என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    மேடவாக்கம் அருகே லாரி மோதி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தாம்பரம்:

    மேடவாக்கத்தை அடுத்த சித்தலப்பாக்கத்தை சேர்ந்தவர் ஆஷிப் பாஷா (வயது 27). தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். நேற்று இரவு அவர் தாம்பரத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் வந்தார். காமராஜபுரம், வேளச்சேரி மெயின் ரோட்டில் சிக்னல் அருகே வந்த போது அங்கு நின்ற லாரியை டிரைவர் பின் நோக்கி இயக்கினார்.

    அப்போது ஆஷிப் பாஷா வந்த மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவரை மீட்டு தாம்பரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இன்று காலை ஆஷிப் பாஷா பரிதாபமாக இறந்தார். இது குறித்து குரோம்பேட்டை போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் கண்ணகி நகரை சேர்ந்த குமாரை கைது செய்தனர்.

    தரமான கல்வி, சுகாதாரம் வழங்குவதே அரசின் கடமை, மதுவை விற்கும் அரசு திருடன் தான் என்று மாணவர்கள் மத்திய கமல்ஹாசன் பேசியிருப்பது அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
    தாம்பரம்:

    நடிகர் கமல்ஹாசன் வருகிற 21-ந்தேதி முதல் அரசியல் சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார். அதற்காக மாணவர்களை சந்தித்து ஆதரவு திரட்ட முடிவு செய்தார். முதல் கட்டமாக அவர் தாம்பரத்தில் சாய்ராம் என்ஜினீயரிங் கல்லூரியில் நடந்த கருத்தரங்கில் பங்கேற்றார்.

    அப்போது மாணவர்கள் மத்தியில் கமல்ஹாசன் பேசியதாவது:-

    மாணவர்கள் மத்தியில் பேசும் போது எனக்கு தைரியம் அதிகரிக்கிறது. நான் இங்கு தலைவனாகவோ, அரசியலுக்கு வருகிறேன் என்றோ கூறவரவில்லை. நீங்கள் அரசியலுக்கு வாருங்கள் என்று அழைக்க வந்துள்ளேன்.

    நாட்டு நடப்பை பார்க்க தொடங்குங்கள். அது உங்களின் கடமை. நான் தனியாக நிற்க மாட்டேன். நீங்கள் தான் நான். நாடு, படிப்பு, கல்வி கெட்டுப்போய் விட்டது என்று பேசுவதோடு நிற்கக்கூடாது. தவறை இன்றே சரி செய்ய வேண்டும்.

    தரமான கல்வி, சுகாதாரம் வழங்குவதே அரசின் கடமை மதுவை விற்கும் அரசு திருடன் தான். அரசியல்வாதிகள் ஏழ்மையை ஒழிப்பதாக உறுதியளித்தனர். ஆனால் அவர்களின் ஏழ்மையைத் தான் ஒழித்தனர். சுவிட்சர்லாந்து வங்கி கணக்கில் பணத்தை பதுக்கியுள்ளனர். மக்களின் ஏழ்மை அகற்றப்படவில்லை.

    மனஓட்டம், உருவ அமைப்பு, பேச்சுத்திறனை வைத்து அரசியல் வாதியை எடைபோடக்கூடாது. நாட்டை கொள்ளையடிப்பவர்களை அடையாளம் காண தெரிந்து கொள்ளுங்கள்.

    அமைதியாக அரசியல் மாற்றத்தை ஏற்படுத்திய காந்தி எனக்கு பிடித்த தலைவர். காமராஜர், பெரியார், எம்.ஜி.ஆர்., கருணாநிதி ஆகியோரையும் எனக்கு பிடிக்கும். இன்னும் பலரை பிடிக்கும். அதுபற்றி கூறினால் அரசியலாகி விடும்.

    நான் இயக்குனராக நினைத்தேன். என்னை நடிகனாக சொன்னது கே.பாலசந்தர். கடமையை புரிந்து கொள்ள அனுபவம் தேவை. அது அனுபவத்தில் தான் கிடைக்கும். நேர்மை என்பது எளிமையான வி‌ஷயம். அதற்காக தியாகங்களை செய்ய வேண்டும். அவற்றை செய்திருக்கிறேன்.

    மாற்றம் எங்கிருந்து செய்யப்பட வேண்டும். அதற்கு நீங்கள் என்ன செய்ய வேண்டும்? என நீங்கள் யோசிக்க வேண்டும். விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். விழித்திருத்தல் எப்போதும் முக்கியம். உங்கள் உதவி இல்லாமல் நாங்கள் செய்ய வேண்டியதை செய்ய முடியாது என்பதை மறந்து விடாதீர்கள்.

    நாம் தலைவர் என்ற குரல் உங்கள் மனதில் இருக்க வேண்டும். நீங்கள் பங்கு பெறாததால் ஏற்பட்ட பங்கங்களை எல்லாம் நீங்கள் சரிசெய்ய வேண்டிய நேரம் வந்து விட்டது என்றே நான் கருதுகிறேன்.




    2019-ம் ஆண்டிலோ அல்லது 2020-ம் ஆண்டிலோ இல்லை. இன்று தொடங்குங்கள். அதை சொல்லத்தான் வந்துள்ளேன். மாணவர்கள் என்னோடு வாருங்கள். உங்களின் சக்தியை காட்டுங்கள். மாற்றம் தானாகவே வரும். மாற்றத்தை உங்களால் செய்ய முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

    எதனால் உங்கள் வீட்டில் தண்ணீர் வரவில்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள். ஏன் என் கல்வி நிலை இன்னமும் உயரக்கூடாது? உங்களுக்கு கிடைத்த இந்த வாய்ப்பு எல்லா குழந்தைகளுக்கும் கிடைத்ததா என பாருங்கள். ஏன் கிடைக்கவில்லை என்று கோபப்படுங்கள். களமிறங்கி இடுப்பளவு, கழுத்தளவு அந்த தண்ணீரில் இறங்கி வேலை செய்ய வேண்டிய அவசியமே கிடையாது. இங்கு களமிறங்க வேண்டிய இடம் கல்வி, சுகாதாரம் போன்றவையில் தலைகுப்புற குதிக்க வேண்டும். எப்படி டாஸ்மாக்கில் குதித்தார்களோ அதுபோல இங்கே அதை செய்ய வேண்டும்.

    அதையெல்லாம் மாற்ற வேண்டும் என்றால் உங்களால் முடியும், என்னால் முடியும் என என்னால் மார்தட்ட முடியாது. நான் தனியாக நிற்க மாட்டேன். நீங்கள் தான் நான் என்பதை நிரூபிக்கும் நேரம் வந்து விட்டது.

    அன்பே சிவம் படத்தை இப்போது எடுக்க முடியாது. எடுத்தால் வழக்கு போடுவார்கள். வறுமையின் நிறம் சிவப்பு படத்தை மீண்டும் ரீமேக் பண்ண முடியாது. இந்தியன்-2 படத்திற்கும் பிரச்சினை ஏற்படுத்துவார்கள். அரசியல்வாதிகள் பயணம் தனியாக இருக்க வேண்டும் என நினைக்கிறார்கள்.

    இன்றைக்கு தேவர் மகன் எடுக்க முடியாது. தசாவதாரம் படத்தில் வருகிற பூவராகவன் கேரக்டர் காட்ட முடியாது. எதுக்கு எடுத்தாலும் அவர்களுக்கு கோபம் வருகிறது. பேசக்கூடாது.

    பத்மாவத் படத்தை எதிர்க்கிறார்கள். நாளை நமதே என சொல்லிவிட்டு நான் எப்படி அதை வேடிக்கை பார்க்க முடியும். நமதே என சொல்வது உங்களையும் சேர்த்துதானே. பிரச்சினை செய்பவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    இனி என்னை பொதுமேடையில் அடிக்கடி பார்க்கலாம் என தாம்பரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு உதயநிதி ஸ்டாலின் பேசினார். #BusFareHike
    தாம்பரம்:

    பேருந்து கட்டண உயர்வை கண்டித்து தாம்பரம் சண்முகம் சாலையில் நடந்த தி.மு.க. ஆர்ப்பாட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார்.

    கீழே நின்ற அவரை மேடையில் ஏறுமாறு தொண்டர்கள் கூறினர். இதனால் அவர் மேடையில் ஏறி தொண்டர்களை பார்த்து கையசைத்து, “இனி என்னை அடிக்கடி மேடையில் பார்க்கலாம்” என்று கூறினார்.

    அதன்பின் கீழே இறங்கி தொண்டர்களுடன் நின்று கோ‌ஷங்கள் எழுப்பினார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், “பஸ் கட்டண உயர்வை கண்டித்து நடக்கும் இப்போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளேன். இனிமேல் தி.மு.க. நடத்தும் அனைத்து போராட்டங்களிலும் பங்கேற்பேன். தமிழக அரசு என்று ஒன்று இருக்கிறதா என்பதே தெரியவில்லை” என்றார். #Tamilnews #BusFareHike
    காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணா அரங்கில் நடந்த குடியரசு தின விழாவில் மாவட்ட கலெக்டர் பொன்னையா தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் - திருவள்ளூர் மாவட்டத்தில் குடியரசு தினவிழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

    காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணா அரங்கில் நடந்த குடியரசு தின விழாவில் மாவட்ட கலெக்டர் பொன்னையா தேசிய கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

    இதைத் தொடர்ந்து 121 பயனாளிகளுக்கு ரூ. 2 கோடியே 45 லட்சத்து 60 ஆயிரத்து 82 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் பொன்னையா வழங்கினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய்த்துறை அதிகாரி நூர் முகமது, காஞ்சீபுரம் சரக டி.ஐ.ஜி. தேன்மொழி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானி, காஞ்சீபுரம் வருவாய் கோட்ட அதிகாரி ராஜூ, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி திருவளர் செல்வி, காஞ்சீபுரம் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன் உள்பட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். பள்ளி மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடந்தது. #Tamilnews
    விருகம்பாக்கத்தில் கூவம் ஆற்றில் மிதந்த பச்சிளம் குழந்தை உடலை கைப்பற்றிய போலீசார் குழந்தை கொலை செய்யப்பட்டதா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    போரூர்:

    விருகம்பாக்கம், காளியம்மன் கோவில் தெரு கூவம் ஆற்றுபாலம் பகுதியில் இன்று காலை பச்சிளம் குழந்தை உடல் மிதந்து வந்தது.

    இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். கோயம்பேடு போலீசார் குழந்தையின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    அது ஆண் குழந்தை என்பதும் தொப்புள் கொடியுடன் இருப்பதும் தெரிந்தது. குழந்தை பிறந்த உடனேயே அதனை கூவம் ஆற்றில் வீசி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

    குழந்தையின் உடல் உப்பிய நிலையில் காணப்பட்டது. எனவே குழந்தை இறந்து 2 நாட்களுக்கு மேல் இருக்கலாம் என்று தெரிகிறது. குழந்தையின் பெற்றோர் யார்? என்று தெரியவில்லை.

    கள்ளக்காதலில் பிறந்ததால் கூவம் ஆற்றில் வீசி குழந்தை கொலை செய்யப்பட்டதா? அல்லது குழந்தை இறந்து பிறந்ததால் வீசப்பட்டதா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews

    பஸ் கட்டண உயர்வை உடனடியாக திரும்ப பெற வலியுறுத்தி காஞ்சி வடக்கு மாவட்ட தி.மு.க.வினர் தாம்பரம் சண்முகம் சாலையில் 27-ந்தேதி காலை 10 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர்.
    சென்னை:

    பஸ் கட்டண உயர்வை உடனடியாக திரும்ப பெற வலியுறுத்தி காஞ்சி வடக்கு மாவட்ட தி.மு.க.வினர் தாம்பரம் சண்முகம் சாலையில் 27-ந்தேதி காலை 10 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர்.

    காஞ்சி வடக்கு மாவட்ட கழக செயலாளர் தா.மோ. அன்பரசன் எம்.எல்.ஏ. தலைமையில் நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் ரூபி மனோகரன், சுந்தரமூர்த்தி, இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் மேகநாதன், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் மகேந்திரன், பார்த்தீபன், விடுதலை சிறுத்தைகள் தமிழரசன், ராஜ்குமார், அருள் பிரகாசம், மற்றும் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, திராவிடர் கழகம், விவசாய தொழிலாளர் கட்சி, த.மு.மு.க. உள்ளிட்ட கூட்டணி கட்சி பிரமுகர்கள் இதில் பங்கேற்கிறார்கள்.

    தாம்பரம் நகர தி.மு.க. செயலாளர் ஆர்.ராஜா வரவேற்று பேசுகிறார்.

    இதில் ஆர்.எஸ்.பாரதி எம்.பி., தீர்மானக்குழு உறுப்பினர் வைத்தியலிங்கம், சட்டமன்ற உறுப்பினர்கள் பல்லாவரம் இ.கருணாநிதி, செங்கல்பட்டு வரலட்சுமி மதுசூதனன், அரவிந்த் ரமேஷ், ஒன்றிய செயலாளர்கள் படப்பை மனோகரன், தண்டபாணி, மேடவாக்கம் ரவி, ரமேஷ்கண்ணா உள்பட பலர் பங்கேற்கிறார்கள்.

    இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் தாம்பரம் நகரமே அதிர்ந்திடும் வகையில் ஆயிரக்கணக்கில் நிர்வாகிகள் அணி திரண்டு வந்து பங்கேற்க வேண்டும் என்று மாவட்ட செயலாளர் தா.மோ.அன்பரசன் கேட்டுக்கொண்டுள்ளார். இதையொட்டி சுமார் 10 ஆயிரம் பேர்களை திரட்ட ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. #Tamilnews
    காஞ்சீபுரம் சாலைத் தெருவில் உள்ள காஞ்சி சங்கரமடத்தை விடுதலை சிறுத்தைகள், பெரியார் திராவிடர் கழகம் உள்பட சுமார் 100-க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டனர்.

    காஞ்சீபுரம்:

    சென்னையில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திரர் கலந்து கொண்டார்.

    விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போது விஜயேந்திரர் எழுந்து நிற்கவில்லை என்றும் தேசிய கீதத்தின் போது மட்டும் எழுந்து நின்றார் என்றும் சர்ச்சை எழுந்தது. இது தமிழை அவமதிப்பதான செயல் என்று பல்வேறு அமைப்பினர், அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

    இது தொடர்பாக சங்கரமடம் அளித்துள்ள விளக்கத்தில் ‘வழக்கமாக விழாக்களின் தொடக்கத்தில் கடவுள் வாழ்த்து பாடும் போது காஞ்சி சங்கராச்சாரியார்கள் ஜெயேந்திரர், விஜயேந்திரர் ஆகியோர் தியானத்தில் இருப்பது வழக்கம்.

    இதேபோலத்தான் இந்த விழாவிலும் விஜயேந்திரர் தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் போது தியானத்தில் இருந்தார். தமிழை அவமதிக்கவில்லை’ என்று தெரிவித்து இருந்தது.

    ஆனால் விஜயேந்திரர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறி பல்வேறு அமைப்பினர் தமிழகம் முழுவதும் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த நிலையில் இன்று மதியம் காஞ்சீபுரம் சாலைத் தெருவில் உள்ள காஞ்சி சங்கரமடத்தை விடுதலை சிறுத்தைகள், பெரியார் திராவிடர் கழகம், மக்கள் மன்றம் அமைப்பை சேர்ந்த பெண்கள் உள்பட சுமார் 100-க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டனர்.

    அவர்கள் விஜயேந்திரருக்கு எதிராக கோ‌ஷங்கள் எழுப்பியபடி மடத்துக்கு செல்ல முயன்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    போராட்டத்தில் ஈடுபட்டவர்களை டி.எஸ்.பி. முகிலன் தலைமையிலான போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு உருவானது.

    இதையடுத்து போராட்டக்காரர்கள் 100 பேரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து சங்கரமடம் முன்பு குவிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் சங்கர மடத்துக்கு வரும் பக்தர்களையும் கண்காணித்து வருகிறார்கள்.

    இன்று காலை வழக்கம் போல் பக்தர்கள் மடத்துக்குள் சென்று வந்தனர். மடத்தில் ஜெயேந்திரர், விஜயேந்திரர் ஆகியோர் வழக்கமான வழிபாடு மற்றும் பக்தர்களுக்கு ஆசி வழங்கினர்.

    சங்கர மடத்தின் முன்பு போலீசார் குவிக்கப்பட்டு உள்ளதால் காஞ்சீபுரம் நகரம் பரபரப்பாக காணப்படுகிறது.

    ராமேசுவரம் அக்னி தீர்த்த கடல் அருகே காஞ்சி சங்கர மடத்துக்கு சொந்தமான மடம் உள்ளது. இங்கு இன்று காலை தமிழர் தேசிய முன்னணியை சேர்ந்த இளங்கோ தலைமையில் 11 பேர் விஜயேந்திரரை கண்டித்து கோ‌ஷமிட்டவாறு உள்ளே நுழைந்தனர். அவர்கள் மடத்திற்குள் அமர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    தமிழ்தாய் வாழ்த்தை அவமதித்த விஜயேந்திரரை கைது செய்ய வேண்டும். அவர் நிபந்தனையின்றி மன்னிப்பு கேட்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்.

    உடனே அங்கு வந்த மடத்தின் மேலாளர் சுந்தர வாத்தியார், பா.ஜனதா கட்சியின் மாவட்ட செயலாளர் முரளிதரன் ஆகியோர் அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த ராமேசுவரம் கோவில் போலீசார் சம்பவ இடம் வந்து பேச்சுவார்த்தை நடத்தி ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களை அங்கிருந்து வெளியேற்றினர்.

    தஞ்சை புதிய பஸ் நிலையத்தில் உள்ள பெரியார் சிலைக்கு முன்பு இன்று காலை தமிழ் மாணவர் அமைப்பை சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோர் வந்தனர். அவர்கள் விஜயேந்திர சுவாமிகளின் உருவ படத்தை எரித்தனர்.

    தமிழ்த்தாய் வாழ்த்தை விஜயேந்திரர் அவமதிப்பதை கண்டித்து கோ‌ஷங்கள் எழுப்பினர். #tamilnews


    கஜானா குறிக்கோள் இல்லை என்று சொல்லும் கமல்ஹாசன் தான் வாழ்நாளில் பாதிநாட்கள் சினிமாவில் நடித்து கஜானாவை நிரப்பி உள்ளார் என்று தமிழக பா.ஜனதா கட்சி தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

    ஆலந்தூர்:

    தமிழக பா.ஜனதா கட்சி தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னை விமான நிலையத்தில் கூறி இருப்பதாவது:-

    பஸ் கட்டண உயர்வை கண்டித்து பா.ஜனதா சார்பில் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டத்திலும் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

    இந்த பஸ் கட்டண உயர்வு பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதனை அரசு திரும்ப பெற வேண்டும்.

    போக்குவரத்து துறையே ஊழலால் நிறைந்து இருக்கிறது அதை லாபகரமாக மாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பா.ஜனதா எப்போதும் தமிழ்நாட்டு மக்களுடன் இருக்கிறது. மத்தியிலும் பெரும்பாலான மாநிலங்களில் பா.ஜனதா ஆட்சியில் இருக்கிறது. அப்படிப்பட்ட அதிகாரத்தில் இருப்பவர்களால்தான் தமிழகத்தில் நல்ல மாற்றத்தை கொண்டு வர முடியும்.

    தற்போது பலபேர் மாற்றத்தை கொண்டுவரப் போவதாக கிளம்பி உள்ளனர். சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கின்றனர். கஜானா குறிக்கோள் இல்லை என்று சொல்லும் ஒருவர் (கமல்) தான் வாழ்நாளில் பாதிநாட்கள் சினிமாவில் நடித்து கஜானாவை நிரப்பி உள்ளார்.

    இனி தமிழகம் பரிசோதனை களமாக இருக்காது. திராவிட கட்சிகள் ஊழலால் நிரம்பி இருக்கிறது. பா.ஜனதாவால் மட்டுமே மாற்றத்தை கொண்டு வர முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார். #tamilnews

    போலீசார் தன்னை பிடிக்க வந்ததால் அவர்களிடம் இருந்து தப்பிக்க மின் கம்பத்தில் ஏறி கிளீனர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    திருவான்மியூர்:

    நீலாங்கரையை அடுத்த கானத்தூர் இந்திரா நகரில் வசித்து வருபவர் ரவி (வயது 25). தனியார் கழிவுநீர் லாரியில் கிளீனராக வேலை பார்த்து வருகிறார். இவரது சொந்த ஊர் திருநெல்வேலி ஆகும்.

    இவர் கடந்த வாரம் இரவில் லாரியை கானத்தூரில் உள்ள சினிமா தியேட்டர் எதிரில் நிறுத்திவிட்டு மது குடித்தார். பின்னர் லாரியிலேயே தூங்கினார்.

    அப்போது அங்கு வந்த போலீசார் சந்தேகத்தின் பேரில் ரவியை பிடித்து சென்றனர். அதன்பிறகு அவரை விட்டுவிட்டனர்.

    இந்த நிலையில் ரவி மீது ரவுடி என்று வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வந்தனர். ஆனால் அவர் போலீசில் சிக்காமல் இருந்கார்.

    இந்த நிலையில் நேற்று மதியம் ரவி வேலை முடிந்து சென்று கானத்தூர் பகுதியில் மது குடித்துக் கொண்டிருந்தார். அப்போது அவரை தேடி போலீசார் சென்றனர். போலீசாரை பார்த்ததும் ரவி ஓடினார். போலீசார் அவரை துரத்தினார்கள்.

    இதனால் ரவி மின் கம்பத் தில் ஏறி உயர் அழுத்த மின் கம்பியை பிடித்தார். அவர் மின்சாரம் தாக்கி உடல் கருகிய நிலையில் தூக்கி வீசப்பட்டார். உடனே அவரை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவரது நிலை கவலைக்கிடமான நிலையில் உள்ளது. #tamilnews

    காஞ்சீபுரம் அருகே உள்ள திருப்புட்குழியில் விஜயராகவ பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோயிலில் திருப்பணிகள் செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது.

    காஞ்சீபுரம் அருகே உள்ள திருப்புட்குழியில் விஜயராகவ பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோயிலில் திருப்பணிகள் செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. 

    விழாவிற்கான ஏற்பாடுகளை வேலூர் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் பெ.அசோக் குமார், காஞ்சீபுரம் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் க.ரமணி, இந்துசமய அறநிலையத்துறை ஆய்வர் ஜெ.சுரேஷ்குமார், கோயில் செயல் அலுவலர் ந.தியாகராஜன் ஆகியோர் செய்திருந்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் 1868 மையங்களில் சுமார் 3 லட்சத்து 39 ஆயிரத்து 730 குழந்தைகளுக்கு போலியோ சொட்டுமருந்து வழங்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பா.பொன்னையா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:-

    போலியோ சொட்டு மருந்து முதல்கட்டமாக வருகிற 28-ந்தேதி (ஞாயிற்றுக் கிழமை) இரண்டாம் கட்டமாக வரும் மார்ச் மாதம்11-ந்தேதியும் வழங்கப்பட உள்ளது. காஞ்சீபுரம் மாவட்டத்தில் 1868 மையங்களில் சுமார் 3 லட்சத்து 39 ஆயிரத்து 730 குழந்தைகளுக்கு போலியோ சொட்டுமருந்து வழங்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

    பேருந்து நிலையங்கள், ரெயில் நிலையங்கள், திருவிழா நடைபெறும் இடங்கள், பொழுதுபோக்கு பூங்கா ஆகிய இடங்களில் தனியாக முகாம்கள் அமைக்கப்பட்டு அங்கு வரும் குழந்தைகளுக்கு போலியோ சொட்டுமருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வெளிமாநிலங்களில் இருந்து கட்டுமான பணிக்காக வந்துள்ள பணியாளர்களின் குழந்தைகள் எண்ணிக்கை தனியாக கணக்கிடப்பட்டு அவர்களுக்கு சொட்டுமருந்து வழங்க 29 நடமாடும் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #tamilnews
    பொத்தேரி தனியார் கல்லூரி விடுதி மாடியில் இருந்து குதித்து மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    செங்கல்பட்டு:

    தாம்பரத்தை அடுத்த பொத்தேரியில் எஸ்.ஆர்.எம். கல்லூரி செயல்பட்டு வருகிறது.

    இங்கு ஆந்திராவைச் சேர்ந்த சாய்நித்தின் (வயது21) என்ற மாணவர் பி.இ. 4-ம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரி விடுதியிலேயே தங்கி இருந்தார்.

    நேற்று இரவு கல்லூரி விடுதியின் 3-வது மாடியில் இருந்து திடீரென்று கீழே குதித்தார். ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய அவரை அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    அவர் கடந்த செமஸ்டர் தேர்வில் காப்பி அடித்ததாகவும், பேராசிரியர்கள் அவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்ததால் தற்கொலை செய்தாகவும் மாணவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் போலீசார் இதை உறுதி செய்யவில்லை.

    கல்லூரி விடுதி மாடியில் இருந்து குதித்து மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு நிலவுகிறது. #tamilnews
    ×