக்கூடாது. முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன் கூறிய கருத்துக்காக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

    ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டு உள்ளது. நீதியரசர் ஆறுமுகசாமி விசாரித்துக்கொண்டு இருக்கிறார். விசாரணை முடிந்தபின்னர்தான் முழு விவரங்களும் தெரிய வரும். அதற்கு முன்னால் கருத்துகள் சொல்வது சரியாக இருக்காது. அது விசாரணைக்கு குறுக்கீடாக இருக்கும்.

    எனவே ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை கமிஷன் செயல்படுவதால் யாரும் கருத்துக்களை பதிவிட வேண்டாம். எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் உரிய விளக்கம் அளிக்கப் படும்.

    இவ்வாறு அவர் கூறினார். 
    காஞ்சீபுரம் ரவுடி கொலையில் 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் ரவுடி நிவாஸ்கானை அவர்கள் கொலை செய்ததை ஒப்புக் கொண்டனர்.

    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் திருக்காலி மேடு எம்.ஜி.ஆர். நகர் பகுதியைச் சேர்ந்த நிவாஸ் கான் (25) ரவுடி. இவர் கடந்த 15-ந் தேதி மாலை மர்ம கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார். குற்றவாளிகளை பிடிக்க 4 இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

    இந்த நிலையில் கொலை தொடர்பாக திருக்காலிமேடு பகுதியைச் சேர்ந்த தனுஷ், வெள்ளைமோகன், செல்லா ஆகியோரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது ரவுடி நிவாஸ்கானை அவர்கள் கொலை செய்ததை ஒப்புக் கொண்டனர்.

    இது குறித்து போலீசார் கூறுகையில், ரவுடி வெள்ளைமோகனுக்கும் நிவாஸ்கானுக்கும் முன் விரோதம் இருந்தது. இதேபோல் தனுஷ் மற்றும் செல்லாவுக்கும் நிவாஸ்கான் மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் 3 பேரும் சேர்ந்து நிவாஸ்கானை தீர்த்து கட்ட திட்டம் போட்டனர். சில நாட்களாக கண்காணித்து வந்த அவர்கள் கடந்த 15-ந் தேதி தனியாக வந்த நிவாஸ்கானை அரிவாளால் வெட்டி கொலை செய்து உள்ளனர். 

    இவ்வாறு போலீசார் தெரிவித்தனர். #tamilnews

    ஸ்ரீபெரும்புதூரை அடுத்த ராமபுரத்தில் கல்லூரி பஸ் நிலைதடுமாறி கவிழ்ந்தது. இதில் பஸ்சில் இருந்த பெண்கள் உள்பட 15 பேர் படுகாயம் அடைந்தனர்.

    ஸ்ரீபெரும்புதூர்:

    ஸ்ரீபெரும்புதூரை அடுத்த தண்டலம் பகுதியில் தனியார் என்ஜினீயரிங் கல்லூரி இயங்கி வருகிறது. திருவள்ளூர் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் இருந்து பணிபுரியும் ஊழியர்களை கல்லூரி பஸ் மூலம் இன்று காலை ஏற்றி வந்தனர். பஸ்சில் 30 பெண்கள் உள்பட 40 பேர் இருந்தனர்.

    ஸ்ரீபெரும்புதூரை அடுத்த ராமபுரம் என்ற இடத்தில் வந்த போது கட்டுப்பாட்டை இழந்த பஸ் நிலைதடுமாறி கவிழ்ந்தது. இதில் பஸ்சில் இருந்த பெண்கள் உள்பட 15 பேர் படுகாயம் அடைந்தனர்.

    அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் விபத்தில் சிக்கியவர்களை மீட்டனர். அவர்களுக்கு ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து ஸ்ரீபெரும்புதூர் இன்ஸ்பெக்டர் நடராஜன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். #tamilnews

    என்ஜினீயரிங் படிக்க முடியாத ஏக்கத்தில் மாணவி தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் அடுத்த ஓரிக்கை பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன். இவரது மகள் ஐஸ்வர்யா (19). ஏனாத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் படித்து வந்தார்.

    இவரின் அண்ணன் என்ஜினீயரிங் படித்து வருகிறார். இதனால் ஐஸ்வர்யாவும் என்ஜினீயரிங் படிக்க ஆசைப்பட்டார். ஆனால் அவரை பெற்றோர் பி.காம். சேர்த்தனர்.

    இதனால் மனவேதனையில் இருந்த ஐஸ்வர்யா சரிவர படிப்பில் கவனம் செலுத்தாமல் இருந்ததாக தெரிகிறது.

    இந்த நிலையில் மனஉளைச்சலில் இருந்த ஐஸ்வர்யா உடலில் மண்எண்ணை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.இது குறித்து காஞ்சீபுரம் தாலுகா போலீஸ் இன்ஸ் பெக்டர் வெற்றிச்செல்வன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    காஞ்சீபுரத்தில் பஸ் நிலையம் அருகே பிரசித்தி பெற்ற கச்சபேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் குளத்தில் சுமார் 25 வயது மதிக்கத்தக்க பெண் பிணமாக கிடந்தார்.

    இது குறித்து கோவில் செயல் அலுவலர் கோவிந்த ராஜ் பெரிய காஞ்சீபுரம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பழனி விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோ தனைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.

    பிணமாக கிடந்த பெண் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? கொலை செய்யப்பட்டாரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews

    பொங்கல் பண்டிகையையொட்டி 3 நாட்கள் தொடர் விடுமுறை வந்ததால் வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு 89 ஆயிரம் பேர் பார்வையிட வந்ததாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
    ஆலந்தூர்:

    பொங்கல் பண்டிகையையொட்டி 3 நாட்கள் தொடர் விடுமுறை வந்ததால் சென்னையை அடுத்த வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு பொதுமக்கள் வருகை அதிகரித்துள்ளது.

    பொங்கல் பண்டிகையன்று (14-ந் தேதி) 14 ஆயிரத்து 88 பேரும், மாட்டு பொங்கலன்று (15-ந் தேதி) 31 ஆயிரத்து 339 பேரும், காணும் பொங்கலன்று (நேற்று) 5 ஆயிரத்து 705 சிறுவர்கள் உள்பட 43 ஆயிரத்து 735 பேரும் என மொத்தம் 89 ஆயிரத்து 162 பேர் வண்டலூர் உயிரியல் பூங்காவை பார்வையிட வந்ததாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். #tamilnews

    காஞ்சீபுரத்தில் நேற்று இரவு 5 பேர் கொண்ட கும்பலால் ரவுடி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் திருக்காலிமேடு எம்.ஜி.ஆர். நகர் பகுதியைச் சேர்ந்தவர் கமல்கான். இவரது மகன் நிவாஸ்கான் (25). பிரபல ரவுடி.

    இவர் மீது 2 கொலை வழக்குகள் மற்றும் ஆறு கொலை முயற்சி வழக்குகள் காஞ்சி தாலுக்கா காவல் நிலையம், விஷ்ணுகாஞ்சி காவல் நிலையம் மற்றும் பாலுசெட்டி காவல் நிலையத்தில் உள்ளன.

    நேற்று மாலை நிவாஸ் கான் மோட்டார் சைக்கிளில் திருக்காலிமேடு எம்.ஜி.ஆர்.நகர் வழியாக சென்றார். அப்போது 2 மோட்டார் சைக்கிளில் வந்த 5 பேர் கும்பல் திடீரென அவரை வழிமறித்தனர்.

    அவர்கள் கத்தி மற்றும் அரிவாளால் நிவாஸ்கானை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடி விட்டனர். ரத்த வெள்ளத்தில் துடித்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். போகும் வழியிலேயே நிவாஸ்கான் பரிதாபமாக உயிரிழந்தார்.

    நேற்று முன்தினம் பிள்ளையார்பாளையம் பகுதியில் திருநாவுக்கரசு என்பவரை சிலர் அரிவாளால் வெட்டினர். இதில் படுகாயம் அடைந்த அவர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்த வழக்கில் பிரபா, காக்கா சுரேஷ் ஆகிய இருவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதை தொடர்ந்து நேற்று இரவு ரவுடி கொலை செய்யப்பட்டது காஞ்சீபுரம் மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

    ரவுடி நிவாஸ்கானை பழிக்குப்பழியாக தீர்த்து கட்டி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். அவர்களுடன் மோதலில் இருந்தவர்கள் யார்-யார்? என்ற விவரத்தை போலீசார் சேகரித்து வருகிறார்கள்.

    இது தொடர்பாக காஞ்சீபுரம் நகர துணை போலீஸ் சூப்பிரண்டு முகிலன் மேற்பார்வையில் காஞ்சீபுரம் தாலுக்கா போலீஸ் இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி தேடி வருகிறார்.
    ×