என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    சென்னை விமான நிலையத்துக்கு சவுதியில் இருந்து வந்த விமானத்தில் சட்ட விரோதமாக கொண்டு வரப்பட்ட ரூ. 1,16 கோடி மதிப்புள்ள தங்க கம்பிகளை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
    ஆலந்தூர்:

    சவுதி அரேபியா ஜெட்டாவில் இருந்து ரைபி சையத்(43), என்பவர் குவைத் ஏர்லைன்ஸ் விமானத்தில் சென்னை வந்தடைந்தார்.

    சென்னை விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகள் சோதனையில் ரைபி சையத் தங்கம் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதிகாரிகள் அவனிடம் நடத்திய சோதனையில் 3.8 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

    39 தங்க கம்பிகளை பேரீட்ச்சம் பழம் பெட்டியில் மறைத்து வைத்திருந்ததாக சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ரைபி சையத்திடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட தங்க கம்பிகளின் மதிப்பு 1,16 கோடி என்று கணக்கிடப்பட்டுள்ளது.

    இந்திய பாஸ்போர்ட் மூலம் சவுதியில் இருந்து சென்னைக்கு சட்டவிரோதமாக தங்க கம்பி கடத்தி வந்த ரைபி சையத்தை சுங்க அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா தலைவர்களை கடுமையான வார்த்தைகளால் விமர்சித்து வருகிறார். அவர் வாயை அடக்கி பேச வேண்டும் என ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியுள்ளார்.
    தாம்பரம்:

    கிழக்கு தாம்பரம் பாரத மாதா சாலை சந்திப்பில் புதிதாக நிறுவப்பட்டுள்ள காமராஜர் சிலைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பஸ்கட்டண உயர்வுக்கு எதிராக பல்வேறு கட்சிகள், மாணவர்கள் போராட்டங்கள் நடத்தினார்கள். ஆனால் அரசு கண் துடைப்புக்காக சிறிதளவு குறைத்துள்ளன. இது போதாது. முழுமையாக குறைக்க வேண்டும்.

    போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை போலீசார் கைது செய்து அடித்து இருக்கிறார்கள். இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். கைது செய்யப்பட்ட மாணவர்கள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும்.

    காவிரி பிரச்சினை தொடர்பாக கர்நாடக முதல்- மந்திரி சித்தராமையாவை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேச இருப்பதாக கூறியுள்ளார். ஆனால் அவர் காவிரி பிரச்சினை பற்றி பேச செல்லவில்லை. சிறையில் இருக்கும் சசிகலாவுக்கு கூடுதல் சலுகைகள் பெறவே செல்கிறார்.

    பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா தலைவர்களை கடுமையான வார்த்தைகளால் விமர்சித்து வருகிறார். இவர் வாயை அடக்கி பேச வேண்டும். இல்லை என்றால் அவர் தமிழகத்தை விட்டு வெளியேறும் சூழ்நிலை உருவாகும்.



    மத்திய பட்ஜெட் என்பது கண்துடைப்புதான். ஜி.எஸ்.டி.யால் வியாபாரிகள், பொதுமக்கள் மற்றும் கூலி தொழிலாளர்கள் வரை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஜி.எஸ்.டி.யில் பெரிய மாற்றம் வரும் என அனைவரும் எதிர்பார்க்கிறார்கள். அது கண்துடைப்பு வேலையாகதான் இருக்கும் என கருதுகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது காஞ்சீபுரம் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சிவராமன், ஆலந்தூர் நாஞ்சில் பிரசாத் ஆகியோர் உடன் இருந்தனர். #tamilnews
    காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் சோமாஸ் கந்தர் சிலை செய்ததில் முறைகேடு தொடர்பாக தலைமறைவான ஸ்தபதியை விரைவில் பிடிக்க போலீசார் அதிரடி வியூகம் வகுத்து வருகிறார்கள்.
    காஞ்சீபுரம்:

    பிரசித்தி பெற்ற காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் புதிதாக செய்யப்பட்ட சோமாஸ்கந்தர் சிலையில் தங்கம் ஏதும் இல்லை என்று ஆய்வில் தெரிய வந்தது.

    இந்நிலையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் பெரிய காஞ்சீபுரம் காவல் நிலையம், ஏகாம்பரநாதர் கோவில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் கோவில் செயல் அலுவலர் உள்ளிட்டோர்களிடம் அதிரடி விசாரணை நடத்தினார்.

    இந்த சிலை விவகாரத்தில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. இந்தநிலையில் புதிய சிலையினை செய்த ஸ்தபதி முத்தையா திடீரென தலைமறைவானார்.

    போலீஸ் அவரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து தேடி வந்தனர். அவருக்கு அடைக்கலம் தருபவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அறிவித்து உள்ளனர். இதற்கிடையே ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் நேற்று திடீரென காஞ்சீபுரம் வந்தார். காஞ்சீபுரம் பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஸ்தபதி முத்தையாவின் உறவினர்கள் மற்றும் அவரது நண்பர்கள் 3 பேரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டார். விசாரணையில் கிடைத்த தகவல்கள் குறித்து ஏதும் வெளியிடப்படவில்லை. இதனை வைத்து ஸ்தபதி முத்தையாவை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதற்கிடையே தலைமறைவான ஸ்தபதி முத்தையா வெளிநாடு தப்பி சென்றிருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கிறார்கள். அவர் சிக்கினால்தான் இந்த சிலை விவகாரத்தில் பின்னணியில் உள்ளவர்கள் யார்? யார்? என்பது தெரிய வரும்.

    எனவே ஸ்தபதியை விரைவில் பிடிக்க போலீசார் அதிரடி வியூகம் வகுத்து வருகிறார்கள். இதனால் சிலை மோசடி விவகாரம் தற்போது சூடுபிடித்துள்ளது. #tamilnews

    மாமல்லபுரம் அருகே அடுக்குமாடி குடியிருப்பில் தனியார் கல்லூரி மாணவிகள் குளிப்பதை மாணவர் ஒருவர் வீடியோ எடுத்ததாக வெளியான தகவல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மாமல்லபுரம்:

    மாமல்லபுரத்தை அடுத்த மணமையில் தனியார் என்ஜினீயரிங் கல்லூரி உள்ளது. இங்கு படிக்கும் சுமார் 40-க்கும் மேற்பட்ட மாணவிகள் பூஞ்சேரி கூட்டுரோடு அருகே உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு வீடு எடுத்து விடுதி போல் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    இதே அடுக்குமாடி குடியிருப்பில் அதே கல்லூரியில் படிக்கும் மாணவர்களும் தனியாக வாடகைக்கு வீடு எடுத்து தங்கி உள்ளனர்.

    இந்த நிலையில் மாணவிகள் குளிப்பதை ஜன்னல் வழியாக மாணவர் ஒருவர் வீடியோ எடுத்து இருப்பதாக தகவல் பரவியது. மேலும் அதனை லேப்டாப்பில் பதிவு செய்திருப்பதும் தெரிய வந்தது.

    இதனை அறிந்த மாணவிகள் குடியிருப்பில் வசிப்பவர்களிடம் தெரிவித்தனர். அதிர்ச்சி அடைந்த அவர்கள் சந்தேகத்திற்கிடமான மாணவனின் அறைக்கு சென்று பார்த்தனர்.

    அப்போது அவர் மாயமாகி இருப்பது தெரிந்தது. இது பற்றி மாமல்லபுரம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    மாயமான மாணவர் ஆந்திரா மாநிலம் சித்தூரை சேர்ந்தவர் என்பது தெரிந்தது. அவர் விட்டுச் சென்ற லேப்டாப்பை போலீசார் சோதனை செய்ய முயன்றனர். ஆனால் அதில் பாஸ்வேர்டு போடப்பட்டிருந்ததால் அதில் இருப்பதை பார்க்க முடியவில்லை.

    இது தொடர்பாக ஆந்திர மாணவரிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்தனர். அதன் பின்னர் தான் மாணவிகள் குளிப்பதை வீடியோ படம் எடுத்தாரா என்பது பற்றிய விவரம் தெரிய வரும்.

    அவருடன் தங்கி இருக்கும் நண்பர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. #Tamilnews
    சென்னை விமான நிலையத்தில் மர்ம பையால் வெடிகுண்டு இருக்கலாம் என்ற தகவல் பரவியது. இதனால் விமான நிலையத்துக்கு வந்த பயணிகள் பீதி அடைந்தனர். #Chennaiairport

    ஆலந்தூர்:

    சென்னை விமான நிலையத்தில் உள்நாட்டு முனையம், 2-வது நுழைவு வாயில் அருகே இன்று காலை கேட்பாரற்று ஒரு பை கிடந்தது.

    அதனை பயணிகள் யாரும் எடுக்காததால் அதில் வெடிகுண்டு இருக்கலாம் என்ற தகவல் பரவியது. இதனால் விமான நிலையத்துக்கு வந்த பயணிகள் பீதி அடைந்தனர்.

    இது குறித்து மத்திய தொழிற்படை பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. கவச உடை அணிந்த வெடிகுண்டு தடுப்பு பிரிவு அதிகாரிகள் மர்ம பையை பாதுகாப்பாக எடுத்து சோதனை செய்தனர்.

    அதில் பழைய துணிகள் மட்டும் இருந்தது. வெடி குண்டு எதுவும் இல்லை. இதனால் பாதுகாப்பு அதிகாரிகள் நிம்மதி அடைந்தனர்.

    விமான நிலையத்துக்கு வந்த பயணிகள் இந்த துணிப்பையை விட்டு சென்று இருக்கலாம் என்று தெரிகிறது. இது குறித்து விமான நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இச்சம்பவத்தால் சென்னை விமான நிலையம் இன்று காலை பரபரப்பாக காணப்பட்டது. #Chennaiairport #tamilnews

    நல வாரிய தொழிலாளர்கள் நாளைக்குள் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என காஞ்சீபுரம் தொழிலாளர் உதவி ஆணையர் தெரிவித்துள்ளார்.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) ரவி ஜெயராம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:-

    மாநில அளவில் அமைப்புசாரா தொழிலாளர்கள் நலனை பாதுகாக்கும் வகையிலும் ஒழுங்குபடுத்தும் நோக்கத்திலும் அரசு நலவாரியங்கள் உருவாக்கப்பட்டு அதன் மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

    ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளதால் அரசு நலத்திட்ட உதவிகள் தடையின்றி விரைவாக தொழிலாளர்களை சென்றடைய அனைத்து தொழிலாளர்களும் கட்டாயமாக ஆதார் எண்ணை வருகிற 31-ந் தேதிக்குள் இணைக்க வேண்டும்.

    அனைத்து தொழிலாளர்களும் தங்களது உறுப்பினர் அடையாள அட்டை நகலுடன், ஆதார் அட்டை நகலையும் சேர்த்து நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகம் (சமூக பாதுகாப்பு திட்டம்), 46-பி, விளக்கடி கோயில் தெரு, (ரங்கசாமிகுளம் அருகில்), காஞ்சீபுரம் என்ற முகவரிக்கு கட்டாயம் அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் 044- 27230279 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு விவரங்களை அறிந்துகொள்ளலாம். #tamilnews  
    தமிழ்த்தாய் வாழ்த்துக்கு அவமரியாதை செய்த விஜயேந்திரர் தமிழக மக்களிடம் வெளிப்படையாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். #Vijayendrar #TamilAnthem
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரத்தை அடுத்த ஓரிக்கையில் நடந்த நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மக்கள் பிரச்சினையை விட மத்திய அரசு செயல்பாடுகள் செயல்படுத்துவதில் தமிழக அரசு அக்கறை காட்டி வருகிறது. தமிழக அரசை சுதந்திரமாக செயல்பட மத்திய அரசு அனுமதிக்க வேண்டும்.

    தமிழ்த்தாய் வாழ்த்துக்கு அவமரியாதை செய்த விஜயேந்திரர் தமிழக மக்களிடம் வெளிப்படையாக மன்னிப்பு கேட்க வேண்டும். இலங்கை அரசின் புதிய சட்டத்தால் தமிழக மீனவர்கள் பாதிக்கப்படுவார்கள்.

    இதில் பிரதமர் மோடி தலையிட்டு சர்வதேச சமூகத்தின் பார்வைக்கு இதனை கொண்டு செல்ல வேண்டும். ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகளை விடுதலை செய்ய மத்திய அரசு அனுமதிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #Vijayendrar #TamilAnthem
    தமிழகத்தில் நிர்வாக திறமை இல்லாத ஆட்சி நடக்கிறது என்று பல்லாவரத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் விஜயகாந்த் கூறினார்.
    தாம்பரம்:

    சென்னையை அடுத்த பல்லாவரத்தில் தே.மு.தி.க. சார்பில் பஸ் கட்டண உயர்வை கண்டித்து நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காஞ்சீபுரம் வடக்கு மாவட்ட செயலாளர் அனகை முருகேசன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பேசியதாவது:-

    பஸ் கட்டண உயர்வால் தமிழக மக்கள் 75 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் தற்போது அரசு பஸ்களில் செல்ல தயங்குகின்றனர். ரெயில்கள், தனியார் வாகனங்களை தான் தேர்வு செய்கின்றனர்.

    மதுரைக்கு ரூ.700 கொடுத்து டிக்கெட் எடுப்பதற்கு பதிலாக ரூ.500 அபராதம் செலுத்திவிட்டு செல்லலாம் என சமூக வலைத்தளங்களில் ஒரு செய்தி பரவி வருகிறது. அந்த அளவுக்கு பஸ் கட்டண உயர்வு மக்களிடையே வெறுப்பை ஏற்படுத்தி உள்ளது.

    நான் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பதற்காக அரசு பஸ்சில் உங்களுக்காகத்தான் வந்தேன். ஆலந்தூரில் இருந்து திரிசூலம் வருவதற்கே பஸ் கட்டணம் மிக அதிகமாக உள்ளது. மக்கள் எல்லாரும் வேதனையில் இருக்கின்றனர். பஸ் பயணத்துக்கு அதிக செலவு செய்ய மக்கள் எங்கே போவார்கள்.

    நான் லஞ்சம் வாங்கமாட்டேன். மக்களுக்கு இடையூறு இல்லாமல் இருப்பது தான் என் அரசியல். பல்வேறு பிரச்சினைகளுக்காக சில அரசியல் கட்சிகள் சாலை மறியல், ரெயில் மறியல் செய்கிறார்கள். இதெல்லாம் வேண்டாம். மக்களுக்கு இடையூறு செய்யாமல் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துங்கள்.நிர்வாக திறமை இல்லாத ஆட்சி தமிழகத்தில் நடக்கிறது. ஆட்சி நடத்த தெரியாவிட்டால் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பதவியை விட்டு சென்று விடுங்கள்.

    பஸ் கட்டணத்தை அதிக அளவு உயர்த்தி விட்டு கண் துடைப்பாக குறைத்து உள்ளனர். இந்த ஆர்ப்பாட்டம் இத்துடன் நிற்காது. மக்களுக்காக தொடரும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ஆர்ப்பாட்டத்தின் போது பஸ் கட்டணத்தை குறைக்கக்கோரி தே.மு.தி.க.வினர் கோஷங்கள் எழுப்பினர். #tamilnews
    காஞ்சீபுரம் சோமஸ்கந்தர் சிலையில் தங்கம் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரையடுத்து சிலை செய்த ஸ்தபதி முத்தையா தற்போது தலைமறைவு ஆகி உள்ளார்.

    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த ஏகாம்பரநாதர் கோவிலில் சோமாஸ் கந்தர் சிதிலமடைந்ததால் புதிய சிலை செய்யப்பட்டது.

    இந்த சிலை செய்ததில் 4.75 கிலோ தங்கம் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. அதிகாரிகள் நவீன கருவியை வைத்து சிலையை ஆய்வு செய்ததில் கடுகளவு தங்கம் கூட பயன்படுத்தப்படவில்லை என்பது தெரியவந்தது.

    இதையடுத்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல், ஏகாம்பரநாதர் கோவில் செயல் அலுவலர் முருகேசனிடம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் சுமார் 5மணி நேரத்துக்கும் மேலாக கிடுக்குப்பிடி விசாரணை மேற்கொண்டார்.

    மேலும் சிலையை செய்த ஸ்தபதி முத்தையா ஸ்தானிகர் ராஜப்பா மற்றும் செந்தில், கிருஷ்ணமூர்த்தி, சங்கர், பரத்குமார், வினோத்குமார் உள்ளிட்டோரிடமும் அதிரடி விசாரணை நடந்தது.

    இதற்கிடையே சிலை செய்த ஸ்தபதி முத்தையா தற்போது தலைமறைவு ஆகி உள்ளார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள். முத்தையா தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

    காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் மேலும் பல சிலைகளும் காணாமல் போய் உள்ளதாகவும் தவறு செய்தவர்களை கண்டு பிடித்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் பக்தர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    ஸ்தபதி முத்தையா தலைமறைவான சம்பவம் பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  #tamilnews

    சென்னை விமான நிலையத்தில் இலங்கை பயணி மரணம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆலந்தூர்:

    இலங்கையில் கொழும்புவைச் சேர்ந்தவர் நூருல்லா (68). சென்னைக்கு வந்திருந்த நூருல்லா ஊர் திரும்புவதற்காக இன்று காலையில் சென்னை விமான நிலையம் சென்றார்.

    பாதுகாப்பு சோதனைகள் முடிந்து விமானத்தில் ஏறுவதற்காக சக பயணிகளுடன் நூருல்லாவும் வரிசையில் நின்றார்.

    அப்போது திடீரென்று மயங்கி விழுந்தார். உடனே விமான நிலைய டாக்டர்கள் விரைந்து சென்று அவரை பரிசோதித்தனர். அப்போது மாரடைப்பால் அவர் இறந்திருப்பது தெரிய வந்தது. இதுபற்றி விமான நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இலங்கையில் உள்ள உறவினர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.

    பஸ் கட்டண உயர்வினை திரும்பப் பெறக்கோரி காஞ்சீபுரத்தில் மாட்டு வண்டியில் வந்து மறியலில் ஈடுப்பட்ட எம்.எல்.ஏ. எழிலரசன் உள்பட சுமார் 200-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

    காஞ்சீபுரம்:

    பஸ் கட்டண உயர்வினை திரும்பப் பெறக்கோரி காஞ்சீபுரம் மாவட்டத்தில் தி.மு.க. சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

    காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலகம் அருகே தி.மு.க. மாணவரணி செயலாளரும் காஞ்சீபுரம் எம்.எல்.ஏ. எழிலரசன் தலைமையில் மறியல் நடந்தது.

    முன்னதாக எழிலரசன் எம்.எல்.ஏ. மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் மாட்டு வண்டியில் ஊர்வலமாக வந்தனர்.

    இதில் நிர்வாகிகள் வெங்கடேசன். வழக்கறிஞர் செல்வம், ஜெகந்நாதன், விஸ்வநாதன், செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    மறியலில் ஈடுபட்ட எம்.எல்.ஏ. எழிலரசன் உள்பட சுமார் 200-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

    உத்திரமேரூர் பஸ் நிலையம் அருகே மாவட்டச் செயலாளர் சுந்தர் எம்.எல்.ஏ. தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் நகரச் செயலாளர் ஞானசேகரன், செயற்குழு உறுப்பினர் நாதன், சோழனூர் ஏழுமலை, பாரிவள்ளல், நீல கண்டன் உள்ளிட்ட 500- க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    காஞ்சீபுரம் காந்தி ரோடு தேரடியில் நகரச் செயலாளர் சன்பிராண்ட் ஆறுமுகம் தலைமையில் மறியல் நடந்தது.

    இதில் காங்கிரஸ் தெற்கு மாவட்ட தலைவர் வக்கீல் மதியழகன் தலைமையில் காங்கிரசார் ஏராளமானோர் பங்கேற்றனர். சுமார் 200 பேர் கைது செய்யப்பட்டனர்.

    பாலுச்செட்டி சத்திரம் அருகே ஒன்றியச் செயலாளர் பி.எம்.குமார் தலைமையிலும், சிறுவேடல் பகுதியில் ஒன்றியச் செயலாளர் செல்வம் தலைமையிலும் மறியல் போராட்டங்கள் நடைபெற்றது. 200 பேர் கைதானார்கள்.

    செங்கல்பட்டு புதிய பஸ்நிலையம் அருகே தி.மு.க. நகர செயலாளர் நரேந்திரன் தலைமையில் மறியல் நடந்தது. இதில் விடுதலை சிறுத்தை கட்சி, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சியினர் ஏராளமானோர் பங்கேற்றனர்.

    மறைமலைநகரில் வரலட்சுமி மதுசூதனன் எம்.எல்.ஏ., தி.மு.க. நகர செயலாளர் சண்முகம், காங்கிரஸ் தனசேகரன், விடுதலை சிறுத்தைகள் தென்னவன், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு சேஷாத்திரி, த.மு.க.க. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்பட பல்வேறு கட்சியினர் கலந்து கொண்டனர்.

    அவர்கள் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

    கூடுவாஞ்சேரியில் தி.மு.க. நகர செயலாளர் எம்.கே.தண்டபாணி, காங்கிரஸ் மாவட்ட தலைவர் சுந்தரமூர்த்தி ஆகியோர் தலைமையில் மறியல் நடந்தது. அவர்களை போலீசார் கைது செய்து திருமண மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர்.

    குன்றத்தூரில் காஞ்சி வடக்கு மாவட்ட செயலாளர் தா.மோ.அனபரசன் எம்.எல்.ஏ. மறியலில் ஈடுபட்டு கைதானார். இதேபோல் மறியலில் ஈடுபட்ட ஒன்றிய செயலாளர் படப்பை மனோகரன் கைது செய்யப்பட்டார்.

    மாவட்டத்தில் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் மறியலில் ஈடுபட்ட சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைதானார்கள்.

    பல்லாவரம் நகர தி.மு.க. சார்பில் குரோம்பேட்டை பஸ்நிலையம் அருகே இ.கருணாநிதி மறியல் போராட்டம் நடந்தது. இதில் காங்கிரஸ் சார்பில் தீனதயாளன், விடுதலை சிறுத்தைகள் கட்சி பொற்செழியன், ம.தி.மு.க.வை சேர்ந்த குரோம்பேட்டை நாசர், ரஜினி, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு ஜீவா, ஜோசப் உள்பட பலர் பங்கேற்றனர். சுமார் 500 பேர் கைது செய்யப்பட்டனர்.

    தாம்பரத்தில் மறியலில் ஈடுபட்ட எஸ்.ஆர்.ராஜா எம்.எல்.ஏ., காங்கிரஸ் நகர தலைவர் விஜய் ஆனந்த், விடுதலை சிறுத்தைகள் மாவட்ட செயலாளர் தேவஅருள் பிரகாசம், ஒருங்கிணைப்பாளர் சாமுவேல் உள்பட 500 பேர் கைதானார்கள்.

    திருவள்ளூரில் காமராஜர் சிலை அருகில் தி.மு.க. நகர செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையில் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி. ராஜேந்திரன், காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் ஏ.ஜி.சிதம்பரம், கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ., ஏ.எஸ்.கண்ணன், தி.மு.க. நிர்வாகிகள் பொன்பாண்டியன், டி.கே.பாபு, கமலக்கண்ணன் உள்ளிட்டோர் தலைமையில் மறியல் போராட்டம் நடந்தது.

    சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். சுமார் 200 பேர் கைது செய்யப்பட்டனர்.

    கடம்பத்தூர் ஒன்றிய செயலாளர் ஹரிகிருஷ்ணன் தலைமையில் அவைத் தலைவர் திராவிட பக்தன் உள்ளிட்ட நிர்வாகிகள் மணவாளநகர் அண்ணாசிலை அருகில் சாலை மறியலில்ஈடுபட்டனர். அவர்களை மணவாளநகர் போலீசார் கைது செய்தனர்.

    பூந்தமல்லி மேற்கு ஒன்றியம் சார்பில் ஒன்றிய செயலாளர் தேசிங்கு தலைமையில் வெள்ளவேட்டில் சாலை மறியல் நடந்தது.

    திருவள்ளூர் வடக்கு ஒன்றிய சார்பில் ஒன்றிய செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமையில் ஈக்காட்டிலும், திருவள்ளூர் தெற்கு ஒன்றியம் சார்பில் ஒன்றிய செயலாளர் ஜெயசீலன் தலைமையில் காக்களூரிலும் பூண்டி மேற்கு ஒன்றியம் சார்பில் ஒன்றிய செயலாளர் கிறிஸ்டி தலைமையில் திருப்பாச்சூரிலும் மறியல் நடைபெற்றது.

    கும்மிடிப்பூண்டி கிழக்கு ஒன்றியம் சார்பில் வடக்கு மாவட்ட செயலாளர் கி.வேணு தலைமையில் கும்மிடிப்பூண்டி பஸ் நிலையம் அருகே சாலை மறியல் போராட்டம் நடை பெற்றது.

    தலைமை செயற்குழு உறுப்பினரும், கிழக்கு ஒன்றியசெயலாளருமான டி.ஜெ.கோவிந்தராசன், மாநில தீர்மானக்குழு உறுப்பினர் சி.எச்.சேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    மேற்கு ஒன்றியம் சார்பில் அதன் ஒன்றிய செயலாளர் மு.மணிபாலன் தலைமையில் ஆரம்பாக்கத்திலும், மாதர் பாக்கம் பஸ் நிலையத்தில் பொதுக்குழு உறுப்பினர் குணசேகரன், மனோகரன் ஆகியோர் தலைமையிலும் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

    தமிழக அரசு உயர்த்திய பஸ் கட்டணத்தை முழுமையாக குறைக்க கோரி தி.மு.க.வினர் போராட்த்தில் ஈடுபட்டனர். சீதஞ்சேரியில் நடந்த போராட்டத்துக்கு பூண்டி ஒன்றிய செயலாளர் சந்திரசேகர் தலைமை தாங்கினார். துணைச் செயலாளர் நாகராஜ், மாவட்ட பிரதிநிதி ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிர்வாகிகள் வெஸ்லி, குமார், பாலசுப்பிரமணி, சண்முகம், குப்பன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    ஊத்துக்கோட்டையில் பொதுக்குழு உறுப்பினர் அபிராமி குமரவேல் தலைமையில் மறியல் போராட்டம் நடந்தது. நகர செயலாளர் அப்துல்ரஷீத், மாவட்ட இலக்கிய அணி துணை செயலாளர் ராதாகிருஷ்ணன், நிர்வாகிகள் கார்திக், சங்கர், சம்சுதீன், அப்துல்ரகீம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    திருவொற்றியூரில் மாநில மீனவர் அணி செயலாளர். கே.பி.பி.சாமி தலைமையில் திருவொற்றியூர் பஸ்நிலையம் முன்பு சாலை மறியல் நடந்தது. இதில் மேற்கு பகுதி செயலாளர் கே.பி.சங்கர் உள்பட 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.

    பொன்னேரியில் வடக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் சுகுமாறன், பேரூர் செயலாளர் விஸ்வநாதன் தலைமையில் மறியல் நடந்தது.

    மீஞ்சூரில் மோகன்ராஜ் தலைமையிலும், பழவேற்காட்டில் அலவி தலைமையிலும், ஜனப்பசத்திரத்தில் ஒன்றிய செயலாளர் கருணாகரன் தலைமையிலும் மறியல் நடந்தது. அனைவரையும் கைது செய்தனர்.

    திருவள்ளூர் மாவட் டத்தில் மறியலில் ஈடுபட்ட சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து உள்ளனர்.

    வைரமுத்து பிரச்சினையில் ஜீயர் மோசமான வன்முறையை தூண்டி விடுகிறார்கள் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
    ஆலந்தூர்:

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    காவிரி நீரை திறந்து விடக்கோரி விவசாயிகள் நடத்தும் ரெயில் மறியல் போராட்டத்தில் இன்று கலந்து கொள்கிறோம். காவிரி நீரை பெற தமிழக முதல்வர், பிரதமரை சந்தித்து வலியுறுத்த வேண்டும்.

    பஸ் கட்டணம் மற்ற மாநிலங்களை விட குறைவு என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. மற்ற மாநிலத்தை காட்டிலும் தமிழ்நாடு பல வி‌ஷயங்களில் பின் தங்கி உள்ளது.

    தி.மு.க. நடத்தும் அனைத்து கட்சி கூட்டத்தில் விடுதலை சிறுத்தை பங்கேற்கும் கூட்டத்திற்கு பின்னர் அடுத்த கட்ட போராட்டம் குறித்து அறிவிப்போம்.

    இலங்கை அரசு தமிழக மீனவர்களுக்கு எதிராக கொண்டு வந்துள்ள சட்டம் கொடூரமானது. அது இந்திய அரசுக்கு விடப்படும் சவால். இதில் சர்வதேச சமூகம் தலையிட வேண்டும். இதற்கு இந்திய அரசு வலியுறுத்த வேண்டும்.

    குறிப்பிட்ட மக்களுக்கு எதிராக இயற்றப்படும் இந்த சட்டத்தை உடனடியாக இலங்கை அரசு திரும்ப பெற வேண்டும். இது தொடர்பாக தமிழக முதலமைச்சர், நேரடியாக பிரதமரை சந்தித்து பேச வேண்டும்.

    ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயரின் பேச்சு மோசமாக உள்ளது. காவிகள், காவி உடை அணிந்தவர்கள் அனைவரையும் நல்வழியில் நடத்துவார்கள். அவர்கள் அமைதி வழிகாட்டுவார்கள் என்று நினைத்தால் வைரமுத்து பிரச்சினையில் மோசமான வன்முறையை தூண்டி விடுகிறார்கள்.



    வைரமுத்து மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் இல்லை. அவர் மன்னிப்பு கேட்கவும் கூடாது.

    இவ்வாறு அவர் பேசினார். #tamilnews
    ×