search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "woman money robbery"

    பெரம்பூர் அருகே மொபட் சீட்டை உடைத்து பெண்ணிடம் ரூ.4 லட்சம் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெரம்பூர்:

    புளியந்தோப்பு பட்டாளம் ராமானுஜம் காலனியை சேர்ந்தவர்வேல் முருகன். குவைத்தில் இருக்கிறார். இவருடைய மனைவி ராஜலட்சுமி.

    நேற்று மதியம், ராஜலட்சுமி பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலையில் உள்ள ஒரு வங்கியில் ரூ.4 லட்சம் எடுத்தார். அதை தனது மொபட் சீட்டின் அடியில் உள்ள பெட்டியில் வைத்து பூட்டினார்.

    அங்கிருந்து போங்கல்ஸ் சாலையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்றார். மொபட்டை ஆஸ்பத்திரிக்கு வெளியே நிறுத்தி விட்டு உள்ளே சென்றார்.

    அங்கு சிகிச்சை பெற்று வந்த தனது உறவினரை பார்த்தார். சிறிது நேரம் கழித்து வெளியே வந்த ராஜலட்சுமி மொபட்டில் வீடு திரும்பினார்.

    பணத்தை எடுப்பதற்காக சீட்டை திறந்த போது, பூட்டு உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ.4 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜலட்சுமி ஓட்டேரி போலீசில்புகார் செய்தார். அவர்கள் வழக்குப்பதிவு செய்து கொள்ளையனை தேடி வருகிறார்கள்.

    மதுராந்தகம் அருகே ஓடும் பஸ்சில் பெண்ணிடம் ரூ.1 லட்சம் கொள்ளையடித்த 4 பெண்களை போலீசார் கைது செய்தனர்.

    மதுராந்தகம்:

    மதுராந்தகம் அருகே உள்ள கொளம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுபா. இவர் அடகு கடையில் வைத்திருந்த நகையை மீட்பதற்காக ரூ.1 லட்சத்தை பையில் வைத்துக் கொண்டு அரசு பஸ்சில் (டி 7) மதுராந்தகம் நோக்கி சென்றார்.

    பஸ்சில் கூட்டம் அதிகமாக இருந்தது. அவர் பஸ் நிலையத்தில் இறங்கிய போது வைத்திருந்த பணப்பையை காணவில்லை. அதனை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றிருப்பது தெரிந்தது.

    இது குறித்து மதுராந்தகம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் அந்தோணி சாமி மற்றும் போலீசார் விரைந்து வந்து பஸ் நிலையத்தில் நின்றவர்களிடம் விசாரணை நடத்தினர்.

    அப்போது மதுரையை சேர்ந்த உஷா, கல்யாணி, அனிதா, அபிராமி ஆகியோர் பஸ்சில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி சுபாவிடம் இருந்த ரூ.1 லட்ச பணப்பையை திருடிச் சென்றது தெரிந்தது.

    அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்து பணத்தை மீட்டனர்.

    சுவாமிமலையில் ஏ.டி.எம்மில் பணம் எடுத்து கொடுப்பது போல் பெண்ணை ஏமாற்றி ரூ.10 ஆயிரம் திருடிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சுவாமிமலை:

    பாபநாசம் தாலுக்கா திருவைக்காவூர் ஊராட்சி தேவனோடை களத்துமேட்டு தெருவை சேர்ந்தவர் காசிராஜன் மனைவி ஜோதி (வயது 42). இவர் இன்று காலை கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு உறவினரை பார்த்துவிட்டு வந்தார்.

    பின்னர் சுவாமிமலை சன்னதி தெருவில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட ஒரு வங்கி அருகில் உள்ள ஏ.டி.எம்மில் பணம் எடுக்க சென்றார். அப்போது அங்கு நின்றிருந்த ஒரு வாலிபரிடம் தனது ஏ.டி.எம். கார்டை கொடுத்து ரூ.1500 பணம் எடுத்து தர கேட்டுக்கொண்டார்.

    பின்னர் அதற்கு ரசீது வரவில்லை என்று ஜோதி கூறியதால் மீண்டும் அவரிடமிருந்து ஏ.டி.எம்.கார்டை வாங்கிய வாலிபர் ரசீதை எடுத்து கொடுப்பது போல் போக்குகாட்டி அவரது கணக்கில் இருந்து ரூ.10 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு அவசர அவசரமாக கார்டை கொடுத்துவிட்டு அவ்வழியே வந்த ஒருவரிடம் மோட்டார் சைக்கிளில் லிப்ட் கேட்டு ஏறி சென்று விட்டாராம்.

    இதனால் சந்தேகம் அடைந்த ஜோதி சத்தம்போடவே அருகில் இருந்தவர்கள் வந்து விசாரித்த போது ஜோதியின் கணக்கில் இருந்து ரூ.10 ஆயிரத்தை வாலிபர் ஏமாற்றி எடுத்து சென்றது தெரியவந்தது.

    இதுபற்றி ஜோதி சுவாமிமலை போலீசில் புகார் கொடுத்தார். இன்ஸ்பெக்டர் ரேகா ராணி வழக்குப்பதிவு செய்து வங்கிஇன்றும் நாளையும் விடுமுறை என்பதால் திங்கட்கிழமை ஏ.டி.எம்.மில் உள்ள கேமிரா காட்சிகளை கைப்பற்றி தப்பி ஓடிய வாலிபர் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். பணத்தை பறிகொடுத்த ஜோதியின் கணக்கில் ரூ.15 ஆயிரம் மட்டும் இருந்தது. அதிலும் 10 ஆயிரம் பறிபோனதால் அவர் கதறி அழுதார்.

    இந்த வங்கியின் ஏ.டி.எம்.மில் காவலாளி இல்லை. இதே ஏ.டி.எம்.மில் இதுபோல 3 முறை பணம் பறிப்பு சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    ஊத்துக்கோட்டையில் பஸ்சில் பயணம் செய்த பெண்ணிடம் இருந்து ரூ.20 ஆயிரம் பணம் மற்றும் செல்போனை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
    ஊத்துக்கோட்டை:

    ஊத்துக்கோட்டை ரெட்டித் தெருவை சேர்ந்தவர் சண்முகம். இவரது மனைவி ‌ஷகிலா இவர்களது உறவினர் திருமண நிச்சயதார்த்தம் ஆந்திர மாநிலம் பிச்சாட்டூரில் நடைபெற்றது.

    இதில் ‌ஷகிலா குழந்தைகளுடன் கலந்து கொண்டார். பின்னர் ஊத்துக்கோட்டைக்கு புறப்பட்டார். அப்போது அவரது பெற்றோர் குடும்ப செலவுக்காக ரூ.20 ஆயிரம் கொடுத்தனர்.

    அதனை ‌ஷகிலா பையில் வைத்து கொண்டு தனியார் பஸ்சில் ஏறி ஊத்துக்கோட்டைக்கு வந்தார். அண்ணாசிலை பஸ் நிறுத்தத்தில் இறங்கிய அவர் அங்குள்ள கடையில் வீட்டு உபயோக பொருட்கள் வாங்க பையை திறந்து பார்த்தார். அப்போது ரூ.20 ஆயிரம் இருந்த மணிபர்சை காணவில்லை. செல்போனும் மாயமாகி இருந்தது.

    பணம் இருப்பதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் பின் தொடர்ந்து வந்து பஸ்சில் பயணம் செய்த போது பணத்தை கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிந்தது.

    இது குறித்து ‌ஷகிலா ஊத்துக்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் நித்தியானந்தம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    தேனி அருகே பெண்ணிடம் பணம் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தேனி:

    தேனி அருகே சடையபட்டி மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் கணேசன் மனைவி பவுன்தாய் (வயது 35). பழனிசெட்டிபட்டி பகுதியில் உள்ள ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்க சென்றார். அப்போது அங்கு நின்றிருந்த வாலிபரிடம் பணம் எடுத்து தருமாறு கூறியுள்ளார்.

    இதனையடுத்து பவுன்தாயிடம் கார்டைப் பெற்று ஏ.டி.எம். மையத்தில் ரூ.15 ஆயிரத்தை எடுத்து அவரிடம் கொடுத்துள்ளார். சிறிது தூரம் நடந்து சென்ற போது அவரை பின் தொடர்ந்த வாலிபர் திடீரென பணத்தை பறித்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில தப்பி ஓடி முயன்றார்.

    இதனால் அதிர்ச்சியடைந்த பவுன்தாய் திருடன்.. திருடன்... என கூச்சலிட்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஒன்று கூடினர். அந்த வாலிபரை விரட்டி பிடித்து பழனிசெட்டிபட்டி போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணையில் அவர் போடியைச் சேர்ந்த ஈஸ்வரன் என தெரிய வந்தது. அவரை கைது செய்தனர்.

    ×